Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

42. Lavanya Rajesh - நெஞ்சமெல்லாம் நிலவாக நீ

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 26

ரேஷ்மா யுவ நிலவன் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது!

ஸ்ரீமதி கல்யாணத்தின் போது செய்ய முடியாமல் போனவற்றை எல்லாம் ரேஷ்மாவின் கல்யாணத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்கள் மாமன்கள்!

ஒரு சடங்கு சம்பிரதாயம் விடாமல் அத்தனையும் பார்த்து பார்த்து அக்கறையுடன் நடத்திக் காட்டினார்கள்.

தனசேகர் பத்மா தம்பதியும் அதற்கும் துணை நின்றார்கள்!



Advertisement

ராம் அங்கிள் நேரில் வராத குறை ஒன்று மட்டுமே ரேவந்துக்கும் ரேஷ்மாவுக்கும்!

அவரும் வீடியோ காலில் வந்து வாழ்த்தினார்.

ஊரைக் கூட்டி தடபுடலாக விருந்து நடந்தது.

Advertisement

ரேவந்தின் பழைய நண்பர்கள் எல்லாம் இப்போது தேடி வந்து அவனையும் மதுராவையும் கலாய்த்து தள்ளினர்.

Advertisement

“எங்களுக்கு அப்பவே தெரியும்டா இந்த ஸ்வீட்டி புள்ளைய.. உன் கிட்ட மட்டும் பம்முவா.. பேசவே மாட்டா!

ஆனா பாரேன்.. அப்போ இருந்தே உன்னை சைலண்டா லவ் பண்ணிருக்கா!”

“இவன் மட்டும் என்னடா.. இத்தனை வருசத்துல சிட்டியில இவன் பார்க்காத பொண்ணுங்களா இருக்க போவுது!

Advertisement

ஆனாலும் மாப்பிள்ளை மனசு பூரா ஸ்வீட்டி தான் இருந்திருக்கா!” என்று அவனையும் கலாய்த்து கொண்டிருந்தார்கள்.

ரேவந்த் இப்போது பல வயது குறைந்து அந்த பதின்பருவ காலத்திற்கே சென்று விட்டிருந்தான்!

கல்யாணம் நல்லபடியாக முடிந்து யுவியின் வீட்டிற்கு சென்று வந்தார்கள் மணமக்கள்!

அப்படியே ராம் அங்கிள் வீட்டிற்கு போய் அவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள்!

மணமக்கள் வீடு வரும் செய்தியை சொன்னவுடன் பார்வதி கோவிலுக்கு செல்வதாக சொல்லி விட்டு வெளியே கிளம்பி விட்டார்.

ஜெயந்தும் நண்பர்களுடன் வெளிநாடு டூர் சென்று விட்டானாம்!

“அவர்கள் வீட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது” என்றார் ராம் அங்கிள்.

மதுரா ரேவந்த் திருமணத்திற்காவது ராம் அங்கிள் வர வேண்டும் என்று ரேவந்த் கேட்டுக் கொண்டான்.

“கட்டாயம் வருவேன். எனக்கு ரேஷ்மா கல்யாணம் நல்லபடியாக நடக்கும் வரை தான் டென்சன்!

இன் எந்த டென்சனும் இல்லை ! கண்டிப்பா நான் வருவேன். நீங்க அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்க” என்று ரேவந்தின் மாமன்களிடம் சொன்னார்.

“கண்டிப்பா.. அடுத்த மாதம் முதல் முஹுர்த்தத்தில் அவங்க கல்யாணம் தான்!” என்றார் செல்வமணி.

“எனக்கு ரெண்டு ஃபேக்டரியிலும் கொஞ்சம் வேலை இருக்கு! அதை முடிச்சுட்டு வந்திட்டா, நல்லா இருக்கும்!

ரேஷ்மா கல்யாணம் அவசரமா பண்ண வேண்டியதால, நிறைய வேலை பெண்டிங் ஆகிடுச்சு!

நவீன் கொஞ்சம் கஷ்டப் பட்டுட்டு இருக்கான்!

அதே மாதிரி மாதேஷுக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்!

நான் ஒரு வாரத்தில் எல்லாத்தையும் சரி பண்ணி ஸ்ட்ரீம்லைன் பண்ணி வச்சுட்டு வந்திட்டா, அப்புறம் ஃப்ரீதான்!

