Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️37

ம்மா நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கறீங்க…?  தாயிடமே கேட்டு நின்றான்.

மகனுக்கு என்ன பதில் சொல்ல… பரிதவித்து போனார் தாரணி.

ம்ம்மா உங்களுக்கு உங்க புருஷன் முக்கியம்னு தானே சகிச்சுக்கிட்டு இங்கே இருக்கீங்க…? எனக்கு நான் ஆசைப்பட்டவ முக்கியம்னு நினைக்க கூடாதா?

பதில் இருந்தால் கூற மாட்டாரா?



Advertisement

மகன் எந்த முடிவிலும் உறுதியோடு இருப்பான் என்பது பெற்று வளர்த்த தாயிற்கு தெரியாதா?

ம்ம்ம்மா நான் விலகி தான் போறேன் நீங்க வேணாம்னு ஒதுக்கிட்டு போகலை.

பேசி புரிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அமெரிக்காவில் இருந்து கிளம்பினேன். நீங்க சம்மதம் சொல்லி முழு மனசோட ஆசீர்வதிச்சு எனக்கு விவாஹம் செய்து வைப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்.

Advertisement

நீங்க மனசு மாறும் வரைக்கும் நான் காத்திருக்க முடியும். இவ வீட்டில் இவளை விட்டுடுவாங்களா?

Advertisement

சாரிம்மா நான் இங்கே இருக்கிறது சரி வராது. உடைந்து போனவன் அவன் போக்கில் பேசிக் கொண்டே செல்ல…

மொபைல் அழைப்பு அவனுக்கு.

ஹரி… பெதநானாக்கு ஹார்ட் அட்டாக்… ICU வில் இருக்கார். தகவல் சொன்னது தேவ்சரண்.

Advertisement

எ… என்ன சொல்ற தேவ்? அதிர்ந்து நின்றான்.

அவன் இதயம் நடுங்கியது. அவன் அனுமதியின்றி கண்ணில் தாரையாய் நீர் ஊற்று பொங்கியது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடியது. வேண்டாம் என்று வீம்பாக விலகி வெளிநாட்டிற்கு ஓடி விட்டால் அப்பா என்ற உறவு இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

உன் முகத்தில் முழித்தால் பாவம் என்று சொன்னவன் தான். ஆனால் இன்று அவன் அறியாமலே  அவன் உள்ளம் பதறுகிறது.

நானா…. அவன் உதடுகள் முணு முணுத்து தொண்டைக்குள் சிக்கிய வார்த்தை நெஞ்சுக்குள் உருட்டியது.

ஹரி என்னாச்சு? தாரணி பயத்துடன் மகன் முகம் பார்த்தார்.

ஒன்னுமில்லம்மா ஒரு பிரண்டுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம்… உதடு மட்டும் எதையோ உளறியது.

தன் முகம் காணாது வலி நிறைந்த குரலில் மகனின் பதட்ட மொழி கேட்டவர் ஹரி உன் நானாக்கு என்னாச்சு என்றார் அவன் முகத்தை நிமிர்த்தி.

ம்ம்மா… ஒண்ணுமில்லை நீங்க சர்வதனி கூட இருங்க… நான் போய் பார்த்துட்டு வரேன் என்றான் நிதானத்தை வரவழைத்து.

ஹரி உண்மையை சொல்லப் போறியா இல்லையா..?அவன் சட்டை காலரை பற்றி உலுக்கினார்.

ஒன்னுமில்லம்மா… சட்டென்று என்ன சொல்வதென்று தெரியாமல் முகம் வெளிறி நின்றான்.

ஹரியை அழைத்து செல்ல கார் வந்து நின்றது. காரில் இருந்து இறங்கிய டிரைவர் சேகரிடம் தாரணியின் பார்வை நிலைத்தது.

சேகர் பெரிய ஐயாக்கு இப்போ எப்படி இருக்கு என்றார்….

