Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 20

அத்தியாயம் 20

இருவருக்குமாய் ஒரு உணவை ரகுவே ஆர்டர் சொல்லிவிட்டு உணவுக்காக காத்திருக்க, அவன் பேசுவான் என நினைத்து பார்த்திருந்த ஆராத்யாவிற்கு அவன் அமைதி ஒரு ஏமாற்றம் தான்.



Advertisement

உணவு வரவும் “சாப்பிடு ஆரா!” என அவள் புறம் ஒன்றை நகர்த்திவிட்டு தானும் சாப்பிட, குழப்பத்தோடு இப்பொழுது தலைவலியும்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து சில நிமிடங்கள் முன்பு வரை நடந்த அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் ஆராத்யாவிற்குமே இப்பொழுது கார்த்திகா கூறிய எண்ணம் தான் எழுந்தது.

Advertisement

Advertisement

தன் நினைவுகளில் உழன்றவள் மெதுவாய் மிக மெதுவாய் தோசையை கையில் எடுக்க,

“ஆராத்யா!” என சத்தமாய் அழைத்துவிட்டான் ரகு.

Advertisement

“ஹான்! சார்!” என்று அவள் விழிக்க,

“என்னாச்சு தோசை பிடிக்காதா? வேற எதாவது சொல்லவா?” என்றான் அவள் மெதுவாய் சாப்பிடுவதை பார்த்து.

“இல்ல சார்! இதுவே போதும்!” என்றவள் அவன் சாப்பிட்டு முடித்திருப்பதையும் அப்போது தான் கண்டு வேகமாய் உண்ண,

“ப்ச் மெதுவா ஆரா! நான் சாப்பிட்டேன் தான்.. அதுக்காக டைம் ஆகிட்டு வேகமா சாப்பிடனும்னு இல்ல..” ரகு சொல்ல,

‘இப்ப எப்படி தான் சாப்பிடுறது?’ என்பதை போல ஆனது ஆராத்யா நிலைமை.

பேரர் வந்து காபியை வைத்து செல்ல, இதை எப்பொழுது சொன்னானோ என்று நினைத்து கை கழுவி வந்து அமர,

“எடுத்துக்கோ உனக்கு தான்!” என்று கூறியது எல்லாம் ஆராத்யாவிற்கு அதிர்ச்சியின் உச்சக்கட்டம்.

“நைட் டிபன் கூட எப்பவும் காபி எடுத்துப்ப தானே? அதோட இப்ப தலைவலி கூட வந்திருக்கலாம்!” ரகு சொல்ல, கொஞ்சமும் தன் முக மாறுதலை மறைக்க தோன்றாமல் வியப்பும் அதிர்ச்சியும் போட்டியிட அவள் பார்த்த பார்வையில் மெல்ல சிரித்துக் கொண்டவன்,

“இப்ப நிஜமாவே டைம் ஆகிட்டு.. காபி எடுத்துட்டா வீட்டுக்கு போகலாம்” என்று சேர்த்து சொல்ல, இதமாய் காபி உள்ளே இறங்கினாலும் விழுங்கும் நேரம் தொண்டையை என்னவோ அடைப்பது போல தான் இருந்தது ஆராத்யாவிற்கு.

“சொல்லு!” கார் சில அடிகள் நகர்ந்ததும் கேட்டான் ரகு.

“என்ன?” புரியாமல் ஆராத்யா விழித்து கேட்க,

“என்னவோ கேட்கனும் தானே? தூக்கம் வந்தா தூங்கி இருப்ப.. இல்லைனா தெரியாத பையன் கூட வர்றப்ப இந்த நேரத்துல தூங்கவான்னு கொட்ட கொட்ட முழிச்சு வெளில வேடிக்கை பார்க்க ட்ரை பண்ணிருப்ப.. ரெண்டும் இல்ல.. கண்ணு மட்டும் கலங்கி நிக்குது” அவன் சொல்லி முடிக்கவும் கண்ணீர் அவளையும் கேட்காமல் இறங்கிவிட, நிறுத்திவிட்டான் காரை. அதற்கு மேல் அவனுக்கும் முடியவில்லை.

