Skip to content
Post Views: 1,210
அத்தியாயம் 30
அத்தனை எளிமையாய் நடந்தேறி இருந்தது ரகுராம் ஆராத்யா பூச்சூடும் படலம். அதை நிச்சயமாகவே மாற்றி அமைத்துவிட்டான் ஒற்றை செயலில் ரகு.
Advertisement
கேலி, கிண்டல், விளையாட்டு என புன்னகை வாடா முகமாய் இரு குடும்பத்தினர் மட்டும்.
ரகு அருகே ஆராத்யாவை நிற்க சொல்லவும் அவள் தயங்க, எழுந்து வந்து அவனே சென்று அவளருகில் நின்று கொள்ள, தர்ஷினி, கல்பனா, ஸ்ருதியோடு அகிலனும் ஹோ’வெனும் சத்தத்தில் சேர்ந்து கொண்டான்.
Advertisement
Advertisement
“இது எப்ப டா வாங்கின? எங்களுக்கெல்லாம் சொல்லவே இல்ல?” தர்ஷினி மின்னும் தங்க மோதிரத்தை ரகு கையில் எடுக்கவும் கேட்க,
“அதானே? நார் இதெல்லாம் ஒவர் தான்.. ஆரா அவ்வளவு ஸ்பெஷலா?” கல்பனாவும் கேட்கவும்,
Advertisement
“இப்ப வாங்கி இருந்தா சொல்லி இருப்பான்.. அதை வாங்கி வருஷம் ரெண்டாச்சு” என்று மகேஸ்வரி சொல்ல, ரகு அன்னையைப் பார்த்து புன்னகைத்தான்.
“மம்மி! உங்களுக்கு எப்படி தெரியும்?” ஆச்சர்யமாய் தர்ஷினி கேட்க,
“எனக்கு நேத்து தான் சொன்னான்.. ஆராக்கு நான் இதை நாளைக்கு போட்டு விடலாமானு.. ஆனாலும் எப்படி இவனை இத்தனை வருஷம் கவனிக்காம விட்டேனு தெரியலயேனு இருக்கு.. எம்புட்டு கவலை தெரியுமா இவனை நினச்சு.. கல்யாணம் எல்லாம் இவன் பண்ணிக்க மாட்டானோன்னு எல்லாம் நினைச்சிருக்கேன்!” என்று ரகு புகழ் பாட,
“ம்மா! போதும்!” என நிறுத்தி இருந்தான் ரகுவே. இவ்வளவும் பேச்சு நடக்க, அந்த மோதிரம் பற்றி அவன் அன்னை கூறியதில் இருந்து ரகுவைப் பார்ப்பதும் திரும்புவதுமாய் இருந்தாள் ஆராத்யா.
“போட்டு விடு டா.. வச்சுட்டே நிக்குற!” குழந்தையை கையில் வைத்திருந்த அகிலன் சொல்ல, கைகளை அவள் புறமாய் நீட்டினான் ரகு.
குடு என்பதை போல அவன் கண்ணசைக்க, கலக்கம், தவிப்பு, ஏன பார்த்தவளுக்கு உடனே நீட்டிட முடியவில்லை.
தான் பதிலுக்கு எதுவும் செய்யாமல் எப்படி அவனிடம் மட்டும் வாங்கிக் கொள்ள முடியும் என ஆரா தயங்கி நிற்க,
“அம்மாடி மருமகளே! என்ன யோசிக்குற? கையை குடு!” என்று எழுந்து வந்து மகேஸ்வரி ஆராத்யா அருகில் நிற்க,
“ஆரா!” என்றவன் கண்களை மூடி திறந்து கையசைத்து மீண்டுமாய் அவள் கைகளை நீட்ட சொல்லி கேட்க, நடுங்கும் கரங்களை மெதுவாய் அவன்புறம் நீட்டியவளுக்கு யாரிடம் கேட்டிட என்று தெரியவில்லை.
‘முன்பே சொல்லி இருந்தால் தானும் ஒன்று அவனுக்கென வாங்கி இருக்கலாமே!’ என்று மனம் முழுதும் பிசைய, நடுங்கும் விரல்களைப் பற்றியவன்,
“சில் ஆரா!” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படிக்கு சொல்லி ஐவிரல்களைப் பற்றி மெதுவாய் மிக மெதுவாய் மோதிரத்தை அதனிடத்தில் சேர்ப்பிக்க, பார்வை முழுதும் அதன் மீது இருந்தாலும் அதன் அமைப்பு அந்நேரம் கண்களுக்கு தெரியவில்லை அவளுக்கு.
