Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 11

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 12.1

               வேலு இரண்டு நாள்களாக, பூர்ணாவை தேடி கொண்டிருக்கிறான் கண்ணில் அகப்படவில்லை. அவள் வேலைக்கு செல்லும் காடு மேடு பள்ளம் என்று அலைந்தும் அவளை காணாதது தான் மிச்சம்.

             அன்று, திரும்பி வந்து பார்த்த வேலு கண்டது. தாமரை மட்டும் தனியாக நிற்க, பூர்ணாவை காணவில்லை. எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் தாமரையிடமிருந்து மழுப்பலான பதிலே வர, ஏதோ நடந்திருக்கிறது என்று ஊகித்த வேலுக்கு, அது என்னவென்று தான் தெரியவில்லை. தாமரையிடம் இனி ஒரு வார்த்தை வாங்க முடியாது. பூர்ணா ஆளவே காணோம்!.

            தாமரைக்கு தெரியும், பூர்ணாவிடம் தான் பேசியது மட்டும் தெரிந்தால், அவ்வளவு தான் கொண்ணே போட்ருவான். காதல் மனைவி, மாசமாக இருக்கும் பெண் என்றெல்லாம் பார்க்க மாட்டான். அவனின் பூர்ணா மீதான அந்த அன்பு தானே தாமரையை கோபம் கொள்ள செய்யும் விசயம். அப்படி என்ன இருவருக்கு இடையேயான உறவு, தாயாக, தங்கையாக, மனைவியாக இல்லாமல், ஒருத்தி மீது தோன்றும் அன்பை தோழமை என்ற வரையறைக்குள் வைத்து பார்க்கும் எண்ணம் தாமரைக்கு வரவில்லை. இருவருக்கும் இடையே உள்ள அன்பு, அவளுக்கு தப்பானதொரு அர்த்ததை கொடுக்க முற்று முழுதாக எதிர்த்தால் வேலு – பூர்ணாவின் நட்பை.



Advertisement

            இரண்டு நாள்களாக எழக்கூட முடியாமல், காலும், இடுப்பும் ஒரே குடைச்சல் பூர்ணாக்கு. அன்று ஏதோ ஒரு வைராக்கியத்தில், தாமரையின் பேச்சில் ரோச பட்டு அரிசி மூட்டையை தலையில் சுமந்து கொண்டு ஊர் வந்து விட்டாள். கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் மனதில் கோபம் தணலாக ஏறிய, காலில் வலி தெரியவில்லை. வீடு வந்த பின் தான் தெரிந்தது கால் ரெண்டும் பொத்து, புண்ணாய் போனது, இடுப்பும் வீக்கம் கண்டது.

            அத்தோடு தாமரையின் வசவுகளை கேட்டு கொண்டு அங்கேயே நிற்க பிடிக்க வில்லை. கணவன், மனைவி உறவுக்கு இடையில் நீ வருகிறாய் என்று தப்பானதோர் அர்த்தத்தில் பேசிய பின், எந்த முகத்தை வைத்து கொண்டு அங்கேயே நிற்க. பெருகும் கோபத்தையும், பொங்கி வரும் கண்ணீரையும் எவ்வாறு அடக்க, வேலுக்க தெரிந்தால் விசயம் வேறு விதமாக முடியும். மாசாமாக இருக்கும் பெண், அவளின் பாவத்தை தான் ஏன் தலையில் சுமக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வேலுக்கு, அவன் மனைவி ரொம்ப இஷ்டம். தன்னால் அவர்களுக்குள் ஒரு பிரச்சினை என்றால் தாமரை சொன்ன வார்த்தைகள் உண்மையாகி போகுமே.

                அவனிற்கு என்று குடும்பம், குழந்தை இருக்க தன்னை எதற்கு இடையில் இழுக்க வேண்டும். தாமரை மீதான அவனின் காதல் எத்தகையது என்று பாராமல், நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கு பாய்வது போல், தகப்பன் இல்லா பெண் என்று தன் மேல் காட்டும் கரிசனத்தை புரிந்து கொள்ளாமல் காக்கையை விரட்டுவது போல தன்னை விரட்டுகிறார்களே.