ஐயா இன்னும் கண்ணு முழிக்கல… ICU வில் தான் இருக்காரும்மா என்றவன் அதோடு நில்லாமல் இது பெரிய அட்டாக்காம் ஏற்கனவே வந்திருக்குமாம் நமக்கு தெரியலையாம் என்றான் கூடுதல் தகவலாக…

பாவா என்று அலறிய தாரணி மயங்கி சரிய…. அய்யோ அம்மா என்று ஓடிவந்து தூக்கினாள் பவித்ரா.

அத்தம்மா என்று அழுது துடித்தாள் சர்வதனி.

அம்மா….. அம்மா என்று ஹரி கன்னம் தட்ட சேகர் வீட்டுக்குள் ஓடிப்போய் நீர் கொண்டு வந்தான். முகத்தில் அடித்து நீரை தெளித்தும் அவரிடம் அசைவே இல்லை.

சர்வதனி அம்மாக்கு ஒண்ணுமில்ல நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்… நீ போய் ரெஸ்ட் எடு என்றான் ஹரி.

மாட்டேன் என்று தலையசைத்தவள் பயந்து அழுதாள்.

இதோ பாரும்மா நீ வயிற்று பிள்ளையோட ஹாஸ்பிடலுக்கு அலையக் கூடாது.

ஏற்கனவே நானா ஒருபக்கம் அம்மா ஒருபக்கம்… நீ வேற ஏன்? அவன் சோர்வுடன் பார்க்க… கண்ணீரை துடைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் சர்வதனி.

தாயை கண்ணீருடன் அள்ளி எடுத்துக் கொண்டு காரில் ஏறினான்.

கரீம்நகர் பாலாஜி மருத்துவமனையில் கார் நின்றது.

அனைத்து சிறப்பு பிரிவுகளும் கொண்ட பிரபலமான மருத்துவமனை… கிருஷ்ணா குடும்பத்தின் நெருங்கிய உறவினர் தான் பாலாஜி.

கீழ் தளத்தில் எமர்ஜென்சி பிரிவில் தாரணியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் அதிக ரத்த அழுத்தம் ஏற்படுத்திய மயக்கம் என்றார்.

அவருக்கு ட்ரிப்ஸ் இறங்கி கொண்டிருக்க வேதனையுடன் தாய் முகம் பார்த்தான். ஈ எறும்புக்கு கூட துரோகம் செய்ய தெரியாத,கள்ளமில்லா ஜீவன், அவர் கண்ணயர்ந்திருக்க அவர் பெற்ற செல்லமகன் கண்ணீர் தளும்ப நின்றான்.

பயப்படும்படி ஏதுமில்லை என்று மருத்துவர்கள் சொல்ல கேட்ட பின்னே தான் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

அமைதியாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவளுக்கு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை.

சற்று நேரத்தில் அடுக்கடுக்காய் என்னென்னவோ நிகழ்ந்தேறிவிட்டது. நடந்த நிகழ்வின் தாக்கத்தை இன்னும் மூளை உட்கிறகிக்க முடியாமல் ஒருவித உணர்ச்சியற்ற நிலையில் இருந்தாள்.

பவி.. அவள் தோளில் மெல்ல கை வைத்தான். உடைந்து தொய்ந்து நின்றவனின் கோலம் அவளை உருக்கிவிட்டது.

இவன் வேண்டாம் என்ற விஷயத்தில் தான் உறுதியாக இருந்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் இப்போது அவளுக்கு எழாமல் இல்லை.

அதே சமயம் தன்னை அவன் எவ்வளவு விரும்புகிறான் என்றும் அறியாதவள் இல்லை.

தன்னை முன்னிறுத்தி யாருக்காவது ஏதாவது நிகழ்ந்து விட்டால் அந்தக் கலங்கம் வாழ்நாள் முழுவதும் வடுவாய் மனதில் தங்கி விடுமே…

கலவரமான பார்வையுடன் தன்னை பார்க்கும் பவித்ராவின் கரத்தை இறுக்கி பிடித்துக் கொண்டான்.

