Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️19

கால் பாதம் சூடான தோசைகல் பட்டு கொப்பளித்து நீர் கோத்து நிற்க…. வலியில் புழுவாய் துடித்தாள் பவித்ரா.

அடி கொலைகாரி இந்த புள்ளய கொன்னுட்டு தான் ஓஞ்சு உட்காருவியா… கொதித்து எழுந்து விட்டான் சங்கரன் .

ஆமா நான் கொலைகாரி தான். உங்க ஆசை மகள் செய்த காரியத்தை பாருங்க… பக்கத்தில் இருந்த நோட்டை எடுத்து விசிறி அடித்தாள் தமயந்தி.

எதையும் பார்க்க நேரமில்லாது அலறி துடித்த மகளை அள்ளி எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான் சங்கரன்.



Advertisement

என்ன ஆச்சு என்று கேட்ட மருத்துவரிடம்… அடுப்பில் இருந்த தோசைக்கல்  வழுக்கி விழுந்து விட்டதாக கூறினாள் பவித்ரா.

இவ்வளவு பெரிய தீ காயம் சீக்கிரம் ஆறாது. கேர்ஃபுல்லா இருக்கணும் என்று எச்சரித்தவர் மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து தீக்காயத்தை சுத்தம் செய்து மருந்து வைத்து அனுப்பினார்.

அழுது கொண்டே இருந்தாள் தமயந்தி. அவளுக்கு நெஞ்சுக்குள் நெருப்பு பட்ட வலி.

Advertisement

ஏய் நீ ஏன் அழுது அரட்டுற…? உன்னை கொன்னு போடணும்னு வெறியாகுது… உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா…?

Advertisement

பெத்த தாயாடி நீ…? அந்த பொண்ணை கண்டாலே உனக்கு ஏன் பிடிக்கல?  அடிக்க பாய்ந்த மகனை குறுக்கே புகுந்து தடுத்தார் சுசிலா.

அம்மா நீங்களே பாருங்க… பிள்ளை வலியால எப்படி துடிச்சா பார்த்தீங்கள்ள… என்ன கோபமா கூட இருக்கட்டும் பெத்த பிள்ளைக்கு சூடு வைக்கும் அளவுக்கா இவ மனசுக்குள்ள குரோதம் இருக்கு. இவ ராட்சஸி

இவ பெத்தவளா…? மாற்றாந்தாய் கொடுமையை விட மோசமா இருக்கும்மா இவ நடவடிக்கை. இந்த பிள்ளையை இங்கே வச்சிருந்தா இவ கொன்னுடுவா.. நான் ஹாஸ்டலில் சேர்த்து விட்டுடறேன்.

Advertisement

விட்டுடுங்க… அப்படியே எல்லாரும் எங்கேயாவது போயிடுங்க… நான் உங்களை எல்லாம் சோத்துல வஷத்தை வச்சு கொன்னுடப் போறேன்… நான் பைத்தியம் செய்தாலும் செய்வேன்… போயிடுங்க… எல்லாரும் தப்பிச்சு போயிருங்க… உரக்க குரல் எடுத்து அழுதவள் தலையில் அடித்துக் கொண்டு மடங்கி அமர்ந்தாள்.

அம்மா… காயத்ரி ஓடினாள். யுவராஜிற்கு தாயின் மீது கோபம். பவி அக்காவிற்கு இவ்வளவு பெரிய காயம் வர அம்மா தானே காரணம்.

தமயந்தி நீ நடந்துகிட்டது நியாயமா…? பிள்ளை காலை பார்த்தியா எவ்வளவு அகலத்துக்கு புண்ணாகி போயிருக்கு பார்த்தியா..,,?சுசிலா வேதனையுடன் மருமகளை பார்த்தார்.

ஆமா புண்ணாகிடுச்சு…

ஆனா அவளுக்கு வலிக்கிறதை விட எனக்கு அதிகமா வலிக்குது.

எம் பொண்ணுக்கு தப்பி தவறி கூட எந்தப் பையன் மேலயும் ஆசை வந்துடக் கூடாது.

உங்க புள்ளைய நான் ஆசைப்பட்டு கட்டிகிட்டு வந்து பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.

அவளுக்கு நாங்க நல்ல மாப்பிள்ளையா பார்த்து ஒரு இடத்துக்கு நாலு இடமா விசாரித்து கட்டி கொடுப்போம்.

சுசிலா மரமாய் சமைந்து நின்றார். ஆமா அத்தை சொல்லிக் காட்டுறேன்னு தப்பா நினைக்காதீங்க…! என்னை எவ்வளவு இளப்பமா நடத்துனீங்க?

செருப்பு தேய தேய வந்து பொண்ணு கேட்டோமானு மாமா கேட்டாரு தானே…? நாளைக்கு இவளும் ஆசைப்பட்டு ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு போயி அங்க அடிமையா வாயில்லா பூச்சியா தான் வாழணும்.

மாப்பிள்ளையை விட அவன் குடும்பமும் பின்னணியும் எனக்கு முக்கியம்…. நான் வாழ்ந்த அடிமை வாழ்க்கையை என் பொண்ணு வாழக் கூடாது…

நான் உங்க வீட்டுக்கு மருமகளா வந்து என்னைக்கு சந்தோஷமா வாழ்ந்தேன்?

எத்தனை போராட்டம் எத்தனை தவிப்பு… விட்டுக் கொடுத்து விட்டு கொடுத்து என் வாழ்க்கையே போச்சு!

நானா தேடி வந்த மருமகன்னு தானே கடைசி வரை என்னை மட்டமா நடத்துனீங்க?

உணர்ச்சி வடிந்த முகத்துடன் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் சங்கரன்.

என்னை கொலைகாரியாவே பார்க்குறீங்க. நான் ஒவ்வொரு நாளும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கிட்டு நிற்கிறேன்… அவளை ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுக்கிற வரைக்கும் என் படபடப்பு போகாது…

என் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் எனக்கு முக்கியம். போற இடத்துல என் பொண்ணுங்க கோடிஸ்வரியா வாழ வேண்டாம் கௌரவமா வாழனும்.

ஆமா…நான் கண்டிப்பான அம்மாதான். நான் நடந்துக்கிற விதம்  எனக்கு தவறா படல படல படல… முகத்தை மூடிக்கொண்டு கேவி கேவி அழுதாள் தமயந்தி.

அவளுக்குள் இத்தனை வருடமாய் இருந்த மனப்போராட்டம் அழுத்தம் அனைத்தும் வெடித்து சிதறி வெளியே வந்துவிட்டதில் அந்த இடமே நிசப்தமாக இருந்தது.

யார் தான் என்ன பேச இயலும்? பதில் கூற இயலாது தாய் முகம் பார்த்து நின்றான் சங்கரன். மகனை குற்ற உணர்வுடன் பார்த்து நின்றார் சுசிலா.

தமயந்தி பேசியதில் ஒரு வாரத்தையும் தவறில்லையே.

“—————“

தமயந்தி விசிறி அடித்த நோட்டு கேட்பாரற்று கதவுக்கு பின்னே கிடந்தது.

மெல்ல அந்த நோட்டை பிரித்த சங்கரன் மகளை கண்டனமாய் பார்த்தான்.

அப்பா சாரிப்பா சாரி நான் விளையாட்டுக்கு தான் எழுதினேன்.

ஏன்டா என்பது போல மகளை வேதனையுடன் பார்த்தான் சங்கரன்.

அப்பா எங்க காலேஜில் எல்லா கேள்சுக்கும் அரவிந்த்தை பிடிக்கும். அவன் சூப்பரா வாலிபால் விளையாடுவான். பார்க்க அழகா இருப்பான். கீ போர்டு நல்லா பிளே பண்ணுவான்.

சங்கரனுக்கு புரிந்தது. வாலிப வயதில் எதிர்பால் இனத்தவர் மீது வரும் ஈர்ப்பு என்று.

மகளின் தலையை வாஞ்சையுடன் வருட…

தந்தை தன்னை நம்பவில்லையோ என்று மனம் வருந்தியவள். அப்பா அவன்கிட்ட நான் பேசினது கூட இல்லப்பா…பிராமிஸ் என்னை நம்புங்க! கண்ணீருடன் தோளில் சாய்ந்தாள்.

