Skip to content
Post Views: 2,803
அன்று காலையில் எழுந்ததில் இருந்தே உற்சாகம், சந்தோசம், கூடவே கொஞ்சம் படபடப்பு இவற்றின் கலவையோடு இருந்தாள் மகி.
இன்று அவள் ராஜ் மோகனை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறாள்.
அதை எண்ணும் போதே அவளுக்குள் சந்தோசம் ஊற்றெடுத்து பொங்கியது!
அது வெளியே தெரியாமல் இருக்க மிகவும் மெனக்கிட வேண்டியும் இருந்தது!
Advertisement
புவனாவின் கிண்டல் சிரிப்பு, கூடவே அண்ணி கங்காவின் “அய்யோ ரொம்ப தான்” என்பது போன்ற பார்வை இவற்றில் இருந்து தப்பிக்க!
முகத்தில் முதல் நாள் இரவே கடலைமாவு மஞ்சள் கலந்து, வீட்டு முறையில் பேஸ் பேக் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள்.
எழுந்த பின் முகம் கழுவி கண்ணாடியில் பார்க்கையில், அவளின் ஒரு முகப்பரு கூட இல்லாத அந்த பளிங்கு முகத்தில் நன்றாக ஷைனிங் தெரிந்தது!
Advertisement
புவனா கூட அடிக்கடி சொல்லுவாள்.
Advertisement
“எப்படிடி உன் முகத்தில் மட்டும் ஒரு பரு கூட இல்லை! அப்படியே வழ வழன்னு இருக்கு!
கருப்பு கருப்புன்னு சொல்லிட்டு நீ தான் உன்னை குறைச்சு நினைச்சுக்குற!
ஒரு சில பசங்களுக்கு உன் கலர்ல இருக்கிற பொண்ணுங்கள தான் ரொம்ப பிடிக்கும்!
Advertisement
நீ வேணுமின்னா பாரேன்! உன்னோட இந்த கலரை ரசிச்சே உன்னைப் பிடிக்குதுன்னு சொல்லப் போறான் உனக்கு பார்க்க போற மாப்பிள்ளை!” என்று அடிக்கடி சொல்வாள் அவள்!
“சரியான கரி நாக்குக் காரிடி நீ!” என்று முகம் வாய் விட்டு முணுத்து விட்டாள் மகி!
என்னாடி? என்று புரியாமல் கேட்டார் பரமேஸ்வரி அந்த பக்கமாய் வந்தவர்!
“அய்யோ!” என்று நாக்கைக் கடித்துக் கொண்டு, “ஒண்ணுமில்லம்மா..” என்று சொல்லி விட்டு, துண்டால் முகத்தை மூடிக் கொண்டு உள்ளே ஓடி விட்டாள் மகி.
உள்ளே சென்றவள், அவள் போனை எடுத்து, அதில் இருந்த ராஜ் மோகனின் போட்டோவைப் பார்த்து,
“டேய்.. எல்லாம் உன்னால தான்..” என்று அவனை செல்லமாக திட்டினாள்.
திட்டிவிட்டு, அதில் அவனிடமிருந்து வந்திருந்த வாட்ஸ்அப் மெசேஜை திறந்துப் பார்த்தாள்.
ஹார்டின் சிம்பலுடன் குட்மார்னிங் மெசேஜ். கூடவே
“இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவோம்! ரெடியா இரு” என்று இன்னொரு மெசேஜ்!
அவள் “ஓகே” என்று பதில் அனுப்பினாள்.
இந்த குட்மார்னிங் குட் நைட், மெசேஜ்கள் அவனோடு அன்று வீடியோ காலில் பேசிய நாளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது!
அன்றே அவளின் போன் நம்பரை வாங்கி கொண்டு விட்டான் ராஜு.
இப்போது கடந்த மூன்று நாட்களாக ஸ்வீட் நத்திங் சாட்கள் தான் இருவருக்கும்!
கூடவே கொஞ்சம் அவனிடம் இருந்து அவன் அண்ணன் அக்கா புராணமும் வந்து கொண்டு இருந்தது தான்!
அவன் அக்கா அவனுக்கு இன்னொரு அம்மா மாதிரி..
அப்புறம் அண்ணன் ரொம்ப விவரமான ஆள்! வீட்டு நிர்வாகம் முழுவதும் அவனே பார்த்துக் கொள்கிறான்!
