Skip to content
Post Views: 4,687
“புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற் றிகழ்வார்பின் சென்று நிலை
மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.”
மதிய உணவு நேரத்திற்கு செங்காந்தளைத் தங்கள் காரில் அழைத்துக் கொண்டு டவுணில் இருந்த பெரிய உணவகத்திற்கு வந்திருந்தனர் ரம்யா குழுவினர்.
ருத்ரேஸ்வரன் ஏற்கனவே அங்கு வாசலில் நின்றிருக்க தீப்தி தந்தையிடம் குதித்து ஓடினாள்.
Advertisement
அனைவருக்குமாய் நீள் இருக்கை அமைத்து அமர்ந்து அவர்களுக்கு வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தனர்.
ஆண்கள் இருவர் செங்காந்தளிடம் விளையாட்டாய் வம்பு பேசிக் கொண்டிருக்க அவள் அதற்கு சிரித்த படி பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
ரம்யா தன் எதிரில் இருந்த நண்பனின் கரத்தை லேசாய் தட்ட என்னவென ருத்ரேஸ்வரன் அவளை ஏறிட்டான்.
Advertisement
“செங்காவை வீட்டில் விட்டுட்டு சாயிந்திரம் தோப்பு வீட்டுக்கு வந்துட்டு போ டா.”
Advertisement
“என்னாச்சு ரம்யா எல்லாம் ஓகே தான?”
“ஏன் டா கத்துற. செங்காகிட்ட சொல்லாம வா.”, என்றதற்கு யோசனையாய் தலையசைத்து வைத்தான்.
அனைவரும் மனைவியோடும் மகளோடும் இயல்பாய் பேசுவதும் புன்னகை குறையாமல் மனைவி இருப்பதும் வெகு திருப்தியாய் இருந்தது ருத்ரேஸ்வரனுக்கு.
Advertisement
அனைவருமாய் உணவை முடித்துக் கிளம்பத் தயாராக செங்காந்தள் ரம்யாவின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
“உங்களைச் சந்திச்சதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போங்க.”
“எனக்கும் உன்னைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம் செங்கா.”, என்றவள் அவளை இறுக அணைத்து கன்னத்தில் இதழ் பதிக்க செங்காந்தளுக்கு கணவனின் முன் கூச்சமாகிப் போனது.
“அக்கா!!”
“இது என் நண்பனை இவ்வளவு நல்லா பார்த்துக்குறதுக்கு. எப்பவும் இதே சிரிப்போட சந்தோஷமா இருக்கணும். என்ன?”
“ம்ம்.. நீங்களும் சீக்கிரமே நல்ல செய்தி சொல்லணும். உங்களுக்கு ஏத்த வாழ்க்கை கட்டாயமா அமையும்.”, இப்படியான அவர்களின் உரையாடலை ஆச்சரியமாய் பார்த்திருந்தான் ருத்ரேஸ்வரன்.
“இரண்டு நாள் தான விட்டுட்டு போனேன். இப்படி க்ளோஸ் ஆகிட்டீங்க?”
“உன் பொண்டாட்டியை யாருக்கு தான் பிடிக்காது.”
“இல்ல, அக்கா ரொம்ப நல்ல மாதிரி மாமா. அதனாலதேன் இம்புட்டு பேச முடியுது.”, என்றதில் தலையாட்டி புன்னகைத்தான்.
மனைவியையும் மகளையும் வீட்டு வாசலில் விட்டு விட்டு ருத்ரேஸ்வரன் கிளம்பியிருந்தான்.
செங்காந்தள் உள்ளே நுழைந்த நேரம் ராணி அவளைக் கண்டும் காணாதவளாய் தலையைத் திருப்பிக் கொண்டு சமையலறைக்குச் செல்ல அப்படியே விட மனமில்லாதவளாய் செங்காந்தள் அவள் பின் சென்றாள்.
“சாப்டாச்சா ராணி?”
“ஏன் நீங்க இல்லைனால் இங்கே சமையலே நடக்காதா?”
