Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சத்தை எரித்தாய்

நெஞ்சத்தை எரித்தாய் 7 2

“சரி வாசல்ல நின்னுட்டு என்னடி செய்யற? கதவைத் தட்டி அண்ணா கிட்ட ஞாயம் கேப்போம். வா…” என்று சாவித்திரி வேகமாக முன்னே சென்று கதவைத் தட்ட சுந்தர் காதில் விழவே இல்லை.

காதில் விழுந்தாலும் காமாட்சி திறப்பதாக இல்லை. ராமனோ மனைவியை மீறி திறக்கப்போவதே இல்லை. ப்ரியாவோ அழுது அழுது பசியோடு உறங்கி விட ஆக சாவித்திரி கதவைத் தட்ட திறக்க ஆளே இல்லை.

“இப்ப என்னடி செய்யலாம்..?”

சாவித்திரி என்ன செய்வதென்று புரியாமல் மல்லியை கேட்க “எனக்கு கொஞ்ச நேரமா நி..நிக்கவே முடியல. என்னை உங்க வீட்டுக்கு கூ…கூ ட்டிட்டு போறியா?” என்று மல்லி களைத்துப்போன குரலில் கேட்கவும் தான் சாவித்திரி மல்லியை கவனித்துப் பார்த்தாள்.



Advertisement

“வல்லி என்ன செய்யுதுடி? வரியா டாக்டர் கிட்ட போகலாமா?”

தோழியை நெருங்கி ஆதரவாக பிடித்தபடி சாவித்திரி கேட்க “வேணாம் சாவித்திரி….என்னை உங்க வீட்டுக்கு போக முடியாட்டி இங்க பக்கத்துல இருக்கிற மாரியம்மன் கோயில்ல விட்டுரு. நான் அங்க இருக்கேன்….” என்று மல்லி கலங்கிய குரலில் பேசவும் சாவித்திரி மேலே பேசவே இல்லை.

மூடியிருந்த கதவை பெருமூச்சோடு பார்த்து விட்டு அவளை கைத்தாங்கலாக பிடித்து காரில் முன் சீட்டில் அமர வைத்தவள் காரை நேராக தன்னுடைய வீட்டுக்கு செலுத்தினாள்.

Advertisement

காரில் பயணம் செய்த அரைமணி நேரமும் மல்லி அரை மயக்க நிலையிலேயே இருந்தாள். மனதில் விழுந்த அடி தந்த அதிர்ச்சி அவளை பலகீனமாக்கி இருந்தது. தனக்கா இப்படி என்று அவளுக்கு நம்பவே முடியவில்லை.

Advertisement

அது எப்படி பத்து வருட கல்யாண வாழ்க்கை எந்த விதமான முன்னறிவிப்புமின்றி ஒரே நாளில் முறிந்து போகும்?

இந்த அதிர்ச்சியிலும் மகளை நினைத்து கவலை கொண்டாலும் கதவையே திறக்காத போது என்ன செய்ய முடியும்? சுந்தர் அவளை என்ன செய்தாலும் மகளை கைவிட மாட்டான் என்று உள்ளூர ஒரு நம்பிக்கை இருந்தது. என்ன இருந்தாலும் ப்ரியா அவன் ரத்தம் அல்லவா?

சாவித்திரி அவள் குடியிருந்த அபார்ட்மெண்ட்டை அடைந்து காரை நிறுத்தி விட்டு மல்லியை அசைத்தாள்.

Advertisement

“வல்லி! எழுந்திருடி! வீடு வந்திருச்சு…”

என்று அவளைத் தொட அவள் உடல் நெருப்பாக கொதித்தது. அந்த ஏழு மணி இருளில் அவள் முகத்தை சரியாக பார்க்க முடியாமல் காரில் இருந்த விளக்கைப் போட்டு விட்டு மல்லி முகத்தை பார்க்க அவள் கண்கள் ஜுரவேகத்தில் கிறங்கிப்போய் இருந்தன. மல்லி அரை மயக்கத்தில் இருந்தாள்.

அவள் இருந்த நிலை சாவித்திரியை பயமுறுத்த அவள் கன்னத்தை மெல்ல தட்டி “மல்லி எந்திரி…மல்லி என்னடி செய்யுது…?” என்று கவலையோடு கேட்க மல்லியிடம் பதிலே இல்லை.

சாவித்திரியின் பெற்றோர் இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் பெரிய மகளைப் பார்க்க ஊருக்கு போயிருந்தனர். வீட்டிலும் யாரும் இல்லாமல் போக மல்லி இருந்த நிலைக்கு தனியாக மருத்துவமனைக்கு கூட்டிப்போக சாவித்திரிக்கு துணிவு இல்லை.

என்ன செய்வது என்று தவித்தவளுக்கு ராஜனின் நினைவு வர உடனே அவனுக்கு அழைத்தாள்.

ராஜனுக்கு சாவித்திரியின் அழைப்பைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம். இருவரும் ஒன்றாக ஒரு மணி நேரம் முன்னால் தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பி இருந்தனர்.

ராஜன் அவர்கள் தொழில் பற்றி மும்முரமாக பேசிக் கொண்டே போக மணியைப் பார்த்த சாவித்திரி அவன் பேச்சை பாதியில் நிறுத்தி நாளை பார்க்கலாம் என்று முடித்து விட்டு அவள் தோழியை பார்க்கப் போவதாக சொல்லி கிளம்ப அவளிடம் தெரிந்த ஆர்வமும் உற்சாகமும் பார்த்து ராஜனுக்கு லேசாக பொறாமை வந்தது.

