Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 20

ஊர் உலகத்தில் எந்த மருத்துவமனைகளும் சரியில்லை என கீர்த்தனாவின் குடும்பம் மொத்தமும் குறைபட்டு கொள்ள யாரோ ஒருவரின் சொல்பேச்சு கேட்டு இந்த ஊரில் ஒரு பிரபல மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்காக தனது தமக்கையை அழைத்து வந்து தங்க வைத்திருக்கிறாள்.

கீர்த்தனாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் முதல் பிரசவமே சிக்கலாகிப்போனது.. அதிலும் அந்த மருத்துவமனையில் நோயாளிகளை மட்டுமல்ல அட்டெண்டரையும் கையாளும் விதம் சரியில்லை என்று புவனாவின் பெற்றோர்கள் குறைபட்டுக் கொள்ள.. நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டாம் முறை கருத்தரித்திருக்கும் கீர்த்தனாவிற்கு பிரசவம் பார்க்க.. ஒரு நல்ல மருத்துவமனையாக தேடி பெற்றவர்களும் உடன் பிறந்தவளும் அக்கம் பக்கத்தில் சொல்லி வைக்க.. நெருக்கமான ஒருத்தரின் மூலம் இந்த பிரபல மருத்துவமனையின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அந்த மருத்துவமனை புவனாவின் புகுந்த வீட்டிற்கு அருகாமையில் இருப்பது அவளுக்கு வசதியாய் போயிற்று. புவனாவிற்குத்தான் பிறந்த வீட்டை விட மாமியார் வீட்டில் செல்வாக்கு அதிகமாயிற்றே!

“அக்காவோட நிலைமை உங்களுக்கு தெரியுமே அத்தை.. போன பிரசவமே செத்து பொழைச்சு வந்தா..! அதான் இந்த முறை பிரசவம் இங்க பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம். செக்கப் ஸ்கேன்னு அடிக்கடி ஹாஸ்பிடல் போக வேண்டிய வேலை இருக்கிறதுனால ஒரு ரெண்டு மூணு நாள் இங்க தங்க வச்சுக்கலாம்னு இருக்கேன். பிரசவத்துக்கு அப்புறம் ஹாஸ்பிடல்லருந்து டிஸ்டார்ஜ் ஆகி அப்படியே அவங்க வீட்டுக்கு போயிடுவா..! உங்களுக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே அத்தை!” என தேனொழுக கேட்க..



Advertisement

“எனக்கென்ன தொந்தரவு.. உன் அக்கா! நீ பார்க்க போற.. ரெண்டு மூணு நாள்தானே தாராளமா இருந்துட்டு போகட்டும். சொந்தக்காரங்களுக்காக இது கூட செய்யலைனா எப்படி!” என மங்கை வார்த்தைகளில் சக்கரையை அள்ளி வார்க்க.. கீர்த்தனா வெற்றிகரமாக இங்கே வந்து ஜாகை போட்டாயிற்று!

கீர்த்தனாவின் கணவனும் மாலை பணி முடிந்து இங்கே வந்து சேர்ந்துவிட.. குடும்பமே கூடத்தில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தனித்திருப்பது வாத்சல்யனும் லஷ்மியும் மட்டும்தான். வாத்சல்யன் இந்த குடும்பத்தில் ஒருவனாக அரட்டை கச்சேரியில் பங்கேற்க எந்த ஆட்சேபனையும் இல்லைதான். அவன் மனைவி அந்த பக்கமாக ஏதோ வேலையாக போனாலும் வந்தாலும் ஒட்டுமொத்த குடும்பமும் சைலன்ட் மோடுக்கு மாறி.. அவள் அங்கே இருப்பதோ தங்கள் உரையாடல்களில் கலப்பதோ விரும்பப்படுவதில்லை என்பதை ஊடகமாக உணர்த்தி விட.. தன் மனைவி மதிக்கப்படாத இடத்தில் தனக்கும் வேலை இல்லை என.. சின்னதாய் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு லஷ்மியோடு மாடிக்கு வந்து விடுகிறான்.