அப்பாக்கு தெரியும் என் செல்ல பொண்ணு ஒரு நாளும் தவறான செயல்களை செய்ய மாட்டா… அவன் கண்ணீர் துடைத்து முத்தமிட்டான்.

சாரிப்பா இனிமே கவனமா இருப்பேன் அம்மாவை சங்கடப்பட வைக்க மாட்டேன்… காட் பிராமிஸ். அப்பாவின் கரத்தை பற்றி தன் கரத்துக்குள் பொதித்துக் கொண்டாள் பவித்ரா.

“——————-“

இதோ பாரு தமயந்தி ஒரு தாயா உன்னோட தவிப்பு எனக்கு புரியுது… நான் அதை குறை சொல்ல முடியாது. அதேசமயம் என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு விசாரிக்காம பிள்ளைகளிடம் கை நீட்டும் பழக்கத்தை நிறுத்து…

வெறும் கண்டிப்பு மட்டும் போதாது கனிவோடும் இருக்கணும் இல்லைனா பிள்ளைங்க நம்மை விட்டு விலகிப் போயிடுவாங்க.

என் பொண்ணு கல்யாணத்தைப் பற்றி எனக்கும் கனவு இருக்கு. பெத்தவளா உன் விருப்பம் கேட்டு உனக்கு பிடிச்சா தான் என் பொண்ணுக்கு வரன் பேசி முடிப்பேன். மனைவிக்கு ஆறுதலையும் வாக்குறுதியையும் கொடுத்தான் சங்கரன்.

மகளைப் பார்க்கும் போதெல்லாம் அவள் காலில் தழும்பை பார்க்கும் போதெல்லாம் கண்ணில் தண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது தமயந்திக்கு.

தாயை திரும்பிக் கூட பார்ப்பதில்லை பவித்ரா. எந்த பேச்சாக இருந்தாலும் தந்தையோடு சரி.

நான் என்ன தவறு செய்து விட்டேன் தாய் ஏன் தன்னிடம் இவ்வளவு கடுமை காட்ட வேண்டும் என்ற வேதனை அவளுக்கு.

“————–“

நாட்கள் நல்ல விதமாகவே சென்று கொண்டிருந்தது. பவித்ரா இரண்டாம் ஆண்டு படிப்பு முடிந்து மூன்றாம் ஆண்டில் காலடி வைத்திருந்தாள். அனைத்து செமஸ்டரிலும் நல்ல மதிப்பெண் பெற்று டிஸ்டிங்க்ஷனில் இருந்தாள்.

இப்போதும் தாயிடம் நேரடியாக பேசுவதில்லை ஜாடை மாடையாக ஏதாவது கேட்டால் தங்கை,தம்பி மூலமாக பதில் கொடுப்பாள்.

தன் மகளுக்கு தன்னை ஒரு நாள் புரியவரும் என்ற நம்பிக்கை தமயந்திக்கு.

எம்.ஏ படித்துக் கொண்டிருந்த சபிதா தோழியின் அண்ணனுடன் ஓடிப் போய்விட்டாள் என்ற செய்தி அதிர்ச்சி அடைய வைத்தது.

ஜெயலட்சுமி அவமானத்தில் குன்றிபோய் அமர்ந்திருந்தாள். பரமசிவம் மௌனமாய் ஈசிசேரில் சாய்ந்து கண்மூடி இருந்தான்.

அண்ணே இப்போ என்ன பண்றது? வருத்தமுடன் கேட்டான் சங்கரன்.

போலீசில் கேஸ் கொடுப்போமா என்றாள் கலாவதி.

வேண்டாம் கலா இது நம்ம குடும்ப விஷயம் போலீஸ் கேஸ்னு போனா நியூஸ் பேப்பரில் எல்லாம் விஷயம் வரும் அவள் கணவன் மறுத்து விட்டார்.

நம்ம ஆளுங்களை வச்சு தேட சொல்வோமா? சங்கடமாய் கேட்டார்.

வேண்டாம்… ஓடிப்போனவ ஓடிப்போனதாவே இருக்கட்டும். ரெண்டு நாளா ஊரே சிரிக்குது. இன்னும் அசிங்கப்பட என்ன இருக்கு…? சிடு சிடுத்தாள் ஜெயலட்சுமி.

மகளின் காதல் விவகாரம் ஏற்கனவே ஜெயலட்சுமிக்கு தெரிந்து தான் இருந்தது. வேறு ஜாதி பையன் என்பதால் ஜெயலட்சுமி கடுமையாக கண்டிக்க  வேறு வழியின்றி  ஓடிப்போனாள் சபிதா.

வேற என்ன பண்ணலாம்…? துவண்டு கிடக்கும் அண்ணனின் தோள் மீது கை வைத்து பறிவுடன் கேட்டான் சங்கரன்.

யாரும் ஒன்னும் செய்ய வேண்டாம் அவங்க அவங்க வீட்டுக்கு போய் சந்தோசமா உங்க பொழப்பை பாருங்க. இப்போ உங்களுக்கெல்லாம் குளு குளுன்னு இருக்குமே…. எங்கெங்கோ காட்ட வேண்டிய கோபத்தை வீட்டு மனிதர்களிடம் காட்டிக் கொண்டிருந்தாள் ஜெயலட்சுமி.

அவள் பார்வை,முறைப்பு எல்லாம் தமயந்தி மீதுதான்.

அவள் மகள் தன்னிச்சையாய் தன் வாழ்க்கையை முடிவு செய்து கொண்டதற்கு யார் பொறுப்பேற்க முடியும்?

சபிதா தன் இஷ்டத்திற்கு ஓடிப்போன பிறகு தமயந்தியின் பார்வை இன்னும் கண் கொத்தி பாம்பாய் தன்மகள் மீது பதிந்தது.

“—————–“

என்ன காயு எங்க உங்க அக்காவை காணோம்? காம்பவுண்டுக்கு அந்தபுரம் நின்று ஆர்வமாய் கேட்டான் ராஜேஷ்.

பாட்டி வீட்டுக்கு வந்திருக்கிறான் செமஸ்டர் லீவுக்கு. எஞ்சினியரிங் இறுதி ஆண்டு படிக்கிறான்.

செந்தாமரை மகனோ கலாவதி மகனோ தன் வீட்டிற்கு வருவதை தமயந்தி விரும்புவதே இல்லை.

வந்தாலும் கூடத்தோடு உட்கார வைத்து காபி கொடுத்து அனுப்பி விடுவாள்.

அத்தை உங்க பேரனுங்க வந்து இருக்காங்க நீங்க பெரியவங்க வீட்டிலே நாலு நாள் இருந்து விருந்து செஞ்சு போடுங்க என்று மாமியாரை அனுப்பி வைத்து விடுவாள். கறியோ மீனோ கணவனை வாங்கிக் கொண்டு போய் கொடுக்க சொல்லி விடுவாள்.

19 வயதில் பேரழகியாக இருக்கும் மாமன் மகளைக் காண தெவிட்டவில்லை ராஜேஷுக்கு. பெரிய மாமன் வீட்டில் நின்று ஜாடை மாடையாக பார்த்துக் கொண்டிருப்பான்.

டேய் அவ என்னடா உலகத்துல இல்லாத பேரழகி… அவ ஆத்தா அதிசயமா பொத்தி பொத்தி வளர்க்கிறா… நம்ம தகுதி என்ன அந்தஸ்து என்ன? நீ RI யோட மகன். நீ படிக்கிற படிப்புக்கு நம்ம வசதிக்கு எப்படியாபட்ட இடத்தில் பொண்ணு கொண்டு வந்து நிறுத்துவேன்.

சீச்சீ இந்த குடும்பத்தில் பொண்ணு கட்டுறதா? முகத்தை சுழித்தாள் கலாவதி.

கலா வார்த்தையை பார்த்து பேசு.காசு பணம் வந்து கண்ணை மறைக்குதோ… நீ மட்டமா பேசுறது உன் கூட பொறந்த அண்ணன் குடும்பத்தை…

சுருக்கென்று கோபத்தில் மகளை கடிந்து கொண்டார் சுசிலா .

