பிரியமே பிரிவேது! 24
அத்தியாயம் 24
இரண்டு நாள் விடுமுறைக்கு பின் ஆராத்யா அன்று அலுவலகம் கிளம்பி செல்ல, அவள் செல்வதை தன் அறை ஜன்னல் வழி பார்த்து தான் நின்றான் ரகு ராம்.
Advertisement
நந்தாவும் டில்லியில் இருந்து ஒரு வாரம் விடுப்பில் நேற்று தான் வந்திருந்தான் மனைவி பார்க்க வேண்டும் என்று ஆசையாய் கூறியதை மறுக்க முடியாமல்.
தர்ஷினி சென்று முதல் நாள் ஆராத்யா வீட்டிற்கு போய் பேசி இருக்க, அடுத்த நாள் நந்தா வருவதை பற்றி சொல்லி இருந்ததால் ஆராத்யாவும் தர்ஷினியை அன்று எதிர்பார்க்கவில்லை.
Advertisement
Advertisement
மூன்றாம் நாள் காலை ஆராத்யா கிளம்பி செல்வதை பார்த்துவிட்டு ரகு தானும் கிளம்பி கீழே வர, வயிற்றைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் தர்ஷினி.
அருகே நந்தா, அகிலன் இருக்க மகேஸ்வரி கையில் எதையோ கொண்டு வர பின்னோடே வந்தாள் கல்பனா.
Advertisement
“என்னாச்சு மாமா?” என்று அவர்கள் அருகில் வேகமாய் வந்தான் ரகு.
“அப்பவே லைட்டா வலிக்குற மாதிரி இருக்குதுன்னு சொன்னா ரகு.. ஃபால்ஸ் பெயின்னு வாட்டர்ல என்னவோ கலந்து குடிச்சா.. இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமா வலிக்குதாம்..” என்றான் நந்தாவும் கவலையுடன்.
“டாக்டர்கிட்ட போகாம இங்க என்ன பண்றீங்க? நான் கார் எடுக்குறேன்!” என்று ரகு சொல்ல,
“போகனும் டா.. இன்னும் ஒரு மாசம்கிட்ட இருக்கே.. சூட்டு வலினா உடனே போயிடும்! அதான்!” என்று மருந்தினை கொடுக்க, அதை விழுங்கிவிட்டு இன்னும் வயிற்றைப் பிடித்திருந்த தர்ஷினி கண்கள் கலங்கி பயமும் அப்பட்டமாய் தெரிந்தது.
“தர்ஷிம்மா! இப்ப ஓகேவா?” நந்தா கேட்க,
“இல்லங்க.. இன்னும் வலிக்குது!” என்றாள் பாவமாய்.
“ம்மா! என்ன வலியாவும் இருக்கட்டும்.. வாங்க ஹாஸ்பிடல் போய்டலாம்!” என்று ரகு சொல்லி,
“அகி! தர்ஷி ஃபைல்?” என்று கேட்க,
“ரூம்ல இருக்கு!” என்றான் நந்தா.
“நீங்க காருக்கு போங்க.. நான் எடுத்துட்டு வர்றேன்!” என்று கல்பனா வேகமாய் செல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் முழு குடும்பமும் மருத்துவமனையில்.
“வலிக்குது பா!” நந்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டு அலறினாள் தர்ஷினி.
“ஒன்னும் இல்லைடாம்மா.. இப்ப பார்த்துடலாம்..” என அவளுக்கு இணையான வேதனையுடன் நந்தாவும் அவளருகில் நின்று என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஆனாலும் பேசிக் கொண்டே இருந்தான்.
காரிலேயே தர்ஷினியின் வலியை அவள் சொல்வதை கண்டு, கண்டு கொண்டார் மகேஸ்வரி இது பிரசவவலி என்று.. இருந்தும் யாரிடமும் சொல்லி பயமுறுத்தாமல் இருக்க, மருத்துவரும் அட்மிட் என்று கூறிவிட,
“ஆனா ம்மா ஒரு மாசம் இருக்கே!” என்றான் அகிலன் தாயிடம்.
“இத்தனை நாள்னு கணக்கு எல்லாம் இல்லை பா.. முன்னபின்ன இருக்கும் தான்..” என்றார் மகேஸ்வரி.
