Skip to content
Post Views: 4,772
புது மஞ்சள் புது தாலி
அத்தியாயம்10.2
பெரியாத்தா தெளிவாக சொல்லிவிட்டார். உன் குடும்பத்தை கட்டு படுத்த முடியவில்லையென்றால் பூர்ணாவோட உன் பழக்கத்தை நிப்பாட்டு, உங்கள் பணமும், பவுசும் உங்களோட, அதற்காக அடுத்த வீட்டு பெண்ணை அவமதிக்க கூடாது என்று.
அவருக்கு ஆற்றாமை இன்னும் அடங்க வில்லை. சொத்தும் , சொந்தமும் இருந்தும் தனி ஒருத்தியாக பெண் பிள்ளை வளர்த்து ஆளக்க பட்டபாடு அவருக்கு தானே தெரியும். வள்ளியும் தன் போல் தானே, ஆளாளுக்கு கொத்தி விரட்ட நினைக்க காரணம் வேலு. அதனால் தான் வேலுவை ஒதுங்கி கொள்ள சொன்னார். பூர்ணா எனக்கு அப்படி, இப்படி என்று பாட்டு பாடுபவன், தன் தாயையும், மனைவியையும் அடக்க துப்பு இல்லையே, கோட்டி பையன் என்று மனதில் வேலுக்கு வசை பாடினார்.
Advertisement
வேலுவும் பூர்ணா வீடு தேடி சென்று மன்னிப்பு கேட்டு கொண்டான். சரி என்று பூர்ணாவும் தலையசைத்து ஏற்று கொண்டாள் தான். வேற மறுமொழி ஒன்றும் சொல்ல வில்லை. இருவருக்கும் இடையில் இடைவெளி விழுந்ததை இருவரும் உணர்ந்தாலும் சரி செய்யவோ அல்லது சமாதானம் செய்யவோ நினைக்கவில்லை. நிதர்சனம் உணர்ந்து அவரவர் பாதையில் செல்லவே விரும்பினர்.
பூர்ணா இனி யாருக்காகவும் தன் தன்மானத்தையும், சுய கௌரவத்தையும் விட்டு தர தயாராக இல்லை. வேலுவின் சகஜமற்ற பேச்சும், ஒட்டாத தன்மையும் அவனின் முடிவை கூற மனமுவந்து அதை ஏற்று கொண்டாள்.
வேலுவும் பலவாறாக யோசித்து பார்த்தான். தோன்றியது ஒன்றே தங்களது தோழமை இனி நகர வேண்டாம் என்பதே! தன் குடும்பத்தின் அமைதியும், பூர்ணாவின் வாழ்வும் சிறக்க, அவரவர் வழியில் செல்வதே மேல். நாளை அவளுக்கும் திருமணம் ஆகிவிட்டால் தன்னை போலத்தான் நினைப்பாள். அத்தோடு ஆண், பெண் நட்பு என்பது ஒரு வரையறைக்குள் மட்டுமே. தன் குடும்பம் என்ற அமைப்பு மனைவியும், அம்மாவும் சார்ந்தே என்று தன்னை தான் சமாளித்து முற்று முழுதாக ஒதுங்கி கொண்டான் பூர்ணாவிடமிருந்து.
Advertisement
அவளும் அதையே விரும்ப, தன் போக்கில் சென்று விட்டான் வேலு.
Advertisement
தாமரையின் சிறு, சிறு குறைகளை தவிர, அவளுடனான வாழ்க்கை நிரம்ப பிடித்தது வேலுக்கு. தேன் நிலவுக்கு ஊட்டி அழைத்து சென்றான், இனிக்க இனிக்க தங்களது இளமை பரிமாணத்தை ரசித்து வாழ்ந்தனர்.
வேலு எந்நேரமும் தன் மனைவியையே சுற்றி வந்தான், தாமரையும் தன் கணவன் தன் கண்களை தாண்டி செல்லாதவாறு பார்த்து கொண்டாள். எப்போதும் ஒட்டியே திரிந்தனர் இருவரும்.
திருமணம் முடிந்த அடுத்த ஒரு மாதத்தில் தாமரை கருவுற அவனை கையில் பிடிக்க முடியவில்லை. தன் வாழ்வு முழுமை அடைந்து விட்ட உணர்வு தான் வேலுக்கு, அன்பான பெற்றோர், வளமான வாழ்வு, காதல் மனைவி தற்போது குழந்தையும் வர நிறைவாக உணர்ந்தான்.
Advertisement
ஆனால், வாழ்வு எப்போதும் நிறைவாக மட்டுமே இருக்காதே. அதற்கேற்ப சிறு சிறு உரசல் குடும்பத்தில் வர தொடங்கியது. தாமரைக்கு வேலு எப்போதும் தன்னருகிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம். ஆனால், சம்பாத்தியம் இல்லாமல் அவள் ஆடம்பர செலவுகளை எவ்வாறு சமாளிக்க, தற்போது மசக்கையும் படுத்த, வேலு இம்மி நகர முடியவில்லை.
