Skip to content
Post Views: 3,944
புது மஞ்சள் புது தாலி
அத்தியாயம் 10.1
வேலுவின் நிச்சயத்தின் பின் பூர்ணா தள்ளி நின்று கொண்டாள். அவளுக்கு புரிந்தது, தான் அவர்கள் வட்டத்தில் நுழைய முடியாது என்று.. இனி, தன் பழக்கம் வேலுவோடு போதும் என்ற அளவில் தெளிவாக இருந்தாள்.
வேலுக்கு நடந்ததும் தெரியவில்லை. பூர்ணா ஒதுக்கம் அறியவில்லை. அவனுக்கு முழு நேரமும் தாமரையுடனே சென்றது. அவளுக்கு சேவை செய்யும் சேவகனாக மாறி போனான்.
Advertisement
தாமரைக்கும் தன்னை தாங்கும், தன்னையே சுற்றி வந்து தன் விருப்பத்தை எல்லாம் நிறைவு செய்யும் மாமன் மீது ஈர்ப்பு வர, ஆர்வமாகவே அவனிடம் பேச தொடங்கினாள். திருமணத்திற்கு உடை, மண்டபம், உணவு தொடங்கி எல்லாம் அவள் தேர்வு தான், அவள் விருப்பம் தான். யாரும் ஒன்றும் சொல்ல வில்லை. சிறு முக சுளிப்பு இருந்தாலும் உடனே மாற்றி விடுவான் வேலு.
பெரிய மண்டபத்தில் லட்ச கணக்கில் செலவு செய்து திருமணம் முடித்தனர். ஒரு வாரமும் ஊரே அவர்கள் கல்யாண பேச்சு தான். ஒற்றை மகனின் திருமணத்தை அசத்தி விட்டார் கொடி. பெயரளவுக்கு திருமணத்தில் கலந்து கொண்டு தள்ளியே நின்று விட்டார்கள் வள்ளியும், பூர்ணாவும்.
இதை கவனித்த வேலு, வீட்டளவில் நெருங்கிய சொந்ததிற்க்கு மட்டும் வைக்கும் கறி விருந்தில் பூர்ணாவை வற்புறுத்தி அழைத்து சென்றான். வரவே மாட்டேன் என்று தயங்கிய பூர்ணாவை இழுத்து சென்று விட்டான்.
Advertisement
வேலு அவளை தன் அருகிலேயே பாதுகாப்பாக வைத்து கொண்டான். யாரும் நெருங்க முடியாத அளவிற்கு.. ஆனால் அவனின் அந்த செயல் தான் மற்றவர்களுக்கு உறுத்த தொடங்கியது. தாமரைக்கு தொடர் கல்யாண அலைச்சலில் முடியாமல் போக உடல் தளர்ந்து படுத்தவளை காண சென்ற வேலு, திரும்பி வரவில்லை.
Advertisement
தாமரைக்கு ஏனோ பூர்ணா அருகில் இருக்கும் போது தன் முக்கியத்துவம் குறைவதை போல உணர்ந்தவள், திரும்ப வேலுவை விடவில்லை. பூர்ணாவும் அவர்கள் வீட்டு ஆட்களிடம் ஒட்ட முடியாமல் தன் சோட்டு பெண்களுடன் சேர்ந்து கொண்டாள்.
ஆனால், அவளுக்கு அங்கு நடந்தது பெரிய அவமானம் தான். தன்னுடைய சுயமரியாதையை விட்டு கொடுத்து அவர்களோடு உறவாட விருப்பம் இல்லாமல் முற்று முழுதாக ஒதுங்கி கொள்ள நினைத்தாள். அன்று வீட்டு வாசல் படி தாண்டியவள் தான், அடுத்து என்ன நடந்த போதும் செல்ல வில்லை. பதினொரு வருடங்களுக்கு பின் பவித்ராவின் பொருட்டே திரும்ப அந்த வீட்டின் படி தாண்டி உள்ளே சென்றாள்.
பூர்ணாக்கு நடந்த அவமானத்தை கண்டு கொதித்து போனது என்னவோ பெரியாத்தா தான். அவர் யாரையும் சாட வில்லை, குற்றவாளியாக நிப்பாட்டியது வேலுவை தான். அவன் கண்ணில் அகபட்டவுடன் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார்.
Advertisement
பூர்ணாக்கு நடந்ததை சொன்னவர், “ ஏலே வேலு! நீரு ஒரு ஆள கூட்டி வந்தா.. கூட இருந்து பாக்க வேண்டியது நீதான். வேற யாரு பார்ப்பாங்கனு தனியா விட்டு போன, நீயி என்ன பச்சை பிள்ளைய விவரம் தெரியாம இருக்க, உம் அம்மைக்கு அவளை பிடிக்காது அவ வந்த சாடுவானு உனக்கு தெரியாதா?.. என்ன நெனைச்சு அவளை வர சொன்ன, கஞ்சிக்கு வழி இல்லாமவ உன் வீடு தேடி அவ வந்தா.. நீயி சொல்லி தானே பொறவு கூட இருந்து யாரு பார்க்கணும்”.. என்று விளாசியவரின் பேச்சில் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தான் வேலு. மேலும், பூர்ணா உடன் இருக்காமல் அவளை தனித்து விட்டு, தன் வீட்டில் அவளுக்கு நடந்த அவமானத்தை எண்ணி குமைந்து போனான்.
