Skip to content
Post Views: 3,923
நான்கு மாதம் ஆகிறது மருதவேல் வீட்டிற்கு சென்று, ராமலிங்கம் மகனுக்காகப் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார் வெளியூர் சவாரி முடித்து அந்தப் பக்கமாகத் தான் அவன் வருவான் ஆகையால் அங்கேயே காத்திருந்தார்.
Advertisement
தந்தையை பார்த்துவிட்டான் என்றாலும் நிற்க மனமில்லை அவனின் வேகத்தைப் பார்த்தவர் ரோட்டை மறித்து நின்றார் வண்டி கிரீச்சிட்டு நின்றது.
Advertisement
Advertisement
“உனக்கு என்ன பைத்தியமாப்பா” என்றான் எரிச்சலாக.
Advertisement
அவர் அவனையே பார்த்திருக்க வண்டியை ஓரமாக நிறுத்தியவன் அப்படியே அமர்ந்திருக்க வண்டியின் உள்ளே ஏறி அமர்ந்த ராமலிங்கம் “ஏண்டா இப்படி பண்ற வீட்டுக்கு வராம இருந்தா மட்டும் உன் அம்மா மனசு மாறிடுமா இதுக்கும் அந்தப் பிள்ளையைத்தான் உன் அம்மா திட்டிட்டு இருக்கா அது சொல்லிகுடுத்துதான் நீ இப்படி நடந்துக்குறியாம் நீ மொதல்ல வீட்டுக்கு வா நானும் பேசுறேன் யோசிக்கலாம்” என்றார் அவர்.
அவனுக்கு மனதே ஆறவில்லை எவ்வளவு பேச்சுக்கள் ஏச்சுக்கள் உண்மையில் அவனுக்கு இப்பொழுது பயமாக இருந்தது, இப்படி பட்ட பேச்சுக்களை அவள் எப்படி தாங்கிக்கொள்வாள் எந்த நேரமும் தன்னால் வீட்டிலே இருந்து இவர்களைக் காவல் காக்க முடியுமா தன்னுடைய ஆசைக்காக அவளைப் பலிகொடுப்பதா என்று மனது அடித்துக்கொண்டது.
என்னதான் வழி அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அன்று காமாட்சியை பெண் கேளுங்கள் என்றதும் மயிலம்மா அத்தனை ஆக்ரோஷமாக அவன் முன்னே வந்து நின்றார்.
“ஏன் வேற பொண்ணா இல்ல எதுக்கு அந்தக் கேடு கெட்ட குடும்பத்துல இருந்து உனக்குப் பொண்ணு எடுக்கணும்” என்றவரை புரியாமல் பார்த்தவன் “இந்தச் சம்மந்தத்தை கொண்டு வந்ததே நீங்கதானே” என்றான் அவரைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே.
“அது அப்போ” என்றார் மயிலம்மா.
“எப்போ”.
“சித்ரா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி… நீயும் கேசை திரும்ப வாங்கமாட்டேனு சொல்லிட்ட அவங்க கேக்குறதை செய்ய வேற வழியும் இல்ல அதான் இந்தச் சம்மந்தத்தை பாத்தேன் இப்போதான் சித்ரா கல்யாணம் முடிஞ்சு போய்ட்டாள்ள இனிமே எதுக்கு அவ” என்றார்.
‘என்ன மனுஷி இவர்’ என்று அதிர்ச்சியாகப் பார்த்தவன் “ஏன் அன்னைக்கு தெரியாத என்ன தப்பு இன்னைக்கு உங்க கண்ணுக்குத் தெரிஞ்சுது” என்றான்.
“அவ ஏற்கனவே அத்தை மகனைக் கட்ட இருந்தவ அவ அக்கா ஒழுக்கம் கெட்டவ” என்றார்.
“இதெல்லாம் புதுசு இல்லையே அன்னைக்கும் இதேதான”.
“அப்போ வழியில்லை யோசிச்சோம் இப்போ என்ன அவசியம்”.
“அன்னைக்கு என்ன வழியில்லை உங்களுக்கு” என்றான் குரலில் அழுத்தம் கூட்டி.