Advertisement

           போதும் இனி வேலு உடன் தன் பழக்கம். வேலுவிடம் பேசுவதற்கு பயந்து கொண்டு, தன்னை முட்டி முட்டி தள்ளுவது ஒருவித ஆதங்கத்தை ஏற்படுத்தியது, அது கோபமாக மாறி தாமரையை தாக்கும் முன் பின்வாங்கி விட வேண்டும். அதுவும் வேலுவிற்காக மட்டுமே, அவன் மனைவி மீது துளி அளவு மரியாதை இல்லை.

Advertisement

       அதுமட்டுமில்லாமல், தானும் இன்னொரு வீட்டுக்கு வாழ போகும் பெண். இவர்கள் ஆதங்கத்தில் இஷ்டத்திற்கு பரப்பி விட்டாள் தன் பேர் அல்லவா கெட்டு போகும். தகப்பன் இல்லா பெண், ஏழை, ஜனக்காட்டும் அதிகம் இல்லை, எளிதாக யாரும் ஒரு சொல் சொல்லி விடுவர்.

               வள்ளிக்கு தன் மகளை பற்றி தெரியும் என்றாலும், ஊரில் ஒரு சொல் வந்தால் தாங்க மாட்டார். தனக்காக மட்டுமே வாழ்பவர், தன் திருமணம் தான் அவரின் பிறவி பலன், அதற்கு பங்கம் விளைவிக்க கூடாது. ஏதேனும் ஒன்று என்றால் வயது பெண் என்றுலாம் பார்க்க மாட்டார் கட்டை வெளக்கமாரு ஓடிய வரிவரியாக கோலம் போட்டு விடுவார். பூர்ணாக்கு தாயின் அடியில் எப்போதும் பயம் இருக்கும். எவ்வளவு வாய் பேசினாலும் தாய்க்கு பயந்து எல்லை தாண்ட மாட்டாள்.

                இருவரும் தள்ளி தள்ளி நிற்பதே இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது என்று தோன்றினாலும், அதை உணர்ந்து ஒதுங்கி கொண்டாலும். காந்தம் ஒன்றை ஒன்று ஈர்ப்பது போல், பார்க்காமல் இருக்கும் வரை தான் வைராக்கியம். பார்த்து விட்டால் சிட்டாக அவனை நோக்கி கால்கள் ஓடி விடும். வேலுக்கும் அவ்வாறே மற்றவை மறந்து சம்மு புறம் திரும்பி விடுவான். அது தானே இங்கு தலையா பிரச்சனை.

Advertisement

            நாட்கள் அதன் போக்கில் செல்ல, வள்ளி தீவிரமாக பூர்ணாக்கு மாப்பிள்ளை பார்த்தார். தினமும் ஒரு வரன் வர பூர்ணா தன் அழகில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். பெரியதாக ஒன்றுமில்லை பழைய சேலையை விட்டு கொஞ்சம் புதுசு, முகத்தில் சின்ன சின்ன அலங்காரம், அலைச்சல் வெளி வேலையை குறைத்து, தினமும் தன் தோழிகளுடன் கோவில் செல்வது, தலை நிறைய பூ, கையில் மருதாணி என்று தன்னை புத்துணர்வாக வைத்து கொண்டாள். அது அவளிற்கு ஒரு தனி அழகை தந்தது.

                வேலுக்கு எப்போதும் போல, முழு நேரமும் தாமரையுடன் தான். மாதம் ஏற ஏற அவனால் தான் சமாளிக்க முடியவில்லை. அவளின் கிறுக்கு தனங்களையெல்லாம் குடும்பத்தினர் பொறுத்த போயினர். வேற வழியும் இருக்க வில்லை. ஏதேனும் ஒன்றை சொன்னால், நல்லதா, கெட்டதா என்று யோசிக்காமல். தன்னை எப்படி சொல்லலாம், என்னை சொல்லி விட்டாயா உன்னை ஒரு கை பார்க்காமல் விட மாட்டேன், தன்னை வற்புறுத்தி குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி, எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்து என்று தாமரையின் குண நலன் பிடிக்கவில்லை என்றாலும் குழந்தை வரும் வரை அனுசரித்து செல்வது என்று முடிவு செய்தனர்.