“இங்கே பாரு உனக்கு என்ன பிரச்சனை. ஏன் மூஞ்சியை தூக்கிட்டு இருக்க. காலையிலேயும் உன்னைப் பார்க்கவே இல்ல எதுவாயிருந்தாலும் நேரடியா பேசு.”, என்றதில் ராணி அமைதியாய் தரையை வெறித்த படி நின்றிருந்தாள்.
“இங்கே பாரு ராணி நான் உன்னை நிசமாவே என் தங்கச்சியாதேன் பார்க்குறேன். உன் மேல போட்டி பொறாமையோ வன்மமோ எப்பவும் எனக்கு கிடையாது.
நேத்துனு இல்ல இதுவரை எந்தப் பிரச்சனைக்காவது நான் பேசி நீ பார்த்துருக்கியா? இப்போ ஏன் அதை தப்பா எடுத்துக்குற நீ?”
“உனக்கு நான் சொல்ல வேண்டியதில்ல. உன் நல்லதுக்காக சொல்லுதேன்.
இன்னுமும் மனசார இதை உன் குடும்பமா நீ ஏத்துக்கிடல. அதுதேன் எல்லா பிரச்சனைக்கும் காரணமே.”
“…”
“அம்மா வீடு முக்கியம்தேன் சந்தோசம்தேன் ஆனால் நீ வாழ வந்த இந்த வீடுதேன் உன் வீடு. அதை மனசில வைச்சுக்கோ.”, என்ற எதற்குமே ராணியிடம் பதிலில்லாமல் போக செங்காந்தள் அமைதியாய் வெளியேறியிருந்தாள்.
ருத்ரேஸ்வரன் வேலைகளை முடித்து விட்டு இருள் பரவத் தொடங்கிய நேரத்தில் தோப்பு வீட்டிற்குச் சென்றான்.
அனைவரும் தங்கள் உடைமைகளை எல்லாம் பரபரப்பாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன ரம்யா நாளைக்குதானே போகணும்?”
“இல்ல டா நைட்டே கிளம்பினா நாளைக்கு ஆபீஸுக்கு போயிடலாம்னு பார்க்குறோம். “
“நைட் எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க? காலையில நாலு மணிக்கு கூட கிளம்புங்க. லேடீஸ் இருக்கும் போது நைட் ட்ரைவ் அவாயிட் பண்றது நல்லது தான. நாளைக்கு போயே ஆகணும்னு எதுவும் வேலை இருக்கா?”
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல டா. இவனுங்க தான் நைட் ட்ரைவ் அது இதுனு உயிரை எடுக்குறானுங்க.”, என்றதில் ஆண்கள் மூவரிடத்திலும் பேசி அதிகாலை நான்கு மணிக்கு கிளம்ப சம்மதிக்க வைத்திருந்தான்.
“அவ்வளவு சீக்கிரம்னால் இந்த வீட்டுச் சாவியை யார்கிட்ட கொடுக்குறது டா?”
“தோப்பு வாசல்ல காவகாரர் படுத்துருப்பாரு ரம்யா அவர்ட்ட கொடுத்துருங்க.”
“ம்ம் சரி டா ரொம்ப தேங்க்ஸ். நாலு நாளும் போதே தெரியலை ரொம்ப நல்லாயிருந்துச்சு.
பொன்னி எங்க கூட இருந்தது ரொம்பவே உதவியா இருந்தது.”, என்ற நேரம் பொன்னி வேலையை முடித்து வீட்டிற்கு கிளம்புவதற்காக வெளியே வந்திருந்தாள்.
“கிளம்பிட்டியா பொன்னி. உன்னை பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன். ஒரு நிமிஷம் இரு.”, என்றவள் உள்ளே செல்ல ருத்ரேஸ்வரன் பொன்னியைப் பார்த்து மெலிதாய் உதடு விரித்தான்.
“இந்தா இது உனக்காக..”, என்றவள் ஒரு ரெடிமேட் சுடிதாரை அவளிடத்தில் நீட்டினாள்.
“இதெல்லம் வேண்டாம் கா..”
“அக்கா கொடுத்தா வாங்கிக்க மாட்டியா? எடுத்துக்கோ.”, என்றவளுக்கு புன்னகையை பதிலளித்தவளாய் அங்கிருந்து கிளம்பிருந்தாள்.
