Skip to content
Post Views: 3,198
என்ன அத்த சொல்றீங்க? குப்பை கொட்ட முறத்துடன் வெளியில் வந்த தமயந்தி வெள வெளத்து நின்று விட்டார்.
அது… அது ஒண்ணுமில்ல தமயந்தி.. நீ விசனப்படாதம்மா சுசிலா மருகி நின்றார்.
சத்தம் போடாத தமயந்தி…வாயில் விரல் வைத்து எச்சரித்தார் பரமசிவம்.
மாமா என்ன இதெல்லாம்? நடுங்கிவிட்டார் தமயந்தி.
Advertisement
பொண்ணு கேட்டு வரேன்னு சொல்லியிருக்காங்க அவ்வளவு தான். நாம அதை விரும்பலன்னு புரிய வச்சிடுவோம் என்றார் பரமசிவம்.
மாமா உங்க தங்கச்சி எங்களை நிம்மதியா இருக்க விட மாட்டாங்களா? செத்தாலும் வாழ்ந்தாலும் வேண்டாம்னு தானே ஒதுங்கி இருக்கோம்.. இப்போ நம்ம வீட்டுல ஒரு விசேஷத்தை சந்தோஷமா நிம்மதியா செய்யவிடாம ஏன் இப்படி பண்றாங்க…? கண்கலங்கி நின்றுவிட்டார் தமயந்தி.
ஒண்ணுமில்ல நீ அழுது கரையாம உள்ள போம்மா பிள்ளைங்க வந்துட போகுதுங்க… நான் கலா வீட்டுக்காரருக்கு தெளிவா புரிய வச்சிடுறேன்… பரமசிவம் தேற்றி அனுப்பினார்.
Advertisement
பரமு என்பேத்தி அந்த ராஜேசு பயலால பட்ட அவமானம் போதும்… அப்பன் இல்லாத பிள்ளைடா அது கலங்கி நிற்கிறத மாதிரி ஏதாவது நடந்துச்சு அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.
Advertisement
உன் சின்ன மாப்பிள்ளைகிட்ட போன்ல பேசுவியோ நேரில் போய் நிற்பியோ எனக்கு தெரியாது ஆனா அவரு பொண்ணு கேட்டு இங்கே வந்துடக் கூடாது பார்த்துக்கோ…! அத்தனை ஆவேசம் சுசிலாவிற்கு.
சரிம்மா நான் பார்த்துக்கிறேன் நீ போய் சாப்பிடும்மா தாயை சமாதானம் செய்த கையோடு கிளம்பிவிட்டார் பரமசிவம்.
“——————-“
Advertisement
குலாபி என்னாரா பதிலே வரல?
ம்ம்ம்ம்ம் என்ன கேட்டிங்க?தடுமாறினாள்.
சரியா போச்சு…! மத்தியானம் போஜனம் ஆயிந்தா ? மீண்டும் கேட்டான்.
ம்ம்ம்ம் ஆச்சு… நீங்க? உயிர்பில்லாத குரலில் கேட்டாள்.
ம்ம்ம்… ஜஸ்ட் நவ்… நேத்து கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன் கால் பண்ண டைமில்லை சாரிரா என்றான் உருகி வழியும் காதலுடன்.
ம்ம்ம்ம் என்றாள் உள்ளம் வெதும்பி.
என்னாரா தலைவலியா? அக்கறையுடன் கேட்டான்.
அதெல்லாம் ஒண்ணுமில்ல…
ஏதாவது பிராப்ளமா?
ச்ச…ச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல… உங்களுக்கு போராடிக்குதுனா என்னை கேள்வி கேட்டு குடைவீங்களா? சமாளித்தாள்.
நிஜமாவே ஒண்ணுமில்லன்னா சந்தோஷம்ரா… சரி நான் அர்ஜெண்டா டைரி பார்ம் (Dairy farm )வரைக்கும் போகணும் … நீ ரெஸ்ட் எடுறா பங்காரம்.
சொல்லாமல் விட்டுவிட்டோமே… தவித்து நின்றாள்.
அவனுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகிவிடுமே…?