அம்மா உன் புள்ள குடும்பத்தை பேசினதும் உனக்கு பொத்துக்கிட்டு வருதோ… உன் மருமக என்ன என் பிள்ளையை வேண்டாம்கிறது நான் உன் பேத்தியை கனவில் கூட மருமகளா எடுக்க நினைச்சது இல்லை.

கையில் டசன் தங்க வளையலும் கழுத்தில் நான்கு சங்கிலியும் தொங்க…. மூச்சு வாங்க வாங்க சிடுசிடுத்தாள் கலாவதி. VAO வாக இருந்த அவள் கணவன் இப்போது RI. பணத்திற்கு என்ன பஞ்சம்?

கல்லூரிக்கு வரும் வழியில் போகும் வழியில் பவித்ராவுடன் பேச முனைவான் ராஜேஷ்.

அவளும் மரியாதை நிமித்தம் இரண்டு வார்த்தை பேசி விட்டு போய்விடுவாள்.

கலாவதிக்கு தமயந்தியை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது என்பது ராஜேஷுக்கு தெரியும்.

கலாவதி என்றுமே அண்ணன் வீட்டில் பெண் கட்ட சம்மதிக்க மாட்டார் என்றும் தெரியும்.

என்னதான் இரு தரப்பிலும் சம்மதம் இல்லை என்றாலும் ராஜேஷுக்கு பவித்ராவை நிரம்ப பிடித்து இருந்தது. அவன் மனதை அவனால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அவளை மணக்க உறவும் உரிமையும் இருப்பதாக திடமாகவே நம்பினான்.

ஆரம்பத்தில் எதிர்த்தாலும் மறுத்தாலும் நிச்சயம் தன் ஆசைக்கு உடன்படுவார்கள் என்று நம்பினான்.

“—————–“

நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது.

படிப்பு முடிந்தவுடன் தமயந்திக்கு வரன் பார்த்து திருமணம் முடித்து விட வேண்டும் என்று நச்சரிக்க தொடங்கினாள் தமயந்தி.

தாய் தந்தை விருப்பம் அதுதான் எனில் அதை மறுக்க பவித்ராவும் தயாராக இல்லை.

செந்தாமரைக்கு தன் மகன் விக்ரமிற்கு பவித்ராவை கேட்கலாம் என்ற ஆசை.

சொந்தத்தில் கொடுக்கும் யோசனை இல்லை என்று கராறாக கூறிவிட்டாள் தமயந்தி.

அன்று ஞாயிற்றுக் கிழமை மதியம் … ஆட்டுக்கறி குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. முட்டை பொரியலும் ரசமும் வைத்து சமையலை முடித்திருந்தாள் தமயந்தி.

சாப்பிட வாங்க… கணவனை அழைத்தாள்.

போய் பிள்ளைகளுக்கு சாப்பாடு போடு நீயும் சாப்பிடு! கொஞ்ச நேரம் பொறுத்து வரேன் காலையில் சாப்பிட்டதே நெஞ்சுக்குள்ள நிற்குது.சற்று நேரம் ஓய்வில் படுத்திருந்தான் சங்கரன்.

அண்ணே சங்கர் அண்ணே… சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் அகரக்கீரன்குடி மாயவேல்.

வா மாயா… உள்ளே அழைத்து மனைவியை தண்ணீர் கொடுக்க சொன்னான் சங்கரன்.

அண்ணே மோட்டார் என்னமோ ரிப்பேர் ஆகிபோச்சுன்னே… நாலு நாளா தண்ணி இரைக்காம கரும்பெல்லாம் காஞ்சு கிடக்கு…

காயில் போயிடுச்சோ…? கேள்வியுடன் பார்த்தான் சங்கரன்.

காயில் போன மாதிரி தெரியலண்ணே… நீ வந்து என்ன ஏதுன்னு பாரு…! சுளுவா முடியிற வேலையா இருந்தா பார்க்கலாம் இல்லன்னா கழட்டி எடுத்துட்டு மாயவரம் பழனிசாமி கடைக்கு தான் போகணும்.

சரி வா போகலாம்… ஸ்பானர்கள்  அடங்கிய பையை எடுத்துக் கொண்டு சங்கரன் எழுந்து செல்ல.

ஏங்க சாப்பிடாம கூட கிளம்புறீங்க … பின்னால் வந்து நின்றாள் தமயந்தி.

எனக்கு கொஞ்சம் மோர் மட்டும் பெருங்காயத்தூள் போட்டு கொடு வயிறு ஒரு மாதிரி இருக்கு. நான் சாயந்திரம் வந்து சாப்பிட்டுக்கிறேன்.

மோர் வாங்கி குடித்துவிட்டு மாயவேலுடன் கிளம்பி சென்றான் சங்கரன்.

சற்று நேரத்திற்கெல்லாம் செய்தி வந்து சேர்ந்தது. மோட்டார் பழுது பார்க்கும் போது ஹெவி ஷாக்காகி  சங்கரன் அந்த இடத்திலேயே இறந்து விட்டான் என்று.

குடும்பமே அலறி துடித்தது. சற்று நேரத்திற்கு முன் சிரித்த முகமாய் மோர் வாங்கி குடித்துவிட்டு சென்ற கணவன் உயிர் நீத்து கரிக்கட்டையாய் வந்து சேர்ந்தது கண்டு பிரம்மை பிடித்து மயங்கி சரிந்தாள் தமயந்தி.

மூன்று குழந்தைகள் பெற்று ஒரு பிள்ளையையும் இன்னும் கரை சேர்க்கவில்லை.

இளங்களை இறுதியாண்டில் பவித்ரா, பதினொன்றாம் வகுப்பில் காயத்ரி, ஒன்பதாம் வகுப்பில் யுவராஜ்.

யார் யாருக்கு ஆறுதல் சொல்ல…. அனைவரையும் கட்டி காபந்து செய்த ஆலமரம் இன்று வேரோடு சாய்ந்து விட்டதே…

தமயந்திக்கு இணையாக அழுது கரைந்தது சுசிலா தான்.

எந்த தாய் தன் கண்முன்னே தான் பெற்ற பிள்ளை இறந்து சவமாக கிடப்பதை கண்டு திடமாக நிற்க முடியும்?

ஏன் சாமி நீ எனக்கு கொள்ளி போட்டு காரியம் செய்வேன்னு நினைத்தேன். உன் புள்ளைக் கொள்ளி போடறதை நான் கண்ணால பார்க்கணுமா? வயதான பெண்மணி கதறி அழ சுற்றமும் நட்பும் கலங்கி தவித்தது.

உடன் பிறந்த அண்ணன் இரு தங்கைகள் என அனைவருமே உள்ளார்ந்து அழுது கரைந்தனர். எல்லோருக்கும் எப்போதும் நல்லதே செய்தவன் சங்கரன். அதற்காக எமன் விட்டு விடுவானா என்ன?

ஒற்றை ஆண் மகனாய் ஒரு குடும்பத்தையே தாங்கி நின்றவன்.

48 வயது சாகும் வயதா….? உடன் பிறந்தவர்களுக்கு எல்லாம் நல்லது கெட்டதுக்கு செய்து அழகு பார்த்தவன் தான் பெற்ற பிள்ளைகளுக்கு எதுவும் செய்யவில்லையே…

பவித்ராவால்தான் நடந்த எதையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் உலகமே அவள் தந்தை தான்.

சங்கரநாராயணனை பொறுத்தவரை அவன் செல்ல இளவரசி பவித்ரா. தாயோடு அவள் கொஞ்ச நாட்களாகவே பிணைப்புடன் இல்லை. அதனாலேயே சங்கரன் கூடுதலாய் அக்கறை செலுத்துவான் மூத்த மகள் மீது.

அப்பா அப்பா என்று மூச்சுக்கு 300 முறை அப்பாவை அழைக்கும் செல்ல மகளாயிற்றே எப்படி அவள் தாங்குவாள்?

தந்தையின் இழப்பை அவள் மூளை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகள் கூடி நின்ற சொந்தம் எல்லாம் கத்தி கதற… சங்கரனின் இறுதி சடங்கு நடந்து முடிந்தது.

யாரும் எதிர்பாராத மிகப்பெரிய இழப்பு…

சங்கரன் வாழ்க்கையில் எந்த நேரமும் எதுவும் நடக்கும் என்ற தெளிந்த சிந்தனை கொண்டவன்.

