அவள் விழிகள் அவனை இன்னும் கூர்மையாகப் பார்க்கச் சட்டென்று திரும்பித் தன் பின்னில் வந்து நின்ற தந்தையை முறைத்து பார்த்த மருதவேலு “மாப்ள இல்லாம பொண்ணு பாக்க போனீங்க சரி என் போட்டோவைக் கூடவா அவங்களுக்கு காட்டல எப்படி என் போட்டோவைக் கூடப் பாக்காம ஒத்துக்கிட்டாங்க” என்றதும்.
Advertisement
Advertisement
ராமலிங்கம் “இல்லப்பா போட்டோ குடுத்துட்டோம் அவங்க வீட்டில பாத்துட்டு தான் சரி சொன்னாங்க” என்றார் அவசரமாக, இப்பொழுது திரும்பிக் காமாட்சியை பார்த்தான் தன் புகைப்படத்தைக்கூட அவள் பார்க்க வில்லை என்பது புரிந்தது.
Advertisement
ராமாலிங்கத்தை பார்த்ததும் காமாட்சிக்கு தெரிந்துவிட்டது அவள் ஒரு சங்கடத்தோடு அவனைப் பார்த்தாள், அவள் தான் அவனின் புகைப்படத்தையே பார்க்கவில்லையே ஏனோ எதிலுமே நாட்டமில்லை அதோடு மயிலம்மா இவ்வளவு கொடுத்துவிடுங்கள் இப்படி செய்துவிடுங்கள் என்று தந்தையிடம் கேட்டது அவளை இன்னும் நோக வைத்தது.
இரண்டு மகள்களைப் பெற்று வளர்த்து எப்படி எல்லாம் வாழவைக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பார் அதில் ஒன்று கூட நடக்கவில்லையே, தந்தை இன்னும் என்ன என்ன அவமானங்களையும் மனக்கஷ்டங்களையும் நேரிடவேண்டுமோ என்ற கவலை.
தன்னை கட்டிக்கொள்ள விலை பேசுகிறார்கள் இதையெல்லாம் கொடுத்துவிட்டால் மட்டும் தனக்கான அன்போ அரவணைப்போ அங்கே கிட்டுமா என்று பலவிதமான குழப்பத்தில் இருந்தவளுக்கு கல்யாணமும் பிடிக்கவில்லை இங்கிருக்கவும் பிடிக்கவில்லை அதில் மாப்பிள்ளையின் போட்டோ பற்றியெல்லாம் அவள் நினைவில் கூட இல்லை.
அவள் ராமாலிங்கத்தை பார்த்து மெல்ல சிரித்தாள் அவரும் புன்னகைத்தார் என்றாலும் இந்தப் பொண்ணு போட்டோ கூடப் பாக்கலயா அப்போ கல்யாணத்துல விருப்பம் இல்லையோ கட்டாயமோ என்று அவர் யோசனை ஓடியது.
“கொஞ்சம் பேசணும்” என்றான் மருதவேலு அவளிடம்.
“நீங்க அப்பாகிட்ட பேசிக்கோங்க” என்றாள் அவள் அவசரமாக.
“ராத்தரியெல்லாம் வண்டியோட்டி வந்திருக்கேன் கண்ணெல்லாம் எரியுது தலை வலிக்குது வீட்டுக்குப் போய்த் தூங்கலாம்னா இவர் இதாண்டா மகனே உன்கிட்ட சொல்லாமலே நாங்க உனக்குப் பாத்த பொண்ணுன்னு காமிக்குறாரு அதான் நாமளும் ஒரு பொண்ணு பாக்குற சடங்கை நடத்திடலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“அந்தா இருக்கே ஹோட்டல் அங்க போய் ஒரு காப்பி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்” என்றவன் முன்னே நடக்க.
“இல்ல நான் வரல” என்றவளை அவன் திரும்பி அழுத்தமாகப் பார்க்க “போய்ப் பேசும்மா ஏற்கனவே அவன்கிட்ட சொல்லாம பொண்ணு பாத்துட்டோம்னு கோபத்துல இருக்கான்” என்றார் ராமலிங்கம்.
