Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-24

அத்தியாயம்-24

“ஹே அதிதி.. அதிதி தானே..”  என்று கேட்டபடி சிரித்தமுகமாக நின்ற வைஷாலியைப் பார்க்க  முன் ஜென்மத்து பேய் துரத்தி வந்து முன்னே நிற்பது போல இருந்தது அதிதிக்கு..

அதிதி சிலையாக நிற்பதைப் பார்த்து

“என்ன என்னைத் தெரியலையா? நான்தான் வைஷாலி..” என்று நினைவுறுத்தினாள்.

‘அவளுக்கு என்றேனும் மறக்குமா.. என்ன?’



Advertisement

“ஆங்.தெரியுது..” என்று ஒருவாறு சமாளித்து பதிலளித்தாள் அதிதி.

“எப்படி இருக்க.. பார்த்து ரொம்ப வருஷம் இருக்கும்ல.. நீ ஆளே மாறிட்ட அடையாளமே தெரியல..” என்று பேசிக்கொண்டே போனவளை உணர்ச்சியின்றி வெறித்தாள் அதிதி.

என்னவோ நெருங்கிய தோழிகள் நெடுநாட்கள் கழித்து சந்தித்து குசலம் விசாரிப்பது போல் அவள் பேசுவதைப்பார்க்க அவளுக்கு கொதிப்பாக இருந்தது.

Advertisement

இவளால் நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமா.. என்னவோ ஒன்னுமே நடவாதது போல பேசுகிறாளே.. என்று பற்றிக்கொண்டுவந்தது அதிதிக்கு.

Advertisement

“நீங்களும் ரொம்ப மாறிட்டீங்க.. முன்னாடிலாம் என்கிட்ட இப்படி சிரிச்சிப்பேசி நானும் பார்த்ததில்லை..” என்றாள் ஏளனமாக

ஒருகணம் தயங்கியவள் , சட்டென்று அவள் கையைப்பற்றி

“ஹே சாரிப்பா.. அப்போ அந்த வயசுல எதோ மெச்சூரிட்டி இல்லாம நடந்துகிட்டேன்.” என்றாள் வருந்தும் குரலில்

Advertisement

“என் கேரக்ட்டரைப் பத்தி எல்லாரையும் தப்பா பேச வச்சி, என்னோட காலேஜ் லைஃபையே நரகமாக்கினது மெச்சூரிட்டி இல்லாம பண்ணாத..?” என்றாள் சீற்றத்துடன்.

கழிவிரக்கத்தில் தலைகவிழ்ந்து இருந்தவள் பின்மெதுவாக அவளை நிமிர்ந்து பார்த்து,

“அது உன்மேல இருந்த பொறாமையில அப்படி பண்ணிட்டேன்.. நான் என்ன பண்ணாலும் வசி என்னைத் திரும்பிக்கூட பார்க்கல, ஆனா உன்கிட்ட மட்டும் அவன் க்ளோசா இருந்தான் அந்த பொறாமையிலதான் அறிவுகெட்டுப்போய் அப்படி பண்ணிட்டேன் ..” என்றான் வைஷாலி

“எனக்கு புரியல,வசீகரன் உங்க பாய்ஃப்ரண்ட்தானே, உங்களுக்கு பிரச்சனைன்னா அவர்கிட்டதானே கேட்டிருக்கனும் ‘ஏன் அந்த பொண்ணுகூட பழகறன்னு’ நீங்க சட்டையபுடிச்சிகூட கேட்டிருக்கலாமே..அதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. அதைவிட்டுட்டு என் மேல வன்மத்தை கொட்ட உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…?”

“அதுக்கு எனக்கு வசீகரன் கிட்ட உரிமை இருக்கனுமே..” என்று வைஷாலி கூறவும்

“என்ன சொல்றீங்க..?” என்று புருவம் சுருகினாள் அதிதி.

