பாறையில் மலர்ந்த தாமரையே! 24
இப்படி துணிந்து எடுக்கப்படும் ஒவ்வொரு தவறான முடிவுக்கு பின்னும் ஒரு வலுவான காரணம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்..
அம்மா அப்பா குழந்தைகள்தான் ஒரு குடும்பம் முழுமையடைய ஆதாரம்.. உண்மைதான்.. ஆனால் குழந்தை இல்லாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள் போல இந்த சமுதாயம் அவர்கள் மீது திணிக்கும் அழுத்தங்களே.. வாத்சா சந்தா தம்பதியின் இந்த விபரீத முடிவுக்கான காரணமாக அமைந்து போனது..
சந்தா.. வாத்சாவை பொறுத்தவரை குழந்தை என்பது ஒரு ஏக்கம்.. கனவு ஆசை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.. ஆனால் அது அப்செஷன் கிடையாது..! அதை ஒரு குறையாக நினைக்காமல் குழந்தை இல்லாமலும் கூட ஒருவருக்கொருவர் உறுதுணையாக அன்பு செலுத்தி வாழ பழகிக் கொண்டனர்.. அதனால்தான் ஒரு உயிருக்கு மதிப்பு கொடுத்து இந்த வரத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவர்களால் ஓரந்தள்ளிவிட்டு கடந்து போக முடிந்தது..
ஆனால் இந்த சமுதாயமும் சுற்றியிருந்த மனிதர்களும் அவர்களை அப்படி இருக்க அனுமதிக்க வில்லையே..!
Advertisement
வலிக்க வலிக்க அடிப்பதும்.. ஓட ஓட விரட்டுவதுமாய் வாழ்க்கையின் மோசமான எல்லையில் கொண்டு போய் நிறுத்தி வைத்த போது.. ஒரு கணம் திரும்பி பார்த்து அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற வெறி.. எங்களாலும் முடியுமென காட்ட நினைக்கும் வைராக்கியம்.. கையில் வரத்தை வைத்துக்கொண்டு ஏன் வீணாக்க வேண்டும். உங்களுக்கெல்லாம் நிச்சயம் பதிலடி கொடுப்பேன்.. என்ற ஆத்திரம்!
குடும்ப கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென ஒரு விதி உண்டு. அது நல்லதுக்குத்தான் மனிதனை நெறிப்படுத்தி கடிவாளம் போட்ட குதிரையாக வாழச் சொல்ல இது போன்ற கட்டமைப்பு தேவைதான். ஆனால் குழந்தை பேறு தாமதமாகும் நிலையில் ஒரு தம்பதியின் மீது பிரஷர் போடுவதும்.. அவர்களை ஒதுக்கி வைப்பதும் வார்த்தைகளால் வஞ்சிப்பதும் எந்த விதத்தில் நியாயமாகும்.
எந்த காலத்துல இருக்கீங்க.. இதெல்லாம் இப்ப இல்லவே இல்லையே..! உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு..! இப்ப போய் குழந்தை பிறக்கலைன்னு யார் கண்டுக்கறாங்க..! எல்லாரும் அவங்கவங்க வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்காங்க..! எனக்கெல்லாம் இந்த மாதிரி எந்த பிரச்சனையும் இல்லைப்பா..! என யாரேனும் ஒருவர் சிரித்துக் கொண்டே சொன்னால் அவர் மல்டி யூனிவெர்ஸ் அல்லது ஆல்டர்னேட்டிவ் ரியாலிட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என அர்த்தம்.
Advertisement
இங்கே எங்களுக்கு குழந்தை வேண்டும் என்று சொல்லி முடித்த கணம் ஆகாயத்திலிருந்து இடி முழங்கியதை போல் ஒரு சத்தம்! திடுக்கென இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்.
Advertisement
தீப்தி ஓடிப்போய் கட்டிலில் அமர்ந்து கொண்டது.
வேண்டிக் கோண்ட வரமென்றாலும் அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை நினைத்துக் கூட பார்க்க இயலாமல் கணவனின் மார்பில் சாய்ந்து கதறினாள் லஷ்மி..!
“இனிமே அழவேக்கூடாது நீ! நாம நெனச்சது நடக்க போகுது வேண்டிய வரம் கிடைக்கப்போகுது..!”