கர்ப்பகால உபாதை எது இருந்தாலும், தன்னுடைய சௌகரியத்தை விட விரும்பவில்லை தாமரை, எதிலும் நேர்த்தியாக இருப்பாள். ஆடை, அணிகலன் எல்லாவற்றிலும் மனம் திருப்தியாகும் வரை ஓயமாடாள். கண்ணில் பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிக்கும் ரகம். அவ்வாறே அவள் பார்ப்பதை எல்லாம் வாங்கி தான் குவித்தான் வேலு. ஆனால் எல்லாம் திருமணத்திற்கு முன், தற்போது அவ்வாறு செய்வதில் நிறைய சங்கடம் நேர்ந்தது வேலுக்கு.
முதலாவது, ஒற்றை வாரிசாக இருந்த போதும், தனிப்பட்ட வேலை என்ற ஒன்று வேலுக்கு இல்லை. அவர்களது விவசாய குடும்பம் பணம் செழிக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவன் திருமணத்திற்கே பல லட்சம் செலவு, ஒரே குடும்பமாக போக பெண் வீட்டு செலவு என்று எல்லாம் கணக்கு பார்க்க வில்லை. நெல்லையும், அரசியும் தங்களது கடமையை சந்தோசமாக தான் மகனின் திருமணத்தை ஆடம்பரமாக செய்தனர்.
அதுவரை சரியே! ஆனால் தாமரையின் தேவைக்கும், செலவுக்கும் தந்தையிடம் நிற்க வேலுக்கு விருப்பமில்லை. தற்போது தான் அவள் கர்ப்பத்தை காரணமாக்கி, வேலுவுடன் பைக்கில் செல்வது பாதுகாப்பில்லை என்று புது கார் ஒன்று வாங்கியிருக்கிறார்கள். அதுவும் தந்தை செலவில். இனி மற்ற செலவுகளையாவது தாங்களே பார்க்க வேண்டும் எந்நேரமும் அவளுடனே இருந்தால் வருமானத்திற்கு ஏது வழி?, யோசித்த வேலு மெதுவாக தாமரையிடம் பேசி பார்க்க,
“ நீங்கள் ஒருவர் தானே அனைத்திற்கும் வாரிசு, வேலை செய்து தான் பிழைக்க வேண்டும் என்று என்ன அவசியம். மாமவே மேற்பார்வை தான் பார்க்கிறார், வேலைக்கு ஆட்கள் இருக்க அங்கு போய் என்ன பண்ண போறீங்க, குழந்தை பிறக்கும் வரையாவது என்னோடு இருங்க, வேற யாரோடும் எனக்கு சௌகரியம் வரல”… என்று வேலைக்கு செல்லும் வேலுவின் முடிவை தள்ளி போட்டாள்.
அவளின் யோசனை வேலுக்கு ஏற்புடையதாக இல்லை. வயதான தந்தை, அவரை உட்கார வைத்து தான் எல்லாவற்றையும் பார்ப்பது போக, அவர் உழைப்பில் தானும், தன் மனைவியும் ஆடம்பர செலவு செய்யது வாழ்வதா? ,
தாமரையின் செலவுகளை கட்டுபடுத்த முடியாது, அதை அவள் ஏற்க மாட்டாள். அவள் வாங்கி குவிக்கும் எல்லாம் தேவையானதே ஆனால் அவசியமற்றது.
இப்படித்தான் ஒருநாள் வீட்டை அலங்கரிக்க என்று டவுனுக்கு அவனையும் அழைத்து கொண்டு இஷ்டத்திற்கு வாங்கி குவித்தாள. எல்லாம் ஆடம்பரமிக்க விலையுயர்ந்த பொருட்கள். அவ்வளவு அழகு! , வேலுவும் ஆசைப்பட்டு தான் வாங்கினான். எல்லாவற்றையும் வீட்டில் பொருத்தி பார்க்க அரண்மனை போல் காட்சி அளித்தது. நெல்லையப்பன், அரசிக்கும் மகிழ்ச்சி தான் வீட்டின் நேர்த்தி பார்த்து. வேலுக்கு அவ்வளவு பெருமை வீணாக செலவு செய்ய வில்லை என்று!.
எல்லாம் ஒரு வாரம் தான். அந்த ஒரு வாரமும் வீட்டை தொட்டு தொட்டு பார்க்க, தன் தோழிகளுக்கு அழைத்து காட்ட, வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பெருமை பேச, போனில் படம் பிடித்து சமூக வலை தளத்தில் பதிவேற்ற என்று வாரம் சென்ற பின், அதை திரும்பியும் பார்க்க வில்லை. வீட்டில் சமையல் வேலை, காட்டு வேலை, அத்தோடு கறவை மாடு, ஆடு, கோழி என்று பெரியாத்தவிற்கும், அரசிக்கும் வேலை இழுக்கும். வீட்டு பராமரிப்புக்கு என்று நேரம் இருக்காது. அதனால் வீடு பழமை கொண்டே இருந்தது, அதை புதுமையாக மாற்றிய தாமரைக்கு பராமரிக்க ஆர்வம் இல்லை.
