Skip to content
Post Views: 3,979
மகள் வந்து நிற்பதை பார்த்ததுமே நெஞ்சை அடைத்தது மாசிலாமணிக்கு பின்னிலே வந்த மயிலம்மாவை முதலில் யார் என்று பார்த்தவர் புரிந்ததும் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் ‘இவர் ஏன் வந்திருக்கிறார்’ என்பதாக.
Advertisement
மாசிலாமணி கண் காண்பிக்க மீனாவை எந்தக் கேள்வியும் கேக்காமல் அப்படியே உள்ளே தள்ளிச் சென்றார் அன்னம் “வாங்க” என்றார் மாசிலாமணி.
Advertisement
Advertisement
“என்னத்த வரது என்னதான்யா நினைச்சிட்டு இருக்க” என்று கத்தினார் எடுத்ததுமே.
Advertisement
“அம்மா எதா இருந்தாலும் உள்ள வாங்க பேசலாம்” என்றார் அவர் பொறுமையாக.
“உள்ள வந்து ஒக்காந்து பொறுமையா விருந்து சாப்பிட வரல நான், நாங்கதான் வந்தோம் பொண்ணு கேட்டு அப்போ ஏதோ எங்களுக்கு நேரம் சரியில்ல இந்த வீட்டு வாசலை மிதிச்சிட்டோம் அப்பறம் என் பையன் வேண்டாம்னு சொல்லிட்டான் இப்போ உன் பொண்ணு எதுக்கு புதுசா உறவை வளக்க பாக்குறா”.
“ரெண்டு பொம்பளை பிள்ளை பெத்த ஒண்ணைக்கூடவா ஒழுங்கா வளக்கல” என்றார், அம்மாவைத் தள்ளிக்கொண்டு வெளியில் வந்த மீனாவின் செவியிலும் இது அனைத்தும் விழுந்தது.
“என் பொண்ணு அப்படி கிடையாது” என்றார் மாசிலாமணி.
“அப்படி இல்லாமலா என் பையன் காட்டுனா உன் மவளைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்குறான் அப்படி என்ன சொக்குபொடி போட்டாளோ இத்தனை வருஷத்துல இப்படியொரு சம்பவமே நடந்ததில்லை”.
“என் பிள்ளை நாலு மாசமா வீட்டுக்கே வரல இவளைக் கட்டி வைக்கலானா வரமாட்டானாம்” என்று மூக்கை சிந்தினார், அந்த மனிதர் என்ன செய்வார் பாவம் தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.
“அவளைக் கண்டிச்சு வை சீக்கிரமா எவனையாவது பாத்து கட்டிக்குடு” என்றவர் ஆட்டோவில் ஏறிச் செல்ல இந்தப்பக்கம் மாசிலாமணி நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்தார்.
அவரை அள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர் விவரம் அறிந்து முத்துலட்சுமி காமாட்சி அவளோடு அன்னம்மாவின் பெற்றோர் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டனர்.
அன்னம்மா காமாட்சியை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார் “அம்மா” என்று அவள் அருகில் நெருங்க “கடைசில நீயும் எங்க நம்பிக்கையை அழிச்சுட்டல்ல” என்றார் வலியோடு.
“உங்களுக்கு நல்லா வேணும் என்னமோ அவளைத் தூக்கி தலைல வெச்சிக்கிட்டு ஆடுனீங்கள்ல இப்போ என்ன ஆச்சு இவ ஆளு சரியில்ல” என்ற மீனாவை திரும்பிப் பார்த்த முத்துலட்சுமி.
“அதை நீ சொல்லாத உன் வேலைகழுதையை பாத்துகிட்டு போ நாங்க பாத்துக்குறோம்” என்றார்.
காமாட்சிக்கு மருதவேலுவின் வீட்டில் நடந்த பிரச்ச்னைகள் எதுவும் தெரியாது முதலில் அவர்களாகவே வந்து பெண் கேட்டனர் பிறகு வேலு வேண்டாம் என்றான் ஆகையால் இப்பொழுது மகனின் விருப்பத்துக்குப் பெரிதாக எதிர்ப்பு இருக்காது என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.
இப்பொழுதும் இந்தச் சண்டையும் பிரச்சனையும் எதற்கென்று அவளுக்குப் புரியவில்லை அவன் நான்கு மாதமாக வீட்டிற்கு செல்லாததும் அவளுக்குத் தெரியவில்லை தன்னை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதே மனதை பிசைந்தது.