தன் திருமணத்திற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்? மனம் வெறுமையை அப்பிக் கொண்டது.
பலவித குழப்பம், பயம், பதட்டம்….ராஜேஷ் இப்போது எப்படி இருக்கிறானோ… கடவுளே அவன் நல்லபடியா பிழைக்கணும்….! இதயம் கனத்து விட்டது அவளுக்கு.
ரோஜா செடிக்கு ஆட்டு சாணத்தை எருவாக போட்டுவிட்டு தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு உள்ளே வரும்போது கேட்டுவிட்டாள்.
ராஜேஷ் ராஜேஷ் என்று பெயர் அடிபடும்போது தயங்கி சுவரின் பின்புறம் நின்றுவிட்டாள்.
விஷயம் கேட்டதும் மனம் உடைந்து போனாள்.
என்ன மனிதர்கள் இவர்கள் என்ற வேதனை ஒருபுறம்? வேறொருவனுக்கு நிச்சயம் செய்து திருமணத்திற்கு தயாராகி நிற்கும் ஒரு பெண்ணை மையப்படுத்தி இவர்கள் இப்படி நடந்து கொள்வது முறையா என்ற கோபம் மறுபுறம்.
உடனே ஹரிக்கு அழைத்து சொல்லிவிட வேண்டும் என்று உள்ளம் உந்தியது. வேண்டாம் அவன் கோபக்காரன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும் என்ற அச்சத்தில் அப்படியே மனதிற்குள் பூட்டிக் கொண்டாள்.
ராஜேஷை பிடிக்காது என்பதற்காவோ அவன் நடந்து கொள்ளும் முறைக்காகவோ அவன் செத்து ஒழியட்டும் என்று அவளால் கொடூரமாக நினைக்க முடியவில்லை.
அவன் பிழைக்க வேண்டும் என்றே அவள் வேண்டுதல்!
தனக்கு தெரியும் என்று அவள் வீட்டில் காட்டிக் கொள்ளவில்லை.
அடுத்து என்ன நடக்குமோ என்று மனதிற்குள் பயப்பந்து உருண்டு கொண்டே இருந்தது.
“——————–“
நல்லா விசாரிச்சியா பரமு? சுசிலாவிற்கு வார்த்தை முட்டியது.
கும்பகோணம் ஆஸ்பத்ரிக்கு போய் பார்த்துட்டு தான் வரேம்மா..
காலையிலே டிஸ்சார்ஜ் செய்து மெட்ராசுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களாம்.
டாக்டருங்க என்னப்பா சொல்றாங்க? கண்ணீர் பொங்கியது அவருக்கு.
கொஞ்சம் பரவாயில்லைன்னு தான் சொல்றாங்க!
அப்புறம் ஏன் மெட்ராசுக்கு போறாங்க? பேரன் என்ற பந்தம் அவரை துடிக்க வைத்தது .
உம்பொண்ணுக்கு தான் எதிலும் பொறுமையும் நிதானமும் இருக்காதே… மகங்காரன் உடனே எழுந்து உட்காரணும்னு இப்படி ரிஸ்க் எடுத்து அவசரமா ஆம்புலன்ஸ் புடிச்சி ஏத்தி கொண்டு போய் அப்பலோவில் சேர்க்க போயிருக்காம்…
ஒண்ணுமில்ல தானே பரமு? உடைந்து விட்டார் அவர்.
நிஜமாதாம்மா சொல்றேன்… நாடிதுடிப்பு நல்லாவே இருக்காம். கலாவுக்கு தான் அது பிடிச்ச முயலுக்கு மூனு கால் ஆச்சே… சலித்துக் கொண்டார் பரமசிவம்.
“——————–“
ஹலோ மாமா…
சொல்லு பவிம்மா …!
மாமா ராஜேஷ் இப்போ எப்படி இருக்காரு?
தெரியல பவிம்மா…
நீ ஏன் ரொம்ப டென்ஷனா இருக்க?
அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமா…
மாயவரம் கீதாஞ்சலி டெய்லரிட்ட முகூர்த்த புடவைக்கு பிளவுஸ் தைக்க கொடுக்கணும்னு தமயந்தி சொல்லுச்சு!