நெல்லையப்பன் கவனித்து அரசியை கேட்க, அவர் வேலுவை பார்க்க, வேலு புரிந்து கொண்டு தாமரையிடம் வந்து கேட்டான். அவள் ஒரே வார்த்தையில் எனக்கு வேலை செய்து பழக்கமில்லை என்று முடித்து விட்டாள்.
மாசமா இருக்கும் பொண்ணை கடிந்து கொள்ள முடியாமல், வீட்டை பராமரிக்க ஆள் போட வேண்டியதானது. வேலுவின் தந்தைக்கு துளி விருப்பம் இல்லை. வீட்டில் மூன்று பெண்கள் இருக்க வீட்டு பராமரிப்புக்கு என்று வேலைக்கு ஒரு பெண்ணா?…. என்று கோபத்தை காட்ட முடியாமல் நின்றார்.
வேலுக்கும் தந்தை மனம் புரிந்தது. இனி அவரை கோபம் கொள்ள செய்ய கூடாது என்று நினைத்தவன் அரசியின் கோபத்திற்கு ஆளானன்.
ஒரு மாதம் அமைதியாக வேலுவின் கைப்பிடிக்குள் நின்ற தாமரை பின் சமையலறை புகுந்து விட்டாள். தாயாகும் பெண் கற்று கொள்ளாட்டும் என்று விட, “ஐயோ! அத்த இது என்ன? சட்டி கீழ கருப்பா, இதுல எப்படி சமைச்சு சாப்பிடுறது. தண்ணி பானை அடியில ஏதோ மஞ்சள என்ன இது? இந்த பாத்திரம் எல்லாம் ஏன் பழசா இருக்கு. தரையெல்லாம் ஒரே எண்ணெய், கிட்சனே குப்பை மாதிரி இருக்கு, இங்க நின்னாலே கசகசன்னு இருக்கு என்று ஏதேதோ குறை சொல்லி, வேலுவை பிடித்து மொடுலேர் கிட்சன் அமைப்பாளரிடம் அட்வான்ஸ் பணம் கொடுத்து, அடுப்படியை நவீனமாக மாற்றி விட்டாள்.
பெரியாத்தாவிற்கு தான் இது எவ்வளவு நாளோ! என்று தோன்றி விட்டது. அதற்கேற்ப நாலைந்து நாள் அடுப்படியை தொட்டு தொட்டு வந்தவள். பின் வாந்தி, மயக்கம் என்று ஒதுங்கி கொள்ள திண்டாடி விட்டனர் அரசியும், பெரியாத்தாவும்.
அடுப்படி எல்லாம் நவீன உபகரணங்களோடு, கண்ணாடி, செராமிக்ஸ் என்று இருக்க, கையாள தெரியாமல் தடுமாறி விட்டனர். பித்தளை, வெண்கல பாத்திரம் அவர்களின் காலை நேர அவசரத்துக்கு தோது வரும். ஆனால், செராமிக், கண்ணாடி பொருட்கள் அழுத்தி, பிடி நகர்த்தி வைக்கவும் உடைய தொடங்கியது.
நெல்லையப்பன், வேலுக்குமே கையாள தெரியாமல் உடைக்க, அடுப்படியில் பாத்திரம் நொருங்குவது செல்வம் சிந்துவது போல் கருதிய நெல்லையப்பன். மருமகளிடம் கோபம் கொள்ள முடியாமல், அரசியை வைத்து வாங்கு வாங்கு என்று வாங்க. ஒரு வார்த்தை மறுத்து பேசாத கணவன் பேசவும், ஆத்திரம் கோபம் வெடிக்க தாமரையிடம் முகம் தூக்கி பேசவும்.அவ்வளவு தான், அழுகையும் விம்மலுமாக தன் அறை சென்று அடைந்து கொண்ட தாமரை. நாள் முழுக்க வெளி வரவே இல்லை. அழுகை சத்தம் மட்டும் வாயில் வரை கேட்டது. மாசமாக இருக்கும் பெண், மனம் தவித்து போய் பெரியாத்தா வேலுவிடம் சொல்லிவிட, விரைவில் வந்து விட்டனர் வேலுவும், அவன் தந்தையும்.
அதன் பிறகு, கெஞ்சி, கொஞ்சி சமாதானம் செய்து வெளியே கூட்டி வர, அவளின் மஞ்சள் முகம் அழுது அழுது வீங்கி போய் இருந்தது. கண்களும். சிவப்பாக இருக்க ஒரு சொம்பு நிறைய தண்ணி கொண்டு வந்து கொடுத்தார் பெரியாத்தா குடிக்க சொல்லி..