“வசி அப்போ என்னோட பாய்ஃப்ரண்ட்டே இல்லை..எப்பவுமே இருந்ததும் இல்ல, அது ஒரு ஃபேக் ரிலேஷன்ஷிப், முன்னாடிலாம் எனக்கு நிறைய ப்ரொபோசல் வரும் எப்பப்பாரு யாராவது வந்து தொல்லைப்பண்ணிட்டே இருப்பாங்க, வசிக்கும் இந்த பிரச்சனை இருந்தது. ஒருநாள் நான்தான் வசிகிட்ட என்னோட ஃபேக் பாய்ஃப்ரண்டா இருக்கியா அப்போதான் நமக்கு இந்த மாதிரி தேவையில்லாத ப்ரபோசல் எல்லாம் வராதுன்னு சொன்னேன். வசியும் சரின்னு சொன்னான். ஆனா காலேஜ் முடியற வரைக்கும்தான் இந்த நடிப்பு , இடையில யாருக்காவது ரியல் ரிலேஷன்ஷிப் வந்துட்டாலோ இல்லை இந்த ஏற்பாடு பிடிக்கலைன்னாலோ உடனே எந்த பிரச்சனையும் பண்ணாம விலகிடனும்ன்னு தெளிவா சொல்லிதான் வசி இந்த ஃபேக் ரிலேஷன்ஷிப்க்கே ஒத்துகிட்டான்.. ஆனா போகப்போக  காலேஜ் பிரின்ஸ் வசீகரனோட கேர்ள்ஃப்ரண்டுங்கற கெத்து, அதுக்கு கிடைக்கிற தனி மரியாதை, மத்தவங்க பாக்குற பொறாமைப்பார்வைன்னு எல்லாமே என் மண்டையில ஏட்டிடுச்சி நான் ரியலாவே அவன் கேர்ள் ஃப்ரண்டுனு நெனைக்க ஆரம்பிச்சிட்டேன்.

அப்போதான் நீ வந்த.. எங்கே காலேஜ்ல என் கவுரவம், கெத்து கொறைஞ்சிடுமோங்கற பயத்துலயும், நேத்து வந்தவகிட்ட தோத்துப்போறதாங்கற ஈகோவுனாலயும் உன்கிட்ட அப்படி மோசமா நடந்துகிட்டேன்.. உண்மையாவே நான் வசீகரனை லவ் பண்ணதாத்தான் அப்ப  நெனைச்சேன், ஆனா அது வெறும் அப்செஷன் தான்கறது எனக்கு அப்போ புரியல.. உண்மையான காதல்ன்னா என்னன்னு என்னோட தினாவ பார்த்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சது. இப்ப எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது.” என்று கூறி முடிக்கும்போது அவள் குரல் அவ்வளவு மென்மையாகியிருந்தது.

அதிதிக்கு இவ்வளவு செய்தியையும் மூளைக்குள் ப்ராசெஸ் செய்யவே நேரம் பிடித்தது.. இவள் வசீகரனின் லவ்வர்கூட இல்லையா ? அந்த ஒரு நியாமாவது இவள் பக்கம் இருந்தது என்று நினைத்தால் இப்போது அது கூட இல்லாமல் இவள் அநியாயமாக நடந்து கொண்டதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்..? இவளால் நான் வசீகரனையும் தான் எவ்வளவு கேவலமாக நினைத்தேன்.. இப்போது கூட அவனை முழுமையாக நம்ப முடியாமல் எப்போது மாறிவிடுவானோ என்று எப்போதுமே ஒரு சந்தேகத்தோடேதானே இருக்க முடிகிறது. எல்லாத்துக்கும் காரணம் இவள் பொய்யாக ஆரம்பித்த அந்த ரிலேஷன்ஷிப்..

அதிதி இப்படி யோசித்து குமைந்துகொண்டிருக்க வைஷாலியே தொடர்ந்து போசினாள்

“சாரி அதிதி, நான் பண்ணது தப்புதான்,அதுவும் உன்னை அடிச்சது மன்னிக்க முடியாத தப்புதான். ஆனா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு.. நீ மன்னிச்சா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும். இல்லைன்னா உறுத்தலாவே இருக்கும்..” என்றாள்.

‘என்ன ஒரு சுயநலம் இந்த  மன்னிப்புகூட அவள் மனம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்..’

நினைக்க நினைக்க நெஞ்சுவெடித்துவிடும் போல இருந்தது..

அப்போது “வைஷு..” என்றபடி ஒரு இளைஞன் வரவும்..

“தினா இது அதிதி என்னோட ஜூனியர்.. அதிதி இது என்னோட ஹஸ்பண்ட் தினகர்..” என்று அறிமுகம் செய்தாள் வைஷாலி.

அவன் நட்பாக சிரித்து “ஹலோ..” என்றான்.

அந்த புன்னகையிலே அப்படி ஒரு நல்லத்தனம் தெரிந்தது, அவன் கண்களில் ஒளியுடன் வைஷாலியைப்பார்த்த பார்வையில் அவள்மேல் இருந்த காதல் அப்பட்டமாக தெரிந்தது..

இப்படி சந்தோஷமாக வாழும் ஒருத்தியின் மேல் வன்மத்தை வைத்துக்கொண்டு தான் மட்டும் என்ன செய்யப்போகிறோம் என்று தோன்றிவிட்டது அதிதிக்கு

“தினா நீ கார்ல வெயிட் பண்ணு நா வந்துடுறேன் “ என்று தன் கணவனை அனுப்பிவைத்தவள்

இவளிடம் திரும்பி..