“அதெப்படி டா கரெக்ட்டா இருக்கு? எங்கேயோ மிஸ் ஆகுதே!” அகிலன் கேட்க,
“நீங்க வேற! அவரெல்லாம் ஆரானு வந்துட்டா அம்புட்டு பேருக்கும் அல்வா குடுத்து அவளை தூக்கிட்டு போய்டுவாரு.. நாங்க கொஞ்ச நாளுக்கு முன்னாடியே தெரிஞ்சிகிட்டோம்.. நீங்க லேட்டு!” என்றாள் கல்பனா.பக்கத்தில் இருந்து வீடியோ காலில் கணவனுக்கு நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தாள் தர்ஷினி.
“அவன் குடுத்தா மட்டும் போதுமா?” என்ற மகேஸ்வரி வார்த்தைகளில்,
“இதோ கேட்டுவிட்டாரே! தன்னிடம் எதுவும் இல்லையே!” என்று நினைக்கும் முன் கண்ணீர் வரப் பார்க்க,
“இந்தா ஆராம்மா! இதை அவனுக்கு நீ போட்டு விடு!” என அவள் கைகளில் அதே போலோரு மோதிரத்தை அவரே நீட்ட, கண்ணங்களை தொட்டுவிட்டது கண்ணீர்.
“அத்தை!” என்ற சொல்லோடு மகேஸ்வரியை ஆராத்யா கட்டிக் கொள்ள,
“ஆரம்பிச்சுட்டா!” தர்ஷினி சொல்லி,
“அவன் ரொம்ப நாளாவே ஆரா வேற ரகு வேற இல்லனு புலம்பிகிட்டு தான் சுத்துறான்.. இதெல்லாம் அவனுக்கு ரொம்ப சாதாரணம்!” என்றும் கூற,
“ஜஸ்ட்டு மிஸ்ஸு! அந்த மோதிரத்தை நீங்களே ஆராகிட்ட குடுத்துருந்தா உங்க அம்மாக்கு கிடைச்சது உங்களுக்கு கிடைச்சிருக்கும்னு தானே பாக்குறீங்க நார்?” என்றாள் கல்பனா.
“அண்ணி!” என்றவன் நெற்றியை விரல்களால் நீவி, புன்னகைக்க, அவனின் வெட்கத்தில், வடிந்த நீரோடு அவனைப் பார்த்து புன்னகைத்தவளை கண் சிமிட்டிப் பார்த்து தானே அவள்முன் விரல்களை நீட்டிட,
“என்ன ஒரு அவசரம்! போட்டு விட்டுடுமா.. உன் கையை கடிச்சு வச்சுடாம!” என்றான் அகிலன்.
மிக பொறுமையாய் அவன் கைகளைப் பற்றியவள் அழகாய் புன்னகைத்து அவன் முகத்தையும் விரல்களையும் பார்த்தபடி போட்டு முடிக்க,
“நிச்சயம் அப்பவே இதெல்லாம் செஞ்சிருக்கலாம்!” என்றான் அகிலன்.
“இன்னுமா உங்களுக்கு புரியல.. உங்க அம்மாவும் தம்பியும் பிளான் பண்ணி இன்னைக்கே சிம்பிளா நிச்சயத்தை முடிச்சிட்டாங்க.. நெக்ஸ்ட்டு ஸ்ட்ராயிட் மேரேஜ் தான்.. இல்ல த்த?” என்ற கல்பனாவிற்கு,
“கல்யாணத்தை நல்லபடியா கிராண்டா பண்ணிடலாம் அகி.. இப்ப இவங்க சந்தோசம் முக்கியமே! நேத்து என்கிட்ட ரகு பேசும் போது எனக்கும் சரினு தோணுச்சு.. உங்க எல்லாரோட சந்தோசம் தானே எனக்கும் முக்கியம்?” என்று முடித்துக் கொண்டார் மகேஸ்வரி.
“ஆரா!” என்று அருகில் வந்த ஸ்ருதியை அணைத்துக் கொண்டாள் ஆராத்யா.
“இதே மாதிரி எப்பவும் சந்தோசமா இரு.. நாங்க நிம்மதியா கிளம்புவோம்..” என்ற ஸ்ருதி,
“ஆராக்கு நீங்க எல்லாம் உறவா கிடைச்சதுல எனக்கு ரொம்ப சந்தோசம் ஆண்ட்டி! ரெண்டு வருஷத்துக்கும் மேல, அவ அம்மா அப்பா அவளை விட்டு போனதுல இருந்து அவ ரொம்ப கஷ்டப்பட்டுட்டா.. என்னவோ இப்ப நினச்சா இனி எல்லாம் அவளுக்கு கடவுள் நல்லது தான் பண்ணுவார்னு நம்பிக்கை வருது.. நீங்க தான் பார்த்துக்கணும்!” என மகேஸ்வரியிடம் ரகு அருகில் இருக்கும் பொழுதே கூற, மகேஸ்வரியும் ஸ்ருதிக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
“எதாவது கேட்கணும்னா கேளு.. ஏன் இப்படி பாக்குற..” ரகு அருகில் ஆராத்யா நிற்க, புகைப்படம் எடுப்பதாய் சொல்லி அகிலன் அங்கேயும் இங்கேயும் நிற்க வைக்க, ஆராத்யா அதை எல்லாம் கவனத்தில் இல்லாமல் அடிக்கடி ரகு முகம் பார்ப்பதும் திரும்புவதுமாய் இருக்க, சுற்றி அனைவரும் இருக்கவே அவளுக்கு மட்டும் கேட்கும்படிக்கு மெதுவாய் கேட்டான் ரகு.