“சித்ரா ஆசைப்பட்ட வாழ்க்கை… அதுக்கு கொஞ்சம் விட்டுகுடுத்து போகலாம்னு யோசிச்சேன் இப்போ அது தேவையில்லை இவளும் அவ அக்கா மாதிரியே இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம் நல்ல வேல அது நடக்கல, அன்னைக்கே உங்க அத்தைக்கூட கேட்டாங்க எதுக்கு இப்படியொரு சம்மந்தம்னு இப்போ சித்ரா அங்க வாழவே போய்ட்டா அவங்க கேட்டா என்ன சொல்ல எல்லார்க்கும் சங்கடம் வேற நல்ல பொண்ணா பாக்கலாம்” என்றார்.
“அதாவது உங்க நியாயப்படி என் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்ல உங்க சுயநலத்துக்கு காசு அதிகமா தர வீட்டில பொண்ணை எனக்குக் கட்டிவைக்க பாத்தீங்க இப்போவும் அதே சுயநலம் அதே பொண்ணை வேண்டாம்னு சொல்ல வெக்குது”.
“உங்க இஷ்டத்துக்கெல்லாம் என்னால ஆட முடியாது காமாட்சிதான் என் பொண்டாட்டி நீங்களே போய்ப் பேசி நடத்தி வெக்கணும்” என்றான்.
“என்னடா அதிகாரம் பண்ற அவ இந்தவீட்டுக்கு வரக் கூடாது உனக்கு அப்பன் ஆத்தா வேணாம் அவதான் வேணும்னா தாராளமா நீயே போய்க் கல்யாணம் கட்டிக்கோ நாங்க எப்படியோ போறோம் வயசான காலத்துல இப்படி ஆதரவு இல்லாம நிக்கனும்னு இருக்கு போல அதான் தலையெழுத்துன்னா யாரால மாத்த முடியும்” என்று மூக்கை சிந்தினார்.
முதல் முறை தாயை வெறுப்போடு நோக்கினான் மருதவேலு “உன்னோட ஆசையை மட்டும் யோசிச்சா போதுமா வேலு உன் தங்கச்சி வாழ்க்கையையும் யோசி அன்னைக்கு என்னமோ புத்திகெட்டு அவளை உனக்குப் பொண்ணு பாத்தோம் ஆனா இப்போ சொல்றேன் அவ குடும்பத்துக்குச் சரியா வரமாட்டா”.
“நீ எங்களுக்கு ஒரே பிள்ளை உன்னைய எவளுக்கோ தூக்கி கொடுக்கவா இவ்ளோ கஷ்டப்பட்டோம் அம்மா அன்னைக்கு அவளை உனக்குப் பேசினது தப்புதான் அதை மறந்துடு நல்ல குடும்பத்துல வேற நல்ல பொண்ணா பாக்கலாம்” என்றார் மகனின் அருகில் நெருங்கி அவனின் கையைப் பற்றிக்கொண்டு.
சிகையை அழுந்தக் கோதியவன் “இங்க பாரு இந்த ஜென்மத்தில அந்தப் புள்ளத்தான் என் பொண்டாட்டி கொஞ்ச நாள் பாப்பேன் அதுக்கு அப்புறம் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும் இப்போவும் குடும்பம்னு யோசிக்குறதாலதான் நின்னு பேசுறேன்” என்றான்.
“அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் பாரு இன்னும் தாலியே கட்டல அதுக்குள்ள என் பிள்ளையை இப்படி பேசவெச்சுட்டா” என்று மறுபடியும் மயிலம்மா ஆரம்பிக்க உங்களிடம் பேசுவதே வீண் என்று வெளியேறிவிட்டான்.
மயில்லம்மா மகனுக்கு அழைத்தாலும் அவன் எடுப்பதில்லை சித்ராவும் அழைத்துப் பேசினாள் “இங்க யாருக்குமே பிடிக்கலண்ணா உங்க அண்ணனுக்குப் பொண்ணா கிடைக்காது அவளை எதுக்கு கட்டணும்னு இவர் கூடக் கேக்குறாரு வேற பொண்ணு பாக்கலாமே” என்றாள் அதன் பிறகு அவள் அழைப்பையும் ஏற்பதில்லை.
“வீட்டுக்கு வா வேலு உங்க அம்மா பொலம்பிகிட்டே இருக்கா” என்றார் ராமலிங்கம்.
“கருவுல பிள்ளையைச் சுமக்கிற மாதிரி அந்தப் பிள்ளையை மனசுல சுமக்குறேன் என்னமோ ஈஸியா தூக்கி போடுன்னு சொல்றாங்க” என்றான் முகம் இறுகி குரல் அவ்வளவு அழுத்தத்தோடு வெளி வந்தது.
