Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எந்தன் ஜீவநதி

Enthan Jeevanathi 4 2

அவனின் மௌனமே இனி அதை பற்றி கேட்டால் பேச மாட்டான் என்பதை உணர்த்த பேச்சை மாற்றி,
“ஆமா.. எதுக்குடா பணத்த அனுப்பியிருக்கே எனக்கு..?” என்றதும்,


Advertisement

“ஆடி நோம்பி வருதே வாணி. உனக்கு மாமாக்கு பாலாக்குட்டிக்கு ட்ரஸ் எடுக்கத்தான். பத்தலன்னா சொல்லு அனுப்பிவிடறேன்..” என்றான் ஆதூரமாய்.

Advertisement

“இன்னுமா எனக்கு இதெல்லாம் செய்யனும்..? மாமா சத்தம் போடுவாருடா..” எனச்சொல்ல,

Advertisement

“ஏன்..? அவருகிட்ட சொல்லு.. என்னோட அக்காக்கு நா செய்வேன்.. அதுல தலையிடக்கூடாதுன்னு..” என்றான் ரோசமாய்.

Advertisement

“இத்தன எனக்கு செய்யற.. நா வெளியூருல அசலுக்கு கட்டி வந்திருந்தாலாவது உன்னொய்ய என்னோட கூட்டியாந்திருப்பேன்.
சக்தி மாமாவ கட்டுனதால நானும் இங்க இதே ஊருல இருக்கறதால தானே.. உன்றனால என்ற ஊட்டுக்கு கூட வரமுடியாம ஆகிடுச்சு..” என வாணி அழுகையை அடக்க முயன்ற குரலில் பேச,
“ஏய் வாணி, எதுக்கு திரும்ப மூக்கை சீந்தறே..? எனக்கு என்ன கொறச்சல் சொல்லு..?
ஜம்முன்னு கை நிறைய சம்பாதிக்கறேன். சுதந்திரமா வாழறேன்.. யாரு இருக்கா என்னைய தட்டிக்கேட்க..?” என்று பொய்யாய் வரவழைத்த உற்சாக குரலில் சொல்ல,
“போடா.. நீ பொறந்ததுல இருந்து தூக்கி வளர்த்தவடா நானூ.. உன்னைய எனக்கு தெரியாதா..?
நீ சொந்த பந்தத்தோட வாழனுமுன்னு எம்புட்டு ஏங்கி கிடக்கறேன்னு எனக்கு தெரியாதுன்னா இருக்கே..?” என்றவரிடம்,
‘தன் நாடகம் பழிக்கவில்லையே..!’ என்று ஏமாற்றமாக இருந்தாலும்,
‘தன்னை.. தன் உணர்வை.. உணர்ந்து கொள்ளும் ஓர் உறவு.. தனக்கும் இருக்கிறது..’ என்ற நிறைவே அவனுக்கு அத்தனை இன்பத்தை கொடுக்க,
“அக்கா..!! என்ன நீ..? அதெல்லாம் நான் நல்லா தான் இருக்கேன்..” என்றான் ஆத்மார்த்தமாக.
அவனின், “அக்கா..” என்ற அழைப்பே அவனின் மனதை சொல்ல,
“என்னமோ போடா.. உனக்கு ஒரு கண்ணாலத்த பண்ணி.. வாரவகிட்ட உன்னைய ஒப்படச்சு.. நீயும் புள்ளகுட்டி ன்னு வாழறத பார்த்துட்டா போதும்டா.
எனக்கு வேற எந்த ஆசையும் இல்ல.. அந்த நாளு வரத்தான் காத்துட்டே இருக்கேன்.
அப்புடி உன்ற வாழ்க்கையில வெளக்கேத்த போற மவராசி எங்கன இருக்காளோ..?” என்று வாணி சொன்ன நேரம்,
உண்டு கொண்டிருந்த உணவு மூக்கில் ஏற அப்படி ஒரு இருமல் யமுனாவிற்கு.
“ஏன்டீ.. எதுக்கு இப்படி அவசர அவசரமா அள்ளி வாயில அடைக்கறவா..?
இன்னைக்கு லீவு நாளு தானே. சித்தே.. மெதுவா தான் சாப்பிட்டா என்னடீ..?” என்று வாய் திட்டினாலும் வசந்தி தண்ணீரை எடுத்து கொடுத்து அவளை பருக வைக்க, சாரதா அவளின் முதுகை நீவி விட்டபடி இருந்தாள்.
ஓரளவு நிதானத்திற்கு வந்தவள், “என்னைய யாரோ நினைக்கறாங்க அக்கா..! அதான் பொறையேறி போச்சு..” என்றாள் கண்களில் நீர் திரள.
“உன்னைய நினைக்கற ஆள் எல்லாம் இப்ப தானே வாய் வலிக்க பேசி முடுச்சாங்க. உங்க வீட்டு ஆள் இல்லாம வேற யாருடீ உன்னைய நினைக்க போறா..?” என்ற வசந்திக்கு தெரியாமல்,