              நாளை குழந்தை பிறப்பு, வளர்ப்பு என்று வரும் போது, தன்னாலே பொறுப்பு வந்து விடும். தாங்களும் அப்படித்தானே பதினாறு வயதில் திருமணம் முடித்து வந்து ஒன்றும் தெரியாமல் தக்கி, முக்கி கற்று குழந்தை பிறப்பு வந்த பின் தானே, குடும்ப பொறுப்பை தனியே சுமந்தோம். குழந்தை வந்தால் தாமரையும் மாறி விடுவாள் என்று பெரிதாக நம்பினர் அரசியும், பெரியாத்தாவும்.

             தாமரை விருப்பத்திற்கேற்ப அவள் பட்டியலிட்ட ஒன்றும் மிஞ்சாமல், வெகு விமர்சையாக வளைகாப்பு நடந்தது. அருகருகே வீடு என்பதால் பேருக்கு தாய் வீடு சென்று மீண்டும் தன் வீடுக்கே வந்து விட்டாள். தலை பிரசவம் கணவன் மனைவி தனித்தனியே இருந்தால் சுளுவாக இருக்காது என்று இருவரும் ஒன்றாகவே தங்க வைத்தனர்.

          விசேசத்திர்க்கு நேராகவே வேலுவிடமிருந்து அழைப்பு வந்த போதும், செல்லும் மனசு வள்ளிக்கும், பூர்ணாக்கும் இல்லை. தாங்கள் அங்கு செல்வதை யாரும் விரும்பமாட்டர், அத்தோடு அரசி சும்மா இருக்கும் ரகம் அல்ல, ஏதேனும் பேசி கலவரம் ஆகிவிட்டால். தற்போது தான் ஒரு வரன் தகையும் போல இருக்க, மாப்பிள்ளை வீட்டாரும் நாலு இடத்தில் விசாரிப்பர். வீணாக பூர்ணா பேர் ஏன் கெட வேண்டும். யாராவது வழிய சென்று வலி வாங்குவார்களா. பூர்ணாவும், தாமரையை மனதில் கொண்டு செல்ல வில்லை.

           ஒன்பது மாத முடிவில் தாமரைக்கு விட்டு விட்டு வலி வர, வீடே அமர்களபட்டது. சொந்தமும், சுற்றமும் சூழ நின்று கவனித்து கொள்ள, அந்த நேரத்திலும் வரிசையாக வந்து விட்டார்கள். வேலுக்கும் பரபரப்பாக தான் இருந்தது.

        பெரியாத்தா சொல்லி விட்டார், “ அத்தா தாமரை! வலி லேசத்தான் வருது, இன்னும் நேரமிருக்கு. ஆஸ்பத்தரிக்கு இப்பவே போக வேணாம், வீட்லயே நல்ல வலிய விட்டுரு, நீர் இறங்க போவோம், அப்பதான் சுளுவா இருக்கும். இப்பவே போனா புள்ள பயந்துக்கும். நம்ம எல்லாம் கூட நின்ன கொஞ்சம் தெம்பு வரும்ல!”….

               நடு இரவில் தாமரை பாத்ரூம் செல்ல கூடவே, அவளின் அம்மாவும் சென்றார். அவளுக்கு ஏதோ வெள்ளையாக கொடி மாதிரி காண, பூமணி சொல்லி விட்டார் ஆண் குழந்தை தான் என்று.

      “சிவப்பு கொடி விழுந்த தான் பொம்பள பிள்ளை, உனக்கு வெள்ளை கொடி தான் கண்டது ஆம்புள்ள பிள்ளை தான் தாமரை. அம்மா நான் சொல்றேன், இனி தாமதிக்க வேண்டாம் ஆஸ்பத்திரி போவோம்” என்று சொல்லிவிட,

               பெரியாத்தாவின் பேச்சை காதில் வாங்காமல், பிடிவாதமாக நின்று ஆஸ்பித்திரி சென்று விட்டாள். பின்னோடு அனைவரும்.