“ம்ம் கேட்கணும்.. ஆனா இப்ப கேட்கலாமா தெரிலயே!” என்று அவன் முகம் பார்த்து தலை சாய்த்து அவள் சொல்ல, “உஃப்!” என மூச்சை வெளிவிட்டவனுக்கு மூச்சு முட்டிப் போனது அவளது பாவனைகளில்.
தேன் வண்ண புடவை பாந்தமாய் அவளை தழுவி இருக்க, ஸ்ருதி ஆராத்யாவை அத்தனை பொருத்தமான நகை, சிகை அலங்காரத்தில் செதுக்கி தான் வைத்திருந்தாள்.
இவர்களின் பேச்சு கேட்காது எனினும் கவனித்தும் கவனிக்காததை போல மற்றவர்கள் தங்கள் செயலில் இருக்க,
“ஆரா! பொறுமையை ரொம்பவே சோதிக்குற!” என்றான் அவளைப் பார்த்தும் பாராமலுமாய்.
அத்தனை அவனை அல்லாட வைத்திருந்தாள் அவள். ஏற்கனவே அவள் என்றால் பிடித்தம். அவளாய் சம்மதம் சொல்லியது பிடித்தம் என அவனுள் அவளுக்கான உலகம் மாறிக் கொண்டு இருக்க, இப்படி அருகே புதுப் பெண்ணாய் நின்று கொல்லாமல் கொல்லும் அவள் செயல்கள் யாவும் ஒரு மயக்கத்தை தான் கொடுத்தது.
“கோவமா என்ன?” அவன் பார்வையும் வார்த்தையும் வெவ்வேறாய் இருக்க, அது கூட புரியாமல் கேட்டவள் கேள்வியில்,
“சுத்தம்!” என்றவனுக்கு, அவளுக்கு என்ன சொல்லி விளக்கிட முடியும்?.
“இது கோவப்படுற நேரமா ஆரா?” என்று நேராய் அவள் முகம் பார்த்து கேட்க, அதற்க்கும் அவள் விழிக்க, மனமெல்லாம் பரபரத்தது அவளை தனக்குள் சேர்த்திட.
“ஓகே லீவ் இட்! சொல்லு என்ன கேட்கணும்!” என்றான் அவனே பொறுமையை இழுத்து பிடித்து.
“நிறைய! முதல்ல ஏன் எப்ப என்னை பிடிக்கும்?” ஆராத்யா கேட்க,
“குட் டவுட்! அண்ட் குட் டைமிங்!” என்றவனின் மிதமான முறைப்பில் அவள் அவனையே பார்க்க,
“என்னவாம்?” என்றான் புன்னகைத்து.
அந்த புன்னகை மட்டும் அவளுள் என்னவோ செய்தது. இப்போது என்று இல்லாமல் அவன் புன்னகைக்கும் பொழுதுகள் எல்லாம் அவளுக்கும் ஒரு புன்னகை எழ, இப்பொழுதுமே அவள் இதழ்கள் அதனை வெளிப்படுத்தியது.
“நிக்கட்டுமா… போகட்டுமா?..” என்று கேட்ட பாடலில் திரும்பாமலே யார் என்று கண்டு கொண்டான் ரகு.
“தர்ஷ்! வாங்க நாம போட்டோ எடுத்துக்கலாம்.. அக்கா நீங்களும் வாங்க!” ரகுவிடம் கேட்டது எல்லாம் தர்ஷினி அருகில் வரவும் மற்றவர்களைப் பார்த்ததும் பின்னுக்கு போக, ஆராத்யா அவர்களுடன் சகஜமாக,
“கஷ்டம் தான் டா உன் பாடு!” என்று தர்ஷினியே சொல்லும்படி ஆனது ரகு நிலைமை.
பன்னிரண்டு மணி வரையுமே அவர்களுடன் நேரம் கழிய, திருமண நாளை குறிக்க மாலை அகிலன், மகேஸ்வரி, அம்பிகா செல்வதாக முடிவு செய்து, மதிய விருந்தும் அப்பொழுதே முடித்துக் கொண்டு ரகுவும் அவன் குடும்பத்தினரும் விடைபெற்றனர்.
“நான் ஆபீஸ் போறேன்!” என்று ரகுவிற்கு செய்தி அனுப்பி வைத்துவிட்டே கிளம்பினாள் மதியம் ஆராத்யா.