அதை கையில் வாங்கி குடிக்கும் போதே மயக்கம் வந்துவிட, பதட்டத்தோடு அவளை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றனர். அப்போது தான் அரசிக்கு கொஞ்சம் பயம் வந்தது. இரத்த அழுத்தம் ஏகத்துக்கு ஏறி இருக்க, மருத்துவரின் அத்தனை பேச்சையும் வேலு தான் தலைகுனிந்து கேட்டான்.
ஒரு பாடு அவள் வீட்டிற்கு வந்த பின் தான் அனைவரும் தளர்வாக அமர்ந்தனர். அரசி அடங்கி விட்டார். தனக்கு பிள்ளை பேறு தள்ளி நிக்க, தன் மகனுக்கு அவ்வாறு இல்லாமல் வாரிசு வந்தால் போதும் என்ற அளவில் அடக்கியே வாசித்தார்.
அதன் பின் யாரும் ஒரு வார்த்தை சொல்ல வில்லை. அவளின் விருப்பம் எதுவோ அதன் போக்கிலே விட்டுவிட்டனர்.
உச்சி வெயில் ஏற, கண்மாயில் விறகு வெட்டி கொண்டு இருந்த பூர்ணாக்கு மயக்கம் வரும் போல் இருந்தது. வெயிலின் தாக்கம் அப்படி, மரநிழலில் கொஞ்சம் ஓய்ந்து அமர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, நிழல் தேடி சென்றாள். அங்கு தன்னை போல் அமர்ந்திருந்த மற்றவர்கள் பேச்சில் இருந்து தாமரை மாசமாக இருப்பது தெரியவர அவ்வளவு சந்தோசம். விசயம் காதுக்கு வந்த பின் போய் பார்க்காமல் இருப்பது என்னவோ போல் இருக்க ஒரு எட்டு பார்த்து வந்துவிட முடிவு செய்தாள். வேலுவின் கல்யாண விருந்தின் பின் அங்கு செல்லாதலால், செல்ல விரும்பாதலால் தற்போதும் அங்கு செல்லவில்லை.
அதனால் தான் மாலையில் காத்தாடா கணவன் மனைவி இருவரும் பூந்தோட்டத்தில் நடை வருவர். அங்கு சென்று பார்த்து வரலாம் என்று நினைத்த பூர்ணா மாலை வரை கண்மாயில் காத்திருக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு வேலை இரண்டு மணிக்கே முடிந்து விடும், திரும்ப வீடு சென்று வேலுவின் பூந்தோட்டம் வருவது ரொம்ப சுத்து என்பதால், சிறிது நேரம் காத்திருந்து அப்படியே காண்மாய் கரையை பிடித்து நடந்து சென்றால் எளிதாக தோட்டம் வந்து விடலாம். இதுவே, தனக்கு தோது என்று நினைத்த பூர்ணா தலையில் துண்டை போட்டு வெயில் இறங்க காத்திருந்தாள்.
பூந்தோட்டத்தில், மல்லிகை மணக்க தாமரையை தோளில் தாங்கி மெது நடை வேலுக்கு மிக பிடித்தம். வர போகும் புது வரவை பற்றி கண்ணில் கற்பனைகளோடு விவரித்து கொண்டிருந்தாள் தாமரை, “ மாமா, நம்ம ரெண்டு பேரு ஜாதகத்திலும் சரி, கோவில் பூசாரியும் சரி நமக்கு பையன் தான் பிறக்கும்னு சொல்றாங்க, எனக்கும் முதல் குழந்தை பையன் தான் விருப்பம். இப்பவே என் பையனுக்கு தேவையான எல்லாத்தையும் ஆன்லைன் ஆடர் பண்ணிட்டேன், என் பிரெண்ட்ஸ் கிட்டயும் என்ன?, ஏதுன்னு? விளக்கம் கேட்டுட்டு இருக்கேன். நீங்களும் போன்ல பார்த்து தெரிஞ்சு வச்சுக்கோங்க. அப்பதான் தடுமாறாமல் பையன வளர்க்க முடியும்” என விளக்கி கொண்டிருந்தவளிடம்,
“ ஏட்டி! பையனு நீயே ஒன்ன நினச்சுகாத, கடவுள் விட்ட வழி. பிள்ளை வரம் உனக்கு உடனே கெடச்சதால அது வேணும், இது வேணும்கிற.. பிள்ளை இல்லாத யார்டையும் கேளு பிள்ளைன்னு ஒன்னு வந்தா போதும்னு சொல்லுவாங்க. அவ்வளவு ஏன் எங்க அம்மைக்கு பன்னிரெண்டு வருசம் பிள்ளை இல்ல. ஏதேதோ தவம் இருந்து வரம் வாங்கி தான் நான் பொறந்தேனாம், இன்னமும் எங்க அய்யா கோவிலுக்கு தீ சட்டி எடுக்குறாங்க. நமக்கு தவம் பண்ணாமையே சாமி வரம் கொடுத்துருச்சு, அதா நினைவே. ஆகாத யோசனை உனக்கு எதுக்கு?” என்று அவளின் நினைப்புக்கு ஒரு குட்டு வைக்க,