Advertisement
“ஆனா தீப்தி.?” லஷ்மி விசும்பினாள்.
“கண்ணை மூடிக்கிட்டதும் எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கிட்டு.. சட்டுனு முன்னாடி வந்து அவுட்டுன்னு சொல்ற கண்ணாமூச்சி ஆட்டம் மாதிரி.. தீப்தி பாப்பா தற்காலிகமா இந்த உலகத்தை விட்டு போய்.. நிரந்தரமா நம்மகிட்ட வந்து சேர்ந்திடுவா..!”
“ஆனா இது தப்பில்லையா..? மீனாட்சி பாவம் இல்லையா..?”
“நாமளும்தான் பாவம்..! இரக்கமில்லாம நம்மள வஞ்சித்த உலகத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டாமா..! காயம்பட்டு காயம்பட்டு புண்ணாகிப் போயிருக்கற இதயத்துக்கு மருந்து போட்டுக்க வேண்டாமா..!”
“நீங்களா இப்படி பேசறீங்க..?”
“நிலமை என்னை அப்படி பேச வச்சுட்டது சந்தா..! பாவ புண்ணியம் பார்த்து மத்தவங்களுக்காக உன்னை இழக்க விரும்பல.. எது நடக்கணுமோ நடக்கட்டும்.”
“தப்பு செய்யறோம்னு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு வாத்சா..!”
“தப்பு செய்யறோம்ன்னு ஏன் நினைக்கணும்..! கேட்டது கிடைக்கப்போகுது..! நமக்கு குழந்தை பிறக்கப்போகுது..! நம்மள அவமானப்படுத்தினவங்க கண் முன்னாடி வாழ்ந்து காட்ட போறோம் சந்தா..!” வாத்சல்யனின் கண்கள் மின்னியது.
கொடுக்கல் வாங்கல் கணக்காக தன்னை வைத்து ஒரு ஏலம் போய்க்கொண்டிருப்பதை உணராமல் வாயில் கை வைத்து இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கிறாள் தீப்தி..!
சந்தான லஷ்மி அதற்கு மேல் பேசத் தெரியாமல் மௌனமாக யோசித்திருந்தாள்.
“எதையும் யோசிக்காதே சந்தா.. எல்லாம் சரியா வரும்.!” அவள் தலையை தடவி கொடுத்தவன் குழந்தையை அழைத்துக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டு வருகிறான்..
“கேட்ட வரம் தரப்பட்டது.. சரியாக ஆறு திங்களுக்கு பின் அஸ்தமனமாகும் இன்னொன்று உதயமாகும்..”
அவரவர் கனவுகளில் இருண்ட குகையொன்றில் நீண்டு செல்லும் வழியைத் தொடர்ந்து அங்கு தெரிந்த வெளிச்சக்கீற்றோடு மின்னி அசரீரியாய் சொன்ன வார்த்தை இது..
அடித்து பதறி எழுந்து அமர்ந்தாள் சந்தான லஷ்மி..! அவளுக்கு முன்பாகவே வேர்த்து விறுவிறுத்து போயிருந்த தினுசில் அமர்ந்திருந்தான் வாத்சல்யன்.
பேரர் வைத்து விட்டுப் போன காபி ஆறி போனதை கூட உணராமல் யோசனையில் மூழ்கியிருந்தனர் இருவரும்.!
“ஆறு திங்கள்ன்னா என்ன அர்த்தம் சந்தா..!” வாத்சல்யனே அந்த மௌனத்தை உடைத்தான்.
“ஆறு மாசம் வாத்சா..! அப்படின்னா ஆறு மாசந்தான் தீப்தி உயிரோடு இருக்க போறாளா..?” லஷ்மியின் கண்கள் கலங்கியது..
“அழாத லஷ்மி..! தீப்தியை இழக்கறதா ஏன் நினைக்கற! அவ நமக்கு குழந்தையா பிறக்க போறா.. அப்படி நினைச்சுக்கோயேன்..!”
“அவளோட அப்பா அம்மாவை நினைச்சாத்தான் மனசுக்கு பாரமா இருக்கு..!”
