Skip to content
Post Views: 1,940
நேசம் 01
சென்னை…
வந்தாரை வாழவைக்கும் நகரம்,
காலத்திற்கே அடையாளமாய் உயர்ந்து நிற்கும் பெருமை.ஒவ்வொரு தெருவிலும் ஒரு கதையோ, நினைவோ, கனவோ பதிந்திருக்கிறது.
Advertisement
கடற்கரையில் அடித்துச்செல்லும் அலைகளும்,
மெட்ரோ ரயில்களில் விரைந்து செல்லும் கனவுகளும், வேலைக்காக பிசியாக ஓடும் மக்கள் கூட்டமும், அதிகாலை கோயில்களின் மணி ஓசையிலிருந்து, இரவொளியில் ஒளிரும் கழுகார் கடைகள்வரை சென்னை ஒரு நிமிடமும் உறங்காது.
ஒருபுறம் கலாச்சாரம், மறுபுறம் நவீனத்துவம் என இவை சேர்ந்தே இங்கே ஒரு தனி அழகை உருவாக்குகின்றன.
இன்று அந்த நகரம் காதலின் நிறத்தால் பொலிந்திருந்தது.
Advertisement
காதலர் தினம்…
Advertisement
காதல் வயப்பட்ட உள்ளங்களுக்காக ஒவ்வொரு தெருவும் ஒரு விழாவாய் மாறியது.
கால்கள் இணைந்து நகரும் ஜோடிகள், கைகளை தொட்டு உரையாடும் காதலர்கள்,
ரெஸ்டாரெண்டுகளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் காதலை வர்ணிக்கும் உறவுகள். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை காதலால் பயணிக்க, அனைத்து இடங்களிலும் காதல் பளபளத்து ஓடிக்கொண்டிருந்தது.
வருடாவருடம் இந்த நாளுக்காக பலரின் காத்திருப்புகள் உள்ளன. காதலை கூறுவதற்காக சிலரும், காதலை உணர்வதற்கு சிலரும், அதை மறுபடியும் மீட்டெடுக்க சிலரும்…
ஆனால் அவன் மட்டும்…
Advertisement
அங்கே அவன் மட்டும் தனியாக அல்லாது தனிமையில் அந்த கடற்கரையில் நின்றிருந்தான். அவனிற்கு துணையாக அவனின் காதல் மட்டும்.
இந்த நாளுக்காக எத்தனை பேர் காத்திருந்தாலும், இந்த நாளின் வருகையை தவிர்க்க அவன் போராடும் போராட்டங்கள் ஏறாலம்.
ஒருகாலத்தில் இந்த நாள் அவனுக்கு பிடித்த நாள் தான் அதிலும் குறிப்பாக இந்த நாளுக்காக அவன் செய்து வைத்த சேட்டைகள் சொல்லி மாளாது.
இப்போது அதனை நினைக்கையிலே அவனின் இதழ் மென்னகை புரிய, அடுத்த நொடியே அவன் அன்றைய பொழுது செய்து வைத்த செயல்கள் யாவுமே நினைவில் வர அவனை சாட்டையால் அடித்தது போல் இருந்தது.
காதல் என்பது தனித்துவமான, கவித்துவமான, உன்னதமான ஓர் உணர்வு. அவ்வபோது வந்து மறையும் கோபம் போல், துக்கம் போல், மகிழ்வு போல், அனுதாபம் போல், காதலும் மனதில் எழுந்து மறையும் ஒரு சாதாரண உணர்வு அல்ல. அது ஒரு மரபு, ஒரு வாழ்வு, ஒருவனின் ஆத்மாவாகவே உருமாறக்கூடிய நிலை.
அது நம்மை எங்கே அழைத்துச் செல்லும், எதற்காக வந்தது, எப்போது முடியும் என்பதைக் கூட நாம் உணர முடியாது. சிலருக்குப் புரிந்து கொண்டே காதல் வரும், சிலருக்கு காதல் வந்த பிறகே புரியும். சிலருக்கு காதல் வந்ததே புரியாது!
அவனும் அப்படித்தான்…
காதல் அவனை புரியாத புதிராகவே உலுக்கிக் கொண்டு வந்தது. காலம் கடந்தும் அது அவனிடமே வினா கேட்கும் அளவிற்கு வந்து நின்றது. பதில் தெரியாத ஓர் எதிர்பார்ப்பாக, துயரமான நினைவாக, மறைக்க முடியாத மௌனமாக…
அவன் வாழ்வில் அவள்… அவனின் மேகமலை.
