வெந்து தணிந்தது காதல் – 14
ஆழ்ந்த இரவின் அழியா நிலவின் நிழலில், அந்த வீட்டு மாடியேறி குதித்திருந்தான் ஷிவ்.
ஷிவ்வின் உள்ளமெல்லாம் உலைக்கலனாக கொதித்துக் கொண்டிருந்தது. இத்தனை மாதங்களாக எதுவும் பேசாமல் அவளை விட்டு வைத்திருப்பது தவறு என்றே உணர்ந்தான் அவன்.
பேசாமல் தீராது.. பேசாமல் அவள் அடங்கவும் மாட்டாள்! பேச்சில் அவள் அடங்கவில்லை என்றால், அவளை அடக்கும் முறையை அவன் தேர்ந்தெடுத்துத் தான் ஆக வேண்டும் எனும் நிலைக்கு அவன் சென்று விட்டான்.
Advertisement
மாடியிலிருந்து இறங்கி, முந்தினம் போல அவள் சென்ற வழியை மனதில் நிறுத்திக் கொண்டு அவளது அறையை சரியாகக் கண்டுபிடித்து உள்ளே நுழைந்தான்.
இப்பொழுது மகாராணிக்கு ஆனந்த சயனம் தான். முந்தைய நாளைப் போல மனம் தளும்பவோ.. தடுமாறவோ இல்லாத நிம்மதியான சயனம் போலும்.. என்று இகழ்ச்சியாக எண்ணிக் கொண்டவனின் உள்ளமும், உடலும் கோபத்தில் வெடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் அந்த வெடிப்பெல்லாம் ஒரு கணம் தான். அவளது பால் முகத்தைச் சில கணங்கள் வெறித்துப் பார்க்கவும் உள்ளுக்குள் நித்திய சுகந்த அமைதி!
Advertisement
பாளம் பாளமாய் வெடித்திருந்த இதய ஊற்றுகளில் அமுத சுரபி!
Advertisement
தன்னையும் அறியாமல் அவள் அருகே நெருங்கி நின்றவன், அவனை அறியாமலே அவளது கழுத்திலிருந்து உடல் முழுவதும் போர்த்தி இருந்த போர்வையின் வழியே தனது பார்வையைக் கொண்டு சென்றான்.
ஆணவனின் கண்கள், அவளது பாதத்தில் படிந்தன.
தன்னிச்சை செயலாய் அவள் பாதமருகே மண்டியிட்டு மெல்ல இதழ் ஒற்றினான்!
Advertisement
முன் தினம் போலவே அசையாது கிடப்பாள் அவள் என்று அவன் எண்ணியிருக்க, ஆனால் அவனது இதழ் ஒற்றுதலில் விருக்கென எழுந்த நவிராவின் கண்களில் கலவரமும், வெடித்து கிளம்பும் கண்ணீரும்.
கூடவே தொண்டையிலிருந்து அலறும் சத்தத்தை பெரு முயற்சி செய்து இரு கைகளாலும் அடைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவளையும் அறியாமல் அதிர்ந்து விரிந்த விழிகளில் இங்கு என்ன செய்கிறாய் என்றதாய் அவள் பார்க்க.. அந்த அதிர்ச்சியிலும் மிரட்சியிலும் கோபம் மட்டுமே வந்தது ஷிவ்வுக்கு!
அந்தக் கோபத்துடன் அவன் பேச ஆரம்பிக்கும் முன்பாகவே அடக்கப்பட்ட குரலில் நவிரா பேசத் தொடங்கி விட்டாள்.
“யாரைக் கேட்டு இந்த வீட்டுக்கு நீ வந்த? அதுவும் எவ்வளவு தைரியம் இருந்தா என் ரூம்குள்ளேயே நீ வந்து இருப்ப?” என்று அவள் ஆத்திரமாய் கேட்க, ஷிவ்வுக்கோ ஜிவு ஜிவு என கோபம் பொங்கியது.
“யாரைக் கேட்டு நன் வரணும்? இங்க வரதுக்கு எனக்கு யாரோட அனுமதியும் தேவையில்லை..
நீ தாலியைக் கழட்டி தூர எறிஞ்சுட்டா.. எனக்கு அந்த உரிமை இல்லைனு நினைச்சுட்டு இருக்கியா?” என்று அவன் கேட்க, அவனை அருவருத்துப் பார்த்தாள் நவிரா.
