Skip to content
Post Views: 2,540
“நல்லா இருக்கேன் மாமி. ஒர்க் எல்லாம் சூப்பரா போயிட்டு இருக்கு..
ம்ம்.. நீங்க திருச்சி வரும் போது சொல்லுங்க.
ம்ம்.. ம்ம். சரி .. ஓகே வச்சுடறேன்” என்று சிரித்தபடி போனில் பேசி முடித்து போனை பான்ட் பாக்கெட்டில் வைத்தாள் மகி.
அந்த சிரிப்பு எல்லாம் சும்மா பார்மலிட்டி சிரிப்பு தான்!
Advertisement
அவள் மனதார மகிழ்ச்சியாக சிரித்து பல மாதங்கள்.. ஏன் வருடமே கூட ஆகி விட்டது!
மகி , பான்ட் சர்ட் அணிந்து அதன் மேல் கம்பனி பெயர் பொறித்த ஒரு ஸ்லீவ் லெஸ் கோட் அணிந்து இருந்தாள். காலில் கருப்பு நிற ஷூக்கள்.
கழுத்தில் ஐ.டி. கார்ட் சகிதம் இருந்தவள், அவள் நின்றிருந்த பஸ் நிறுத்தம் அருகில் வந்து நின்ற அந்த தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றி செல்லும் அந்த ப்ரைவேட் பஸ்ஸில் ஏறினாள்.
Advertisement
ஆமாம். மகி இப்போது திருச்சியில் இருக்கும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் அந்த பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் ஆகி விட்டது.
Advertisement
அவள் இப்போது தங்கி இருப்பது சமயபுரம் அருகில் இருக்கும் மாகாளிக் குடி கிராமத்தில்.
அவள் அத்தை அன்னம் வீட்டில்.
அவள் அத்தைக்கும் குழந்தைகள் இல்லை.
Advertisement
அவர் கணவர் சமயபுரம் கடைவீதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
அத்தை, கோவில் அருகில் ஒரு சிறியக் கடை வைத்து, அதில் சமயபுர அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் கண் மலர், கால் கை உருவாரங்கள், மண்ணால் செய்த உருவாரங்கள் மற்றும் அர்ச்சனைத் தட்டுகள் விற்பார்.
காலையில் மாமாவின் கடையில் மெது வடை போட்டுக் கொடுத்து விட்டு, பின் தன் கடையில் தன் வியாபாரம் பார்ப்பார். மாலையிலும் அதே போல!
ராஜ் மோகனை அவன் அக்காவும் அண்ணனும் கல்யாணப் பேச்சு வார்த்தையை அவர்கள் ப்ளான் செய்திருந்தபடி பேசியே கெடுத்து,
அவனை அங்கிருந்து அழைத்து சென்று ரொம்ப நேரம் ஆகியும், மகி இரண்டு தரப்பிலும் பேசிய பேச்சுக்களால், ராஜ் மோகனின் மவுனத்தால் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவள், ரொம்ப நேரம் நிதானத்துகே வர வில்லை.
“அம்மாடி.. போனா போவுறான் விடும்மா. அந்த சமயபுரத்தா நம்மள கை விட மாட்டா!
ஏதோ தலைக்கு வந்தது, தலைப்பாகையோட போச்சுன்னு சொல்வாங்களே அது போலன்னு நினைச்சுக்குவோம்!
இப்பவே இந்த பேச்சு பேசுறாங்க அந்த பொம்பளைங்க.
இன்னும் அவங்க வீட்டுக்கு போய்ட்டா, உன்னை என்னை பேச்சு பேசுவாங்க?
பொம்பளைங்களா அதுங்க?
அந்த பையனும் அப்படியே மண்ணு மாதிரி நின்னுட்டு இருக்கான், நிஜமாலுமே அண்ணன் சொல்லைத் தட்டாத லட்சுமணன் தான் போல!
நீ விடுடாம்மா, நான், இந்த அத்தை உனக்கு நல்லா இடமா பார்க்குறேன்!” என்று அவளை ஆறுதல் படுத்தினார் அன்னம்.