உணவோ அரட்டையோ.. அறைக்குள்ளோ.. அல்லது காத்தாட மொட்டை மாடியிலோ களை கட்டுகிறது. யார் எங்களை தவிர்த்தாலும் நாங்கள் சந்தோஷமாகவே இருக்கிறோம் என்று ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் எந்த வித கிலேசமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

Advertisement

பிரசவத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில்.. வீட்டிலிருக்கும் அத்தனை பேரும் கீர்த்தனாவை தனியே விட்டு.. அவரவர் வேலையை பார்க்க வெளியே சென்றதுதான் பெரும்பிழையாய் போயிற்று.

Advertisement

புவனா குழந்தைகளை அழைத்து வர பள்ளி சென்றிருந்தாள். செல்வ விநாயகம் மங்கை கடைத் தெருவரை போயிருக்க.. வாத்சல்யனும்.. முரளியும் அலுவலகம் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை.

மாதாந்திர தொந்தரவு பாடாய்படுத்த.. பர்மிஷன் கேட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த லஷ்மி..‌ மாடியிலேயே இருந்திருக்கலாம்..

காபி கலந்து குடிப்பதற்காக இறங்கி வந்தவளின் கண்களில் கீர்த்தனா பட்டது அவள் அதிர்ஷ்டமோ அல்லது லஷ்மியின் துரதிஷ்டமோ தெரியவில்லை..

Advertisement

இங்கு வந்த நாளிலிருந்து லஷ்மியை பார்த்து கீர்த்தனா ஒரு சம்பிரதாயத்துக்கு கூட புன்னகைத்ததில்லை.. இந்த பெரிய வீட்டில் அத்தனை பேர் மத்தியில் லஷ்மியை தவிர்ப்பது அவ்வளவு கடினமாய் இருக்கவில்லை அவளுக்கு.

இவள் பார்வை பட்டால் கூட தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று ஒதுங்கிப் போனவளைத்தான்.. கை கொடுத்து காப்பாற்றியிருந்தாள் லஷ்மி.

கீர்த்தனாவின் பனிரென்டு வயது மகளும்.. புவனாவின் குழந்தைகளும் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு.. சமையலறையிலிருந்து உணவு மேஜை வரை.. சின்ன சின்ன பாத்திரங்களை எடுத்து வைப்பதும் பிறகு.. உணவு முடிந்து அதை சமையலறைக்குள் கொண்டு போய் வைப்பதுமாக இருக்க.. தவறுதலாக நெய் டப்பா கீழே விழுந்து.. மணல் மணலாய் திரிந்து ஓடிய வழுவழுப்பான பசு நெய்யை கீழே கொட்டி கவிழ்த்தது தெரிந்தால்.. “அடப்பாவி நெய் விக்கற விலைக்கு.. இப்படி அநாமத்தா பொருளை கீழக்கொட்டி வீணாக்கிட்டியேடா.!” என புவனாவின் கையால் முதுகில் ரெண்டு மொத்து வாங்க நேரிடும்.. என்ன பயந்து பாதி வீணாய் போனாலும் மிச்சமீதியிருந்த பாட்டிலை சாமர்த்தியமாக மூடி கிச்சனில் கொண்டு போய் வைத்து விட்டான் அவளின் செல்ல மகன்..

இதுபற்றி தெரியாத குடும்பம் அவரவர் வேலைகளுக்காக வெளியே சென்றுவிட.. சரியாக அந்த இடத்தில் கீர்த்தனாதானா கால் வைக்க வேண்டும்.

சரக்கென வழுக்கிய நேரத்தில் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் லஷ்மி.

ஏதோ விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்து.. குப்புற விழப் போனவளின் வயிற்றில் அடிபட்டு விடக் கூடாதென.. அவள் நிறைமாத வயிற்றில் தன் கரம் கொண்டு தடுத்து கீழே விழாமல் இன்னொரு கையால் அவளை ஒரு மாதிரியாக தாங்கி பிடிக்க.. கீர்த்தனாவின் முழு எடையும் அவள் கைகளில் விழுந்ததில்.. உள்ளே எலும்பு முறிந்து போனதை போல் அப்படி ஒரு வலி.. எவ்வளவு பிரத்தயப்பட்டு தடுக்க முயற்சித்தும்.. விழுந்த வேகத்தில் வயிறு கீழே படத்தான் செய்தது.