முகத்தை கீழே குனிந்து சாப்பாட்டு தட்டை பார்ப்பது போல பாவனை செய்தவளின் இதழோ, கள்ளச்சிரிப்பை உதிர்க்க, மனமோ “கண்ணழகா..!! என்ன நினைச்சீங்களா..?” என்று ஆசையாய் கொஞ்சிக்கொண்டது தீனாவை.
******
அடுத்து வந்த இரண்டு நாட்கள் தீனாவிற்கு சாதாரணமாக கழிய யமுனாவிற்கு பெரும் யோசனையோடே கழிந்தது.
தங்கை உடன் இருக்க வருவது ஒருபுறம் சந்தோஷத்தை தந்த போதும், “நம்ம பொழப்பு தான் இப்படி ஆகிடுச்சு.. அவளாச்சும் கொஞ்ச வருஷம் சந்தோஷமா இருக்கட்டுமுன்னு பார்த்தா.. அதுக்கும் வேட்டா..!!” என்று அவளுக்காக பரிதாபமும் கொண்டது.
அதோடு, ‘தன் கண்ணழகனை பார்த்து.. விரும்பும்.. விசயத்தை தங்கை கண்டு கொண்டாள்..!’ என்ற பயமும் எழுந்து அவளை பாடாய் படுத்திக்கொண்டிருந்தது.
அன்று இரவு கங்கா திருப்பூர் வருவதாய் இருக்க, “அக்கா, நீங்க புது பஸ் ஸ்டாண்ட் வந்து தானே பஸ் மாறனும். நா நேரா அங்கே வந்து கங்காவ கூப்புட்டுக்கறேன்..” என தங்கையை உடன் அழைத்துவருபவரிடம் சொன்னவள்,
அதே போல சரியாக அவர்கள் வரும் நேரத்தை கணக்கிட்டு அங்கு சென்று கங்காவை கூட்டிவந்தவரிடம் தன்னிருப்பிடத்தின் முகவரியை சொல்லி,
“அக்கா, நேரங்கெடச்சா அங்கே வாங்க..” என அழைத்துவிட்டு தங்கையோடு அவள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
 சாரதாவிற்கும், வசந்திக்கும்.. ‘கங்கா வந்து தங்களோடு தங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை..’ என்றுவிட யமுனாவிற்கு நிம்மதியே.
நேரில், ‘யமுனாவின் தங்கை..’ என வந்தவளை கண்டு ஆச்சர்யமே இருவருக்கும்.
ஏனெனில், கங்கா.. யமுனாவிற்கு அக்கா.. எனும்படியான தோற்றத்தில் இருந்தாள். உயரம் முதற்கொண்டு.. உடல் பருமன் வரை.. அனைத்தும் யமுனாவிற்கு நேர் எதிர் கங்கா.
“அடியேய்.. உண்மைய சொல்லு. நீ அக்காவா..? இவ அக்காவா..?” என சாரதா கிண்டலாக கேட்க,
“போங்க அக்கா.. போற இடம் எல்லாம் இதையே தான் கேட்கறாங்க.. இவ அளவில்லாம வளந்து வச்சா.. நானென்ன பண்ண..?” என யமுனா மூக்கை சுழித்து சிணுங்க,
“அய்யோ.. பாப்பாக்கு கோபம் வந்திடுச்சா..?” என வசந்தி கிண்டலடிக்க,
அவளின், ‘பாப்பா..’ என்ற அழைப்பு, யமுனாவிற்கு தன்னவனை நினைவு படுத்த மெல்லிய புன்னகை அவளிதழில்.
அதை.. அவர்கள் அவள் சமாதானம் ஆனதற்காக என கொண்டு, அவளை விடுத்து மூவரையும் பார்த்து அமர்ந்திருந்த கங்காவிடம் திரும்பி பேச ஆரம்பித்தனர்.
ஏற்கனவே போன் மூலமாக ஓரிரு முறை பேசியிருந்தாலும் நேரில் பார்க்கும் போது பேசுவது போல வராதே..!
சிறிது நேரம் சென்றும் புன்னகை முகமாய் அமர்ந்திருந்த யமுனாவிடம், “ஏன்டீ, நம்ம கம்பெனிக்கே இவள கூட்டிட்டு வர்றீயா..?” என்று வசந்தி கேட்க,
அவளிடமிருந்து பதிலின்றி போக, அவளின் கையை பிடித்து உலுக்கி, “அடியேய்.. என்ன உட்கார்ந்துட்டே தூங்கறையா..?” என்றாள் கடுப்பாக.
அப்போது தான் தீனாவின் நினைவிலிருந்து மீண்டவள் வசந்தி மீண்டும் அதையே கேட்ட பிறகு,