ம்ம்ம்ம்… காயத்ரியை அனுப்பிட்டேன் மாமா.
நீ போனா உனக்கு பிடிச்ச டிசைன் பார்த்து சொல்லி இருக்கலாமில்ல…?
பரவாயில்லை மாமா… என்னைவிட காயத்ரி நல்லா பார்த்து சொல்வா.
உண்மையில் அவளுக்கு வெளியே செல்லவே பயமாக இருந்தது. போகும் இடத்தில் எதுவும் பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சம் அதனால் தான் தங்கையை அனுப்பி விட்டாள்.
ராஜேஷை நம்ப முடியவில்லை… அதோடு அவன் பெற்றவர்களை எண்ணியும் அவளுக்கு உள்ளுக்குள் உதறல் தான்.
பவிம்மா உனக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கணும். இந்த வாரம் கும்பகோணம் போய் வாங்கிட்டு வந்துடுவோம்.
சரிங்க மாமா…!
அப்புறம் மாமா ராஜேஷ் விஷயம் எதுவும் ஹரிக்கு தெரிய வேண்டாம். அவர் ரொம்ப கோபப்படுவார்.
சரிம்மா….! இதையெல்லாம் போய் சொல்வேனா?
மாமா ராஜேஷ்க்கு பயப்படும்படி எதுவும் இருக்காதுள்ள?
எனக்கு தகவல் எதுவும் தெரியலம்மா…!
சரிங்க மாமா நான் வச்சுடறேன்.
“—————–“
ஹலோ செந்தா அத்தை சொல்லுங்க!
பவிம்மா அத்தை சீர் செய்ய ரெண்டு பவுனில் உனக்கு செயின் வாங்கவா… சின்னதா நெக்லஸ் வாங்கவா? பாசத்துடன் கேட்டார் செந்தாமரை.
உங்க இஷ்டம் அத்தை.
திருபுவனத்தில் தான் பட்டு வாங்க போறேன்…!
அத்தை ஏன் பட்டு புடவை எல்லாம்? சிம்பிளா சில்க் காட்டனில் பார்த்து வாங்கிக்கோங்க.
அட நீ ஒருத்தி இதுக்கெல்லாம் கணக்கு பார்த்துட்டு .. என் அண்ணன் பொண்ணுடா தங்கம் நீ…! அண்ணன் எனக்கு செய்ததெல்லாம் கணக்கு பண்ணினா இது ஒண்ணுமே இல்லை.
அத்த கலாத்தைக்கு பேசினீங்களா?
எங்க அவளுக்கு போன் போகல தங்கம்.
என்னத்த சொல்றீங்க?
ஆமா பவி.. நேத்துல இருந்து போன் போட்டு பார்க்கிறேன்.
வேலு மாமாக்கு பண்ணி பார்த்தீங்களா?
அவருக்கும் தான் பண்ணிபார்க்கிறேன் சுவிட்ச் ஆப்னு வருது தங்கம்.
புள்ள எப்படி இருக்கானோ.. எந்த ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்களோ… மனசுக்கு வேதனையா இருக்கு பவிம்மா…
போய் பார்க்க கூட முடியல… இந்த கலா ஒட்டு உறவா யார் கூட தான் பழகுறா… யாரை மதிக்குறா…
சாரி அத்தை…! அவளுக்கு குறு குறுத்தது.
நீ ஏம்மா சாரி சொல்ற? கலா வளர்க்க தெரியாம பிள்ளை வளர்த்ததுக்கு இப்போ யாரை குறை சொல்ல முடியும்?
சரிங்க அத்தை நான் வச்சுடறேன்…!
யாரை கேட்டாலும் பதில் கிடைக்கவில்லையே… இப்போ ராஜேஷ் எப்படி இருக்கிறாரோ… இன்னும் வேதனை அதிகமாகியது அவளுக்கு.
மணமகளுக்குரிய மகிழ்ச்சியை அவளால் சுகிக்க முடியவில்லை.
“————————-“
பவிக்கா மாமாவோட சண்டையா?
ஏன் யுவி இப்படி கேட்குற?