மாயவரத்தில் ஆறு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருப்பதும் எல்ஐசி  பாலிசி எடுத்திருப்பதும். இரண்டு இடத்தில் மனைகள் வாங்கி போட்டிருப்பதும்,மகள்கள் பெயரில் வங்கியில் பணம் சேமித்து வைத்திருப்பதும் மணவாளன் மூலம் தமயந்திக்கு தெரிய வந்தது.

குடும்பமே நிலை குலைந்து போய் இருந்தது.

இதில் ஆறுதலான விஷயம் சங்கரன் தனக்குப் பிறகும் தன் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்திருந்தது தான்.

உங்க தம்பி விபரம் தான்…. எல்லா வழிமுறையும் பொண்டாட்டி பிள்ளைக்கு செய்துட்டு தான் போயிருக்கார்… ஏக்க மூச்சை வெளிப்படுத்தினாள் ஜெயலட்சுமி.

அவன் அல்ப ஆயுசுல போனது உனக்கு வருத்தமா இல்லை… அந்தப் பிள்ளைங்க மூனும் அப்பா அப்பான்னு ஏங்கி தவிக்கிறது கண்டு உன் மனம் இறங்கல… அவன் சேர்த்து வச்சிட்டு போன சொத்தும் பணமும் தான் உன் கண்ணை உறுத்துதா…? கொதித்தெழுந்து விட்டான் பரமசிவம்.

அதுக்கு இல்ல மாயவரத்தில் இடம் வாங்கி கடை கட்டி விட்டிருக்குறாரு இது நாள் வரைக்கும் நம்ம ஒருத்தருக்கும் தெரியலையே….

அவன் பொண்டாட்டிக்கே தெரியலை… நமக்கு தெரியலைங்கிறது தான் முக்கியமா…?

இது நம்புற மாதிரியா இருக்கு?அது எப்படி கட்டின பொண்டாட்டிக்கு தெரியாம இருக்குமாம்….

இதான் இதேதான் வீட்டுல உள்ளவங்களுக்கு தெரிந்தால் இப்படி கண்டதும் பொறாமை கொண்டு அலையும்னு சொல்லாம விட்டிருப்பான்… செருப்பால் அடித்தது போல் பரமசிவன் பேசி வைக்க வாயை மூடிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள் ஜெயலட்சுமி.

“—————–“

அண்ணே பவித்ராக்கு படிப்பு முடிய இன்னும் இரண்டு மாசம் தான் இருக்கு… நம்ம பக்கத்திலே நல்ல மாப்பிள்ளை இருந்தா சொல்லு… தன் அண்ணன் மணவாளனிடம் வேண்டுகோள் வைத்தாள் தமயந்தி.

குடும்பத் தலைவனை இழந்த குடும்பம் மெல்ல மெல்ல அதில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தது.

தந்தையற்ற குடும்பம் என்பதால் பிள்ளைகள் மூவரும் பொறுப்புடன் இருந்தனர்.

தனக்கு கீழ் இருக்கும் தம்பி தங்கைகளை அரவணைத்து கவனித்துக் கொண்டாள் பவித்ரா.

யுவராஜ் மீது ஒரு தனி பிரியம் அவளுக்கு. எப்போதுமே அக்கா அக்கா என்று அவள் காலை கட்டி கொள்ளும் சிறு பிள்ளை அவன்.

பவித்ரா இறுதி செமஸ்டர் எழுதி முடித்திருக்க…. அவள் தாய் மாமன் மணவாளன் சீர்காழியிலிருந்து ஒரு நல்ல மாப்பிள்ளையை அழைத்து வந்திருந்தான்.

மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் பவித்ராவை ரொம்பவே பிடித்து விட்டது.

அம்மாக்கும் உங்களுக்கும் சம்மதம் என்றால் எனக்கு பிரச்சனை இல்லை மாமா என்று கூறிவிட்டாள் பவித்ரா.

ஜாதகம் சரி வந்தால் மற்றதை பேசிக்கொள்ளலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் சென்றிருந்தனர்.

விஷயம் கேள்விப்பட்டதும் அடித்து பிடித்து ஓடி வந்தான் ராஜேஷ்.

அண்ணன் தான் இல்லை அண்ணன் மகளையாவது தன் மகனுக்கு பெண் எடுக்கலாம் என்று ஒருபோதும் கலாவதி நினைக்கவில்லை.

சாவு,காரியம் என்று துக்கத்தில் கலந்து கொண்டு சென்றதோடு சரி.

கணவனை இழந்து நின்ற தமயந்தியிடம் ஒரு பேச்சுக்கு கூட நாங்கள் இருக்கிறோம் உங்களை பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல மனம் வரவில்லை கலாவதிக்கு.

பவித்ராவை சந்திக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டான் ராஜேஷ்.

அவளை மொபைலில் அழைக்கவும் அவனால் முடியவில்லை. அவள் மொபைல் பயன்படுத்துவதே இல்லை.

தன் ஆசையை பாட்டியிடம் ஜாடை மாடையாக கூறினான்.

உன் அம்மாட்ட இருந்து அந்த பொண்ணால வாழ முடியாது வேணாம் சாமி என்று கையெடுத்து கும்பிட்டு விட்டார் சுசிலா.

இது சரிவராது என்று மூத்த மாமன் பரமசிவனும் ஆரம்பத்திலேயே தட்டி கழித்து விட்டான்.

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஆபத்து… விரைவில் பவித்ராவிற்கு வரன் பேசி முடித்து விடுவார்கள் என்ற அச்சம் ராஜேஷுக்கு.

பவித்ராவை மணந்து கொள்ள போகிறேன் என்று வீட்டில் அவனால் பேசவும் முடியாது இப்போது தான் படிப்பை முடித்திருக்கிறான் இன்னும் அவனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.

பவித்ராவை எனக்கு கொடுங்கள் என்று தமயந்தியிடம் போய் கேட்கும் தைரியமும் அவனுக்கு இல்லை.

“—————–“

அக்கா அக்கா… ராஜேஷ் மாமா இதை உன்கிட்ட கொடுக்க சொன்னாரு விரல் சப்பிக் கொண்டே பக்கத்து வீட்டு சிறுமி ஒரு காகித மடிப்பை கொடுத்து விட்டு சென்றாள்.

இவன் வேற…கட்டிலில் உட்கார்ந்து சலிப்புடன் கடிதத்தை பிரித்தாள்.

பவித்ரா உன்னுடன் பேச வேண்டும். பேசியே ஆக வேண்டும்.உன்னுடன் பேச மூன்று நாளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் முடியவில்லை.

எனக்குத் தெரியும் நீ கண்டிப்பாக வர மாட்டாய். நீ வரவேண்டும் வந்தாக வேண்டும். உன்னை நேரில் பார்த்து நாலு வார்த்தை பேசிவிடுகிறேன்.

இப்போது என் கல்யாணத்தை பற்றி வீட்டில் பேச முடியாது அந்த வயதும் வரவில்லை. நான் அமைதியாக இருந்தால் உன் வீட்டில் வேறு இடத்தில் வரன் பார்த்து திருமணமே முடித்து விடுவார்கள்.

நான் வேலை தேடி வரும்வரை எனக்காக காத்திரு!

இன்னும் ஒரு வருடத்திற்குள் நல்ல வேலை தேடிக் கொள்வேன்.

உன் மீதான என் பிரியம் இன்று நேற்று அல்ல… சிறுவயதிலிருந்தே உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்….!

நீ இல்லா ஒரு வாழ்வை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. உன் முகம் பார்த்து நாலு வார்த்தை பேசணும் ப்ளீஸ் பவி.

இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகைக்கு வா. நீ வரவில்லை என்றால் என் கையில் தயாராய் இருக்கும் விஷத்தை குடித்து விடுவேன்.

படித்து முடித்த அவளின் இதயம் தாளம் தப்பி துடித்தது. சுவாச மூச்சு இலகுவாக இல்லாமல் நெஞ்சை அடைத்தது.

இந்த ராஜேஷ் ஏன் இப்படி பைத்தியமாக உளறுகிறான்?