தனக்கு ஏதும் பொறுப்புகள் கொடுப்பதில்லை!
தான் அண்ணா சொல்வதைக் கேட்டு நடப்பதோடு சரி.
அவன் வளர்ந்த விதம் அப்படி.
அப்புறம்.. அவன் பெரியவர்களுக்கு வயதில் மூத்தவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பான்.
ரொம்பவும் கீழ்ப்படிதல் குணம் சிறு வயதிலிருந்தே உண்டு!
தன்னை விட பெரியவர்கள், அனுபவசாலிகள் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்தால் தவறு ஒன்றுமில்லை! ப்லா..ப்லா.. மகிக்கு கொஞ்சம் போரடித்தது தான் , இப்படி பட்ட பேச்சுகளால்!
ஆனாலும் அவன் போனுக்கு காத்திருந்து பேசினாள் மகி!
எப்போதுடா அவர்கள் வருவார்கள் என்று அடித்துக் கொண்ட மனதை “அடங்குடி.. சரியான அலைஞ்சானா நீ?” என்று வன்மையாக அடக்கிக் கொண்டிருந்தாள்!
அவளுக்கு, தான் திருச்சிக்கு போய் வாழப் போவதை எண்ணி ரொம்பவும் ஆசையாக இருந்தது!
அவளுக்கு ஏனோ சென்னை மாதிரி நகரங்கள் பிடிக்கவில்லை!
சென்னை போன்ற வசதிகளுடன், கூடவே இன்னமும் நமது பாரம்பரியத்தையும் தொலைத்து விடாமல் இருக்கும் அந்த ஊரை அவளுக்கு ஏற்கனவே பிடித்திருந்தது!
காரணம் அவள் வேலை செய்யும் கடை முதாலாளி குமரேசன் அண்ணனின் மனைவி ஆர்த்தி திருச்சியை சேர்ந்தவள்.
அவள் சில முறை மகியையும் அவள் பிறந்த வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறாள்.
கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் மேலாகியும், இன்னமும் அவளின் ஷாப்பிங் திருச்சியில் தான்!
சில சமயம் அவள் துணைக்கு மகியை அழைத்து செல்வாள்.
அவளுடன் சேர்ந்து என்.எஸ்.பி ரோட் தொடங்கி சிங்காரத் தோப்பு வரை சந்து பொந்தில் இருக்கும் கடைக்கு எல்லாம் போய் வந்திருக்கிறாள்!
மகிக்கு, அந்த பெரிய்ய.. பாத்திரக்கடையில் நுழைந்து வீட்டிற்கு தேவையான, பொருட்கள், வித விதமான பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தரை விரிப்புகள், கிட்சன் கேட்ஜெட்ஸ் எனப்படும் சமையலறை சாதனங்கள், பூஜை சாமான்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் என்று பல பொருட்களை தேடித் தேடி வாங்கிய ஆர்த்தியைப் பார்த்து தான், மகிக்கும் கல்யாண ஆசையே வந்தது!
தனக்கும் கல்யாணம் ஆனவுடன், தானும் இப்படி பார்த்து பார்த்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும்.
வீட்டை நன்றாக அலங்கரிக்க வேண்டும். பாத்திர பண்டங்களை நீட்டாக அடுக்கி வைத்து கொள்ள வேண்டும் என்றும் ஆசைகள் துளிர்விட்டன!
அதே போல அந்த பெரிய துணிக்கடையை பார்த்தும் அசந்து நின்றாள் மகி.
“அண்ணி.. எப்படிண்ணி, இப்படி பார்த்து பார்த்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குறீங்க?’ என்றாள் தெப்ப குளத்தின் அருகே இருந்த கடையில் காபி பொடி வாங்கிக் கொண்டிருந்த ஆர்த்தியைப் பார்த்து!
“உனக்கும் கல்யாணம் ஆன பின்னே, நீயும் இப்படி தான் ஆகிடுவ!” என்றாள் ஆர்த்தி!
மகிக்கு ஒவ்வொன்றையும் சுற்றிக் காட்டினாள் அவள்.
“இது தான் நான் படிச்ச காலேஜ்.
