Skip to content
Post Views: 5,009
நீரதி கருவுற்ற செய்தி அறிந்ததில் இருந்தே ஆழியன் பூரித்த முகத்துடனேயே வலம் வந்தான்.
நீரதிக்குமே அத்தனை நிம்மதி. பின்னே தனக்கு பின் திருமணம் ஆன தரங்கினி இரண்டாவது பிள்ளை பெற்றிருக்க மாமியாரோ சில நேரங்களில் குத்தலாக கேட்டதெல்லாம் மனதை அலைகழித்திருந்ததே. இரண்டாம் பிள்ளை வந்தால் நன்றாக இருக்கும் என்று நிறைய நேரங்களில் நினைத்தாலும் தனக்கும் ஆழியனுக்குமான நெருக்கத்தில் அது சாத்தியமா என்றே எண்ணி இருக்கிறாள். கடமைக்கென்ற ஒரு கூடலில் எங்கிருந்து பிள்ளை வரம் கிடைக்கும். ஆழியன் எப்படியோ நீரதிக்கோ எப்போதும் கடமைக்கான கூடல் தான். அசந்து உறங்குகையில் அல்லது சோர்வின் பிடியில் இருக்கையில் சேர்வதா இதம் அளிக்கும். எரிச்சலை தான் உண்டாக்கும். இரு யாக்கைகள் மட்டும் இணைப்பது அல்லவே தாம்பத்தியம். இருமனமும் ஒத்திசைத்தால் உருவாகும் அழகிய பந்தம் அல்லவா அது. இப்படியே சென்றால் இரண்டாவது பிள்ளை என்று ஒன்று வரும் என்ற நம்பிக்கையே அற்றுப் போயிருந்தது அவளுக்கு. ஆனாலும் எங்கோ ஒரு ஓரத்தில் கிடைத்த கருணையில் மீண்டும் வாய்த்தது அவளுக்கான தாய்மை.
Advertisement
இனி வேலை வேலை என்று உடலை போட்டு வாட்டக் கூடாது ஓய்வும் எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் போன முறை போல இல்லாமல் இந்த தடவை வாந்தி மயக்கம் எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். எந்த மனச் சுணக்கத்தையும் மூளையில் ஏற்றக் கூடாது என்றெல்லாம் தனக்குள்ளேயே உருபோட்டுக் கொண்டாள்.
ஆழியன் சிரிப்புடனேயே இருந்தான்.
Advertisement
Advertisement
“வருக்குட்டி”என்று மகளை அணைத்து முத்தமிட்டவன் “இங்கே உட்காரு அப்பா உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல போறேன்”என்றான் கிசுகிசுப்பாக.
“ஏங்க”என்ற நீரதியிடம்”அப்புறம் பாப்பாக்கு சொல்லணும் ல”என்றவன் “எப்படி ரதி சொல்ல”என்றான் தயக்கத்துடன்.
Advertisement
“எனக்கும் தெரியலையே”என்று உதடு பிதுக்கியவளை சிரிப்புடன் முறைத்தவன் தானே மகளிடம் பேசத் துவங்கினான்.
“அம்முக்குட்டி அது வந்து”எனும் போதே ஸ்வர்ணிகா “எனக்கும் தம்பி பாப்பா வரப் போறான் தானே டாடி. நம்ம வருணேஷ் மாதிரி”என்று அவளே தன் தந்தையின் தயக்கத்தை உடைத்தாள்.
“உனக்கு யாருடா சொன்னா”என்று வியப்பாக அவன் வினவ
“பவி சித்தி சொன்னாங்க. நான் தான் குட்டி பேபி பார்த்துக்கணுமாம் நான் அப்போ தான் குட் கேர்ளாம். தம்பிக்கு ஸ்டோரீ சொல்லணும் அப்புறம் தம்பிக்கு படிக்க எழுத சொல்லி தருவேன் அப்புறம்”என்று அடுக்கிக் கொண்டே போனாள் ஸ்வர்ணிகா.
ஆழியன் நீரதிக்கு பெரும் நிம்மதி அதில். மகளிடம் நீண்டதொரு விளக்கம் இனி தர வேண்டாம். அவளே புரிந்து கொண்டு விட்டாள்.
“உங்களுக்கு தெரியுமா டாடி பெரியப்பா சனாவை பாட்டி கூட தூங்க வைக்க போறாங்களாம் பாட்டி கதை சொல்வாங்களாம் சொன்னாங்க நானும் அங்கே போகட்டா.”என்று கேட்டவள் “ப்ராமிஸ் ம்மா நான் காலையில் சீக்கிரம் எழுந்துப்பேன்”என்றாள் அம்மாவிடம் உத்தரவாதமாக.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே “ஓகே போய் தூங்கு பட் ரெஸ்ட் ரூம் நீயா தான் போகணும் பாட்டியை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது”என்றாள் நீரதி.
