Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேற்று பார்த்த நிலா முகம் – 21

“ராஜு” என்று யாரோ பின்னால் நின்று அழைப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தவன் கொஞ்சம் அதிர்ந்தான், கூடவே ஓர் ஒரு சலிப்பும் தோன்றியது அவனுக்கு.

ஆமாம்!

அழைத்தது அவன் அண்ணன் ராமு!

ஷ்.. அப்பா, இவன் என்ன டிராமா போட வந்திருக்கிருக்கானோ தெரியலையே! மிகவும் எரிச்சலாகவும் சலிப்பாகவும் இருந்தது!



Advertisement

எப்படி தான் கொஞ்சம் கூட வெட்கம் ரோசம் மானம் எதுவும் இல்லாமல் மீண்டும் இதே முகத்தோடு என்னிடம் பேச வருதுங்களோ தெரியல!

அது சரி.. காசு தான் பிரதானமா நினைக்கிறவங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாத எக்ஸ்ட்ரா லக்கேஜ்! அதை தூக்கி சுமப்பார்களா என்ன?

அது கூட பரவாயில்லை. இத்தனை வருசமாக தன்னை நம்பி இருந்த ஒருத்தனுக்கு துரோகம் பண்ணின,

Advertisement

பெத்து வளர்த்த அம்மாவை யாருமில்லாத அனாதை போல முதியோர் இல்லம் போக வைத்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம எப்படி தான்,

Advertisement

இப்படி என்னைத் தேடி வந்து பேச முடியுதோ தெரியல என்று உள்ளுக்குள் குமைந்தான் ராஜு!

இருந்தாலும் இந்த டீக்கடையில் , ஒரு பொது இடத்தில் வைத்து அவனிடம் வழக்காட விரும்பாமல்,

“என்ன சொல்லு” என்றவன்,

Advertisement

“இங்க வச்சு எதுவும் பேச வேணாம், என் கார் அங்க நிறுத்தி இருக்கேன்.

அதுல உக்காந்து பேசலாம் வா” என்று சொல்லி ராமுவை காருக்கு அழைத்து சென்றான்.

“ம்ம். இப்ப சொல்லு. எதுக்கு என்ன பார்க்க வந்திருக்க?” என்றான் முகத்தில் எதையும் வெளிபடுத்தாமலே!

“என்னத்த சொல்ல? நடக்கிறது ஒண்ணும் ஒண்ணும் அப்படியே சந்தோசத்துல மிதக்கிற மாதிரி தான் இருக்கு!

கூட பிறந்தவங்க நாங்க ரெண்டு பேர் குத்துக்கல்லாட்டம் இருந்தும், நீயும் அம்மாவும் ஒரு வார்த்தை, ஒரு பார்மாலிட்டிக்கு கூட எங்கள உன் கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்ல இல்ல?

அவ்வளவு தூரம் நாங்க வேண்டாத ஆளா போய்ட்டோம் இல்ல!” என்று மிகவும் வருத்தமான குரலில் பேசினான் ராமு.

ராஜு அலர்ட்.. குறளி வித்தை காண்பிக்கிறான் உன் அண்ணன். ராஜுவின் உள் மனது எச்சரித்தது!

“அது அம்மா தான் அப்படி பண்ணினாங்க. நான் என்ன பண்ண முடியும்!”

“அது சரி.. அம்மா தான் ஏதோ கோபத்தில் அப்படி சொன்னாங்கன்னா, உன் மாமியார் வீட்டு ஆளுங்களுக்கு கொஞ்சமாச்சும் புத்தி வேண்டாம்!

அவங்க கூட எங்க கிட்ட சொல்லவே இல்லை!”

“அண்ணியும் அக்காவும் அவங்க வீட்டு ஆளுங்கள அவ்வளவு அசிங்கப்படுத்தி பேசின பிறகு எப்படி திரும்ப உங்க கிட்ட எல்லாம் பேசுவாங்க.

சரி.. இப்ப எதுக்கு பழச எல்லாம் பேசிட்டு இருக்கணும்?

அந்த பேச்சை விடுண்ணே, எப்படி கல்யாணம் ஆனா என்ன, அதுக்கப்புறம் லைஃப் ஸ்மூத்தா போனா போதும்!”