“அதிதி நான் இப்ப நிறைவா ஒரு வாழ்க்கை வாழுறேன்.. நீயும் அப்படி ஒரு வாழ்க்கை வாழனும்ன்னுதான் நான் ஆசைப்படுறேன். உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடு..” என்றுவிட்டுச் சென்றாள்

அதிதி அப்படியே உறைந்து போய் நிற்க..

“ஹே அது வைஷாலிதானே.. அவ எதுக்கு உன்கிட்ட பேசுறா..? எதாவது ஹர்ட் பண்ற மாதிரி பேசினாளா?” என்று வேகமாகக் கேட்டபடி அருகில் வந்தான் வசீகரன்..

“ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல..சாரிதான் சொன்னா..”

“சாரியா.. எதுக்கு?” என்றான்.

“எல்லாத்துக்கும்.. முக்கியமா என்னை அறைஞ்சதுக்கு..” என்றாள் அதிதி..

“என்னது உன்னை அறைஞ்சாளா? ஏய் இதை ஏண்டி மொதல்லயே சொல்லல..? இரு அவள..” என்று வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியவனை முழங்கையைப்பிடித்து தடுத்தாள்.

“இப்ப போய் என்ன பண்ணப்போறீங்க விடுங்க.. அதான் அவ சாரி கேட்டுட்டால்ல..?” என்றாள் அதிதி.

“உடனே நீங்க யேசுனாதர் மாதிரி அவ பாவத்தை எல்லாம் மன்னிச்சிட்டீங்களோ..?” என்றான் ஏளனமாக

“பின்ன என்ன பண்றது கிரட்ஜ்ஜ(grudge) மனசுல வச்சிட்டே இருந்தா அது நமக்கும்தானே கஷ்டம்..? பேசாம மன்னிச்சிவிட்டுட்டா நிம்மதியாவது மிஞ்சும்..” என்றாள் எதோ தனக்குத்தானே அதை சொல்லி நியாப்படுத்திக்கொள்ள முயல்வது போல

“ஹே லூசு.. மொதல்ல அவ என்ன பண்ணான்னு உனக்கு தெரியுமா? அந்த ஃபோட்டோவ நெட்ல போட்டதே அவதான்..”

“என்ன லூசுங்கறீங்க..”

“அதானே லூசுன்னு கேட்டதும் மண்டை சூடாகியிருக்கும்.. அதுக்கு மேல நான் சொன்னது எதுவும் காதுலயே விழுந்திருக்காதே..” என்று தலையில் அடித்துக்கொண்டவன்..

“ஹே பைத்தியம்..மெண்டல்.. அந்த வைஷாலிதாண்டி நம்ம போட்டோவ எடுத்து நெட்ல போட்டு நம்ம மானத்த வாங்கினவ.. உனக்கு புரியுதா இல்லையா..?”  என்று அழுத்திக்கேட்டான் மக்குப் பிள்ளைக்கு சொல்லுவது போல,

“என்ன சொல்றீங்க..?” என்று அதிர்ந்தாள்.

“அந்த கேசவும் இவளும் சேர்ந்துதான் நம்ம ஃபோட்டோவை இன்ஸ்டாவுல போட்டாங்க எல்லாம் உன்னைப் பழிவாங்கனும்னு தான். இது தெரிஞ்சி நான் அவளை கூப்டு மிரட்டவும்தான் அவளும் அவளோட கும்பலும் உன்னை இம்சை பண்ணாம  காலேஜவிட்டு காலி பண்ணாங்க..” என்று நடந்ததைக்கூறினான்.

இத்தனையும் திரைமறைவாக அவளுக்காக செய்திருக்கிறான்.. இது எதுவுமே தெரியாமல் அவன் என்னை தவிக்கவிட்டுப் போனதாக நான் அவனையே திட்டிக்கொண்டு இருந்திருக்கிறேன், இது எல்லாத்துக்கும் காரணமானவளோ..

இப்போது கூட பாதி உண்மையை மட்டும், அதுவும் அவளுக்கு வசதியானதை மட்டும் கூறிவிட்டு மீதியை மறைத்துவிட்டு தன் மன நிம்மதிக்காக தளுக்காக ஒரு சாரியைக் கேட்டுவிட்டு சென்றுவிட்டாள்.. இப்படியும் சுயநலமாக ஒருத்தி இருக்கமுடியுமா..? என்று யோசித்தது ஒருகணம் தான் மறுகணமே அதற்கு அவள் தகுதியானவள் இல்லை என்று அந்த நினைவை ஒதுக்கிவிட்டு..

