Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 11 1

அத்தியாயம் -11

வாசலிலேயே நிறுத்தி “யார் நீங்க?” என்று மல்லி கேட்டது சுந்தருக்கு சுருக்கென்று இருந்தாலும் அவன் கோபத்தை காட்ட இது நேரமில்லை என்று வியாபாரியான அவனுக்குத் தெரியாதா?

“மல்லி! என்னடி மூணு மாசத்துல என்னை மறந்துட்டியா? நம்ம பொண்ணு ப்ரியாவையாவது ஞாபகம் இருக்கா? பாப்பா  உன்னை ரொம்ப தேடுறா! நீ எங்க என்று தினமும் அழுகை தான்…! சீக்கிரம் கிளம்பு…. நம்ம வீட்டுக்கு போவோம்..!”

சுந்தர் தன் நடவடிக்கைகளை தவறென்று உணர்ந்து மன்னிப்பு கேட்டோ வருத்தம் தெரிவித்திருந்தாலோ கூட மல்லி கொஞ்சம் யோசித்து இருப்பாள். ஆனால் அவன் இப்போதும் அவன் செய்த மன்னிக்கவே முடியாத துரோகத்திற்கு பிறகும் ஒன்றுமே நடக்காதது போல சகஜமாக பேசியதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.



Advertisement

விலகி வந்த பிறகு அதுவும் அவன் வேண்டாம் என்று ஒதுக்கிய பிறகும் அவனிடம் ஏன் இப்படி செய்தாய் என்று கோபப்படவோ என்னை இப்படி செய்யலாமா என்று துக்கமாகவோ கேட்கும் எண்ணம் கூட வராத அளவுக்கு அவள் மனம் மரத்துப் போய் இருந்தது.

மேலும் இனி யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது என்ற வைராக்கியமும் இந்த மூன்று மாதங்களில் ஆழமாக பதிந்து போயிருந்தது. சுந்தர் மேலும் மேலும் அவளிடம் இருந்து மனதளவில் விலகிப்போய்க் கொண்டே இருக்கிறோம் என்பதை உணராமலே அவன் வந்த தேவைக்கு தேவையானதை பேச ஆரம்பித்தான்.

ப்ரியாவைப் பற்றி பேசி அவள் மனதில் குற்றவுணர்வைத் தூண்டி விட்டு தன்னோடு அழைத்துச் செல்ல நினைத்தான்.

Advertisement

உண்மையில் இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவன் செய்தது அவனுக்கு உறுத்தலாக இருந்தாலும் அவளிடம் தன் குற்றத்தை ஒத்துக்கொள்ள அவன் அகந்தை விடவில்லை. தான் கட்டிக் கொண்டு வந்த மனைவி தானே! தான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டியவள் தானே என்ற ஆணவம் தான் அதற்கு காரணம்.

Advertisement

மல்லிக்கு இப்போது அவன் ஒன்றுமே நடக்காதது போல அவன் கேட்ட கேள்வி எரிச்சலை கிளப்ப இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு கண்கள் இடுங்க அவனைப் பார்த்து “எங்க வரணும்னு சொன்னீங்க?” என்று குரலை உயர்த்தி கேட்க சுந்தர் டக்கென்று தழைந்து போனான்.

“ஏன் மல்லி சத்தமா பேசற? அக்கம்பக்கம் எல்லாம் நம்ம வீட்டு விஷயம் கேக்கணுமா?”

அவன் குரலில் இப்போது குழைவு இருந்தது. கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கேஞ்சுவதுமாக இருந்தவனை வெறுப்போடு பார்த்தாள் மல்லி.

Advertisement

அவள் மேலே பேசுவதற்குள் அவள் செல்பேசி அழைத்தது. அதில் கவனம் கலைந்து உள்ளே சென்று போனை எடுக்க சாவித்திரி தான் அழைத்திருந்தாள்.

உள்ளே செல்லும்போது கூட ஒரு உபசாரத்திற்கு கூட அவனை உள்ளே அழைக்காத மல்லியை நினைத்து சுந்தருக்கு கடுங்கோபம் மூண்டாலும் அவன் சூழலை நினைத்து பொறுமை காத்தான். இங்கு வந்த இந்த பத்து நிமிடங்களில் ஒரு வார்த்தை கூட மல்லி தன்னையோ ப்ரியாவையோ விசாரிக்காதது அவனுக்கு எச்சரிக்கையோ என்று தோன்றியது.

“சரிதான் போடி!” என்று போய்விடலாம் தான். ஆனால் ப்ரியாவை எப்படி சமாளிக்க? அதனால் பல்லைக் கடித்து நின்ற சுந்தர் வாசலிலேயே நின்று கூடத்தில் நின்று பேசிய மல்லியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தான்.