அம்மாஆஆ! அலறலோடு தரையில் அமர்ந்து விட்டாள் கீர்த்தனா.

தாங்கவே முடியாத கை வலி! இருந்தாலும் இப்போதைக்கு நிறை மாத கர்ப்பிணியை கவனிப்பதுதான் அத்யாவசியம் என்பதை உணர்ந்து.. என்ன செய்வதென அறியாமல்.. தாமதிக்காமல் ஓடிப் போய் எதிர் வீட்டில் எட்டிப் பார்க்க நல்ல வேலையாக மீனாட்சியின் கணவன் வேணு வீட்டில் இருந்தான்.

நிலைமையைச் சொன்னதும் உடனடியாக ஓடிப்போய் ஆட்டோ பிடித்து வர.. பக்கத்திலிருந்த ஒரு நல்ல மருத்துவமனையில் கீர்த்தனாவை அனுமதித்து முதலுதவி தொடங்கப்பட்டது.

அந்த மருத்துவமனை புவனாவிற்கு அவள் தெரிந்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மகப்பேறு மருத்துவமனை அல்ல.

விஷயம் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த குடும்பமும் பதறிக் கொண்டு ஓடி வந்தது.

அதிர்ச்சியில் கீர்த்தனாவிற்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்து விட.. தன் அலறலுக்கு மத்தியில் கீழே எண்ணெய் போல் ஏதோ கொட்டியிருந்ததை.. முக்கி முனகி.. தன் தங்கையிடம் தெரியப்படுத்தியவள்.. தானும் தன் குழந்தையும் இப்போது பாதுகாப்பாக உயிரோடு இருப்பதற்கான காரணமே லஷ்மிதான் என்பதை மட்டும் குறிப்பிட்டு சொல்லாமல் விட்டதுதான் அநியாயம்.

“தேவையில்லாம அந்த இடத்துல எண்ணெயை யார் கொட்டி வைச்சிருப்பாங்க..!

நாமளும் பத்து முறை அந்தப் பக்கம் தான் நடந்து போனோம் வந்தோம்.. நம்ம கால்ல எதுவும் தட்டுப்படலையே..!

இதோ இந்த மகராசிதானே சாயந்திரம் வந்தாங்க.! நிறைமாசமா தாயும் குழந்தையும்.. தன்னோட வீட்ல இருக்கறது பிடிக்காம.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இவங்கதான் இப்படி ஒரு வேலை பார்த்துருக்கணும்..” கொஞ்சமும் யோசிக்காமல் புவனாவிட்ட வார்த்தைகளில் துடித்து நிமிர்ந்தாள் லஷ்மி..

“நான்.. நானா.. நான் என்ன செஞ்சேன்..!” அவளால் பேசக்கூட இயலவில்லை.. நெஞ்சம் நிலை தடுமாறி வேகமாக துடிக்க தொடங்கிற்று.

“சும்மா நல்லவங்க மாதிரி நடிக்காதீங்க..! குழந்தை இல்லாம போனதுல உங்களுக்கு மனநோய் முத்தி போச்சு.. உங்க கண் முன்னாடி யாரும் வாயும் வயிறுமா இருக்கறது தாங்க முடியல.. அதானே அப்படி ஒரு காரியத்தை செஞ்சீங்க..”

“என்ன புவனா இது! வார்த்தைகளை விடாதே..! நான் அப்படி செய்யறவ கிடையாது அது உனக்கும் தெரியும்..” கைகால் நடுக்கமெடுக்க.. அவர்கள் முன்னால் அழுது விடக்கூடாது என்பதில் கண்கள் போராட தொடங்கியது.

“உங்க வயிற்றெரிச்சல் இங்க எல்லாருக்குமே தெரியும்.. தேவையில்லாம அங்க எண்ணெய் எப்படி கொட்டுச்சு.. நீங்க சமையலறைக்குள்ள போய் எண்ணெயை எடுத்துட்டு வந்து கொட்டி இந்த வேலையை பார்த்துட்டு அப்புறம் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு நீங்களே கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்தாச்சு!”