கோபமே உருவாக தன் முன்னே நின்றவனைப் பார்த்தாள்.

இவனைப்போய் தவறாக நினைத்துவிட்டோமே என்று மனம் மறுகியவள்.. சட்டென்று அவனை இறுக அணைத்துக்கொண்டாள்..

இதை சற்றும் எதிர்பாராத வசீகரன் ஒரு கணம் திகைத்தாலும் மறுகணம் அவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்தபடி அப்படியே நின்றான்.

அவன் மார்பில் முகம் புதைத்தவளின் மனம் ஆழ்கடல் போல் சலனமின்றி அமைதியடைந்தது.

“வரும்போது என்னோட சேர்த்துவச்சி யாரும் பார்த்துடக்கூடாதுன்னு யாரோ சொன்னாங்க.. இப்ப என்ன ஆச்சி..? யாரும் பார்த்தா பரவால்லயா..?” என்று சீண்டினான்

லேசாக நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,

“பார்க்கட்டும் எனக்கென்ன..?” என்றாள்.

சற்று குனிந்து அவள் நெற்றியில் தன் நெற்றியை இடித்தவன்..

“எதனால இந்த திடீர் மாற்றம்…?” என்று கேட்டான்.

“வைஷாலி சொன்னா நீங்க ரெண்டு பேரும் ரிலேஷன்ஷிப்லயே இல்லைன்னு.. எல்லாமே பொய்ன்னு ..”

“ஓ அதனாலதான் இந்த திடீர்பாசமா ..? அப்போ இவ்ளோ நாளும் என்னை ஒரு பொறுக்கின்னுதான் நினைச்சிட்டு இருந்திருக்க..”

“நான் அப்படி ஒன்னும் நினைக்கல.. “

“அதான் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கே..” என்றான் கடுப்புடன்..

“இவ்ளோ நடந்திருக்கு நீங்க ஏன் என்கிட்ட எதையும் சொல்லவே இல்ல..? நான் நீங்க என்னை காண்டாக்ட் பண்ணுவீங்கன்னு எவ்ளோ நாள் வெயிட் பண்ணேன் தெரியுமா?” என்று குறைகூறினாள்.

“ஆமா மேடம் என் நம்பரை ப்ளாக் பண்ணிட்டு அப்புறம் காத்துட்டு இருந்தாங்கலாம்..”

என்றான் கோபமும் குத்தலுமாக

“சும்மா இதையே சொல்லாதீங்க.. நம்பரை ப்ளாக் பண்ணிட்டா காண்டாக்ட் பண்ண வேற வழியா இல்லை? வேற நம்பர்ல இருந்து பேசி இருக்கலாம், வேற யார்மூலமாவது பேசி இருக்கலாம்.. நீங்க எதுவுமே பண்ணாம என்னையே குறை சொல்லாதீங்க..”

“நான் எதுவுமே பண்ணலைன்னு உனக்குத் தெரியுமா? நான் வேற வழியில உன்ன காண்டாக்ட் பண்ணேன் கிட்டி..” என்றான் அவளை நேராகப்பார்த்து.

அவள் அதிர்ச்சியடைந்து அவனைப்பார்க்க

“விஷாலுக்கு கால் பண்ணேன்..” என்றான்.

“விஷாலுக்கா? எப்போ?”

“அந்த பிரச்சனை நடந்து ஒரு ரெண்டு மூனு நாளு கழிச்சி..”

“அப்போவே கால் பண்ணீங்களா..? அவன் என்கிட்ட சொல்லவே இல்லையே..அவன் உங்ககிட்ட என்ன சொன்னான்…?” என்றாள் பதைப்புடன்..

“ நீ என்னால ரொம்ப கஷ்ட பட்டுட்ட..இப்பதான் கொஞ்சம் தேறி வர்ற திரும்ப வந்து குழப்பத்த ஏற்படுதாதீங்கன்னு சொன்னான், அப்பவும்  ஒருமுறையாவது உன்கிட்ட பேசனும்னு கேட்டேன்.. அப்போதான் என்கிட்ட பேசப்பிடிக்காம நீ என் நம்பரை ப்ளாக் பண்ணிட்டதா சொன்னான். நான் நம்பல தெரியுமா..?ஆனா  உனக்கு வேற நம்பர்ல இருந்து கால் பண்ணா நீ உடனே எடுத்த.. அப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா முகத்துல அறைவாங்கின மாதிரி..” என்று சொல்லி முடிக்கும் போது அன்றைய வலி அவனை மீண்டும் தாக்க அவன் குரலிலே அது தெரிந்தது.