“சொல்லு சாவி!”

…..

“ம்… ஆமா…லேட் ஆயிடுச்சு..கிளம்பணும்,,, இதோ குளிச்சிட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிடுவேன்…”

……

“வேணாம்…கான்ஸல் பண்ணாதே… நான் குடுத்துடுவேன்….முடிச்சிடலாம்….”

………….

“ம்… அங்க வந்துட்டு உனக்கு போன் அடிக்கிறேன்…”

அவள் பேச்சில் இருந்து சுந்தரால் எதையும் யூகிக்க முடியவில்லை. எங்கே கிளம்புகிறாள்? என்ன முடிக்கப் போகிறாள்?

சுந்தர் யோசனையாக பார்க்க மல்லி மீண்டும் வாசலுக்கு வந்து “சரி! நீங்க கிளம்புங்க…எனக்கு அவசரமா வேலை இருக்கு…” என்று வாசல் கதவை சாத்தப் போக சுந்தர் அவள் கையைப் பிடித்து கொண்டான்.

“மல்லி! நீ என் மேல ரொம்ப கோவமா இருக்கேன்னு தெரியுது. பழசை எல்லாம் மறந்திடு…வா மல்லி ..! நம்ம வீட்டுக்கு போகலாம்…”

மல்லி அவனை உற்றுப் பார்த்து விட்டு வாய்ப்பே இல்லை என்பது போல தலையை இடதும் வலதுமாக ஆட்டிக் கொண்டு “மூணு மாசம் கழிச்சு தான் உங்களுக்கு நேரம் கிடைச்சிருக்கு..என்னை பார்க்க…! ஆனா பாருங்க…! எனக்கு இப்ப நேரம் இல்ல.  அதனால் இப்ப நீங்க கிளம்புங்க…. நானும் கிளம்பணும்…” என்றவள் அவன் கையை விலக்கி விட்டு கதவை சாத்திக் கொண்டு உள்ளே போக திரும்பினாள்.

“அப்ப உனக்கு ப்ரியாவை பத்தி எந்த கவலையும் இல்லையா? அவ அம்மா அம்மான்னு ஏங்கினது போல உனக்கு உன் பொண்ணைப் பார்க்கலியே என்ற ஏக்கம் இல்லையா…?”

சுந்தர் இடம் பார்த்து அடிக்க மல்லியின் மனதில் இருந்த வலி அவள் கண்களில் பிரதிபலித்தது. எப்போதிருந்து சுந்தர் இந்த அளவு கிராதகன் ஆனான்? அது எப்படி ப்ரியாவின் நினைவு அவளுக்கு இல்லாமல் போகும்?

“நிச்சயம் இருக்கு…ஆனா அதை விட…” என்று ஆரம்பித்தவளுக்கு மூன்று மாதங்களாக முயன்று ஆழத்தில் அழுத்தி வைத்த பாரத்தை இப்போது மேலே எடுத்தால் அவள் கஷ்டப்பட்டு  தேடிக் கொண்ட அமைதியை இழந்து விட வேண்டி வரும் என்று அப்படியே நிறுத்திக் கொண்டாள்.

“நான் ஈவினிங் போன் பண்றேன்.. நீங்க ப்ரியாவை கொண்டு வந்து இங்க விட்ருங்க… இனிமே நான் அவளை பார்த்துக்கறேன்…”

மல்லி எளிதாக தீர்வு சொல்லி விட இப்போது அதிர்ந்து நின்றது சுந்தர் தான். அவன் இப்படி யோசிக்கவே இல்லை. ப்ரியாவை பற்றி பேசி எப்படியாவது மல்லியை அவன் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்று நினைத்தானே ஒழிய இப்படி யோசிக்கவே இல்லை.

அது ஏன் என்றும் அவன் யோசிக்கவில்லை. அவன் நினைத்து வந்தது வேறு.நடந்தது வேறு!

மல்லி அவன் முடிவுக்கு பொறுமை இல்லாமல் கால் மாற்றி நிற்க சுந்தர் டக்கென்று பேச்சை மாற்றினான்.

“அதை அப்புறம் பேசிக்கலாம்…! விடு…! இப்ப நீ எங்கயோ அவசரமா கிளம்பிட்டு இருக்கே போலருக்கே…? எங்கே போகணும்னு சொல்லு! நான் போகும் போது விட்டுட்டு போறேன்…”

சுந்தர் எதுவுமே நடக்காதது போல எளிதாக பேச மல்லிக்கு அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

“இல்ல வேண்டாம்..! நானே போய்க்குவேன்….! நீங்க கிளம்புங்க…”

அவன் பதிலுக்கு கூட நிற்காமல் கதவைத் தாழிட்டுக் கொண்டு பாத்ரூம் நோக்கி நடந்தவளின் கண்களை மறைத்தது கண்ணீர்.