ஏனோ அந்த வார்த்தை ராமலிங்கத்தின் மனதை அசைத்தது இவ்வளவு விருப்பமா அந்தப் பெண்ணின் மீது என்று, அவர் அமைதியாக அமர்ந்திருக்க பாக்கெட்டிலிருந்து கணிசமான தொகை எடுத்துத் தந்தையின் கையில் கொடுத்தவன்.
“இந்த மாச செலவுக்கு, வேற ஏதாவது வேணும்னா போனை போடு இப்போ கீழ இறங்கு” என்றான் அவருக்கும் மேற்கொண்டு என்ன பேச என்று தெரியவில்லை கீழே இறங்கிக்கொண்டார்.
பக்கத்தில் ஒரு சிறிய லாட்ஜில் தங்கியிருக்கிறான் அறைக்குச் சென்றவன் குளித்துச் சாப்பிட்டு நன்றாகப் படுத்து உறங்கினான் மாலை ஐந்துமணிக்குத்தான் எழுந்தான், தேநீர் அருந்திக்கொண்டிருந்தவன் மனம் முழுதும் அவளிடம் தினமும் அழைத்துப் பேசிவிடுவான், அவளிடம் எதுவும் காண்பித்துக்கொள்ளவில்லை கொஞ்சம் வேலை அதிகம் என்று அவளிடம் கூறியிருந்தான்.
போய்ப் பார்க்கலாமா என்ற யோசனையில் அவன் அமர்ந்திருக்க அலைபேசி அழைத்தது அவளே தான் மெல்லிய புன்னகை அவன் இதழ்களில் அவளாக அழைப்பதையெல்லாம் விறல் விட்டு எண்ணிவிடலாம்.
“சொல்லுங்க ராணியம்மா” என்றான் துள்ளலோடு.
“எங்க இருக்கீங்க? வேலையா? பிசியா? இங்கேயே வெளியூரா?” என்றவள் கேள்விகளில் இன்னும் புன்னகை விரிந்தது.
“சென்னைலதான் இருக்கேன் அதும் பக்கத்திலேயே இருக்கேன் வேல எதுவும் இல்ல வெட்டியா காலாட்டிடு ஒக்காந்திருக்கேன் வேற என்ன தெரியணும்” என்றான்.
“பக்கத்துலன்னா பெருங்களத்தூர் பக்கமா தூரமா” என்றாள் தயக்கமாக.
“நீ எங்க இருக்க” என்றான்.
“இங்க பெருங்களத்தூர்ல” என்றாள்.
“அங்க என்ன!” என்றவன் எழுந்து டீக்கு காசு கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தான்.
“எனக்கு வேலை கிடைச்சிடுச்சு இன்னைக்கு இன்டெர்வியூ வந்திருந்தேன் அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு…” என்றாள்.
“அடி சக்க வாழ்த்துக்கள் பெரிய ஆளுதான்” என்றவன் “எங்க நிக்குற சொல்லு” என்றான்.
அவள் அந்த நிறுவனத்தின் பெயர் சொல்ல “அப்படியா சூப்பர் சித்ரா வீட்டுக்காரர் கூட அங்கதான் வேலை செய்றார், ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பன்னு வந்திடுறேன்” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.
இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்திருந்தான் கார்தான் எடுத்துவந்திருந்தான் அவனைக் கண்டதும் முகமெல்லாம் பிரகாசிக்க வேகமாக ஓடி வந்தவள் முன் பக்கம் ஏறிக்கொண்டாள்.
பெரிய டைரிமில்க் ஒன்றை அவளிடம் நீட்டியவன் இரண்டு முழம் மல்லிப்பூவையும் நீட்டினான் “வீட்ல சொல்லிட்டியா” என்றான்.
“ஹ்ம் அப்பாகிட்ட அம்மாகிட்ட சொல்லிட்டு உங்களுக்குக் கால் பண்ணேன்” என்றவள் நியமன கடிதத்தை அவனிடம் நீட்டினாள் வாங்கி பிரித்துப் பார்த்தவன்.
“அப்படியே என்ன எழுதியிருக்குனு சொல்லிடு எனக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது” என்றான் அவள் விவரத்தைச் சொல்லிச் சம்பளம் எவ்வளவு என்றும் சொல்ல.
“பார்றா இவ்ளோவா கொடுக்குறாங்க” என்றான் ஆச்சர்யமாக.
“நான் வெறும் ட்ரைவர்தான் உங்களுக்குப் பரவாயில்லையா” என்றான் அவளிடம்.