“டன் ம்மா”என்று சிரித்த ஸ்வர்ணிகா தன் தலையணையுடன் பொன்னி அறைக்குச் சென்றாள்.
மகள் சென்றதும் கதவை சாத்தி விட்டு வந்தவன்”ரதி”என்று அழைத்திட நீரதி எதற்கு அழைக்கிறான் என்று யோசித்தபடியே அவனைப் பார்த்தாள்.
“உன் வீட்டில் சொல்லணும் தானே. எப்போ பேசலாம்”என்று கேட்க
“நாளைக்கு பேசறேன்”என்றவள் படுத்து விட ஆழியனே அவளைத் தேடி அருகில் வந்து படுத்துக் கொண்டான் அதிசயமாக.
“என்ன”என்று திரும்ப முயன்றவளைத் தடுத்து “வேண்டாம் இப்படியே.. ஹ்ம்ம் ரதி”என்றவனுக்கு உணர்வை வெளிப்படுத்த கூட மறந்து போயிருந்ததோ…
இருவரும் தங்கள் உலகில் சஞ்சரித்து இருக்க வெளியே நிலா ஒரு பஞ்சாயத்தே நடத்திக் கொண்டிருந்தாள்.
“ஏன் மா நான் தீபுவை பேர் சொல்லி கூப்பிட்டா அவங்களுக்கு என்ன… எனக்கும் பவிக்கும் என்ன பத்து வயசா வித்தியாசம் நாலு மாசம் தானே அதுக்கே அண்ணினு கூப்பிடணுமா… நீங்களும் அதைக் கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க”என்று வளர்மதியிடம் எகிறிக் கொண்டிருந்தாள்.
“இப்போ அதனால என்ன நிலா. தருவை அண்ணினு தானே சொல்ற அது மாதிரி சொல்லிட்டு போ”என்றார் வளர்மதி.
“அவங்களும் இவளும் ஒண்ணா?”என்று முறைக்க
“நிலா!!”என்று அதட்டிய தேசிகன் “தீபன் உறவு இதே மாதிரி கடைசி வரைக்கும் வேணும்னா அண்ணினு சொல்லி தான் ஆகணும் அவன் எங்க கிட்டயே நிலாவை கண்டிச்சு வைங்கனு சொல்லிட்டு போனான்.எங்களுக்கு அப்புறம் அவங்க தான் உனக்கு செய்யணும் நிலா. ” என்றார் அழுத்தமாக.
மகள் பொன்னியோடு உறங்கி விட்டாளா என்று பார்க்க வந்த ஆழியனின் செவிகளில் தேசிகன் கூறியது அட்சர சுத்தமாக விழுந்தது.
பேசிடும் வார்த்தைகளை விட பேசாத மௌனங்களுக்கு வலிமை அதிகம் அழுத்தமும் அதிகம். ஆழியனின் மௌனத்தின் வலிமை ???
***********
விருந்தாடல்கள் திருமண பரபரப்புகள் எல்லாம் முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர் தேசிகன் குடும்பத்தினர்.
பவ்யா தனக்கு தெரிந்த வகையில் நீரதிக்கு சமையலறையில் உதவிட நீரதிக்கு பாதி சுமை குறைந்தது போல் இருந்தது.
“அக்கா இப்போ புளிப்பா சாப்பிட புடிக்குமாமே உங்களுக்கு ஏதாவது வேணுமா சொல்லுங்க”ஆவலாய் வினவினாள் பவ்யா.
“புடிக்கும் தான் ஆனா அதை விட”என்று பவ்யாவின் காதில் ஏதோ கூற
“நிஜமாவா க்கா அதுவா வேணும்”என்று அசூசையாக கேட்டாலும் அதில் ஒரு வியப்பு இருந்தது பவ்யாவுக்கு.
“ஆமாம் ஆனா அது சாப்பிட கூடாது.பட் ரொம்ப க்ரேவிங்ஸா இருக்கு பவி”என்றதும் “இருங்க வர்றேன்”என்றவள் அவள் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
நீரதிக்கு விழிகள் விரிய பவ்யாவிடம் இருந்து வேகமாய் வாங்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடியே அதை ரசித்து உண்ண பவ்யாவிற்கு சிரிப்பு தாளவில்லை.
