Skip to content
Post Views: 1,983
“ஏங்க.. நம்ம ஸ்வீட்டி பெரிய மனுசியாகிட்டாங்க!” என்றாள் வானதி அவள் குரலில் ஒரு வித பயம், திடீரென்று உள்ளுக்குள் அழுத்திய புதியதொரு பொறுப்புணர்ச்சி, ஏதோ வயதாகி விட்ட உணர்வு, கூடவே சந்தோசமும் கூட!
வயலில் இருந்து அப்போது தான் வீடு திரும்பிய அருள் முகத்திலும் அதே மாதிரியான உணர்வு!
நடக்கும் என்று அறிந்தது தான் என்றாலும் அந்த தருணம் அருளுக்குள் இந்த பாடல் வரிகள் தாம் நினைவிற்கு வந்தது!
“பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
Advertisement
ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்”
என்ற அபியும் நானும் திரைப்பட பாடல் தான் அவன் நினைவில் தோன்றி கலவரப்படுத்தியது! கூடவே சந்தோசமும் தான்!
மதுராம்பாள் தான் சந்தோஷ மிகுதியில் சின்ன பெண் போல வீட்டுக்குள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
Advertisement
“டேய். அருளு.. செந்திலுக்கு போனைப் போடு. சதீஷ் எப்ப வர்றான்னு கேளு. மணிக்கு ஆள் அனுப்பி இருக்கேன். வந்திடுவா. நல்லவேளையா அவள் ஊரில் இருக்கும் போது இவ சமைஞ்சுருக்கா. இல்லன்னா மணி ஒத்தாசையும் நமக்கு கிடைக்காது”.
Advertisement
அடுத்த தெருவில் இருந்த அய்யரிடம் போய் பஞ்சாங்கம் பார்த்து, ருது ஜாதகம் குறித்துக் கொண்டு வந்தார்.
அவரின் அந்த பாக்கெட் டயரியில் இருந்த போன் நம்பர்களைப் பார்த்து பார்த்து, அவரே தன் பட்டன் போனில் இருந்து அழைத்து சொந்தக்காரர்களுக்கு தகவல் சொன்னார்.
செந்தில், தனக்கு இப்போது லீவ் எடுக்க முடியாது. பொங்கலுக்கு வரும் போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டான்.
Advertisement
அதே போல சதீஷையும் அந்த வார இறுதியில் வருகிறேன் என்று சொல்ல வைத்தாள் சூர்யா.
சூர்யா, வானதி அண்ணிக்கு வேலையில் உதவவில்லை என்றாலும் கூட உபத்திரவமாவது செய்யாமல் இருக்கட்டும் என்று நினைத்தே அவளை தன்னோடு சென்னைக்கு அழைத்து சென்று விட்டான் அவன்!
சென்னையில் தனிக்குடித்தனம்!
இப்போது ஊருக்குப் போனால், இந்த கிழவி ஊரில் இருப்பவர்களை எல்லாம் அழைத்து இருக்கும் இந்நேரம்!
வர்றவங்களுக்கு காபி போட்டுக் கொடுத்து மாளாது.
இதுல சில பேரை வீட்டில் வேறு தங்க வச்சுடும்.
இப்ப தான் ஏகாதசிக்கு ஒரு கும்பல் வந்துட்டு போய் இருக்கும்!
அதுக்குள்ள அடுத்து இப்போ இதுக்கு!
வந்தவங்களுக்கு எல்லாம் வடிச்சுக் கொட்ட தான் அந்த வானதி இருக்காளே! இப்ப நாம போனா, நமக்கும் வேலை இருக்கும்.
முதல்ல பார்க்க வந்தவங்க எல்லாம் பார்த்துட்டு போகட்டும். நாம அப்புறமா போய்க்கலாம் என்றே திட்டம்!
அவள் கணித்தது போல தான் இருந்தது வீடும்!
எதுக்கு, இந்த அப்பாயி ஊரைக் கூட்டி அமர்க்களப்படுத்தி, அம்மாவுக்கு இன்னும் வேலைய வைக்குது! என்ற கடுப்பில் தான் ஹாலின் ஒரு ஓரமாக உட்கார்ந்தபடி மனதுக்குள் திட்டிக் கொண்டிருந்தாள் மதுரா.
அவளுக்கு எதிரில் ஒரு மர உலக்கை போடப்பட்டு இருந்தது!