இல்ல நாளைக்கு காலையில் நலங்கு வைக்கப் போறாங்க… நீ ஹேப்பியா இருக்க மாதிரி தெரியலையே… அமைதியாவே இருக்க… என்னக்கா ஆச்சு?
அக்கா கலகலன்னு பேசிட்டாலும்… சத்தமாக சிரித்துவிட்டாள் காயத்ரி.
சும்மா இருடி…பவிக்குட்டி கல்யாணம் ஆகி போக போறால்ல அந்த வருத்தம் அவளுக்கு என்றார் சுசிலா.
அப்படியாக்கா என்றான் யுவராஜ்.
ம்ம்ம்ம்ம் என்று தலை அசைத்து வைத்தாள்.
நீ கவலைபடாதக்கா மாமா உன்னை அடிக்கடி இங்கே கூட்டிட்டு வருவார்… அக்காவிற்கு ஆறுதல் கூறினான் தம்பி.
மகள் தன்னிடம் பேசிவிட மாட்டாளா என்ற ஏக்கம் தவிப்பு தமயந்திக்கு அதிகம் இருந்தது.
எந்த பெரிய செலவையும் அவள் செய்ய விடவே இல்லை.
மாமா வெள்ளியில் பூஜை சாமான் அவங்க கேட்டாங்களா? வெள்ளி கிராம் நூத்தை தாண்டிடுச்சு! விளக்கு மட்டும் போதும் எதுக்கு இந்த ஆடம்பரம் என்று மணவாளனிடம் கண்டிப்பு காட்டினாள்.
காயு எனக்கு எதுக்கு இப்போ சுடிதார் வாங்கணும்? இருக்கிறதே போதும். அவங்க வீட்டில் புடவை தான் கட்ட சொல்லுவாங்க…!
காயு இந்த நெக்லஸ் இங்கேயே இருக்கட்டும்… இந்த ஜிமிக்கி கம்மல் கூட இங்கே இருக்கட்டும் உனக்கு யூஸ் ஆகும்.
பாட்டி…செந்தா அத்தை, மாமா சீரா செய்ற நகை எல்லாம் நீங்களே வாங்கிக்கோங்க! அங்கே கணக்கில் கொண்டு வர வேண்டாம்.
மாமா இதுல அறுபதாயிரம் இருக்கு கும்பகோணம் போறப்போ யுவிக்கு ஒன்னு, ஒன்னே கால் பவுனில் ஒரு செயின் வாங்கிட்டு வந்துடுங்க!
ஏங்க்கா இப்போ இதெல்லாம்…?
இது நான் போஸ்ட் ஆபிஸ் RD கட்டின பணம். அதுல என் தம்பிக்கு ஏதாவது வாங்கணும்னு தோணுச்சு!
அக்கா…. அழுதுவிட்டான் யுவி.
மாமா இந்த ATM கார்டு உங்க கையிலே இருக்கட்டும் பின் நம்பர் கூறியவள் …. மாமா என் அக்கவுண்டில் மூனு லட்சம் கிட்ட இருக்கும். வெளியில் ஒரு பைசா கூட கடன் வாங்க கூடாது சொல்லிட்டேன். இருக்கிறதை வைத்து அட்ஜெஸ்ட் பண்ணி என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க போதும் என்றாள்.
மகளை பார்த்து கண்ணீர் விட்டார் தமயந்தி.
குடும்பத்தின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட முத்தான பெண்ணை பெற்றதை எண்ணி அவருக்கு அவ்வளவு பெருமை.
“——————–“
இன்னும் மூன்று நாளில் ஆந்திராவிற்கு கிளம்பவேண்டும்.
மாப்பிள்ளை வீட்டு முறைப்படி திருமணம். அங்கே மூன்று நாள் சடங்கு நடைபெற இருக்கிறது.
நாளை பந்தகால் நட்டு தாய் நலங்கு தமயந்தி வைத்து அடுத்த நாள் அத்தை நலங்கு என்று செந்தாமரை வைக்கிறார்.. அடுத்த நாள் ஆந்திராவிற்கு சென்று அங்கே வைத்து தான் அம்மான் நலங்கு என்று மணவாளன் செய்ய இருக்கிறார்.