“ஆனாலும் ஒரு மாசம் இருக்கே த்த?” என்று நந்தா கேட்க, அதை கேட்டபடி தான் வந்திருந்தார் மருத்துவர்.
“இதெல்லாம் நார்மல் தான் சார்.. சுகப்பிரசவம் வாய்ப்பு இருக்கு.. ட்ரை பண்ணலாம்.. ஆனால்…” என்று சொல்லவுமே அனைவரும் பயமாய் பார்க்க,
“தொப்புள் கொடி குழந்தையோட கழுத்தை சுத்தி இருக்கு..” என்று தர்ஷினியை பரிசோதித்து சொல்லவும் மகேஸ்வரிக்கு திக்கென்று ஆனது.
“ட்ரை பண்ணலாம் இல்லைனா சிஸ்ஸேரியன் பண்ணிடலாம்!” என்றவர் கணவர் என கேட்டு கையொப்பமும் பெற்றுக் கொள்ள, வெளியே பதட்டம் அனைவர்க்கும் தான்.
“சம்மந்திக்கு போன் பண்ணி சொல்லிடுங்களேன்!” என மகேஸ்வரி நந்தாவிடம் சொல்ல, அதன்பின் தான் அவனுக்கும் அந்த நியாபகம்.
மொபைலை கையில் எடுக்கவே கைகள் நடுங்க, “மாமா நான் சொல்றேன்..” என்று அகிலன் அதை தனது பொறுப்புக்கு கொண்டு வந்துவிட்டான்.
ரகுவும் நந்தா அருகிலேயே நிற்க, சில நிமிடங்களில் செவிலியர் வந்து சொல்லி சென்றார் ஆபரேஷன் தான் என்று.
“நான் அவளை பார்க்கலாமா மேடம்?” ஏன நந்தா கேட்க,
“இல்ல சார்! ஆல்ரெடி ஆபரேஷன் தியேட்டர் ரெடியா தான் வச்சிருந்தோம்.. சோ அங்க மாத்திட்டாங்க..” என்று சொல்லி செல்ல,
“ஒன்னும் இல்ல மாமா.. இப்ப பார்த்திடலாம்..” என்றான் ரகு நந்தாவின் கைகளை ஆறுதலாய் பிடித்து.
தர்ஷினியை கவலையாய் பார்த்த நியாபகம் கூட இல்லை எனும் போது தன் கைகளை பிடித்து வலி என்று அழுத அந்த முகம் நினைத்து கைகள் சில்லிட்டது பயத்தில் நந்தாவிற்கு.
அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் எல்லாம் செய்தி வந்தது பெண் குழந்தை என்று.
“தர்ஷி?” என்று நந்தா கேட்க,
“மயக்கத்துல இருக்காங்க.. இப்ப குழந்தையை கொண்டு வந்திடுவாங்க.. அரை மணி நேரத்துல ரூம்க்கு ஷிப்ட் பண்ணினதும் அவங்களையும் நீங்க பார்க்கலாம்!” என்று சென்றார் மருத்துவர்.
குழந்தையை முதலில் நந்தா கைகளில் வாங்க, பூரித்தவன் அதன் அழகில் சில நிமிடங்கள் பார்த்துவிட்டு மகேஸ்வரி கைகளில் கொடுத்தான்.
“இளவரசி வந்துட்டீங்களா?” என்று கல்பனா கொஞ்ச, சில நிமிடங்களில் ஆராத்யாவிற்கு தர்ஷினி அலைபேசியில் இருந்து செய்தி அனுப்பிவிட்டான் ரகு “பிளெஸ்டு பேபி கேர்ள்!” என்று கூடவே ஒரு கண்கள் சிரிக்கும் இதயம் சுமந்த பொம்மையும்.
அடுத்த நிமிடமே அழைப்பு ஆராத்யா மொபைலில் இருந்து தர்ஷினிக்கு வர, அதை எதிர்பார்க்கவில்லை ரகு.
எடுத்து காதில் வைக்கவும், “வாழ்த்துக்கள் தர்ஷ்! ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்!” என பட்டாசாய் குதூகளித்தவள் பேச்சில் சிறு புன்னகை தாங்கி ரகு அமைதியாய் இருக்க,
“என்ன பன்றாங்க எஞ்சேல்? எந்த ஹாஸ்பிடல் தர்ஷ்? ச்ச! இன்னைக்கு பார்த்தா நான் ஆபீஸ் வரணும்.. லீவ் போட்ருக்கலாம்..” என்ற பிணத்தல் வேறு அவளிடம்.
