Skip to content
Post Views: 4,758
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 16.1
பவித்ராவுக்கு எல்லாம் பூர்ணா தான். முன்பெல்லாம் பெரியம்மா என்று சொல்லி வந்தவள். இப்பொழுது அந்த வார்த்தையையும் சுருக்கி அம்மா என்றே சொல்ல ஆரம்பித்து விட்டாள். பூர்ணாவும் பவித்ராவின் அம்மா என்ற வார்த்தையில் கரைந்து விட, வேலுவும் தவறாக எண்ணவில்லை.
இவர்களை எல்லாம் ஒரு மாதிரியாக பார்த்து வைத்தது பெரிய ஆத்தா தான். வேலுவும் எதற்கென்றாலும் சம்மு என்று அவளிடமே கேட்டு செய்தான். எல்லோரையும் விட அதிகமாக ஒட்டியது பவித்ரா தான். பத்து நாள் கழித்து பள்ளி சென்றாலும் வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு அம்மா தான் வேண்டும். இதற்கு முன்னெல்லாம் அப்பாவோ, அப்பத்தாவோ யாரவோ எதிர்பார்த்தவள் இப்பொழுது யாரையும் ஒட்ட விடவில்லை எல்லாவற்றுக்கும் அம்மாதான்…
வயதுக்கு வந்தபின் உடல் ஒரு மாதிரி சலசல என்று வேர்ப்பதும், அடித்துப் போட்டது போல வலி போதும் என்று நொந்து போறவளுக்கு பார்த்து பக்குவமாக சமைப்பதும், ஒரு வேலையும் செய்யவிடாமல் அவளை தாங்குவதும் பூர்ணா தான். தலைக்கு எண்ணெய் வைப்பது, தலை பின்னி விடுவது, சாப்பாடு ஊட்டி விடுவது, சேர்ந்து டிவி பார்ப்பது, சின்ன சின்ன விளையாட்டு, பிடித்ததை உரிமையாக கேட்பது என்று பவித்ரா, பூர்ணாவை தன் தாயாகவே எண்ண தொடங்கிவிட்டாள்.
Advertisement
பிள்ளை இல்லாமல் வாடிய பூர்ணாக்கும்.. பவித்ரா தான் ஆறுதல்.. யாரும் உரிமை கொண்டாட முடியாதபடி தான் மட்டும் சொந்தம் கொண்டாடும் உறவாக பவித்ராவைத்தான் நினைத்தாள். அம்மா என்று பவித்ரா அழைக்கும் ஒவ்வொரு அழைப்புக்கும் பூரித்து போய்விடுவாள் பூர்ணா. அவ்வளவு பிடிக்கும் அம்மா என்று அழைப்பு…
பவித்ரா இரவில் உறங்குவதும் பூர்ணாவோடு தான். ஏதேனும் கதை பேசிக்கொண்டு ஒரு காலை தூக்கி அவள் மேல் போட்டுக்கொண்டு உறங்குவாள். மகளை அப்படி ரசிப்பாள் பூர்ணா. இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்து வந்தது பெரியாத்தா தான். அவருக்கு மனதில் ஒரு தீர்மானம் வந்தது. இதையெல்லாம் கவனிக்காமல் ஒரு மாதிரு சுற்றிக் கொண்டிருந்தது வேலு. அவனுக்கு என்று தாமரை வாழாமல் திரும்ப வந்தாள் என அறிந்தானோ! அன்று முதல் ஒரு மாதிரி சுணங்கியே சுற்றிக் கொண்டிருந்தான்.
மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் வள்ளியே சொல்லிவிட்டார் “மயிலு என்னைக்கு நாம நம்ம வீட்டுக்கு போறது….”
Advertisement
பூர்ணா முகம் யோசனையை காட்டியது. பவித்ராவுக்கும் ஐம்பது நாளுக்கு மேல் ஆகி இருக்க இனி இவர்கள் வீட்டுக்கு செல்லலாம்… ஒரு வாரம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மகளை தயார் செய்து விட்டாள் பூர்ணா. அவள் உரிமைக்காரி அல்ல விருந்தாளி.. தாயில்லா பெண் என்று ஏதோ சில காலம் இருக்கலாம் காலத்திற்கும் இருக்க முடியாதே..
Advertisement
பூர்ணா கூலி வேலைக்கு போகும் பெண். அவள் வருமானம்தான் இவர்கள் இருவருக்கும் ஆதாயம். அதை விட்டு காலத்திற்கும் இவர்கள் வீட்டோடு இருக்க முடியாது நிதர்சனம் புரிய, அன்று மாலையை பூர்ணா வேலுவிடம் சொல்லிவிட்டாள். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்த போதும் நிதர்சனம் புரிய சரி என்று ஒத்துக் கொண்டான்.