“மூணு குழந்தைகளை பெத்துட்ட மீனாட்சிக்கும் வேணுவுக்கும் தீப்தி ஒரு சுமைதான்..! நாம அந்த சுமையை குறைக்க போறோம் அவ்வளவுதான்.!”
“குழந்தையை இழக்கற பெத்தவங்களோட வலி..?”
“அப்ப உன்னோட வலி.. அது பரவாயில்லையா..? உன்னை இந்த நிலைமையில என்னால பாக்க முடியல லஷ்மி..! ஆரம்பத்துல இந்த வரத்தை யூஸ் பண்ணிக்கலாம்ன்னு சொன்னது நீதான்.. நான் வேண்டாம்னு சொன்னேன்.. ஆனா இப்ப நிலைமை தலைகீழா மாறிப்போச்சு. யாருக்காகவும் யோசிக்கற நிலைமையில நான் இல்ல.. இந்த உலகத்துல எல்லாருமே சுயநலவாதிகள்தான்.. ஏன் நம்ம இடத்துல இருந்திருந்தா மீனாட்சியும் வேணுவும் கூட அதைத்தான் செஞ்சிருப்பாங்க.. அப்புறம் நாம ஏன் பின் வாங்கணும்..!”
லஷ்மி உதட்டை கடித்துக் கொண்டு தலை தாழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அவள் கை மீது தன் கையை வைத்து அழுத்தினான் வாத்சா..!
“கொஞ்சநாளைக்கு கவலையா இருப்பாங்க.. அப்புறம் மத்த ரெண்டு பிள்ளைகளை வளர்க்கறதுல பிஸியாகிடுவாங்க..! சந்தா.. மறுபடி மறுபடி இதைப் பத்தி பேசி என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளாத ப்ளீஸ்..! துணிச்சலா முடிவெடுத்த பிறகு அதைப்பத்தி யோசிச்சு கவலைப்படறது முட்டாள்தனம்..!” என்றவனை நிமிர்ந்து ஏறிட்டாள் லஷ்மி..!
அவளுக்கும் கணவன் சொல்வதில் உண்மை இருப்பதாய் தோன்றிற்று.. குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்தை வைத்து சொந்த வீட்டிலேயே அகதிபோல் ஒதுக்கப்பட்ட அவமானத்திற்கு பதில் தேட வேண்டாமா..! அத்தனை பேரின் நடுவில் வைத்து தன்னை கேவலப்படுத்திய புவனாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டாமா..! புண்பட்ட பாறாங்கல்லாய் இறுகி விட்டது..
மற்றவர்களைப் பற்றி யோசிக்க வழியில்லாமல் தன் சுய விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்து விட்டனர் இருவரும்.
“நாம இங்கிருந்து தனியா போக போறதில்லையா வாஸ்தா..?” கணவனின் கைவளைவுக்குள் அடங்கியபடி கேட்கிறாள் சந்தா!
“இல்ல சந்தா..! தொலைச்ச இடத்திலதான் தேடணும்.. வாழவே அறுகதை இல்லாதவங்களா நம்மளை கேவலமா நடத்தின இவங்க முன்னாடிதான் வாழ்ந்து காட்டணும்..”
“ஆனா தீப்தியோட முடிவை பார்க்கற சக்தி எனக்கு இல்லை வாத்சா..!” அவள் உள்ளத்தைப் போல குரலும் நடுங்கியது.
“மனசை கல்லாக்கிக்கோ சந்தா.. ஒன்னை இழந்தாத்தான் இன்னொன்னை பெற முடியும்..! நமக்கு குழந்தை வேணும் அதுல மட்டும் ஃபோக்கஸ்டா இரு..!” அணைத்திருந்த தனது வலிமையான கையால் அவள் தோளை அழுத்திப் பிடித்ததில் வலியெடுக்கவே நிமிர்ந்து தன் கணவனை ஏறிட்டு பார்த்தாள் லஷ்மி..!
குழந்தை வேண்டுமென்ற ஆசையை விட நினைத்ததை நடத்திக் காட்ட வேண்டுமென்ற தீவிர நோக்கம் அவன் கண்களில் தெரிந்தது.
இப்போதைக்கு தனிக் குடித்தனம் போகப் போவதில்லையென தாய் தந்தையை அழைத்து தன் முடிவை சொல்லியிருந்தான் வாத்சல்யன்.