“எல்லாருக்கும் ஏதேதோ பிடிக்கும் உங்களுக்கு சாம்பல் பிடிச்சிருக்கு பாருங்க”என்றாள் சிரிப்புடன்.
“நல்லா இருக்கு பவி”சப்புக் கொட்டி உண்ண பவ்யாவின் சிரிப்பு சத்தம் வெளியே வரைக்கும் கேட்க தரங்கினியோ ஒரு நொடிப்புடன் நகர்ந்தாள்.
“என்னத்த தான் பேசி சிரிப்பாளுகளோ”என்று முணுமுணுக்க வளர்மதி கேள்வியாக அவளைப் பார்த்தார்.
“என்ன தரு புலம்பிட்டே வர்ற என்னவாம் “என்றதும்
“ரெண்டும் என்ன தான் சொல்லி சிரிக்குமோ எப்போ பார்த்தாலும் கெக்கே பிக்கேனு”என்று ஆற்றாமையாக பேச
“நீயும் தான் கூட சேர்ந்து பேசி சிரியேன்”என்றபடி வந்தான் அமுதன்.
“வேற வேலை இல்லை”என்று முணுமுணுத்தபடி போய்விட்டாள்.
“ஏன் டா அமுதா”என்று வளர் சலிக்க
“அட விடுங்க ம்மா”என்றவன் வேலைக்கு கிளம்ப நீரதி தேநீருடன் வந்தாள்.
“டீ மாமா”என்று நீட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டவன் “செல்வத்தை மில்லுக்கு போக சொல்லு மா நீரா. நான் மத்யானம் சரக்கு ஏத்திட்டு வந்திடுவேன்னு சொல்லிடு மா”என்றவன் தேநீரை அருந்தி விட்டு கிளம்பி இருந்தான். தரங்கினி வருவதற்குள் கிளம்பி இருக்க வேகமாய் வெளியே வந்தவள் “உங்க மகனுக்கு பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு போக கூட தெரியாதா”என்று வளர்மதியிடம் கடுப்பாய் பேசினாள்.
“விடு தரு வேலை இருந்திருக்கும் அவனுக்கு”என்று கூற
பவ்யாவோ சும்மாயிராமல்”அதுக்கு நீங்க மாமாக்கு டீ போட்டு தந்து வாசல் வரை அனுப்பி இருக்கணும் என்னத்தை?”என்று சொல்லி விட்டாள் பட்டென்று.
நீரதி அச்சோ என்று தரங்கினியை பார்க்க”எப்பவும் நான் தான் தருவேன் பவி. இன்னைக்கு உள்ள போனேன் அதுக்குள்ள கிளம்பிட்டாரு”என்று சமாளிக்க அவளோ அப்படியா என்று நம்பாத பார்வை பார்த்து நின்றாள்.
நீரதிக்கு நாட்கள் நன்றாக இலகுவாக செல்வது நிம்மதியாக இருந்தது. பவ்யா எல்லோரிடமும் இயல்பாய் பேசினாலும் அவர்கள் செயலுக்கு குட்டு வைத்தாற் போல பேசிவிடுகிறாள். நிலா இந்த முறை தான் வீட்டிற்கு வரவில்லை இல்லையேல் மாதம் ஒரு முறை வந்து பிறந்த வீட்டில் சீராடி விட்டு தான் செல்வாள். ஏனோ தீபன் அப்படி வெடுக்கென்று பேசியது அவள் மனதை உறுத்த வராமல் இருந்தாலாவது தன் வீட்டினர் பவ்யாவை ஏதேனும் சொல்லி தட்டி வைப்பர் என்று நினைக்க அது நடந்தேறாமலேயே போனது.
வளர்மதி தினமும் பேசினாலும் வீட்டில் நடப்பதைக் கூறி விட்டு அமைதியாக விடுகிறாரே தவிர வீட்டிற்கு ஏன் வரவில்லை என்று கேட்கவில்லை.
அன்று மனம் தாளாமல் “ஏன் மா நான் தீபு கல்யாணத்துக்கு வந்தது அதுக்கு அப்புறம் அங்கே வரவே இல்லையே ஏன்னு நீ கூட கேட்கலைல்ல”என்று ஆதங்கமாய் கூறிட
“என்னடா நிலாக்குட்டி இப்படி சொல்லிட்ட. உங்கப்பா தான் கொஞ்சம் பவி இங்கே செட் ஆகட்டும் அப்புறம் நிலா வரட்டும் னு சொல்லிட்டாரு நான் என்ன செய்ய சொல்லு. அந்த பொண்ணு எது பேசினாலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு னு பேசுறா வேற.”என்றவர் மெல்லிய குரலில் “அவ வீட்டுல நல்ல செல்வாக்கு நிலா. இவளுக்கு வர்ற பங்கே இருபது கோடி பெறுமாம். நம்ம தீபு எவ்வளவு அதிர்ஷ்டமானவன் பாரு. அவளால உங்க ட்டேன் செல்வாக்கு உயர்ந்தா யாருக்கு நல்லது நிலா. கொஞ்சம் விட்டுக் குடுத்து போ”என்றார்.