“எங்க ஸ்மூத்தா போக போகுது. பேசாம, இப்ப செஞ்சுகிட்டு இருக்கிற மாதிரியே டாக்ஸி ஓட்ட வேண்டியது தானே!

எதுக்கு பிசினெஸ் எல்லாம் ஆரம்பிக்கிறேன்னு இழுத்து விட்டுட்டு இருக்கிற? அகல கால் வைக்கிற இப்ப!

இது எல்லாம் தேவை இல்லாத வேலை!

பேசாம பிளாட்டை வித்து பணத்தை பாங்கில் டெபொசிட் பண்ணி வட்டியை வாங்கி நிம்மதியா சாப்பிட்டுட்டு இருக்காம, தேவையா இதெல்லாம்!”

“எங்கண்ணே மகி சொன்னா கேக்க மாட்டேங்குது. இப்ப நமக்கு வயசு இருக்கு, இப்ப ரிஸ்க் எடுக்கலைன்னா எப்ப எடுக்கிறதுன்னு சொல்லி ஒரே பிடிவாதம்!”

“அப்படியென்ன பிடிவாதம் உன் பொண்டாட்டிக்கு! பார்த்து சூதானமா இருந்துக்கோ. உன் அண்ணி சொன்னா.

நீ ஆரம்பிக்க போற பிசினஸ்ல அவளையும் பார்ட்னரா சேர்த்துக் கிட்டியாமே? அதுவும் சிக்ஸ்ட்டி ஃபார்ட்டி ஷேராமே!

அவளுக்கு ஏன் இவ்வளவு இடம் கொடுக்கிறடா! பொண்டாட்டியை எல்லாம் வைக்கிற இடத்துல வைக்கணும்!”

ஓ.. இதையும் போய் சொல்லி இருக்கா இந்த அண்ணி! அது சொல்லி தான் இந்த பாசக்கார அண்ணன், நம்ம மண்டையை கழுவ வந்திருக்கான் போல!

இன்னமும் என்னை பைத்தியமாவே நினைச்சுட்டு இருக்க இல்ல! என்றது அவனின் மைன்ட்வாய்ஸ்!

சரி பேசட்டும். நமக்கும் இது வெயிட்டிங் டைம் தான்!

சவாரி வந்திருக்கும் பார்ட்டி ஹாஸ்பிட்டல் ஓபி முடிஞ்சி ஃபார்மசியில மருந்து வாங்கிட்டு வர இன்னமும் நேரமும் இருக்கு.

 ஸோ, இவனை பேச விட்டு கேட்டுகிட்டு இருப்போம் என்ற முடிவில் ராமு சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜு.

“அதுவும் அவ முடிவு தாண்ணே. நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்குது!”

“அவ கிடக்கா, நீ ஒண்ணு பண்ணு. நீ எதுக்கு இப்படி பாங்கில் எல்லாம் லோன் வாங்கி கஷ்டப்படனும்!

பேசாம அந்த ரெண்டு பிளாட்டையும் வித்துடு, நானே கூட நின்னு உனக்கு ஹெல்ப் பண்ணி வித்து தரேன்.

அப்புறம் அந்த பணத்தை வச்சு, நீ நம்ம வீட்டுக்கிட்டயே ஒரு டிபார்மென்ட்டல் ஸ்டோர் ஆரம்பிச்சுடு.

நான் கல்லாவில் உக்கார்ந்து பொறுப்பா பார்த்துக்கறேன்.

நாம எல்லோரும் நம்ம வீட்டுலயே ஒண்ணா பழைய மாதிரி கூட்டுக் குடும்பமா இருக்கலாம்

நீயும் கூட இப்படியே கூட டாக்ஸி ஓட்டலாம். இல்ல மறுபடி துபாய் போறதுன்னா போகலாம்!  என்ன சொல்ற?”

“நான் தான் சொன்னேனே அண்ணே, மகி அதுக்கு ஒரு நாளும் ஒத்துக்காதுன்னு!”

“என்னடா.. அத எல்லாம் சொல்ற விதத்தில் சொல்லணும்!

புருஷன் சொன்னா கேக்க வேண்டியது தான் பொண்டாட்டி கடமை!

ஒத்துக்கலன்னு வச்சுக்க, முடியைப் பிடிச்சு இழுத்துப் போட்டு ஒரு அறை விட்டீன்னா சொன்னத கேக்க போறா!”