மங்கைக்கும் சர்வ விநாயகத்திற்கும் தலைகால் புரியாத சந்தோஷம்.
“உங்க இஷ்டம் போல இங்கேயே இருங்க..! இனி புவனாவால எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன்..” அம்மா தந்த வாக்குறுதியில் பெரிதாக ஈடுபாடு இல்லாதவனாய் அங்கிருந்து நகர்ந்து விட்டான் வாத்சல்யன்.
“இங்க பாரு.. ஊர் உலகம் என்ன வேணாலும் பேசட்டும்.. ஆனா நீயோ புவனாவோ லஷ்மியை சாடமாடையா பேசறதோ குத்திக்காட்டி நோகடிக்கிறதோ இனி இருக்கக் கூடாது.. இந்த புவனா வாய் துடுக்கா ஏதாவது சொல்லி பிரச்சனையை இழுத்துவிட்டு மறுபடி வாத்சா வீட்டை விட்டு போறேன்னு வந்து நின்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..” செல்வவிநாயகம் கோபமாக தனது மனைவியை கண்டித்தார்.
“ஐயோ இனிமே வாயவே திறக்க மாட்டேன். புவனாவையும் பேசவிடாமல் பார்த்துக்கறேன். என் புள்ள என்கூட இருந்தா போதும் அவ்வளவுதான்..!” என்றார் இவர்.
புவனா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. அவர்கள் இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என்ற கதைதான்.. போதுமானவரை அவளை அவமானப்படுத்தி விட்ட திருப்தி.. இரண்டு பிள்ளைகளை பெற்றுக் கொடுத்திருக்கும்படியால் தனக்குத்தான் இந்த வீட்டில் மவுசு அதிகம்.. லஷ்மி என்னதான் சம்பாதித்தாலும் சொந்தக்காலில் நின்றாலும்.. ஊராரை குடும்பத்தைப் பொறுத்தவரை அவள் ஒரு செல்லாக்காசுதானே! என்ற அலட்சியம் புவனாவிற்கு.
முடிந்தவரை அந்த குடும்பத்தோடு பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.. குழந்தையை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளையோடு நேசத்தை வளர்த்துக் கொண்டால்.. அவள் இழப்பு மனதுக்குள் தாங்க முடியாத துயரமாக பதிவாகிவிடும்.. பிறகு புதுவரவை முழுமனதாய் ஏற்றுக் கொள்ள இயலாது என தங்களுக்குள் முடிவெடுத்திருந்தனர் இருவரும்.
ஆனால் லஷ்மி கணவனோடு போட்டுக் கொண்ட நிபந்தனைகளை முறியடித்து எதிர் வீட்டுக்கு திருட்டுத்தனமாக போய் வந்தாள்.
மீனாட்சியிடன் உரையாடும் சாக்கில்.. தரையிலும் புழுதியிலும் விளையாடிக் கொண்டிருக்கும் தீப்தியை ஓரக்கண்ணால் பார்த்து நெஞ்சுக்குள் நிறைத்துக் கொள்வதில் அலாதி சந்தோஷம். வேண்டுமென செய்யவில்லை.. கட்டுப்படுத்த முடியாத ஆசை.. ஆனால் இந்த விஷயம் கணவனுக்கு தெரியாமல் போகுமோ..?
“ஏய் ஃபிராடு!” என கட்டிலில் அமர்ந்திருந்தவளின் மேலே விழுந்து அவளை உருட்டிக்கொண்டு மூலைக்கு போக மூச்சுக்கு திணறினாள் சந்தா!
“ஏய்.. வாத்சா!” என தடுமாறியவளை ஆதுரமாக நெஞ்சில் சாய்த்து கொண்டு சத்தம் போட்டு சிரித்தான் வாத்சா..!
“என்ன சார் குஷியா இருக்கீங்க..?”
“பிரச்சனையெல்லாம் தீரப் போகுதே..! அந்த சந்தோஷம்தான்.. ஆனா நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்லை சந்தா..! தீப்தியை போய் பார்க்க கூடாதுன்னு பேசி வச்சிருந்தோம்.. நீ என்ன பண்ணி வச்சிருக்க..?” அவள் முதுகில் வருடியபடி சொன்னாலும் குரலில் லேசான கடுமை..!