“எனக்கு உங்க வேலையும் பிடிக்கும் உங்களையும் பிடிக்கும்” என்றாள் மெல்லிய குரலில் இதழ்கடித்துக்கொண்டான், பூவை எடுத்துச் சூடிக்கொண்டவள் “சம்பாரிக்குற காசெல்லாம் எனக்குப் பூ வாங்கியே செலவாக்கிடுவீங்க போல” என்றாள்.
“உங்களுக்குப் பூவாங்கவே தனியா சம்பாரிச்சிட்டு போறேன்” என்றான் கண்ணடித்து.
“அதுசரி” என்று புன்னகைத்துக்கொண்டாள்.
“நானே வீட்டில விடுறேன் அதுக்கு முன்னாடி கொஞ்ச நேரம் என்கூட இருக்கீங்களா” என்றான்.
அவனிடம் ஒன்றும் கூறாமல் அலைபேசியை எடுத்தவள் “தாத்தா வேலை கிடைச்சிடுச்சு” என்றாள் அதைத் தொட்டு அவர் சில நொடிகள் பேச “இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு நானே வந்திடுவேன்” என்று சொல்லி வைத்தாள்.
அதன்பிறகு அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்று சிறிய அளவில் சாப்பிட்டு அவளுக்குப் புது துணிகள் எடுத்துக்கொடுத்து பிடித்தமான இனிப்பும் வாங்கிக்கொடுத்து வீட்டிற்கு அழைத்துச்சென்றான், முதலில் தாய் சொல்லட்டும் அதன் பிறகு முடிவு செய்யலாம் என்று யோசித்து வைத்திருந்ததால் அவளிடம் பெண் கேட்டு வருவதை பற்றி ஒன்றும் கூறவில்லை.
வேலை நேரம் எப்படி பயணம் எப்படி என்று கேட்டுக்கொண்டான் ரகுவை பற்றி அவளிடம் ஒன்றும் கேட்பதில்லை இவனே கண்காணித்துக்கொள்வதால் அவனைப் பற்றிய பேச்சே இல்லை.
“பாத்து பத்திரம் பெருங்களத்தூர் பக்கம் நெரிசல் ஜாஸ்த்தி வண்டி ஓட்டறது சரியாவருமா பாரு இல்லனா நானே ஏற்பாடு பண்றேன்” என்றான்.
“சரி” என்றவளுக்கு வண்டியிலிருந்து இறங்கவே மனதில்லை முடியின் நுனியை திருகுவதும் வீட்டைப் பார்ப்பதுமாக இருந்தாள் கொஞ்சம் அவளை நெருங்கியவன் “ஒய்” என்க அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னவாம் ராணியம்மாவுக்கு” என்க.
ஒண்ணுமில்ல என்றாள் தலை அசைத்து அவளின் கன்னம் பற்றியவன் அந்த விழிகளைப் பார்த்துக்கொண்டே தன்னுடைய முதல் முத்தத்தை அவள் நெற்றியில் பதித்தான் காமாட்சியின் விழிகள் தன்னாலே மூடிக்கொண்டது.
“சீக்கிரமா என்கூடவே கூட்டிட்டு போயிடுறேன்” என்றான் அவனின் மீசை முடிகள் செவியையும் தாடி கன்னத்தையும் உரசி கூச வைத்தது, கன்னங்கள் சூடாக முகம் செம்மையடைந்தது அவளை விட்டு விலகி அமர்ந்தவன் விழிகள் அவளை ரசனையாகப் பார்த்திருக்க, சில நொடிகள் எடுத்துத் தன்னை சமன்படுத்தியவள் அவனை நிமிர்ந்தே பார்க்காமல் வேகமாக இறங்கி ஓடினாள்.
ஏனோ எங்கேயும் செல்ல மனம் வரவில்லை அவனுக்கு அவள் பாட்டி வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளித் தான் ஒரு காலி இடத்தில் வண்டியை நிறுத்தியிருந்தான் அப்படியே விழிகள் மூடிச் சாய்ந்துகொண்டான் இரவு நேர எப்.எம். காதல் பாடல்களை வரிசையாக வாரி வழங்கிக்கொண்டிருந்தது.
நேரம் ஒன்பதை நெருங்கிக்கொண்டிருக்க வீட்டின் வாயிலை அடைந்தாள் அவள் “வந்துட்டியா ஆச்சி எங்க காணுமேன்னு பாத்துட்டே இருந்தேன்” என்றார் அவளின் தாத்தா.