பரமேஸ்வரிக்கும் சேர்த்து.
“இப்ப என்ன ஆச்சுன்னு நீயும் இப்ப மூஞ்சியை தூக்கி வச்சுட்டு மூக்கை உறிஞ்சிக்கிட்டு இருக்க?
இது தானே ஒரு இடம், முத முத பொண்ணு பார்க்க வந்தது? பார்த்த முத இடமே ஒரு சிலருக்கு தான் கல்யாணம் தகையும்! சில பேருக்கு கொஞ்சம் லேட்டாகும்!
கல்யாண மேடை வரை வந்து கூட போய் நின்னு போன கல்யாணங்கள் எத்தனையோ இருக்கு!
அதுக்குப்புறம் அந்த பொண்ணு மாப்பிள்ளைக்கு எல்லாம் அடுத்த கல்யாணம் நடக்காமலா போய்டுச்சு!
விடு. பார்த்துக்கலாம்” என்று அவருக்கும் ஆறுதல் சொன்னார் அத்தை.
அதே தான் மகியின் பிரன்ட் அந்த மாமியும் சொன்னார்.
“அண்ணன் சொல் தட்டாத லட்சுமணன் இதிகாசத்துக்கு ஓகே, இன்னைய தேதிக்கு அது சரியா வராது.
தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேற!
இவன் என்ன இப்படி இருக்கான்? போகட்டும் விடு!
அந்த இதிகாசத்துல கூட எல்லோரும் சீதை பட்ட கஷ்டத்தை தான் பேசுவாங்க!
ஆனா ஊர்மிளை? லட்சுமணன் மனைவி! அவளும் தானே புருசனைப் பிரிய நேரிட்டது? அவ கஷ்டத்தை யாருமே கண்டுக்கல!
நீ ஒண்ணும் இந்த கால ஊர்மிளையா இருக்க வேண்டாம்!
எல்லாம் கடவுள் சித்தம்!
இன்னாருக்கு இன்னார்னு அந்த பகவான் எழுதினத யாராலும் மாத்த முடியாது!”
மாமியும் ஆறுதல் சொன்னார்.
மகிக்கு கல்யாணம் ஆகி செல்லப் போகிறாள் என்று,
அவள் வேலை செய்த கடையில் அவள் இடத்தில் வேலை செய்ய, அவளிடமே வேறு பொண்ணை வேலைக்கு சேர்த்து விட சொல்லி அதன் முதலாளி கேட்க,
மகி தான், அவளே போய், கஷ்டப்படுகிற குடும்பத்தை சேர்ந்த இன்னொரு பெண்ணொருத்தியை வேலைக்கும் சேர்த்து விட்டிருந்தாள்.
ஒரு வாரமாக அந்த பெண்ணிற்கு வேலை சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருந்தாள்.
அதனால் இப்போது அவளால் மீண்டும் அங்கே வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
“பரவாயில்ல மகி, வேணுமின்னா அந்த பொண்ணை அனுப்பி விட்டுடலாம்” என்ற ஓனரிடம்,
“இல்லைண்ணே அவங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்!
நான் ரொம்ப நம்பிக்கைக் கொடுத்து, இங்க வேலைக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். இப்ப வேலை இல்லைன்னு அனுப்பினா, பாவம்! வேண்டாம்!” என்றாள் மகி.
“அப்போ நீங்க ரெண்டு பேருமே வேலை பாருங்க” என்று கூட சொன்னார் அந்த முதலாளி.
ஆனால் அதுவும் முடியவில்லை!
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலருக்கும் மகியின் திருமணம் நின்று போனது தெரிந்து, அவளை துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கவும் அவளால் அங்கு தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை.
வீட்டில் இருந்து கொண்டாள்!
வீட்டிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை!
அக்கம் பக்கம் விசாரணைகள்! சிலரின் நக்கல் சிரிப்புகள்!
சிலரின் இரக்கப் பார்வைகள்!
வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவர்கள், வேலைக்கு போகாமல் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து வீட்டில் இருக்கவே முடியாது!
ஒன்று அவர்களுக்கே ரொம்பவும் போரடிக்கும்!
இன்னொன்று அக்கம்பக்கத்து ஆட்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது!
இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டிலேயே இருந்தால், உடம்பு சரியில்லையா என்று முதலில் கேட்பவர்கள், இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தால் வேலையை விட்டுட்டியா என்றே கேட்டு விடுவார்கள்!
மகிக்கும் இது போன்ற சங்கடங்கள்!
இதில் அவள் அண்ணி வேறு, கேட்கும் எல்லோரிடமும்
“பொண்ணு கொஞ்சம் கருப்புன்னு வேண்டாம்னு போய்ட்டாங்க” என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தாள்!
“நாங்களும் இதோட எத்தனை இடம் பார்த்துட்டு இருக்கோம்! வர்றவங்க எல்லாம் பொண்ணைப் பிடிக்கல, பொண்ணைப் பிடிக்கலன்னு சொன்னா, நாங்க என்னா தான் பண்றது? ஏதோ கூட குறைச்சு பவுனு போட சொன்னா கூடபரவாயில்ல!
இப்படி பொண்ண பிடிக்கலன்னு சொல்றவங்கள என்னா பண்றது?” என்று வாய்க் கூசாமல் புளுகிக் கொண்டிருந்தாள்!
இது மகியின் காதிலும் விழ தான் செய்தது!
என்னமோ சொல்லிக்கோ என்று அவள் ஏதோ விரக்தியில் விட்டு விட்டாள்!
ஆனால் பரமேஸ்வரியால் முடியவில்லை!
“ஏய்.. என்ன நீ, இப்படி சொல்லிட்டு இருக்கிற?
அப்படி எத்தனை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து என் பொண்ணைப் பிடிக்கலன்னு சொல்லிட்டு போனாங்க?
நானும் போனா போவுதுன்னு விட்டா, நீ பாட்டுக்கு இப்படியே சொல்லிட்டு இருக்க?
நல்லா இல்ல ஆமா!” என்று கத்தி விட்டார்!
“நான் என்ன இல்லாததையா சொல்லிப்புட்டேன்! அந்த பொம்பள சொன்னத தானே சொன்னேன்!”
“ஏய். நீ பேசாத..அவங்க வீட்டு விசயமே வேற?
அவங்க கிளம்பி போன அடுத்த நாள் பாலு அய்யா போன் பண்ணினார்.
அந்த பையனோட அம்மா அப்படி அழுதுச்சாம் அவர் கிட்ட!
என் பையனுக்கு கடைசி வர கல்யாணமே ஆக விட மாட்டாங்க இவனுங்க.. அப்படின்னு!
அதுங்களே எப்படிடா கல்யாணத்தை நிறுத்தலாம்னு யோசிச்சுட்டு இருக்கிறப்போ,
நீ வேற அவங்களுக்கு மகி போன்ல பேசின விஷயத்தை எடுத்துக் கொடுத்து எல்லாத்தையும் முடிச்சு விட்டுட்ட!
இப்ப என் பொண்ணு கிட்ட கொற இருக்கிற மாதிரி எல்லார்ட்டயும் சொல்லிட்டு இருக்கிற?
என்ன கேக்க யாரும் இல்லன்னு நினைப்பா?” என்று கத்தி விட்டார் கங்காவிடம்!
“நான் ஒண்ணும் நடக்காதத சொல்லலையே! உங்க பொண்ணு அந்த பையன் கிட்ட போனில் பேசினா தானே?”
“ஆமா பேசினா!”
“உன்னை மாதிரி காதல் கத்திரிக்கான்னு தானாக போய் பேசல!
வீட்டுல, பெரியவங்களா பார்த்து வச்ச மாப்பிள்ளை, கல்யாணம் ஏறக்குறைய முடிவானது போல இருந்ததால பேசினா!