தலைக்கு வைத்துக் கொள்ள ஒரு சிறிய மனைப்பலகை!
அவள் பூப்படைந்த மறுநாள் மாலை ஸ்ரீமதி அவளைப் பார்க்க வந்திருந்தாள்! கூடவே ரேவந்தும் தான்!
அவனை நிமர்ந்து கூட பார்க்க வில்லை மதுரா!
ஒரே வெட்கம்!
ஸ்ரீமதி, அவளிடம் ஸ்வீட் பாக்ஸ், பூ பொட்டலத்தை கொடுத்தவள், கூடவே ஒரு பாவாடை தாவணி செட் ஒன்றையும் அவள் அம்மாவிடம் கொடுத்தாள்.
“பிரிச்சு காட்டுங்க அண்ணி. ஸாரி என்னால டவுனுக்கு போக முடியல. ரேவந்த் தான் அவனே போய் அவனுக்கு தெரிந்த அளவு வாங்கி வந்திருக்கிறான். கலர் பிடிச்சுருக்கா பாரு ஸ்வீட்டி!”
நிமிர்ந்து ஒரு முறை கொஞ்சம் தள்ளி ஒரு சேரில் அமர்ந்திருந்த ரேவந்த்தின் முகத்தைப் பார்த்தவள் மீண்டும் வெட்கத்தோடு தலையை வேகமாக திருப்பிக் கொண்டு அவன் வாங்கி வந்திருந்த உடையைப் பார்த்தாள்!
மயில் கழுத்துக் கலர் பட்டுப்பாவாடை! அவளுக்குப் பிடித்த கலர்!
“நல்லா இருக்கு” என்றாள் மெல்லிய குரலில்!
ஸ்ரீமதி வந்து போன பிறகு, எவர் வந்தாலும் அவளுக்கு பிடிக்க வில்லை!
முக்கியமாக சூர்யாவின் அம்மா!
“தனியா எங்கயும் வெளியே போக கூடாது பாப்பா. அப்படி பாப்பா.. இப்படி பாப்பா..” என்று ஒரே அட்வைஸ் மழை!
“நாங்க எல்லாம் எங்க சூர்யாவை அப்படி நல்லபடியா வளர்த்ததால தான் அவ இன்னிக்கு நல்ல பொண்ணா இருக்கா! அவளை உங்க அப்பாயி தேடி வந்து பொண்ணு கேட்டாங்க!” என்று சுய தம்பட்டம் வேறு!
இவர் இப்படி என்றால், மற்றவர்கள் எல்லாம் ஒரு கால் கிலோ ஸ்வீட் வாங்கி கொண்டு வந்து பார்த்து விட்டு டன் கணக்கில் அருளுக்கும் வானதிக்கும் பயத்தை கலவரத்தை ஏற்படுத்தி சென்றார்கள்!
“அப்பா.. அருளு.. சூதானமா பொழைச்சுக்கோ. இப்ப ஒருத்தி தான் பெரிய மனுசியாகி இருக்கா. ஆனா டக் டக்குனு அடுத்தடுத்து மத்த பிள்ளைங்களும் பெரிய மனுசியாகி கல்யாணத்துக்கு வரிசைக் கட்டி நின்னுடுங்க” என்று பேசி பேசி கலவரப்படுத்தி விட்டு போனார்கள்!
மூன்று பெண்களும் முப்பெருந்தேவியர் என்று அதுவரை பெருமையாகவே சொல்லிக் கொண்டிருந்த அருளுக்குள் பயம் தோன்ற ஆரம்பித்து இருந்தது!
மதுராம்பாளின் பயம் கூட சரி தானோ என்று கூட ஒரு முறை தோன்றியது!
ச்சே.. என் பொண்ணுங்க எப்பவும் எனக்கு உசத்தி தான்! என்று அந்த நினைப்பை உதறினான்.
வருபவர்கள் வாங்கி வந்த ஸ்வீட்டை எல்லாம் தனியாக எப்படி மதுரா தங்கைகளை விட்டு விட்டு சாப்பிடுவாள்?
அதுவும் லக்கி அவளைக் கட்டிக் கொண்டு தான் தூங்குமே!
இப்போதும் அதையே செய்தது!
வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு மதுராவோடு அதுவும் குச்சிக்குள் போய் உடகார்ந்து கொண்டு அவளோடே சாப்பிட்டு அவளோடே படுத்துக் கொண்டது.