“இல்ல வசி இது எதுவுமே எனக்குத் தெரியாது, நடந்த கலாட்டாவுல நான் உங்க நம்பரை ப்ளாக் பண்ணதயே மறந்துப்போயிருந்தேன்.

ஆனா விஷால் ஏன் இப்படி பண்ணான்? விஷாலுக்கு தெரிஞ்சா கண்டிப்பா வர்ஷினிக்கும் தெரிஞ்சிருக்கும்..ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்கிட்ட இந்த உண்மைய இத்தனை நாளும் மறைச்சிருக்காங்க..” என்று எண்ணும் போதே அவள் மனம் வலித்தது. ‘வர்ஷினியால் எப்படி இப்படி ஒரு துரோகத்தை எனக்கு செய்ய முடிந்தது.. வசீகரனை அவள் எவ்வளவு விரும்பினாள் என்று யாருக்கு இல்லாவிட்டாலும் அவளுக்குத் தெரியும்தானே.. அவனுக்காக நான் தவித்ததை அறியாதவளா அவள்.. எப்படி முடிந்தது?’ வைஷாலி செய்ததைவிட வர்ஷினி மறைத்தது தான் அதிகமாக வலித்தது.

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன்

“ஹே கிட்டி.. அவங்க உனக்கு நல்லது நெனைச்சிதான் மறைச்சிருப்பாங்க..மத்தபடி அவங்க உனக்கு கெடுதல் நினைக்கறவங்க கிடையாது…” என்று அவளது நண்பர்களுக்காக அவளிடமே வாதாட.. அவள் கண்ணீருடன் மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள்

“இங்க பாரு இப்ப எதையும் யோசிக்காத,பாத்துக்கலாம் சரியா..?” என்று அவளைத் தேற்ற..

அவள் ஆமோதிப்பாக தலையசைக்க

“போலாமா..” என்றான் மெதுவாக..

“சீனியர் எனக்கு ஒரு ஆசை இருக்கு..” என்றாள்.

“சீனியரா..? பார்றா..” என்று அவன் புருவம் உயர்த்த..

“நீங்க பேஸ்கெட் பால் விளையாடுறத பாக்கனும்” என்றாள்.

அதைக்கேட்டு சிரித்தவன்

“இந்த வெயில்லயா கச கசன்னு இருக்கும்..” என்றவன் அவள் உதட்டைப்பிதுக்குவதைப் பார்த்து,

“ஓகே மேடம் வாங்க.. நீங்க சொல்லிட்டீங்க மீறமுடியுமா?” என்றான்.

வசீகரன் தன்ஃபார்மல் சட்டையை முழங்கை வரை மடித்து விட்டு சட்டை பட்டன் இரண்டை கழட்டிவிட்டு களத்தில் இறங்கினான்.

அதிதி முதன்முதலில் வசீகரன் விளையாடும் போது பார்த்ததைப்போல் அதே இடத்தில் அமர்ந்து கொள்ள..வசீகரன் பாலை பேஸ்கெட்டில் போட்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான். இவன் விளையாடுவதைப்பார்த்து வேறு சிலரும் வந்து சேர்ந்து கொள்ள சற்று நேரத்தில் கூட்டம் கூடியது.

அதிதி அன்று போலவே வசீகரனைத்தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.. தன் ஃபோனை எடுத்து அவனைப் படம்பிடித்தாள், அதற்குள் இவளைப்பார்த்துவிட்டவன்.. அவளிடமிருந்து மொபைலை வாங்கி அருகில் அமர்ந்து இருவரையும் சேர்த்து செல்ஃபி எடுத்தான். கிளிக் செய்யப்போகும் கடைசி நொடி அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட.. அது அப்படியே அழகிய மெமரியாக பதிவானது..

அதிதி என்ன ஏதென்று பார்ப்பதற்குள் அந்த போட்டோவை அவளது மொபைல் வால் பேப்பராக மாற்றியிருந்தான்.

அதன் பிறகு இருவரும் வெளியே உணவருந்தி விட்டு காரில் ஏற

“இப்ப எங்க போலாம்..?” என்று கேட்டவனை முறைத்தாள்

“நான் என்ன ஊர் சுத்திப்பார்க்கவா வந்தேன்.. ஆல்ரெடி நெறைய டைம் வேஸ்ட் ஆகிடுச்சி.. எனக்கு வேலை இருக்கு வீட்டுக்கு போங்க மொதல்ல..” என்றாள்.