அவன் வாழ்வில் எங்கும் எதிலும் அவள் பிராயணம் செய்தாள்.
லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டில் நம்பிக்கை கொள்ளாதவன், அவளை பார்த்த நொடியிலே காதலில் விழுந்தான்.
அவளோடான முதல் சந்திப்பை அவனால் என்றுமே மறக்க முடியாத ஒன்று தான்.
ரயில் நிலையத்தில் தான் அவளை அவன் முதன்முதலில் சந்தித்தது.
செமஸ்டர் விடுமுறை என்பதால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கேரளா செல்லலாம் என்று முடிவு செய்து ரயில் நிலையம் வந்திருக்க, அங்கே வைத்து தான் அவளை சந்தித்தது எல்லாம்.
ரயில் வர சற்று நேரம் இருக்கவும் நண்பர்களுடன் கதை வார்த்து கொண்டிருந்தவனின் கவனம், அவர்களை கடந்து சென்ற ஒரு கூட்டத்தில் பதிந்தது. அதிலும் ஒருவளின் மீது நிலைத்தது அவனின் பார்வை!
ஒரு பிரியாணி வாசனை பசியை தூண்டும் விதம் போல், ஒரு சில தருணங்கள் மனதின் ஓட்டத்தை திசைமாற்றிவிடும். அவனுக்கு அந்த தருணம் அதுவாக இருந்தது.
அவள்…
வெள்ளை நிற குர்தா அதற்கு ஏற்ப நீல நிறத்திலான ஜீன்ஸூம் காதில் சிறிதாக குந்தன் ஈயரிங்கும் என பயணத்திற்கு ஏற்ப எளிமையான உடையே அணிந்திருந்தாள்.
அவளின் முகத்தில் ஒருவித கவலை தென்பட்டது போல் தோன்ற, மனது என்னவோ வேகமாய் அடித்து கொண்டது. ஒரு வித உந்துதல் வேறு அவனுள்! புரியாத நிலையில் பார்வை முழுதும் அவளிடமே.
சற்று தூரத்தில் இருந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளை ஒரு வயது மிக்கவர் திட்டிக் கொண்டிருக்க, அவளோ எதுவும் பேசாது அமைதியாக மொபைலை பார்த்தப்படியும் அந்த வயது மிக்கவரை பாவமாய் பார்த்தப்படியும் அமர்ந்திருந்தாள்.
அவளுள் ஒருவித கலக்கம். கைகள் வேறு நிலையில்லாது பிசைந்து கொண்டிருக்க, அவன் கண்களில் சுவாரசியம் கூடியது. அவர்களை கவனித்த படியே நின்றிருந்தான்.
அவளின் பார்வையில் ஒரு வித தேடுதல், பதற்றம், கவலை என எல்லாம் ஒன்றாக கலந்திருந்தன.
அவளின் விரல்களில் பிணைந்திருந்த மொபைல் அவள் அந்த பதற்றத்தை மறைக்க முற்படுவதை காட்டியது.
அவனின் நண்பர்கள் பேசுவது எல்லாம் அவனின் செவிப்பறைக்குள் விழுந்தாலும் எதுவும் அவனின் மூளைக்குள் பதியவில்லை. அவனின் முழு கவனமும் அவளிடமே இருந்தது.
அவள் பேசுவதற்கும் இல்லை, மறுமொழி சொல்வதற்கும் இல்லை. ஆனால் அவளின் கண்கள் மட்டும் சொல்லி முடிக்காத எதையோ பேசிக் கொண்டிருந்தது போல் உணர்வு.
அவளின் பார்வை பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவாறு நிலைத்தது.
எதையோ எதிர்பார்ப்பது போல் கண்கள் வேறு அலைமோதிக் கொண்டிருந்தது.
அவள் கூடவே இருந்த வயதான நபரும் கூட கடிகாரத்தை பார்த்தப்படி தான் இருந்தார்.
அவன் மனதில் ஏதோ ஓர் உணர்வு.
அவளை உன்னிப்பாகக் கவனிக்க வைக்க, அவள் யாரையோ தேடுகிறாளோ? இல்லை ஏதேனும் பிரச்சனையில் இருக்கிறாளோ? என்ற யோசனைகள் எல்லாம் அவன் மனதில் உதித்தது.
அவள் அருகே செல்லவேண்டும் என மனம் உந்த, மெல்ல கால்கள் மனதிற்கு ஏற்ப இயைந்து கொடுத்தது.