எங்க கல்யாணமும் முடிஞ்சவுடன் எங்கியாச்சும் அப்ராட் ட்ரிப் போலாம்னு யுவி ஐடியா வச்சுருக்கான்!

ஸ்வீட்டிக்கு பாஸ்போர்ட் இல்லை!

அப்ளை பண்ணி வாங்கணும்!”

ரேவந்த் அவனின் அடுத்த திட்டங்களை ராம் அங்கிளிடம் உற்சாகமாய் சொல்லிக் கொண்டிருந்தான்!

“கல்யாணம் திடீர்னு ஃபிக்ஸ் பண்ணினதால எங்க பக்க சொந்தகாரங்க நிறைய பேர் வர முடியல!

அதனால சென்னையில் ஒரு ஹோட்டலில் வச்சு ஒரு ரிசப்ஷன் வைக்க போறோம்!” என்றார் பத்மா!

“நல்லபடியாக செய்யுங்கம்மா” என்று பேசி விடைக் கொடுத்தார் ராமநாதன்!

முதலில் யுவியின் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்தார்கள் மணமக்கள்.

அதன் பின் நடந்த ரிசப்சன் களை கட்டியது!

எல்லாவற்றிலும் இனியா தன் குடும்பத்துடன் கலந்து கொண்டாள்!

இப்போது தான் அவளுக்குள் இத்தனை நாளாக உறுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு விதமான குற்ற உணர்ச்சி நீங்கி விட்டிருந்தது!

என்ன தான் அக்கா வற்புறுத்தி பண்ணி வைத்திருந்தாலும், அக்காவுக்கு கல்யாணம் ஆகாமல்,  தான் பண்ணிக் கொண்டு குடும்பம் குழந்தை என்று சந்தோசமாக இருக்க,

அக்கா இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்ததால்,

 அவளுள் இருந்த  ஒரு தீர்க்க முடியாத கவலை ஒன்று இப்போது மறைந்து விட்டதால் அவளும் மிகவும் உற்சாகமாய் இருந்தாள்.

அதிலும் ரேவந்த்  மதுராவை அடிக்கடி சீண்டுவதும் சில்மிஷம் பண்ணுவதும் அதற்கு மதுராவின் முக சிவப்பும் அவளுக்கு பரம திருப்தியை தந்து கொண்டிருந்தது.

“இப்ப தான் ரொம்ப சந்தோசமா இருக்குதுடி லக்கி! அக்கா முகத்தில் இத்தனை வருஷம் கழிச்சு இப்ப தான் சந்தோசத்தைப் பார்க்கிறேன்! இது அப்படியே நிலைச்சு இருக்கணும்” மனதார வேண்டினாள்!

“கண்டிப்பா அக்கா. அத்தான் சூப்பர் டைப்! நம்ம அக்காவ அப்படி தாங்குவாரு பாரு!

அக்கா நமக்காக எவ்வளவோ செஞ்சுருக்கா! அவ லைஃப்ல இந்த சந்தோசம் எப்பவும் இருக்கும்” என்றாள் லக்கியும்!

அவளைத் தோளோடு கட்டிக் கொண்டாள் இனியா!

—–

அடுத்த வெள்ளிக்கிழமை.

ரேவந்த், திருமணத்திற்கு முன்பு முடித்து வைக்க வேண்டிய வேலைகளை கவனிக்க திருப்பூர் சென்று இருக்க, யுவியும் ரேஷ்மாவும் யுவியின் வீட்டில் இருந்து ரேஷ்மாவின் ஆபிஸ் போய் வந்தார்கள்.

வார இறுதியில் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கு விருந்துக்கும் சென்று வந்தார்கள்.

ரேவந்தின் மாமன்மார்கள் அடுத்து நடக்கவிருக்கும் ரேவந்தின் திருமண ஏற்பாட்டை கவனித்துக்  கொண்டிருந்தார்கள்!

லக்கியும் மதுராவும் கிராமத்திலேயே தங்கி விட்டார்கள்!

அருகில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு சென்னைக்கு அலைய வேண்டாம் என்றதோடு, மணி அத்தைக்கும் வேறு  கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது!

அவரை டவுன் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டி போய் வந்திருந்தாள் மதுரா.

“மணி.. மணி..” என்று வாசலில் ஒரு பெண்ணின் குரல் கேட்க,

“யாரு?’ என்று கேட்டவாறு கேட்டை திறக்க போன லக்கி, அந்த பெண்ணைப் பார்த்தவுடன் ஒரு கணம் திடுக்கிட்டாள்!