“தேங்க்ஸ் தவிர என்ன வேணா நீ சொல்லலாம்!” என்றவன் கைகளைக் கட்டி முன்னே பார்த்து மட்டும் அமர்ந்திருக்க,

“நான் நினைக்குறது சரியா?” என்றாள் அழுகையோடு. அவன் இவ்வளவு பேசிய பின்பும் தானும் கேட்டு விடுவது என்று முடிவெடுத்து கேட்க,

அதில் மெல்ல சிரித்தவனுக்கு கல்பனாவின் நியாபகம். கல்பனாவும் அப்படி தான்.. எதையும் நேரே கேட்காமல் அப்படியா? என்று கேட்பதே கல்பனாவின் வழக்கம்.

“அண்ணி கூட பழகி அவங்க பாஷை ஒட்டிக்கிச்சு போல!” என்றவன் இன்னும் அவளைப் பார்க்கவில்லை.

“நான் கேட்குறது என்னனு உங்களுக்கு தெரியும்!” என்றாள் இன்னமும் தெளிவாய்.

“ம்ம்! வெல் அப்ப உனக்கும் தெரியும்!” என்றான் அவளைப் போலவே. சரியாய் அந்த நேர அழைப்பு நந்தாவிடம் இருந்து.

எடுத்ததும் நந்தாவைப் பேச விடாமல் “அதெப்படி மாமா ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க? சரியான டாக்சிக்!” என்றவன் பேசியது என்னவோ சிரித்தபடி தான்.

“அதிருக்கட்டும்.. ஆமா எங்க இருக்க? வீட்டுக்கு வந்துட்டியா? டிரைவ் பண்ற மாதிரி தெரில.. உன் அக்கா உனக்கு போன் பண்ண சொல்லி என்னை டார்ச்சர் பண்றா வேலையை செய்ய விடாம.. அப்பவே சாப்பிட போறேன்னு சொன்னியாமே!”

“ப்ச்! இன்னமும் தூங்காம என்ன பன்றாளாம்? நீங்க கேட்க மாட்டிங்களா மாமா?”

“ஏன் டா டேய்! அக்கா தம்பி ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்ல? அவ உன்னையும் நீ அவளையும் திட்டிக்க நைட் ஷிபிட்ல இருக்க நான் தான் கிடைச்சனா?” என்று நந்தா கேட்ட விதத்தில் மெல்லிய முறுவலுடன் ஆராத்யா புறம் ரகு திரும்ப, அவளுமே அதை கேட்டு அப்பொழுது தான் இயல்பாய் சிரித்திருந்தாள்.

“ஆரா என்ன பண்றா?” என்று சாதாரணமாய் நந்தா கேட்க, அதில் ஆராத்யா விழிக்க, ரகு அதே புன்னகையோடு,

“வந்துட்டு தான் இருக்கோம்.. பக்கத்துல”  என்றவன் காரை ஸ்டார்ட் செய்ய, அந்த சத்தம் நந்தாவிற்கும் புரிந்தது.

“ஹ்ம்ம்! ஓகே! வீட்டுக்கு ரீச் ஆகிட்டு ஒரு டெக்ஸ்ட் பண்ணிடு எனக்கு!” என்றவன் வைத்துவிட, இவர்கள் அந்த பேச்சும் அத்தோடு நின்று கொண்டது.

“அந்த ஃபாரின் ப்ராஜெக்ட் ரிஜெக்ட் பண்ணிட்ட போல?” வீட்டின் அருகே செல்லவும் கேட்டான் ரகு.

“ஹ்ம்!” என்றவள் விளக்கம் சொல்லவில்லை.

கேட்டின் முன் காரை நிறுத்தியவன் எப்பொழுதும் போல எதிர்வீட்டில் அவள் அமர்ந்திருக்கும் ஊஞ்சல் பக்கம் பார்க்க, தானாய் ஒரு புன்னகை அவள் அங்கில்லை தன்னருகில் என்பதில்.

தன் கேள்விக்கான விடையை அவன் தவிர்த்திருக்க புரிந்தும் புரியாமலுமாய் குழப்பத்தில் அமர்ந்திருந்த ஆராத்யா இறங்காமல் அமர்ந்திருந்தாள்.

