Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

19. தாமரை - பாறையில் மலர்ந்த தாமரையே

பாறையில் மலர்ந்த தாமரையே! 10

“ஏற்கனவே மகாராணிக்கு கைய காலை அசைக்கறது கூட கஷ்டம்.. இப்ப ட்ரீட்மெண்ட்ங்கற பேர்ல மாடிய விட்டு கீழே இறங்கி வரவே மாட்டாங்க..! கொடுத்து வச்ச மகராசி எல்லாம் இருந்த இடத்திலேயே நடக்குது..!” புவனா இப்படி புலம்பிக் கொண்டிருக்க..

“என்ன புவனா இது..! அவ ட்ரீட்மென்ட் ல இருக்கா.. ஸ்ட்ரெயின் பண்ண கூடாது.. நம்மள விட்டா வேற யாரு அவளுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க..! ஏதாவது விமோசனம் கிடைச்சு என்‌ மகனுக்கு ஒரு பிள்ளை பிறந்துடாதான்னு நான் அந்த கடவுளை வேண்டாத நாளில்லை..! இந்த மாதிரி நேரத்துல நம்மளால முடிஞ்ச உதவியை செய்யணும்.. அப்படி இல்லைனா கூட வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணும்.. அதை விட்டுட்டு இப்படி அவங்களை விட்டுக்காட்டி பேசக்கூடாது..!” என்ற மாமியாரிடம் எரிச்சலை காட்ட முடியாமல் தேங்காய் மூடியை டொக்கு டொக்கென்று தட்டினாள் அவள்.

மூத்த மருமகள் ட்ரீட்மென்ட்.. நேர்த்திக்கடன் என ஏதேனும் ஆரம்பித்து விட்டால் மாமியார் பிளேட்டையே திருப்பி போட்டு அவளுக்கு ஜால்ரா தட்டுவது வழக்கம்தானே..! என்று நினைக்கிறாள் புவனா.

அதுவும் உண்மைதான்.. மற்ற நேரங்களில் தன் மருமகளுக்குத்தான் குறை இருப்பதாக கூறு போட்டு விற்கும் இதே மாமியார்தான்.. இது போன்ற ட்ரீட்மென்ட் சமயங்களில் அவளை அனுசரணையாக கவனித்துக் கொள்வார். சராசரி மாமியாராக இருந்தாலும் தன் மகனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு பாசமிகுந்த தாய்தான் அவர். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நியாயமாகத்தான் நடந்து கொள்வார் மங்கை. தேவையில்லாமல் லஷ்மியோடு பிரச்சினை வைத்துக்கொள்ள மாட்டார்.. அவளை கோபப்படுத்தும் படி வம்பு வளர்க்க மாட்டார்.. புவனாவை கூட இந்த நேரங்களில் வாய் பேசவிடாமல் அடக்கி வைப்பார்.



Advertisement

ஆனால்.. சதா சந்தானலஷ்மியை குறை கூறிக் கொண்டிருக்கும் மாமியார் இதுபோன்ற சமயங்களில் பல்டியடித்து விடுவது புவனாவிற்கு பிடிப்பதில்லை.

குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடியே இப்படி..! இன்னும் புள்ள பொறந்துட்டா இந்த கிழவி என்னை கண்டுக்கவே கண்டுக்காது.. ஏற்கனவே இந்த வீட்டுக்கு பாதி வேலைக்காரி..! அப்புறம் முழு நேர வேலைக்காரியா மாறிப் போய்டுவேன். என சதா கருவி கொட்டுகிறாள்..

அந்த வீட்டில் தனக்கான முக்கியத்துவமும் மாமியாரிடமிருந்து எப்போதும் தனித்த மரியாதையும் கிடைக்க வேண்டுமெனில்.. லஷ்மிக்கு பிள்ளை பிறக்கக் கூடாது என அவள் உள் மனம் நினைக்கிறது.. ஆனால் வெளிப்படையாக அதை ஒத்துக் கொள்ள மனமில்லை.