பூர்ணா மகளுக்கு ஆயிரம் அறிவுரை சொல்லித்தான் விட்டு வந்தாள். பவித்ராவுக்கு அவ்வளவு அழுகை மனம் கனத்த போதும் வேற வழி இல்லையே… பாசம் காட்டி அம்மா என்று உறவு கொண்டாடலாம் உரிமை கொண்டாட முடியாதே…
“பவி குட்டி அடுத்து லீவு எப்பவும் நீ அம்மா வீட்டுக்கு வந்துரு ஒரு நாள் லீவு கிடைச்சாலும் அம்மா வீட்டுக்கு வந்துரு.. உனக்கு சாப்பிட எதுவாது வேணும்னு தோணுனா கூட.. உங்க அப்பா கிட்ட சொல்லு இல்லனா அம்மாவுக்கு ஒரு போன் பண்ணு உடனே கொண்டு வந்துடறேன். எதுக்கு அழுகிற… என் தங்கம் இல்ல அம்மா அடுத்த திருவிழா தான் இருக்கேன். சாயங்காலம் ஸ்கூல் விட்ட உடனே நீ அங்க வந்துரு அம்மா பாத்துக்கிறேன்…” இன்று ஏதேதோ சொல்லி சமாதானம் படுத்தி தான் பவித்ராவை விட்டு வந்தால் பூர்ணா.
Advertisement
பார்த்திருந்த பெரியாத்தாவிற்க்கு தோன்றியது, ஏக்கம் பவித்ராவுக்கு தான் என்று… தாய்க்காக, தாயின் அன்பிற்காக, தாயாக தாங்கிய பூர்ணாவின் அரவணைப்பிற்கு உண்மையில் தவித்தது பவித்ரா தான்.
தனக்கு தாய் இல்லை. அப்பா, அப்பத்தா இது தான் கூடு என்ற அளவில் பவித்ராக்கு பிரச்சனை இல்லை. ஆனால், என்று பூர்ணா மூலம் தாயின் அன்பு, அரவணைப்பு, கண்டிப்பு என அவள் கைக்குள் பவித்ரா வந்த பின் முற்று முழுதாக மாறி விட்டது நிலைமை. பூர்ணாவின் வளர்ப்பு முறையில் வேலு, பெரியாத்தா என்று யாரின் தலையீடும் இல்லாமல் இருக்க. பூர்ணா, பவித்ரா இருவரும் தங்களுக்கான உலகில் வலம் வர தொடங்கினர். பிள்ளை இல்லாத ஏக்கத்தை, பிள்ளையை கொண்டு பூர்ணா கண்ட கனவுகளை எல்லாம், பவித்ராவிடம் நினைவாக்க. தாயின் அரவணைப்பு உணராத பவித்ராவும் செல்லம் கொஞ்சி அவளோடு ஒட்டி கொண்டாள்.
தன் பள்ளியில், தோழி வட்டத்தில் என்று அம்மா புராணத்தை கேட்டு, பார்த்தவள், தனக்கு தான் அம்மா இல்லையே என்று ஒரு வார்த்தையில் ஏக்கமாக இருந்தது பூர்ணாவின் வருகை பின் ஏமாற்றமாக மாறி போனது. தன்னை விட்டு செல்லும் பூர்ணாவை தடுக்கும் வழி தெரியாமல், படுக்கையில் கண்ணீராக மட்டுமே வெளி வர தொடங்கியது.
தாமரையின் வரவு, அதை தொடர்ந்த மன அழுத்ததில் வேலு இருக்க, பவித்ராவின் மேல் தனிப்பட்டு கவனம் செலுத்த ஆள் இல்லாமல் போனது. பவித்ராவும் தன்னை தனிமை படுத்தி கொண்டாள். அவளுக்கு ஏனோ யாரோடும் ஒட்ட வில்லை. பூர்ணா சென்ற பின்னும், முன்பு இருந்த அறையிலே தனியே இருந்து கொண்டாள். முன்பிருந்த சுறுசுறுப்பு, சுட்டித்தனம் ஆர்வம், பசி கூட இல்லாமல் எதையோ பறி கொடுத்தது போல் இருந்த பேத்தியை பார்த்து பதறி போனார் பெரியாத்தா…
ஆரம்பத்தில் கவனிக்காத பெரியாத்தாவும் பின் கவனிக்க, கடனே என்று இருக்கும் பேத்தியை பார்த்து துடித்து போனார். அவருக்கு புரிந்து விட்டது பேத்தி மனம் யாரை தேடுகிறது என்று. இதுவரை, சரி வருமா என்ற யோசனையில் இருந்தவர், பேத்திகாகவே முடித்து விடும் முனைப்பில் இருந்தார்.
