Skip to content
Post Views: 2,824
அத்தியாயம் 9
எந்தன் காதலுக்கு கல்லறை
கட்டியே நீயே அதை திறந்து
வைக்க வர வேண்டும் அன்பே!!!
Advertisement
பாரதிக்கு அவன் முன் தன்னை மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. தன்னுடைய பலவீனத்தை எண்ணி அவளுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. இப்போதெல்லாம் ரிஷியைப் பற்றிய நினைவு அவளுக்கு வரவே இல்லை. சஹானாவிடம் சொல்லியாயிற்று. அவள் ரிஷியிடம் சொல்லிக் கொள்வாள். கடவுளே ரிஷிக்கு வேற நல்ல பொண்ணு அமையனும் என்று வேண்டிக் கொண்டு அதன் பின் ரிஷியை பற்றி அவள் எண்ணவே இல்லை.
Advertisement
இப்போது அவள் எண்ணம் முழுவதும் தமிழே இருந்தான். கிடைத்த இடத்தில் எல்லாம் தமிழ்பாரதி என்று கிறுக்கிக் கொண்டு அவன் மேல் கிறுக்கு பிடித்தது போல இருந்தாள். ஆனால் அவனோ இத்தனை நாள் எப்படி இருந்தானோ அதே போல சாதாரணமாக இருந்தான். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவள் மாற்றத்தை அவன் உணர்ந்தது போலவும் காட்டிக் கொள்ள வில்லை.
Advertisement
ஆனால் இரவு அவள் மறுத்தாலும் அவளை இழுத்து தன்னுடைய மார்பில் போட்டுக் கொண்டு தூங்கினான். அவள் விடுங்க என்று சொன்னாலும் “பிளீஸ் பாரதி இப்படியே இரேன்”, என்று கெஞ்சிய படி பேச அவள் தான் அவன் குரலிலும் அவனுடைய அருகாமையிலும் உருகிக் கொண்டிருந்தாள்.
Advertisement
அவன் நெஞ்சில் படுத்திருக்கும் போது அவளுக்கும் சந்தோஷமாக இருக்கும். வெற்று மார்பில் முகம் புதைக்கும் போது எழும் குறுகுறுப்பும் அவனது வாசமும் அவளுக்கு மிகவும் பிடித்து போனது. சந்தோசமாகவே அவன் மார்பில் சயனித்திருப்பாள்.
இப்படியே தான் அவர்கள் வாழ்க்கை பிடிப்பில்லாமல் சென்று கொண்டிருந்தது. காலையில் எழுந்து குளித்து கிளம்பி அவன் வேலையைப் பார்க்கச் சென்றான். இவள் எப்போதும் போல் கோகிலாவுடன் நேரத்தை செலவழித்தாள்.
அடுத்த நாள் அவன் வேலைக்கு கிளம்பும் போது அவளை மூர்த்தி வீட்டில் விட்டு வேலைக்குச் சென்றான். வேலை முடிந்து அவளை அழைப்பதற்காக மூர்த்தி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான் தமிழ். அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்த டீக்கடையில் பாரதியின் தந்தை கேசவன் டீக் குடித்துக் கொண்டிருந்தார். அவரை பார்த்த தமிழ் பார்த்து விட்டு பார்க்காதது போல செல்ல முடியாது என்று எண்ணி அவர் அருகே வண்டியை நிறுத்தினான். அவனைக் கண்ட கேசவன் பரபரப்பாகி “எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை? டீக் குடிக்கிறீங்களா?”, என்று கேட்டார்.
“வெளி இடத்துல நான் டீ குடிக்கிறது இல்லை மாமா. நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”, என்று கேட்டான்.
“நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. எனக்கு இங்க டீ குடிச்சு பழகிருச்சு. வீடு பக்கத்துல தானே இருக்கு வீட்டுக்கு வாங்களேன்”, என்று அவர் அழைக்க அவன் எப்படி மறுக்க என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் யோசனையையும் அவன் பதில் சொல்ல முடியாமல் திணறுவதையும் கண்டு விட்டு “நீங்க யோசிக்கிறது எனக்கு புரியுது மாப்பிள்ளை. என்ன டா பொண்ணை கல்யாணம் முடிச்சி கொடுத்ததோட கிளம்பி போனவன் அதுக்கு அப்புறம் எட்டி கூட பாக்கலை. இப்ப வந்து நல்லவன் மாதிரி பேசுறான்னு பாக்குறீங்களா?”, என்று கேட்டார் கேசவன்.