தலையை சிலிப்பி முகம் திருப்பிய தாமரை, “ எங்க அம்மா கோவில்ல குறி கேட்டாங்க. இது வரை குறி தப்பானதே இல்ல. அங்கவே சொல்லிட்டாங்க எனக்கு ஆம்பிளை பிள்ளை தான்னு. உன் வியாக்கானத்த கொஞ்சம் தள்ளி வை மாமா” என்று முறுக்காக பேசி வந்தவள். தன் பக்கத்தின் அரவம் கேட்டு திரும்பி பார்க்க,
பூர்ணா வந்து கொண்டிருந்தாள். “ அழுக்கு சேலை, காலில் செருப்பு தெரியாத அளவிற்கு சேறு, வியர்த்து வழிந்த முகம், தலையில் வண்டு கட்டி, ஒரு கையில் அருவாளும், மறு கையில் தூக்கு சட்டியுமாக வேக நடயிட்டு வந்தவள். தாமரையின் கைகளை பற்றி “ ரொம்ப சந்தோசம்லே , நல்லா இருக்கணும் நீங்க புள்ளை குட்டியோட நிறைவாக வாழனும்வே!”… என்று மனமார வாழ்த்த.
தாமரைக்கு தான் வியர்வை வழிந்த கையோடு தன்னை தொட்டு விட்டாலே என்று அருவருப்பாக இருந்தது, இவகிட்ட நல்ல சேலையே இருக்காத?, சுத்தமே தெரியாதோ?, இவ வராலனு யாரு அழுதா?” பலவாறு புலம்பிய படி கொஞ்சம் தள்ளி சென்று வாய்கால் நீரில் கைகள் இரண்டையும் கழுவிய பின் வேலு பக்கத்தில் நின்று கொண்டாள், மீண்டும் தன்னை தொட்டு விடுவாளோ என்று.
அவளின் செயலை அவதானித்த வேலுக்கு கோபம் வந்த போதும் அவளை கண்டிக்க பயமாக இருந்தது.
கண்மாய் கரைக்கும் அவர்கள் தோட்டத்திற்கும் தூரம் குறைவு தான். ஆனால், பாதை இல்லை வெறும் முள்ளும், கருவேல மரமும் தான் இருக்கும். அதன் வழி வருவது கடினமே, அப்படி இருந்தும் தனக்காக வந்த தோழியை வாஞ்சையுடன் பார்த்தான்.
தாமரைக்கு தன்னை பற்றிய எண்ணம் என்னவென்று பூர்ணாக்கு தெரியவில்லை. அவளை பொறுத்தவரை வேலுவின் மனைவி என்ற அளவில் நல்ல விதமாகவே நினைத்தாள். ஆனால், தாமரை கொடியின் மருமகள் என்று விரைவில் நிரூபித்தாள்.
ஒரு பெரிய அரசியல் தலைவர் வீட்டு விசேசதிர்க்கு சென்று விட்டு, மண்டபத்திற்கு வெளியே நின்று வந்தவர்களோடு பேசி கொண்டிருந்தார்கள் வேலுவும், தாமரையும்.
“ ஏலே வேலு” என்று சத்தத்தில் திரும்பி பார்க்க பூர்ணா தான்.
“ ஆத்தே வேலு! நானு உன்னிய பார்த்துடேன். நம்ம ஊர்காரவக யாராச்சும் தெம்படுவாகலான்னு வந்தேன். உன்னிய பார்ப்பேனு நினைக்கலவே. இப்பதான் உசுரு வந்துச்சு” என்று அவள் பாட்டிற்கு புலம்ப
“ என்னவே என்ன ஆச்சு! எதுக்கு இம்புட்டு பதட்டம் தணிவே!…” என்று சொல்லி கொண்டிருந்த வேலுவிடம் ,
“அம்மை சோளத்த எடைக்கு போட சொல்லுச்சுலே, அதான் டவுனுக்கு வந்தேன். சோளம் வித்த காசு கெடைக்கும் அரிசி வாங்கிட்டு திரும்ப போயிரலாம்னு வந்தா, மாணிக்கம் அண்ணன் எடைக்கு எடை காசுக்கு அரிசி சரியா போச்சாம். நான் ஒரு கூறு கெட்ட சிறிக்கி இத நம்பி வந்தேன். ஊருக்கு போவனும் காசு இல்ல. நம்ம ஊரு ஆளுக தெம்படுவாக்களானு ரோட்டு வழியே வந்தேன். உன்ன பார்த்துட்டேன் நல்லதா போச்சு”…. அவள் விளக்கம் சொல்ல,
இருவரும் பேசுவதை வெறித்து பார்த்தாள் தாமரை.