“நீ மாறவே இல்ல ரம்யா..”, என்றவனிடம் இன்னொரு கவரை நீட்டியிருக்க அதில் ஒரு புடவையும் தீப்திக்கு அழகான கவுனும் இருந்தது.
“ஹே எதுக்கு இது..”
“உன் பொண்டாட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு அதுக்கு தான்.”, என்றதில் ருத்ரேஸ்வரன் சிரித்தான்.
“என்ன டா சிரிக்குற? நிஜமா தான் சொல்றேன். நீ ரொம்ப லக்கி ருத்ரா.”, என்றவள் தனது கைப்பேசியில் இருந்து இரு ஆடியோக்களை அவனுக்கு அனுப்பி விட்டு,
“இங்கேயே உட்காந்து உன் போனுக்கு ஒரு ஆடியோ அனுப்பிருக்கேன். அதைக் கேட்டு முடி நான் வந்துரேன்.”, என்றவள் கண்சிமிட்டிச் செல்ல ருத்ரேஸ்வரன் அதை ஓட விட்டிருந்தான்.
மனைவியின் குரலில் கவனம் மொத்தமாய் திரும்ப அவள் பேசியதெல்லாம் கேட்கக் கேட்க கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தது ருத்ரேஸ்வரனுக்கு.
அமைதியாய் தரையை வெறித்த படி கவனம் மொத்தமும் தன்னவளின் குரலில் இருக்க கண்ணீர் கோடாய் அவன் கன்னம் தொட்டு இறங்கியது.
நேரத்தைக் கணக்கிட்டவளாய் ரம்யா கையில் காபியோடு அவனருகில் இருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள்.
சுயம் உணர்ந்தவனாய் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவளைப் பார்க்க முடியாமல் தடுமாறினான்.
“என் ப்ரெண்டு டா நீ என்னை ஃபேஸ் பண்ண ஏன் தயங்குற?”
“ஒரு பொண்ணுக்கு நல்ல ப்ரெண்டா இருக்குற தகுதி எனக்கில்லனு தோணுது ரம்யா..”
“டேய் செங்காந்தளா இருந்து பார்க்குற ருத்ரேஸ்வரன் எவ்வளவு அழகானவன்னு உனக்குப் புரியுதா? நீ என்னடானால் தகுதி இல்ல அது இல்லனு.”
“…”
“பார்த்தியா இதுக்கு தான் ப்ரெண்ட்ஸ் வேணும்னு சொல்றது வந்த நாலு நாள்ல உன் வைஃப்பை எவ்வளவு பேச வைச்சுருக்கேன் பாரு..”
“அவ குழந்தையாவே இருக்கா இல்ல ரம்யா.. நான்.. நான் ரொம்ப மோசமானவனா நடந்துருக்கேன் அவகிட்ட..”
“டேய் டேய் முதல்ல இருந்து ஆரம்பிக்குறதுக்காக இதை உன்கிட்ட கொடுக்கலை. அந்த பொண்ணோட அன்பை நீ புரிஞ்சுக்கோ அது போதும்.
நீ அவளை மனசார ஏத்துக்குறதுக்கு வாய்ப்பு இருக்கானு கூட தெரியாத நேரத்திலேயும் உன் மேல இவ்வளவு அன்பு வைச்சுருக்கானு நினைச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு.”
“…”
“அவ உலகமே நீ மட்டும் தான் டா ருத்ரா. போனதையெல்லாம் விட்டுரு. இனிமேல் வாழப் போற வாழ்க்கையை அவளுக்கு அழகானதா மாத்திக் கொடு.”
“..”
“அவ மட்டும் தான் உனக்குனு நீ முடிவெடுத்த அப்பறம் என்ன டா கோவமும் வீராப்பும். அவளுக்காக கொஞ்சம் எல்லாத்தையும் மாத்திக்குறதில் தப்பில்லையே?”
“…”
“உண்மையை சொல்லணும்னால் எனக்கே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அருமையான வாழ்க்கையை தொலைச்சுராத டா.
என்னை மாதிரி.. நீ சந்தோஷமா இருக்கணும் டா ருத்ரா.”, என்றவளை கண்களைக் கண்ணீர் மறைக்கப் பார்த்திருந்தான்.