“வெறும் தாலி கட்டிட்டா மட்டும் என் ரூமுக்குள்ள வரதுக்கு உனக்கு அனுமதி இருக்கா?” என்று அவள் நெருப்பாய் கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன்..
“தாலி கட்டாம, அந்த சூரியவர்மனுக்கு உன் ரூமுக்குள்ள வரதுக்கு அனுமதி இருக்கு இல்ல?” என்று அவன் கேட்க, நவிராவின் முகம் சிவந்தது.
அவள் முகம் சிவந்தது கோபத்தில்.. ஆனால் அவனுக்குப் புரிந்த காரணமோ வேறு!
அவள் அவமானத்தில் இப்படி சிவந்து நிற்பதாய் எண்ணியவன்..
“என்ன.. இன்னைக்கு வரலையா அவன்?” என்றும் வேறு கேட்க, “ச்சீ..” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் நவிரா.
‘இன்னும் எவ்வளவு தான் நீ கீழ இறங்கிப் போவ?’ என்று அவள் மனம் அவனைக் கேட்டது.
“என்னைப் பத்தியும்.. என் வாழ்க்கையைப் பத்தியும் பேசறதுக்கு உனக்கு எந்த அருகதையும் கிடையாது. முதல்ல இங்கிருந்து வெளியே போ..” என்று அவள் தீயாய் கொட்ட, அவனோ..
“போகலைன்னா என்னடி பண்ணுவ?” என்று அவளது கழுத்தைப் பிடித்தான்.
“இப்பவே சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவேன். போன் பண்ணி ப்ரஸ்ஸ வர வைப்பேன்.” என்று அவள் ஆத்திரமாய் கூற, அவளைச் சட்டெனப் படுக்கையிலேயே தள்ளியவன்,
“ப்ரஸ்ஸ கூப்ட்டு என்ன சொல்லுவ? என் புருஷன் என்னை ரேப் பண்ண வரான்னா?
நீ இதுவும் சொல்லுவ.. இதுக்கு மேல வேற என்ன வேணாலும் சொல்லுவ.. ஆனா பாரு இந்த மாதிரி உன் பேர் கூட, தன் பேர் சேர்ந்து கிசுகிசுக்கப் படறது அந்த சூரியவர்மனுக்கு வேணா சந்தோஷமா இருக்கலாம்.
ஆனா எனக்கு.. அருவருப்பா இருக்கு. அந்த ஒரே காரணத்துக்காகத் தான் இப்ப நான் போறேன்..” என்று விட்டு அவன் வார்த்தைகளில் கூறிய அந்த அருவருப்பை, முகம் முழுமைக்குமாய் நிரப்பிக் கூறி அங்கிருந்து விறுவிறுவென வெளியேறிப் போக, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையில் சரிந்தாள் நவிரா.
எத்தனையாய் இனித்தான் அவன்? இப்பொழுது எவ்வளவாய் கசக்கிறான்?
அவள் காதுக்குள் இன்னமும் அந்த குரல் பஞ்சாமிர்தத்தின் பசுஞ்சுவையாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..
“எனக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சா போதும் நவிரா. வேற யாருக்கும் உன்னைப் பத்தின எந்த சர்டிபிகேட்டும் தேவையில்லை.
அம்மாவுக்கு உன்னைப் புரியும். அது போதும் நமக்கு.” என்று கூறினான் அவன்.
“என்னை உங்க வீட்ல ஏத்துப்பாங்களா? ஏன்னா என்னோட வேலை அப்படி.. இந்த மாதிரி பாப்சிங்கரா இருக்க ஒரு பொண்ணு அப்படின்னு உங்க வீட்ல எதுவும் தப்பா நினைக்க மாட்டாங்களே? என்ன தான் எல்லாத் துறையைப் போல இங்கயும் நல்லவங்க கெட்டவங்கனு கலந்தே இருந்தாலும்..” என்று பரிதவிப்பாய் அந்த க்ரூஸில் அவர்களுக்கு என முழுவதுமாய் கண்ணாடியில் அமைக்கப்பட்ட ஓர் அறையில், வானத்து விண்மீன்களை விழிகளால் தழுவியபடி அவள் கேட்க.. அதற்கு ஷிவ் கூறிய பதில் தான் அது!
அந்த க்ரூஸ் பயணம் எத்தனை இனிமையாகத் தொடங்கியது?