இப்படி யாரோ போல சுந்தரிடம் அவள் பேசுவாள் என்று ஒரு நாளும் அவள் நினைத்ததில்லை. எல்லாம் அவனே என்று பெற்ற தாய் தகப்பனை கூட உதறிவிட்டு அவன் பின்னால் வந்தவளால் அவன் அவள் வேண்டாம் என்று உதறிய வலி அவன் அவள் உடலில் ஏற்படுத்தியிருந்த வலியை விட பல மடங்கு அதிகம்.

உடலில் ஏற்பட்ட காயம் ஆறி வடுவும் கூட மறைந்து விட்டது. ஆனால் சுஷ்மிதா சுந்தரைப் பற்றி சொன்ன போது அவள் மனதில் விழுந்த அடியின் வலியும் காயமும் இம்மியளவும் ஆறவில்லை. அதன் பக்கவிளைவாக அவன் மேல் அவளுக்கு இருப்பது வெறுப்பா அல்லது வெறுமையா என்று கூட பிரித்தறிய முடியவில்லை.

மனதில்  அந்த வலி மிகுந்த தருணங்கள் மீண்டும் ஓட அதன் விளைவாக கண்களில் இருந்து நிற்காமல் வழிந்த கண்ணீர் ஷவரில் இருந்து வழிந்த தண்ணீரோடு கலந்து கீழே வழிந்தது.அவள் அம்மாவின் மனதை நோகடித்ததன் விளைவு தான் இப்போது அவளும் ஒரு அம்மாவாக மகளைப் பிரிந்து வருந்துகிறாளோ என்று பல முறை இந்த மூன்று மாதங்களில் வருந்தி இருக்கிறாள்.

இயந்திரகதியில் வேறு ஒரு பேண்டும் குர்தியும் அணிந்து கொண்டு மல்லி கிளம்பினாள். ஏற்கனவே தாமதமாகி விட்டதால் பரபரப்பாக கிளம்பி வெளியே வந்து கதவைப்பூட்டி விட்டு கைப்பையில் எல்லாம் வைத்தோமா என்று சரி பார்த்துக் கொண்டே லிப்ட் அருகே வந்தவள் அங்கே சுந்தரை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

தான் போகச்சொல்லி கதவை அவன் முகத்திற்கு நேரே சாத்தி உள்ளே பூட்டியதும் அவன் நிச்சயம் கடுப்பாக கிளம்பி இருப்பான் என்று நினைத்தவளுக்கு அவன் அங்கேயே நின்றதில் ஆச்சரியம்.

ஆனாலும் அவனை கண்டுகொள்ளாமல் மேலே நடந்து லிப்டின் கதவைத் திறக்க மல்லி கையை நீட்ட அதற்கு முன் கதவைத் திறந்த சுந்தர் உள்ளே சென்று அவள் வருவதற்காக லிப்டை நிறுத்தி வைத்தான்.

“உனக்கு லிப்ட்ல தனியா போக பயம் தானே? அதான் வெய்ட் பண்ணேன்…” என்றபடி கீழே போகும் பொத்தானை அழுத்த மல்லி அவன் பேசியதில் இருந்த அபத்தத்தை சுட்டிக் காட்டக் கூட வாயைத் திறக்கவில்லை. இப்போது அவனிடம் பேசும் மனநிலையில் அவள் சுத்தமாகவே இல்லை.

லிப்டின் சுவரை வெறித்தபடி பேசாமல் வந்த மல்லியின் முகத்தை பார்த்த சுந்தருக்கு அழுது சிவந்திருந்த கண்கள் சங்கடத்தைக் கொடுத்தது.

தொண்டையை செருமி குரலை தழைத்துக் கொண்டு “மல்லி..!” என்றான்.மல்லி அப்போதும் அவன் பேசியது கூட கேட்காதது போல நிற்க மெதுவாக கையை நீட்டி அவளின் மெலிந்து இருந்த இடது மணிக்கட்டை பிடித்தவன் “நீ ரொம்ப இளைச்சிட்டே மல்லி…!” என்று பரிவாக பேச மல்லிக்கு எங்கிருந்து தான் அப்படி ஒரு கோபம் வந்ததோ?

அவனை உருத்து விழித்தபடி அவன் பிடித்திருந்த கையை ஓங்கி உதறியவள் அதற்கு மேல் அவனருகே நிற்க முடியாது என்பது போல லிப்டின் கதவை திறக்க முயல அதுவே தரைத்தளத்திற்கு வந்திருந்தது.

பின்னால் இருந்தவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் மல்லி அவளின் பழைய ஸ்கூட்டியை நோக்கி சென்றவள் அதை கிளப்பிய வேகத்தில் சுந்தரே பயந்து விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!