“ஆபீஸ் எம்டி நெத்தில என்ன பைத்தியம்னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கா?” என்ற ரகுவின் குரலில் தூக்கிவாரி போட கையில் இருந்த அலைபேசியே பறந்து சென்று அதை கேட்ச் பிடித்து என அலுவலகத்தில் பலர் பார்க்க சாகசம் நடத்தினாள் ஆராத்யா.
ரகு வரவில்லை என்றதும் ஏன் என்ற கேள்வியும் மூளையை ஆக்கிரமித்து இருக்க, ஏனோ தானோ என்று வேலை பார்த்துக் கொண்டிருந்த ஆராத்யாவிற்கு தர்ஷினி அலைபேசியில் இருந்து செய்தி வரவும், வந்த செய்தியும் மூளையை வேலை செய்யவிடவில்லை.
தர்ஷினி தான் அனுப்பி இருப்பாளா என்று யோசிக்க கூட இல்லாமல் தர்ஷி அலைபேசி அவளிடம் இருந்து செய்தி என்று பார்க்கவுமே சட்டென அழைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்திருக்க, ரகுவின் குரலில் உடலெல்லாம் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
கேட்ச் பிடித்த மொபைலை உடனே ஆராத்யா கட் செய்ய, சிரித்தபடி ரகுவும் அலைபேசி தூண்டிக்கப்பட்டதை பார்த்துவிட்டு மருத்துவமனை பெயரை அவளுக்கு அனுப்பி வைத்தவன் குழந்தையிடம் கவனம் வைத்தான்.
“போச்சு போச்சு மானம் போச்சு.. அய்யோ என்ன நினைச்சிருப்பாங்க.. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?” என்று போனை வைத்ததும் அடுத்து புலம்ப ஆரம்பித்த ஆராத்யாவை, கார்த்திகா பிடித்து உலுக்க,
“என்ன டி?” என்றாள் சோர்வாய் ஆராத்யா.
“என்ன புலம்பிட்டு இருக்க? ரெண்டு நாள் ஏன் லீவ்னு கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல.. அன்னைக்கு சாரோட போனியே என்னாச்சுன்னு கேட்டேன் அதுக்கும் பதில் இல்ல.. இப்ப திடிர்னு சிரிச்சு ஏர்ல பல்டி எல்லாம் அடிச்சு மொபைலை கேட்ச் புடிச்ச.. திடீர்னு தனியா புலம்புற.. என்ன தான் டி உன் பிரச்சனை?” என்றாள் கார்த்தி.
“ப்ச் என்ன சொல்ல? என் லைஃப் என் கண்ட்ரோல்ல இல்லாம போற மாதிரி பீல் ஆகுது..” ஆராத்யா சொல்ல,
“பைத்தியமாவே ஆயிட்டியா?” என்று கார்த்திகா கேட்க,
‘எம்டி நெத்தில என்ன பைத்தியம்னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கா?’ என்று கேட்ட ரகுவின் நினைவில் ஆராத்யாவிற்கு புன்னகை எழ,
“அச்சடா பைத்தியமே தான்!” என்றாள் ஆராத்யாவைப் பார்த்து முகத்தை கோணலாய் வைத்து கார்த்திகா.
மருத்துவமனை பெயர் தாங்கிய செய்தி அதுவும் தர்ஷினி மொபைலில் இருந்து வர, தலையில் அலைபேசியை தட்டிக் கொண்டாள்.
சிறு இதம் ஒன்று மனதிற்கு கிடைக்க, தர்ஷினிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சி என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டாள் ஆராத்யா.
மாலை வேகமாய் அனைத்தையும் எடுத்து வைத்து கம்ப்யூட்டரை அணைத்து பேகை எடுத்துக் கொண்டு கார்த்திகாவிடம் கிளம்புவதாய் சொல்ல,
“என்னவோ சரி இல்ல ஆரா நீ.. சரி நாளைக்கு பேசலாம் பார்த்துப் போ!” என்று அனுப்பி வைத்தாள் கார்த்திகா.