Advertisement

நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரியா..! இரக்கமில்லாதவளா மனசாட்சி இல்லாதவளா..! அவங்களுக்குன்னு குழந்தை பிறக்கட்டும்.. சந்தோஷமா இருக்கட்டும்..! யார் வேண்டாங்கறா..? ஆனா என் மாமியார் ரெண்டு பேரையும் சரிசமமா நடத்தணும்.. அதைத்தானே சொல்ல வரேன். மத்தபடி மூத்தவருக்கு வாரிசே உருவாக்க கூடாதுன்னு நினைக்கற அளவுக்கு நான் ஒன்னும் கொடூரமானவள் இல்லை..! என தன் உள்மன விகாரங்களுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்வதுண்டு.

Advertisement

லஷ்மியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வதில் மங்கை எந்த குறையும் வைக்கவில்லை.

வேலை நேரம் போக மற்ற நேரங்களில் வாத்சல்யன் அவளைப் பார்த்துக் கொண்டான்.

அடிக்கடி பழ ரசம் உணவு என ஏதாவது எடுத்துக்கொண்டு மாமியார் மேலே வரும்போது.. ஒருவேளை இந்த கருவும் தாங்காமல் போய்விட்டால் தனக்காக மெனக்கெடும் இவர்கள் முகத்தில் எப்படி முழிப்பது.. என்ற எண்ணமே அவளை மன அழுத்தத்திற்கு தள்ளிக் கொண்டிருந்தது.

Advertisement

முதல் முறை செயற்கை கருத்தரிப்புக்கு முயன்ற போது.. வெற்றியடைந்தால் போதும் என்ற வேகத்தை தவிர இந்த மாதிரியான எண்ணங்கள் எதுவும் முட்டி மோதவில்லை.. முதல் முயற்சி தோல்வியை தழுவியதில் இம்முறை என்னென்னவோ யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள் லஷ்மி.

குரங்கை நினைக்காதே என்றால் மனம் அதன் பின்னால்தான் ஓடும்.. அப்படித்தான் அந்த குழந்தையை பற்றி எண்ணவே கூடாது என முயற்சி செய்து.. பிங்க் கலர் பேபியை பற்றி அதிகமாகவே யோசித்தாள்.

பதினைந்து நாட்களில் மாதவிடாய் வந்துவிட்டது. மீண்டும் தோல்வி. ஒவென கதறி அழுதாள் லஷ்மி.

வாத்சல்யனுக்கு அவளை தேற்றுவது பெரும்பாடாய் போனது.

“என்னாச்சு? இந்த முறையும் சக்சஸ் ஆகலையா..! எல்லாம் தெரிஞ்ச கதைதானே..! எம்புள்ளைக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே..! அந்த கடவுள் கண்ண திறக்க மாட்டேங்குதே..!” என மங்கை ஒரு பக்கம் அழுகை.

புவனாவிற்கு உள்ளூற குளு குளுவென இருந்தாலும்.. வெளியே முகத்தில் சோகத்தை காட்டிக்கொண்டு வளம் வந்தாள்.

வீட்டுக்கு வந்த கணவன் முரளியிடம் இந்த முறையும் குழந்தை தங்கவில்லையென சொன்னதும்.. அப்படியா என கேட்டுக்கொண்டான் அவ்வளவுதான். பத்து வருடத்தில் இதெல்லாம் அவர்களுக்கு பழகிப் போன கதை. குழந்தை பிறக்கப் போகிறது என்பதுதான் புதிய செய்தி. மற்றபடி கரு தங்கவில்லை டிரீட்மென்ட் வேலைக்காகவில்லை.. நேர்த்திக்கடன் முடியவில்லை இதெல்லாம் அந்த வீட்டை பொருத்தவரை வழக்கமான பழைய சங்கதிகள்தான்.