நம் குடும்பம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இவன் பிரச்சனை வேறா கடவுளே எப்படி சமாளிப்பேன் ?

அம்மாவுக்கு தெரிந்தால் அவள் மனம் மிகவும் வேதனைப்படும்.

இந்த ராஜேஷ் எதையும் யோசிக்கவே மாட்டானா…? கண்ணீர் முட்ட தவித்துக் கொண்டிருந்தாள்.

பவி பவி… காயத்ரி இரவுணவு சாப்பிட அழைக்க… கையில் இருந்த கடிதத்தை கசக்கி எறிந்து விட்டு உள்ளே ஓடினாள்.

“——————-“

என்ன செய்வது என்ற பயத்திலும் குழப்பத்திலும் அவளுக்கு உணவு உள்ளே இறங்கவில்லை…

கிறுக்குத்தனமாக ராஜேஷ் ஏதாவது செய்து கொண்டால்…. அந்தப் பழியும் பாவமும் நமக்கு என்…?

இறுதியாக ராஜேஷை நேரில் சந்தித்து குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி புரிய வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.

பத்து மணிக்கு தாய் உறங்கிவிட்டதை உறுதி செய்து கொண்ட பவித்ரா. கால் கொலுசை கழட்டி கட்டிலின் மீது வைத்து விட்டு மெல்ல மெல்ல கால் பெருவிரலை ஊன்றி பெரியப்பா வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடையிலான மாட்டுக் கொட்டகையை நோக்கி சென்றாள்.

எப்படியும் பவித்ரா வருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தான் ராஜேஷ்.

தாவணி உருவம் தன்னை நெருங்க நெருங்க அகமகிழ்ந்து போனான்.

ராஜேஷ் நீ பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.

சரி தப்பெல்லாம் காதலில் கிடையாது பவி… அவள் கரம் பற்றி கெஞ்சினான்.

இதோ பாரு ராஜேஷ் உங்க அம்மாவுக்கு எங்க குடும்பத்தை கண்டாலே ஆகாது.. இதெல்லாம் சரியா வருமா?

நான் வீட்டுக்கு மூத்த பொண்ணு. என் குடும்பத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு…

பவி ஒரு நாள் கூடவா என்னோட ஆசையும் காதலும் என் கண்ணில் உனக்கு தெரியலை… கண்ணீர் சொரிந்தது அவனுக்கு.

சொன்னா புரிஞ்சுக்கோ ராஜேஷ் நீ சின்ன பிள்ளை இல்லை….!

திடீரென மாட்டு கொட்டகையில் இருந்த டியூப் லைட் எரிய தூக்கிவாரி போட்டது பவித்ராவிற்கு.

பயத்தில் அவள் கரங்கள் நடுங்க இறுக்கமாய் பிடித்துக் கொண்டான் ராஜேஷ்.

அடியே என்னடி காரியம் பண்ணிட்டு இருக்க… கொழுப்பெடுத்த கழுதை என் பிள்ளையை வளைத்து போட பாக்குறியா…? உச்ச குரலில் பத்திரகாளியாக கத்தினாள் கலாவதி.

அத்த… இல்லை.. நான் இல்லை… விபரீதம் புரிந்து அவள் தளிர் மேனி தடதடவென நடுங்கியது.

ஊரில் இருந்து அம்மா எப்போது வந்தாள் என்று விழி பிதுங்கி நின்றான் ராஜேஷ்.

இரவு ஒன்பது மணி பஸ்சுக்கு கலா வந்தது ராஜேஷிற்கு தெரியவில்லை.

கலா ஒரு வாரமாகவே மகனை வேவு பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு தான் புரியவில்லை.

அத்த தயவு செய்து சத்தம் போடாதீங்க…கை கூப்பினாள் பவித்ரா.

உனக்கு வெக்கமா இல்லை? என்னடி பொண்ணு நீ… உங்க ஆத்தா உன்னை பொத்தி பொத்தி வளர்த்தாளே… இப்படி அறுத்துகிட்டு ஓடி வந்து நிற்குற…

கலாவதியின் அமில வார்த்தைகளில் ராஜேஷ் மருண்டு விட்டான்.

கலாவதியின் காட்டுக்கத்தலில் அக்கம் பக்கம் எல்லாம் கதவை திறந்து வெளியில் வந்தது.

வெளியில் இரைச்சல் கேட்டு கதவை திறந்து தெரு வாசல் லைட்டை போட்டு வெளியில்  வந்தாள் தமயந்தி.

கலா சொன்னா கேளு  தயவு செய்து சத்தம் போடாதே! பரமசிவன் தங்கையை அடக்க முயன்றான்.

ஏன் தம்பி மகள் மானம் போயிடுமுன்னு  அடக்க பாக்கறியா…? இன்னும் எகிறினாள்.

அத்தை சொன்னா கேளுங்க நானா வரல… கரம் பற்றி கெஞ்சினாள் பவித்ரா.

அடி செருப்பால… என் புள்ள மேல பழியை தூக்கி போடறியா…? அவனா உன் வீட்டுக்குள்ள செவுறேறி குதிச்சு வந்தான்… பொட்ட கழுதை நீயா தான் அவனை தேடி வந்திருக்க….! பவித்ராவின் கூந்தலை இறுக்கி வளைத்து பிடித்தாள் கலாவதி.

இதயத்தின் படபடப்பு அதிகமாகி கொண்டே செல்ல….. தயங்கி தள்ளாடி நெருங்கி வந்தாள் தமயந்தி.

மகளோடு ராஜேஷ் ராத்திரியில் தனியே நிற்க வேண்டிய அவசியம் என்ன? மகளை கையும் களவுமாய் பிடித்தது போல் அவள் கூந்தலை பற்றி ஆவேசமாய்  கலா பேசுவதன் அர்த்தம் என்ன?

ஏற்கனவே கணவனை இழந்து பாதி உயிராய் நடமாடிக் கொண்டிருந்த தமயந்தி முற்று முழுதாய் நொறுங்கிப் போனாள்.

என்னவெல்லாம் இந்த மனிதர்கள் பேசுவார்கள் என்று தெரிந்துதான் மகளை பொத்தி பொத்தி வளர்த்து வந்தாள்.

வாங்கம்மா மகாராணி… உன் பொண்ணு செய்த காரியத்தை பார்த்தியா?

நல்ல சொத்து சுகம் உள்ளவனா பார்த்து வளைத்து பிடிக்க ஐடியா கொடுத்து வளர்த்திருக்க போல இருக்கு…?

எங்க சங்காத்தமே வேணாமுன்னு வளர்த்தது நடிப்பு போல இருக்கே…? வெளியில எங்க உறவு வேணாம்னு சொல்லிகிட்டே உள்ளுக்குள்ளே உன் பொண்ணை திட்டம் போட்டு என் மகன் கூட கோர்த்து விட்டுருக்க… த்தூ….. காரி உமிழ்ந்தாள் கலா.

ஏற்கனவே தமயந்தியை கண்டால் ஆகாது. தமயந்தியை அவமானப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் போது அதை விட்டுவிடுவாளா கலா.

தமயந்தியை பழி தீர்க்கும் வாய்ப்பு என்று நினைத்தாளே தவிர தான் அவமானப்படுத்திக் கொண்டிருப்பது தன் அண்ணன் மகளை என்று ராட்சசி உணரவே இல்லை.

உயிர் பிரியும் வலியுடன் மகளை நிமிர்ந்து பார்த்தாள் தமயந்தி.

அம்மா… சத்தியமா நான் இல்ல…ராஜேஷ் தான் பேச வர சொன்னார். தாயின் காலைப் பற்றி கொண்டு கதறி அழுதாள் பவித்ரா.

அடி ஈன சிறுக்கி என் புள்ள வர சொன்னான்னு பழியை திருப்பி விடுற…!

ஆம்பள அவன் கூப்பிட்டதா இருந்தாலும் கூட நீ பல்லை இளிச்சுகிட்டு வந்துடுவியா… இதெல்லாம் ஒரு பொழப்பா?பைசா செலவில்லாம ஒரு மாப்பிள்ளையை ரெடி பண்ண ஆத்தாவும் மகளும் திட்டம் போட்டீங்களா?