“ நான் இருக்க போய் சரியா போச்சு. இனி இப்படி வராதவே! வா நாங்களே உன்ன வீட்டுல கொண்டு போய் விட்றோம்” என்று இருவரையும் அழைத்து சென்று காரில் ஏற்ற,
சிவப்பு நிற காரில் ஏறிய பூர்ணா, வண்டியையே தொட்டு தொட்டு பார்த்து “உன் கார வேலு, நல்ல இருக்குலே சந்தோசம்!” என்க. தாமரை அவளை வன்மமாக பார்த்து வந்தாள்.
“அந்த ஆல மரம் தான் வேலு, அங்கன நிப்பாட்டுலே, அங்க தான் அரிசி மூட்டை இருக்கு. அம்மைக்கு ரேசன் அரிசி வயித்துக்கு சேரால அதான் நல்ல அரிசி வாங்க வந்தேன்” என்று காரணம் சொல்லி கிழே இறங்க தாமரையும் உடன் இறங்கினாள்.
அரிசி மூட்டைய வெளியே எடுத்த வேலு, “சித்த நேரம் ரெண்டு பெரும் நில்லுங்க, மாத்திரை வாங்கணும் வந்துறேன்…”
வேலு சென்ற பின் பூர்ணா நோக்கி திரும்பிய தாமரை, அவளை அளவிட்டாள். சாதாரண பூனம் சேலை, ஏற்றி கட்டி இருக்க, காலில் ரப்பர் செருப்பு, இழுத்து போட்ட கொண்டை, கக்கத்தில் ஒரு சாக்கு இது என்ன என்று வினவியவளிடம்,
“ சோளம் கொண்டு வந்த சாக்கு”
“கொண்டை போட்டு வந்திருக்கீங்க” சாதாரண கேள்வி தான்.
“அது, மத்த நாள்ளாம் வண்டிய லேட்ட தேச்சுக்கு வருவான். நானும் சாதரணமாக நின்னு தலையில சீப்பு வைக்கிறேன். வண்டி வந்துருச்சு அவசரத்துல கொண்டைய போட்டு வேகமா ஓடி வந்து ஏறினேன். பஸ்ன ஆறு ரூபா தான். ஆட்டோக்கு இருவது ரூவா கேக்குறான்” என்று தலை வாராமல் வந்ததற்கு விளக்கம் சொல்ல,
“ ஓ! எங்கள பார்க்கலன என்ன பண்ணிருப்பின்க”
“நம்ம ஊர் காரவக யார் கூட வாச்சும் வந்துறுப்பேன். யாராவது சந்தைக்கு வராமல போவாக,”
“எப்பவும் இந்த மாதிரி சேலையே கட்டுறிங்களே, நல்ல சேலை கட்ட மாட்டீங்களா”
“ நான் என்ன உங்கல மாதிரி பதவிசாவ இருக்கேன். நீங்க நாலு இடத்துக்கு போவீங்க, வருவீங்க, பெரிய விசேஷ வீட்டுக்கு போறிங்க. ஆன நான் காட்டு வேலை பாக்குறவ இப்படித்தான் இருப்பேன்”
“அப்போ நீங்களே சொல்றீங்க. நாங்க அப்படித்தான், நீங்க இப்படிதான்னு”
“ஆமாம்” என்று யோசனையாக பூர்ணா தலையசைத்து, “இது எத்தனாவது மாதம்” என்க
“ஆறு” என்க.
சிரிப்புடன், “ வயிறு ஊசியா தான் இருக்க ஆம்பள பிள்ளையோ. எதுவா இருந்தா என்ன நல்ல படிய என் மகனோ, மகளோ பெத்து குடு, நான் பார்த்துக்கிறேன். ஒத்த பிள்ளையொட நிக்காத, நாங்க எதுக்கு இருக்கோம் வளத்து ஆளாக்கிட மாட்டோம்”
“ஓ, என் பிள்ளை உங்களுக்கும் பிள்ளைய” என்க
“இல்லையா, பின்ன வேலுக்கு நான் மாமா மவ, கட்டிகிற முறை. அப்போ உன் பிள்ளைக்கு நான் யாராம்?” கிராமத்து முறை பசங்களுடன் பேசும் கிண்டலில் உன் பிள்ளைக்கு அம்மா முறை என்று பேச,
“என் பிள்ளைக்கு நீங்க அம்மா முறைன்ன, மாமாவுக்கு நான் பொண்டாட்டி. அப்போ நீங்களும் பொண்டாட்டி முறையா?” என்று உக்கிரமாக கேட்க,
அதிர்ந்து பார்த்த பூர்ணா நெஞ்சை அழுத்தி பிடிக்க,
தாமரையின் கண்களில் வன்மம் அதிகரித்தது. விசேஷம் முடித்து மால், ஷாப்பிங், ஓட்டல் போவது என்று பெரிய பட்டியல் போட, அனைத்திற்கும் சரி சரி என்று தலையசைத்து விட்டு. பூர்ணாவை பார்த்ததும் அவள் பின்னாடி சென்ற வேலு மீது கோபம் அதிகரித்தால், அதற்கு காரணமான பூர்ணாவை கடித்து குதரும் வன்மம் அதிகரித்தது.