இது தான் அப்துல் கலாம் படிச்ச காலேஜ்” என்று பல இடங்களை காண்பித்தவள், அவளை புகழ்ப்பெற்ற கேரளா உணவகம் ஒன்றிற்கு அழைத்து சென்று மீன் குழம்புடன் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாள்.
பின் பஸ் ஏறும் முன், திருச்சியின் அந்த பழைமை வாய்ந்த ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்து சென்றாள்.
“இன்னும் சாப்பிடு ..இன்னும் சாப்பிடு” என்று என்று வாங்கி கொடுத்து, இருவரும் ஆறு ஆறு கப்கள் சாப்பிட்டார்கள்!
வெனிலாவில் ஆரம்பித்து, ப்ரூட் சாலட், கோகனட் என்று போய் மீண்டும் வெனிலாவில் முடித்தார்கள்!
“என்னக்கா..இத்தன சாப்பிட்டு இருக்கோம்!” என்றாள் மகி தன் கண் முன் இருந்த கப்களைப் பார்த்து!
“நாம மட்டுமில்ல, அங்க பார். என்று அருகே இருந்த டேபிள்களைக் காட்ட, எல்லோர் டேபிளிலும் ஏகப்பட்ட கிண்ணங்கள் இருந்தன!
“இங்க இப்படி தான் சாப்பிடுவாங்க” என்றாள் ஆர்த்தி சிரித்தபடி!
பர்சேஸ் எல்லாம் முடித்து விட்டு, ஆளுக்கொன்றாக பைகளை தூக்கிக்கொண்டு “ஆட்டோ பிடிக்கலாமா?’ என்றாள் ஆர்த்தி!
“வேண்டாம் அண்ணி, பை எல்லாம் ரொம்ப வெயிட் இல்லை! நாம பஸ்லயே போலாம்” என்றாள் மகி!
“சரி” என்று இருவரும் பஸ்ஸில் ஏறிய பின், “அச்சோ!” என்றாள் ஆர்த்தி!
“என்ன ஆச்சு?” என்றவளிடம், “உறையூர் வழியா போற பஸ்ல ஏறிட்டோம். இது கொஞ்சம் சுத்து, நம்ம வீடு புத்தூர்ல இருக்கு!
அதுக்கு தில்லைநகர் வழியாகவும் போகலாம், உறையூர் வழியாகவும் போகலாம்!
ஆனா உறையூர் வழியா போனா கொஞ்சம் நேரம் ஆகும்!” என்றாள்.
ஆர்த்தியுடன் .பஸ்ஸில் போகும் போது மகி கேட்டாள், “என்னண்ணி பஸ் ஸ்டாப் பேர் எல்லாம் ஒரே லேடிஸ் பேரா இருக்கு?”
“அது முன்னாடி இங்க இருந்த சினிமா தியேட்டர்ங்க பெயர்கள்” என்றவள், போகும் வழியில் வெக்காளி அம்மன் கோவில் போகும் வழியைக் காட்டினாள்!
“நாம அடுத்த முறை வரும்போது உன்னை அந்த கோவிலுக்கு கூட்டிப் போகிறேன்” என்றும் சொல்லியிருந்தாள்!
ஆனால் அதன் பின் அதற்கு வாய்ப்பே அமைய வில்லை!
அதை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டே குளித்தாள் மகி!
“அண்ணி.. நீங்க அந்த கோவிலுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்க! ஆனா போக முடியல! ஆனா இப்போ என்னோட புருஷன் வீடே உறையூர்ல தான்!
இனி நான் உங்கள கோவிலுக்கு கூட்டிட்டுப் போவேன் பாருங்க” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, மீண்டும் மீண்டும் அன்று பஸ்ஸில் போகும் போது பார்த்த, ராஜுவின் வீடு இருக்கும் ஏரியாவை நினைவிற்குள் கொண்டு வர முயற்சித்தவள்,
“ச்சே.. எதுக்கு இப்ப அத நினைச்சு மண்டைய குழப்பிக்கணும்! அதான் சீக்கிரமே கல்யாணம் ஆகி அங்க தானே போகபோறோம், அப்புறம் என்ன?” என்றே அவளே அவளுக்கு சமாதானம் செய்து கொண்டு குளித்து முடித்தாள்.
மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண் பார்த்த பின், கையோடு தட்டு மாற்றி நிச்சயம் செய்யப் போவதால், சிறிய மதிய விருந்து சாப்பாடும் ஏற்பாடு செய்தார் பரமேஸ்வரி!