“ப்ளீஸ் பேபி.. எதாவது மூவிக்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு போலாம் ஓகே வா ?”என்று வினயமாக வினவ

“என்ன விளையாடுறீங்களா..? காலைல ‘எப்படியாவது எங்க அப்பாவ கன்வின்ஸ் பண்ணிடு கிட்டின்னு’ சொன்னதெல்லாம் மறந்துடுச்சா..? நான் இங்க வேலைப்பார்க்க வந்திருக்கேன்.. அதுவும் உங்க கம்பெனிக்குதான்.. கொஞ்சம் என்னை என் வேலையப்பார்க்க விடுறீங்களா?” என்றாள்

“ஈவு இரக்கமே இல்லாதவடி நீ..” என்றுவிட்டு வீட்டுக்கு வண்டியை திருப்பினான்.

வீட்டுக்கு போனதும் தனது அறைக்குள் போனவள் தான் வேலையில் மூழ்கிப்போக.. வசீகரன் தனித்துவிடப்பட்டான். இரவு உணவைக்கூட ரூமுக்கே வரவழைத்து சாப்பிட்டுவிட்டு தன் லேப் டாப்பே கதியாகக் கிடப்பவளைப்பார்த்து பெரு மூச்சுவிட்டுவிட்டுப் போனான் வசீகரன்.

அதிதி தன் ப்ரெசண்டேஷனை முடித்து விக்ரமிற்கும், பவித்ராவிற்கும் அனுப்பி, அவர்கள் சில கரெக்‌ஷன்கள் சொல்ல எல்லாவற்றையும் செய்து முடிக்க இரவு பதினொன்றுக்குமேல் ஆனது.

அப்பாடா என்று நெட்டிமுறித்தவள்..

உறங்கலாம் என்று நினைத்து விளக்கை அணைத்துவிட்டுப்படுத்தாள்.. ஆனால் தூக்கம் வர மறுத்தது.. நாளைய தினத்தை எண்ணி.. மனம் திக் திக் என்றிருந்தது..

கொஞ்சநேரம் புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள் தூக்கம்வராமல் இழுத்தடித்தது.பேசாமல் எழுந்து போய் வசீகரனின் அறைக்கதவைத் தட்டினாள்.

சற்றுநேரம் பொறுத்து வந்து கதவைத் திறந்தவனைப்பார்த்து அதிர்ந்தவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத்தொடங்கியது..

அரைத்தூக்கத்தில் கலைந்த தலையுடன், தூக்கம் கலையாத கண்களை சுருக்கிப்பார்த்தபடி, சட்டையில்லாத தன் வெற்றுமார்புடன் மார்டன் மன்மதன் போல் நின்றிருந்தான்.

அதிதியைப் பார்த்து என்ன என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்..

அவளுக்கு பேச்சுவராமல் தொண்டை வறண்டு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“என்ன மேடம் இந்த நேரத்துல..?” என்றான் அவள் பேச்சிழந்து நிற்பதைப்பார்த்து, அவனது கரகரப்பான தூக்கக்குரலில் அவளுக்கு மெய்சிலிர்த்தது..

“தூக்கம் வரல..அதான் வந்தேன்..” என்றாள் கம்மிய குரலில்..

அவன் கண்களை அகலவிரித்து அதிகபடியான ஆச்சரியத்தைக்காட்டவும்..

“பேசிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்..ச்சு போங்க..” என்று அவன் தோளில் லேசாக அடித்துவிட்டு திரும்பி போகப்போனவளை தடுத்து

“ஹே போகாத இரு..” என்றான்.

“அப்போ மொதல்ல ட்ரெஸ்ச போடுங்க..” என்றாள்..

“இதுக்கே வெக்கப்பட்டா எப்படி செல்லம்..” என்று அவன் மேலும் சீண்ட

“இல்ல இது சரிவராது நா கெளம்பறேன்..” என்று அவள் திரும்ப.

“ஹேய்கிட்டி.. ஒன்னும் பண்ணமாட்டேன் வா..” என்றுவிட்டு உள்ளே போய் கழட்டிப்போட்டிருந்த தனது டீ- ஷர்ட்டை எடுத்து அணிந்தான்.

அதிதி வசீகரனின் அறைக்குள் முதன்முறையாக வந்தாள்.

அந்த பெரிய அறையின் நடுவில் போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான கட்டிலை பார்ப்பதைத் தவிர்த்து

ஜன்னலுக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டடி டேபிளின் அருகில் சென்றாள்.. அவனது லாப்டாப் மற்றும் நிறைய ஃபைல்கள் என்று இறைந்து கிடந்தது..

அதன் நடுவே அவளது குட்டி பத்துமலை முருகன் அழகாக வீற்றிருந்தார்.