நேராய் மருத்துவமனைக்கு தான் வந்து சேர்ந்தாள். தர்ஷினி பெயரைக் கூறி அறையைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே செல்ல, கண்மூடி தர்ஷினி படுத்திருக்க அருகே கைகால்களை உதைத்தபடி குழந்தை இருக்க, தர்ஷினி கைகளைப் பிடித்துக் கொண்டும் அவளையும் குழந்தையையும் பார்த்தும் ரசித்துக் கொண்டும் அருகே நந்தா.
அழகாய் இருந்தது பார்க்கவே. பார்த்ததும் ஒரு புன்னகை எழ நின்றவளை “வா ஆரா!” என்று அழைத்தபடி ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தாள் கல்பனா.
அதில் கலைந்து நந்தாவும் திரும்பியவன், “வாங்க!” என் புன்னகைக்க, பதிலுக்கு புன்னகை கொடுத்தவள் தர்ஷினியை பார்த்தாள் அருகில் சென்று.
“சிஸ்ஸேரியன் தான் ஆரா.. பெயின் அதிகமா இருக்குனு அழுதா.. அதான் இன்ஜெக்ஷன் போடவும் தூங்குறா..” என்று கல்பனா சொல்ல,
“ஓஹ்! ரொம்ப அழுதாங்களா? எப்ப வந்திங்க ஹாஸ்பிடல்?” என்று கேட்டபடி சிரித்துக் கொண்டே குழந்தையின் விரல்களைப் பிடிக்க, குழந்தையும் கெட்டியாய் பிடித்துக் கொண்டது அவள் விரல்களை.
“நீங்க பேசிட்டு இருங்க.. நான் வர்றேன்!” என்று நந்தா வெளியேற, கல்பனாவும் அனைத்தையும் கூறிக் கொண்டு இருந்தாள்.
ஈவ்னிங் எல்லாரும் அல்லோவ்டு இல்லைனு சொல்லிட்டாங்க.. அதான் நான் பார்த்துக்குறேன்னு அத்தையை வீட்டுக்கு அனுப்பிட்டேன்.. அகிலன் சாப்பாடு கொண்டு வருவார்!” என்று சொல்ல, ஆராத்யாவும் கேட்டபடி குழந்தையைப் பார்க்க, அது தூங்க ஆரம்பித்தது.
“க்யூட்ல?” என்று ஆராத்யா புன்னகைக்க,
“ஆமா ஆமா அவங்க அப்பா மாதிரி!” என்று கல்பனா.
“அப்ப அம்மா மாதிரி இல்லைனு சொல்றிங்க? இருங்க தர்ஷ் எழுந்ததும் சொல்றேன்!” என்று ஆராத்யா சிரிக்க, சிரித்த கல்பனாவும்,
“ஆமா உங்களுக்கு யார் சொன்னாங்க?” என்று கேட்ட நொடி திருதிருவென ஆராத்யா விழித்தாள்.
மற்ற நேரம் என்றாள் ராம் சார் என்று வெளிப்படையாய் சொல்லி இருப்பாள் இப்பொழுது அப்படி சொல்ல முடியாமல் விழிக்க, அதனை பார்த்து தான் சந்தேகமாய் பார்த்து வைத்தாள் கல்பனாவும்.
“என்ன ஆரா! யார் சொன்னாங்க? வீட்டுக்கு போனீங்களா அத்தை சொன்னாங்களா?” என்று கேட்கவும்,
“அண்ணி!” என்று வந்திருந்தான் ரகு.
உள்ளே வந்த பின் தான் ஆராத்யாவை ரகு பார்க்க, அவனைப் பார்த்ததும் எழுந்தவளை உட்கார் என கையசைத்தவன்,
“இதுல மெடிசின் இருக்கு அண்ணி! பார்த்துக்கோங்க.. நான் கீழ தான் இருப்பேன்.. எதுவும் வேணும்னா கூப்பிடுங்க!” என்றவன் தர்ஷினியைப் பார்க்க,
“இப்ப தான் இன்ஜெக்ஷன் போட்டதும் தூங்குறா!” என்றாள் கல்பனா.
“ம்ம்!” என்றவன் கல்பனாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
மீண்டும் ரகு நந்தாவோடு உள்ளே வர, தர்ஷினியோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் ஆராத்யா. பதிலுக்கு சிறு மென்னகை தர்ஷினியிடம் இருக்க, நந்தா மனைவியிடம் வரவும் ஆராத்யா எழுந்து கொண்டாள்.