அன்று விடுமுறை தினமாக இருக்க பூ, பழம் தட்டோடு தன் பேத்தியை தயார் செய்தார். ரெட்டை ஜடையில் இரண்டு பக்கமும் பூ தொங்க அழகாக தயாராகி நின்றாள் பவித்ரா. அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் தான் அம்மாவை தன் அம்மாவாகவே வருவதில்…
வேலையாக உள்ளே வந்த வேலு ஆத்தாவும் மகளும் கிளம்பி இருப்பதை பார்த்து,
“என்னத்தா என்ன விசேஷம்?” என்று கேட்க.
“உன் மகளுக்கு தான்லே. அவங்க அம்மா இல்லாம அவளுக்கு ஒன்னும் ஆகல, அதான் அவங்க அம்மாவ கூட்டி வரப்போறோம்…”
எதே! என்று பதறியவன் ஒரு நொடி நின்று, “சம்மு” என்று இழுக்க..
“அதான் உன் வாயால நீயே சொல்லிட்டியே உன் மகளுக்கு அம்மா என்று அவதான்னு.. அதை உறுதி செய்யத்தான் நானும் என் பேத்தியும் போறோம். ஆயி உங்க அப்பனுக்கு சொல்லு…”
“ஆமாப்பா அம்மாவ தான் வீட்டுக்கு கூட்டி வரப்போறோம்…எனக்கு அம்மா தான்பா வேணும். அவங்க எல்லாம் எனக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குது.. எனக்கு அவங்க கிட்ட தான் சாப்பிடணும், அவங்க தான் ஜடை பின்னி விடணும், அவங்க கூட தான் தூங்கணும். வீட்டுக்கு வந்ததும் எனக்கு அவங்க தான் வேணும்…”
மகளின் பதிலில் துடித்துப் போனான் வேலு. ஏதோ தாயில்லா பவியும், பிள்ளை இல்லா பூர்ணாவும் ஒன்னு மண்ணாக இருக்கிறார்கள் என்றுவிட அது வேறு எங்கோ வந்து நிற்கிறதே…
“ஆத்தா உன் முடிவு என்ன நீ உறுதியா சொல்லு?..” தீர்க்கமாக வேலு கேட்க.
“நான் என்னத்த சொல்ல.. எல்லாருக்கும் நல்லதுன்னு நினைச்சு, நான் எடுத்த முடிவு இதுதான் வேலு. சம்மு உன் மகளுக்கு அம்மாவா இங்க வரட்டும்…”
“ஆத்தா புரியாம பேசாத.. என் வயசு என்ன? சம்மு வயசு என்ன? அதுக்கு மேல எங்க ரெண்டு பேருக்குள்ள இருக்குது நல்ல நட்பு ஆத்தா.. ஒருநாளும் என்னால சமூக மாத்தி பார்க்க முடியாது. எனக்கு, சம்மு, பவித்ரா மூணு பேருக்குள்ள இருக்கிறது பாசம் ஆத்தா அதை மாத்தி தப்பா பேசாதீங்க… அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியுமா உங்களுக்கு நீங்க மட்டும் போய் நின்டீங்க வெட்டி போட்டுடுவா…”
“நான் ஏண்டா போய் நிக்க போறேன். முன்ன நிற்கிறது பவித்ரா. அவ மகளை பார்த்து அவ எதுத்து நிக்கட்டும் பார்ப்போம்…”
“உங்களுக்கு நான் சொல்ல வரதே புரியலையா?.. எல்லாரும் மாதிரி நீங்களும் எங்கள களங்கப்படுத்த போறீங்களா?.. நீங்க நினைக்கிறது ஒரு நாளும் நடக்காது பேசாம வீட்ல இருங்க…” கோபமாக வேலு சொல்ல,
“நான் எதையும் யோசிக்கவில்லை என் மனசுல இருந்தது எல்லாம் என் பேத்தி தான். என் நெனப்பு என்னால தப்பு?.. தாயில்லாமல் ஒத்தையில நிக்குது என் பேத்தி.. வாழவேண்டிய வயசுல தனி மரமா நிற்கிறா அவ?.. வள்ளிய நெனச்சு பாரு ஒத்த பிள்ளைய பெத்துட்டு.. அதுக்கும் கூட ஒரு நாதி இல்லாம நிக்குது. அதுக்கும் மேல என் மகன்.. குடும்பம் இல்லாம தனியா நிக்கிறான்…”
“நான் உங்க வயசு, உங்க உறவு இதையெல்லாம் யோசிக்கல வேலு. மூணு பேர் ஒத்தையில நிக்கிறீங்க.. தனித்தனியா சேர்ந்து நின்னா குடும்பமா நிப்பீங்களே.. புடிக்கலைன்னா பரவாயில்ல, உங்க மூணு பேருக்கும் அவ்வளவு பாசம் இருக்கு எதுக்கு தனித்தனியா நிக்கணும். என் பேத்திய பார் வேலு?.. யாரோ பண்ண தப்புக்கு யாருமே இல்லாம நிக்கிறது என் பேத்தி தான். அதுக்கு ஒரு குடும்பம் கிடைக்கும் போது நான் ஏன் அதை தடுக்கணும்..”