அவள் ஆச்சரியமாக கண்ணை விரித்து

“இன்னும் இதை வச்சிருக்கீங்களா?” என்றாள்.

“ஏன் வைச்சிருக்காம என்ன பண்ணுவாங்க.. உன் நியாபகமா என்கிட்ட இருந்தது இந்த முருகர் மட்டும்தான்..” என்றான்.

புன்சிரிப்புடன் முருகரை கையில் எடுத்து பார்த்துவிட்டு திரும்ப வைத்தவள் அவனது அறையை மேலும் ஆராய்ந்தாள்

அப்போது பெட்டின் அருகே நைட் ஸ்டாண்டின் மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோட்டோ அவளது கவனத்தைக் கவர்ந்தது

அருகில் சென்று எடுத்துப்பார்த்தாள்,

வசீகரனின் அருகில் முகம் முழுவதும் சிரிப்பாக இருந்தவரைப்பார்த்ததும் அதிதியின் மனம் இளகியது.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்

“அம்மா..” என்றான் குரலில் அத்தனை உணர்ச்சிகளை நிறைத்து..

அவனை நிமிர்ந்து பார்த்தவள்.

“இப்ப தெரியுது உங்க லுக்ஸ் யாருகிட்ட இருந்து வந்திருக்குன்னு..” என்று சிறுகேலியுடன் கூறவும் வசீகரன் மனம் சற்று லேசானது

கட்டிலின் மேல் ஒரு பெருமூச்சுடன் அமர்ந்தவன்..

தன் பக்கத்தில் கைவைத்து அவளையும் அருகில் அமருமாறு சைகை செய்ய அவனது இறுகியிருந்த முகத்தைப்பார்த்த அதிதி எந்தவித தயக்கமும் இல்லாமல் சட்டென்று அவன் அருகில் அமர்ந்தாள்.

அவளிடமிருந்து அந்த ஃபோட்டோ ஃப்ரேமை வாங்கியவன் அதையே வெறித்தபடி அமைதியாக அமர்ந்திருக்க..

அவன் கையைப்பிடித்து லேசாக அவன் தோள் மேல் சாய்ந்தவள்..

“என்னாச்சி அவங்களுக்கு..” என்றாள் மென்மையாக..

“அக்சிடெண்ட்” என்றவன்.. அவளிடம் அவன் அம்மா இறந்தது , அதன் காரணம் தான்தான் என்று தன்னையே வறுத்திக்கொண்டு வாழ்ந்தது, என்று எல்லா கதையையும் கூறினான்.

அதைக்கேட்டு என்ன சொல்வதென்றே தெரியாமல்

“சாரி” என்று மட்டும் சொன்னாள்.

“அவங்க என்ன விட்டுப்போய் லெவன் இயர்ஸ் ஆச்சி.. ஆனா ஐ மிஸ் ஹெர் எவ்ரி சிங்கிள் டே..” என்றவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அந்த கண்ணாடி ஃப்ரேமின் மீது விழுந்தது..

“உனக்கு தெரியுமா அன்னிக்கு நீ உங்கம்மாவ பத்தி பெருமையா பேசும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா..? எனக்கும் எங்க அம்மாவ பத்தி பேசனும் போல இருக்கும் ஆன என்கிட்ட இருக்கறது எல்லாமே எனக்கு இருந்தும் இல்லாமலும் இருக்கற பழைய நியாபகங்கள் மட்டும் தான், எனக்கும் நேத்து என்ன பண்ணாங்க, இன்னிக்கு என்ன பேசினாங்கன்னு..புதுசா பேசனும்னு எவ்ளோ ஆசையா இருக்குதெரியுமா? ஆனா எனக்கு அப்படி சொல்றதுக்கு ஒன்னுமே இல்ல.. அவங்க கொஞ்சம் கொஞ்சமாக என்னோட கடந்தகாலமா  மாறிட்டு வர்ற வலிய என்னால தாங்க முடியல அதி..” என்றவன் கதறி அழுதுவிட்டான்.

அவள் எழுந்து நின்று அப்படியே அவன் தலையை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவன் தலைமுடியையும் முதுகையும் ஆறுதலாக வருடிக்கொடுத்தாள்.

அவளும் அழுதிருந்தாள்.