எட்டு மணிக்கு ஸ்ருதி குடும்பத்தினருக்கு விமானம். அவர்களுமே வெளியே செல்ல இருக்க, தனியாய் அதுவும் இவ்வளவு நேரம் இருந்த மனநிலைக்கு தன்னால் தனியாய் இருக்க முடியாது என்று தோன்ற ரகுவிடம் கூறியது போலவே அலுவலகம் கிளம்பிவிட்டாள்.
‘போகாதன்னு சொன்னாலும் கேட்க மாட்ட! போய் நீயே ஷாக் ஆகிக்கோ’ நினைத்துக் கொண்டு ரகு கள்ளப் புன்னகையோடு அவளுக்கு பதில் அனுப்பவில்லை.
ஆராத்யா அலுவலகம் வந்து சேரும் பொழுது மணி ஒன்று முப்பது. இரண்டு மணி வரை சாப்பிடும் நேரம் என்பதால் தன் இடத்தில் சென்று அமர்ந்தவள் கார்த்திகா மற்றும் நண்பர்கள் வரவுக்காக காத்திருந்தாள்.
எப்படி பேச என்ற படபடப்பு ஒரு புறம் இன்று நிச்சயம் இவர்களிடம் கூறிவிட வேண்டும் எனும் சிந்தனை ஒரு புறம் என அமர்ந்திருந்தாலும் திருமண சந்தோஷம் அகத்தோடு முகத்தினையும் முழுதாய் நிறைத்திருந்தது.
“ஆரா வந்துட்டியா?” என்று ஓடி வந்த கார்த்திகா ஆராத்யாவை சரியாய் கவனிக்கவில்லை. அவள் கேள்விபட்ட செய்தி அப்படி இருக்க, காலையே ஆராத்யாவும் மதியம் வந்துவிடுவதாய் கூறி இருந்ததால் ஆராவிடம் கூறும் அவசரத்தில் இருந்தாள் கார்த்திகா.
“ஹாய் ஆரா!” என்று வந்த நண்பர்களும் கூட, தனது எம்டியுடைய ஹாட் நியூஸ் என்கின்ற புது செய்தியை அவளிடம் பகிர காத்திருக்க, யாருக்குமே ஆரா என்ற பெண்ணை அந்த நேரம் உற்று நோக்க நேரமில்லை.
“ஹே நான் தான் சொல்லுவேன்.. இல்ல இல்ல.. நான் தான் முதல்ல சொல்லுவேன்..” என ஆளாளுக்கு அடித்துக் கொள்ள, ஒன்றும் புரியாமல் விழித்தாள் ஆராத்யா.
“ச்சீ சொல்லி தொலை!” என ஆண்கள் கார்த்திகாவிற்கு விட்டுக் கொடுக்க,
“ஆரா! நான் சார் அப்படி இப்படினு சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்காத.. நான் தான் தப்பா நினச்சுட்டேன் போல..” என்ற கார்த்திகாவைப் பார்த்து ஆரா சிறு புன்னகை கொடுக்க,
“உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னைக்கு நம்ம ராம் சார்க்கு எங்கேஜ்மென்ட்டாம்..” என்றதும் ஆராத்யா விழி விரிய பார்க்க,
“ஷாக் ஆகிட்டியா? எங்களுக்கும் ஷாக் தான்.. இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் டிஎல்கிட்ட ராம் சாரே சொல்லி இருக்காங்க.. இன்னொன்னு தெரியுமா? இன்னும் ரெண்டு மாசத்துல மேரேஜாம்.. நமக்கெல்லாம் அடுத்த மாசம் போனஸ் கூட இருக்காம்!” என்றவள்,
“ரொம்ப சீக்ரெட்டா சிம்பிளா நடந்திருக்கு!” அக்கம் பக்கம் பார்த்து கண்களை உருட்டி ரகசியம் போல
கார்த்திகா கூறியதில், இத்தனை நாட்கள் கண்டிராத மனம் நிறைந்த புன்னகை ஆராத்யாவிடம்.
கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு வாய்விட்டு சிரித்திருந்தாள் ஆராத்யா.
“என்ன டா இப்படி சிரிக்குறா?” ஆராத்யா புன்னகை அதிகமாகிக் கொண்டே இருக்க, பார்த்த நண்பர்களுக்கு தான் என்னவோ என்பதை போல புரியாமல் விழித்து நின்றனர்.
சிரித்து சிரித்து கண்ணீர் வர, நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு ராமின் வேலை என புரிந்தாலும் அத்தனை ரகசியமாய் கார்த்திகா கூறிய செய்தி இன்னுமே புன்னகைக்க தான் தூண்டியது.
“வாய மூடு டி டிஎல் வர்றாரு!” என்று கார்த்திகா சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுக்குள் கொண்டு வந்து விரிந்த இதழ்களுடன் ஆராத்யா தன் கணினி பக்கமாய் திரும்பிக் கொள்ள, விஷால் விக்ரம், பிரேம் அருகே சென்றான்.