அவர் சொன்னதை தான் அவன் மனதில் நினைத்தான் என்றாலும் அதை மறுத்து “அப்படி எல்லாம் இல்லை மாமா, பாரதியை கூப்பிட போகணும். மூர்த்தி சித்தப்பா வீட்ல காலைல விட்டுட்டு வந்தேன். இப்ப நான் வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருப்பா. எங்க ரெண்டு பேருக்காக அம்மாவும் வெயிட் பண்ணுவாங்க. அதனால தான் யோசிச்சேன். வேற எல்லாம் ஒண்ணும் இல்லை. இன்னொரு நாள் பாரதியை கூட்டிட்டு கண்டிப்பா வீட்டுக்கு வரேன்”, என்றான்.
“உங்க வீட்டுக்கு வந்தா நான் என் மனைவியோட தான் வருவேன்”, என்று அவன் சொல்லாமல் சொல்ல அதைக் கேட்ட கேசவனுக்கு மனது கஷ்டமாக இருந்தாலும் மகள் நல்ல இடத்தில் ஒரு நல்லவனுடன் வாழ்கிறாள் என்று நிம்மதியாக எண்ணிக் கொண்டார் கேசவன்.
“பாரதி மாதிரி நீங்களும் என்னை தப்பா தான் நினைப்பீங்க மாப்பிள்ளை. என்னோட சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு. பாரதி எங்க அப்பா எனக்கு எதுவும் செஞ்சதில்லைன்னு தான் உங்க கிட்ட சொல்லிருப்பா. அவ சொல்லலைன்னாலும் உண்மையும் அது தான். ஆனா நான் அவ மேல அன்பு வச்சிருந்தா அமுதா அவளை ரொம்ப டார்சல் பண்ணிருப்பா மாப்பிள்ளை”, என்று பேசிக் கொண்டே இருந்தார் கேசவன்.
“இது என்ன புதுக்கதை?”, என்று எண்ணிய தமிழுக்கோ இவர் கொஞ்சம் சீக்கிரம் என்னை விட்டா தேவலை என்று தோன்றி வைத்தது.
“உங்களைப் பத்தி அவ தப்பா எதுவுமே சொன்னது இல்லை மாமா”, என்று சும்மா சொன்னான் தமிழ்.
“ஆனா அது தான் மாப்பிள்ளை உண்மை. அவளை விட்டு நான் எப்பவும் விலகி தான் இருப்பேன். பாரதிக்கு எதுவும் கஷ்டம் வரக் கூடாதுன்னு தான் நான் அவளை விட்டு விலகி இருந்தேன். நான் பாரதிக்கு முக்கியத்துவம் கொடுக்காததுனால அமுதா பாரதியை எதுவும் செய்யலை. ஆனா நான் பாரதியை என் மக மகன்னு கொஞ்சிருந்தா நான் இல்லாத நேரம் பாரதியை என்ன செஞ்சிருப்பாளோ? அமுதாவுக்கு நான் அவளை கண்டுக்காம இருந்துருவேனோன்னு பயம். எல்லாரும் உன் புருஷனை கைக்குள்ள போட்டுக்கோ, இல்லைன்னா அவன் மூத்த தார பிள்ளைக்கு தான் எல்லாம் செய்வான்னு சொல்லி சொல்லி அவ மனசுல பதிய வச்சிருக்காங்க. அதனால தான் நான் அமுதா கைக்குள்ளே இருக்க வேண்டியதா போச்சு. மூர்த்தி பாரதியை ஹாஸ்டல் சேத்தப்ப சத்தியமா கஷ்டமா இருந்தாலும் அங்கயாவது சந்தோஷமா இருக்கட்டும்னு தான் நினைச்சேன். நான் பண்ணினது எல்லாம் சரின்னு சொல்லலை. ஏதோ உங்க கிட்ட சொல்லத் தோணுச்சு. பாரதியை நல்லா வச்சிக்கோங்க மாப்பிள்ளை. சந்தோசம்னா என்னன்னே தெரியாம வளந்த பிள்ளை. அடுத்த ஜென்மத்துலயும் அவ தான் எனக்கு மகளா பிறக்கணும். அப்பவாது அவளுக்கு நான் நல்ல அப்பாவா இருக்கணும்”, என்று கண் கலங்கிய படியே சொன்னார் கேசவன்.