கலாவின் பேச்சு துண்டு துண்டாய் தன் உடலை கூறு போட்டு வெட்டுவது போல் துடித்து நின்றாள் தமயந்தி.

தாயின் அவதாரம் கண்டு திருதிருத்து நின்ற ராஜேஷ் ஒரு வார்த்தை தாயை எதிர்த்து மறுத்து பேசவில்லை. அவனுக்கு அவ்வளவு துணிவில்லை.

நான் தான் அவளை வர சொன்னேன் என்று ஒரு வார்த்தை அவன் கூறியிருந்தால் அத்தனை பிரச்சனையும் அத்தோடு முடிந்திருக்கும்.

திக் திக் என்று துடித்த இதயத்தை நீவிக்கொண்டு யாரையும் ஏறெடுத்து பார்க்கும் திராணி இன்றி தலை குனிந்து நின்றான்.

அக்கம் பக்கத்து மனிதர்கள் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

இப்போ என்ன தவறா நடந்துச்சு…. உன் மகன் கட்டிக்கிற முறை பொண்ணை தானே ஆசைப்பட்டு பார்த்து பேசி இருக்கான்… உறவுக்கார பெரியப்பா முன்வந்து பேசினார்.

எது கட்டிக்கிற முறையா? என் கூட பிறந்தவனே போயிட்டான் அவன் குடும்பத்து உறவு எனக்கு எதுக்கு?

சொந்தத்துல நீயே பெண் எடுக்கலைனா எப்படிம்மா கலா ?

சொந்த பந்தத்தை எல்லாம் சோத்துப் பானைக்குள்ள வச்சு மூடியாச்சு… எவ்வளவு பெரிய இடத்தில் என் பையனுக்கு பேசி முடிப்பேன் தெரியுமா?

இவளுங்க எல்லாம் ஒரு ஆளு… இவளை நான் மருமகளா ஏத்துக்கிறேன்னு  நின்னேனா?

கட்டிக் கொடுக்க வழியில்லைன்னு என் காலில் விழுந்தா ஏதோ அஞ்சோ பத்தோ கொடுத்திருக்க போறேன் அதுக்காக என் புள்ளையை மயக்க சொல்லி அனுப்பி இருக்காளே இவ அம்மாவா… இல்ல வேற…?

கலா பேசி முடிப்பதற்குள் பளார் என்று அறைந்து இருந்தார் சுசீலா.

இந்தா என் மேல கை வைக்கிற வேலை வச்சுக்காத…. கொழுப்பு எடுத்து அலையறாளே உன் பேத்தி அவளை அடித்து உதைச்சு அடக்கி வை…! இல்லன்னா உன் பெரிய பேத்தி போன மாதிரி இவளும் எங்கேயாவது மாப்பிள பார்த்து பத்திகிட்டு போயிருவா…

இதயமே வெடித்து விடும் போல் மூச்சு முட்டிய தமயந்தி மாட்டு கொட்டகையின் ஓரத்தில் சாணம் பெருக்கி அள்ள வைத்திருந்த துடைப்பக்கட்டையை எடுத்து மகளை வெளு வெளு என்று வெளுத்து விட்டாள்.

நான் கையால் ஆகாதவன்னு  முடிவே பண்ணிட்டியா? இந்த மானங்கெட்ட பெயரை எடுத்ததற்கு நீ செத்துப் தொலை என் முகத்திலே முழிக்காதே…

அம்மா சத்தியமா நான் எந்த தப்பும் செய்யலம்மா நான் பேச வரலைன்னா ராஜேஷ் செத்துடுவேன்னு சொன்னான். குடும்பத்துக்குள் பிரச்னை வேண்டாம்னு அவனுக்கு சொல்லி புரிய வைக்கதான் வந்தேன். அப்பா மேல சத்தியமா நான் தப்பு பண்ணலம்மா கதறினாள் அழுது புரண்டாள்.

ஒற்றை பனைமரம் போல் ஒதுங்கி நின்ற ராஜேஷ் ஒரு வார்த்தை உண்மையை கூறியிருக்கலாம்.அந்தக் கல்நெஞ்சக்காரன் தாய்க்கு பயந்து அசங்காது நின்றான்.

என்னங்கடி கதை திரிக்கிறீங்க… எம்புள்ள கூப்பிட்டான்னு கூசாம பேசற… அவன் படுக்க கூப்பிட்டா போயிடுவியா?

கலா… ஓங்கி கத்திய பரமசிவன் குரலில் ஒரு கணம் நடுங்கி நின்றாள்.

உனக்கு அவ்வளவு தான் மரியாதை… விரல் நீட்டி எச்சரித்தான்.

டேய் ஆத்தாளும் மகளும் டிராமா போடராளுங்க அதை பார்த்துகிட்டு நீ ஏன் நிற்கிற… மகனின் கரம் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள் கலாவதி.

குற்ற உணர்வுடன் திரும்பித் திரும்பி  பார்த்துக் கொண்டே தாயோடு சென்றான் ராஜேஷ்.

ஏய் நில்லுடி….! உனக்கென்ன இந்த வீட்டில வேலை? ராப்பகலா கண்ணு முழிச்சு வியர்வை சிந்தி சம்பாதிச்சு என் புள்ள சங்கரன் உன்னை கட்டி கொடுத்தான். நன்றிகெட்ட நாயி நீ அவன் புள்ளையை இன்னைக்கு ஊரை கூட்டி அவமானப்படுத்திட்ட.

நான் செத்தாலும் நீ இழவுக்கு வரக்கூடாது. டேய் பரமசிவம் உனக்கு தங்கச்சி உறவு வேணும்னா அவளை உள்ளே சேர்த்துக்கோ நான் என் சின்ன மருமகளோட போயிடுறேன்…

இல்லம்மா எப்போ நாக்கில் நரம்பு இல்லாம இவ்வளவு தூரம் கலா பேசிடுச்சோ இனிமே எனக்கு என்ன தங்கச்சி உறவு வேண்டி கிடக்கு…? பரமசிவமும் கொதித்து எழுந்து விட்டான்.

ஓ எல்லாரும் ஒன்னா சேர்ந்து பூசி முழுகபாக்குறீங்களா…?

எல்லாரும் கூட்டு களவாணிகளா…?

டேய் இவங்க உறவும் ஆச்சு மண்ணுமாச்சு கிளம்புடா போகலாம்…. அப்போதே கணவனுக்கு அழைத்து கார் எடுத்து வர சொன்னாள் கலாவதி.

கலாவதிக்கு உள்ளுக்குள் நிம்மதியாக இருந்தது. மகனுக்கு சிறுவயதிலிருந்தே பவித்ராவின் மீது ஆர்வம் என்று தெரியும். கொஞ்சம் அசந்தால் மகன் அவள் கழுத்தில் தாலி கட்டி அழைத்து வந்து விடுவான் என்று தெரியும். அதனால் தான் ஓட்டு உறவு இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று வெட்டி விடும்படி இவ்வளவு பெரிய பிரச்சனையாய் மாற்றி பூதாகரமாக்கி விட்டாள்.

இனி ராஜேஷ் போய் கெஞ்சி கதறினாலும் தமயந்தி பெண் கொடுக்க மாட்டாள் பவித்ராவும் அவனை ஏற்க மாட்டாள்.

நல்ல வேளை இன்றைக்கு ஜெயலட்சுமி வீட்டில் இல்லை. அம்மா வீட்டில் சாமி கும்பிடுகிறார்கள் என்று பிறந்த வீட்டிற்கு போய் இருக்கிறாள். இல்லாவிட்டால் அவள் பங்குக்கு என்னென்னவோ பேசி வைத்திருப்பாள்.

“——————–“

ம்மா கலா அத்தையைப் பற்றி உங்களுக்கு தெரியாதா? பவி அக்கா அப்படி செய்யக்கூடிய ஆளா? யுவராஜ் தாயைப் பிடித்து உலுக்கினான்.

காயத்ரி வெறுப்புடன் பவித்ராவை பார்த்தாள்.

ஏற்கனவே மனதளவில் நொறுங்கி உடல் முழுவதும் காயத்துடன் நலுங்கி நின்ற தமக்கையை அருவெருப்பாய் பார்த்து வைத்தாள் காயத்ரி.