காதல் பகிர்ந்து முதல்.. இருவரும் மனம் பகிர்ந்ததில் நிறைந்து வழிந்திருந்தது!
ஆனால் நவிராவுக்கு உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
சிறுவயதிலிருந்தே.. ஏன் பிறந்ததிலிருந்தே தனக்கென யாருமே இல்லாது வளர்ந்தவள். பெற்ற தாய் இருந்தும், இல்லாத நிலை!
அவருக்குத் தன்னையும்.. தான் செய்த பிழையையும், நொந்து நொந்து.. தன் அண்ணன், அண்ணியிடம் குட்டு வாங்கி, குற்ற உணர்ச்சியில் தத்தளித்து.. உயிர் வாழ்ந்து கிடக்க அந்த வீட்டில் மாடாய் உழைத்து வேலை செய்து கழிக்கவே நேரம் போதாமல் இருந்தது.
இதில் செய்த தவறுக்குத் தண்டனையாக கண் முன்னே இருக்கும் மகளைப் பார்த்துப் பார்த்து இன்னும் அவர் நொந்து போக, ஒரு கட்டத்தில் மகளே, ஏனோ தாய் மனம் தன்னைக் கண்டால் தீய்ந்து போகிறது என்ற உணர்வில் அவர் கண்ணில் கூட படாமல் ஒதுங்கி விட்டிருந்தாள்!
அப்படித் தாயிடமிருந்தே ஒதுங்கியவளுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நட்புகள் இருந்தாலும், அவர்கள் இவளை உயிராய் நினைத்தாலும்.. தனது நிலையை.. தன் தாயின் நிலையை எண்ணி பெரிதொரு தாழ்வுணர்ச்சி.
அதனாலேயே தன்னை நேசிப்போருடன் கூட அவ்வளவாக ஒட்டாமல் இருந்தவள், தனது உயிர் கொண்ட நேசமாய் இந்த பாப் உலகத்திற்கு வந்து சேர்ந்தது அவளைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சாதனை! அவளே கர்வம் கொள்ளும் சாதனை!
அவளும்.. பாடலும் – இசையும் மட்டுமே அவள் உலகை நிறைத்திருக்க, இப்பொழுது அவளுக்கான புது உலகமாய் நிறைய வந்திருந்தான் ஷிவ்!
இவள் திருமணத்தைப் பற்றி பேசவும் ஷிவ் ஒரு கணம் திகைத்தான். அப்பொழுது தான் இருவரும் க்ரூஸ் பயணம் முடித்துத் திரும்ப வந்திருந்தனர்.
இருவரையுமே கேள்வி கேட்க ஆள் இல்லை தான். அதற்காக எல்லை மீறவும் இல்லை இருவருமே!
சும்மா மொபைலில் சில பேச்சு வார்த்தைகள், எதேச்சையானது போல சிறு, சில சந்திப்புகள்! அதுவும் தூரம் இருந்து பார்த்துக் கொள்ளும் பார்வையே போதுமாய் இருந்தது நவிராவுக்கு!
ஆனால் இப்படியே எத்தனை நாட்கள் இருப்பது? அந்த ஊர் வழமைப்படி டேட்டிங் செய்து அதிலேயே பத்துப் பதினைந்து வருடங்கள் கழிக்க அவளுக்கு விருப்பமில்லை.
அவளுக்கு திருமணம் வேண்டும்! நிறைக்க நிறைக்க அவனது மனைவியாய் அவள் வலம் வர வேண்டும். அதை ஆவலாய் ஆசையாய் அவனிடம் கேட்க, அவனோ அவளது அத்தனை சந்தோஷத்திற்கும் அணைக்கட்டு போட்டான்!
“இல்ல கீர்த்துமா.. எனக்கு சில கடமைகள் இருக்கு. அதுவரைக்கும் என்னால கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியாது. என் வாழ்க்கைல கல்யாணமே கிடையாதுன்னு நினைச்சுட்டு இருந்த நான், உனக்காக சில விஷயங்களை தியாகம் செய்திருக்கேன்.
ஆனா இன்னும் முழுசா தலை முழுகல.. அப்படி முழுசா தலை முழுகினதுக்கு அப்புறம், நான் முழு முழுசா உனக்கே உனக்குத் தான்! அதுவரைக்கும் என்னால மீடியால கூட முகம் காட்ட முடியாது.