‘அதுக்கு உங்கமேலதான கோபப்படணும் நான் ஏன் போய்ப் பேசணும்’ என்று மனதில் நினைத்தவள் அப்படியே நிற்க நெற்றியை நீவிவிட்டுக்கொண்டவன் “சரி நீ போ உன் வீட்டில நான் பேசிக்குறேன்” என்றான்.
“என்ன பேசப்போறீங்க” என்றாள் உடனே.
“அதை ஏன் நான் உன்கிட்ட சொல்லணும்” என்றான் அவன்.
சில நொடிகள் யோசித்தவள் “சரி பேசலாம்” என்க.
“தேவையில்லை கிளம்பு அவ்ளோ கஷ்டப்பட்டெல்லாம் பேச வேண்டாம்” என்று முறுக்கிக்கொண்டவன் ஹோட்டல் நோக்கி நடக்க அவன் பின்னேயே சென்றாள்.
மகனின் கைப்பிடித்து நிறுத்திய ராமலிங்கம் “வேலு ஏதாவது ஏடாகூடமா பேசி வெச்சுடாத கொஞ்சம் யோசி இப்போதைக்கு கல்யாணம் முடியட்டும் சித்ரா கல்யாணத்தை முடிச்சிடுலாம், கேஸ் எப்படியும் நமக்குச் சாதகமா வந்துடும் அப்போ இந்தப் பிள்ளைக்கு எல்லாத்தயும் வாங்கி குடுத்துடலாம்” என்றார்.
விழிகளை மூடித் தன்னை ஒரு நொடி சாந்த படுத்தியவன் “இதுதான்… இதுதான்ப்பா உங்க எல்லார்கிட்டயும் பிரச்சனை உங்களுக்குப் பண்டம் நகை இதுமட்டும்தான் கண்ணுக்குத் தெரியுது அந்தப் பொண்ணுக்குனு அவங்க வீட்டில ஆசை ஆசையா கொடுத்து விட்டதையெல்லாம் வந்த உடனேயே புருஷனோட தங்கச்சி போட்டுட்டு கல்யாணம் செஞ்சிட்டு போனா எப்படி இருக்கும் அப்படி என்ன மத்தவங்களை கஷ்டப்படுத்தி நாம நல்ல வாழணும்னு எண்ணம்” என்றான்.
ராமலிங்கம் ஒன்றும் பேசமுடியாமல் அமைதியாக நின்றுவிட ஹோட்டலின் வாயிலில் இவர்களையே பார்த்து ஒருவித பதட்டத்தோடு நின்ற காமாட்சியை பார்த்தவன் அவளை நோக்கி நடந்தான்.
அவன் ஒரு டேபிளில் அமர அவன் எதிரில் சென்று அமர்ந்தவள் “எனக்கு எதுவும் வேண்டாம்” என்றாள்
“என்ன சொன்னாலும் பதில் வெச்சுருக்கான்” என்று நினைத்தவள் “என் காப்பிக்கு நானே காசு குடுத்துக்குறேன்” என்க.
“அம்மா தாயே என் காப்பிக்கும் சேத்து நீயே குடு நான் ஓசில சாப்பிட்டு போறேன் போதுமா” என்றவன் வெய்ட்டரை அழைத்து “பொங்கல் வடை ஒரு செட் ரவா தோசை ஒன்னு ரெண்டு காப்பி” என்றான்.
“எனக்கு ஏதும் வேண்டாம்” என்றவளை பார்த்தவன் “உனக்குச் சொல்லல ரெண்டுமே எனக்குதான் நைட் புல்லா முழிச்சிருந்து வண்டி ஓட்டியிருக்கேன் சாப்பிட்டா தூக்கம் வரும்னு நைட் சாப்பிடல இப்போ ரொம்ப பசிக்குது” என்க அவள் அமைதியாகிவிட்டாள்.