பவித்ரா நீ இன்னுமா திருந்தல…. அப்பாவை இழந்துட்டு நிற்கும் இந்த நேரத்திலுமா உன் புத்தி இப்படி போகணும்…? கத்திக்குத்து பட்ட இடத்திலே மீண்டும் கத்தியை செறுகினாள் காயத்ரி.

யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை…. யார் முகத்தையும் பார்க்கவும் அவள் விரும்பவில்லை. அறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.

மூடிய கதவை திறக்கவே இல்லை பவித்ரா. அப்பா நீங்க இருந்திருந்தால் எனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்குமா… யார் என்ன பேசினாலும் நீங்க மட்டும் என்னை நம்பி இருப்பீங்களே… கதறி துடித்தாள்.

தெருவே கூடி நின்று வேடிக்கை பார்க்க தகப்பனோடு பிறந்தவள் தன்னை தூற்ற… பெற்றவள் கூட தன்னை நம்பவில்லையே…?

இனி எந்த முகத்தை கொண்டு இந்த தெருவில் நடமாடுவேன்? இந்த ஊர் என்னை பார்க்கும் பார்வை எப்படி இருக்கும்…? எண்ணி எண்ணி மாய்ந்து போனாள்.

நடந்த அவமானத்தை எண்ணி எண்ணி வீட்டில் ஒருவருக்கும் பொட்டு தூக்கம் இல்லை.

“——————“

நன்றாகவே பொழுது விடிந்து விட்டது. வாசல் பெருக்கி கோலமிடவில்லை. தண்ணீர் பிடிக்கவில்லை.

காயத்ரி நீயாவது எழுந்து  எல்லாருக்கும் டீ போட்டு கொடு…! காயத்ரியை எழுப்பினான் யுவராஜ்.

சுசிலா வந்து மருமகளை சமாதானம் செய்ய முயன்றார்.

காயத்ரி டீ போட்டு தாயிடம் கொடுக்க…வேண்டாம் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாள் தமயந்தி.

யுவராஜ் பவித்ராவிற்கு டீ கொண்டு போய் கதவை தட்டினான். அவள் திறக்கவில்லை.

மகள் ஏதாவது செய்து கொள்வாள் என்றெல்லாம் தமயந்தி  நினைக்கவில்லை செத்தாலும் சாகட்டும் என்ற மனநிலையில் அவள் இருந்தாள்.

காயத்ரி டீயை கொண்டு போய் அடுப்படியில் வச்சிட்டு வீட்டை பெருக்கு. நான் இட்லி ஊத்துறேன் என்று சுசிலா எழுந்து சென்றார்.

தாயின் கண்ணீர் பொறுக்காது தமக்கையை உள்ளுக்குள் வசைப்பாடிக்கொண்டே துடைப்பத்தை எடுத்து பெருக்கத் தொடங்கினாள் காயத்ரி.

நீண்ட துடைப்பத்தை வைத்து அவள் பெருக்கிக் கொண்டே வர பீரோவிற்கு அடியில் இருந்து ஒரு பேப்பர் உருண்டை வந்தது.

இது என்ன பேப்பர் உருண்டை என்று கசங்கிய பேப்பரை பிரித்து பார்த்தாள்.

ஆம் ராஜேஷ் எழுதிய கடிதம்….

அம்மா இதை பாருங்களேன் தாயிடம் எடுத்துக் கொண்டு ஓடினாள்.

ராஜேஷ் கையெழுத்தில் முத்து முத்தாக இருந்தது அந்த கடிதம்.

கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள் தமயந்தி.

தன்மகள் பொய் சொல்லவில்லை. தவறாக நடக்கவில்லை தான் தான் அவசரப்பட்டு விட்டடோம் என்று அறிந்து கொண்டவள் ஓவென்று பெருங்குரல் எடுத்து அழுதாள் அந்த பேதை தாய்.

நடந்ததை அறிந்து சுசிலாவும் வேதனையுடன் கண்ணீர் உகுத்தார்.

அம்மா ராசாத்தி… என் தங்கம் கதவை திற சாமி.

நீ எந்த தப்பும் பண்ணலைன்னு இப்போ எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சு… வெளியில வா சாமி கண்ணீருடன் அழைத்தார் சுசிலா.

உள்ளிருந்து அவள் பதில் பேசவும் இல்லை கதவை திறக்கவும் இல்லை.

அம்மா அக்காவை அசிங்கப்படுத்தி கூனி குறுக வெச்சிட்டீங்களே இப்போ என்ன பதில் சொல்வீங்க…?

ஊரே நம்பலைன்னாலும் நீங்க நம்பி இருக்கணும்… யுவராஜ் தாயை வெறுப்புடன் பார்த்து சென்றான்.

இனி போய் வீடு வீடாக கடிதத்தை சாட்சியாய் காட்ட முடியுமா…? நடந்த அவமானம் இல்லை என்று ஆகி விடுமா?

தம்பி வீட்டில் என்ன செய்கிறார்களோ என்று பார்க்க வந்தான் பரமசிவம்.

யுவராஜ் அந்த கடிதத்தை கொண்டு போய் பரமசிவத்திடம் காட்டினான்.

கொடுடா அந்த பேப்பரை நான் போய் அந்த கலாவை உண்டு இல்லை என்று பண்ணிட்டு வரேன்…. வீறு கொண்டு எழுந்தான் பரமசிவம்.

வேண்டாம் பெரியப்பா… யாரிடமும் எதையும் சாட்சியாய் காட்டி என்னை நிரூபிக்க வேண்டாம். தயவுசெய்து இந்த பேச்சை இதோடு விட்டுடுங்க… கை கூப்பிய பவித்ரா மீண்டும் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.

சுசிலா தான் கெஞ்சி அழுது அரற்றி சாப்பிட வைத்தார்.

பாட்டி நான் கலா அத்தை அசிங்கப்படுத்தியதை கூட மறந்துடுவேன்… ஆனா உங்க மருமகளை என் உடம்பில் உயிர் இருக்கும் வரை மன்னிக்க மாட்டேன்.

உங்க மருமகளுக்கு இனி இரண்டு குழந்தைங்க தான்…. கண்ணில் குபு குபு என்று நீர் வழிய தாயை பார்த்து கடுஞ்சொற்களை கூறினாள் பவித்ரா.

வாயை பொத்தி கதறி அழுதாள் தமயந்தி.

இப்படி எல்லாம் பேசக்கூடாது கண்ணு பேத்தியின் தலை கோதி கண்ணீரை துடைத்து விட்டார் சுசிலா.

பாட்டி ஊரு உலகமே நம்பலைனாலும் பெத்தவ பிள்ளையை நம்பனும். இவங்க இன்னைக்கு இல்லை என்னைக்குமே என்னை நம்பினதில்லை.

என்னை பொருத்தவரை இனி எனக்கு அம்மா இல்லை அவங்களை பொறுத்தவரை நானும் உயிரோடு இல்லை என்றே நினைத்துக் கொள்ளட்டும்… ஓடிப்போய் கதவை மூடிக்கொண்டாள்.

“———————“

நாட்கள் சென்றதே தவிர தாயின் முகத்தை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை பவித்ரா.

தமயந்தி எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டு விட்டாள்…. கல்லாகி இருந்த பவித்ரா அதை கண்டு கொள்ளவே இல்லை.

நடந்த விபரம் கேள்விப்பட்டு மனம் வருந்திய மணவாளன் தங்கை மகளை தன் வீட்டிற்கு அழைத்து சென்று ஒரு மாதம் வைத்திருந்தான்.

இறுதி செமஸ்டரின் தேர்வு முடிவுகள் வந்திருந்தது.

அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசனையில் பவித்ரா இருக்கும்போது நர்சிங் படித்த தோழியை பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

பிரைவேட் ஹாஸ்பிடலில் வேலை என்றாலும் கை நிறைய சம்பளம் தருவதாக அவள் கூறினாள்.

சங்கரன் இறந்த பிறகு நிலத்தை குத்தகைக்கு விட்டு விட்டாள் தமயந்தி. கடை வாடகையும் குத்தகை பணமும் மட்டும்தான் வருமானம்.