“நீ அப்படி செஞ்சியாஅண்ணே, அன்னிக்கு அண்ணி என்னை அவ்வளவு கேவலமா பேசி, கார் சாவிய வச்சுட்டு வெளியே போடா சொன்னப்ப!”

“ஏன்.. கேக்காம? அதான் அவளை அன்னிக்கு நல்லா ஒரு அறை அறைய தானே செஞ்சேன்”.

“அடிச்ச சரி. ஆனா கார் சாவிய வாங்கி கொடுத்தியா?

அன்னிக்கு கையில் காசு இல்லாம வெறுங்கையுடன் நான் தெருவில் நின்னேன் அண்ணே!

கார்  இருந்தா வாச்சும் கொஞ்சம் கான்பிடன்ஸ் இருந்திருக்கும்!

அது மட்டுமா,  நான் வந்ததில் இருந்து கேட்டேன். அம்மா எங்க அம்மா எங்கன்னு! மூச்சு விடல நீங்க யாரும்!

அப்பா இறந்த பின்னே அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மள வளர்த்தாங்க! கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தீங்களா!

அவங்க மூணு பிள்ளைங்க நாம இருந்தும் அனாதை மாதிரி முதியோர் இல்லத்தில் இருந்தாங்க!

அவங்க அங்க இருக்கிறது தெரிஞ்சும், வீட்டில் ஒரு கல்யாணம் நடக்கும் போதும் கூட அவங்கள திரும்ப வீட்டுக்கு அழைச்சுகிட்டு வரல!

கூடவே இருந்து கல்யாண வேலை செஞ்ச என்கிட்டயும் எப்படி எல்லோருமா சேர்ந்து டிராமா போட்டு மறைச்சு இருந்துருக்கீங்க!

எப்படி ஒரு கேனயனா இருந்துருக்கேன் நான் அப்ப!

நாம் போய் அவங்கள அங்க பார்த்தப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு!

அப்பா.. இப்ப நினைச்சாலும் உடம்பே பதறுது எனக்கு!

ஆனா நீங்க எல்லோரும் அவங்க அங்க இருக்கிறது தெரிஞ்சும் கூட போய் திரும்ப கூட்டுட்டு வரல!

அது எப்படிண்ணே, கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம, அம்மா உங்கள கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு வேற  கோவிச்சுகுறீங்க வேற?

அண்ணே நீங்க எல்லோரும் நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் முட்டாள் இல்லை!

என்ன.. உங்க மேல எல்லாம் ரொம்ப பாசம்  வச்சுட்டேன்! அதான் நான் பண்ணின பெரிய தப்பு!

அதுக்கு ரொம்ப நல்லாவே பாடம் எடுத்துட்டீங்க!

இனியும் என்னை பழைய மாதிரி நினைச்சுகிட்டு பேச வேண்டாம்!

வேண்டாம் இத்தோட விட்டுடுங்க. நாம ஒதுங்கி போய்டலாம்! அது தான் நாம எல்லாத்துக்கும் நல்லது!

இல்ல.. திரும்ப திரும்ப வந்து எனக்கும் மகிக்கும் இடையில வந்து சண்டையை மூட்டி விடலாம்.

இல்ல மறுபடி ஒண்ணா ஒரே வீட்டுல இருக்கலாம்னு எல்லாம் பேசிட்டு வந்திடாதீங்க!

நம்ம மனசு எல்லாம் கண்ணாடி மாதிரி! ஒரு தடவை உடைஞ்சா, அவ்வளவு தான்!

அதுக்கு தான் நான் நீங்க எவ்வளவு பண்ணின போதும், புரிஞ்சும் புரியாத மாதிரி இருந்தேன்!

எக்காரணம் கொண்டும் மனசு விட்டு போய்ட கூடாதுன்னு! ஒரு வாட்டி விட்டுப் போச்சுன்னா திரும்ப பழைய மாதிரி இந்த ஜென்மத்துல வரவே வராது!

 அதுக்கு தான் பெரியவங்க குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை! சீக்கிரம் மனசு விட்டுட கூடாதுன்னு பொறுமையா இருக்க சொல்லிக் கொடுத்து இருக்காங்க.

 ஆனா நீங்க எல்லோருமா சேர்ந்து என் மனசை உடைச்சு தூக்கிப் போட்டு வெளியே துரத்தி போட்டுட்டீங்க!