“டேய்!” என்று அழைத்த விஷால் முகம் பேயறைந்தது போல இருக்க, ஏற்கனவே ஆராத்யா சிரித்ததின் அர்த்தம் புரியாமல் இருந்த நண்பர்கள் விஷாலைப் பார்த்துவிட்டு புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு எழுந்தனர்.
எதுவும் பேசாமல் விஷால் மொபைலை தூக்கிக் காட்ட, விழிகள் தெறித்து வெளியே விழும் அளவுக்கு அந்த புகைப்படத்தை பார்த்தனர் இருவரும்.
“உங்களுக்கு தெரியுமா டா முன்னாடியே!” குரலை தழைத்து விஷால் மெதுவாய் கேட்க, இன்னும் அதிர்ச்சி மீளாமல் இருந்த இருவரும் இல்லை என்பதை போல தலையை மட்டும் ஆட்டினர்.
எதிரெதிராய் நின்று இருவரின் பார்வைகளும் தழுவி இருக்க, மென்னகையோடு நின்ற ரகு விரல்களைப் பற்றி மோதிரமிடும் ஆராத்யா முகத்தில் கீற்றாய் அளவான புன்னகை மனதால்.
புகைப்படத்தை வாட்சப் ஸ்டேட்டஸ் மூலம் கீழே இதயங்கள் இரண்டு மட்டும் ஸ்டிக்கரில் வைத்து ஐந்து நிமிடங்களுக்கு முன் ரகு தனது அலைபேசியில் பதிவேற்றி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சியா ஆச்சர்யமா என தெரியாத வகையில் பார்த்த விஷால் கொண்டு வந்து ஆராத்யா நண்பர்களிடம் காட்டி இதோ அவர்களும் பேய் பிடித்தவர்களைப் போல நிற்க, இன்னும் கார்த்திகாவிற்கு தெரிந்திருக்கவில்லை.
“என்ன டா நடக்குது?” என்று சத்தமாய் கேட்டுவிட்டு ஆராத்யாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விஷால் ஆராத்யாவிடம் சென்றவன்,
“வாழ்த்துக்கள் ஆராத்யா!” என்று சொல்ல, படபடவென்று வந்துவிட்டது ஆராத்யாவிற்கு.
சொல்லிய விஷால் சொல்லிய வேகத்தில் அவனிடத்திற்கும் சென்றுவிட, உணர்வுக்கு வரவே சில நேரம் எடுத்த நண்பர்கள் இருவரும்,
“சார் சார்! அந்த போட்டோ.. கொஞ்சம் ஸ்க்ரீன்ஷாட்.. ப்ளீஸ் சார்!” என்று விஷாலிடம் கெஞ்ச,
“எனக்கு பிரச்சனை வர்ற மாதிரி எதுவும் பண்ணிடாதீங்க டா!” என்று சொல்லியே இருவரில் ஒருவருக்கு அனுப்பி வைத்தான் விஷால்.
“அவர் ஏன் டி உனக்கு வாழ்த்து சொல்றாரு?” என்று கார்த்திகா கேட்டுக் கொண்டிருக்க,
“கார்த்தி!” என்று வந்து விக்ரம், பிரேம் இருவரும் அவள் முன் நின்றனர்.
“டிஎல் இங்க தான் டா இருக்காரு.. பிரேக்ல பேசலாம் போங்க போங்க!” என விரட்டினாள் விஷயம் தெரியாமல் கார்த்திகா.
“அடியேய்!” என்று விக்ரம் அழைக்க,
“டேய்! கொழுப்பா?” என்று சத்தமாய் கார்த்திகா கேட்க,
ஆராத்யாவை பார்த்துவிட்டு மொபைலைப் பார்ப்பதும் பின் கார்த்திகாவைப் பார்ப்பதும் என இருவரும் பேசாமல் நிற்க,
“என்னாச்சு?” என்றாள் ஆராத்யாவும் எச்சிலை விழுங்கியபடி..
விக்ரம் கையில் இருந்த மொபைலை பிடுங்கி ஸ்க்ரீன்ஷாட் புகைப்படத்தை கார்த்திகாவிடம் பிரேம் காட்டிட, பார்த்தவள் இதயம் ஒரு நொடி நின்றுவிட்டதை போல ஆக, மொபைலை பறித்து கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தவள்,
“ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல கார்த்தி! நீ நல்லா தான் இருக்க.. பதறாத!” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு நெஞ்சை நீவி விட,
“என்ன டி பண்ற?” என்ற ஆராத்யாவிற்கு குரலே வெளிவராமல் போக,
கார்த்திகா தன் இதயத்தை நீவியபடி எழுந்து நண்பர்களைப் பார்க்க, அவர்களும் தலையாட்ட, எழுந்த ஆராத்யா கார்த்திகாவின் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கி பார்க்க, மூவரின் பார்வையும் இப்பொழுது தெளிவாய் ஆராத்யாவிடம்.