பாலு தாத்தா, மாப்பிள்ளை வீட்டார் பக்கம் ஆறு ஏழு பேர் தான் வருவார்கள், அப்புறம் தானும் தன் மனைவியும் என்று அவர்கள் தரப்பில் “பத்து பேர் தான் மேக்சிமம், உங்க சைட் யாரை கூப்பிடனுமோ கூப்பிட்டுக்கோங்க” என்று சொல்லியிருந்தார்!
பரமேஸ்வரிக்கு கூடுமானவரை செலவை இழுத்து விட்டு விடக் கூடாது என்பதே அவர் எண்ணம்!
“எங்க சைட், என் சம்பந்தி அம்மா, அப்புறம் என் நாத்தனார் அவங்க வீட்டுக்காரர், அப்புறம் மகியோட முதலாளியும் அவர் வீட்டம்மாவும் வருவாங்க அவ்வளவு தான்” என்று இருவது பேருக்கு தான் சாப்பாடு ஏற்பாட்டினை ஒரு கேட்டரிங் சர்வீசில் சொல்லி விட்டார்.
அமர்ந்து சாப்பிட டேபிள் சேர் எல்லாம் வாடகையின்றியே கிடைத்தது.
மகி வேலை செய்யும் கடைக்கு அருகில் இருந்த வாடகைப் பாத்திரக் கடைக்கார அண்ணா மூலம்!
மகிக்கு வேண்டி அவர் செய்தார்.
மகேந்திரன் வீட்டில் வைத்து தான் விசேஷம் நடக்கவிருந்தது.
அவன் வீட்டில் தான் இன்வெர்ட்டர் இருந்தது.
நல்ல பேச்சு பேசும் போது கரென்ட் கட்டாகி அபசகுணமாக நினைத்து விடக் கூடாது என்று நினைத்து பரமேஸ்வரி அங்கு அவன் வீட்டில் தான் நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.
கீழே ஹாலில் விசேஷமும், மாடியில் சாமியானா பந்தல் போட்டு சாப்பாடும் போட என்று திட்டம்.
வந்தவர்களுக்கு முதலில் கொடுக்கவென்று ஸ்வீட் காரம், பில்ட்டர் காபி பொடி எல்லாம் கும்பகோணத்தில் இருந்து வாங்கி வந்திருந்தான் மகேந்திரன்.
மகி, நகை சீட்டு கட்டும் கடையில் தீபாவளி பரிசாக ஒருமுறை பீங்கான் கப் செட் கொடுத்து இருந்தார்கள்.
அதை தன் வீட்டிற்கு என்று எடுத்துக் கொண்டு விட்டாள் கங்கா!
மகிக்கு சினிமாவில் வருவது போல பீங்கான் கப் அண்ட் சாசரில் விருந்தினர்களுக்கு காபி கொடுக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை!
ஆனால் அதற்கு சந்தர்ப்பமே வாய்க்கவில்லை!
அப்படி காபி போட்டுக் கொடுத்து உபசரிக்க அவர்கள் வீட்டுக்கு எந்த விருந்தனர்களும் இது வரை வரவில்லை!
அப்படியே வரும் அவள் அத்தை அன்னமும் மாமா சுந்தரமும் காபியே குடிக்க மாட்டார்கள், நேரே சாப்பாடு தான்!
அதனால், தன்னை பெண் பார்க்க வரும்போதாவது இப்படி வருபவர்களுக்கு கப் அண்ட் சாசரில் காபி கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள் மகி.
அதனால் அவள் சென்றமுறை ஆர்த்தியுடன் திருச்சி சென்றபோது, அங்கிருந்த பிரமாண்டமான கிராக்கரி செக்சனில் போய் பார்த்து பார்த்து, ஸ்வீட் காரம் வைத்து கொடுக்கவும், காபி கொடுக்கவும் பிளேட்கள், காபி கப்புகள், ட்ரேக்களும் வாங்கி வந்திருந்தாள்.