அவன் பிடியின் அழுத்தம் உணர்த்தியதை அவள் உள்ளம் உணர்ந்து கொண்டது.

நீ இங்கேயே அம்மா கூட இருடாம்மா நான் போய் அங்கே பார்த்துட்டு வரேன் என்று அவளை தட்டி கொடுத்தவன் சேகர் கேன்டினில் காபி வாங்கி வந்து கொடு என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு சென்றான்.

மூன்றாவது தளத்தில் தந்தை அனுமதிக்கபட்டிருக்கும் Critical Care Unit க்கு  சென்றான். அங்கே ராம், தேவ், வெங்கட கிருஷ்ணா அமர்ந்திருக்க அவர்களை தாண்டி அடுத்த வரிசையில் ஷியாமளா கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

ஹரியை கண்டவுடன் ராம் ஓடிவந்து கட்டிக் கொண்டான்.

தாரணி மயங்கி விழுந்ததோ இதே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதோ யாருக்கும் தெரியாது.

எப்படி இருக்கார்? நடுங்கும் குரலில் தேவிடம் கேட்டான்.

ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு என்றான்.

கனத்த அமைதியாய் அச்சூழல் இறுகி இருக்க அண்ணையா என்று அழுது அலறிகொண்டு கோதாவரி வந்து நின்றார் பின்னோடு அவர் கணவர் பலராம் வந்து நின்றார்.

அத்தம்மா இது ஹாஸ்பிடல் மாமியாரை அதட்டினான் ராம்சரண்.

வதன எப்படி இருக்காங்க ஹரி?ஒன்னும் பயம் இல்லையே…?இப்போ தான் சர்வா ஃபோன் பண்ணினா கோதாவரி இன்னும் பெரிதாய் அழ…

ஹரி அம்மாக்கு என்னாச்சு? உலுக்கினான் ராம்.

ஹரி என்ன நடந்துச்சு….? தேவ் அதட்டினான்.

எவ்வளவு அழுத்தமா நிற்கிறான் பாரு… வெங்கட கிருஷ்ணா எகிறினார்.

அம்மாக்கு ஒண்ணுமில்லை… நானாக்கு ஹார்ட் அட்டாக் என்ற விஷயம் கேட்டதும் மயங்கிட்டாங்க.

எங்கே இருக்காங்க? பதறினான் ராம்.

நல்லா இருக்காங்க… கிரவுண்ட் ப்ளோரில் தேர்டு ரூம்….ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு.

எல்லாம் உன்னால தான்… உனக்கு இப்போ திருப்தியா? வெங்கட கிருஷ்ணா கடு கடுத்தார்.

இடம் பொருள் கருதி அமைதியாய் கை கட்டி நின்றான்.

நான் போய் அம்மாவை பார்த்துட்டு வரேன்… ராம் செல்ல அவனோடு அவனது மாமனார் மாமியாரும் சேர்ந்து சென்றனர்.

ராம் ஒரு நிமிஷம்… தம்பியை தனியே அழைத்தவன் பவித்ரா அங்கே இருக்கா அத்தை எதுவும் பேசிடப் போறாங்க எச்சரித்து அனுப்பினான்.

“——————-“

பவித்ரா அமைதியாய் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராம்சரண் அமைதியாய் உள்ளே நுழைந்தான். அரவம் உணர்ந்து பார்வையை திருப்பியவள் எதுவும் பேசாது எழுந்து நின்றாள்.

இதி அம்மாயினா? (இந்த பொண்ணு தானா ) என்றார் கோதாவரி.

ம்ம்ம்ம் என்று தலையசைத்தவன் தாயின் அருகில் சென்று அவர் கரம் பற்றிக் கொண்டான்.