அவ்வபோது வெளியே வந்து ஹாலில் விளையாடி,
“ஏய். .ஏய்.. இந்தாடி… அவளைத் தொட்டுட்டு வந்து என் மேலே படாதே” என்று மதுராம்பாளை கத்தவும் வைத்தது!
ஒரு நல்ல நாளில் மதுராவை வீட்டிற்கு அழைத்தார்கள். பெரிய அளவில் சடங்குகள் எல்லாம் கல்யாணத்தின் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டான் அருள்.
மனைவியின் உடல்நிலை சரியில்லாததால்!
மதுராம்பாள் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்.
பின்னே வானதி இல்லையென்றால் யார் வேலை செய்வது விசேஷம் வைத்தால்!
சதீஷ் சூர்யாவை ஊருக்கு அழைத்து வந்தவன், அவளை இங்கேயே விட்டு விட்டு சென்று விட்டான்.
காரணம் அவள் கர்ப்பமாக இருந்ததால்!
“சூர்யாவுக்கு மார்னிங் சிக்னெஸ் அதிகமா இருக்கு!
தனியா அவளால சமாளிக்க முடியல! இங்கன்னா அவங்க அம்மா வீடும் லோக்கலில் இருக்கு! அவங்க அடிக்கடி வந்து பார்த்துப்பாங்க” என்று சொல்லி விட்டு விட்டு சென்று விட்டான்!
ஆனால் நடந்தது வேறு!
சூர்யாவின் அம்மா வந்து பார்த்துக் கொண்டார் தான்!
ஆனால் அவரும் இங்கேயே வந்து இருந்து கொண்டு!
காலையில் அவர் வீட்டிலிருந்து கிளம்பி வருபவர், நாள் பூராவும் இருந்து விட்டு இரவில் வீடு திரும்பினார்!
காலையில் சில சமயம் சாப்பிட்டு விட்டு வருவபர், பல நேரம் சாப்பிடாமல் வந்து விடுவார்.
காலை வேலை எல்லாம் முடித்து விட்டு அப்போது தான் சாப்பிட அமர்வாள் வானதி!
ரொம்ப சரியாக அப்போது தான் உள்ளே வருவார்.
“சாப்பிடுங்க சித்தி” என்று வானதி சொன்னால், சில நேரம்
“இல்லம்மா நான் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்” என்பார்.
பல நேரம் “சரி” என்று சொல்லி உட்கார்ந்து விடுவார்.
அவருக்காக சேர்த்து செய்து வைத்திருக்கும் நாளில் வேண்டாம் என்று சொல்லி விடுவார்.
சாப்பிட்டு விட்டு தான் வந்திருப்பார் என்று இட்லி கொப்பரை தட்டுகளை கழுவ ஊற வைத்த அன்று சாப்பிட உட்கார்ந்து,
தனக்கு சாப்பிட ஒன்றுமில்லாமல் காபியை குடித்து விட்டு அடுத்த சமையலைக் கவனிக்க போய் விடுவாள் வானதி.
அதே போல தான் மதியமும்!
சில நேரம் “நான் வீட்டுக்கு போறேன்” என்று சொல்லி கிளம்பி விடுபவர், பல நேரம் சூர்யா அப்பாவிற்கும் சேர்த்து கேரியரில் எடுத்துப் போய் விடுவார்.
இதில் இடையிடையே ஜூஸ் போடுகிறேன் என்று பழங்களை நறுக்கி விட்டு குப்பைகளை கூட அள்ளிப் போடாமல் மிக்சியையும் கழுவாமல் அப்படி அப்படியே போட்டு விட்டு போய் விடுவார்.
மலை போல பாத்திரங்கள் சேரும் வானதிக்கு கழுவி வைக்க!
நல்ல நாளிலேயே சூர்யா வேலை செய்ய மாட்டாள்!
இப்போது மசக்கை வேறு!
மதுராவுக்கு கோபம் கோபமாக வந்தது!
அவளும் இனியாவும் தான் அம்மாவுக்கு உதவுவார்கள்!
எப்போதடா சூர்யாவுக்கு வளைகாப்பு போட்டு அழைத்து செல்வார்கள் என்றே இருந்தது அவளுக்கு!
சூர்யா தன் அம்மா கஷ்டப்படக்கூடாது என்று ஒன்பதாம் மாதம் தான் வளைகாப்பு செய்ய சொல்லி விட்டாள்!