லக்ஷ்மி கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்துவிடும் நிலையிலிருந்தாள். துரத்திக் கொண்டிருக்கும் ஆசையைத் தூண்டும் மாயையிலிருந்து தப்பிக்க.. மற்றொரு முயற்சிக்குத் தாவி.. அதுவும் வெற்றியடையாமல் கலங்கடித்ததில், உலகமே இருண்டு போனதை போல்.. தம்பதிகள் இருவரும் பெருந்துயரத்தில் மூழ்கி போயிருந்தனர்.

“நான் சொன்னேன்ல..! அப்பவே சொன்னேன் இது வேண்டாம் ஒர்க் அவுட் ஆகாது.. நாம ஏமாந்து போவோம்னு.. நீங்கதான் கேட்கவே இல்லை..!” நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசும்பி விசும்பி அழுது அவனை வாட்டியெடுத்தாள்.

“எந்நேரமும் இப்படி நெகட்டிவாவே யோசிச்சிட்டு இருந்தா.. எப்படி சக்சஸ் ஆகும் சந்தா..! எல்லாத்துக்கும் உன் மனசுதான் காரணம்.. ப்ளீஸ் உன்னை கொஞ்சம் பக்குவப்படுத்திக்கோ..! ஜஸ்ட் ஒரு ட்ரை..! முயற்சி பண்ணி பார்க்கலைன்னா உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு உருத்திட்டே இருந்திருக்கும். இப்ப அந்த நெருடல் நமக்குள்ள இல்ல..”

“ஜஸ்ட் ஒரு ட்ரை..! எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க..! உங்களுக்கென்ன..! பத்து நிமிஷத்தோட உங்க வேலை முடிஞ்சு போச்சு.. எவ்வளவு ஊசி எவ்வளவு வலி..! மாத்திரை மருந்து..! அதோட சைடு எபக்ட்ஸ்..! உடம்புக்குள்ள என்னென்னமோ நடக்குது என்ன ஏதுன்னு ஒன்னும் புரியல..! அனுபவிக்கறது நான்தானே..! ஆம்பள நீங்க ஈஸியா சொல்லிட்டு போயிடுவீங்க.. ஜஸ்ட் ஒரு ட்ரை..! அந்த ஒரு ட்ரைக்காக நான் மனசளவுல உடம்பளவுல என்னை தயார் படுத்திக்கிட்டு அனுபவிச்ச வேதனைகள் ஏராளம்.. ஆனா இப்போ அதுக்கான பலன் கூட எனக்கு கிடைக்கல..! கேட்டா நான் பாசிட்டிவா யோசிக்கலைன்னு சொல்றீங்க..! எல்லாத்துக்கும் என் மனசுதான் காரணம் அப்படித்தானே..!”

“சந்தா..! ரிலாக்ஸ்..! நீ ரொம்ப குழப்பத்துல இருக்க..! கொஞ்சம் எதையும் யோசிக்காம அமைதியா இரு.” என பக்கத்தில் அணைக்க வந்தவனை தள்ளி விட்டாள் லட்சுமி..

“என்கிட்ட வராதீங்க..! கொஞ்ச நேரத்துக்கு என்னை தனியா விடுங்க.. எனக்கு யாரும் வேண்டாம்.. யாரைப் பார்த்தாலும் எரிச்சலா வருது.. ஆத்திரமா வருது..! தயவு செஞ்சு இங்கருந்து போயிடுங்க வாத்சா..!” என கத்தி கலாட்டா செய்த மனைவியை பரிதாபமாக பார்த்தான் வாத்சா.

இரண்டு நாட்கள் கணவனிடம் பேசாமல் அந்த அறைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தாள் லஷ்மி.

மனைவியின் புறக்கணிப்பும் இதுவரை அவன் அனுபவித்திராத அந்த தனிமையும் வாத்சல்யனின் உயிரை உருவியெடுத்த வலியை தந்தது.