                  அவளை பரிசோதித்த டாக்டர், “ வலி வராம ஏன் வந்தீங்க! சாதாரண சூட்டு வலி மாதிரிதான் தெரியுது. இன்னும் தலை திரும்பல சுத்தி வந்து கீழ இறங்கட்டும். அத்தோடு, நீர் கூடி இருக்கு, அட்மிட் ஆகுங்க காலை வர பார்ப்போம். இல்லைனா ஆபரேசன் தான்”… என்று சொல்லிவிட,

                வந்திருந்த சொந்தம் எல்லாம் ஏதேதோ பேச, “ தாமரை நீ எழுந்து நட, வலி வந்தா சுகப்பிரசவம் தான். அந்த டாக்டர் காசு புடுங்க என்னவோ சொல்லுது. எங்களுக்கு தெரியாத” என்று ஆளாளுக்கு பேச,

            வேலுக்கு கிட்ட நெருங்க முடியவில்லை. அவ்வளவு சொந்தம் மத்தியில் தள்ளி தான் நிற்க்கணும். எதுவும் சொல்ல முடியாது, “ உனக்கு என்ன தெரியும் , பொம்பளைக விசயம்” என்று முடித்து விடுவார்.

          தாமரையும், நான் நார்மலா தான் பிள்ளை பெறுவேன் என்று, டாக்டர் சொன்னதை கிடப்பில் போட்டு, மருத்துவமனையின் அந்த கோடிக்கும், எந்த கோடிக்கும் வேக வேகமாக நடக்க, அடுத்த அரைமணி நேரத்தில் தண்ணி குடம் உடைந்து விட்டது.

            டாக்டர் வந்து அவ்வளவு சத்தம், யார் சொல்லி தான் கேட்பாள் தாமரை. குழந்தையின் தலை திரும்பாமலே நீர் இறங்க ஆப்ரேசன் செய்து விட்டனர்.

               அனைவரும் வெளியில் பரபரப்பாக காத்திருக்க, குழந்தையின் அழுகை காதை கிழித்தது. பெரியாத்தா, “ ஏலே வேலு, சத்தம் ஓங்கி வருதுலே, உமக்கு மவ தான் கேட்டுக!”… என்றார் சிரிப்புடன்.

           அரசி தான், “ எக்க! உங்களுக்கு பொம்பள பிள்ளைன, என் மகனுக்கும் அப்படியா இருக்கும். எனக்கு பேரன் தான், பாரும்” என்று சொல்லி முடிக்க , நர்ஸ் வந்து சொல்லி விட்டார் பெண் குழந்தை என்று. அரசிக்கு முகமே சுருங்கி விட்டது.

              வேலுக்கு மகிழ்ச்சி தான். எந்த குழந்தை என்றால் என்ன நல்ல படியாக பிறந்ததே போதுமானதாக இருந்தது.

              தாமரைக்கு முற்று முழுதாக ஏமாற்றமே. ஏனோ! பத்து மாதமும் சுமந்தது வேஸ்ட் அப்படின்ற மனப்பான்மை தான் வந்தது அவளுக்கு. சுருங்கிய முகத்துடனே தலையை மட்டும் திருப்பி, அரசி காட்ட குழந்தையை பார்த்தவள் அரண்டு நின்று விட்டாள்.

            குழந்தை அப்படியே நெல்லையப்பன் ஜாடையில், தென் வட்ட மக்களுக்கு உரிய கலரில், இடது பக்க கன்னம் முழுவதும் மச்சமாக இருந்தது. வேலுவின் தந்தை, அவனின் பெரிய தந்தை, அவன் அப்பத்தா என்று எல்லோருக்கும் ஒரு பக்க கன்னம் முழுவதும் மச்சம் இருக்கும். வேலுவுக்கு அப்படி ஏதும் இல்லை தான், ஆனால் அவனின் மகளுக்கு வந்து விட்டது.

              தாமரை முழுதாக ஓய்ந்து போனாள். மகளின் முகத்தை பார்க்க கூட பிடிக்க வில்லை. குழந்தையை அனைவரும் கொண்டாட, ஏனோ! அவள் தொட்டு கூட பார்க்க வில்லை. ஏதோவொரு சிந்தனையில் படுத்தே இருந்தவளை, ஆபரேசன் பண்ணிய உடம்பு தேராட்டும் என்று வேலுவும் விட்டு விட. அதுவே, பிழையாகி போனது.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!