தாரணியின் உலகம் மிக மிக மிக சிறியது. கணவன் இரண்டு மகன்கள் அவ்வளவு தான்.

அதிலும் மூன்று வருடமாக கணவனிடம் பேச்சு வார்த்தை இல்லை. மூத்த மகனும் கோபித்து சென்றுவிட அவரின் ஒட்டுமொத்த பாசத்துக்கு உரியவனாகிப் போனான் ராம்சரண்.

கடுமையான மனஅழுத்தத்தில் இருந்த தாரணிக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது இளைய மகன் ராம்சரண் தான்.

தாய் இப்படி மனம் சுணங்கி மருந்தின் வீரியத்தில் கண்மூடி படுத்திருப்பது கண்டு மனம் பொறுக்காத ராம் அம்மா என்றான் கண்ணீர் தேங்கிய விழிகளுடன்.

லேசாய் அவர் நெற்றி சுருக்கினார்.

அம்மா என்றான் மீண்டும் அவரின் கரத்தை அழுந்த பற்றிக் கொண்டு.

சிரமப்பட்டு கண்திறந்த தாரணியின் கண்கள் மூத்த மகனை தேடியது. மனமுடைந்து சென்றுவிட்டானோ என்று பதறியது.

சற்று தள்ளி பவித்ரா நிற்க கண்டவுடன் தான் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.

ராம் நானா எப்படி இருக்காரு…? மகனின் கரம் பற்றிக் கொண்டு கண்ணீருடன் கேட்டார்.

ஒன்னும் பயமில்லைம்மா ஆஞ்சியோ பண்ணி சரி பண்ணிட முடியுமாம் சின்ன சர்ஜரி தானாம்.பாலாஜி அங்கிள் சொன்னாங்க.

தாயை பயமுறுத்த விரும்பாது தற்காலிகமாக பதில் ஒன்றை சொல்லி வைத்தான்.

ஆசுவாசமாய் கண்மூடி சற்று நிம்மதி அடைந்தவர்  கட்டிலில் சாய்ந்து படுத்துக் கொண்டார்.

வதன ஏன் இப்படி வருத்திக்கிறீங்க? கோதாவரி ஆதங்கப்பட்டார்.

எனக்கு ஒண்ணுமில்ல கோதாவரி.சர்வதனி தனியா இருப்பா வீட்டுக்கு போ என்றார் சம்மந்தியிடம்.

அவங்களுக்கு ஜுஸ் ஏதாவது கொடுங்க என்றார் பரிசோதிக்க வந்த நர்ஸ்.

தயங்கி வாயிலில் நின்ற ஷியாமளா ஒரு நிமிடம் தாரணியை பார்த்துவிட்டு விறு விறுவென்று சென்றுவிட்டார்.

பவித்ராவிற்கு எதுவுமே புரியவில்லை. இந்தம்மா அவ்வளவு பேச்சு பேசிட்டு இப்போ எதுக்கு வந்து பார்த்துட்டு போகுது?

இந்தம்மாவால தான் அந்த மனுஷன் ICU வில் இருக்காரு… அப்புறம் எப்படி கூச்சமில்லாம

இங்கே நடமாடுது…? அவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.

பலராமன் போய் மாதுளை ஜுஸ் வாங்கி வருகிறேன் என்று சென்றுவிட்டார்.

“——————–“

குழம்பி போய் மருண்டு நின்று கொண்டிருந்த பவித்ராவை சற்று நேரம் ஆராய்ந்தது தாரணியின் பார்வை.

இங்கே வா என்று பவித்ராவை கண்களால் அழைத்தார்.

தயங்கி தயங்கி பயத்துடன் அருகில் வந்தாள்.