இந்த முறையும் சிகிச்சை தோல்வி அடைந்ததில் அவனுக்கும் வருத்தம்தான்..! ஆனால் அதை வெளிக்காட்டும் நேரம் இதுவல்லவே..! மனைவியை தேற்றுவதற்காக என்னென்னவோ ஆறுதல் சொல்லப்போய் அது எப்படியோ முடிந்துவிட்டது. எங்கேயாவது தனி இடத்திற்கு போய் மனக்குமுறல்கள் கரையும் வண்ணம் கண்ணீர் விட்டு அழவேண்டும் போல் தோன்றியது.. ஆனால் எத்தனையோ முறை தனிமை கிடைத்த போதும் அழத் தோன்றவில்லை கண்ணீர் வரவில்லை.. ஆண் பிள்ளைக்குரிய குணாதிசயமாய்.. இறுகிப்போய் கல்லாக மட்டுமே அமர்ந்திருக்க முடிந்தது.

வயிற்று வலி.. மூட் ஸ்விங்..! டிப்ரஷன்.. ஹார்மோனல் கோளாறுகள்.. இதைத் தாண்டி வெளியே வருவதற்குள் ஒரு வழியாகினாள் லஷ்மி.

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையை எளிதாக கடப்பவர்கள் உண்டு.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல்வாகு..

குழந்தை பெற்றுக்கொள்ள இதையெல்லாம் தாங்கித்தான் ஆகவேண்டும்.

குழந்தை வரும் என்று நிச்சயமாக தெரிந்து விட்டால் மரணம் வரையிலும் சென்று ரிஸ்க் எடுக்க தயாராகத்தான் இருக்கிறாள். ஆனால் இப்படி விதி காலை வாரி எட்டி நின்று சிரிக்கும் போது..?

“இப்ப நீ ஓகேதானே சந்தா..! ஆபீஸ் போக முடியுமா உன்னால..!” மனைவியிடம் கருணையோடு கேட்டான் வாத்சல்யன்.

“பழைய நிலைக்கு திரும்பத்தானே வேணும்.. அப்படியே இருக்க முடியாதே..!”

“வேணும்னா இன்னும் ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு..!”

“வீட்டுக்குள்ளேயே இருந்தா பைத்தியம் பிடிக்குது வாத்சா..! என்னால யாரையும் ஃபேஸ் பண்ணவே முடியல.. ஆபீஸ் போனாலாவது கொஞ்சம் இதிலிருந்து வெளியே வந்து ஒர்க் பிரஷர்ல பிஸியாகிவிடுவேன்.”

“அம்மு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. மறுபடி கோபப்படாதே..! நிச்சயமா உன் கஷ்டத்தை உணராம அப்படி ஒரு வார்த்தை சொல்லல..! உன்னை ஆறுதல் படுத்தனும்னு தான்..”

“எனக்கு எல்லாம் புரியுது வாத்சா..! டிப்ரஷன்ல நானும் கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். ப்ளீஸ் மன்னிச்சிடுங்க..! யாருமே இல்லாம தனியா இருக்கற மாதிரி ஃபீல் ஆகுது. நான் ஏதாவது கோபப்பட்டு கத்துனா.. ஏதோ பைத்தியம் பேசிட்டு போறான்னு விட்டுடுங்க..! நீங்களும் மத்தவங்க மாதிரி என்னை விலக்கி வச்சுடாதீங்க..” என மெல்ல விசிக்க ஆரம்பித்து பெருங்குரலெடுத்து அழப்போனவளை பாய்ந்து இறுக அணைத்துக் கொண்டான் வாத்சா.