“எனக்கு உங்க மனசு புரியுது மாமா. நான் பாரதியை நல்லா பாத்துக்குவேன். நீங்க கவலைப் படாதீங்க. உங்களுக்கு அவளைப் பாக்கணும்னு தோணுச்சுன்னா வீட்டுக்கு வாங்க. இல்லைன்னா ஒரு போன் பண்ணுங்க, நான் அவளை அங்க கூட்டிட்டு வரேன்”
“எனக்கு இன்னொரு பொண்ணு இருக்குல்ல? அவளை உங்களை மாதிரி ஒரு நல்லவன் கிட்ட பிடிச்சு கொடுத்த அப்புறம் பாரதி கிட்ட என் பாசத்தை காமிச்சிக்கிறேன் மாப்பிள்ளை. அது வரை அவளைப் பொறுத்த வரைக்கும் நான் எதுக்கும் உதவாத அப்பாவா இருந்துட்டு போறேன். மூர்த்தி மட்டும் இல்லைன்னா பாரதி ஒண்ணும் இல்லாம போயிருப்பா. சரி மாப்பிள்ளை நீங்க நேரங் காலத்தோட பிள்ளையைக் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க”
“சரிங்க மாமா வரேன், என்ன உதவின்னாலும் தயங்காம என் கிட்ட கேளுங்க”, என்று சொல்லி விடை பெற்ற தமிழ், நேராக மூர்த்தி வீட்டுக்கு தான் சென்றான்.
அவனைக் கண்டதும் “வாங்க தம்பி, உக்காருங்க”, என்று வரவேற்றார் மூர்த்தி.
“பாரதி கிளம்பிட்டாளா சித்தப்பா? எங்க யாரையும் வெளில காணும்?”, என்று கேட்டுக் கொண்டே அவர் போட்ட சேரில் அமராமல் அவர் அருகே திண்ணையில் அமர்ந்தான்.
“பாரதி அப்பவே நீங்க வருவீங்கன்னு கிளம்பிட்டா தம்பி. அவ கிளம்பினதும் என் மகன் முகத்தை தூக்கி வச்சிட்டு இருந்தான். அதான் அவனை சமாதானப் படுத்திட்டு இருக்கா”, என்று அவனிடம் சொன்ன மூர்த்தி வீட்டுக்குள் பார்த்து “ஏ புள்ள மீனா பாரதியை வரச் சொல்லு. தம்பி வந்துட்டு பாரு”, என்று குரல் கொடுத்தார்.
“இதோ வரேங்க”, என்று சொல்லிக் கொண்டு மீனா முதலில் வெளியே வர அவள் பின்னால் பாரதி வந்தாள். அவள் கையைப் பற்றிய படியே பிரவீன் முகத்தை தூக்கிக் கொண்டு வந்தான். அவனைக் கண்டதும் பாரதி முகம் மலர்ந்தது. “போகலாமாங்க?”, என்று பாரதி கேட்க அவனும் சரி என்றான்.
தமிழைப் பார்த்து “என்னது வந்த உடனே போறதா? இதோ அஞ்சு நிமிசத்துல டீ போட்டுறேன். நீங்க வருவீங்கன்னு வடை போட்டேன். சாப்பிட்டு டீ குடிச்சிட்டு அதுக்கு அப்புறம் பாரதியை கூட்டிட்டு போங்க”, என்று சொல்லி விட்டு மீனா உள்ளே செல்ல பாரதியும் அவள் பின்னே உள்ளே சென்றாள். அவள் சேலை முந்தானையை பிடித்துக் கொண்டு பிரவீனும் உள்ளே சென்றான்.
error: Content is protected !!