அடுத்தநாளே மாசிலாமணி வீட்டிற்கு வந்துவிட்டார் ராமலிங்கம் வழி விவரம் தெரிந்துகொண்ட மருதவேலு நேரே காமாட்சியின் வீட்டிற்க்கே சென்றுவிட்டான் வாயிலில் வந்து நின்றவனை பார்த்து அனைவரும் அதிர்ந்து நிற்க அவன் விழிகள் அவளில் பதிந்திருந்தது.
அழுதழுது முகம் சிவந்து இமைகள் தடித்து தலை களைந்து உடை நலுங்கி… அவனைப் பார்த்ததும் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் கன்னம் தாண்டியது.
“அப்பா எங்க” என்றான் அவளிடம், அவள் விரல் நீட்டினாள் தந்தையின் அறையை நோக்கி நேரே அங்கே சென்றான்.
அங்கு அமர்ந்திருந்த அன்னம்மாவை பார்த்து ஒரு நொடி நின்றவன் “கொஞ்சம் பேசணும்” என்றான்.
அவர் மாசிலாமணியை திரும்பிப் பார்த்தார் பின் தயக்கத்தோடு அவனையும் பார்த்தார் “எனக்குப் பேசணும்” என்றான் உறுதியான குரலில், அவர் எழுந்துகொள்ள பார்க்க “நீங்களும் இருங்க” என்றவன் கட்டிலின் அருகில் ஒரு சேரை போட்டு அமர்ந்தான்.
தலையைக் குனிந்து அமர்ந்து விரல்களைக் கோர்ப்பதும் பிரிப்பதுமாகச் சில நொடிகள் இருந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான் “மொதல்ல ஒருத்தனை காமிச்சு அவனை மாப்ள சொன்னீங்க ஏத்துக்கிட்டா அப்புறம் அது இல்லன்னு ஆயிடுச்சு அந்த ஏமாற்றத்தையும் வலியையும் கடந்து வந்துட்டா”.
“அப்புறம் நான் தான் மாப்பிள்ளைன்னு சொன்னீங்க… நீங்கக் காமிக்குற யாரையும் கட்டிக்குற மனநிலைலதான் அவ இருந்தா அதனாலதான் என் போட்டோ கூட அவ பாக்கல அது அன்னைக்கு நேர்ல பாத்து அவகிட்ட பேசும்போதுதான் எனக்குத் தெரிஞ்சது”.
“உங்க பொண்ணுன்னு இல்ல யாரையுமே அப்போ கல்யாணம் செய்ற மனநிலைல நான் இல்ல என்னை நம்பி வரப் பொண்ணுகிட்ட இருந்து எல்லாத்தயும் வாங்கி என் தங்கச்சியை கட்டிக்குடுக்க நான் விரும்பல அதனாலேயே கல்யாணம் வேண்டாம்னு இருந்தேன்”.
“ஆனா எங்க வீட்ல எனக்கே தெரியாமத்தான் இங்க வந்து பேசிக் கிட்டத்தட்ட முடிவு செஞ்சு போயிருக்காங்க உண்மையிலே வேண்டாம்ன்ற முடிவோடுதான் போனேன் ஆனா அதை முழுமனசா என்னால செய்யமுடியல எனக்கு அவளைப் பிடிச்சிடுச்சு”.
“ஆனாலும் இந்தக் கல்யாணம்… இப்படி வேண்டாம்னுதான் அப்போ அவகிட்ட வேண்டாம்னு சொல்லிட்டு வந்தேன், என் பக்க பிரச்சனை எல்லாத்தயும் முடிச்சிட்டு அவகிட்ட பேசினேன்”.
“நீங்கச் சொல்ற யாரை வேணாலும் கட்டிக்குற பொண்ணா எனக்கு அவ வேண்டாம் என்னை அவளுக்குப் பிடிக்கணும் அவ மனசால என்னை ஏத்துக்கணும் யாருக்காகவும் இல்லாம எனக்காக என்னைப் பிடிக்கணும்னு நினச்சேன் அதனாலதான் முதல்ல அவகிட்ட கேட்டேன்”.
“ஏற்கனவே எங்க வீட்டில பாத்த பொண்ணுதானே அதனால எந்தப் பிரச்சனையும் வராதுன்னு நான் நினச்சா அந்த இடம்தான் என் கணிப்பு தவறிடுச்சு. எங்க அம்மா பேசினது தப்பு அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் ஆனா அதுக்காகவெல்லாம் அவளைவிட முடியாது அவளுக்குப் புருஷன் நான் தான் இதை எப்படி சரிபண்ணலாம்னு யோசிக்கலாம்” என்றான்.