“இதை சொல்லணும்னு அவசியம் இல்லை.. ஆனாலும் சொல்றேன். நான் எப்பவும் உன் கூடதான் இருப்பேன். நீ என்ன செஞ்சாலும் உனக்கு சப்போர்ட்டிவா இருப்பேன். இருக்கிற பிரச்சினைகள்ல நீ என்னை நினைச்சு வருத்தப்படணும்னு அவசியமே இல்லை. ஃபிரியா விடு சந்தா..” என முதுகை தடவி கொடுத்தான்.

மறுபடியும் எதிர் வீட்டு குழந்தை சுவற்றிலடித்து திரும்பிய பந்து போல அழுத்தமாக நெஞ்சில் வந்து ஒட்டிக்கொண்டாள்.

வீட்டை விட்டு வெளியேறும் போது காரில் செல்லும்போது.. ஏக்கமாக எதிர்வீட்டை பார்ப்பது வழக்கமாக போயிற்று.

இவள் ஆசையோடு சிரிக்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டு போனது அந்த வாண்டு.

அதிகபட்ச ஏமாற்றம் எங்கே மனைவியின் உணர்வுகளை திசை திருப்பி விடுமோ என்று பயந்து போனான் வாத்சல்யன்..

கணவன் மனைவி மூன்று குழந்தைகள் என அழகான குடும்பம்..! அவர்கள் நிம்மதிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு மீண்டு வந்து விட்டாள் லஷ்மி.!

அலுவலகத்தில் சிலர் துக்கம் விசாரிப்பது போல் டிரீட்மென்ட் பத்தி கேட்டு ஆலோசனை சொன்னார்கள்.. சிலர் அவள் மனநிலை புரிந்து.. இதைப்பற்றி பேச்செடுக்கவில்லை..

ஆனால்.. உணர்வுகளை அடக்க முடியாமல் அவள் செய்த ஒரு காரியம்.. அதற்கு மற்றவர்கள் ரியாக்ட் செய்த விதம்.. மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்த லஷ்மியின் மனதை பெரிதும் பாதித்துவிட்டது..

தொடரும்.

6 thoughts on “பாறையில் மலர்ந்த தாமரையே! 10

  • ☹️😢😥😥😭😭😭
    Evalo tha thanguva…..inu inu kastam….

    Seriously vatsha is an angel 😇…. Oor la solran veetula solran nu avala torture panala…. 😍

    Reply
  • Revathy Dhanda

    😭😭😭 evlo kashtam lakshmi ku epdi than ya thaanguvaa intha treatment atho da failure athanala vara depression yappa samy 😭😭
    Oru ponnu atha easy ah kandthu vara mudiyathu 🥲.idhu la bhuvana pola sila jenmangla onnu solldrathukku illa. Vaathsa nijamalume great avalukku support ah thangi pidikkara vaazhkai thunai antha vagai la lakshmi lucky ❤️❤️

    Reply
  • Divyalakshmi Sugumar

    Kadavulae
    Mellum mellum kastam naa
    Adhai thangara allavuku irundha seri aana
    Thangavae mudiyala nu solliyum tholvi naa yeppadi pa 😭😭😭😭😭

    Lakshmi yenna panna 😟😟😟😟

    Reply
  • Krishnaveni

    என்னால தாங்க முடியல எவ்வளவு கஷ்டம் 😭😭😭
    தொடர்ந்து தோல்வி மட்டுமே ன்னா எவ்வளவு தான் ஏத்துக்க முடியும் ரெண்டு பேரும் ரொம்ப பாவம் பா 🤧🤧🤧
    அய்யோ இப்போ என்ன ஆச்சு 😳😳😳

    Reply
  • ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் லஷ்மி வாத்சா

    Reply
  • Jothi vel

    இந்த கதையில வர்ற ஒவ்வொரு விஷயமும், நான் கடந்து வந்த வாழ்க்கையை ஞாபகப்படுத்துது…💔 அந்த வலியை…மீண்டும் அனுபவிக்கிற மாதிரி இருக்கு…💔💔💔
    சந்தா, வாத்சா…💔

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!