ப்ளீஸ்.. காரணம் கேட்காம நீ இதை ஏத்துப்பன்னு நான் நம்புறேன்..” என்று அவன், அவள் கண்களைப் பார்த்து நேராய் கூற, அவன் கன்னத்தைப் பற்றினாள் நவிரா.
“நான் வெயிட் பண்றேன் ஷிவ்! எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு..” என்று அவள் ஆழ்ந்து கூறினாள்! ஆனால் அந்த ஆழ்மன வாசிப்பும்.. சுவாசிப்பும் சில தினங்களே நிலைத்தன!
காதல் பகிர்ந்து மூன்று மாதங்கள் முழுதாய் முடிந்திருந்தன. அந்த மூன்று மாதங்களும் முத்துக்குளிப்பின் நித்திய நேசமாய்.. வானப் பரப்பின் நெகிழ்ந்த வாசமாய்.. உள்ளுக்குள் தளிர் நெஞ்சை தளும்பத் தளும்பத் தித்திக்க வைத்திருந்தது!
ஆனால் தித்திப்பின் தேன் சுவை ஒரு நாள் சட்டென நீர்த்துப் போனதாய்ப் பட்டது நவிராவுக்கு!
ஏனென்றால் கடந்த இரண்டு நாட்களாக எப்பொழுதும் அனுப்பும் குட் மார்னிங், குட் நைட் என்ற இரு மெசேஜ்கள் கூட வரவில்லை ஷிவ்விடமிருந்து. நவிராவின் இந்த மெசேஜ்களுக்கும் பதிலில்லை!
அவர்கள் பேசிக் கொள்வதே அப்படி மெசேஜ்களில் மட்டும் தானே? அதிலும் ரொம்பவும் காதல் மார்க்கமாய்.. கலவி நெருக்கமாய் இல்லாது, வெறுமனே குட் மார்னிங், குட் நைட் என்பதிலேயே ஆசுவாசப் பட்டுக்கொண்டிருப்பவள் தானே அவள்?!
ஆனால் இரு நாட்களாக அதுவும் வராது போக, அவனுக்கு ஃபோனில் அழைத்துப் பார்த்தாள். ஆனால் அவனது ஃபோனும் தொடர்பு எல்லைக்கு அப்பால்!
அதிலேயே பெண்ணவள் மனதுக்குள் சிறு சுணக்கம்! அந்தச் சுணக்கத்தின் அளவு நேரம் போகப் போகச் சற்று விரிந்து கொண்டே சென்றது.
அந்த நேரத்தில் மறுநாள் காலையில் ஒரு மெசேஜ் அவனிடமிருந்து! சுணங்கியிருந்த இதயத்துக்குள் குளிர் நீர்ப் பாய்ச்சலாய் ஆனந்த மகிழ்வு!
விரிந்த கண்களுடன் அந்த மெசேஜை அவள் எடுத்துப் பார்க்க.. அதில், “இந்தியா வந்து இருக்கேன். திரும்ப வர ரெண்டு மாசம் ஆகும்.” என்பதுடன் முடிந்திருந்தது அந்த செய்தி.
புருவம் சுருக்கி யோசிக்கக் கூட நேரமில்லாமல் சட்டென அழைப்பு விடுத்தாள் அவனுக்கு. ஆனால் மறுமுனையில் இருந்தவன் எடுத்தால் தானே?!
எடுப்பதென்ன.. ஃபோனை அணைத்தே வைத்திருந்தான் அவன்!
சுறுசுறுவென்றது அவளுக்கு. எந்த ஒரு உறவிலும் எதிர்பார்ப்பு தான் ஏமாற்றம் கொடுக்கும். அதனால், இங்கு எதிர்பார்க்கவே கூடாது என்ற உத்தரவு வாய்மொழியாகக் கூட அல்லாமல்.. அவள் மனதில் மட்டுமாக எழுதியிருந்தாள் அவள். ஆனால் இது என்ன அலட்சியம்? என்பது போல தோன்றியது அவளுக்கு!
“அவன் எப்படியோ போறான்.. நான் என் வேலையைப் பார்க்கிறேன்.. அவன் திரும்பி வந்ததும் பேசிக்கறேன்..” என்பது போல சாதாரணமாய் விட முடியவில்லை அவளால்.
திடுமென இந்தியாவிற்கு சென்றிருக்கிறான். இந்தியாவில் தான் அவன் தந்தை இருக்கிறார் என்று அவளுக்குத் தெரியும்.