ஆனால் வளைகாப்புக்கு அடுத்த நாளே டெலிவரி ஆகி, குழந்தையோடு மீண்டும் இங்கயே வந்து விட்டாள்!
காரணம் மதுராம்பாள்!
“அத்தை.. எங்கம்மாவுக்கு பிள்ளைங்கள குளிப்பாட்டி எல்லாம் பழக்கம் இல்லை!
என்னையவே என்னோட அம்மாச்சி தான் குளிப்பாட்டி விட்டாங்களாம்! அம்மாவுக்கு எதுவும் தெரியாது” என்று சொல்லி இருக்க, வீட்டின் முதல் ஆண் வாரிசு அவள் குழந்தை என்பதால் இங்கயே அழைத்து வந்து விட்டார்கள்!
செந்திலுக்கும் ஒரே ஒரு பெண் குழந்தையே தான்!
வேலை வானதிக்கு!
வானதிக்கு வேலை!
ரிப்பீட்டு!
கடுப்பானாள் மதுரா.
ஒரு வழியாக பிள்ளைக்கு ஆறு மாதம் ஆனபின்னே தன்னோடு அழைத்து சென்று விட்டான் சதீஷ்!
அடுத்த வருடம் தீபாவளி வந்தது.
ஊரில் இருந்து வரும் இளைய மகன்களுக்கு என்று நிறைய பலகாரங்கள் வானதியை செய்ய வைத்து கொடுத்து விடுவார் மதுராம்பாள்.
அவர்களும் முதல் நாள் சரியாக வந்து இறங்கி, காலையில் குளித்து புத்தாடை அணிந்து பலகாரங்கள் சாப்பிட்டு, விருந்து உண்டு டிவியில் பட்டிமன்றம் பார்த்து மகிழ்வார்கள்.
மதிய தூக்கம் போட்டு சாயங்காலம் பட்டாசு வெடித்து கொண்டாடி விட்டு பை நிறைய பலகாரங்கள் பேக் செய்து எடுத்துக் கொண்டு ஊர் திரும்புவார்கள்!
கூடவே கொல்லைப்புற தோட்டத்தில் இருந்து காய்கறிகள், வயலில் இருந்து வாழைப்பூ கொண்டு வர சொல்லி அதையும் ஆய்ந்து தான் எடுத்துப் போவாள் சூர்யா!
ஆனால் வரும்போது லக்கிக்கு கூட ஒரு கவுன் எடுத்து வர மாட்டார்கள்!
ஓர்ப்படிகள் இருவருமே அடுப்படியில் வந்து சின்ன உதவி கூட செய்ய மாட்டார்கள்!
மதுராம்பாளும் செய்ய சொல்ல மாட்டார்!
எதுவும் சொல்லி விட்டால், இப்போது வந்து போய் கொண்டிருக்கும் பண்டிகை நாட்களுக்கு கூட அவர்களின் வருகை நின்று போய் விடும் என்ற பயம்!
வானதி மட்டுமே தனியாக எல்லா வேலையும் செய்து விட்டு, பிற்பகல் நேரமாக புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தரையில் உருண்டுப் படுத்து இருப்பாள்.
சாயங்காலம் மீண்டும் அவளுக்கு கோவிலுக்கு பிரசாதம் போட வேண்டியிருக்கும் அதனால்!
அன்றும் அப்படி தான் அவள் அப்போது தான் லேசாக கண் அயர்ந்து இருக்க,
“அண்ணி.. அண்ணி” என்று அவளை மெதுவாக எழுப்பினான் சதீஷ்.
வேகமாக அவன் அருகில் ஓடி வந்தாள் மதுரா!
“என்ன சித்தப்பா.. ஏன் அம்மாவை எழுப்புறீங்க?”
“இல்ல.. காலையில ஸ்வீட் நிறையா சாப்பிட்டு டிபன் ஒழுங்கா சாப்பிடல.
இப்ப கொஞ்சம் பசிக்குது. அதான் தோசை ஊத்தி தர சொல்லி கேக்க வந்தேன்!”
நீங்களுமா சித்தப்பா.. என்று கொஞ்சம் அதிர்ந்தவள்,
“இல்ல சித்தப்பா அம்மாவை எழுப்பாதீங்க. ஏன் சூர்யா சித்தி எங்க?”