பெரியாத்தாவிற்க்கு மனம் ஆற வில்லை. செத்த முகத்துடன் வெறும் இலையை முடி எழுந்து சென்ற பூர்ணாவே கண்ணுக்குள் நின்றாள், நினைக்க நினைக்க வேலு மீது தான் கோபம் வந்தது. வேலுவை பார்த்து தெளிவாக சொல்லிவிட்டார். இனி நீயி பூர்ணா பக்கம் திரும்ப கூடாது என்று.
“இங்காரு வேலு! உம் அம்மைய உன்னாலே எதுக்க முடியாது. நீரு என்ன சொன்னாலும் அரசி ஒதுக்கி தான் தள்ளுவா பூர்ணாவ.. உன் பொண்டாட்டிக்கும் பிடிக்கல, யார உன்னால் சரி கட்ட முடியும். நரம்பில்லாத நாக்கு எப்படி வேண்டாலும் மாறும். நாளைக்கு ஒரு அவ சொல்லு பூர்ணாக்கு வாங்கி குடுத்துடாத.. சாதிசனம் ஆயிரம் சொல்லிபுடும் சாமி.. பொண்டாட்டியும், அம்மையும் வேண்டாம்னு சொல்லியும் வயசு பிள்ளை கூட ஏன் பழகனும், அப்படி என்ன உறவுனு ஊர் பேசிட்டா யாருக்கும் தாங்காது சாமி.. வள்ளிக்கு மவ தான் உசுரு சாச்சுபுடாத அய்யா! வாழ வேண்டிய புள்ள வாழ விடு.. உங்கம்மை செய்ய மாட்டானு நெனைச்சுடாதீக தனக்கு வேணும்னா எதுக்கும் துணிஞ்சவ தான் அரசி. அவ மறுபதிப்பு உம்பொண்டாட்டி”… கண்ணில் நீர் தேங்க பேசியவரிடம் மறுத்து ஒன்றும் பேசவில்லை வேலு.
அவர் சொல்லிய அனைத்தும் சத்தியாமான உண்மை தான். அரசி செய்ய கூடியவர் தான். தாமரைக்கும் தன் இனிய சம்முவை பிடிக்கவில்லை என்று முன்பே கணித்திருந்தான். எப்போது பூர்ணா குறித்து பேசினாலும் அரசி போல் எதிர்க்காமல் அமைதியாகவோ, அல்லது பேச்சை மாற்றியோ, அவர்களுக்குள் பூர்ணா என்ற பெயர் வரவிடாமல் செய்து விடுவாள். அது வேலுக்கும் புரிந்தது தான். பூர்ணாவோடு பழக பழக குணம் பிடித்து போய் சரியாகி விடும் என்று தான் நினைத்தான். இப்படி எல்லாம் கை மீறும் என்று நினைக்க வில்லை.
பெரியாத்தாவிற்க்கு கோபம் இன்னும் குறையவில்லை போலும், தன் தங்கை மீது இருந்த கோபத்தையும் வேலு மீதே இறக்கி வைத்தார்.
அப்படி என்ன வேலு உசத்தி! நட்போடு பேசி பழகுவதற்க்கும் தகுதி வேண்டுமோ?, அப்படி என்ன தகுதி குறைந்து விட்டாள் பூர்ணா என்பதுதான் பெரியாத்தாவின் ஆதங்கமாக இருந்தது.
தனக்கு தானே தெரியும் கணவனை இழந்து கையில் பெண் குழந்தையை வைத்து கொண்டு தனியாக நிற்பதன் வேதனை. மகளை வளர்த்து கரை சேர்க்க தனி மனுஷியாக பட்ட பாடு. சொந்த தங்கையே ஆனாலும் அவளை சரிகட்டி, உரிமையாக வலம் வர வேண்டிய வீட்டில் உரிமையை விட்டு கொடுத்து, சொத்து இருந்தும் கொழுந்தன் கையை எதிர்பார்த்து, தன் மகள் கல்யாணத்தில் கூட முன் நிற்காமல் தங்கை தார வார்க்க தள்ளி நின்று, தன் கணவன் சொத்தை அவர் மகளுக்கு கொடுப்பதற்கு எத்தனை இடத்தில் இறங்கி சென்று, சொந்த பந்தங்களை அனுசரித்து, இதோஇன்று வரை வாணிக்கு தாய் மாமன் சீர் செய்ய, மடியில் அமர்த்தி காது குத்த வேலு வேண்டும் என்று அரசியை இன்னும் அனுசரித்து தானே செல்கிறார்.
மகள் கணவன் வீட்டில் கூட அப்பா இல்லை என்ற இளக்காரம் வந்து விட கூடாது. நாளைக்கு ஒரு பிரச்சினை என்றாலும் ஜனக்கட்டும் சொந்தங்களின் ஆதரவு மகளுக்கு வேண்டும் என்று எத்தனை சொந்த பந்தங்களை சரிகட்டி, சிரித்த முகத்துடன் எல்லாரையும் அரவணைத்து, பிடிக்க வில்லை என்றாலும் கூட அனுசரித்து என்று எல்லோரையும் இன்று வரை யாரையும் ஒதுக்காமல் இழுத்து செல்கிறார்.
error: Content is protected !!