“எனக்கு டைமே சரி இல்ல ஆரா! இன்னைக்கு எப்படியும் நானே பேசிடனும் நினைச்சது தான்.. பட் இவ்ளோ அன்டைம்ல வேண்டாமேனு தான் வந்துட்டேன்.. பேசலாம்.. வேற எங்க போக போறோம்!”

அவளின் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கியது அவனின் இந்த பேச்சு. என்ன பேசிடணுமாம்? என்று தோன்ற அதை கேள்வியாய் தாங்கிய பார்வையை அவனிடம் கொடுத்தாள்.

“ஓகே! ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாத.. நாளைக்கு பாக்கலாம்! குட் நைட்!” என்று சொல்லி அவள் பார்வை தாங்காமல் இவன் திரும்பிக் கொள்ள, அதற்கு மேல் அவளாலும் அவனருகில் இருக்க முடியவில்லை. அவன் பார்வை உணர்த்துவதை ஏற்க முடியவில்லை.

இறங்கியவள் கதவை அடைத்ததும் அவள் பக்கமாய் ஜன்னலை திறந்தவன், “ஆனாலும் முடியலை! டீடெயிலா வேணா அப்புறம் பேசலாம்.. இப்ப சொல்லிடுறேன்!” என்றவன் அவள் என்ன என யோசித்து கேட்கும் நொடி நேரத்திற்கும் முன்,

“நீ நினைக்குறது சரி தான்!” என்று கூறி, இலவசமாய் ஒரு புன்னகையையும், அவள் எப்பொழுதும் பேசும் தலை சாய்த்த பார்வையை இவன் அவளைப் பார்த்து வீசிவிட்டு நொடி நேரத்தில் வீட்டினுள் காரை செலுத்தி மறைந்துவிட்டான்.

என்ன நடந்தது என யூகிக்கவே சில நிமிடம் எடுத்தது ஆராத்யாவிற்கு. பின் அவன் சொல்லியதன் அர்த்தத்தில் உடம்பெல்லாம் வெளிப்படையாய் நடுங்க துவங்க, கதறி அழ வேண்டுமாய் ஒரு உணர்வு.

“கார் உள்ள போய் எவ்வளவு நேரமாச்சு? என்ன பண்ற நீ? கார் சத்தம் கேட்கவும் எட்டி பார்த்தேன்.. சரி வந்துட்டனு உள்ள போய்ட்டேன்.. இன்னும் வராம இங்க நின்னு என்ன பண்ற?” என்று வந்த ஸ்ருதி ஆராத்யாவை தன் பக்கமாய் திருப்ப, முகமெல்லாம் வீங்கி, உடலெல்லாம் நடுங்கி பாவமாய் விழித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா.

“ஆரா!” என்று அதிர்ந்து அவளை வீட்டினுள் அழைத்து செல்ல, தன் அறைக்குள் வந்தவள் முகத்தை மூடி தன்னால் முடியும் மட்டும் அழுது தீர்த்தாள்.

ஸ்ருதி எவ்வளவு கேட்டும் எதுவும் சொல்லாதவளை எதுவும் செய்திட முடியாமல் அருகில் அமர்ந்து சமாதானமாய் குரல் கொடுக்க, மணி நேரமாய் அழுது கரைந்தவள் தன்னையும் அறியாமல் தூங்கிப் போனாள்.

“இந்த பொண்ணுக்கு கடவுள் ஏன் இவ்வளவு சோதனை குடுக்குறானோ!” அம்பிகா ஸ்ருதியிடம் கவலை கொள்ள,

“என்ன நடந்ததுன்னு தெரியாமல் என்ன சொல்ல? ஆனா ஆரா பாவம்!” என்ற ஸ்ருதி,

“அஜய் முழிச்சுக்க போறான்.. நீங்க அவன் கூட தூங்குங்க ம்மா.. நான் ஆராவோட இருக்கேன்!” என்று கூறி அங்கேயே இருந்துவிட்டாள் ஸ்ருதி.