அதில் ஒருமுறை வீட்டிற்கு வந்த புவனாவிற்கு காபி போட்டு ட்ரேயில் வைத்துக் கொடுத்த போது,
புவனா விளையாட்டாக, ஆண் போல குரலை மாற்றிக் கொண்டு. “பொண்ணுக்கு பாட தெரியுமா?” என்று கேட்டு கிண்டல் பண்ணியதை நினைத்து சிரித்துக் கொண்டே,
பெட்டியில் இருந்த அவற்றை வெளியே எடுத்து கழுவி எடுத்துக் கொண்டு போய், அண்ணன் வீட்டில் வைத்து விட்டு வந்தாள்.
ராஜு வீட்டில் எல்லோரும் ரொம்ப டீசண்டாக இருப்பாங்க. அவங்களுக்கு இதில் காபி கொடுக்க வேண்டும்.
அவங்க அண்ணி பாங்கில் வேலைப் பார்க்கிறாங்களாம். அண்ணன் ஷேர் மார்க்கெட்டில் புலியாம்(?!) எல்லாம் ராஜு பெருமையாக சொன்னது தான்!
(அந்த “புலி” இன்ரா டே(Intra Day) எனப்படும் டெய்லி ட்ரேடிங்கில் – (ஷேர்களை அன்றே வாங்கி அன்றே விற்பது) ஏகப்பட்ட காசை விட்டது வனிதா மட்டுமே அறிந்த ரகசியம்!)
புவனா வந்து மகிக்கு எளிதான மேக்கப் போட்டு விட்டாள்.
அணிந்திருக்கும் வெளிர் மெஜந்தா வண்ண புடவைக்கு பொருந்தும் வகையில் செட் நகை போட்டு இருந்தாள்.
அது கங்காவின் புடவை!
“இதுக்கு உன்னோட தங்க ஆரம் மேட்ச் ஆகாது, இத போட்டுக்கோ” என்று அவள் தான் மிகவும் தேடி தேடி வாங்கி வந்திருந்தாள்!
(தேட மாட்டாளா பின்னே? தங்க நகை எங்கே இருக்கிறது?)
எல்லோரும் ஆர்வமாக மாப்பிள்ளை வீட்டாரை எதிர்நோக்கி காத்து இருந்தார்கள்.
“சரியா ஒரு மணிக்கு ஆட்டோவில் வந்து இறங்கிடும் சார் சாப்பாடு எல்லாம்!” என்றான் கேட்டரிங் ஆள் மகேந்திரனிடம் போனில்.
“டீ பரமேஸ்வரி நாம, வீட்டில் கொஞ்சம் வடைக்கு அரைத்து வடை செஞ்சுக்குவோம்” என்று சொல்லி விட்டு அன்னம் அத்தை பொங்க பொங்க ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து புசு புசுவென்று வடைகள் போட்டு எடுத்தார்!
அவர் மாதிரி மெது வடை யாருக்கும் செய்ய வராது!
“ஏன் அத்தை, அது தான் கேட்டரிங் ஆள் கொண்டு வருவானே?” என்ற மகேந்திரனிடம்,
“வர்றவங்க வீட்டில் சின்ன பிள்ளைங்க இருக்கு! கூட ரெண்டு கேட்டா இல்லைன்னா சொல்ல முடியும்!
ஆர்டர் சாப்பாடு வேற! கணக்கா தான் வடை தருவான்!” என்றார் அன்னம்.
“அரிசி அப்பளம் கூட இருக்கு அண்ணி வடை போட்டு எடுத்தவுடன் இதையும் பொரிச்சு எடுங்க.” என்று உமா மாமி மகிக்காக கொடுத்து விட்ட அப்பளக் கட்டை எடுத்து வந்து கொடுத்தார் பரமேஸ்வரி!
ராஜு வீட்டினர் வந்து விட்டனர்.
காரை தெருமுனையில் நிறுத்தி விட்டு நடந்து வந்தார்கள்!
“இன்னோவா வண்டி உங்கள் தெருவுக்குள் வர முடியுமா என்று சந்தேகமாக இருந்தது! அதான்!” என்றான் ராமு நக்கலாக.
“அதெல்லாம் பார்ச்சுனர் வண்டியே வந்துட்டு போயிட்டு தான் இருக்கு!” என்றாள் கனகா உடனேயே!
உள்ளே வந்த ராஜுவின் கண்கள் மகியை தேடியது.
அவன் அப்படி தேடுவதை ராமுவும் கவனித்தான்.
error: Content is protected !!