அத மூட்டைக் கட்டிக்கிட்டு வந்து நடு சபையில சொல்லாட்டி என்ன?” பரமேஸ்வரி கத்தி தீர்த்து விட்டார் ஆற்றாமையால்!
ஏக சண்டையாகி விட்டது அன்று!
மகேந்திரன் வந்து, “நான் கண்டிச்சு வைக்கிறேன்மா, இனி அவ யார்கிட்டையும் இப்படி பேசாம பார்த்துக்கிறேன்” என்று வாக்கு கொடுத்த பின் தான் அடங்கியது அந்த பேச்சுக்கள்!
ஆனால் விஷயம் அத்தோடு போகவில்லை!
பரமேஸ்வரி வேலைக்கு போய் விட்டதால், வீட்டில் சும்மா இருந்த மகி ரேசன் கடைக்கு போனாள்.
அங்கு போய் மெசினில் ரேகை வைத்துக் கொண்டிருந்த அவளிடம்,
“என்ன மகி, காலையில தான் உன் அண்ணி வந்துச்சு. விசயத்தை சொன்னதும் ரொம்ப வருத்தமா போச்சு. இந்த காலத்துல அவனவன் பொண்ணு கிடைக்கலன்னு கிடந்து அல்லாடுறான்!
இவனுங்களுக்கு என்ன? பொண்ணு தமன்னா கலர்ல வேணுமாமா? கல்யாணம் பண்ணி குடித்தனம் தானே பண்ணப் போறான்?
இல்ல சினிமால நடிக்க வைக்கப் போறானா?
என்ன நான் சொல்றது?’ என்று கேட்டபடி அரிசியை நிறுத்து அவள் பையில் போட்டார் அந்த கடையில் பொருட்களை எடைப் போட்டு கொடுத்து உதவி செய்யும் அம்மாள்.
அவர் ஏற்கனவே அவரது வேலையில்லாமல் ஊரை சுற்றிக் கொண்டு இருக்கும் அவரின் மகனுக்கு மகியைப் பெண் கேட்டு பரமேஸ்வரி மறுத்த கடுப்பில் இருந்தவருக்கு இது தித்திக்கும் செய்தி!
வாய் தான் மகிக்கு ஆறுதல் சொன்னதே தவிர, கண்களில் இளக்காரம்! நக்கல்! கிண்டல்! நல்லா வேண்டும் உனக்கு என்ற பார்வை!
அதைப் பார்த்ததும் மகிக்கு பொங்கிக் கொண்டு வந்தது அழுகை!
அடக்கிக் கொண்டு வந்தவள், நேரே அண்ணன் வீட்டுக்கு சென்றவள், அங்கே அவள் அண்ணனையும் அப்போது வீட்டில் இருப்பது தெரிந்து உள்ளே போனாள்!
கோபமும் அழுகையுமாக, “அண்ணே பாருண்ணே. நீயும் அம்மாவும் அவ்வளவு சொல்லியும் ரேசன் கடையில கூட போய் அதையே சொல்லி வச்சுருக்கு அண்ணி!”
என்றவள் ரேசன் கடையில் நடந்ததை வேகமாக சொல்லி விட்டு, “கடையில க்யூவுல நின்ன மொத்த பேரும் என்னை வேடிக்கைப் பார்த்தாங்க!
எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு” என்றவள், அப்போது தான் கங்காவைப் பார்த்தாள்!
அவள் கன்னத்தில் கைரேகை அச்சு!
இப்போது தான் நன்கு வலுவாக அறை விழுந்தது போல!
“என்ன அண்ணா ஆச்சு?” என்று குழப்பத்துடன், மகேந்திரனைக் கேட்க,
அவன் ஒன்றும் சொல்லாது, “இவ எல்லாம் என்ன ஜென்மம்னு எனக்கே தெரியலம்மா!” என்றபடி, அவன் கையில் இருந்த அந்த பாங்க் நகை ஏல நோட்டிசைக் காட்டினான்.