மாசிலாமணிக்கும் அன்னத்திற்கும் முதலில் அதிர்ச்சிதான் அவன் பேசியதில், முத்துலட்சுமி முகத்தில் ஒரு சிறு நிம்மதி என்றாலும் சில நொடிகளில் என்னமோ மாசிலாமணிக்கு அவனின் பேச்சில் மனதில் ஒரு நிம்மதி பிறந்தது சிறு நம்பிக்கையும் என்றாலும் மயில்லம்மாவை நினைத்து ஒரு கலக்கமும்.
“இல்ல தம்பி இவ்ளோ பேசுறாங்க உங்க அம்மா என் பொண்ணு எப்படி அங்க நிம்மதியா இருப்பா சரியாவராது” என்றார்.
“சரி வேற என்ன செய்யப் போறீங்க” என்றான்.
“வேற மாப்ள பாத்து…” என்று நிறுத்தினார் அவர்.
“வேற மாப்ள பாத்து? எத்தனை தடவங்க அவளுக்கு மனசுன்னு ஒன்னு இருக்கு அது யாருக்குமே புரியலையா தப்பே செய்யாம இன்னும் இன்னும் எத்தனை பேர்கிட்ட அவ தன்னை நிரூபிச்சுக்கிட்டே இருக்கணும் நீங்கப் புதுசா பாக்குற மாப்ள வீட்லயும் அந்த மாப்பிள்ளையும் அவளைச் சரியா புரிஞ்சுப்பாங்கன்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா”.
“அவளுக்கு அங்க பாதுகாப்பும் நிம்மதியும் இருக்கும்னு உங்களுக்குத் தோணுதா, மொதல்ல என் இடத்துல இன்னொருத்தனை வெச்சு பாக்கமுடியுமா அவளால கொஞ்சம் நாள் குடுங்க எனக்கு நான் சரிபண்றேன்”.
“அவளை யாருக்கும் குடுக்க முடியாது அது என் அம்மா சொன்னாலும் சரி நீங்கச் சொன்னாலும் சரி வேற எதையும் யோசிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க, ராணியம்மாவை பத்தி உங்களுக்கு எந்தக் கவலையும் வேண்டாம் அவ என் பொறுப்பு அவளுக்கு நீங்க எந்தச் சம்மந்தமும் பாக்க வேண்டாம் என்னை மீறி எவனும் அவகிட்ட நெருங்க முடியாது அது உங்க அக்கா மகனா இருந்தாலும்” என்றவன் எழுந்துகொள்ள.
“என் பொண்ணு பேரு காமாட்சி நீங்க ராணின்னு ஏதோ சொல்றீங்க” என்றார் மாசிலாமணி அதிமுக்கிய சந்தேகமாக.
“அது” என்று நெற்றியை நீவியவன் “உங்களுக்குக் காமாட்சி எனக்கு அவ ராணி தான்” என்றவன் “உங்க அக்கா மகன் இப்போ எழுந்து நடக்கிறான் போல இப்படியே வாலை சுருட்டிக்கிட்டு இருந்தான்னா அவனுக்கு நல்லது இல்லன்னா அடுத்ததடவை எழுந்துக்கவே முடியாம போய்டும், நீங்க உடம்பை பாத்துக்கோங்க அப்புறம் நாளைக்கே ராணியம்மாவை ஊருக்கு அனுப்பிடுங்க இப்போதான் வேலைல சேர்ந்திருக்கு ரொம்ப நாள் லீவ் எடுக்க முடியாது” என்றவன்.
கதவின் அருகில் வரை சென்றுவிட்டு திரும்பி நின்று “ஒரு ரெண்டு நிமிஷம் பேசிக்குறேன்” என்றதோடு வாயிலில் வாயைப் பிளந்து நின்றிருந்தவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அடுத்திருந்த அறையில் நுழைந்து கதவைப் பாதி அடைத்தான்.
அடுத்த நொடி அவளை இழுத்து அனைத்திருந்தான் அப்படியொரு இறுக்கம் அவளுக்கு மூச்சடைத்தது கண்ணீர் ஒருபக்கம் நிற்காமல் வழிந்தது “ராணியம்மா” என்றவனின் குரலில் அவள் கரங்கள் தன்னாலே அவன் முதுகில் அழுந்தியது.