“செங்காவை சந்திச்ச அப்பறம் எனக்கு ஒரு விஷயம் தெளிவாகுது. செங்கா sacrificial Victim இல்லை ருத்ரா Conscious choice Makerஆ அவ வாழ்க்கையை தேர்ந்தெடுத்துருக்கா.
இங்கே பல பெண்கள் அப்படிதான் இருக்காங்களோனு தோணுது.”
“…”
“ஆனால் என்ன அவங்க எடுத்த அந்த சாய்ஸ்க்கு வொர்த்தான புருஷன் இருக்கணும். உன்னை மாதிரி..”
“நீயும் நானும் என்ன படிச்சு என்ன ப்ரயோஜனம் வாழ்க்கையை ஒழுங்கா புரிஞ்சுக்கத் தெரியலையே.
சரி விடு இனி உனக்கு எந்தக் குழப்பமும் இல்லை தான?”, என்றதற்கு ஆமோதிப்பாய் தலையசைத்தவன்,
“தேங்க்ஸ் ரம்யா. தேங்க் யூ சோ மச். வேற என்ன சொல்லணும்னு எனக்குத் தெரியலை.”
“நீ ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம். முதல்ல கிளம்பு வீட்டுக்கு. அப்பறம் இதையெல்லாம் நீ மறந்துட்ட அவ்வளவு தான்.
போய் அவகிட்ட சொல்லிட்டு இருக்காத.
இது என் ப்ரெண்ட்காக நான் பண்ணது.
அவ என்னை நம்பி பேசினதை நான் உன்கிட்ட கொடுத்துருக்க கூடாது தான். ஆனாலும் பரவால்ல..”, என்றவள் அழகாய் புன்னகைத்தாள்.
மேலும் சில நிமிடங்கள் அவளோடு பேசி விட்டு வீட்டிற்கு கிளம்பியவன் பாதி வழியில் வண்டியை நிறுத்தி விட்டு அப்படியே வண்டியில் சாய்ந்த படி நின்று விட்டிருந்தான்.
செங்காந்தள் என்பவள் தன் வாழ்க்கைக்குள் நுழைந்தது முதல் இன்று வரை அவளை மரியாதையாய் நடத்தியதைத் தவிர அவன் எதுவும் உருப்படியாய் செய்ததாய் நினைவிலில்லை.
ஆனால் அதற்கு பதில் அவளிடத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கும் இந்த அன்பு அவனை இந்த நொடி மொத்தமாய் புரட்டிப் போட்டிருந்தது.
நிழல் தரும் மரம் போல எனக்கு அவர் என்ற போது அந்தக் குரலில் இருந்தது என்ன! சுதந்திரமாய் விடுவது தான் அன்பாம்.
இத்தனை வருடங்கள் நான் நானாய் இருந்தது இருப்பது அவள் இருக்க விட்டதால் தானே!
இத்தனை வருடங்களும் அவளின் நிலை இப்போது அவனுக்குத் தெளிவாய் புரிந்தது. இது என்ன உறவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீ உடன் இரு அது போதும் எனக்கு என்பதான மனநிலை எல்லாம் வாழ்க்கையில் சாத்தியமா?!
ஒருத்தி இப்போது அனைத்தையும் சாத்தியப் படுத்தியிருக்கிறாளே! அவளது மௌனமும் நிதானமும் கொண்ட பெயர் அவளின் பேரன்பு.
அந்த விழிகள் காட்டிய பாவம் அவனுக்கான அளவில்லா அவளின் காதலும் தேடலும்.
நேற்று செங்காந்தள் அவனிடம் கூறியது போல் தீப்தியைப் போன்று பாதுகாப்பாக அவளைப் பார்த்து வருகிறான் தான் ஆனால் மனைவியாய் அவளின் எதிர்பார்ப்பு அவனிடத்தில் தங்கு தடையற்ற காதலும் காமமும் அல்லவா?!
தன்னவளின் அந்தப் பார்வை, அதன் அர்த்தத்தை இப்போது மிகத் தெளிவாய் உணர்ந்திருந்தான் ருத்ரேஸ்வரேன்.
error: Content is protected !!