அதனால திரும்பவும் அத ஒட்ட முயற்சிக்க வேண்டாம்! விட்டுடுங்க” என்று நீளமாக பேசி முடித்தே விட்டான் ராஜு

கேட்டுக் கொண்டிருந்த ராமு அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தவன்,

“சரிடா நீ கோபமா இருக்க! நாம அப்புறமா பேசலாம். இப்ப என்ன இன்னோவா வண்டி உனக்கு வேணும்.

உன் பொண்டாட்டியும் அண்ணி கிட்ட கேட்டிருக்கா! நான் கொண்டு வந்து விட சொல்றேன்.

ஆனா அதுக்கு டயர் மாத்தணும். அதுக்கு மட்டும் காசு போட்டு விடு.

டயர் மாத்திட்டு நானே கொண்டு வந்து விட்டுடறேன்” என்றான் முயற்சியை கை விடாத ராமு.

என்ன இது நாம இவ்வளவு தூரம் பேசியும், கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம.. என்ன ஜென்மங்கள் இதுங்க!

ச்சே. என்று சலிப்புடன்,

“ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம்!

நீ இது வரைக்கும் என்கிட்ட ஆட்டைய போட்ட எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ.

இனி என்கிட்டயோ, இல்ல அம்மா கிட்டயோ டிராமா போட்டு மனச கலைக்கலாம்னு நினைப்பு இருந்தா அடியோட மாத்திக்கோ!

அதே மாதிரி எங்க வாழ்க்கையில இனி நீயோ, இல்ல உன் பொண்டாட்டியோ குறுக்க வரவே கூடாது!

அப்படி வந்தீங்கன்னு வச்சுக்கோ, மகி சும்மா இருக்க மாட்டா.

நானும் உனக்கு கொடுத்த காசெல்லாம் ஒத்த ரூபா பாக்கியில்லாம டைரியில எழுதி வச்சுருக்கேன் தேதி வாரியா!

அப்புறம் அவ இப்ப நான் விட்டு வச்சுருக்க எல்லாத்தையும் கேஸ் போட்டு பிடுங்கிடுவா!

நான் அவ பேச்சை மீறி நானும் எதுவுமே செய்ய மாட்டேன்!

இனி என்னை தொந்தரவு செய்ய மாட்டேன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி ராமுவை இறக்கி விட்டு விட்டு டாக்சியை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் ராஜு!

கடும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ராமு.

—–

கார் ஸ்பா  கடை திறப்பு விழா நெருங்கி கொண்டிருந்தது!

பாங்க் மேனேஜர் உதவியும் ஒத்துழைப்பும் இருந்ததால், டக்டக்கென்று வேலைகள் விரைந்து முடிந்தன.

சந்துரு உடன் இருந்து உதவினான்.

அதி நவீன இயந்திரங்கள் ராஜுவின் அனுபவ அறிவால் தருவிக்கப் பட்டன.

கூடவே அவர்களுக்கு அந்த பிசினெஸ் கன்சல்டிங் கம்பெனியும் உதவ, இன்டீரியரில் இருந்து நேம் போர்ட் வரை எல்லாம் பார்த்து பார்த்து செய்து இருந்தார்கள் மகியும் ராஜுவும்.

அந்த பிசினெஸ் கன்சல்டிங் கம்பெனியின் அறிவுரைப்படியே மகிக்கு அதிகம் ஷேர் பிரிக்கப்பட்டு இருந்தது, லோன் பெற வசதியாக. இதை கமலா அம்மாவிடம் எடுத்து சொன்னான் ராஜு.

“நான் என்னடா கேக்க போறேன்! இனி அவ தான் உன் வாழ்க்கை முழுவதும் நல்லது கெட்டதுல பங்கு எடுக்க போறா!

அதனால நீ ஆக வேண்டியத பாரு” என்று சொல்லி விட்டார் கமலா அம்மா.

அவரும் கூட வந்து வேலைகள் நடப்பதைப் பார்த்தவர்,

“நம்ம கடைக்குப் பக்கத்தில் இது என்னடா இப்படி குப்பை மேடா இருக்கு! திருஷ்டி மாதிரி!” என்றார் கொஞ்சம் வருத்தத்துடன்.