“நான், உனக்கு கல்யாணப் பேச்சு முடிவாகிற மாதிரி ஆனவுடனே, உன் நகையெல்லாம் திருப்பிட சொல்லி எப்படியோ கஷ்டப்பட்டு பணத்தைப் பொரட்டி இவ கிட்ட கொடுத்திட்டேன்!
இவ நகையை எல்லாம் திருப்பி வீட்டில் பத்திரமா வச்சுருக்கானு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ஆனா இவ அத திருப்பாம, அந்த காசையும் அவ அம்மா கிட்ட கொடுத்து வட்டிக்கு விட்டுட்டு இருந்திருக்கா!
எங்க உனக்கு கல்யாணம் உறுதி ஆகிடுமோ? நாம அந்த பணத்தை திருப்பிக் கொடுத்து நகையை மீட்கனுமோன்னு நினைச்சு, இந்த கேடு கேட்டவளும், அந்த வீட்டு கேடு கேட்ட பொம்பளைங்களோட சேர்ந்து கிட்டு, ஆட்டையை கலைச்சு விட்டுருக்காங்கம்மா!
நாம அந்த பொம்பளங்கள சொல்லிட்டு இருக்கோம்! இங்க நம்ம வீட்டுலையே வில்லங்கத்தை வச்சுகிட்டு!
ஏதுடா நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு.. இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை கெடுத்தா அந்த பாவம் நம்ம பொண்ணு தலையில போய் விடியும்னு கொஞ்சம் கூட பயம் இல்லை இவளுக்கு!
ஏய்.. கிளம்புடி.. இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது! பாப்பாவ விட்டுட்டு நீ உங்காத்தா வீட்டுக்குப் போ!
அங்க போய் ஆத்தாவும் பொண்ணும் நல்லா கந்து வட்டிக்கு காச விட்டு, பேய் மாதிரி அலைங்க!
ஆனா இங்க இருக்க கூடாது நீ” என்று கங்காவைத வெளியே துரத்த, பரமேஸ்வரி வந்து அவனை சமாதானம் செய்தார்.
இப்படியே இரண்டு மாதங்கள் கடந்து விட்டிருக்க, புவனாவின் கல்யாணம் வந்தது!
புவனா ரொம்பவும் வற்புறுத்தியதால், கல்யாணத்திற்கு சென்றாள் மகி.
மனதின் ஒரு மூலையில் ராஜ் மோகனும் வருவானோ என்ற எதிர்பார்ப்பை மிகவும் கஷ்டப்பட்டு புறந்தள்ளினாள்!
அவன் வரவில்லை! அவன் அம்மா கூட வந்திருக்கவில்லை!
அதன் பின், சந்துரு தான் திருச்சியில் ஒரு தொழிற்சாலைக்கு ஆண் பெண் இரு பாலரையும் வேலைக்கு எடுக்கிறார்கள் என்று தகவல் சொல்லி அந்த வேலைக்கு அப்ளை செய்ய வைத்தான்.
திருச்சி என்றதும் முதலில் மறுத்தாள் மகி!
“திருச்சினா அது உறையூர் மட்டுமா?
நீ வேலை செய்யப் போற இடத்துக்கும் இந்த இடத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல! அது சிட்டி அவுட்டர்ல இருக்கு!
ஆனா ஊர் ஊருக்கு ஸ்டாப் பஸ் விட்ருக்காங்க! ஹாஸ்டல் கூட இருக்காம்!
ஆனா நீ உன் அத்தை வீடு சமயபுரம் தானே? அங்க தங்கிட்டு கூட நீ வேலைக்குப் போகலாம்!
உனக்கு இந்த வேலை ரொம்ப பிடிக்கும்! நல்ல வேலை செஞ்சீன்னா, அடுத்தடுத்த லெவல் போயிட்டே இருக்கலாம்!
சம்பளமும் ஜாஸ்தி ஆகும்!
உனக்கும் ஒரு சேன்ஜ் ஆக இருக்கும்!
நீ உன் ஊர்லையே இருந்தா டிப்ரெஸ்டா தான் இருப்ப!” என்று பலதும் சொல்லி வேலைக்கு சேர வைத்து விட்டான்!