“உன் குடும்ப வட்டத்தில பூர்ணாவ சேத்துகிறதுனால எதுவும் கூட குறைய ஆகப்போவதில்லை. என் பேத்திக்கு ஒரு அம்மா கிடைப்பா.. பிள்ளை இல்லாம தனியா நிக்கிற பூர்ணாவுக்கு ஒரு மக கிடைப்பா.. இது மட்டும் தான் என் நினைப்பு…”
“ஆத்தா உனக்கு நான் சொல்றதே புரிய மாட்டேங்குது.. சம்மு ஒருநாளும் இதுக்கு ஒத்துக்க மாட்டா.. என் மேலேயும் என் பிள்ளை மேலேயும் சம்முக்கு ஆற்ற பாசத்தை என்னைய தப்பா பயன்படுத்திக்க சொல்றீங்களா?.. அது உண்மையிலே நான் என் சமூகம் பண்ற துரோகம்..” ஆதங்கமா வேலு.
“உன் வியாக்கியானம் எல்லாம் எனக்கு விளங்காது வேலு.. மூணு பேரும் மூணு மூலைல இருக்கீங்க. சேர்ந்து ஒரு குடும்பமா இருங்க.. என்கிட்ட வாக்குவாதம் பண்ணி ஒன்னும் ஆகாது வேலு நான் முடிவெடுத்துட்டேன்.. அவதான் என் பேத்திக்கு அம்மா…” என்றவர்,
வடித்து வைத்த சிலை போல பார்த்து நின்ற மகனை கணக்கில் கொள்ளாமல், பேத்தியை கை பிடித்து பூர்ணா வீடு நோக்கி நடையை கட்டினார் பெரியாத்தா.
பவித்ரா பெரிய பெண் ஆவதற்கு முன்பே மனதில் தோன்றியது தான். அதை செயல்படுத்துவதில் இருந்த தயக்கம், ஒத்து வருமா என்ற சிந்தனை எல்லாம் பவித்ரா வயதுக்கு வந்த பின்பு உறுதியாக செயல்படுத்துவது என்று முடிவு கண்டார். பெண்மையின் முதல் படியில் இருந்த பேத்திக்கு தாயின் வழிகாட்டுதல் அவசியம் என்பதை உணர்ந்து, பவித்ராவின் விருப்பத்தை கொண்டே பூர்ணாவை பெண் கேட்டு செல்கிறார். வேலு மற்றும் பூர்ணாவின் வாழ்க்கையை மனதில் கொண்டும் தான் இந்த முடிவு. இந்த திருமணம் பல தீராத மன வேதனைக்கு மருந்து என்று யோசித்து தான் வள்ளியை கண்டு பேச சென்றார்.
பூர்ணா காட்டு வேலைக்கு சென்ற பின்பே, அப்பத்தாவும், பேத்தியும் அவள் வீடு சென்றனர். வேலுவை கூட சரிகட்டி விடலாம். ஆனால், பூர்ணாவிடம் கதையே நடக்காது. அது தெரிந்து தான் அவள் சென்ற பின்பு வீட்டிற்கு பேச செல்கிறார். நால பக்கமும் அழுத்தம் கொடுத்து அடிக்கும் போது இரும்பு வளைய தானே வேண்டும். அதற்கு, முதல் வள்ளியின் சம்மதம் வேண்டும் என்று தான் இந்த ஏற்பாடு… இனி, நடக்கும் நிகழ்வுகளை பற்றி வேலுவிடம் குறிப்பு காட்டியாச்சு. அவன் தான் எல்லாவற்றுக்கும் தயாராக வேண்டும். மனதளவில் மற்றும் உடலளவிலும் பூர்ணாவிடம் அடி வாங்க . பெரியவர்கள் தங்களிடம் கோபத்தை காட்டாமல் வேலுவிடம் தான் இறக்கி வைப்பாள்.
