Skip to content
Post Views: 2,065
“பார்த்து.. பார்த்து. மெல்லமா அழுத்திப் பிடிங்க” என்று பதட்டமாக ஸ்ரீமதி சொல்லிக் கொண்டிருக்க, மதுராவின் நெற்றியில் ஒரு வெள்ளைத்துணியை வைத்து பிடித்துக் கொண்டிருந்தார் வானதி.
அருகில் குற்றவுணர்வுடன் அழுகிற மாதிரி முகத்துடன் ரேவந்த்!
ரேவந்த் தன் நண்பர்களுடன் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருக்க, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.
Advertisement
தொடர்ந்து ரேவந்துக்கு சரியாக அடிக்க வராமல் போக, அடுத்த முறை, “இப்ப பாருங்கடா” என்று முழு விசையுடன் அடித்து விட அதன் சின்ன கம்பு போய் ரொம்ப சரியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மதுராவின் நடு நெற்றியை உரசி சென்றது!
“அம்மா..” என்று அவள் நெற்றியைப் பிடித்துக் கொண்டு அலறி விட, அவள் சத்தம் கேட்டு அருகில் ஓடி வந்தான் ரேவந்த்.
அதற்குள் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த ஸ்ரீமதியும் வானதியும் இவர்களைக் கண்டு விட்டு அருகில் வந்து மதுராவை பிடித்துக் கொண்டனர்.
Advertisement
“இதுக்கு தான் சொன்னேன். இந்த கேம் வேண்டாம். கேரம் செஸ் மாதிரி ஏதாச்சும் விளையாடுங்கடான்னு.
Advertisement
சொன்னா கேட்டா தானே! நெத்தியில பட்டது கண்ணில் பட்டு இருந்தா, என்ன ஆகுறது?”
ஸ்ரீமதி ரேவந்த்தை அடிக்க போக, அவளைத் தடுத்தாள் மதுரா.
“இல்ல அத்தை.. நான் தான் தெரியாம குறுக்கால போயிட்டேன்”. என்றாள் வலியுடனே!
Advertisement
“அத சொல்லு. ஆம்பள பசங்க விளையாடுற இடத்துக்கு இவ எதுக்கு போனா? எல்லாம் இவளால தான்! எப்பவோ ஊருக்கு வந்துட்டு போற பிள்ளைக்கு கெட்ட பெயர்!” என்று வானதி மதுராவைத் திட்ட,
“இல்லண்ணி இவ மேல என்ன தப்பு? முதல்ல இவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்” என்று சொல்லி அவர்கள் வீட்டு காரை எடுக்க சொல்லி மதுராவுடன் வானதியையும் ஏற்றிக் கொண்டு சென்றாள்.
“எல்லாம் திருஷ்டி.. அவ சித்தப்பன் கல்யாணத்தில் புள்ள கிளி கணக்கா இருந்தா!
அந்த பட்டுப்பாவாடையும் ரெட்டை பின்னலுக்கும் குடை ஜிமிக்கியும் அவ்வளவு அம்சமா இருந்துச்சு அவளுக்கு!
நான் அப்பவே மதுராம்பாகிட்ட சொன்னேன். சொன்னேன் இல்லடி..” பொண்ணு மாப்பிள்ளைக்கு செய்றதோட வானதிக்கும் உன் பேத்திக்கும் சுத்திப் போடுன்னு செஞ்சியா?
“சொன்னே தான் .. நான் தான் வந்தவங்கள கவனிக்கிறதுல அத மறந்துட்டேன்!” என்றார் மதுராம்பாளும் வருத்தமாக!
எந்த கொள்ளிக் கண்ணு பட்டுச்சோ என் பேத்தி மேலே! விரல்களை நொடித்தார் அவர்!
கொள்ளிக் கண்ணு வேற யாருமில்லை! சாட்சாத் மணமகளே தான்!
அவள் தான் மதுராவையும் வானதியையும் பார்த்துப் பொருமினாள் கல்யாண வீட்டில் வைத்தே!
மாநிறமாக இருந்தாலும் நல்ல களையான முகம் வானதிக்கு! மூக்கு முழியும் எல்லாம் திருத்தமாக என்பார்களே அது போல!
கொஞ்சம் கன்னட நடிகை ஒருவரை நினைவுப் படுத்தும் சாயலுடன்!