அதற்குள் அவன் கூடவே இருந்த நண்பர்கள் அவன் செல்வதை கண்டு, “என்னடா, வண்டி வந்துடுச்சா என்ன?” என்றார்கள்.
எதுவும் பேசாது அந்த நெரிசலில் அவளை பார்வையால் தொடர்ந்து கொண்டிருக்க, நண்பர்களில் ஒருவனான டோனி என்பவன் அவனின் தோள் தொட்டு அழைத்தான்.
“மச்சான்!!!”
“என்ன டா?” சற்று எரிச்சல் மிகுந்த குரலில் திரும்ப,
“வண்டி வந்துடுச்சா என்ன?”
“இல்லையே ஏன் கேக்குற?”
“இல்ல நீ நடந்தியா அதான் கேட்டேன்” என்ற டோனி அவனை காண,
“சும்மா தான் டா”என்று மழுப்பினான்.
” சரி நீ இங்கேயே இரு நான் போய் தண்ணி பாட்டில் வாங்கிட்டு வரேன் ” என்ற டோனி நகர்ந்து விட, மீண்டும் பார்வையை அங்கே திருப்பினால் அவ்விடம் காலியாக இருந்தது.
அவள் போய்விட்டாளா மனம் அதிர்ந்தது.
ஒரு நிமிடத்தில் அவள் இருந்த இடம் காலியாக, பக்கத்தில் எங்கும் இருக்கிறாளா என்று பார்வையால் தேடிக்கொண்டே நின்றான் அவன்.
மனதில் ஏதோ கவலை, காரணமில்லாத வெறுமை அவனை சூழ்ந்தது.
நண்பர்கள் மீண்டும் கதையை தொடர, அவன் மட்டும் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
தண்ணீர் பாட்டில் வாங்கி வந்த டோனி நண்பனின் பார்வையை கவனித்து,”மச்சான், என்னடா அங்கேயே பார்த்துட்டு இருக்க?” கேட்டும் பதில் வராது போக, நண்பனை புரியாமல் பார்த்தான் டோனி வில்லியம்ஸ்.
அவனுக்குள் அவனே பேசிக்கொண்டிருக்க, எங்கே நண்பனின் குரல் கேட்டு அவனுக்கு பதிலளிப்பது எல்லாம்.
அவள் யார்? ஏன் அவ்வளவு பதற்றமாக இருந்தாள்? யாருக்காகக் காத்திருந்தாள்? திடிரென மறைந்து விட்டாளே எப்படி மீண்டும் காண்பது? என் மனம் அவளை தேடுவது ஏன்?என அவனுள் அடுக்கடுக்கான கேள்விகள்.
பொதுவாக அவன் யாரையும் இப்படி கவனித்ததில்லை. ஆனால் அவள் அவனை என்னவோ செய்து விட்டாள்.
ஒரு சில நொடிகள் மட்டுமே அவளைப் பார்த்திருந்தான். ஆனால் அந்த நொடிகள் முழுக்க, அவள் பார்வையில் இருந்த அந்த தேடுதல், அந்த கவலை என ஏதோ ஒன்று அவள் வாய் வழியாக சொல்லாத கதையை அவனுக்கு அவள் கண்கள் சொல்லிக் கொண்டிருந்தது போலான பிரமை அவனுள்.
அவள் யாரென்று கூட தெரியாது. பார்த்த சில நொடியிலே அவளை பற்றின சிந்தனைகள் மனதிலோடும் என நினைத்து கூட பார்க்கவில்லை.
அவளை மீண்டும் காண முடிகிறதா என்று கண்கள் அலைப்பாய தொடங்க, கூட்ட நெரிசலிலும் மக்களின் ஓட்டதிலும் அவன் தேடுதல் தேடுதலாகவே தொடர, ஒரு வித சோர்வு அவனை வாட்டியது.
அதற்கு பின்னான அவனின் அன்றைய தேடுதல்கள் தேடல்களாவே முடிவடைந்தது.
அதுவரையிலும் அவன் நம்பிராத லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டில் முழுதாக வீழ்ந்தான்.
அவள் பெயர் தெரியாத நிலையிலும் அவன் மனதில் முழுதாக இடம் பெற்றிருந்தாள் அவள்.
முதல் சந்திப்பிலே முற்றிலுமாய் அவளுள் தொலைந்து போனான்.
தற்போதைய நிஜம்…
வருடங்கள் கடந்தாலும் இப்போது நினைத்து பார்க்கையிலுமே அவன் இதழ்கள் மெல்லிதாக விரிந்த போதிலும் அவனின் மீசை அதனை மறைத்துவிட்டன.