“வலி இருக்குதா தர்ஷி?” நந்தா அவளின் ட்ரிப்ஸ் இல்லாத கைகளைப் பற்றிக் கொண்டு கேட்க,
“உங்க வயித்தை கிழிச்சு தைக்க சொல்லிட்டு நான் கேட்குறேன் இந்த கேள்வியை!” என்றவள் பேச்சில் சிறிதாய் சிரித்தவன் அவள் தலைகோத, புன்னகையுடன் கல்பனா அருகில் வந்து நின்றாள் ஆராத்யா.
“அத்தை மாமா எங்க? நான் பார்க்கவே இல்லையே?” தர்ஷினி கணவனிடம் கேட்க,
“ரொம்ப வலில அழுதியே! உனக்கு ஸ்லீப்பிங் டோஸ் குடுத்ததனால யார் வந்ததும் தெரில.. கொஞ்ச நேரம் முன்னாடி தான் அத்தை கூட வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.. நாளைக்கு வருவாங்க..” என்று இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
“நீங்க மட்டும் தான் இருக்கீங்களா? நான் வேணா உங்களுக்கு துணைக்கு இருக்கவா?” கல்பனாவிடம் ஆராத்யா கேட்க,
“ம்ம் தர்ஷி துணைக்கு நான், என் துணைக்கு நீ, அண்ணன் துணைக்கு ரகு, ரகு துணைக்கு…” கிண்டலாய் ஆரம்பித்து கல்பனா சொல்லிக் கொண்டே இருக்க,
“அண்ணி!” என்று அழைத்தவன் கல்பனா திரும்பவும்,
“டைம் ஆயிடுச்சு!” என்றான் ரகு. தனக்கு தான் என்று ஆராத்யாவிற்கு புரிய, ஆராத்யா ரகுவிற்குள் எதுவோ பிரச்சனை என்று மட்டும் கல்பனாவிற்கு தெரிய, சாதாரணப் பேச்சுக்கள் கூட இருவரிடமும் இல்லை என்பதை கவனித்தாள் கல்பனா.
ரகு கூறவும் மணியை பார்த்த ஆராத்யா “எட்டு மணி ஆகிடுச்சா? டைம் போனதே தெரில!” என்றாள் மீண்டும் உறங்கும் குழந்தையைப் பார்த்து புன்னகைத்து.
“இங்க ரெண்டு பேர் தான் ஸ்டே பண்ண சொல்லிருக்காங்க ஆரா.. நான் பார்த்துக்குறேன்.. நீ போய்ட்டு வா.. டெய்லி எல்லாம் இவ்வளவு தூரம் அலைய வேண்டாம்.. இன்னும் ரெண்டு நாள் தான்.. வீட்டுக்கு வந்ததும் தம்பியோட நீ விளையாடு.. ஓகே?” என்று சொல்ல,
“ம்ம் நீங்க என்னையும் பாப்பா ஆக்கிடுவீங்க போல! வர்றேன்..” என்று கூறியபடி கைப்பையை எடுத்து மாட்டிக் கொண்டவள்,
“கிளம்புறேன் தர்ஷ்.. ஏஞ்சலை பார்த்துக்கோங்க.. நான் நாளைக்கு வர்றேன்!” என்று சொல்லி பேசி விடைபெற நின்றாள்.
ரகுவை தர்ஷி பார்க்கவும் எதையோ உணர்ந்த ஆராத்யா, “நான் வர்றேன் சார்.. வர்றேன் தர்ஷ்! பை!” என்று நந்தா தர்ஷினிக்கு கூறி கதவருகே நின்ற ரகுவை தாண்டி வேகமாய் வெளியே சென்றுவிட்டாள்.
‘அவ்ளோ உஷாரா நீ?’ என்று எழுந்த புன்னகையை தனக்குள் ரகு அடக்கிக் கொள்ள,
“வர வர ஆராக்கு என்னை நல்லா புரியுது நந்து.. லேட் ஆச்சேன்னு ரகுவை ட்ராப் பண்ண சொல்ல திரும்புனேன்.. அதுக்குள்ள எடுத்தேன் பாரு ஓட்டம்னு ஓடுறா!” இன்னும் வலி இருந்தது.. மூன்று நாட்களாவது இருக்கும் என்று மருத்துவரே சொல்லி இருக்க, அந்த வலியிலுமே தர்ஷினி பேச்சை நிறுத்தவில்லை.