குர்தியில் வந்திருந்தவளின் கண்களில் கொஞ்சம் அதிகமாய் மை, கை நிறைந்த வளையல், முழங்கை வரை ஸ்ருதி இட்ட மருதாணி, வட்டமாய் கருப்பு நிற சிறிய பொட்டு இருக்கும் நெற்றியில் இன்று பெரிய கோபுர வடிவ டிசைனார் பொட்டு.
இவற்றை எல்லாம் விட, ஆராத்யா முகத்தில் தெரிந்த அந்த தேஜஸ்! பொலிவுடன் சிறிது நேரத்திற்கு முன் சிரித்ததினால் சிவந்திருந்த கன்னம் இப்பொழுது அந்த புகைப்படத்தைப் பார்த்து விரிந்த கண்களுடன் ஆராத்யா நண்பர்களை பார்த்த விதம் என, ஆராத்யா வேறாய் தெரிய,
மூவரும் பார்த்தது பார்த்தபடி நிற்க, தயக்கம் ஒருபுறம் இருந்தாலும் நண்பர்கள் மனதில் இப்பொழுது எண்ணம் என்னவாக இருக்கும் என்று தெரியாமல் பயந்து தான் பார்த்தாள் அவள்.
“நான் சொன்னேனே! நம்பினீங்களா டா பாவிங்களா?” கார்த்திகா பிரேம் விக்ரமிடம் கேட்க,
“நீ ஆராத்யா இடிக்குறானு சொல்லையே கார்த்தி!” என பாவம் போல நின்றனர் நண்பர்களும்.
“கார்த்தி!” என்று ஆராத்யா அழைத்து மூவரும் திரும்பவும்,
“நான் சொல்றேன்.. ப்ளீஸ்.. அதை பேச தான் இன்னைக்கு வந்தேனே.. அதுக்குள்ள..” என்றவள் ரகுவை நினைத்து பல்லை கடித்துக் கொள்ள,
“எமகாதகி நீ! கூடவே இருந்தேனே டி.. ஒத்த வார்த்த சொல்லி இருப்பியா..” என்ற கார்த்திகாவிற்கு இன்னும் அதிர்ச்சி ஓயவில்லை.
“ஆரா! ஏன் எங்ககிட்ட சொல்லல.. நாங்க என்ன பண்ண போறோம்?” விக்ரம் கூர்மையாய் பார்த்து, ‘மறைக்கும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம்.. மறைக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்பதை போல நின்று கேட்க,
“டேய்! இனி நம்ம முதலாளியம்மா டா அவங்க.. இப்படிலாம் பொசுக்குன்னு கோவப்படக் கூடாது!” என்று பிரேம் சொல்ல, கண்கள் கலங்கி விட்டது ஆராத்யாவிற்கு.
“பிரேம்! அப்படிலாம் பேசாத டா.. இது நானே எதிர்பார்க்கல.. நேத்து தான் முடிவானது.. ப்ளீஸ் நான் சொல்றேன் கேளுங்களேன்!” என்றவளுக்கு அழுகை வர,
“முதலாளியம்மான்னாலும் ஆரா முதல்ல நம்ம பிரண்ட்.. அப்புறம் தான் ஓனரெல்லாம்.. அவளை ஏன் டா அழ வைக்குறிங்க?” என்ற கார்த்திகா,
“லூசா டி நீ? ஆமா எனக்கு தான் கல்யாணம்னு கெத்தா சொல்றதை விட்டுட்டு இவனுங்க சொன்னதுக்கெல்லாம் அழுதுட்டு!” என்று ஆராவிடமும் சொல்ல, அது அத்தனை பெரிய ஆறுதல் ஆராத்யாவிற்கு.
“ராம் சார் மேல எனக்கு டவுட்னு அப்பவே சொன்னேன்.. யாராச்சும் கேட்டீங்களா? கடைசில கரெக்ட் பண்ணிட்டார் போல!” என்று கிண்டலாய் சொல்லி ஆராவை உற்றுப் பார்க்க, முகம் சிவந்தாள் அவள்.
“ஓகே ஓகே! விஷால் சார் பாக்குறாங்க.. ஈவ்னிங் ஆரா ட்ரீட்டு.. கூடவே கொஞ்சம் உண்மை கதை.. இப்ப குரூப்பை கலைச்சு ஓடுங்க..” என்று கார்த்திகாவே சொல்லி அவரவர் இடத்திற்கு திரும்ப,
“கார்த்தி! நிஜமா உனக்கு என் மேல கோபம் இல்லையே?” என்றாள் ஆராத்யா.