“நீங்க ஏன் முழிச்சிருக்கீங்க தாத்தா நான் தான் வர நேரம் ஆகும் சொன்னேனே” என்றவள் உள்ளே நுழைந்து கதவை அடைத்தாள்.
“வயசாயிடுச்சுல்ல தூக்கம் எல்லாம் வந்தா வந்துச்சு அவ்ளோதான்” என்றவர் அறைக்குள் செல்லப் போக அவளின் பாட்டி சத்தம் கேட்டு வந்தவர் “ஆச்சி கேவரு களியும் கறிக்கொழம்பும் இருக்கு சாப்பிட்டு படு” என்று சொல்லிச் சென்றார்.
கிராமத்து மக்கள் எட்டுமணிக்கே அவர்களுக்கு ஊர் அடங்கிவிடும் இதுவே அவர்களுக்கு அர்த்தராத்திரிதான் “சரி நீங்கத் தூங்குங்க நான் பாத்துக்குறேன்” என்றவள் குளித்துத் தலை பின்னிப் பூச்சூடிக்கொண்டாள்.
‘சாப்பிட்டுருப்பாரா வீட்டிற்கு போயிருப்பாரா’ என்று யோசித்தவள் கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்து அலைபேசியை எடுத்தாள் மிகவும் தயக்கமாக இருந்தது என்றாலும் அழைத்தாள்.
அவனால் நம்பவே முடியவில்லை “அடடே என்ன அதிசயம்” என்றான் எடுத்தவுடன்.
“வீட்டுக்குப் போய்ட்டிங்களா” என்றாள்.
“இல்லையே” என்றான்.
“ஓஹ்” என்க.
“என்னாச்சு” என்றான்.
“ஹ்ம்ம்… ஒண்ணுமில்ல” என்றாள்.
“நான் போகலான்னு சொன்ன என்னய பாக்க வருவீங்களா” என்றான் அந்தக் குரலே என்னவோ செய்தது அவளை.
“எங்க இருக்கீங்க” என்றாள் தடுமாற்றமாக.
“இங்கேயேதான் இருக்கேன் என்னமோ போகத் தோணல” என்றான்.
அவசரமாக அவளின் படுக்கையறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தாள் அவன் வண்டி அந்த இருளில் கொஞ்சமாக அவள் கண்களுக்குப் புலப்பட்டது அழைப்பைத் துண்டித்தவள் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பின்வாசலை சத்தம் இல்லாமல் திறந்துகொண்டு வேக நடையில் அவன் வண்டியை நெருங்கினாள்.
காலடி ஓசையில் திரும்பிப் பார்த்தவன் விழிகள் விரிந்தது இந்த நேரம் அவள் வருவாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை “ஏய் என்ன பண்ற” என்றவன் வேகமாக வெளியில் வந்து சுற்றும் பார்த்தான்.
“யாரவது பாக்க போறாங்க உள்ள போ” என்க அவனை முறைத்தவள் “சும்மா இருந்தவகிட்ட பாக்க வருவியான்னு யார் கேட்டது” என்றாள்.
அவன் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்து “அப்போ இப்போவே கட்டிக்கலாம்னு சொன்னா…” என்றான்.
“ஹ்ம்ம் கட்டிக்கலாம் விடியட்டும்” என்றாள் அவள்.
“ராணியம்மா” என்று அழகாக வெட்கப்பட்டான்.
“சீக்கிரம் வாங்க சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்புங்க” என்றவள் தட்டில் எடுத்து வைக்க “நான் சாப்ட்டுக்குறேன் நீ போ” என்றவன் இப்பொழுதுதான் அவளை முழுதாகப் பார்த்தான்.
பாவாடை சட்டை அணிந்திருந்தாள் அவன் கொடுத்த மல்லிச்சரம் அவள் கூந்தலில் இடம் பிடித்திருந்தது ‘ஐயோ சோதிக்குறாளே’ என்று புலம்பியவன் குரலைச் செருமிக்கொண்டு “இப்படி இந்த நேரம் வெளில வரக் கூடாது நான் சாப்பிட்டுக்குறேன் நீ போ” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.
அவனையே குறுகுறுவென்று பார்த்தவள் “சரி போறேன்” என்று வீடுநோக்கி நடந்தாள், அவள் பின்னேயே இடைவெளி விட்டு வந்தவன் அவள் உள்ளே சென்று கதைவடைக்கும் வரை நின்றுவிட்டு வேகநடையில் வண்டியை நெருங்கியவன் அதே வேகத்தில் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.