உணவு வரும் வரைக்கும் அவன் ஒன்றும் பேசவில்லை வந்ததும் வேகமாக உண்ணத்தொடங்கினான் பொங்கலை உண்டு முடித்தவன் ரவா தோசையை மெதுவாகக் கிள்ளி வாயில் வைத்துக்கொண்டே “அப்பறம் மயில்லம்மா என்னலாம் கேட்டுச்சு உனக்கு வாழ்க்கை குடுக்க” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலை குனிந்துகொண்டாள்.
“குடுக்குற எடத்துல நானும் இல்ல வாங்குற எடத்துல நீயும் இல்ல வாழ்க்கைனா அப்படி இப்படித்தான் இருக்கும் அதைக் கொஞ்சம் காப்பாத்தி குடுங்கன்னு யார் கைலயும் தூக்கி குடுக்க கூடாது முடிஞ்சவரைக்கும் போராடனும்” என்க.
அவள் ஏதோ பேச எத்தனித்தாள் அவளைக் கை நீட்டித் தடுத்தவன் “நீ போராடலைன்னு சொல்லல உண்மையா சொல்லனும்னா முழுசா உனக்கு என்ன பிரச்சனைன்னுகூட எனக்குத் தெரியல அத்தை பையன்கூட உனக்குக் கல்யாணம் முடிவு செஞ்சிருந்தாங்க ஆனா உன் அக்காகூட கல்யாணம் முடிஞ்சிடுச்சு, இப்போ அத்தை மகன் உன்னைய கட்டிக்கணும்னு உனக்குத் தொல்லை குடுக்குறான் இதான் எனக்குத் தெரியும்”.
“உன் அத்தமவன் மேல தப்பே இல்லனாலும் அவனுக்குக் கல்யாணம் ஆயிடுச்சு இப்போ நீ அவனுக்கு வேற பொண்ணுதான் உனக்கு விருப்பம் இல்லனா உன்னைய அவன் கட்டாயப்படுத்த கூடாது இவனுக்கெல்லாம் பயந்து எங்கயாவது ஓடி ஒளியவேண்டிய அவசியம் இல்ல”.
“இன்னொருதடவ பேசிப்பாரு அப்போவும் அவன் கேக்கலைனா புடிச்சு உள்ள போடு கொஞ்ச நாள் கிடக்கட்டும், அது அத்த மகனா இருந்தா என்ன அக்கா புருஷனா இருந்தா என்ன இல்லனா சொல்லு உனக்காக அவனுக்குப் புரியமாதிரி நான் பேசுறேன்” என்றான் என்றான் சட்டையை மடித்துவிட்டுக்கொண்டு.
அவள் அவனை விழி விரித்துதான் பார்த்திருந்தாள் “இதான் சாக்குன்னு இன்னைக்கு மயில்லம்மா வந்துச்சு நாளைக்கு ஒரு குயிலம்மா வரும் இவங்களையெல்லாம் நம்பாத பணத்தை குடுங்க உங்க மகளைப் பாத்துக்குறோம்னு சொல்றவங்க எந்தளவுக்கு உன்னைக் காப்பாத்துவாங்க” என்றவன் சூடான காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மொத்தமாகப் பணத்தை டேபிளில் வைத்தான்.
“ஆமா உன் ஒசரத்துல முக்கா ஒசரத்துக்கு முடியே வெச்சுருக்கியே அதுல ஒரு முழம் பூ வெச்சா என்ன” என்று கேட்டவன் நடந்துவிட்டான் காமாட்சிதான் அப்படியே அமர்ந்திருந்தாள் என்ன சொன்னான் என்ன பேசினான் என்று சிலையாக உறைந்துவிட்டாள்.
அவளை நீங்கி நடந்தவன் “உனக்கில்லடா உனக்கில்லை நீயெல்லாம் கடைசிவரைக்கும் இப்படியே காலம் தள்ள வேண்டியதுதான் யோவ் பெரியப்பா நீ பிரச்சனை செய்யாம இருந்திருந்தா இந்நேரம் தாலிய கட்டி தங்கமா தாங்கியிருப்பேன் இப்படி கடனாளியா என்னய நிக்கவெச்சு என் வாழ்க்கையோட விளையாடிட்டியேயா” என்று புலம்பியவன்.