முகம் முழுக்க மஞ்சளை  பெயின்ட் அடித்தது போல பூசிக் கொண்டு, அதே போல முழங்கை வரையும் மஞ்சள் பெயின்ட் அடித்துக் கொண்டு,

நெற்றியில் ஒரு பெரிய குங்குமப் போட்டு, அதன் மேலே விபூதி பட்டை, அதன் மேலே கருப்பு சாந்துப் பொட்டு,

கை நிறைய கண்ணாடி, அரக்கு, சங்கு வளையல்கள் கிட்டத்தட்ட முழங்கை வரைக்கும் போட்டுக் கொண்டு

ஒரு நடுத்தர வயது பெண் நின்று கொண்டிருந்தாள்! பத்து விரல்களிலும் வினோதமான டிசைன்களில் மோதிரங்கள்!

அவள் தலைமுடி முழுக்க சடைப் பிடித்து தேங்காய் நார் போல இருந்தது!

கழுத்தில் கருப்பு கருங்காலி மாலை, துளசி மாலை அப்புறம் இன்னமும் ஏதேதோ மாலைகள்!

காதில் தோடுடன் இன்னமும் பல சிறிய தோடுகள்!

மஞ்சள் புடவை அணிந்து தோளில் ஒரு மஞ்சள் நிற ஜோல்னா பை!

சாமியாரிணி போல தோற்றத்துடன் இருந்தாள் அந்த பெண்!

ஆனால் ஒரு முரண்பாடாக கையில் ஒரு ஆன்ராய்டு போன் ஒன்றும்!

“யார் நீங்க? என்ன வேணும்?”

“மணி.. மணி இல்ல..?”

“இருக்காங்க.. அவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. உங்களுக்கு என்ன வேணும்?” என்று லக்கி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உள்ளே இருந்து மணி அத்தை வந்து விட்டார்.

மதுரா வீட்டில் இல்லை. அவளின் பாஸ்போர்ட் வாங்குவது சம்பந்தமாக டவுனுக்கு சென்று இருந்தாள்

“யாரு..?” என்றபடி வெளியே வந்தவரிடம்,

“நான் தான் மணி. மாரியம்மா. கோவிலுக்கு பொங்கல் போட அரிசி வெல்லம் வாங்கி வந்துருக்கேன்” என்று ஜோல்னா பையில் இருந்து ஒரு கவரை எடுத்து நீட்டினாள் அந்த பெண்!

“உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன்! இப்படி யார்கிட்டயும் வாங்கிட்டு வர வேண்டாம்னு!

இது ஒண்ணும் பொது கோவில் இல்லை! எங்க வீட்டு தெய்வம்! அதுக்கு நாங்களே பார்த்துப்போம்!

வெளியாட்கள் யார் கிட்டயும் எதுவும் வாங்குறது இல்லைன்னு! வேண்டாம் எடுத்துட்டு போ!” மணி சொல்ல,

“அப்படி சொல்லாத மணி. இந்த அம்மா அவங்க கனவுல வந்து கேட்டுச்சாம்! நான் குறி சொல்ல போன இடத்துல சொன்னாங்க.

வேணாம்னு சொல்லாத மணி! அவங்க திருப்திக்கு வாங்கிக்கோ”

“இந்த ஒரு தடவை வாங்கிக்கிறேன். இனிமே கொண்டு வர கூடாது! அவங்கள வேணுமின்னா இங்க வந்து கும்பிட்டு குங்குமம் வாங்கிட்டு போக சொல்லு! காசெல்லாம் வேண்டாம்!”

“சரி.. சொல்லிடறேன். இப்ப வாங்கிக்கோ. சாயங்காலம் அவங்கள வர சொல்றேன்!

இது யாரு இந்த பாப்பா.. புதுசா இருக்கு?”

“ம்ம். இந்த வீட்டுப் பொண்ணு தான்! சென்னையில படிச்சுட்டு இருக்கா”

“ஒ.. அப்படியா! நல்லா படிப்பியா? எங்க கையக் காட்டு பார்க்கலாம்?” அவள் லக்கியைக் கையை நீட்ட சொல்ல,

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ கிளம்பு” என்று சொல்லி  அவளை விரட்டினார் மணி!

“ஏன் அத்தை? அந்த அம்மா கிட்ட கோபமா பேசினீங்க?”