“ஏதோ சொல்றீங்க சரி நான் வைக்கிறேன் இந்த வாரத்தில் ஊருக்கு வர்றேன்”என்று இணைப்பைத் துண்டித்தாள் நிலா.
வளர்மதி சுற்றி முற்றி பார்த்து விட்டு “அப்பப்பா இவளுக்கு இருக்கிற பிடிவாதம்”என்று சலித்துக் கொண்டார்.
********
நாட்கள் நகர நீரதி தன் அண்ணன் வெளிநாட்டில் இருந்து வரவும் அவனோடு ஒரு வாரம் தங்கி விட்டு வந்திருந்தாள். பவ்யாவுமே தன் பிறந்த வீட்டிற்கு சென்று இருக்க தரங்கினி தானும் ஊருக்கு செல்கிறேன் என்று பிடிவாதமாக கிளம்பி இருந்தாள். பின்னே இங்கே இருந்தால் யார் சமையல் வேலை பார்க்க … இனி யாரோ சமைக்கட்டும் உண்ணட்டும் என்று கிளம்பி இருக்க தீபன் மாமனார் வீட்டில் தங்கி அங்கிருந்தே கடைக்கு வந்து கொண்டான்.
அமுதன் மரங்கள் வாங்க கோவை பக்கம் சென்று இருக்க பெரியவர்களும் ஆழியன் மட்டுமே வீட்டில் இருந்தனர். வளர்மதி சமைக்க முடியவில்லை என்று உப்புமாவையும் கஞ்சியையும் தான் கொடுத்தார் உணவாக.
“என்னம்மா இது உப்புமா கஞ்சின்னு”என்று சலித்தவன் “வேற ஏதாவது செய்ய கூடாதா”என்று கோபமாய் கேட்டு வைக்க
“ஏன் டா வயசானவ நான் என்னத்த செய்ய முடியும் உன் பொண்டாட்டி சொகுசா போய் நொண்ணன் வீட்டுல உட்கார்ந்து கிட்டா. புருஷன் எதை சாப்பிடுவான் நாம கிளம்புவோம்னு வந்திருக்கணும். எங்க இருந்து அவ வர்றது..? விட்டா போதும் னு சொகுசா இருக்கா இங்கே கஷ்டப்படறது நான் தானே”என்றார் சலிப்பாக.
உப்புமாவை தள்ளி வைத்தவன்”அவ போறதே வருஷத்துக்கு ஒரு தடவை தானே ம்மா அதுவும் ஒரு வாரம் தானே…. ஏன் தரு அண்ணியை கூப்பிட்டுக்க வேண்டியது தானே சனாவுக்கு லீவ் எடுத்து அப்படி ஊருக்கு போகணுமா அவங்க”என்று மனம் தாளாமல் கேட்டுவிட
“ம்ம்க்கும் இப்போ அவ வீட்டுக்காரனா விதவிதமா செஞ்சு போட சொல்லி கேட்டுட்டு இருக்கான். நீ தானே கேட்கிற. தீபுவும் சரி அமுதனும் சரி பொண்டாட்டி ஊருக்கு போனதும் அவங்க அவங்க சாப்பாட்டை பாத்துக்கல நீ தான் முடியாத காலத்தில்”எனும் போதே விருட்டென்று எழுந்தவன் “இனிமே கஷ்டப்படுத்தலை மா நீ பாரு. “என்று சொல்லி விட்டு போய் விட்டான்.
பொன்னி தான் மனது கேட்காமல் “செல்வம் ஒரு நாள் தானடா வந்து சாப்பிடு நாளைக்கு வேற ஏதாவது அவளை செய்ய சொல்றேன்”என்றார்.
“வேணாம் பாட்டி. பசி இல்லை”என்றவன் ” நான் இந்த வீட்டுபிள்ளையா இருக்கேன்னு நினைச்சேன் ஆனா நீரதி புருஷனா தான் இங்கே இருக்கேன் போல”என்று சொல்லி விட்டு அறைக்குள் புகுந்து கொண்டான்.
…… தொடரும்
error: Content is protected !!