அவன் கொஞ்சம் தயங்கி விட்டு,
“இன்னிக்கு தீபாவளி ஸ்பெசல் படம் போட்டு இருக்காங்க டிவியில. ரொம்ப ஆசையா சொல்லிட்டு இருந்தா ஊரிலேயே! இப்ப போய் கூப்பிட்டா கத்துவா” என்றான் தயக்கமாக!
குற்றவுணர்ச்சியுடன்!
அவனைப் பார்க்கவும் பாவமாக இருந்தது மதுராவுக்கு!
அதுவும் பசி என்று வேறு சொல்வதால்,
“வாங்க நான் ஊத்தி தர்றேன்” என்று அடுப்படிக்குள் சென்றாள் அவள்!
அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிள்ளைகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி விட்டனர்!
“போ போ.. உன் அக்கா நல்லா முறுகலா தோசை ஊத்தி தருவா” என்று பிள்ளைகளை அனுப்பி விட்டு மீண்டும் டிவி பார்த்தனர் மதுராம்பாளின் குடும்ப குத்து விளக்குகள்!
அடுத்த வருடம் தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னதாக பார்த்து வானதி வீட்டு விலக்காகி விட, பலகாரம் செய்ய ஆளில்லை!
இத்தனைக்கும் வானதி தேவையான மாவுகளை எல்லாம் ஏற்கனவே அரைத்து தயாராக தான் வைத்திருந்தாள்!
“நாளும் கிழமையுமா பார்த்து தான் இப்படி உக்கார்ந்து தொலைப்பா” என்று திட்டியவாறே மாவு மட்டும் பிசைந்து கொடுக்க,
மதுராவும் இனியாவும் பிழிந்து கொடுத்தார்கள்.
மணி அவற்றை எண்ணெயில் பொறித்து எடுத்து ஒரு வழியாக இரண்டு வகையான முறுக்குகள் செய்து முடித்து விட்டனர்.
அதில் ஓரிரு முறை மதுராம்பாள் மாவில் வெண்ணை சேர்க்க மறந்திருக்க, அந்த முறுக்குகள் மட்டும் கொஞ்சம் கடுக் கடுக் என்று இருந்தன!
பாசி பருப்பு உருண்டை ரவா உருண்டைகள் கூட மதுராவும் இனியாவுமே டிவி பார்த்துக் கொண்டே பிடித்துக் கொடுத்து விட்டார்கள்.
அருள் வேறு தெரிந்த ஒரு மாமியிடம் சொல்லி லட்டு, பாதுஷா, மைசூர்பாக் ஆர்டர் கொடுத்துருக்க, எல்லாம் நிறைவு தான்!
ஆனால் மதுராம்பாள் செய்கைகள் தான் அப்போதும் தப்பாகவே இருந்தன.
நல்ல முறுக்கை எல்லாம் பார்த்து பார்த்து மற்ற மகன்களுக்கு பார்சல் செய்தவர், சரியாக வராத முறுக்குகளை வீட்டுப் பிள்ளைகளுக்கு வைத்தார்!
மதுரா கேட்டதற்கு
“அவங்க அக்கம் பக்கம் அப்புறம் கூட வேலை செய்றவங்களுக்கு கொடுப்பாங்க. அவங்களுக்கு போய் இதை கொடுத்து விட முடியுமா?
இங்கன்னா, இதோ அடுத்த வாரம் கூட உங்கம்மா வீட்டுக்கு வந்தவுடன் செய்ய சொல்லி சாப்பிடலாம்” என்ற சமாதானம் வேறு!
அப்படியே முறுக்கு செய்யவெல்லாம் வானதிக்கு நேரம் இருக்க தான் போகிறது!
அடுத்த வருடம் எல்லாம் வானதிக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது!
மதுரா தான் வீட்டையும் தங்கைகளையும் பார்த்துக் கொண்டாள்.
அவளே சமைத்து வைத்து விட்டு பள்ளிக்குப் போனாள்.
ஸ்பெசல் கிளாஸ்களுக்கு போக முடியவில்லை அவளால்!
இதில் வானதியை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் வேறு செல்லவும் வேண்டியிருந்தது!
படிக்க நேரமே பற்ற வில்லை அவளுக்கு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வேறு!
அந்த வருடம் தீபாவளி வழக்கம் போல மாவுகளை எல்லாம் தயாரித்து வந்திருந்த நிலையில் வானதிக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போக எதுவும் செய்ய முடியவில்லை!