எப்போதும் பெரிதாக அலங்காரம் செய்து கொள்வதில் நாட்டம் இல்லாதவள், அன்று கொழுந்தனின் கல்யாணம் என்பதால் நன்கு ஒழுங்காக தலை வாரிப் பின்னிக் கொண்டு நீளமாக முல்லை சரம் ஒன்று வைத்துக் கொண்டு ஜிமிக்கி ஆரம் முதலிய நகைகளை அணிந்து இருந்ததால், நல்ல அழகாக இருந்தாள்!
தாயும் மகளும் அழகு தேவதைகளாக கல்யாண வீட்டில் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்!
“எங்களுக்கு ஆள் பலம் ரொம்ப கம்மி. எடுத்து செய்ய ஆள் இல்ல. நான் பணம் எவ்வளவோ சொல்லுங்க கொடுத்துடறேன். நீங்க தான் எல்லாம் எடுத்து செய்யணும்” என்று சூர்யாவின் அப்பா ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார்.
நாம தான் எடுத்து செய்யணும்னா, அப்போ எல்லாமே என் அம்மா தலையில் இல்ல விழும் என்று பயந்து போனாள் மதுரா.
ஆனா நாம சொன்னா நீ சின்னப் பிள்ளை உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்களே என்றும் பயந்தாள். என்றாலும் துணிந்து பெரியவர்கள் இருந்த அந்த சபையில் வைத்தே உரக்க சொல்லி விட்டாள்.
“அப்ப.. சதீஸ் சித்தப்பா, நாம எல்லாத்தையும் காண்ட்ராக்ட்ல விட்டுடலாம்.
சுகுமார் சார் கல்யாணத்தில் பண்ணினாங்களே அது மாதிரி!” என்று எடுத்துக் கொடுக்க,
“அதுவும் சரி தான்! அவங்க நல்லா பண்ணிக் கொடுத்தாங்க. அவங்களே பேசி ஓகே பண்ணிடுவோம்” என்று சொல்லி விட்டான் சதீஷும்!
அதனால் தப்பித்தாள் வானதி!
இல்லையென்றால் இன்றைக்கும் ஏனோ தானோ வென்று தான் இருந்திருப்பாள்!
கல்யாணத்துக்கு வந்த உறவினர்கள் சிலர்,
“என்ன இருந்தாலும் வானதி தான் நல்ல லட்சணம். சதீஸ் பொண்டாட்டி கூட நல்ல நிறமா இருக்காளே தவிர முகம் வானதி அளவு லட்சணம் இல்லை” என்று பேசிக் கொண்டது சூர்யாவின் காதுகளுக்கு எப்படியோ சென்று விட்டது!
ஏற்கனவே சூர்யாவுக்கு மதுரா மேல் ஒரு துவேஷம் பள்ளியில் வைத்தே!
இப்போது அது இன்னும் அதிகமாகியது இதனால்!
அவள் மணமகள் அறையில் இருந்து கொண்டு வேண்டுமென்றே மதுராவை அழைத்து அழைத்து ஏதாவது வேலை சொல்லிக் கொண்டே இருந்தாள்!
கடைசியில், “இங்க உக்கார சேர் ரெண்டு தான் இருக்கு. நீ போய் இன்னும் இரண்டு சேர் கொண்டு வந்து போடு” என்று மதுராவைப் பார்த்து சொல்ல, அருகில் இருந்த அவள் தோழி,
“அவ எப்படிடி தூக்கிட்டு வருவா. பாவாடை தடுக்கி விட்டுடும் இந்த மேடையில் அவள் சேரை தூக்கிக் கொண்டு வந்தால்!” என்று கேட்க, “அதெல்லாம் கொண்டு வரட்டும். பெரிய மகாராணியா அவ” என்றாள்.
கொஞ்ச நேரத்தில் கதவு தட்டப்பட்டது.
ஒரு சேரை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து மூச்சிரைத்தார் சூர்யாவின் அம்மா!
“நீ ஏன்மா இத தூக்கிட்டு வர? நான் அந்த மதுரா கிட்டல்ல சொல்லியிருந்தேன்?”
“அவ தான் என் கிட்ட சொல்லி எடுத்துட்டு போக சொன்னா!”
என்ன திமிர் பாரேன் அந்த குட்டிக்கு! நான் அவ கிட்ட சொன்னா, அவ என் அம்மாவை சேர் தூக்க வச்சுட்டா! அவளை உள்ளுக்குள் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள் அவள் மண மேடை ஏறும் வரை!