“கோபம் இல்ல.. ஷாக் இன்னும் குறையல.. ஆனா ரெண்டு வருஷமா உன்னோட இருக்கேன்.. உன்னை தெரியாதா டி.. என்னவோ சிட்டுவேஷன்.. சார் நல்ல கேரக்டர் தான்.. பேமிலி கூட ஜாலியா தான் இருந்தாங்க.. ஆனாலும் சட்டுனு போட்டோ பாத்ததும் எப்புட்றா அப்டினு இருக்கு.. ஆனாலும் நம்ப முடியுது.. அன்னைக்கு நான் தான் பார்த்தேனே தாங்கு தாங்குன்னுல தாங்குனாரு!” என்றவள் பேச்சில் ஆராத்யா குனிந்து கொள்ள,
“இப்டியே எப்பவும் இரு.. ஓகே!” என்று கூறவும் மனதை அழுத்திய பாரம் கொஞ்சம் கலைந்து இலகுவாகி இருந்தது.
அடுத்து நான்கு மணி அளவில் எப்பொழுதும் போல வேக நடையில் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு வந்த ரகு கள்ளப் புன்னகையோடு ஒரப் பார்வையுமாய் ஆராத்யாவைப் பார்த்தபடி தன் அறைக்கு செல்ல, சில நொடிகள் தான் என்றாலும் ஆராத்யா நண்பர்களோடு விஷாலின் பார்வையும் ரகுவையும் ஆராவையும் கவனிக்க தவறவில்லை.
உள்ளே சென்றதும் விஷாலை அழைக்க, வாழ்த்துக்கள் சொல்லி தான் பேசவே ஆரம்பித்தான் விஷால். சிறு புன்னகை கொடுத்த ரகு,
ஐந்து மணிக்கு மீட்டிங் என்றும் சொல்லி அவனை அனுப்பிவிட்டு சில வேலைகளை செய்தவன் என்ன பேச வேண்டும் என்றும் முடிவெடுத்துக் கொண்டான்.
கூறியது போலவே அனைவரும் ஐந்து மணிக்கு கூடிவிட, மிக தாமதமாய் ‘நீ இன்னைக்கு வந்திருக்கவே கூடாது ஆரா!’ என தன்னையே திட்டிக் கொண்டு எப்படி சொல்வானோ என எதிர்பார்ப்பும் தவிப்புமாய் நின்றிருந்தாள் ஆராத்யா.
“கை ஏன் நடுங்குது?” கேலி செய்து கார்த்திகா கேட்க,
“சும்மா இரு டி!” என்றவளுக்கு நிஜமாய் டென்ஷன் ஏறிக் கொண்டிருக்க அதிகமாய் சீண்டவில்லை தோழி.
“குட் ஈவினிங் கைஸ்!” என்றபடி வந்து தன்னிடத்தில் ரகு அமர,
“எப்ப சார் மேரேஜ்?” என விஷாலே ஆரம்பித்து வைத்தான்.
“பொறு மேன்! நான் தானே சொல்லணும்?” என்ற ரகு முகத்தில் புன்னகை கொட்டிக் கிடக்க, ஆராத்யாவிற்கு அதில் நிலைத்தது கண்கள்.
“சொன்ன மாதிரியே ப்ராஜெக்ட் அனோன்ஸ்மென்ட் தான் இது!” என்று அவள் முணுமுணுக்கவும்,
“சோ.. ப்ளீஸ்!” என்று ஆராத்யாவை பார்த்த ரகு தன்னருகில் அழைக்க,
“மணப்பெண் தோழி நானும் வரவா?” என்று கேட்டு வைத்தாள் அருகில் நின்றவள்.
“மிஸ் ஆராத்யா.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. சோ இன்னும் டூ மந்த்ஸ்ல இவங்க மிஸஸ் ஆராத்யா ரகுராம்..” என்று சொல்லவும் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தாலும் கைத்தட்டி, வாழ்த்துக்கள் தெரிவிக்க,
“மேரேஜ்க்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்..” என்றவன் நிச்சயம் முடிந்ததாய் தெரிவிக்க, சிறு பேச்சு சத்தம் அந்த அறைக்குள்.
புன்னகையை ஒட்ட வைத்திருந்தாலும் ஆராத்யா விழிகளின் கலக்கம் ரகுவையும் அடைய தவறவில்லை.
“இது என்னோட விருப்பத்தை மட்டும் கொண்டு ரெண்டு வீட்டுலையும் பேசி முடிவு பண்ணின மேரேஜ்.. அண்ட் நம்ம ஆபீஸ்ல ஆராத்யாவும் இருகாங்கன்றதால தான் நான் இவ்வளவும் சொல்றது.. ஆராத்யாக்கு கூட எஸ்டேர்டே தான் தெரியும்.. சோ வேற எந்த காசிப்ம் வேண்டாம் ரைட்?” என்று கூறி புன்னகை கொடுத்தவன்,
“டேட் ஃபிக்ஸ் ஆனதும் ஐ இன்வைட் யூ ஆல்.. அண்ட் நீட் யுவர் விஷ் அண்ட் பிளெஸ்ஸிங்ஸ்..” என்று கூறி புன்னகையோடு எழுந்து நிற்க, ஆண்கள் கைகொடுத்து வாழ்த்துக்கள் கூற, பெண்கள் ஆராத்யா புறம் சூழ்ந்தனர்.