“நம்புறீங்கதான” என்றவனை இன்னும் நெருங்கினாள் அவன் மார்பில் அழுத்தமாக முகம் புதைத்தாள் “நான் பாத்துக்குறேன்” என்றவன் அவள் நெற்றியில் முத்தம் பதித்து கன்னம் தட்டி அறையிலிருந்து வெளியேறினான், மீனா ஆவென்று அவனைப் பார்த்திருந்தாள்.
முத்துலெட்சுமியும் அன்னம்மாவும் மாசிலாமணியை பார்த்து நிற்க “இதுதான் சரியாவரும்னு தோணுது பாக்கலாம் நேரம் கேட்டிருக்காரே ஆச்சிக்கும் விருப்பம் இருக்கு இனிமேலாவது பிள்ளை வாழ்க்கை நல்லா இருக்கட்டும்” என்றார்.
அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட ஆமோதிப்பாகத் தலையை அசைத்துக்கொண்டனர்.
“இவளோடது என்ன பஞ்சாயத்து” என்றார் மீனாவை பார்த்து “அதை நாங்க பேசிக்குறோம் நீ தூங்கு” என்ற முத்துலட்சுமி அறையை விட்டு வெளியில் வந்தார் உடன் அன்னம்மாவும்.
“உனக்கு என்ன பிரச்சனை” என்றார் அன்னம்மா மகளிடம் நேரடியாக, என்னமோ அவருக்குப் புது தெம்பு வந்திருந்தது ரகுவை பற்றி மருதவேலு பேசியதிலே அடித்தது அவன்தான் என்று புரிந்தது முத்துலெட்சுமிக்கும் புரிந்தது.
அவருக்கு வருத்தம் இல்லை, மகன் மீதோ மீனாவின் மீதோ அவருக்குக் கொஞ்சமும் இரக்கம் வருவதில்லை இன்னும் இன்னும் பாறையாய் அவர் மனதை இறுக வைத்துக்கொண்டிருந்தது வேண்டாம் என்று தாயும் தந்தையும் தூக்கி எறிந்த அந்தக் குட்டி உயிரின் அழுகை.
“நான் அங்க வேலைக்காரி மாதிரி இருக்கேன் என்னால அந்தப் பிள்ளைகளைப் பாத்துக்க முடியல”.
“என்ன பண்ணலாம்” என்றார் அன்னம்.
“அவர் வந்து பேசட்டும் பிள்ளைங்களை அவங்க அம்மா பாத்துக்கட்டும் காசு வேணா இவர் கொடுக்கட்டும்” என்றாள்.
“அது நடக்காது பிள்ளைங்களை பாத்துக்கத்தான் இந்தக் கல்யாணமே” என்றார் அன்னம்மா.
“அப்போ என் வாழ்க்கை… கொஞ்ச நாள்ல ஏத்துக்க முடியும்னு தானே அவர் சொன்னாரு” என்றாள்.
“அதெல்லாம் உனக்கும் உன் புருஷனுக்கும் இடைல நாங்க ஒன்னும் செய்யமு முடியாது வேணும்னா போய் வாழு இல்லையா எங்கேயாவது போ இங்க இருக்க முடியாது, புருஷன் கூடப் போனீன்னா நல்லது கெட்டதுக்கு நாங்க வந்து நிப்போம் இல்லனா உனக்கு உன் வழி” என்றவர் அடுப்படிக்குள் நுழைந்துகொண்டார்.
அடுத்தநாள் காலைக் காமாட்சி வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்ததாள் இரவே தந்தையும் தாயும் அவளிடம் பேசிவிட்டனர் “அந்தத் தம்பியை எங்களுக்கும் பிடிச்சிருக்கு ஆச்சி ரொம்ப நம்பிக்கை குடுத்துட்டு போயிருக்கார் பாக்கலாம் எல்லாமே நல்லதாவே நடக்கும் அந்த அம்மா வந்து அப்படி பேசவும் ஏதோ மனசுக்கு சுருக்குனு… அதுல அம்மா ரெண்டு வார்த்தை பேசிட்டேன் மனசுல வெச்சுக்காத ஆச்சி” என்ற தாயின் மடியில் படுத்துத் தேம்பி தேம்பி அழுதாள் காமாட்சி.
“போதும் மா இனியும் அழுகாத கொஞ்சம் நாள் போட்டும் பாக்கலாம்” என்றார் மாசிலாமணி.