அந்த நெகட்டிவிட்டி தான் மதுராவை தாக்கியதோ!
ஹாஸ்பிட்டல் சென்றவர்கள் திரும்பி வந்தனர்.
“காயம் ரொம்ப ஆழமில்ல..ஆனா தழும்பு மட்டும் கொஞ்ச நாள் இருக்குமாம்.
டேய்.. இன்னிக்கு சொல்றது தான்! இனி எது விளையாடினாலும் இன்டோர் கேம் தான்! அப்படி உனக்கு விளையாடனும்னா கிரிக்கெட் விளையாடு அதுவும் இங்க இல்ல. தோப்புக்கு போய்!” என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு விட்டார் ஸ்ரீமதி.
—-
“இப்ப அடிக்கிறேன் பாருடா. ஃபாலோவை. சும்மா ஹீரோயினை துரத்திக் கிட்டு போற ஹீரோ மாதிரி ரெட் காயினை துரத்திக் கிட்டு போகுது பாரு” என்று சொல்லிக் கொண்டே அவன் வீட்டிலேயே நண்பர்களுடன் கேரம் ஆடிக் கொண்டிருந்தான் ரேவந்த்!
அவன் மடியில் லக்கி!
அவளை இடது கையால் பிடித்து வைத்துக் கொண்டே ஆடினான் அவன்!
“லக்கி பாப்பா உன் மடியில இருக்கிறதால தான் உனக்கு லக்! நீயே ஜெயிச்சுட்டு இருக்க” என்றான் நண்பன் ஒருவன்!
“ஆமா.. இவ என்னோட லக்கி ஏஞ்சல். இல்லடி பட்டு?” என்று சொல்லி அவள் நெற்றியில் முட்ட, அது “மாமா” என்று மழலையில் சொன்ன படியே அவன் கன்னத்தில் முத்தம் வைப்பது போல உதடு பதித்தது!
அப்போது தான் அவன் வீட்டின் உள்ளே நுழைந்தாள் மதுரா.
“இதோ வந்தாச்சுல்ல என்னோட ஹீரோயின்” வாய்க்குள் முனகினான் ரேவந்த்!
“என்ன?” என்று அருகிலிருந்தவன் கேட்க
“ஒண்ணுமில்லை” என்று சொல்லி விட்டு,
“என்ன ஆண்ட்டி ஓகே சொல்லிட்டாங்களா?’ என்றான் மதுராவைப் பார்த்து.
“ம்ம்.” என்று சொல்லி விட்டு ஸ்ரீமதியை தேடி உள்ளே சென்றாள் மதுரா.
ஸ்ரீமதி, தன் மகனால் தானே மதுராவுக்கு அடிப்பட்டது என்று நினைத்து அவளை சமாதானம் செய்ய எண்ணி, அன்று நைட் ஷோ சினிமாவுக்கு மதுராவை அழைத்து செல்ல திட்டமிட்டாள்.
காரணம் மதுரா வீட்டில் வானதியிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தததைக் கண்டிருந்தாள் அவள்.
“அம்மா..அம்மா.. ப்ளீஸ்மா ஜெயம் ரவி படம். எனக்கு பார்க்கணும்மா. ப்ளீஸ் கூட்டிட்டு போம்மா.
சதீஷ் சித்தப்பா கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. ஆனா இப்ப அவங்க சூர்யா சித்தியோட நேத்தே பார்த்தாச்சாம்”
“சும்மா இருடி இன்னிக்கு உன் பெரிய சித்தப்பா ஊர்க்கு கிளம்புறாங்க. அவங்களுக்கு கொடுத்து விட வேண்டிய பொருள் எல்லாம் பேக் பண்ணனும் வேலை இருக்கு!
இன்னொரு நாள் பார்க்கலாம்” என்று மறுத்து விட,
“இன்னொரு நாள் தானே! அப்படியே நீ வந்திட்டாலும்.. போம்மா” என்று அவள் அழுது கொண்டே சென்றது ஸ்ரீமதியின் பார்வையில் பட, அப்புறம் தான் இந்த பிளானே!
அம்மாவிடம் உத்தரவு கேட்டு வர சென்றவளிடம் இருந்து லக்கியை வாங்கி, தன் மடியில் வைத்துக் கொண்டு தான் ரேவந்த் கேரம் விளையாடினான்.