ஒடிந்து விழும் கொடி போல துவண்டு போனாள் லஷ்மி..!

கொடிக்கொம்பாய்.. ஆறுதலுக்காக.. ‘என்னவெல்லாம் சொல்றாங்க பாத்தீங்களா..? வாயை திறந்து எதுவுமே பேச மாட்டீங்களா..?’ என்னும் பொருளோடு மாமியாரை பார்க்க.. சங்கடமாய் நின்றிருந்தாலும் அவர் பார்வையும் லஷ்மியை சந்தேகமாய் ஊடுருவியதில் மேலும் நரக வேதனை.

என்னதான் இருந்தாலும் மருமகளாயிற்றே, அவளை விட்டுக் கொடுத்து பேச முடியாத சூழ்நிலையில் மௌனமாய் நிற்பது போல் தோன்றியது. ஆனாலும் அவர் பார்வையும் தன்னை குற்றவாளியாய் சாடியதை லஷ்மியால் சாகும்வரை மறக்க முடியாது.

“ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றதுக்கு முன்னாடி போன் பண்ணி எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு தெரியாதா..?” புவனாவின் அம்மா வேறு கடுமையாக சாடினார்..

“கீர்த்தனாக்காவை கொண்டு வந்து நம்ம வீட்ல தங்க வைச்சதே.. அவளோட ஹெல்த் கண்டிஷன் பத்தி நல்லா தெரிஞ்ச அந்த ஹாஸ்பிடல்ல டெலிவரி பார்க்கத்தான்! யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட கேட்காம அதிக பிரசங்கித்தனமா இங்க கொண்டு வந்து சேர்க்கச் சொல்லி உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது.. இப்ப பிரசவ வலியும் வந்துருச்சு.! மறுபடி அங்க கூட்டிட்டு போகவும் முடியாது..” என்ற புவனாவை தொடர்ந்து..

“இப்படின்னு தெரிஞ்சிருந்தா.. என் மகளை கண்டிப்பா உங்க வீட்ல விட்டுருக்கவே மாட்டேன்..” புடவை முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டு அழுதபடியே பேசினார் புவனாவின் தாயார்.

“இப்படியும் கூட ஒரு ராட்சசி இருப்பாளா..! புள்ளதாச்சி பொம்பளைன்னு கூடவா கொஞ்சம் கூட இரக்கம் இருக்காது..!”

“புள்ளத்தாச்சியா இருக்கறதுனாலதான் தாங்கிக்க முடியாம இப்படி ஒரு வேலையை பார்த்தது..!”

“அதான் குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஆபத்தும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே.. கொஞ்சம் நிதானமா இருங்க சம்பந்தியம்மா..” என மங்கை அழுது கொண்டிருப்பவரை தேற்ற முயன்றாரே யன்றி ‘என் மருமக அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டா’ என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போனது நெஞ்சில் பெருத்த அடியாக விழுந்தது.

தூரத்தில் கைகட்டி நின்று இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேணுவுக்கும் கூட லஷ்மியை பார்க்கவே பரிதாபமாய் இருந்தது.

லஷ்மிக்கு அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கிருக்க முடியவில்லை.. தலை கிறுகிறுவென சுற்றிக்கொண்டு வர.. தள்ளாடியபடி நடந்து வந்தவள்.. சுவற்றில் சாய்ந்தபடியே நின்றிருந்த வேணுவிடம்..

“அண்ணா..! ஒரு ஆட்டோ புடிக்கிறீங்களா நான் வீட்டுக்கு போகணும்..! எனக்கு கண்ணே தெரியல ஒரு மாதிரி மயக்கம் வர்ற மாதிரி இருக்கு..!” கண்ணீர் திரையிட்ட கண்களோடு சொல்ல..

“ஒரு நிமிஷம் இப்படி உட்காருமா.. ஏதாவது டீ காபி குடிக்கிறீங்களா..!” என கரிசனத்தோடு கேட்டான் வேணு.