மெல்ல அவன் கண்களை திறக்க நிழல் நிஜமில்லாது போக முகம் கசங்கியது.
கடற்கரையின் காற்று அவன் முகத்தில் மோதியது. அவள் நினைவுகள் அதைவிட வேகமாக மோதி அவனை உடைய செய்தது.
காதலர் தினமும் வந்துவிட்டது. ஆனால் அவள் இல்லை. மனம் ஏற்க மறுக்க அவள் தன்னோடு இல்லாத இந்த நொடியை அறவே வெறுத்து ஒதுக்கினான்.
உலகமே அவனின் மேகமலை தான் என்றிருந்தவனுக்கு இப்போது அவள் இல்லாது போக உலகமே இருளாய் தெரிந்தது.
வாழ்வே கசக்க நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த அலைகளையே வெறித்து பார்த்திருந்தான்.
********
மங்கிய மாலை வேளையில்,
“ப்ரோ, இன்னைக்கு எப்படியாவது நல்ல வீடியோ எடுத்துட்டு தான் போகுறோம். இன்னைக்கு மட்டும் நாம கொடுத்த வேலையை முடிக்கலனா முடிஞ்சோம்” என ஒருவள் கையையே கத்திப்போல் கழுத்தில் கோடு போட்டு காட்டி சொல்ல,
“முடிச்சிடலாம் ப்ரோ ஒரு பிரச்சனையும் இல்ல. இந்த பீச்ல நமக்கு ஒரு ரெக்கார்டிங் கூடவா கிடைக்காம போக போகுது. சில் யா” என்றான் கூட வந்த சந்தோஷ் என்பவன்.
“நீ தான் இந்த காலத்து லவ்வ மெச்சிக்கனும். அவனவன் சிச்சுவேஷன்ஷிப், டெக்ஸ்டெஷன்ஷிப், பென்சிங், கேட்விஷிங், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ் ஃபைனலி கோஸ்ட்டீங்னு போயிட்டு இருக்காங்க. இதுல நம்ம எதிர்பார்க்கிற லவ்லாம் கிடைக்காது ப்ரோ” என்றாள் சற்று எரிச்சலான குரலில்.
இன்றைய காலகட்ட காதலை எல்லாம் கேட்கையிலே குமட்டிக் கொண்டு வருகிறது. முதல் நாள் சந்திப்பு இரண்டாம் நாள் நட்பு மூன்றாம் நாள் டேட்டிங் என்று சென்று கொண்டிருக்கிறது இக்கால காதல்.
எதையாவது கேட்டால் வேறு பூமர் என்கிறது இன்றைய சமூகம்.
இப்படியே சென்றால் நாடு எங்கே வளர்ச்சடைய. எப்போதும் போல் மக்கள் தொகையில் தான் வளர்ந்து நிற்போம்.
“விடு ப்ரோ பாத்துக்கலாம். ஒரு நைன்டீஸ் கிட்டாவது கிடைக்காமலா போய்ட போறாங்க” என்றவன் கேமாரவை தூக்கிக் கொண்டு நடந்தான். அவனோடு அவளும் கூடவே இருவரும் வந்தனர்.
மாலை வரை வீடியோ எடுத்தப் போதிலும் பெரிதாக சொல்லும் அளவிற்கெல்லாம் காதல் கதைகள் பெற வில்லை.
என்னவோ அவளுக்கு எதுவும் திருப்தி அடையவில்லை.
முடியும் அளவிற்கு தேவையான ஃபுட்டேஜ் எடுத்தவர்கள் செல்லலாம் என முடிவெடுக்க, அப்போது தான் ஒருவன் கடலை வெறித்தப்படி தனிமையில் இனிமை காண்பது தெரிய, அவனிடம் சென்று கேட்டால் எதாவது கண்டனட் கிடைக்க வாய்பிருக்கு என யோசித்தாள்.
“சந்தோஷ் ப்ரோ அங்க பாரேன்” என ஒருவனை கைக்காட்ட,
“என்ன?” என்றான்.
“ப்ரோ! அங்க கொஞ்சம் முன்னாடி பாரு தாடியோடு ஒருத்தங்க நிக்கிறாங்க. அவங்க கிட்ட கேட்டா கண்டிப்பா ஏதாவது கண்டன்ட் கிடைக்க வாய்பிருக்கு லெட்ஸ் ட்ரை” என்றாள் ஆர்வமாக.