“அத்தை.. அம்மா சரின்னு சொல்லிட்டாங்க.” என்று உற்சாகமாய் அவள் சொல்லுவதைக் கேட்டுக் கொண்டு ஸ்ரீமதி அவள் அண்ணனுக்கு போன் செய்தது டிக்கெட் வாங்கி வைக்க சொன்னாள்.
முதன்முறையாக நைட் ஷோ!
அதுவும் திருச்சிக்கு காரில் சென்று!
எல்லாவற்றையும் விட அவள் ஊட்டியுடன் போகிறாள்!
நினைக்க நினைக்க இனித்தது மதுராவுக்கு!
இனியா வேண்டாம் தூங்கிடுவா. ஸ்வீட்டிய மட்டும் கூட்டிட்டு போங்க என்று சொல்லி விட்டாள் வானதி.
காரில் முன் பக்க இருக்கையில் டிரைவர் அருகில் உட்கார்ந்து கொண்டு ரேவந்த் வர, பின்னால் ஸ்ரீமதியும் மதுராவும்!
போகும் போது தற்போது அவள் படித்துக் கொண்டிருக்கும் அந்த கிறிஸ்துவ பள்ளியைக் காட்டினாள் மதுரா.
சதீஸ் தான் பிடிவாதமாய் அங்கு சேர்த்து இருந்தான்.
“அவளை கொஞ்சம் வெளியே விடுங்க.
இப்படியே குண்டான் சட்டியில குதிரை ஓட்டிட்டு இருக்க கூடாது அவ. போகட்டும். ட்ரைன் தான் இருக்குல்ல.
போயிட்டு வரட்டும்!” என்று தீர்க்கமாய் சொல்லி சேர்த்து விட்டான்.
இப்படியே லெப்ட்ல கொஞ்சம் போனால் என் ஸ்கூல் வரும்! என்றாள்
“தெரியும்டா.. நானும் அங்க தானே படிச்சேன்”.
“ஓ..அப்படியா?” என்றவள்,
“அப்ப இந்த டீச்சரை தெரியுமா? அந்த டீச்சரை தெரியுமா?” என்று பலவாறு உற்சாகமாய் பேசிக் கொண்டு வந்தாள் அவள்!
எல்லோர் கிட்டயும் நல்லா பேசுறா.. நம்மள கண்டா மட்டும் மியூட்டுக்கு போய்டுறா! என்று அவளையே ஆசையாய் பார்த்துக் கொண்டு வந்தான் ரேவந்த்!
சினிமா இன்டர்வெல்லில் அவன் அவளையும் அழைத்து சென்று பாப்கார்ன் ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தான்.
அப்போது அவனிடமிருந்து அந்த டிக்கெட்களை கேட்டு வாங்கி கொண்டவள், அதை வீட்டில் கொண்டு போய் பத்திரப்படுத்தினாள் ஒரு பர்சில் வைத்து!
வீடு திரும்பும் போது ஸ்ரீமதி தோளில் சாய்ந்தபடியே அவள் தூங்கியிருக்க, ரேவந்த்தை போய் அவள் அப்பாவை அழைத்து வர சொல்லி அருள் வந்து அவளைத் தூக்கிக் கொண்டு சென்றான்.
ச்சே.. அவன் பார்க்க நாம தூங்கி இருக்கோமே! தூங்கும் போது எப்படி என்ன மாதிரி இருந்திருப்போம்?
வாயை பொளந்துட்டு அசிங்கமா தூங்கியிருந்தா! அச்சோ என்று அவளுள் கொஞ்சம் நாணம்!
அவன் என்ன நினச்சுருப்பான் என்னப் பத்தி!
ஒரு வேளை கிண்டல் பண்ணுவானோ? என்று பலவாறெல்லாம் எண்ணி எண்ணி குழம்பிக் கொண்டிருந்தாள் அவள்!
அந்த வருடம் வழக்கத்தை விட கொஞ்சம் சீக்கிரமாக சென்னை போய் விட்டான் ரேவந்த் அவன் தாயுடனே!
அங்கே அவன் தங்கை ரேஷ்மாவுக்கு உடம்பு சரியில்லை.
உடனே வா என்று ஸ்ரீமதியை அழைத்து விட்டார் ரேவந்த்தின் அப்பாயி சுபத்ரா!
கூடவே ரேவந்த்தையும் அழைத்து சென்று விட்டாள் ஸ்ரீமதி!