அவனுடனே அவர்கள் வீட்டின் சட்டி பானையும் பயணப்பட்டது ஜன்னலின் வழி அதைப் பார்த்தவள் வாய் மூடிச் சிரித்தாள்.
“என்னடி வேணும் உனக்கு” என்று எரிச்சல் பட்டார் தங்கம் மீனாவின் சித்தி பிறகு நான்கு நாட்களாகத் தவறாமல் அழைத்துப் புலம்பிக்கொண்டிருக்கிறாளே.
“நீங்க எல்லாரும்தானே சொன்னீங்க கொஞ்ச நாள் போனா சரியாகும்னு நான் என்ன இங்க வேலைக்காரி யாவா வந்திருக்கேன், இந்த ரெண்டு குட்டி பிசாசுகளைப் பாத்துக்கவே நேரம் சரியா இருக்கு ஒண்ணுக்கு நாலு வேலை வக்கணையா இதுங்களுக்கு வடிச்சு கொட்டணும்”.
“இன்னைக்கு காலைல தோசை குடுத்தேன் அந்தச் சின்னக் கழுத அது வேண்டாம் பூரி வேணும்னு சொல்லுது இப்போ முடியாது இதைச் சாப்பிடுன்னுதான் சொன்னேன் அதுக்கு இந்த ஆள் அப்படி குதிக்குறாரு கொழந்தை கிட்ட எட்டி பேசணும்னு தெரியாதான்னு இவர் புள்ளைங்கள பாத்துக்க மட்டும்தான் என்னய கல்யாணம் செஞ்சாரா”.
“இன்னுமே அவர் தனியாத்தான் படுக்கிறார் என்னய எங்கேயும் வெளில கூட்டிட்டு போறதில்ல ஞாயித்து கிழமை எங்கேயாவது போனாலும் இந்த ரெண்டு சனியனும் சேந்தே வருது ஏன் அவரோட அம்மா இந்தப் பிள்ளைங்களை கொஞ்ச நாள் வெச்சு பாத்துக்கலாம்ல நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்” என்க.
நெஞ்சில் கைவைத்துவிட்டார் தங்கம் “ஏண்டி உனக்குப் பொறுமையே இருக்காதா அந்தப் பிள்ளைங்களை நீ நல்லா பாத்துக்கிட்டாதான் உன் புருஷன் கொஞ்சம் உன்ன நெருங்கி வருவாரு கல்யாணத்துக்கு முன்னாடியே உனக்குத் தெரியும்ல அந்தப் பிள்ளைங்களுக்காகத்தான் இந்தக் கல்யாணம்னு”.
“எல்லாம் சரியாகி வர நாள் எடுக்கும் மீனா புரிஞ்சு நடந்துக்கோ உன் வாயைக் கொஞ்சம்… இல்ல இல்ல சுத்தமா குறை இப்போ பேசின மாதிரி அந்தப் பிள்ளைங்க முன்னாடி பேசி வைக்காத சின்னப் பிள்ளைங்க அப்படியே அவங்க அப்பாகிட்டயோ தாத்தா பாட்டிகிட்டயோ சொல்லிட்டா பெரிய பிரச்சனை ஆகிடும்”.
“கொழந்தைங்கன்னா அப்படித்தான் இருக்கும் உங்களை எல்லாம் அப்படித்தானே வளத்தோம் பாத்து நடந்துக்கோ” என்று அழைப்பைத் துண்டித்தார்.
அங்கு அலைபேசியை தூக்கி கட்டிலில் போட்டவள் கோபத்தில் அந்தச் சின்னப் பிள்ளையின் விளையாட்டுப் பொம்மையைச் சுவற்றில் அடித்து உடைத்தாள்.
“ச்சீ சனியனுங்க எனக்குப் பொறந்ததையே நான் பாத்துக்கல என் தலையெழுத்து இதுங்களுக்கு ஆயா வேலை பாக்கணும்னு” என்று ஆத்திரத்தில் அடுப்படியில் பொருட்களைப் போட்டு உடைத்துக்கொண்டிருந்தாள்.
அடுத்த பத்தாவது நாள் மீனா சண்டைபோட்டு தாய் வீட்டிற்கு வந்து நிற்கப் பின்னாலே வந்த ஆட்டோவிலிருந்து இறங்கிய மயில்லம்மாவும் விரிந்துகட்டிக்கொண்டு வாயிலில் சண்டைக்கு நின்றார்.
error: Content is protected !!