அவள் பார்த்திருந்த வெகு சில பாலிவுட் சினிமாக்களில் இது போல அவசர அவசரமாக வெளிநாட்டிலிருந்து இந்தியா கிளம்பிச் செல்லும் இளைஞனோ.. இளைஞியோ.. பிடிக்காது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை, விரும்பாமலே ஏற்றுக் கொண்டபடி தானே திரும்பி வருவார்கள்? என்று மனதிற்குள் அனுமதியே இல்லாமல் அவசரமாய் ஒரு பயப்பந்து உருண்டது!
மீண்டும் ஒரு முறை போன் அடித்துப் பார்க்க அவள் கைகள் பரபரத்தன. ஆனால் ஒரே வரியில், ஒற்றை செய்தியாய் காணாமல் போனவனை மறுபடியும் அதே சினிமாத்தனமாய் அழைத்து அழைத்து முட்டாளாக விரும்பவில்லை அவள்.
ஃபோனைத் தூக்கி ஓரம் போட்டாள். தனது வேலைகளில் கவனத்தை செலுத்த முயன்றாள். ஆனால் முடிந்தால் தானே?
அடுத்த வாரத்தில் ஒரு புதுப் பாடலுக்கான படப்பிடிப்பு இருந்தது. அதுவே ஒரு மாதம் போகும் தான்.
கை நீட்டி பணம் வாங்கியாகிவிட்டது. அனைத்து ஊடகங்களிலும் செய்தியும் வெளியாகிவிட்டது. அதை அலட்சியப்படுத்த முடியாது.
தொழில் தெய்வம்! அதிலும் அவளுக்கு வாழ்க்கை என்பதையே உருவாக்கிய தெய்வம்! எனவே முயன்று தொழிலில் இறங்க முனைந்தாள்.
ஆனால் அந்த ஒரு மாதம் இருந்த பரபரப்பான வேலைகளுக்கிடையே, இவன் இப்படி அலட்சியப்படுத்தி விட்டுச் சென்ற கோபம் சற்று ஓரமாய் தான் ஒளிந்திருந்தது. அந்த ஒரு மாதம் வேலை முடித்து வந்ததுமே மீண்டும் அவனுக்கு அழைக்க முனைந்தால் அப்பொழுதும் அவனது போன் அதே ஸ்விட்ச் ஆஃப் ராகத்தைப் பாடியது!
அடுத்த ஒரு மாதத்திற்கு யாராலும் நவிராவிடம் நெருங்கவே முடியவில்லை. ஒரு சாதாரண விஷயத்துக்குக் கூட அவள் முன்பாக வந்து பேச முடியவில்லை. அத்தனை கோபமாய் இருந்தாள் நவிரா.
அளவு கடந்த ஆத்திரம்!
அவன் ஏமாற்றி விட்டுச் சென்று விட்டான் என்றெல்லாம் கூட இவளால் அப்பொழுது முழு மனதாய் ஏற்க முடியவில்லை. மூன்றே மாதப் பழக்கம் தான். அதற்கு முன்பாக ஷிவ் யார் என்பது கூட அவளுக்குத் தெரியாது தான்.
ஆனால் அதிலுமே, ‘அப்படி அவனுக்குத் கல்யாணமே நிச்சயமாகி இருந்தாலும்.. அவ்வளவு ஏன், கல்யாணம் முடிஞ்சே இருந்தாலும் கூட அவன் நேரடியா என்கிட்ட சொல்லிட்டு போயிருப்பான்.. இப்படி ஓடி ஒளிய மாட்டான்!’ என்று உறுதியாக நம்பினாள் அவள்.
அப்படி இருப்பவன், இப்படி ஒற்றை மெசேஜுடன் மாயமாய் மறைந்து போனான் என்றால் அதற்கு முழுமையான காரணம், ‘அலட்சியம்!’
என்னை விட்டு இவள் எங்கே போய்விடுவாள் என்ற அலட்சியம்! என்று ஆத்திரமாய் எண்ணி கொண்டவளால் அந்த அலட்சியத்தைத் தாங்கவே முடியவில்லை.
ஆனால்.. அந்த இரு மாதங்கள் கழித்து ஒரு நாள் ஷிவ்வை அவள் வீட்டுக்கு வெளியே பார்த்தாள்! அவன் கண்களிலோ பரிதவிப்பு!
ஆனால் அந்தத் தவிப்பு, இவளுக்காகத் தானா?