மதுராவுக்கு கொஞ்சம் ஏமாற்றம்! இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும்! அவளுக்கு மலைப்பாக கவலையாக இருந்தது!
ஆனால் அந்த கவலை எல்லாவற்றையும் மறக்க அடித்தாள் சித்தி சூர்யா!
வீட்டில் அடுத்தடுத்து சின்னதும் பெரியதுமாய் பிரச்சினைகள் அவளால்.
சதீஷ் அவளை இங்கயே விட்டு விட்டு அவன் மட்டும் வார இறுதியில் வந்து போய்க் கொண்டிருந்தான்.
விரைவில் சென்னைக்கு வேறு வேலைக்கு மாற இருந்தான்.
ஒரு வழியாக அங்கு சென்று செட்டில் ஆன பின்னே ஒரேடியாக அவளை அழைத்து செல்லலாம் என்று நினைத்தே விட்டு இருந்தான்.
ஆனால் வந்த மகராசியோ தினம் ஒரு ஏழரையைக் கூட்டிக் கொண்டிருந்தாள்.
சரியான அழுக்கு மூட்டை அவள்!
ரொம்பவும் சுத்தம் பார்க்கும் மதுராம்பாளுக்கு இப்படி ஒரு மருமகள்!
ஒரு வேலையும் சுத்தமாக செய்ய தெரியவில்லை அவளுக்கு.
அவள் வீடு பெருக்கினால், மீண்டும் ஒரு முறை வானதி பெருக்க வேண்டியிருந்தது!
பத்திரம் கழுவினாலும் அதேகதி தான்! சோப்பு திட்டு திட்டாக அங்கங்கே இருக்கும்!
இது எதுக்கு? ஒரு வேலைக்கு ரெண்டு வேலை!
தண்ணிக்கு பிடிச்ச தண்டம்! என்று நினைத்து வானதியே பெரும்பாலும் தடுத்து விடுவாள்!
தலையை சீவி பின்னிக் கொண்டு, சீப்பில் முடியோடு வைத்து விட்டு போய் விடுவாள்.
களைந்த துணிகளையும் துவைத்த துணிகளையும் ஒன்றாக போட்டு விடுவாள்.
எச்சில் கையால் நெய் உப்பு , ஊறுகாய் போன்றவற்றை எடுத்து மதுராம்பாளின் முறைப்புக்கு ஆளாவாள்!
வெள்ளிக் கிழமை அன்று நடு வீட்டில் உட்கார்ந்து நகம் வெட்டுவாள்!
எரிச்சலாக வந்தது மதுராவிற்கும்!
இனியா கூட செய்யாது இந்த மாதிரி எல்லாம்!
காலையில் எட்டு மணி வரை ரூமை விட்டு வெளியே வரவே மாட்டாள்.
வானதியே எப்போதும் போல, இல்லை இப்போது மதுராவிற்கு ட்ரைன் ஏழரை மணிக்கு என்பதால் இன்னும் சீக்கிரமே எழுந்து தினப்படி வாசல் பெருக்கி கோலமிட்டு,
மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து விட்டு வேகம் வேகமாக குளித்து விட்டு வந்து புடவை மாற்ற கூட நேரமில்லாமல் நெஞ்சு வரை கட்டிய பாவாடை சகிதமே குக்கர் வைத்து விட்டு அதன் பின் வந்து தான் புடவையே கட்டுவாள்.
அவ்வளவு பரபரப்பாக இருக்கும் அடுப்படி அந்த நேரம்.
ஒரு ஆறு மணிக்காவது எழுந்து வரலாம் அந்த சூர்யா!
ஆனால் வர மாட்டாள்.
“அவங்க பொண்ணுக்கு ட்ரைன் பிடிக்கணும்.
அவளுக்கு லஞ்ச் செய்யணும். அதனால சீக்கிரம் எழுந்துக்கிறாங்க நான் எதுக்கு எழுந்துக்கணும்” என்பாள் சதீஸ் கேட்டால்!
அவளிடம் வாயைக் கொடுத்து தன் நாளை கெட்டதாக்கி கொள்ள வேண்டாம் என்று நினைத்து ஒன்றும் சொல்ல மாட்டான் அவனும்!
எல்லா வேலையும் முடிந்த பின் தான் வெளியே வருவாள் சூர்யா.
“எனக்கு எழுந்தவுடன் காபி குடிக்கணும்!
இல்லன்னா அன்னிக்கு பூராவும் தலை வலி வந்திடும்.