“அந்த பொம்பளை சரியில்லம்மா.. அதுகிட்ட ஏதோ தப்பு இருக்கு! எனக்கு என்னன்னு சொல்ல தெரியல!

ஆனா உள்ளுணர்வு இவ தப்பான ஆளுன்னு சொல்லுது!

எங்கேயோ சென்னைப் பக்கம் இருந்து ஏகாதசிக்கு சீரங்கம் வந்தவ, இப்ப இங்கயே தங்கிட்டா!

இவளும் உன் சூர்யா சித்தியோட அம்மாவும் ரொம்ப  பழக்கம்!

அவங்க வீட்டு திண்ணையில தான் இவ தங்கியிருக்கா! அவளோட சில சாமான்கள் எல்லாம் அங்க தான் வச்சுருக்கா!

ஒரு வேளை அதனால கூட இருக்கலாம்!

ஆனா முதல்ல அவளை விரட்டி விட்டதே சூர்யாவோட அம்மா தான்!

கோவிலுக்கு காசு கேட்டு வந்தவள அந்த அம்மா நிக்க விடாம நாயை அவுத்து விட்டு துரத்தி விட்டுச்சாம்!

அப்போ அந்த பொம்பள என்னமோ வாக்குசம் விட்டாளாம்!

அடுத்த நாளே அவங்க வீட்டு வைக்கப் போரு தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சாம்!

அதுல இருந்து தான் சூர்யா அம்மா, இந்த பொம்பளகிட்ட நல்ல படியா பேசுதாம்!

 வீட்டுத் திண்ணையில தங்க விட்டுருக்காம்!

சில பேரு சொல்லுதுங்க.. அவ சொன்னா பலிக்குதுன்னு!

ஆனா எனக்கு என்னமோ நம்பிக்கை வர மாட்டேங்குது!

நம்ம கோவில் பேரை சொல்லி வசூல் பண்றா வேற!

அது வேற எனக்கு கவலையா இருக்கு!

நீ.. இவன்னு இல்ல பாப்பா.. யார் கிட்டயும் டக்குன்னு கையை எல்லாம் காமிக்காதே!

ஏதாச்சும் சொல்லி உன்னை குழப்பி விட்டுடுவாங்க!

நீ நம்ம சாமியை நம்பு. அது கை விடாது! அவ்வளவு தான்!

அதுவும் இந்த தீப்பாஞ்ச அம்மன் ரொம்ப சக்தி உள்ளவ!”

“அது என்ன அத்தை? இப்படி ஒரு பேரு?“

“அதுவா.. அந்த காலத்துல ஒரு பழக்கம் இருந்துச்சு. புருஷன் செத்துப் போய்ட்டா, அந்த சிதையில பொண்டாட்டியும் விழுந்து கூடவே செத்துப் போய்டுவாங்களாம்!

சில பேர் விரும்பியே செத்து போவாங்களாம்.

சில பேரை வலுக்கட்டாயமாக சாக அடித்து, இருக்காங்க.

அப்புறம் பிரிட்டிஷ் கவர்மென்ட் வந்து தான் அந்த பழக்கத்தைத் தடுத்து சட்டம் போட்டாங்களாம்!

அப்படி தீயில் விழுந்து ஊர் நன்மைக்காகவோ, குலத்தின் நன்மைக்காகவோ, இல்ல தன்னோட மானத்தை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவோ வேண்டி

இப்படி தீயில் பாய்ந்து செத்துப் போனவங்களை தான்

ஊர் ஊருக்கு தீப்பாஞ்ச அம்மனா கும்பிட்டு வர்றதா பெரியவங்க சொல்லுவாங்க!

எனக்கும் சரியா தெரியல!

ஆனா.. இந்த கோவிலில் இருக்கும் அம்மன், நம்ம வீட்டில் வாழ்ந்த ஒரு பொம்பள தான்! அவங்க தான் இங்க சாமியா இருக்காங்க!

அதனால தான் நம்ம வீட்டில் இத தலைமுறை தலைமுறையா கும்பிட்டு கிட்டு இருக்கோம்!”

“ஒ.. அப்படியா!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள் லக்கி!

——–

அடுத்த சில நாட்கள் கழித்து.

தட்கலில் வாங்கபட்ட தனது பாஸ்போர்ட்டை அம்மனின் பாதத்தில் வைத்து பூக்களைப் போட்டு விட்டு, சற்றுத்தள்ளி இருந்த விளக்கு ஏற்றும் இடத்தில் நெய் விளக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் மதுரா.