“முடியலப்பா..! குழந்தையை பார்க்கணும்னு ஆசையா இருக்கு.. தீப்தியை பார்க்கும்போதெல்லாம் என்னையும் அறியாம அடிவயித்தை தொட்டு பார்த்துக்கறேன்..” லஷ்மி உடைந்தாள்.
“கட்டுப்பாடாக இருக்கணும் சந்தா..! இனி இப்படி நடக்காம பாத்துக்கோ..” என்றவன்தான் இன்னொரு நாள் தீப்தியை தங்களது அறைக்கே அழைத்து வந்து அவளோடு சேர்ந்து பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
பந்தை தூக்கிப் போட்டு “அவுட்..!” என கையை உயர்த்தி குதூகலமாக கத்திய நேரத்தில் எதிரே நின்று முறைத்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி..
“என்னது இது..?” என தீப்தியை காட்டி கேட்க..
“ஹிஹி..! சும்மா..! பாப்பா வாசல்ல விளையாடிட்டு இருந்தாளா..! குழந்தையை தூக்கி கொஞ்சனும்னு ஆசையா இருந்துச்சு.. அதான்..” என்று தலையை சொரிந்தான் அவன்.
“யாரோ என்னை குழந்தைய பார்க்கக்கூடாது பேசக்கூடாதுன்னு சொன்னாங்க..! அந்த பெரியமனுஷன் எங்க போய் தொலைஞ்சான்னு தெரியல..!” என அங்குமிங்கும் தேடினாள்.
“இங்கதான்டி இருக்கேன்.. முகத்தை பார்த்து சிரிக்கற பிள்ளையை கண்டுக்காதது போல விட்டுட்டு வர மனசு வரமாட்டேங்குது..!”
“அவங்க வீட்ல சொல்லி கூட்டிட்டு வந்தீங்களா..?”
“மீனாட்சி வீட்ல இல்ல.. வினோத்கிட்ட சொல்லிட்டுதான் தூக்கிட்டு வந்தேன்..”
வாத்சல்யனும் தீப்தியும்.. ஓடிப் பிடித்து விளையாடுவதும்.. செப்பு வைத்து சமைப்பதுமாக சலிக்க சலிக்க ஆட்டம் போட்டு ஓய்ந்து போய் ஒரு கட்டத்தில் உறங்கத் தொடங்கியிருந்தனர்..
அப்பா மகளாக கட்டியணைத்து உறங்கிக் கொண்டிருந்த இருவரையும் சற்று தொலைவில் நாற்காலியில் அமர்ந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தா.
தீப்தியிடம் ஒரு தகப்பனாக வாத்சல்யன் வெளிப்படுவதை அவளால் உணர முடிந்தது.
குழந்தையை அழைத்துப் போக வேணு வந்திருந்தான்.. பூங்கொத்தாய் கையிலிருந்த குழந்தையை மனமே இல்லாமல்.. அவனிடம் தூக்கி கொடுத்தபோது வாத்சல்யனின் கண்களில் தெரிந்த ஏக்கந்தான் கண்டிப்பாக இந்த குழந்தையை பெற்றுக் கொடுத்தே ஆக வேண்டுமென்ற வைராக்கியத்தை அவளுள் வேரூன்றி வலுவாக்கியது.
தொடரும்.

அடப்போங்கடா..அதுங்க சமாதானம் ஆகிக்குதுங்க..ஆனா என்னால முடியல…😭😭😭
கடவுளே ஆறு மாதங்கள் கழிச்சு நடக்கபோறத நினைச்சு பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு 😬😬😬
வாத்சா சாந்தா ரெண்டு பேரும் பாவம் அதே சமயம் மீனாட்சி யும் பாவம் இதுல யாருக்கு ன்னு பாக்குறது 🤧🤧🤧
இவங்க ரெண்டு பேரும் வேற தீப்தி பாப்பா மேல இவ்வளவு ஆசையா இருக்காங்க 😔😔😔
இது சரியா படல டா நீங்க எல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டிங்க அப்புறம் எதுக்கு டா இந்த புள்ள கிட்ட பாசம் காட்டுறீங்க 😭😭😭