அவள் கரம் பற்றிக் கொண்டவர் கோதாவரியை பார்த்து நா பெத்த மேனகோடலு அந்தக்கா உந்தா என்றார்.(என் பெரிய மருமகள் அழகா இருக்காளா )

கோதாவரி வியப்புடன் பார்த்தார். விஜயதாரணிக்கு ஏற்ற மருமகள். அதே எளிமை அவரை போலவே அமைதி. அது தான் ஹரிக்கு பிடித்து விட்டதோ…?

வதன மகனை விட்டு கொடுக்க மாட்டார் என்று அவருக்கு தெரியாதா? எப்படியும் தன் மகளுக்கு ஓரகத்தி இவள் தான் என்று பார்த்தார்.

பவித்ரா படபடப்புடன் அவரை பார்க்க…. பவித்ராவின் பயம் கண்ட ராம் இலக்கமாய் அவளை பார்த்து என் பெரிய மருமகள் அழகா இருக்காளான்னு அம்மா கேட்டாங்க என்றான் ஆங்கிலத்தில்.

அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

அழக்கூடாது என்பதாய் தலை அசைத்து சைகை செய்தவர்.

அவள் கரம் பற்றி தன் அருகில் அமர்த்திக் கொண்டவர் ஆசையுடன் அவள் முகம் வருடி என் ஹரி முடிவு தான் என் முடிவு என்றார் அவருக்கு தெரிந்த அரை குறை தமிழில்.

நாக்கு தமிழ்ராதுராம்மா நுவ்வு த்வரகா தெலுகு மாட்லாடதம்  நெர்சுக்கோ அன்னாடு என்றார். (எனக்கு தமிழ் வராது நீ சீக்கிரம் தெலுங்கு பேச கத்துக்கோ) என்றார். இதையும் ராம் மொழி பெயர்க்க அமைதியாகவே கேட்டுக் கொண்டாள்.

மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று சொல்லி சென்றார்.

“——————“

ராம் எனக்கு நானாவை பார்க்கணும் என்றார்.

இல்லம்மா அலவ் பண்ண மாட்டாங்க…. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க! ஆபரேஷன் முடிந்த உடனே வந்து பார்க்கலாம் என்றான்.

இல்லை நான் பார்க்கணும் என்றார் அழுத்தமாய்.

மாமையா,அத்தையையும் அம்மாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு போங்க என்றான் கண் ஜாடை காட்டி.

ராம் நான் பார்த்துட்டு போறேன்னு சொன்னேன் என்ற தாரணி பலராமனை பார்த்து அண்ணையா அவர் எந்த ரூமில் இருக்கார் என்றார்.

இனிமேல் ஒன்றும் பேசுவதற்கில்லை என்று புரிந்து கொண்ட ராம் அனைவரையும் அழைத்துக் கொண்டு மூன்றாவது தளத்திற்கு சென்றான்.

அவர்களுடன் செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் பவித்ரா யோசனையினூடே மெல்ல நடந்து பின் தொடர்ந்தாள்.

தாயை கண்ட ஹரி எழுந்து வந்து அவர் கரம் பற்றி இருக்கையில் அமர்த்தினான்.

அந்த சூழலிலும் பவித்ராவை முடிந்த மட்டும் முறைத்து வைத்து முகம் சுழித்தார் வெங்கட கிருஷ்ணா.

நான் அவரை பார்க்கணும் என்றார் தாரணி.

ICU வில் அலவ் பண்ண மாட்டாங்க. இன்பெக்ஷன் ஆகிடும் என்று சமாளித்தார் வெங்கட கிருஷ்ணா.

மருத்துவர்கள் புடைசூழ ICU வில் இருந்து வெளியில் வந்தார் டாக்டர் பாலாஜி.

பாலாஜி அண்ணையாக்கு… தடுமாறினார் வெங்கட கிருஷ்ணா.