கடந்த சில நாட்களாக, வேலை நிமித்தம் ரேவந்த் அவளை பிரிந்து இருந்தாலும், போனில் கண்டபடி பேசி அவளை முகம் சிவக்க வைத்துக் கொண்டு தான் இருந்தான்!

அதுவும் இந்த பாஸ்போர்ட்டை கையில் வாங்கிய விஷயத்தை அவனிடம் சொன்ன போது, அவர்களின் ஹனிமூன் ட்ரிப் பற்றி பேசி பேசி அவளை பாடாய் படுத்தி விட்டான்!

இனியா குடும்பத்தையும் ஸ்ரீரங்கத்தில் ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் தங்க வைத்து இருந்தாள் மதுரா. இந்த வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டு கஷ்டப்பட வேண்டாம் என்று.

லக்கியும் குழந்தையுடன் விளையாட என்று அவர்களுடனே  இருந்து கொண்டாள்.

மதுரா மட்டுமே பாஸ்போர்டை வாங்கி கொண்டு வீடு திரும்பி இருந்தாள்.

மணி அத்தை வீட்டில் சமைத்துக் கொண்டிருக்க, இவள் தானே வந்து கோவிலைத் திறந்து பாஸ்போர்டை வைத்து வணங்க வந்திருந்தாள்!

“பாப்பா… நீ தான் பெரிய பாப்பாவா?” என்ற குரல் அவளை திரும்பி பார்க்க செய்தது!

அந்த சாமியாடி பொம்பளை தான்!

தன் காவிப் பற்கள் தெரிய சிரித்தவள்,

“நீ தான் பெரிய பாப்பாவா? மணி சொன்னுச்சு. உனக்கு தான் கல்யாணமா பாப்பா? ரொம்ப சந்தோசம்! உன் கல்யாணத்துக்கு எனக்கு ஒரு புடவை எடுத்துக் கொடு ஆயி!”

மதுரா  அவளைப் பார்த்தாள்.

“ நீங்க யாரு? உங்கள இதுக்கு முன்னாடி இந்த ஊருல நான் பார்த்ததே இல்லையே?”

“நான் அசலூர் தான் பாப்பா. இங்க ஆறு மாசமா  தான் இருக்கேன். அம்மா மண்டபத்துல தான் இருந்தேன்.  ஒரு நாள் இந்த பக்கம் வந்தேன்! இந்த ஆத்தா என்னைப் பிடிச்சு வச்சுகிட்டா! வேற பக்கம் விட மாட்டேங்கிறா!

கனவுல வந்து போகாதேன்னு சொல்லிட்டே இருக்கா! அம்மா சொன்னப்புறம் மீற முடியுமா சொல்லு!

அப்படியும் ரெண்டு தடவ போனேன்.

ரெண்டு தடவையும் அடிப்பட்டு ரத்தக் காயத்தோட தான் திரும்பி வந்தேன். இதோ இதப் பாரு.. “என்று காலில் கையில் இருந்த  தையல் தழும்புகளைக் காட்டினாள்.  முழங்கையை தொட்டுக் காட்டினாள்.

“பாரு ப்ளேட் வச்சுருக்காங்க! அதுல இருந்து இங்கயே தான் கிடக்கிறதை தின்னுட்டு யார் வீட்டு திண்ணையிலயாவது தூங்கிட்டு இருக்கேன் பாப்பா.

பார்க்க மகாலட்சுமி கணக்கா இருக்க பாப்பா! எங்க உன்னோட கையைக் காட்டு!”

மதுரா ஏதோ ஒரு நினைப்பில் கொஞ்சமும் யோசிக்காமல் கையைக் காட்ட, அவள் அவள் விரல் நுனியைப் பிடித்துக் கொண்டு உற்றுப் பார்த்து விட்டு, கண்களை மூடிக் கொண்டாள்!

அவள் முகமே வேறு மாதிரி மாறியது!

“ம்ம்..”  என்று கத்தி, நாக்கை கடித்துக் கொண்டு அருள் வந்த மாதிரி அவள் பேச தொடங்கினாள் அவள்!

“உனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு இல்ல?

சின்ன வயசுல இருந்து மனசுல நினைச்சுகிட்டு இருந்தவனை கட்டிக்க போறோம்னு கனவுல இருக்கியா?