அதிகமான பேச்சுக்களுக்கு இடம் கொடுக்காத வகையில் ரகு அனைவர்க்கும் உண்மையை தெரிவித்திருக்க, ஆராத்யா பெரும் மலையென கனமாய் சுமந்த பாரம் எல்லாம் கரைந்ததை போலிருந்தது அவனின் சொல் செயல் என அனைத்திலுமாய்.
“டெக்ஸ்ட் பண்றேன்!” என்று ஆராத்யாவிடம் மெதுவாய் கூறிவிட்டு அங்கிருந்து ரகு கிளம்பி செல்ல, ஆராத்யாவிற்கு அனைவரும் வாழ்த்து கூறி அறையை விட்டு வர சில நிமிடங்கள் பிடித்தது.
“சும்மாவே ஆரா வெய்ட் பண்ணுங்கன்னு எம்டி சொல்லிட்டு இருப்பாரு.. இன்னைக்கு மட்டும் சொல்லாமலா இருப்பாரு.. நீ வெயிட் பண்ணு நாங்க கிளம்புறோம்! அந்த ட்ரீட் மட்டும் மறந்துடாத.. நிறைய சொல்ல வேண்டியது இருக்கு நீ!” என்று சொல்லி மற்றவர்கள் கிளம்ப, ரகு அழைக்காமலே அவனுக்காக காத்திருந்தாள் ஆராத்யா.
விஷால் இறுதியாய் கிளம்பவும் ரகு அழைக்காமலே அவன் அறை கதவை இவள் தட்ட,
“உள்ள வா ஆரா!” என்றான் ரகு.
“தேங்க்ஸ்!” என்றபடி முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஆராத்யா வந்து நிற்க,
“தேங்க்ஸ் மட்டும் தானா?” என்றவன் டேபிளில் சாய்ந்து கைகட்டி நின்று கொண்டான்.
“தேங்க்ஸ் மட்டும் தான்!” என்றாள் அழுத்தமாய் கூறி அவன் கேள்வி உணர்ந்து.
“நாட் பேட்!” என்றவன் குரலின் உல்லாசம் அவன் மனதை சொல்ல,
“நான் கிளம்புறேன்னு சொல்ல தான் வெய்ட் பண்ணினேன்.. பை!” என்றவள் அறியும் முன், அவள் விரல்களை பற்றி இருந்தான் ரகு.
மூச்சைடைத்து நின்றவள் அவன் புறம் திரும்பாமலே நிற்க,
“டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு.. உன்கிட்ட தானே முதல்ல சொல்லணும்.. அதனால ட் ஆபீஸ் வந்தேன்.. உன்கிட்ட சொல்லாம எப்படி எல்லாருக்கும் சொல்ல?” என்று பிடித்த விரல்களை விடாமலே அவன் சொல்ல, இவளும் அசைவேனா என நின்றிருந்தாள்.
“எப்பனு கேளு ஆரா!” என்றவன் விரல்களில் அழுத்தம் கொடுக்க,
“எப்ப?” என்றாள் அவன் சொல்லியதையே.
“இன்னும் சரியா சிக்ஸ்ட்டி டேஸ் இருக்கு..” என்றவன் நாளை சொல்ல, அவை எல்லாம் மனதிற்கு சென்றாலும் விரல்களை விட்டால் போதுமே என்று நெளிந்து கொண்டிருந்தாள்.
“ரொம்ப ஸாஃப்ட்!” என்றவன் அவள் விரலோடு உள்ளங்கையைப் பற்ற,
“ராம்! என்ன… பண்றீங்க!” என்றவள் குரல் காற்றிற்கும் கேட்டிருக்குமோ என்னவோ அவனை அடைந்திருந்தது.
“எதுவும் பண்ண மாட்டேன்!” என்றவன் சிரித்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவள் சட்டென கையை உருவிக் கொள்ள,
“ஹேய்!” என அவன் சுதாரிக்கும் முன் கதவை நோக்கி சென்றுவிட்டாள்.
“இனி சிக்ஸ்டி டேஸ்க்கு தனியா சிக்கிடாத!” என்றவன் முக பாவம் அறிந்தவள் போல அவன்பக்கம் திரும்பாமலே,
“நான் ஏர்போர்ட் போறேன்.. பால்கனில காத்து வாங்காம போய் தூங்குங்க..” என்று சொல்லி வெட்கத்தை அவனிடம் மறைத்து ஓடியும் விட்டாள் அவன் புன்னகை துரத்த.
error: Content is protected !!