காலை பதினோரு மணியளவில் வீடு வந்தவர்களை பார்த்து அதிர்ந்த வள்ளி. “ என்ன மதினி எதுவும் முக்கிய சேதியா, சொல்லிருந்த மயில அனுப்பிருப்பேன்ல? இம்புட்டு தொலைவு நடையை கூட்டனுமா?” என்று கேட்டுக்கொண்டே அவர் வைத்திருந்த பையை வாங்கினார்.
“ஏட்டி! சோழின்னா தான் தலைய காட்டுவன! நான் என் நாத்துனா வீட்டுக்கு விருந்தாளியா வந்துருக்கேன்லே!” என்க.
அவரை அதிசயமாக பார்த்த வள்ளி, “ ஒரு ஊருக்குள்ள விருந்தாளியா?”
“ஒரு ஊரா? நான் அந்த திருநெல்வேலிகாரி வீட்டுக்குள்ள வந்துருக்கேன்! எம் தம்பி ஊரு திருநெல்வேலி தானே?”
அவரின் பேச்சில் சிரிப்பு வர, “ ஆமா ஆமா! இது உங்க தம்பி வீடு தான். உங்களுக்கு இல்லாத உரிமையா? செத்த இருங்க, உங்க மருமகளும் வந்துடட்டும், வெடகோழி கை பக்குவம் உம்மா மருமகளுக்கு தான் தோது” என்று சந்தோசமாக கூறினாலும், மனதில் ஒரு கணக்கீடு தான். காரியமில்லாமல் தலை காட்டும் ரகம் அல்லவே பெரியாத்தா. அதுவும் வந்த தோரணையும் உரிமை சாடலும் எதுவோ உணர்த்தியது. அதை ஆராயாமல் பையில் அவர் கொண்டு வந்ததை ஆராய,
“ என்ன மதினி இது! பூ, பழம், காரம், இனிப்புன்னு ஏதோ பொண்ணு கேட்டு வராப்ல” என்று வினவிய வள்ளியின் வார்த்தையை பிடித்து கொண்ட பெரியாத்தா.
“பொண்ணு கேட்டு தாம்ல வந்துருக்கேன்” என்க.
அதிர்ந்து நிமிர்ந்த வள்ளி, “மதினி” என்று உடல் நடுங்க எழுந்து நின்றார்.
வள்ளியை ஒரு பார்வை பார்த்து தானும் எழுந்து கொண்ட பெரியாத்தா, முந்தானை எடுத்து தோளில் போர்த்தி கொண்டு, “தங்கதுரை வீட்டு வாரிசு, நெல்லையப்பர் மகன் தங்க வேலுக்கு, நல்ல பெருமாள் மவ சம்பூர்ணத்தை தாய் மாமன் முறைக்கு பொண்ணு கேட்டு வந்துருக்கேன், உங்க பதில சொல்லுங்க, முறை பொண்ண மறிச்சு தான் பேசுறேன்”
இதுவரை, தேங்கி நின்ற கண்ணீர் சலசலவென இறங்கியது. இப்படி ஒன்றை அவர் எதிர்பார்க்கவே இல்லை. என்றோ பல வருடம் முந்தி மனதின் ஓரத்தில் இருந்த நினைப்பு, காலங்கடந்து முற்று பெற வந்து நிக்குதே. முறையாக பெண் கேட்டு நிற்பவரிடம் என்ன மறுமொழி சொல்வதென்று புரியாமல் முழிக்க,
வள்ளி மனநிலை புரிந்து கொண்ட பெரியாத்தா, சற்று தள்ளி நின்று நடப்பதை பார்த்து கொண்டிருந்த பேத்தியை அருகில் அழைத்து, ஒரு பெரிய தாம்பள தட்டில் அரக்கு சிவப்பு வண்ண சேலை, பூ, மஞ்சள், குங்குமம் வைத்து பவித்ராவிடம் கொடுத்தவர். மற்றொரு பெரிய தட்டில் பழம் தேங்காயில் புது மஞ்சள் தாலி சரடும், பதினைந்து பவுனில் தாலி கொடியும் வைத்து, பவித்ராவை முன் விட்டு பின் நின்று, தட்டை வள்ளி நோக்கி நீட்டினர் இருவரும்.
error: Content is protected !!