இன்னும் பவித்ரா தாயிடம் ஒட்டாமல் தான் இருக்கிறாள். ஏனோ அவளால் இயல்பாக தாயிடம் நெருக்கம் காட்ட முடியவில்லை.
சிலவற்றை காலம் தான் மாற்றும்… எவ்வளவு நாளில் என்று கேட்டாள் பதில் கூற இயலாது.
தீயினால் சுட்ட புண்ணை விட வார்த்தையினால் சுட்டப் புண்ணுக்கு வலியும் வலிமையும் அதிகம் அல்லவா?
தாயை அவள் வெறுக்கவில்லை ஆயினும் அவளால் ஏற்கவும் முடியவில்லை.
“——————–“
கிருஷ்ணா குடும்பமே பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தது.
ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.
இன்னும் ஒரு வாரத்திற்கு ஊரில் யார் வீட்டிலும் அடுப்பு பற்ற வைக்க கூடாது என்று அன்பு கட்டளை பிறப்பித்துவிட்டார் சுப்ப கிருஷ்ணா.
கிருஷ்ணா இல்லம் பெயிண்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாய் ஜொலித்து நின்றது.
கரீம் நகர் வீட்டுக்கும் வண்ணம் பூசி அழகு படுத்தியிருந்தனர். பெண் வீட்டார் அங்கே தான் தங்க இருக்கிறார்கள்.
சாலை நெடுக அலங்கார வளைவுகளும் தோரணங்களும் அமைக்க முன்னேற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அவ்வளவு பிசியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஹரிசரண் பவித்ராவிற்கு அழைப்பதற்கும் மறப்பதில்லை.
என்னரா குலாபி இவ்வளவு டல்லா இருக்க?
அதெல்லாம் இல்ல… நான் நல்லா தான் இருக்கேன்…!
இல்லையே நாலு அஞ்சு கிலோ குறைந்த மாதிரி தெரியுதே…
கண்ணுக்குள்ள எடை மெஷின் வச்சிருக்க மாதிரி தான்… முணு முணுத்துக் கொண்டாள்.
ஹா ஹா… என்று வாய்விட்டு சிரித்தான்.
என்ன சிரிப்பு? முறைத்து வைத்தாள்.
ஹரி எடை போட்டா துல்லியமா இருக்கும். இங்கே வா தூக்கி பார்த்தே மில்லி கிராம் பிசகாம சொல்லிடறேன்… கண் சிமிட்டினான்.
ச்ச… போய் வேலையை பாருங்க… அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது.
இப்போ வேலையை பார்க்கிறேன்…. அப்புறம் உன்னை….
ஹலோ.. ஹலோ… அடிக்கடி சிக்னல் வீக்காகுது முதல்ல இந்த ஜியோ சிம்மை மாத்தணும்… வேண்டுமென்றே பேசி கொண்டிருந்தாள் குலாபி.
அடியேய்… சிரித்து விட்டான் ஹரி.
“——————“
உற்றார் உறவின்முறைகளை எல்லாம் அழைத்து அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் நட்டுவிட்டனர்.
ஆறு மணிக்கு முதல் நலங்காக தாய் நலங்கு வைபவம் நடைபெற்றது.
மகளுக்கு நடைபெறும் சடங்குகள் கண்டு ஒரு தாயாய் உள்ளம் குளிர்ந்து கண்கள் கசிந்து நின்றார் தமயந்தி.
பெண் குழந்தைகள் தான் எத்தனை சீக்கிரம் வளர்ந்து விடுகிறார்கள்! நேற்று தான் மருத்துவமனையில் மகளை பிரசவித்து கையில் ஏந்தியது போல் இருக்கிறது இன்று அவளுக்கு திருமண வைபவம். அடுத்த வருடம் அவள் கையில் ஒரு குழந்தை… காலம் எவ்வளவு வியப்பை திகைப்பை சுலபமாக கொடுத்து விடுகிறது… ஓரமாய் நின்று பூரித்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் தமயந்தி.