அவனுக்கு தெரிந்த சாவித்திரி எதிலும் நிதானமானவள். எதற்கும் பரபரப்பு படபடப்பு அடைய மாட்டாள். கல்லூரியில் அவர்கள் ஒன்றாக படித்த போது கூட அவள் யாரோடும் நெருங்கிப் பழகியதில்லை.

ஏன் அவர்கள் கல்லூரி முடித்து வெளியே வரும்போது துவங்கிய வாட்சப் க்ரூப்பில் கூட அவள் சேரவில்லை.சேர விருப்பம் இல்லை என்று அவனிடமே சொல்லியும் இருக்கிறாள்.அந்த அளவு எல்லோரிடமும் தள்ளியே இருப்பவளுக்கு ஒரு பழைய தோழியை பார்க்க போவதற்கு இவ்வளவு சந்தோஷமா?

அப்படிப்பட்ட தோழி யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு தோன்றியது. அவளைப்பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள தானே கூடவே இருக்கிறான். அதனால் யார் அது என்று சாதாரணமாக கேட்பது போல கேட்டான்.

சாவித்திரிக்கு மல்லியை பார்க்கப்போகும் சந்தோஷத்தில் ராஜனிடம் நின்று பேச பொறுமை இல்லை. எல்லாம் நாளைக்கு சொல்றேன் என்று வேகமாக போய் காரில் ஏறி பறந்தே விட்டாள்.

அப்படி அவள் உயிர் மூச்சான தொழில் பேச்சைக் கூட பாதியில் நிறுத்தி விட்டு போனவள் தோழியிடம் பேசாமல் அவனுக்கு அழைத்தால் ஆச்சரியமாக இருக்குமா இருக்காதா?

ராஜன் தொலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைக்க சாவித்திரியின் குரல் படபடப்புடன் கேட்டது.

“ராஜன்..ராஜன்..உங்களால் இப்ப உடனே என் வீட்டுக்கு வர முடியுமா? அர்ஜென்ட்…”

சாவித்திரி இந்த அளவு படபடப்பாக பேசி கேட்டதே இல்லை என்பதால் காதில் இருந்த போனை எடுத்து உண்மையில் அவள் தானா என்று சரி பார்த்தான்.

அதற்குள் சாவித்திரி பொறுமை இழந்து “ராஜன் ராஜன்.. லைன்ல இருக்கீங்களா? நான் பேசறது கேக்குதா…? சீக்கிரம் வாங்க ராஜன் ப்ளீஸ்…” என்று கிட்டத்தட்ட அழும் குரலில் கூப்பிட ராஜன் பயந்து விட்டான்.

“பேபி…என்ன ஆச்சு…? நான் இப்ப கிளம்பி வரேன்….”

அவனை மீறி அவன் மனதிற்குள் அவளுக்கு வைத்த செல்லப்பெயர் வெளியே வர நல்ல வேளை அல்லது கெட்ட வேளை அதை கவனிக்கும் நிலையில் சாவித்திரி இல்லை.

சாவித்திரியின் அழுகுரலில் அவளுக்கு தான் எதோ ஆகிவிட்டது என்று பதறி பைக்கில் பறந்து போனவன் நிச்சயம் மல்லியை எதிர்பார்க்கவில்லை.

சாவித்திரி அவன் வர ஆன கொஞ்ச நேரத்திலேயே மல்லி இன்னும் மயக்கத்தில் இருந்து வராமல் இருக்க ரொம்பவே பயந்து போனாள்.

வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை தெளித்து, முகத்தை துடைத்து கன்னம் தட்டி என்று அவளுக்கு தெரிந்த வரை மல்லியை எழுப்ப முயல மல்லியிடம் சிறு அசைவும் இல்லை.

அவள் கன்னத்தை தட்டும் போது மட்டும் வலியில் சிறிது முகம் சுளிக்க சாவித்திரிக்கு அதில் தான் உயிர் வந்தது.

நடந்தது என்னவென்றே புரியாமல் அவளுமே மிரண்டு போய் இருந்தாள்.

ராஜன் அவள் பொறுமையை அதிகம் சோதிக்காமல் சீக்கிரமே வர அவன் வந்ததிலேயே சாவித்திரிக்கு தைரியம் மீண்டிருந்தது.

ராஜன் வந்து மல்லி இருந்த நிலையைப் பார்த்து “என்ன ஆச்சு சாவித்திரி? “ என்று விசாரிக்க சாவித்திரி அவளுக்கு தெரிந்ததை சுருக்கமாக சொன்னாள்.

இது கணவன் மனைவி  சண்டை என்று தெரிந்ததும் ராஜனின் புருவம் முடிச்சிட்டது.

“அவங்க வீட்டுக்காரருக்கு போன் செய்யலாம் சாவித்திரி…அவரையும் வெச்சு கிட்டு இவங்களுக்கு ட்ரீட்மெண்ட் போறது தான் நல்லது…”

இதமாகவே ராஜன் ஆலோசனை சொல்ல சாவித்திரி அதை கேட்கத் தயாராக இல்லை.

“இவ இருக்கிற நிலமைய பாருங்க. உடம்பு நெருப்பா கொதிக்குது. பத்து நிமிஷமா நான் கூப்பிடக்கூப்பிட கண்ணையே திறக்கல. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அங்கேயே நா கதவைத் தட்டின போது யாரும் வந்து கதவையே திறக்கல. இப்ப மட்டும் வந்திடவா போறாரு? நாம போவோம் ராஜன்…”

சாவித்திரி அவள் பிடியிலேயே இருக்க வேறு வழியில்லாமல் ராஜன் அவனுக்கு தெரிந்த மருத்துவமனைக்கு அவர்களை கூட்டிக் கொண்டு போனான்.

அன்று மருத்துவமனையில் சேர்ந்த மல்லி கண்ணைத் திறக்க இரண்டு வாரங்கள் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!