“அந்த பாடு படுத்தியிருக்கீங்க ரெண்டு பேரும்!” என்று நந்தா முறைக்க,
“நான் தூங்கிட்டேன்!” என கண்களை மூடிக் கொண்டாள் தர்ஷினி.
மெதுவாய் அங்கிருந்து நகர்ந்து கதவை திறந்து ரகு வெளியே செல்ல, அதை பார்த்தாலும் புரிந்தாலும் கல்பனா நந்தா இருவருமே அமைதியாய் இருந்து கொண்டனர்.
கார் பார்க்கிங் அருகே ரகு வேக நடையில் வர, வாசலிலேயே கண்டு கொண்டான் வண்டியை உதைத்துக் கொண்டிருந்த ஆராத்யாவை.
“நேரமில்லாத நேரம் தான் நீ என் காலை வாருவியா? ப்ளீஸ் ஸ்டார்ட் ஆகிடு!” என வண்டியோடு ஆராத்யா பேசிக் கொண்டு நிற்க, அவளருகே யாரோ வந்து நிற்பது தெரிந்து நிமிர்ந்து பார்த்தாள்.
ரகுவைப் பார்த்ததும் என்ன பேச என தெரியாமல் கைகளைப் பிசைய, வண்டியை தன் கைகளுக்குள் கொண்டு வந்த ரகு சுவிட்ச்சை தட்டி, பின் தானும் உதைத்துப் பார்த்து, பெட்ரோல் இருக்கிறதா என்பதையும் பார்த்து எதுவும் பயன்தராமல் போக,
“ஹ்ம்!” என்று பெருமூச்சோன்றை கொடுத்து இடுப்பின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டு நிமிர்ந்தவன் சில நொடி யோசித்துவிட்டு,
“ஆட்டோல போறியா?” என்று கேட்கவும் விழித்தவள் கண்களில் எதுவோ தாக்குவதாய் இருக்க, நந்தாவிற்கு அழைத்தான் ரகு.
அதற்குள் தான் ஒரு முறை எடுத்துப் பார்க்கலாம் என ஆராத்யா வண்டியை உதைக்க,
“அது தான் பிடிவாதம் பிடிக்குதே! ஏன் திரும்ப திரும்ப அதையே படுத்துற?” என்று ரகு அவளிடம் கேட்கும் நேரம் நந்தாவும் அழைப்பை ஏற்றிருந்தான்.
“மாமா! கார் சாவி உங்ககிட்ட தானே இருக்கு?” ரகு கேட்க, அந்த பக்கம் நந்தா எதுவோ கூறவும் முறைத்துவிட்டு பின்,
“சரி வந்து வாங்கிக்குறேன்!” என்று சொல்லி வைத்தான்.
“வண்டி இங்கேயே நிக்கட்டும்.. நான் சாவி வாங்கிட்டு வர்றேன்!” என ரகு உள்ளே செல்ல போக,
“பரவால்ல! என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்.. நான் ஆட்டோல போய்க்குறேன்!” என்றவள் திரும்பி நடக்க பார்க்க,
“வெரி குட்! ஆட்டோக்காரனே பெட்டர் இல்ல?” என்று ரகு கேட்ட நொடி, மீண்டும் வண்டி அருகே வந்து நின்றுவிட்டாள்.
கோபமாய் பல்லைக் கடித்து சாவி வாங்க ரகு உள்ளே செல்ல, அங்கே நந்தா வேறு வகுப்பெடுத்தான் ரகுவிற்கு.