தகப்பன் இல்லை என்ற ஒரு குறையை தவிர வேறெந்த குறையும் இல்லை பவித்ராவிற்கு.
“——————–“
நல்ல நேரத்துல கிளம்பனும் தமயா அவசரப்படுத்தினார் மணவாளன்.
பவிக்கண்ணு அப்பாவை கும்பிட்டு கிளம்பு தங்கம் என்றார் சுசிலா.
சந்தனமாலையோடு ரோஜாப்பூ மாலை சேர்ந்து மணம் வீச அழகாய் கம்பீரமாய் சிரித்துக்கொண்டிருந்தார் சங்கர நாராயணன்.
தந்தை படத்தின் முன் விழுந்து வணங்கியவள் எழவே இல்லை… அப்பா என்று கதறினாள்.
அக்கா… அழாதக்கா யுவராஜ் தேம்பினான்.
பவி அழுகாத…. விசும்பிக் கொண்டே அக்காவை எழுப்பினாள் காயத்ரி.
தான் பெற்ற பிள்ளைகள் மூன்றும் தந்தையை எண்ணி கலங்கி நிற்க வாய்விட்டு கதறிவிட்டார் தமயந்தி.
தமயந்தி என்ன இது..? புள்ளைங்க தான் அழுகுதுன்னா நீ வேற ஏம்மா… மணவாளன் அதட்டினார்.
அழாத தங்கம் உங்கப்பன் சாமியா இருநது உன்னை வழி நடத்துவான். அம்மாட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு கிளம்புடா ராசாத்தி என்றார் சுசிலா.
தமயந்தி புள்ளைக்கு குங்குமம் வச்சு அனுப்புமா என்ற சுசிலா கண்ணீரை வழித்து புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டார்.
மகள்…பெற்றவள் பாதம் பணிய… அள்ளி எடுத்த அன்னை … முகம் முழுதும் முத்தமிட்டார்.
என் தங்கமே… என் குல தெய்வமே அம்மாவை மன்னிச்சுடு சாமி… கை கூப்பி கதறினார்.
ஒரு வாரமாக அவர் மனதை அழுத்திய பாரம் கண்ணீராய் கரைந்தது.
தாய் முகம் பார்த்து குலுங்கி அழுத மகள் கூப்பிய தாயின் கரத்தை விலக்கி விட்டாள். நடுங்கும் கரத்துடன் மகளுக்கு குங்குமம் வைத்து வழி அனுப்பினார் தமயந்தி.
வேன் ரெடியா இருக்கு கிளம்புங்க என்று சத்தமிட்டார் மணவாளன்.
மணவாளன் குடும்பம் மணப்பெண் குடும்பத்துடன் செல்கிறார்கள். தாய்மாமன் சடங்கு செய்ய மணவாளன் அங்கே இருந்தாக வேண்டும். பரமசிவத்தின் மனைவி மகள் மருமகன் மகன் எல்லோரும் இப்போது பெண்ணுடன் விமானத்தில் செல்கிறார்கள்.
உறவினர்களை அழைத்துக் கொண்டு பரமசிவம் பேருந்தில் வருவதாய் ஏற்பாடு.
“——————–“
திருச்சி விமான நிலையம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது.கிராமத்து மனிதர்களுக்கு முதல் விமான பயணம். பயம் பரவசம் என்று சலசலத்துக் கொண்டிருந்தனர்.
தன்னருகில் அமர்ந்த செந்தாமரையிடம் சின்ன குரலில் கேட்டாள் அத்த ராஜேஷ் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?
இல்லை என்பதாய் உதடு பிதுக்கினார்.
அவள் முகம் கூம்பி விட்டது. தன் பொருட்டு ஒருவன் சாக துணிந்து இருக்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய வேதனை?
ஆந்திராவில் வந்து இறங்கியவர்களை வரவேற்க காத்திருந்தான் தேவ்சரண்.
பழச்சாறு சிற்றுண்டி வாங்கி கொடுத்து பெண் வீட்டாரை அழைத்து சென்று கரீம்நகர் வீட்டில் விட்டு வேண்டிய ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு பெரிய வீடா? ஜெயலட்சுமிக்கு விழி பிதுங்கியது.