ராஜுவின் பக்கத்து பிளாட் ஓனர் ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அவர் மகன் அமெரிக்காவில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இங்கு வந்து செட்டில் ஆகப் போவதாகவும், வந்தால் இங்கு ஏதாச்சும் கடை போட போவதாகவும் சொல்லி விலைக்கு கேட்பவரிடம் எல்லாம் அவர் விற்க மறுத்து வந்தார்.

ஆனால் அவரால், அடிக்கடி வந்து இடத்தைப் பார்த்து விட்டு போக முடியாததால், பொதுமக்கள் அங்கு குப்பைகளை கொட்ட தொடங்கியிருந்தனர்!

கமலா அம்மா இப்படி சொல்லியதால், சந்துரு உதவியுடன் தன் செலவில் அந்த இடத்தை சுத்தம் செய்திருந்தான் ராஜு!

திறப்பு விழாவிற்கு முதல் நாள் அதற்கான வேலைகள் இரவு முழுவதும் நடந்து கொண்டிருந்த போது,

அந்த வழியே வந்தான், தற்போது சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இயக்குனர் ஒருவன்.

அவனின் சமீப படங்கள் இரண்டும் சக்கைப் போடு போட்டு, அடுத்து பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்கவும் அட்வான்ஸ் பெற்று இருந்தான் அவன்.

ராஜுவின் ஸ்பா இருக்கும் இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அவன் மாமனார் வீடு!

அவரும் அந்த பகுதி அரசியல் பிரமுகர் தான்! கட்சி பாகுபாடுகள் இல்லாத சொந்த செல்வாக்குள்ள அரசியல் தலைவர்!

எங்கெங்கோ படப்பிடிப்புக்காக  லொக்கேசன் பார்த்து விட்டு, காரை அழுக்காகி எடுத்து வந்திருந்தான் அவன்.

அவன் கண்ணில் ராஜுவின் ஸ்பா பட்டு விட்டது!

அட.. பரவாயில்லையே. இங்கயே இப்படி ஒரு ஹைடெக் சார் ஸ்பா இருக்கா!

அப்ப நாம இங்கயே காரை சர்வீஸ் பண்ணிடுவோம் என்று மனதில் எண்ணி, ராஜு மகியை நோக்கி சென்றான்.

ராஜுவுக்கு அவனைத் தெரியவில்லை!

ஆனால் மகிக்கும் சந்துருவுக்கும் தெரிந்து இருந்தது!

அவர்கள் ஆச்சர்யத்துடன் அவனை வரவேற்று பேசினார்கள்.

பின் அவனையே நாளைக்கு திறப்பு விழா விருந்தினராக வரும்படி அழைத்து விட அவனும் சந்தோசமாகவே சம்மதம் சொல்லி விட்டான்!

மறுநாள், அந்த இயக்குனர், அவன் மனைவி, மாமனார், மாமியார் கூடவே வந்து குத்து விளக்கேற்றி வைத்து திறந்து வைத்தார்கள்!

அது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது!

இரண்டு மூன்று யூடுபர்கள் வேறு அவர்கள் சேனலில் போட்டு விட்டார்கள் இதனை!

பக்கத்து பிளாட்டில் வைத்து சாமியானா பந்தல் போட்டு டேபிள் சேர்களும் போடப்பட்டு, வந்தவர்களுக்கு எல்லாம் டீ ஸ்நாக்ஸ் கொடுக்கப்பட்டது!

விழா இனிதே நடைபெற்று முடிந்தது!

கமலா அம்மாவுக்கு பெருத்த நிம்மதி!

அவர் கல்யாணத்துக்கு அழைத்த சொந்தங்களே இப்போதும்! கூடவே தொழில்முறை நண்பர்கள் கூட்டம்!

மகியும் ராஜுவும் மிகவும் உற்சாகமாக வலம் வந்தார்கள்.

விழா முடிந்து விருந்தனர்கள் கிளம்பிய பின், மகியும் ராஜுவும் சாப்பிட அமர்ந்தார்கள்.

அப்போது, “யாருங்க இங்க ராஜு?” என்று தேடிக் கொண்டு வந்தார் அந்த பக்கத்து பிளாட் சொந்தக்கார அந்த ஓய்வுப் பெற்ற பள்ளி ஆசிரியர்!

ராமு தான் அவரின் போன் நம்பரை எப்படியோ தேடிப் பிடித்து அவருக்கு தகவல் சொல்லி அனுப்பி இருந்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!