ஓயாமல் திட்டிக்கொண்டேனும் அலுத்துக்கொண்டேனும் தனக்காக எல்லாவுமாக இருக்கும்  அம்மா இல்லாமல் இருப்பதெல்லாம் அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.. இந்த வயதிலே அப்படி என்றால்

வசீகரன் இன்னும் சின்ன வயதில் எப்படி தாங்கினானோ என்று எண்ணும்போதே அவளால் தாங்கமுடியவில்லை. அதுவும் அவர் இறப்புக்குதான் தான் காரணம் என்று தன்னையே நொந்துகொண்டு வாழ்வதெல்லாம் எவ்வளவு கொடியதாக இருந்திருக்கும்..

சற்று நேரம் பொறுத்து அவன் விலகிய போது அவன் கண்கள் சிவந்திருந்தது.

தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டவன்,

“சாரி..” என்றான்.

“டோண்ட் யூ டேர்..” என்று அதிதி ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்

“இப்ப எதுக்கு சாரி சொல்றீங்க..? ஒரு நார்மல் மனுஷனா உணர்ச்சிய காட்டினதுக்கா..?சாரி சொன்னீங்கன்னா அவ்ளோதான்..” என்றாள் கோபமாக.

“சரி தாங்க்ஸ் சொல்லலாமா..” என்று கேட்டவனின் குரல் கொஞ்சம் இயல்புக்குத் திரும்பி இருந்தது.

“அது பரவால்ல..” என்றாள்.

நின்று கொண்டிருந்தவளை இழுத்து தன் அருகில் அமரவைத்தவன்.

அவள்புறமாகத் திரும்பி அவள் கைகளில் முத்தமிட்டு

“தாங்க்ஸ் கிட்டி..” என்றான்.

“அன்னிக்கு உனக்கு தெரியாமலே எனக்கு எவ்ளோ நல்லது பண்ணத் தெரியுமா..

‘இட்ஸ் நாட் யுவர் ஃபால்டுனு’ சொன்னப்பாரு .. எனக்கு எவ்ளோ ஆறுதலா இருந்தது தெரியுமா..? அந்த நிமிஷத்துலதாண்டி நான் விழுந்தேன்..” என்றான்.

“எங்க விழுந்தீங்க..” என்றாள் குறும்பாக..

“ம்ம்..புதைகுழியில..” என்றான் அவன் ..

அவள் முறைக்கவும்

“கியூட்டி..” என்று அவள் கன்னத்தைப்பிடித்து ஆட்டினான்.

“வசி உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா..” என்று கேட்டாள்.

“என்ன பர்மிஷன்லாம் கேக்கறீங்க மேடம்… அப்படி என்ன கேக்கப்போற…?”

“ரெண்டு நாளைக்கு அப்புறம் வந்து எல்லாம் சொல்றேன்னு அன்னிக்கு சொன்னீங்களே..”

“என்னிக்கி.?”

என்று வேண்டுமென்றே தெரியாதவன் போல அவன் கேட்க

“ச்சு.. அதான் அன்னிக்கி.. உங்கள பேஸ்கெட்பால் கோர்ட்ல பார்த்தேனே அப்போதான்.”

“நீ என்னிக்கு என்னை பார்த்தன்னு எனக்கு எப்படி தெரியும்?”

அவன் கையில் வலிக்கும் படி கிள்ளியவள்

அவன் ஆஆ என்று கத்தவும்

“நடிக்காதீங்க.. அப்போ ரெண்டு நாள் கழிச்சி வந்து என்ன சொல்லி இருப்பீங்க..?” என்றாள்

“மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்க சரி பண்ணியிருப்பேன்.. அவ்ளோதான்”

“அவ்ளோதானா?”

“ஆமா வேற என்ன எதிர் பாக்குற..” என்று அவளை சீண்டவும்.

அவள் முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளவும்

“அச்சசோ.. கொழந்தைக்கு கோவம் வந்துடுச்சா..?” என்று விளையாட்டாகக் கேட்டுக்கொண்டே அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்

“இன்னிக்கு வேண்டாம்.. அதை இன்னொரு நாளைக்கு சொல்றேன்..இப்ப போய் தூங்கு செல்லம்..” என்றான்.

“எனக்கு தூங்கத்தெரியும் நீங்க டெய்லியும் இதையே ஒன்னும் சொல்லவேணாம்..”

என்று அவள் கடுப்பைக் காட்டிவிட்டு கட்டிலைவிட்டு எழவும் அவன் கைப்பிடித்து தடுத்து

“ஹலோ மேடம் என்னோட குட் நைட் கிஸ் எங்க..?” என்றான்.

“அது இன்னிக்கு வேண்டாம் இன்னொரு நாளைக்குத்தரேன்..நீங்க தூங்குங்க செல்லம்…” என்று அவனைப்போலவே சொல்லிக்காட்டியவள் தன் கையை விடுவித்துக்கொண்டு வெளியேபோனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!