“நாளைல இருந்து வேலைக்குப் போ” என்றார் தந்தை சிரித்துக்கொண்டே அவளுக்கும் அந்தப் புன்னகை தொற்றிக்கொண்டது.
“நானும் தாத்தாவும் சாயந்திரம் வீட்டுக்குப் போயிடுவோம் நீ வேலைக்குப் போயிட்டு அங்க வீட்டுக்கு வந்திடு” என்று சொல்லியிருந்தார் அவளின் பாட்டி
தாய் கட்டிக்கொடுத்த தக்காளி சாதத்தை எடுத்துக் கைப்பையில் வைத்தாள் காமாட்சி அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் அரவிந்தன் அவனின் பிள்ளைகளோடு.
“வாங்க மாமா” என்றாள் அவள், அவன் மெல்ல தலை அசைத்தான்.
“வாங்க மாப்ள” என்று அன்னமும் “வாங்க தம்பி” என்று முத்துலெட்சுமியும் அழைக்க மீனா அறைக்குள் இருந்து வெளியில் வந்தாள்.
“நீங்க என்னனு முடிவு சொல்லிடீங்கன்னா நான் இப்படியே கிளம்புவேன்” என்றான் அவன் அவர்கள் புரியாமல் பார்க்க.
“உங்க மக அங்க வராளா இல்ல இனிமே இங்கதானா” என்றான் அவளை முறைத்துக்கொண்டே.
“வராம என்ன உக்காருங்க மாப்ள சாப்பிட்டதும் உங்க பொண்டாட்டியை அழைச்சிட்டு போங்க” என்றார் அன்னம், மாசிலாமணியும் மெல்ல எழுந்து வெளியில் வந்திருந்தார் அவரின் சோர்வை பார்த்தவன் “என்னாச்சு” என்றான் கொஞ்சம் பதட்டமாக.
“ஒண்ணுமில்ல மாப்ள திடீர்ன்னு கொஞ்சம் உடம்பு முடியாம போச்சு இப்போ பரவாயில்ல” என்றவர் அவனை அமரச்செய்ய.
“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லித்தான் சம்மதம் வாங்கினேன் இப்போ என் பிள்ளைகளைப் பக்கத்து வீட்டில பாத்துக்க சொல்லிட்டு நான் ஆபிஸ்ல இருந்து வரதுக்குள்ள கிளம்பி வந்திருக் கா என்கிட்டயும் சொல்லல என் அம்மா கிட்டயும் சொல்லல இப்படி இவ பின்னாடியே நடந்து என்னால கெஞ்சிகிட்டு இருக்க முடியாது என்ன எதுன்னு கேட்டுச் சொல்லுங்க”.
“ஆனா நான் கண்டிப்பா கேஸ் போடுவேன் எல்லாத்துக்கும் சம்மதம் சொல்லிக் கல்யாணமும் செஞ்சுகிட்டு இப்போ என் பிள்ளைகளைப் பாத்துக்க முடியாதுனு விட்டுட்டு போய்ட்டா எனக்கும் என் குடுமபத்துக்கும் உண்டான மன கஷ்டத்துக்கு நஷ்டஈடு கேப்பேன்” என்றான்.
“என்னது!” என்று மீனா விழிக்க “அவ வரமாட்டேன்னு சொன்னா நீங்கத் தாராளமா கேஸ் போடுங்க அதை இந்த வீட்டுக்கு அனுப்பாதீங்க உங்க கூட அவ வாழ வரலைன்னா அவளுக்கு இந்த வீட்ல இடம் இல்லை, அவ எங்க தங்குறான்னு கேட்டுகிட்டு அங்கேயே அனுப்புங்க வேணும்னா நானும் வந்து சாட்சி சொல்றேன்” என்றார் மாசிலாமணி.
மீனா அதிர்ந்துபோய் பார்த்தாள் தந்தையை, சிலநொடிகளில் பையைத் தூக்கிக்கொண்டு அவனோடு சென்றாள், சாப்பிட சொல்லி அழைக்க நினைத்த அன்னத்தை தடுத்த அரவிந்த் “இப்போ கூப்பிட்டாலும் முறுக்கிப்பா போற வழில வாங்கிக்குடுக்குறேன் இப்போ கிளம்புறோம்” என்று கிளம்பினான்.