“இப்படி தான் அன்னைக்கும் சத்தமா பேசி வச்சுட்டு வந்தியா? ஏன் டா உனக்கு இவ்வளவு கோபம் வருது?” நந்தா கேட்க,
“மாமா! ஸ்டார்ட் ஆகாத வண்டியை போட்டு படுத்தினா ஸ்டார்ட் ஆகிடுமா? இதுல ஆட்டோல போறியானு கேட்டதுக்கு என்னை தனியா அனுப்புறியான்ற மாதிரி லுக்கு வேற! தெரிஞ்சு பன்றாளா தெரியாம பன்றாளானு காண்டாகுது.. நான் பைக்ல வந்தேன்னு சொன்னா அதுக்கும் வேற மாதிரி தான் பார்த்து வைப்பா.. அதான் கார் கீ கேட்டேன்!” என்றவன் கைகளில் சாவியை கொடுத்த நந்தாவிற்கு ரகு புலம்பலில் சிரிப்பு வர,
“அட போங்க மாமா! உங்களால தான் இப்படி புலம்புறேன்.. கொஞ்சமாவது லவ்வு தெரியட்டும்னு சொன்னிங்க.. இப்ப பார்த்தீங்க இல்ல?” என்றவன்,
“இவளை என்ன பண்றது? அதுவும் உருப்படியா ஒரு ரீசன் கூட சொல்ல தெரியல.. எதுக்கு பயந்துக்கணும்னும் தெரியல!” என சொல்லி தலையை ஆட்ட,
“இவ்வளவு புலம்பாத டா.. சிரிப்பு வருது.. கஷ்டப்பட்டா தான் இஷ்டப்பட்ட வாழ்க்கை நிலைக்கும்.. கிளம்பு!” என்று சொல்லி அனுப்பி வைத்தான் நந்தா.
‘நேரம் பார்த்து காலை வாரி விட்டுட்ட இல்ல.. இரு உனக்கு சாப்பாடு கம்மியா தர்றேன்..!’ என வண்டியிடம் கூறிய ஆரா,
‘ஆரா! கீப் காம்.. அவங்க என்ன பேசினாலும் பதில் பேச கூடாது.. அந்த பக்கம் திரும்பிடவே கூடாது.. உனக்கு புண்ணியமா போகும் தயவு செஞ்சு எதுவும் பேசாத!’ என தனக்கு தானே பேசிக் கொண்டு நின்றாள் ஆரா.
காரை எடுத்துக் கொண்டு ரகு வரவும், ஆராத்யா பின்னால் கதவை திறக்க போக, சட்டென கார் கதவுகளை லாக் செய்தவன்,
“நான் டிரைவர் இல்ல..” என்றது புரியவே சில நேரம் எடுத்தது ஆராத்யாவிற்கு.
ஒருவழியாய் தன்னை சமாளித்துக் கொண்டு முன்னே வந்து அமரவும் ரகு கிளம்ப, பாதி தூரம் கிட்டத்தட்ட அரைமணி நேரம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை அவர்களிடம்.
மனம் அமைதி இல்லாமல் சுற்ற, சுற்றி இருந்த அமைதியும் சேர்ந்து நிம்மதியை தான் குலைத்தது ரகுவிற்கு. பாடல் கேட்கும் மனநிலையும் இல்லை.. அமைதியாய் ரகு வர ஆராத்யாவிற்கே என்னவோ போல இருந்தது அவனின் அமைதி.
முதல் முதலில் காரில் அவன் பேசியதை நியாபத்திற்கு கொண்டு வர, அது கைகளை கீறிக் கொண்டதற்கு அவன் கூறிய அறிவுரை என்றும் நியாபகம் வந்தது.
அவன் சொற்களை அந்நேரம் மறந்திருந்தாள். நான் தேடி வர மாட்டேன் என்றதோடு நீயாக வருவாய் என்றது நியாபக அடுக்கின் கீழே சென்றிருக்க, அவனை திரும்பிப் பார்த்தாள்.
ரகு கவனித்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.
“இந்த பிரச்சனை எல்லாம் இதோட விட்டுடலாம் சார்.. உங்க வீட்டுக்கு புதுசா ஒரு தேவதை வந்திருக்காங்க.. மத்ததெல்லாம் தூக்கி போடுங்க.. இனி உங்களுக்கு எல்லாம் நல்லதா அமையும் வாழ்த்துக்கள் சார் தாய்மாமாவானதுக்கு”
தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்டு ரகுவிடம் மாற்றம் இருக்கும் என நினைத்து ஆராத்யா சிறிதாய் புன்னகை செய்து சொல்ல, அவள்புறம் திரும்பி பார்த்தான்.
“என்ன பிரச்சனையை விடணும்?” என்று ரகு புரியாமல் கேட்பதை போல கேட்க, விழித்தாள் ஆராத்யா.