“வேண்டாம்னா.. வீட்டுக்கு போகணும்..! என் புருஷன்கிட்ட போகணும்..” கடைசியில் உள்ளடங்கிய வார்த்தைகள் வேணுவிற்கு கேட்டிருக்க நியாயமில்லை..

லஷ்மி இங்கு நிற்பது சரியல்ல என அவனுக்கும் தோன்றவே.. ஓடிப்போய் ஆட்டோ பிடித்து வந்தவன் லட்சுமியை பின்பக்கம் ஏறச்சொல்லி.. ஓட்டுனர் இருக்கையின் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டான்.

கையில் கத்தையாக வைத்திருந்த பணத்தை எண்ணிப் கூட பார்க்காமல் அவனிடம் கொடுத்து.. ஆட்டோவிற்கு பணம் செலுத்த சொல்லி விட்டு.. ஒரு ஜடம் போல கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் சென்றவளை பரிதாபமாய் பார்த்தான் வேணு!

உள்ளே என்ன நடந்ததென அவனுக்கும் தெரியாது. ஆனால் நிச்சயம் லட்சுமியின் மீது எந்த தவறும் இருந்திருக்காது என்ற உண்மை மட்டும் புரிந்திருந்தது.

அவனுக்கு தெரிந்திருந்த நியாயம் கூட அந்த குடும்பத்திற்கு புரியவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

தொடரும்.

5 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 20

  • Cha ena manusanga ithukellam…… Athuku pillaiku mudiyaleana oru nimisam kuda yosikathugala…. Avalo akkara iruka _____ga ethuku thaniya vitutu pothuga…. Ivalo pesura bhuvana amma enna maanaku inga anupanum

    Enala mudiyala writerreaaaa…. Mandaila 100gm kuda irukathu pola athoda maga thana ula delivery ku iruku apidi irukum pothu vera oru ponna ipdi sola epidi manasu varothooo

    Vatsa ethum soliruvanonu bayama iruku

    Reply
  • Revathy Dhanda

    இதுங்க எல்லாம் என்ன மனுஷ ஜென்மங்களோ…. மனசாட்சி இல்ல தெ மிருங்கங்க…. உதவி செய்து காப்பாற்றியதுக்கு நல்லா லக்ஷ்மி மனச நோகடிச்சிடுச்சிங்க😭😭😭😭…..
    தனக்கு குழந்தை இல்லனா அடுத்த கர்ப்பிணி பெண்ணுக்கு இப்படி செய்யறது அவங்க புத்தி போல….
    அதெ லக்ஷ்மி யும் அப்படியே நினைக்குதுங்க, அதுக்கு ஒன்னு இந்த வீட்ல தங்க வச்சி இருக்க கூடாது…
    இல்லனா தனியா விட்டு போயிருக்க கூடாது….

    Reply
  • Krishnaveni

    நாக்குல நரம்பு இல்லாம பேசுறது ன்னு சொல்லுவாங்களே அது இதுகல பாத்து தான் சொல்லி இருப்பாங்க போல கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படியா பேசுவாங்க 😡😡😡
    லச்சு மா அழாதே டா ரொம்ப கஷ்டமா இருக்கு 🥺🥺🥺

    Reply
  • Divyalakshmi Sugumar

    Andha neram. Periya abathu nadakama kappathunadhu kannuku teriyala
    Aana ava dhan senchirupa nu pechu

    Kuzhandhai illana ah ivalo kevalama ah pesanum ah

    Innoruthara pesa vittu pakkara magai idhu niyam ah yenna irundhallum unga marumaga avalai veli idathulla vittu kodukalam ah

    Vatsa thayava senchu thaniya veedu yedhu lakshmi ya kootiu poidu 🙏🙏🙏🙏🙏🙏🙏

    Reply
  • போங்கடி நீங்களும் உங்க நியாயமும் 😡😡😡😡 லஷ்மி நீ மொதல்ல அந்த குடும்பத்த விட்டு வெளிய போ நன்றி கெட்ட ஜென்மங்க

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!