அவன் வந்த சில நொடிகளில் அவனுக்குத் தேநீர் கொடுத்த அன்னம் காமாட்சிக்கு கண் காண்பிக்க பிள்ளைகள் இருவரையும் அழைத்துச் சென்றவள் அவர்களுக்குக் காலை உணவையும் ஊட்டி விட்டிருந்தாள் இதெல்லாம் அரவிந்தனின் பார்வையில் விழவே செய்தது இந்தக் குடும்பத்தில் இவள் எப்படி வந்து பிறந்தாள் என்று எண்ணிக்கொண்டான்.
ஆட்டோ நேரே பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது ஹோட்டலில் அவளுக்கும் தனக்கும் காலை உணவை வாங்கிக்கொண்டவன் சாப்பிட அமர்ந்தான் பிள்ளைகள் போனில் விளையாட மீனாவை பார்த்தவன் “கோவிச்சுக்கிட்டு போனதும் பின்னாடியே வந்துட்டான் எப்போவும் இப்படி வருவான்னு பகல் கனவு காணாத”.
“நான் என்ன செய்வேன்னு உனக்கும் உங்க வீட்டில இருக்கிறவங்களுக்கு தெரியுனுமே அதுக்காகத்தான் வந்தேன் இனிமே என் செருப்பு கூட வராது, ஒழுங்கா இருந்தா உனக்கு நல்லது இல்ல எலும்பை எண்ணிபுடுவேன் இனிமே என்னைக் கேக்காம வீட்டு வாசற்படியை தாண்டு அப்புறம் தெரியும் உனக்கு நான் யாருன்னு” என்றவன் குரலிலே அவளுக்குக் கிலி பிடித்தது.
“லேட் ஆகிடுச்சு” என்று வேகமாக ஓடினாள் காமாட்சி பஸ் இல்லையென்றால் ஆட்டோ வைத்துக்கொள்வோம் என்று எண்ணியவள் தெருமுனையை எட்ட அவளுக்காகக் காத்திருந்தான் மருதவேலு.
அவனைக் கண்டவள் விழிகள் விரிய வேகநடையில் அவனை நெருங்கினாள் கார் கதவைத் திறந்துவிட்டவன் அந்த அக்கம் சென்று வண்டியை எடுத்தான்.
“எப்போ வந்தீங்க” என்றாள் கண்கள் மின்ன.
“அரைமணி நேரம் ஆச்சு” என்றவன் விழிகள் அவள் முகத்தைத் தான் ஆராய்ந்தது, இரண்டு நாட்கள் அழுததின் சுவடுகள் கொஞ்சம் மிச்சம் இருந்தது.
“ஒழுங்கா தூங்குனியா” என்றான்.
“ஹ்ம்ம்” என்றவள் “அப்பா அம்மாக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை” என்றாள்.
“ஹ்ம்ம்” என்றான்.
“நீங்க ஏன் வீட்டுக்குப் போகாம இருக்கீங்க அதும் நாலு மாசமா அதான் உங்க அம்மாவுக்கு என் மேல கோபம்” என்றவளை பார்த்துப் புன்னகைத்தவன் “நான் பாத்துக்குறேன்” என்றான்.
அவனாக ஒன்றுமே பேசவில்லை ஸ்டெயரிங்கில் தாளம் தட்டுவதும் நெற்றியை நீவுவதும் அவளைப் பார்ப்பதும் என்று ஒருமாதிரி நிலை இல்லாமல் தவித்தான்.
“என்னாச்சு” என்றாள் மெல்ல, அவளின் அலுவலகத்தின் பக்கம் நெருங்கி விட்டிருந்தனர்.
“ஹ்ம்ம்… அது…” என்றவன் வண்டியை நிறுத்தி அவள் கரத்தைக் கோர்த்துக்கொண்டான் அதை அவன் நெஞ்சிலும் பதித்துக்கொண்டவன் விழிகள் மூடி அமர்ந்திருக்க, சொல்லமுடியா உணர்வில் தேகம் சிலிர்த்தது காமாட்சிக்கு.
அவளைத் திரும்பிப் பார்த்தவன் “ஒண்ணுமில்ல சும்மா… ஏதோ… நீங்கக் கிளம்புங்க” என்றவன் எட்டி கார் கதவைத் திறக்கச்சென்றான், அதற்க்கு முன் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து விலகியவன் “போங்க” என்று கதவைத் திறந்துவிட்டான்.
அவள் அவனையே அதிர்ச்சியோடு பார்த்திருக்க “போங்க ராணியம்மா” என்றான் தலையைக் கோதிக்கொண்டே, திரும்பித் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டே சென்றாள் காமாட்சி.
error: Content is protected !!