இந்த வருடம் தான் பன்னிரண்டாம் வகுப்புக்கு செல்கிறாள் காயத்ரி,தம்பி இன்னும் படிக்க வேண்டும். இவ்வளவு செலவு இருக்கும் போது வங்கி சேமிப்பை எடுத்து மேற்படிப்பு படிக்க அவசியம் என்ன….  மிகவும் யோசித்தாள்.

மாப்பிள்ளை பார்க்கட்டுமா என்று மணவாளன் கேட்க… கொஞ்ச நாள் போகட்டும் மாமா நான் டிப்ளமோ நர்சிங் படிக்கிறேன்  என்றாள்.

சங்கரன் இருக்கும்போது ஆர்வமாக கூறுவாள். அப்பா நான் எம் எஸ் சி பிசிக்ஸ் படித்துவிட்டு இஸ்ரோவில் வேலை தேடுவேன். நம்ம தமிழ்நாட்டு வளர்மதி மேடம் சந்திராயன் பிராஜக்ட் பண்ணினது போல நானும் சயன்டிஸ்ட்டா வருவேன். கண்களில் லட்சியம் மின்ன கூறும் மகளை ஆனந்தமாய் முத்தமிட்டு மகிழ்வான் சங்கரன்.

குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு பிஎஸ்சி பிசிக்ஸ் முடித்த கையோடு டிப்ளமோ நர்சிங் சேர விரும்புகிறாள்.

பிஎஸ்சி படிப்புக்கு என்ன வேலை கொட்டி கிடக்கிறது… நர்சிங் என்றாலும் எங்கே வேண்டுமானாலும் ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு.

மணவாளன் பணம் கட்டி ஓராண்டு படிப்பாக தஞ்சாவூரில் பிரைவேட் நர்சிங் காலேஜில் சேர்த்து விட்டான்.

தாயிடம் எந்த பேச்சு வார்த்தையும் அவளுக்கு இல்லை. காயத்ரியிடம் கூட அவள் அதிகம் பேசுவதில்லை யுவராஜ் பேசினால் மட்டும் பேசுவாள்.

படிப்பு முடித்த கையோடு தஞ்சாவூரில் உள்ள தீபம் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து விட்டாள்.

தமயந்தி தினமும் அண்ணனிடம் அழுது புலம்புவாள். சீக்கிரம் பவித்ராவிற்கு திருமணம் முடிக்க வேண்டும் என்று.

மாமா இப்போதான் வேலைக்கு போக தொடங்கி இருக்கேன். காயத்ரி காலேஜ் போகட்டும். யுவி பிளஸ்டூ முடிக்கட்டும்.

எனக்கென்ன கல்யாணத்துக்கு அவசரம்?

“—————-“

அப்படியே ஓராண்டு சென்றிருக்க…

பவித்ரா தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தாள்.

பவித்ரா வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட  செந்தாமரை தன்மகன் விக்ரமிற்கு பவித்ராவை பெண் கேட்டு வந்தாள்.  விக்ரம் அக்ரி டிபார்ட்மெண்ட்டில் நல்ல பதவியில் இருக்கிறான்.

தவறா நினைக்காதீங்க அண்ணி… விக்ரமுக்கு நல்ல இடமெல்லாம் வருது. என் அண்ணன் பொண்ணு இருக்கும்போது நான் எப்படி வெளியில் சம்பந்தம் பேச…

சங்கரன் அண்ணன் எனக்கு எவ்வளவு எல்லாம் செய்திருக்கு…. நான் எப்படி அந்த நன்றியை மறப்பேன்?என் அண்ணன் குடும்பத்தை நான் பார்க்க வேணாமா? உண்மையான அக்கறையோடு செந்தாமரை பேச  மகிழ்ந்து போனார் சுசிலா.

அத்தை மன்னிக்கணும் நீங்க விக்ரம் அத்தானுக்கு வெளியில் பார்த்துக்கோங்க… எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை… தமயந்திக்கு முந்திக்கொண்டு பவித்ரா பதில் கூறிவிட்டு சென்றாள்.

என்ன ராசாத்தி இப்படி பொசுக்குன்னு பேசிட்ட விக்ரம் தங்கமான புள்ள… கலா மாதிரி செந்தா கொடுக்கு கிடையாது… சுசிலா மிகவும் வருந்தினார்.

பாட்டி எனக்கு சொந்தத்தில் மாப்பிள்ளை வேண்டாம்.

இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் என்று உறுதியாய் கூறிவிட்டாள்.

பவித்ராவின் நெருங்கிய தோழியும் உறவுக்கார சித்தப்பா மகளுமான வேதவல்லிக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் திருமணம்.

திருமணத்திற்கு நீ வந்தே ஆக வேண்டும் என்று வேதா பிடித்த பிடியாக சொல்லிவிட்டாள். வேறு வழி இன்றி பவித்ரா திருமணத்திற்கு வந்திருந்தாள்.

தமயந்தியும் திருமணத்திற்கு வந்திருக்க அங்கு தான் அகிலனின் தாய் ரேணுகாவை சந்திக்க நேரிட்டது. ரேணுகா சுசிலாவுக்கு உறவுக்கார பெண்.

பேச்சு வாக்கில் அமெரிக்காவில் இருக்கும் தன் மருமகளுக்கு இரட்டைக் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை பார்த்துக் கொள்ள பொறுப்பான ஒரு ஆள் தேவை என்று கூறியிருந்தார்.

சமீப காலமாக ராஜேஷ் அடிக்கடி பவித்ராவை பார்க்க முயற்சிக்கிறான்.

அவள் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கே இருமுறை வந்து விட்டான். விக்ரமை திருமணம் செய்து கொள்ள சொல்லி சுசீலாவின் நச்சரிப்பு ஒரு புறம்.

சற்று நேரம் யோசித்த பவித்ரா. நான் நர்சிங் படித்திருக்கேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் அமெரிக்கா போகிறேன் என்றாள்.

வயசு பிள்ளையை எப்படி வெளிநாட்டிற்கு அனுப்புவது என்று தமயந்தி பிடிவாதமாக மறுத்தாள்.

மாமா நான் எங்கேயாவது வெளியில் கொஞ்ச நாள் போயிட்டு வரேன்… மணவாளனிடம் புரிய வைக்க போராடிக் கொண்டிருந்தாள்  பவித்ரா.

தமயா பவித்ரா சொல்றதும் சரி தான் கொஞ்சம் இடம் மாறுதலாக இருந்தால் அவ மனசுக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். போய் அங்கேயேவா தங்கிட போறா… ஒரு ஆறு மாசம் இருந்துட்டு வரட்டுமே… பிள்ளைகளுக்கும் வெளிஉலகம் தெரியட்டுமே… மணவாளன் சிபாரிசு செய்துதான் பவித்ராவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தான்.

அவ்வளவு புண்பட்டு மன வேதனையுடன் தான் அமெரிக்கா வந்திறங்கினாள் பவித்ரா.

“—————-“

அனைத்தும் சொல்லி முடித்தாள் சௌமி. சிவந்த கண்களுடன் கேட்டுக் கொண்டு அமைதியாக சோபாவில் கண்மூடி படுத்திருந்தான் ஹரிச்சரண்.

ஹரி…. மூனு வருஷமா அவங்க அம்மா கிட்ட பேசாம இருக்கா…

அங்கே வேதனை அதிகமாகி தான் இங்கே ஒரு இடம் மாற்றம் தேடி வந்தா இங்கே உன் பங்குக்கு நீயும் அவளை காயப்படுத்திட்டியே வருத்தமுடன் கேட்டான் அகிலன்.

தப்பு தான் என்றவன் எழுந்து போய் முகம் கழுவி வந்தான்.

இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டான்.

சௌமி நான் இப்போ வந்து பவித்ரா கிட்ட பேசுவது நல்லா இருக்காது.

நீ போய் அவளை சாப்பிட வை….! அடுத்து என்ன பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன்.

என்னடா பண்ண போற…? திகிலுடன் கேட்டான் அகிலன்.

லவ் பண்ண போறேன்… முடியலைனா தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ண போறேன்… கண்சிமிட்டி சிரித்தான்.

————தொடரும் ——-

  1. எவ்வளவு பெரிய எபி 😜😜😜😜😜 இனி போரடிக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா இன்னுமொரு ————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!