“ஒரு சாதாரண உடை, அதுலயே உங்களால என்னோட ஒட்டி நிக்க முடியலையே, அப்போ எந்த நினைப்புல என் புருசனோட சேர்ந்து நிக்குறீங்க”
“ நீங்க கட்டி இருக்குற சேலைய, சும்மா வீட்டுல கூட நான் கட்ட மாட்டேன். அவ்வளவு மட்டம். வெறும்.. வெறும் இருவது ரூபாய்க்கு கணக்கு பாக்குற நீங்க, இருவது லட்ச ரூபாய்க்கு கார் வச்சிருக்க என் புருஷனோடு தோது போடுறீங்க”
“உங்களுக்கு தான் தகுதி, தராதரம்,அந்தஸ்து எதுவும் கிடையாது. ஆன எங்களுக்கு அப்படி இல்லையே! என் புருசன் மதிப்பு தெரியுமா?, இன்னிக்கு நின்னு பேசுனவங்க எவ்வளவு பெரிய ஆட்கள், அவங்க முன்னாடி கொஞ்சமும் மரியாதை இல்லாமல் ஏலே வேலுன்னு” பேர் சொல்லி வாரிங்க. அதுவும் எப்படி அழுக்கு சேலை, எண்ணெய் வச்சு கொண்டை, கக்கதில சாக்கு. உங்கள வச்சு எங்க மதிப்ப எடை போட முடியுமா?”
மிகவும் அமைதியாக சின்ன சிரிப்போடு கடந்து செல்லும் தாமரையிடமிருந்து, இப்படி ஒரு பரிமாணத்தை எதிர்பார்க்கவே இல்லை. அவள் பேச பேச விக்கித்து போய் நின்றாள் பூர்ணா.
“அப்படி என்ன உறவு, ஊர் உலகத்தில இல்லாத உறவு. நீங்க அவருக்கு யாரு? உங்க உறவுக்கு என்ன பேரு? உங்களுக்கு அவர் மேல என்ன உரிமை இருக்கு, என்னை தாண்டிய அவருக்கு நீங்க?…”
“புருசன், பொண்டாட்டிய வந்துருக்கோம். எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். இங்கிதம் தெரிஞ்சு ஒதுங்காம கூட ஒட்டி வாரிங்க. நூறு, அம்பது வேணும்னா வாங்கிட்டு போக வேண்டி தானே. அது சரி, கல்யாணம்னு ஒன்னு ஆனத்தான இந்த விவரம் எல்லாம் புரியும்.
“ நாளைக்கு உங்களுக்கும் கல்யானம் ஆகும், உங்க தகுதிக்கு ஏத்த கேனையோ, கிறுக்கோ வராமலா போவான். அப்ப புரியும் என் உணர்வு” என்றவள்,
“என்ன சொன்னீங்க ஊர்காரங்களை தேடி வந்திங்கள”, என நக்கலாக கேட்டவள்.
“அப்படி எந்த ஆம்பிளை வந்தாலும் வண்டில ஏறி போவீங்களோ. அதான் உங்க தராதரம்மா, அதான் எங்க அத்த உங்களை வீட்டுக்குள்ள கூட விடல போல, நான் தான் தப்ப நினச்சுடேன்”…
பின் இளக்கார தொணியில், “ எங்க அத்த சொன்னாங்க, இருக்க இடம் கொடுத்தா படுக்க இடம் கேட்பான்னு, அது உண்மை தான் போல, என் புள்ளைய உங்க புள்ளன்னு சொல்றீங்களே, நீங்களும் இடத்த பிடிக்க தான் பாக்குறீங்களா..” என்று ஆங்காரமாக கத்தியவளின் பேச்சை கேட்டு கொதித்து போனாள் பூர்ணா.
“ ஏட்டி! வார்த்தைய பார்த்து பேசு. சங்க அறுத்துறுவேன்”.
“வேலு எனக்கு முக்கியம் தான். அதுக்கு நீயி என்ன பேசினாலும் அமைதியா போவேனு நெனைக்கிறையோ. வேலு ஒருத்தனுக்கு மட்டும் தான் மறுவாதி, அதா தாண்டி யாருக்கும் நான் அடங்கி போக மாட்டேன். இப்ப கூட உன் வயித்த பார்த்து தான் மடங்கி போறேன்”.