“டேய் அத்த மவனே இந்த மாதிரி ஒரு பொண்ணை நிச்சயம் செஞ்சிட்டு எப்படிடா இன்னொருத்தியை பாத்த என்ன ஜென்மம் டா நீயெல்லாம்” என்று மனதிற்குள் அவனைக் கழுவி ஊற்றினான்.
தன்னுடைய காருக்குச் சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன் கண்ணாடியில் பார்க்கக் காமாட்சி ஹோட்டலிலிருந்து வெளியேறி அவனின் தந்தையிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
இளம் மஞ்சள் நிறம், அவனுடைய தோள்வரை உயரம் இருந்தாள் நல்ல வட்ட முகம் அத்தனை அழகாய் இருந்தாள் பார்த்த நொடி அவனுக்கு மூச்சடைத்தது உண்மை, அவள் பின்னில் தொடையை தொட்டு நின்றது தலைமுடி ஏனோ அதை வெறுமையாகப் பார்க்கப் பிடிக்கவில்லை சொல்லிவிட்டான்.
இபோழுது தோன்றியது சொல்லியிருக்க வேண்டாம் என்று இந்தத் திருமணம் நடக்காது என்ற ரீதியில் பேசிவிட்டு என்ன உரிமையில் அவளிடம் அதைச் சொன்னேன் நான் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
தந்தை தன் வண்டியை நோக்கிக் கைக்காண்பிக்க அவள் திரும்பிப் பார்த்தாள் இதழ் கடித்து மீசையை முறுக்கிக்கொண்டவன் கண்களில் அத்தனை ரசனை, அவளிடம் பேசிமுடிக்கும் வரைக்கும் அவள் விழிகளைப் பார்ப்பதை தவிர்த்திருந்தான்.
“மயிலம்மா” என்று பல்லைக் கடித்தான் ‘இப்படிப்பட்ட பொண்ணுக்கு காசைக் கணக்கு பேசிட்டு வந்திருக்கியே இப்போ இவளை நான் கட்டிக்கிட்டா என்மேல என்ன மதிப்பிருக்கும் அவளுக்குப் பணத்துக்காக அவளைக் கல்யாணம் செய்துகொண்டதாகத்தானே நினைப்பாள் நீ எனக்கானவளாக இருந்தாள் காத்திரடி பெண்ணே உன்னை உனக்காக மட்டுமே மணந்துகொள்வேன்’ என்று மனதில் பேசிக்கொண்டான்.
அவனின் தந்தை வந்து காரில் ஏறியவர் “என்னடா சொன்ன அந்தப் பொண்ணுகிட்ட அவங்களுக்கு என்னைப் பிடிக்கல போல நீங்க வேற பொண்ணு பாருங்க நானும் இப்போ கல்யாணம் செஞ்சுக்க போறதில்லைன்னு சொல்லிட்டு போகுது” என்க மெல்ல அவன் இதழ்கள் புன்னகைத்தது, காரில் எப்.எம் ஆன் செய்தான்.
கோடை மழை கொண்டு
வரும் கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும் தாகம்
என்கிற மோகம் கோடியில
ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்
மேனி
தேர் நடந்து தெருவில்
வரும் ஊர்வலமா ஊர் உலகில்
அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு விவரம்
புரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி
வந்தது போல சுந்தர தேவி
ஜொலிப்பு
இன்னும் விரிந்த புன்னகை அவனிடம் மீசையை அழுத்தமாக நீவி முறுக்கிவிட்டவன் “ராணிதான்… காஞ்சியை ஆளும் காமாட்சி” என்று முணுமுணுத்தவன் தன் நெஞ்சில் கை வைத்து அழுத்திக்கொண்டான்.