இருப்பே! இருப்பே! தப்பு இல்ல தான்!

ஆனா.. நான் உனக்கு மாலை எடுத்து தர மாட்டேன்!

ஏன்னா.. நீ என்னோட மவ.. நான் என்னோட காலடியில வச்சுக்க ஆசைப்படுற என்னோட செல்ல மக! உன்னை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்!

என்னை மீறி நீ அவனைக் கல்யாணம் பண்ணி போனாலும், சீக்கிரமே என்கிட்ட திரும்ப வந்திடுவ!

சொன்னா கேளு. அவன் வேண்டாம் உனக்கு!

நான் சொல்றத மீறி போகலாம்னு நினைக்காதே!

போனா என்ன ஆகும் தெரியுமா?

எல்லாம் வெடிச்சு தீக்கு இரையாகிடும்!

இப்படி தான் அவனோட அம்மா என்கிட்ட அவ கல்யாணத்துக்கு உத்தரவு கேட்டா!

நான் கொடுக்கல! ஆனாலும் மீறி கல்யாணம் பண்ணிகிட்டா! ஆனா என்ன ஆச்சு?

அவளும் அவ புருசனும் வெடிச்சு செத்தாங்க!

சொன்னா கேளு! அவன் வேண்டாம் உனக்கு! நான் உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்! அவன் நல்லதுக்கும் தான் சொல்றேன்.

அவன் உனக்கு வேண்டாம்னு தான் இத்தனை காலம் நான் அவனை உன் கண்ணில் இருந்து மறைச்சி வச்சேன்!

ஆனா விதி உங்கள பார்க்க வச்சுட்டுது!

ஆனா இனியாச்சும் புரிஞ்சு நடந்துக்கோ! அவன் நல்லா இருக்கணும்னு நினைச்சா அவனை விட்டுடு.” என்று சொல்லி விட்டு கை நிறைய வேப்பிலையை எடுத்து வாயில் போட்டு மென்றாள் அந்த சாமியாடி!

மெல்ல அவளுக்கு வந்த அம்மன் சாமி மலையேறிவிட்டது!

பார்த்துக்கொண்டு இருந்த மதுராவுக்கு இடி விழுந்த அதிர்ச்சி!

இதையெல்லாம் நம்புவதா வேண்டாமா என்ற கேள்வி வந்தாலும்,

ஒரு வேளை இந்த அம்மா சொன்ன மாதிரி ஏதேனும் நடந்து, அவள் ஊட்டிக்கு ஏதாச்சும் நடந்து விட்டால், அவளால் தாங்கிக்கொள்ள முடியுமா?

அய்யோ கடவுளே! இத்தனை வருஷம் எங்கியோ கண்ணில் படாமல் இருந்த அவன் அப்படியே இருந்திருக்க கூடாதா? அத்தனை பெரிய சென்னையில் நான் ரேஷ்மா கம்பெனிக்கு தான் வேலைக்கு போய் இருக்கணுமா?

இப்ப நான் என்ன பண்ண?

இந்தம்மா சொல்றத எல்லாம் தூக்கிப் போட்டுட்டு, நாம பாட்டுக்கு கல்யாணம் பண்ணிப்போமா?

ஒருவேளை அப்படி பண்ணி, ஊட்டிக்கு ஏதாச்சும் ஆகிட்டா, காலத்துக்கும் அவனைப் பிரிஞ்ச வேதனையோட, கூடவே குற்ற உணர்ச்சி வேற ஆளை கொல்லுமே!

அவள் அழுதபடியே இரவு முழுவதும் யோசித்தாள்.

விடிந்த பின்,

ரேவந்திடம் தான் எடுத்து இருக்கும் முடிவை சொன்னாள்!

அடுத்த ஐந்து மணி நேரத்தில் அவள் முன்னாள் ரவுத்திர மூர்த்தியாய் நின்று இருந்தான் ரேவந்த்!

இனியா, லக்கி, ரேவந்தின் தாய் மாமன் குடும்பம் முழுவதும் சூழ்ந்திருக்க, மீண்டும் மதுரா அதையே சொல்ல, அவளை அறைந்து தள்ளியிருந்தான் ரேவந்த்!

மதுராவுக்குள் இப்படி ஒரு மதுராம்பாள் இருப்பதை அறிந்த அந்த குடும்பம் கடும் அதிர்ச்சியில் உறைந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!