ரெண்டு இடத்தில் பிளாக் ஆகி இருக்கு. நைட் ஆஞ்சியோ பண்ணிடலாம். ஆனா திடீர் திடீர்னு பல்ஸ் கூடுது குறையுது. ஸ்டேபிலா இல்லை. மனதுக்குள்ள எதையோ யோசித்து வேதனையோட இருக்கார். என்னனு பாரு வெங்கி என்று தோளை தட்டி விட்டு சென்றார் பாலாஜி. வெங்கட கிருஷ்ணாவின் மைத்துனர் ஷியாமளாவின் அண்ணன்.

வாயை மூடி குலுங்கி அழும் தாயை இரு மகன்களும் ஆளுக்கொரு புறமாய் தோளில் தாங்கி  நின்றனர்.

ம்ம்மா நானாக்கு ஒண்ணுமில்ல…. ஆஞ்சியோ ஜஸ்ட் ஒரு சாதாரண ட்ரீட்மென்ட் இதுக்கு பயப்பட ஒண்ணுமில்ல. ப்ளீஸ் அழாதீங்கம்மா….ஹரி அவரை ஆறுதல் படுத்தினான்.

வதன நீங்க போய் அண்ணையாவை பாருங்க என்றார் வெங்கட கிருஷ்ணா.

நான்.. நான்…. தடுமாறினார் தாரணி.

ம்ம்மா போய் பாருங்க என்றான் ஹரி..

ஹரி நீயும் போ என்றான் ராம்.

நான்… நானா… திணறி நின்றான்.

பெற்ற தகப்பன் சாக கிடக்கிறார் இவன் இப்படி தயங்கி நிற்கிறானே… பவித்ரா புரியாமல் பார்த்து நின்றாள்.

அம்மா நீங்க நானாட்ட பேசுங்க அவர் சரியாகிடுவார் என்று அவர் கரம் பற்றி கொண்டு போய் ICU வாயிலில் விட்டு வந்தான் ராம்.

கண்ணீரை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். அவர் பின்னால் மனம் நிறைய வலியுடன் ஹரியும் சென்றான்.

வயர்கள் சொருகப்பட்டு  சுவாசக்குழாய் பொருத்தி படுத்திருக்கும் தன் கணவனை கண்டதும் அடக்க முடியாத கண்ணீர் தாரணிக்கு .

சற்று தள்ளி நின்று தந்தையை பார்த்து சிலை போல் நின்றான் ஹரி.

எத்தனை கம்பீரமான மனிதன் எப்படி நாராய் கிடக்கிறார்….!

சுப்ப கிருஷ்ணா என்ற பெயரை சொன்னால் அறியாதவர் யார்? மௌன கண்ணீர் உகுத்து நின்றான்.

அவர் செய்தது பிழை என்றாலும் நான் செய்தது அதைவிட பெரும் பிழை அல்லவா? உருகி நின்றான்.

ஒரே வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மூன்றாண்டுகள் கழித்து கணவன் முகத்தை இன்று தான் உன்னிப்பாய் பார்க்கிறார் தாரணி.

மனம் பொருக்காது விம்மி அழுதவர் பாவா என்றார் நடுக்கத்துடன் அவர் கரம் பற்றி.

அவர் கேட்க ஏங்கிய அந்த குரல், அந்த வார்த்தை… அந்த ஸ்ப்ரிசம்

அவர் செவிப்பறை கடந்து மூளை நரம்புகள் வழியே ஊடுருவி செல்கள்தோறும் சென்று சேர்ந்தது.

அவர் மிக விரும்பும்  மனையாளின் கண்ணாடி வலையொலி அவர் காதருகில்…

கண்ணிமை பிரித்து தன் பாரியாளை பார்க்க துடித்தார், தவித்தார் சுப்ப கிருஷ்ணா.

பாவா என்று பெருங்குரலெடுத்து அழுது விட்டார் தாரணி. கணவனின் போராட்டம் கண்டு.

கணவன் ஒரு சூழலில் பொய்யாகி போனாலும் வாழ்ந்த வாழ்க்கை பொய் என்று ஆகிவிடுமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!