சீக்கிரமே வந்தா, நீங்க மூணு அடுப்பையும் பிடிச்சு வச்சுருக்கீங்க.
சரி உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு தான் நான் வெயிட் பண்றேன்” என்பாள் வானதி எதுவும் கேக்காமலே! ஏதோ தியாகி போல!
ஒரு நாளைப் போல மூன்று வித சமையல் செய்ய வேண்டியிருந்தது வானதிக்கு.
காலையில் மதுரா இனியாவுக்கு என்று குக்கரில் சாதம் வைத்து லஞ்ச் கட்டிக் கொடுப்பவள், மதுராம்பாள் உள்ளிட்ட பெரியவர்களுக்கு வடி சாதம், அப்புறம் மாலையில் சுவாமிக்கு தனியே பிரசாதம் என்று இப்போதும் வேலை அதிகம் அவளுக்கு.
காலை வேலையை எளிதாக்க தக்காளி தொக்கு, புளிக்காய்ச்சல் போட்டு வைத்துக் கொள்ள துவங்கியிருந்தாள் வானதி.
சூர்யா வேண்டுமன்றே அதை தான் வழித்து வைத்துக் கொண்டு சாப்பிடுவாள் மற்றவற்றை விட்டு விட்டு!
அதுவும் தேவைக்கு அதிகமாக வைத்து வீணடிக்கவும் வேறு செய்வாள்.
யாரும் எதுவும் கேட்டு விட்டால், சாப்பிடற விஷயத்துக்கு கூட கணக்கு பார்க்கிறாங்க என்று சொல்லி விடுவாள்.
இதை கவனித்த சதீஸ் அவன் ஊரில் இருந்து வரும் போதே டவுனில் இருந்து ஹோம்மேட் புட்ஸ் விற்கும் கடைகளில் இருந்து வாங்கி வந்து போட்டான்.
ஒரு தரம் மட்டுமே அது வெளியே வந்தது.
மற்ற சமயம் எல்லாம் தன் ரூமில் வைத்து சாப்பிட்டாள் அந்த சூர்யா!
அதே மாதிரி தலைக்கு குளிக்க செம்பருத்தியுடன் வேறு சில மூலிகைகள் எடுத்து வந்து காய வைத்து பக்குவப்படுத்தி
டவுனில் கொண்டு போய் அதற்கு என்று இருக்கும் மெஷினில் அரைத்து வாங்கி வந்திருக்கும் சீயக்காய் பொடியையும்
அப்படியே பெரிய கிண்ணம் நிறைய எடுத்துப் போய் விட்டு மீதியை அப்படியே பாத்ரூமில் கரைய விட்டுவிட்டு வருவாள்.
வானதிக்கு கண்ணில் தண்ணீரே வந்து விடும், அவள் பார்த்து பார்த்து அரைத்து வைத்திருக்கும் பொடியை அவள் வீணாக்கும் போது.
பொறுக்க முடியாமல் ஒரு நாள், தேவைக்கு எடுத்துட்டு போ சூர்யா. வேஸ்ட் ஆக்காதே என்று ஒரு வார்த்தை சொன்னதுக்கு, உங்க அண்ணிக்கு என் முடிமேல பொறாமை!
அதான் தேவையில்லாம சண்டை போடுறாங்க என்று சொல்லி விட்டாள் சதீஷிடம்!
இது எல்லாம் மதுராம்பாளுக்கும் புரிய தான் செய்தது.
ஆனால் அவர் ஒன்றும் பேச முடியவில்லை.
எங்கே சதீஷ், செந்திலைப் போல அவன் விருப்பத்துக்கு கல்யாணம் பண்ணிக் கொள்வானோ என்று பயந்து போய் தான், தான் பார்த்த பெண்ணான சூர்யாவிற்கு அளவுக்கு அதிகமாய் மார்கெட்டிங் பார்த்தே கட்டி வைத்திருந்தார் அவர்.
அவரே இப்போது எப்படி குறை சொல்வார் மகனிடம்!
சொன்னாலும், நீ தானே பார்த்து வச்சே! அப்ப அனுபவி என்றே சொல்லி விடுவான் சதீஷ்!
அதனால் இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருந்து கொண்டு விட்டார்.
ஆனால் வானதியின் பாடு தான் திண்டாட்டம்!