“வா ஒரு ட்ரை கொடுத்து பாக்கலாம் ” சொல்லி அவளோடு சென்றான்.
“எக்ஸ் க்யூஸ் மீ சார், ஒரு நிமிஷம்…” அவள் தாடியுடன் இருந்த அந்த ஆறடி ஆண்மகனை அழைக்க,
அவனோ நின்ற இடத்திலிருந்து மெதுவாக குரல் வந்த திசையை திரும்பி பார்த்தான்.
கையில் சிறிய வடிவிலான மைக்கை வைத்திருந்தவள் தான் அவனை அழைத்திருந்தாள்.
கைமைக்கேமரா, மைக்ரோபோன் என்ற ஒரு குழு மனிதர்கள் அவளுடன் கூடவே நின்றனர்.
“சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். நாங்க ஒரு யூட்டூய்ப் சேனல்ல இருந்து வந்துருக்கோம்” என்று அந்த சேனலின் பெயரை கூறி அவர்களை அறிமுகப்படுத்தியவளை, கேள்வியாக நோக்கினான்.
“என்ன வேணும் உங்களுக்கு?” சற்று கடுகடுத்த குரலில் கேட்க,
‘அய்யோ! இது ஒரு சிடுமூஞ்சி போலயே. தெரியாம மாட்டிக்கிட்டோம் போல. நேரமே சரியில்லை போ’ மனதினுள் நினைத்தவள் வெளியில் புன்னகை முகமாய்,
“சார், இன்னைக்கு காதலர் தினம்… லவ்வர்ஸ் ஸ்பெஷல் ஷூட்டிங் நடக்குது. உங்க காதல் கதை சொல்ல விருப்பமா?” என மைக்கை காட்டி வினா எழுப்பி அவனை காண, அவனோ அவர்களை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க சம்பாதிக்க நான் தான் கிடைச்சேனா. இப்படி சம்பாதிக்க வேற ஏதும் வேலை செய்யலாம். காசு சம்பாதிக்க அடுத்தவங்களை யூஸ் பண்றீங்க கெட் லாஸ்ட்” கத்திவிட்டு நகர பார்த்தவனை நிறுத்தியவள்,
“சார், வார்த்தைகள் வலிமையானவை.அதை எப்படி பயன்படுத்தனும்னு இருக்கு. வாய் இருக்குன்னு எதையும் பேசக்கூடாது. பேசிய வார்த்தைகளை திரும்ப வாங்கிட முடியாது சார். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம் ” என்றவள் தன் குழுவுடன் நகர்ந்து விட்டாள்.
போகும் அந்த குழுவை ஒருமுறை பார்த்தவன், பின் கால் போன போக்கில் தன் நடையினை தொடர்ந்தான்.
பின் அந்த நாளின் முடிவில் அவன் வெறுக்கும் அந்த இடத்திற்கு செல்ல, அவன் மனம் வலியில் துடித்தது.
இருப்பினும் இந்த வலி தனக்கு தேவை என்றே எண்ணினான். தன்னால் தன் தவரால் அவள் அனுபவித்த வலிக்கு இப்போது தான் அனுபவிக்கும் வலியெல்லாம் சிறு எறும்பை போன்றது.
மழை வேறு சாரலாய் பெய்ய துவங்கிய நேரம், மந்தமான காற்று வீசத்துவங்கியது.
“மேகமலை என்கிட்டயே வந்துடு மா. என்னால நீயில்லாம ஒரு நொடி கூட இருக்க முடியல டி” என்றவன் அந்த இடத்தில் நின்று மௌனமாய் அரற்றினான்.
“இங்க வலிக்குது டி” என அவள் வசிக்கும் இதயத்தை சுட்டிக் காட்டி காற்றில் பேச, சாரலாய் துவங்கிய மழை அடித்து பெய்ய துவங்கியது.
அந்த மழையிலும் அதே இடத்தில் அவள் கொடுத்து விட்டு சென்ற காயங்களுடன் நின்றிருந்தான் அவன்.
இத்தனை வலிகளுக்கும் சொந்தக்காரன் மேகமலையின் அன்பிற்கு ஏங்கி தவித்து நிற்கும் அவன்… அன்பு… அன்பரசன்.
அவனின் நேசத்திற்கு நியதி கேட்டு அவளிடம் அழைப்பு விடுத்து நிற்பவன்….
காலமே அவனின் நேசத்திற்கு பதில்…
error: Content is protected !!