“ஆமாக்கா.. வேற எங்கே விட..? இங்கேன்னா உங்க யாருக்காவதுக்கு கை மடி வேலை பார்க்க சொல்லலாமுன்னு பார்த்தேன்..!” என்றாள் யமுனா யோசனையாகவே.
‘கை மடி வேலை’ என்பது.. டெய்லருக்கு ஒரு அசிஸ்டென்ட் போல.
உதாரணமாக, டாப் தைக்கும் போது.. கை வைக்க ஒரு புறம் அவர் தைத்து முடிக்கும் போது அடுத்த டாப்பில் கையை நல்லபக்கம் கெட்டப்பக்கம் மாறாமல் சரியாக பொருந்தி போவது போல வைத்து தரவேண்டும்.
அதை தைத்ததும் அடுத்த பிஸை சரியாக வைத்து கொடுத்து விட்டு மறுபடியும் மறு கை வைக்க தயாராக அடுத்த முறை வைக்க வேண்டும்.
இப்படி நின்று கொண்டே செய்வது ஆரம்பத்தில் மிக மிக கடினமான ஒன்றாக தான் இருக்கும்.
அதிலும் தைப்பவரின் கை வேகத்திற்கு வேலை பார்க்கவில்லை என்றால் அதற்கும் மண்டகப்படி உண்டு.
பெரும்பாலும் ஷிஃப்ட் வேலை பார்ப்பவருக்கு கை மடியாய் போனால் தப்பிக்கலாம்.
வைத்து கொடுக்கும் வரை அவர்களும் காத்திருந்து நேரத்தை கடத்தலாமே.. அப்படி..!
ஆனால் பிஸ் ரேட்டில்.. அவர்களுக்கு அதிக வருமானம் வேண்டும் என்பதனால் அவர்களின் வேகம் அதிகமாய் தான் இருக்கும்.
இப்போது இதில் மிகப்பெரிய சிக்கலே சாரதா, வசந்தி இருவரும் யமுனா போல பிஸ் ரேட் ஓவர் லாக் டெய்லர்கள்.
ஏற்கனவே, அவர்களுக்கு பழக்கமான கைமடி இருக்க, ‘கங்காவை என்ன செய்வது..?’ என்ற குழப்பம்.
அதனாலேயே தயங்கி யமுனா சொல்ல, “எங்களுக்கு ஆள் இருக்கே யமுனா.. வேணுமுன்னா ஒன்னு செய்.. நாளைக்கு கூட்டிட்டு வா.. பஹதூர் அண்ணாகிட்ட கேட்டு எதாவது ஏற்பாடு பண்ணலாம்..
இப்ப வேற டல் சீசன்.. கைமடிக்கு எடுக்கலன்னா வெட்டி அடுக்கவாச்சும் சேத்துக்க சொல்லலாம்..” என்று தொடர்ந்து அவர்களின் கம்பெனி விசயங்களை பேச, அமைதியாய் கேட்டு அமர்ந்திருந்தாள் கங்கா.
கங்காவிற்கு இவர்கள் பேசுவதை கேட்க.. ஆர்வம் ஒரு புறமும், பயம் ஒருபுறமும் ஆட்கொள்ள அன்றைய இரவில் ஆழ்ந்த தூக்கம் கூட வர மறுத்தது.
காலையில் மூவரும் ஆளுக்கு ஒரு வேலை.. என செய்வதை பார்த்தவள், அவர்களுக்கு தன்னாலான வேலையை அவர்கள் சொல்லும் வண்ணம் இல்லாமல் தானே முன்வந்து செய்து கொடுக்க ஆரம்பிக்க,
“பரவாயில்ல யமுனா.. உன்னோட தங்கச்சியும் சுதானமா பொழச்சுக்குவா..” என்ற மற்ற இருவரின் பாராட்டில் சின்ன புன்னகை சிந்திய கங்காவை.. யமுனாவை போலவே அன்பாய் அரவணைத்து கொண்டனர் இருவரும்.
அதில் பெரும் நிம்மதியும் நிறைவும் யமுனாவிற்கு.
உடன் இருப்பவர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் வரும் விளைவால் தானே ஏற்கனவே இருந்தவர்களிடமிருந்து விலகி மூவராய் மாறி தங்கியிருக்கிறார்கள்.
இப்போது தங்கையை அவர்கள் தன்னை போலவே தாங்கி கொள்வார்கள் என்பதில் உண்டானதே அந்த நிம்மதி.
அதே நிறைவோடு நால்வருமாக கிளம்பி டி எம் டெக்ஸிக்கு வந்து சேர்ந்தனர்.
இதுவரை.. தீனாவின் பார்வையில் பட்டும்.. அவனை தொடரும், பார்வைக்குரிய பாவை அவள்.. என கண்டுபிடிக்காதவன்,
அன்றே.. அதை கண்டு கொள்ள காரணியாக மாறப்போகிறவளாய்.. அந்த கம்பெனிக்குள் காலடி எடுத்து வைத்தாள் கங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!