இது சும்மா வந்தா போனா தங்குற வீடாம் சொந்த வீடு கிராமத்தில் இருக்காம் என்றார் சுசிலா.
வந்தா போனா தங்கவே இவ்வளவு பெரிய வீடா?
தமயந்தி மகளுக்கு வந்த வாழ்வை பாரேன் என்று ஏங்கி ஏங்கி பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயலட்சுமி.
சற்று நேரத்தில் வெங்கட கிருஷ்ணா தன் மனைவி ஷியாமளாவுடன் வந்து பெண் வீட்டாரை வரவேற்றார்.
பெண் வீட்டாருக்கு அருமையான இரவு உணவு கொடுத்து உபசரித்து விட்டே சென்றனர்.
“——————“
அக்கடா என்று படுத்த பவித்ராவிற்கு அழைப்பு.
சரண்யாவும் காயத்ரியும் கிளுக்கி சிரிக்க… போங்கடி என்று சிணுங்கி கொண்டே மொபைலை எடுத்துக் கொண்டு பின்புறம் வந்து விட்டாள்
குலாபி வெல்கம் டு அவர் பிளேஸ் என்றான் ஹரி.
ம்ம்ம்ம் என்றாள் வெட்க சிரிப்புடன்.
இங்கே யாருன்னு பாரு… கையில் இருக்கும் குழந்தையை காட்டினான்.
ஹே இனியன் குட்டி…! சௌமிக்கா வந்துட்டாங்களா…? என்கிட்ட சொல்லவே இல்லை… இதயா எங்கே? அகிலன் சார் காணோம்?
கூல் கூல்… சௌமி அம்மாவோட ரூம்ல பேசிட்டு இருக்கா… அகி நம்ம ராமோட ஏதோ வேலையா வெளியில் போயிருக்கான். மதியமே வந்துட்டாங்க…
எல்லாம் கன்வீனியண்டா இருக்கா?
ம்ம்ம்ம்ம் என்றாள் முகம் சுணங்கி…
ரொம்ப டயர்டா இருக்க போய் தூங்கு!
இல்ல பேசுங்க என்றாள் தடுமாற்றத்துடன்.
என்னாரா….?
ஒண்ணுமில்லை என்று தலை ஆட்டினாள்.
தங்கள் தரப்பில் என்னென்ன வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செய்ய இருக்கும் திருமண சடங்குகள் என்னென்ன என்று அவளிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினான்.
அவள் முகம் இப்போது தான் தெளிந்து சற்றே மகிழ்ந்தது.
காலையில் மாமய்யா நலங்கு இருக்கு… இனி பேச நேரம் இருக்காது… நீ போய் தூங்குறா அம்மாயி என்றான்.
ம்ம்ம்ம்ம் என்றவள் அவன் முகத்தை ஊன்றி கவனித்தாள்.
என்ன லுக்கு என்றான் வெட்க சிரிப்புடன்.
சும்மா என்றாள் உதடு வளைத்து கண்சிமிட்டலுடன்….
ஏய் குலாபி…. சிலிர்த்து விட்டான்.
என்ன?
இன்னும் கொஞ்ச நேரம் பேசுவோமா? அவ்வளவு கிறக்கம்.
இங்கேயும் மாமய்யா நலங்கு இருக்கு… குட் நைட் என்றாள்.
சிரிப்புடன் அவன் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான். பெங்களுரில் இருந்து மொபைல் அழைப்பு.
ஹலோ தனா சொல்லு மேன்… அந்த பையன் ஓகே தானே…?
அமோகமா இருக்கான்… எவ்வளவு வேலை கொடுத்தாலும் கட்டுப்போட்ட கையோட ஆர்வமா செய்றான்.
அடிமை சிக்கிட்டான்னு வச்சி செய்யாத மேன்…
எந்த ஊருல அடிமைக்கு ஒன்னரை லட்சம் சம்பளம் தராங்க….? தனஞ்செயன் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.
காஸ்ட்லியான அடிமை…. சிரித்து விட்டான் ஹரி.
error: Content is protected !!