நெஞ்சை நீண்ட நாட்களாய் அழுத்திய பாரம், தான் மட்டும் சுமந்து வந்த அந்த நேசத்தை உரியவளிடம் சேர்த்துவிட்ட ஒரு திருப்தி என அமைதியோடு சிறு கீற்று புன்னகையுடன் தன் வீட்டினுள் ரகு வர, இன்னும் உறங்க செல்லாமல் அமர்ந்திருந்தார் மகேஸ்வரி.

அன்னையைப் பார்த்ததும், “ம்மா! மணி என்ன ஆச்சு? இன்னுமா தூங்கல? நான் வந்துக்க மாட்டேனா?” என கண்டிப்புடன் கேட்டான் ரகு.

“தூக்கம் வரல டா.. தர்ஷியும் இவ்வளவு நேரமும் தூக்கம் வரலனு முழிச்சுட்டு எனக்கு கம்பெனி குடுத்தா.. இப்ப தான் உன் கார் சத்தம் கேட்கவும் நீ திட்டுவனு உள்ள ஓடுறா!” என்று சிரித்தார்.

“என்னம்மா நீங்க?” என்று சலித்து அவர் அருகில் அமர்ந்தவன், அன்னை மடியில் தலைசாய்த்துக் கொள்ள, வாஞ்சையாய் தலை கோதினார் மகேஸ்வரி.

“சாப்பிட்டீங்களா ம்மா?”.

“அகி சீக்கிரம் வந்துட்டான்.. அவனோடவே எல்லாரும் அப்பவே சாப்பிட்டாச்சு.. உனக்கு எதாவது வேணுமா?”

“சாப்பிட்டு தான் வந்தேன் ம்மா!”

“தர்ஷி சொன்னா ப்பா.. அந்த பொண்ணு வீட்டுக்கு போய்ட்டாளா?” என்று அன்னை கேட்கவும் நிமிர்ந்து அவர் முகம் பார்த்தான்.

“நம்ம ஆபீஸ்ல பிரச்சனைன்றதுக்காக மட்டும் நீ அந்த பொண்ணை கம்பளைண்ட் பண்ண சொல்லாத.. பாவம் அந்த பொண்ணு.. அம்மா அப்பா இல்லாம ஏதோ பிரச்சனைனால தான இப்படி தனியா வந்து பிரண்ட் குடும்பத்தோட இருக்கா.. உன்னால முடிஞ்ச உதவி பண்ணு.. முடிஞ்சா அவன் இனி அந்த பொண்ணு வழிக்கே வராத மாதிரி எதாவது பண்ணு..” என்று மகேஸ்வரி சொல்ல, கேட்டவனுக்கு தான் புன்னகை வாடாமல் இருந்தது.

“அக்கா வேற என்ன சொன்னா ம்மா?”

“தர்ஷிக்கு என்னவோ அந்த பொண்ணை ரொம்ப புடிச்சு போச்சு.. நிதைக்கும் அத்தனை முறை ஆரா ஆரானு சொல்லிட்டு இருக்கா.. அந்த பொண்ணும் சும்மா இல்ல.. தனியா இருக்கா இல்ல.. அதான் இங்க எல்லாரையும் புடிச்சு போச்சு போல..” என்று கூறி பெருமூச்சு எறிந்தவர்,

“குழந்தை முகம்.. ஆனா பாரு மனசுல எவ்வளவு கஷ்டம்.. என்னனு தனியா தாங்குதோ!” என்று கூற, தலை கோதிய அன்னை கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்தான் ரகு.

“ம்மா! நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்று கேட்க,

“என்ன ரகு?” என்றார்.

மகனின் கண்களில் தெரிந்த ஒரு வெளிச்சமும், அவன் புன்னகை உதட்டோடு அல்லாமல் முகமும் பிரகாசிக்க வைக்க, அத்தனை புதிதாய் தெரிந்தது மகனின் அந்த முகம்.

எப்பொழுது இப்படி பார்த்தோம் என்று சிந்தித்தால் அப்படி எல்லாம் எதையும் முகத்தில் அவன் காட்டியதில்லையே என்ற எண்ணமும் வர, மகனை பார்த்தபடியே இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!