“என்ன பத்தி இம்புட்டு சொன்ன உன் மாமிய, என் குணத்தை சொல்லலைய!.. சொல்லி இருப்பாங்க எப்படி சொல்லாம இருப்பாங்க. என்கிட்ட நிறைய சுமந்தது அவங்க தான. அப்படி இருந்தும் நீயி பேசுரன்ன.. தாமரை சிண்ட ஆஞ்சுறுவேன். ஆன வேலு பொண்டாட்டிய நான் தொட மாட்டேன்னு தான வாய் பேசுறவ”
“உன் இடத்தில ஒரு ஆம்பிள்ள நின்னு பேசுனா, அசராம சங்க அறுத்துறுப்பேன். யாருக்கும் அஞ்சுறவ இல்ல இந்த பெருமாள் மவ!”
பூர்ணா தொண்டை இறுக, கண்ணில் கோபத்தோடு பேச பேச, அரண்டு போய் பார்த்தாள் தாமரை. உண்மை தான் வேலு மீது அவளுக்கு இருக்கும் அன்பு தானே தாமரையை தைரியமாக பேச தூண்டியது.
“ உங்களுக்கு தான் தகுதி, தராதரம், அந்தஸ்து இருக்கா. ஏன் எனக்கு அதெல்லாம் இருக்காத. கூலி வேலை பார்த்தாலும் என் சொந்த உழைப்பில் தான் நிக்குறேன், இருவது ரூபாய்க்கு கணக்கு பார்த்தாலும் என் உழைப்பு தானே, யாரையும் ஏமாத்தி பொழப்பு நடத்தல, அதன்லே என் தகுதி…”
“இருவத்தி அஞ்சு வயசு ஆச்சு எனக்கு. ஒருத்தன் ஒரு சொல்லு சொல்லுவான என் நடத்தைய, உன் மாமியார் கிட்ட கேளு பூர்ணா பத்தி, நெருப்புன்னு தெரியும் அதான் என் தராதரம்…”
“பணத்த வச்சு மட்டும் உறவு பிடிக்காம, சொந்தமா எல்லாரையும் இழுத்து போறதுதான் அந்தஸ்த்து எனக்கு”.
“கொடியரசி மருமவ கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்க, உங்க புத்திய காட்டிடீங்க” .
“ அப்புறம் என்ன சொன்ன எந்த ஆம்பிள வண்டியிலும் போவயான்னு, போன என்னவே தப்பு. என் ஊர்காரவாக எல்லாம் பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன், தம்பி முறை தான வேணும். என் வீட்டு ஆளுக கூட நான் போன என்ன தப்புங்கிறேன்”.
“வேலு மேல எனக்கு என்ன அப்படி ஒரு உறவுன்னு கேட்டியே?. நீயி சொன்ன மாதிரி பெரிய ஆளுகளுக்கு மத்தியில வேலு நின்னாலும், இந்த அழுக்கு சேலை கட்டி சாக்கு பை புடிச்சு போற பூர்ணா கூப்பிட்ட, நீ சொன்ன தகுதி, தராதரம், அந்தஸ்த தூக்கி போட்டு வாரானே, அந்த அன்புக்கு தாம்லே அவன் மேல நான் வச்ச உறவு” என்று மூச்சு வாங்க பேசியவள்.
வைராக்கியமாக அவளிடம் அழுக கூடாது என்று நினைத்தாலும். கண்ணில் நீர் வழிய “தகப்பன் சாமியா நினைச்சா எங்க உறவ அசிங்க படுத்திடீல” உன் வயித்த பார்த்து நான் சும்மா போறேன்…”
“என்ன தாண்டி ஒரு உறவான்னு கேட்டியே, உனக்கு தைரியம் இருந்த, வேலுவ பார்த்து கேளுவே! உனக்கு அவ யாருன்னு” அவன் சொல்லுவான் பதில.
“இப்ப சொல்றேன் கேளுவே வேலு எனக்கு உறவு தான். அந்த உறவுக்கு நீயி என்ன பேரு வேணாலும் வச்சுக்க. நான் சாகுற வரைக்கும் அவன் நல்லது, கெட்டதுக்கு நான் இருப்பேன். என்னிக்கும் வேலு கூட நான் நிப்பேன். யாரு என்ன சொன்னாலும் இனி எனக்கு கவலை இல்லை” என்று ஆத்திரமாக சொல்லியவளை அதிர்ந்து போய் பார்த்தால் தாமரை.
வேலுக்காக அவள் தன்னை ஒன்றும் சொல்ல மாட்டாள் என்று நினைக்க. பூர்ணா வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டாள். பயந்து போய் அவளை பார்த்த தாமரையை ஒரு பொருட்டாக எண்ணாமல்,
தன் போக்கில் ஒரு சிப்ப அரிசி மூட்டையையும் அசால்டாக தலையில் தூக்கி வைத்து தன் ஊரை நோக்கி எட்டி வேக நடை போட்டாள்.
error: Content is protected !!