அவன் சொன்னது போல தான் ஆச்சு!
அவளுக்கு ஏற்கனவே அந்த துறையில் ஆர்வம் அதிகம் என்பதால், அவளுக்கு வேலை ரொம்பவும் பிடித்துப் போய் விட்டது!
அவள் வேலைக்கு சேர்ந்த பின் ஊருக்குப் போவதையே குறைத்துக் கொண்டு விட்டாள்.
அவள் அம்மாவும் அவளைக் காண இங்கு வந்து விடுவதால்!
மேலும் பரமேஸ்வரியும் திருச்சியிலேயே இருக்கும், மகியின் அந்த பிரன்ட் மாமியின் மகளின் சிறு குழந்தையை வீட்டோடு இருந்து பார்த்துக் கொள்ளும் வேலைக்கு, அந்த வேலைக்கு செல்லும் மாமியின் மகளுக்கு உதவியாக வந்து விட்டார்!
கோபத்தில் மனைவியை வீட்டை விட்டு துரத்திய, மகேந்திரன் அதன் பின், அவன் மகளுக்காக அவளை மீண்டும் வீட்டிற்குள் விட வேண்டியதாகிவிட்டது!
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன பெரிதாக எந்தவொரு சலனமும் இல்லாமல்!
மகியின் மனதில் அவ்வபோது வந்து எட்டிப்பார்ப்பான் ராஜு!
அந்த நிகழ்வுக்குப் பின், அவன் நம்பரை ப்ளாக் செய்து விட்டாள், மகி!
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவனும் சந்துருவின் மூலம் பேச முயற்சித்த போது,
“அந்த பொண்ணை நீ இப்பவே வெக்காளி அம்மன் கோவிலில் வச்சு தாலி கட்டறேன்னு சொல்லு, நான் பேச வைக்கிறேன்! என்ன கட்டுறியா?”
ராஜ் மோகன் மவுனிக்கவே, “எந்த நினைப்புல அந்த பொண்ணு கிட்ட பேச ஆசைப்படுற?
உன் அக்கா அண்ணனை மீறி நீ எதுவும் செய்ய மாட்டே!
அப்புறம் என்ன டேசுக்கு அது கிட்ட பேசணும்னு நினைக்கிற?” கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டி விட்டான் நண்பனை!
அதன் பின் ராஜ் மோகனும் துபாய் சென்று விட்டான்.
இதோ ஒரு வருடம் தாண்டி விட்டது!
அன்றும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு, பாக்டரியில் இருந்து வீடு திரும்ப பஸ் ஏற வந்தாள் மகி.
“மகி இன்னிக்கு நம்ம கம்பெனி பஸ்ல ஏதோ பிரச்சினையாம்.
அதனால வெளி வண்டி தான் இன்னிக்கு வருது” என்றார்கள் உடன் வேலை செய்பவர்கள்.
அந்த வெளி வண்டியில் இவள் ரூட்டிற்கு ஏற்றிக் கொண்டு போக வேண்டிய ஊழியர்களின் பெயர் பட்டியலை அந்த வெளி வண்டியின் கிளீனர் கையில் வைத்துக் கொண்டு, செக் செய்து கொண்டிருந்தான்.
“ரெண்டு மகிழினி இருக்காங்க. நீங்க என்ன மகிழினிம்மா?” என்று மகியைப் பார்த்து கேட்க,
“அவங்க என் மகிழினி!” என்று ஒரு குரல் டிரைவர் சீட்டில் இருந்து வந்தது!
அந்த குரல்!
அவள் வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் சாட்டில் அவள் திரும்ப திரும்ப கேட்டு கேட்டு, தன் மனக்காயத்தைக் கீறி கீறிப் பார்க்க செய்யும் குரல்!
அவள் அதிர்ச்சியுடன் குரல் வந்த திசையை நோக்கிப் பார்க்க, அங்கு அந்த ஸ்பேர் பஸ் டிரைவராக ராஜ்மோகன்!
error: Content is protected !!