இளைய மகன்கள் இருவரையும் ஒரு வாரம் முன்னதாகவே வர சொல்லி இருந்தார் மதுராம்பாள்!
ஆனால் அவர்கள் வரவே இல்லை!
வழக்கம் போல முதல் நாள் வந்திறங்கியவர்களுக்கு, பலகாரம் எதுவும் செய்யாமல் இருப்பதைக் கண்டு கோபம் வந்தது!
“அண்ணிக்கு உடம்பு சரியில்லடா. நான் வேணுமின்னா கடையில இருந்து வாங்கிட்டு வர்றேன்” என்ற அருளிடம்
“கடையில் வாங்க எங்களுக்கு தெரியாதா மாமா.. அவர் எவ்வளவோ ஆசையா வந்தாரு மகிழம்பூ முறுக்கு சாப்பிட! பாவம் ஏமாந்து போகப்போறார்!” என்றாள் சூர்யா.
பாசிப்பருப்பு கலந்து தேங்காய்ப்பாலில் பிசைந்து தேங்காய் எண்ணெயில் செய்யும் மகிழம்பூ முறுக்கு ரொம்ப பிடிக்கும் சதீஷ்க்கு!
“மாவு இருக்கும்மா.. வேணுமின்னா நீ அதை ஊருக்கு எடுத்துப் போய் பிழிஞ்சிக் கொடேன்” என்றாள் வானதி மனது கேக்காமல்!
“ம்ம். ஆசையா வந்தவங்கள ஏமாத்திட்டு ஐடியா சொல்ல வரீங்களா? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!” என்று நொடித்தாள்!
“நான் போய் பிழியணுமா! அது வேகும் அவ்வளவு நேரம்! எனக்கு எல்லாம் பொறுமை இல்லை!
இனி அடுத்த வருசம் எல்லாம் இங்க வரவே கூடாது. நாமளே வந்து செஞ்சு திங்கறதுக்கு நம்ம வீட்டுலையே செஞ்சுக்கலாமே! இங்க எதுக்கு வந்துட்டு..” என்று முனகிக் கொண்டே சென்று விட்டாள்!
ச்சே. என்று ஆகி விட்டது மதுராவுக்கு!
இவங்கள எல்லாம் யார் வர சொன்னது?
வர வேண்டியவனை ரெண்டு வருசமா காணோம்!
இவ்வளவு வேலை சுமையிலும் பிரச்சினைகளிலும் அவளின் ஊட்டியின் முகம் தினமும் அவள் இரவு படுத்து தூங்கும் முன்னர் ஒரு முறையாவது வந்து போகும்!
என்னை எல்லாம் அவனுக்கு இன்னும் நினைவு இருக்குமா?
ச்சே.. மறந்துருப்பான்!
இப்ப கோயம்புத்தூர்ல காலேஜ் வேற சேர்ந்துட்டானாம்.
அவங்க மாமா சொல்லிட்டு இருந்தாங்க அப்பா கிட்ட.
செமஸ்டர் லீவில் அவங்க பேக்டரிக்கு போய் விடுகிறானாம்! ரொம்ப பெருமையாக சொல்லிட்டு இருந்தார் அவர்!
இவர்கள் தான் ஓரிரு முறை ஸ்ரீமதி அத்தை வீட்டுக்குப் போய் வந்தார்கள்!
அத்தையும் பாட்டி தாத்தா இறந்த பின்னே வரவே இல்லை!
அவர் வாங்கிக் கொடுத்த பட்டுப்பாவாடையை, அவன் போர்த்தி விட்ட ஜெர்கின், அவனுடன் சென்ற சினிமா டிக்கட்கள், அவன் தின்று போட்ட பிஸ்தா பருப்பின் தோல்கள் என்று அவனின் நினைவாய் இவளிடம் பொக்கிஷங்கள்!
அவன் எப்போதாவது வர மாட்டானா என்று இவள் காத்திருக்க, அவனும் வந்தான் ஒரு முறை!
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் போது!
ஆனால் அன்று ஏற்பட்ட சந்திப்பு அவளுக்கு ரத்தக் காயத்தை தான் தந்திருந்தது!
அதன் வடுவோ பல வருஷம் அவன் நினைவாக அவள் தோளில்!
error: Content is protected !!