“நான் உனக்கு ப்ரொபோஸ் பண்ணினது பிரச்சனையா? வேணாம் ஆரா! இன்னும் பேச வைக்காத! எதை தூக்கி போட சொல்ற? நான் அன்னைக்கே சொன்னது தான்.. உனக்கு பிடிக்கலையா ஓகே ஒதுங்கிட்டேன்.. உன்கிட்ட பேசல தானே? நான் எதுவும் உன்னை டிஸ்டர்ப் பண்ணல தானே? ஓகே கடவுள் எனக்கு விதிச்சது இது தான்.. இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் எல்லாம் இல்லைனு நானே என்னை தேத்தி என் வழில போய்ட்டு இருக்கேன்.. உன்கிட்ட கேட்டேனா தாய்மாமாக்கு வாழ்த்து சொல்லுன்னு..” என்றவன் பேச்சில் வாயடைத்து போனாள் ஆராத்யா.
“என்னை சீண்டி பாக்க வேண்டாம் ஆரா! இப்பவும் உன்னை தனியா அனுப்ப மனசில்லாம தான் கூட வர்றேன்.. என்னை என்ன நினச்ச நீ? நீ இல்லைனா இன்னொருத்தினு போய்டுவேன்னு நினைச்சியா? ஹௌ டேர்?” என்றவன் சத்தமாய் பேசவில்லை, கோபம் இருப்பது போல முகம் இல்லை, ஆனால் வார்த்தைகள் மட்டும் கடுமையாய் வர, விழி விரிந்து கொண்டது ஆராத்யாவிற்கு.
காரை நிறுத்தாமல் செலுத்திக் கொண்டு இருந்தவன் பேச்சுக்கள் மட்டும் சரளமாய் வந்து விழ, பார்வைகள் கூட இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அவளிடம் வந்து சென்றிருக்கும்.
“உனக்கு நான் யாரோ தான்.. ஓகே அப்படியே இருந்துக்க.. ஆனா உன் வேஸ்ட் அட்வைஸ் எல்லாம் நான் சுமக்க முடியாது.. நான் உன்னை கம்பெல் பண்ணல.. அப்புறம் எப்படி நீ சொல்லலாம் மத்ததை தூக்கி போடுனு? திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங்.. மைண்ட் இட்!” என்றவன் பேசி முடித்து வண்டியை நிறுத்தவும் ஆராத்யா திரும்பிப் பார்க்க வீடு வந்திருந்தது.
‘நாலு வார்த்தை பேசினேன்னு இவ்வளவு பேச்சா?’ நினைத்து அவள் மெதுவாய் இறங்க,
“லுக் ஆரா! நீயா என்கிட்ட வர்ற வரை நான் பேச மாட்டேன்னு சொன்னேன் தான? இப்பவும் நானா பேசல.. முதல்ல கால் பண்ணி பேசினது நீ.. அதையும் நியாபகம் வச்சுக்கோ..” என்றவன்,
“நீ வாழ்க்கையோட ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துட்டு பேசிட்டு இருக்க.. உன் அம்மா அப்பா சந்தோசமா வாழ்ந்தவங்க தான? இப்ப ஹாஸ்பிடல்ல என் மாமாவை பார்த்த தான? என் அக்காவும் அவங்களுக்கு இப்ப பிறந்திருக்க குழந்தையும் தான் அவரோட உலகம்.. இதை நீ சந்தேகப்படுவியா? எப்போ மாறுவாரோனு நீ நினைப்பியா?” என்றதும் அவள் திடுக்கிட்டு பார்க்க,
“ஆனா நான் உனக்கு பெட் கட்றேன்! என் மாமா சாகுற வரை என் அக்காவை இதே மாதிரி பார்த்துப்பார்.. சந்தேகம்னா கூட இருந்து தெரிஞ்சிக்கோ!” என்றவன் பேச்சில் இவள் வேதனையாய் பார்க்க,
“இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க நான் உதாரணம் சொல்ல.. ஆனா எனக்கு அது தேவை இல்ல.. எனக்கு ஆரானா இஷ்டம்.. அது புரிஞ்சி நீயா வந்தா மட்டும் எனக்கு போதும்.. இல்லைனா…” என்று சிறு இடைவெளி விட்டவன், “போடி!” என்று கூறி இப்பொழுதும் வேகமாய் வீட்டினுள் காரை செலுத்திவிட,