அவர்கள் வீட்டில் அப்போது இரு கறவை மாடுகள் இருந்தன. வீட்டுத் தேவைக்கு போக மீதியை பால் கறக்க வரும் பால்காரர் எடுத்துக் கொண்டு மாதாமாதம் பணமாக கொடுத்து விடுவார்.
அதில் திருச்சியில் இருக்கும் ஒரு நகைக்கடையில் நகை சீட்டு சேர்ந்திருக்கிறாள் வானதி!
மூன்றும் பெண்கள் என்று ஆகி விட்ட பயத்தில் சேமிக்க தொடங்கி இருந்தாள்.
அந்த பால்காரர் பால் வியாபாரம் மட்டுமில்லாது பந்தல் காண்ட்ராக்ட் மற்றும் தண்ணீர் கேன் ஏஜென்சியும் எடுத்து இருந்தார்.
சூர்யா கல்யாணம் ஆனவுடனே சொல்லி விட்டாள்.
“எனக்கு கேன் தண்ணீ தான் சேரும். கார்பரேசன் தண்ணீர் குடித்தால் சேராது” என்றும் சொல்லி பால்காரரே அவர்கள் வீட்டுக்கு தண்ணீர் கேனும் போட தொடங்கியிருந்தார்!
இப்படி எல்லாம் இருந்தாலும் அவளை ஒன்றும் சொல்வதில்லை மதுராம்பாள்.
அவர் அதட்டல் எல்லாம் வானதியிடமும் அருளிடமும் தான்.
சதீஷ் கோபித்துக் கொள்ள போகிறான் என்று அவள் செய்வதை எல்லாம் பொறுத்துக் கொண்டார்.
ஆனால் பொறுக்க வில்லை தன் அம்மாவை பேசும் போது!
“ஏம்மா.. நீ ஒருத்தி தானே குடிக்கிற? அதுக்கு இத்தனை கேன் வேணுமா” என்றாள் வானதி பால்காரர் கொடுத்து இருந்த பணம் குறைவதை எண்ணி!
“அம்மா.. சித்தி தலைக்குளிக்க கேன் வாட்டர் தான் எடுத்துட்டு போறாங்க” என்று சின்ன வாண்டு இனியா போட்டு விட, முதலில் கொஞ்சம் பயந்தவள்,
“அதான் பால் கணக்கில் கழுச்சிகிறாங்களே! இப்ப என்ன அதுக்கு? மாடுங்க இந்த வீட்டோட போது சொத்து தானே” எனக்கு உரிமை இல்லையா?” என்று வானதியுடன் சண்டையிட்டாள்.
“ஏன் நீங்க மட்டுமே தான் அதை செலவு செய்யணுமா? நான் செஞ்சால் ஆகாததா? நான் என்ன நகை சீட்டா கட்டிட்டு இருக்கேன்!” என்று வீட்டில் ஒரே சண்டை!
வழக்கமாக கோபப்படும் ஸ்வீட்டி பேசாமல் இருக்க கண்டாவது சுதாரிச்சு இருக்கணும் அந்த சூர்யா.
மறுநாள் விடிந்தது. அன்று ஞாயிறு கிழமை!
வானதியை படுக்கையை விட்டு எழவே விடவில்லை மதுரா.
“நீ சும்மா இரு”. அழுத்தி படுக்க வைத்தாள்.
“ஏண்டி இன்னும் வாச தெளிக்கல. பட்டியை சுத்தம் செய்யல. இன்னும் என்ன தூக்கம் உனக்கு?’ என்று மதுராம்பாள் எழுந்து வந்து கத்தியவாறு,
வானதி என்று அழைக்க, “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அதான் படுத்து இருக்காங்க”.
“என்ன படுத்து இருக்காளா?“
“அப்ப வேலையெல்லாம் யாரு செய்றது?”
“ஏன் என் அம்மா மட்டும் தான் இந்த வீட்டு மருமகள்? எல்லாம் பொது சொத்து தானே! அப்ப எல்லோருக்கும் உரிமை உண்டு!
வேற யாரையாவது செய்ய சொல்லுங்க!”
“வேற யாருடி செய்வா?”
“ஏன் உன் சின்ன மருமக இருக்காங்கல்ல.
செய்ய சொல்லு” என்று சொல்லி விட்டு மீண்டும் போர்வையை தலைக்கு மேல் போர்த்திக் கொண்டு மறுபடியும்!
அன்று ஒரு போர்க்களமே வெடித்தது அந்த வீட்டில்!
error: Content is protected !!