Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 18.1

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 18.1

             வள்ளியின் கண்களில் அப்படி ஒரு நிறைவு. உடம்பு கூடாக கிடக்க, முகம் மட்டும் சிவந்து கிடந்தது. கை, கால்களை தான் அசைக்க முடியவில்லையே, தவிர உதடு ரெண்டும் துடிக்க, கண்களில் நீர் நிற்காமல் பெருகியது.

                  வறுமையின் பிடியில், உறவுகள் துணை இன்றி, விதவை கோலம் பூண்டு, இத்தனை ஆண்டுகள் தான் அனுபவித்த வலி, இனி தன் மகளுக்கு இல்லை என்ற ஆனந்தம். தங்கள் பேர் சொல்ல இரத்த வாரிசு இல்லாவிட்டால் என்ன? தம் மகளை தாய் என்று அடையாளம் காட்ட வாரிசு இருக்கே என்ற பெருமை. இவ்வளவு நாள் அழுத அழுகைகும், துடித்த துடிப்பிற்கும் கை மேல் பலன் கிடைத்தது விட்டதே என்று உள்ளம் பூரிக்க. பிள்ளை பெற்ற பின் உடல் வலியோடு கிடைக்கும் சுகம் போல, உடல் எல்லாம் வலியில் மரத்து கிடக்க, உள்ளமோ சுகத்தில் திளைத்து நின்றது.

                 இது நாள் வரை கருத்து கன்றி கிடந்த முகம். இன்று சிவந்து ஒளி வீச, அணிந்திருந்த காபி கலர் சட்டைக்கு மேல் உடல் மஞ்சள் மின்ன. அடுத்து என்ன நடக்கும் என்று பெரியாத்தாவிற்கு புரிந்து போனது. துக்கம் பொங்கி எழ,



Advertisement

              “ஏத்தா வள்ளி! என்னாலே அவசரம். செத்த பொறுத்து போவே! காலம் கெடக்கேடி! உம் மவளுக்கு கல்யாணம் கட்டுனா ஆச்சா! அடுத்தடுத்து நல்லது? கெட்டதுக்கு? நியி முன்ன நின்னு பார்க்க வேண்டாமா? என்ன சாதிச்சுபுட்டன்னு இந்த வேகம்” என்று நெஞ்சில் அடித்து அழுக,

                தற்போது வள்ளியின் பார்வை மகளில் நிலை பெற்றது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, பார்வையிலே தாயும் – மகளும் என்ன பேசி கொண்டார்களோ! வள்ளி சிறு தலையசைப்போடு முகத்தில் நிம்மதியோடு அமைதியாக கண்களை மூடி தம் வாழ்நாள் பயணத்தை நிறைவு செய்தார்.

              பெரியாத்தா கைகளை பிடித்து இழுத்து பார்க்க, விரல்கள் மடங்காமல் விறைத்து நின்றன. அடுத்த நிமிடத்தில் அனைவருக்கும் நிலவரம் பிடிபட்டு போக, அழுகை சத்தமும், அரட்டலும் அதிகமாகியது. என்னவோ என்று சத்தம் கேட்டு வந்து பார்த்தவர்களுக்கும் சேதி தெரிய. அடுத்து என்ன ஊர் முழுவதும் பூர்ணா வீடு நோக்கி வர தொடங்கினர்.

Advertisement

                  அடுத்தடுத்து வரும் சொந்தமெல்லாம் பூர்ணாவை கட்டி கொண்டு அழ, அவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. அழுகை, அரட்டல் என்று ஒரு சத்தமும் வரவில்லை. நெஞ்சை வெடித்து கிளம்பும் வேதனை கழுத்தை முட்ட, அதை தாண்டி வெளி வர விடாமல் அடக்கி அமர்ந்திருந்தாள்.

Advertisement

                         அவள் முகத்தையே தான் பார்த்திருந்தான் வேலு. அவள் அருகில் சென்று வார்த்தையாக கூட ஆறுதல் சொல்ல முடியா நிலை. இத்திருமணம் குறித்த அவள் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல், எவ்வாறு அவளை நெருங்க?, பவித்ரா தாய் அருகில் தான் இருந்தாள். அது மட்டும் தான் அவர்கள் இருவருக்கும் ஆறுதல்.

                       ஊர் முழுக்க வள்ளி இறப்பு சேதியோடு, வேலு – பூர்ணா கல்யாண சேதியும் பரவியது. வந்திருந்த சொந்தமும் வள்ளி உடலுக்கு முன் பூர்ணா கழுத்தை தான் பார்த்து சென்றனர். மகன் இல்லை, சொந்தமும் பெருசா கிடையாது யார் காரியம் செய்வது என்ற குத்தல் பேச்சுக்கு அவசியம் இல்லாமல் வேலு காரியங்களை முன்னெடுத்து கொண்டான். அவனும் ஊரில் பெரிய தலைக்கட்டு தானே, வள்ளியின் இறப்பு என்றில்லாமல் வேலுவின் மாமியார் என்ற உறவுக்கு ஊரே வருகை தந்தது.

                    ஒருத்தர் பாக்கி இல்லாமல் அந்த சிறு வீட்டின் முன் கூடி விட்டார்கள். வேலுவும், மணிமாறனும் முன்னே நிற்க, அவர்களின் பங்காளி வட்டமும் சேர்ந்து கொண்டது. வாழும் போது ஒடுங்கி போன பெண்மணிக்கு, வழி அனுப்பும் போது நிறைவாக செய்ய நினைத்தான் வேலு. மருமகனாக முன் நின்று கொட்டு, வேட்டு, ரேடியோ, ஆட்டக்காரர்கள் என்று மகன் நின்று செய்வது போல் தான் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான்.

Advertisement

                   பெரியாத்தாவும் சும்மா விடவில்லை, தாய் வீட்டு சேலையை மரக்காலில் வைத்து தன் தலையில் சுமந்து வர. ஊர் பெரிய மனுசி அவரே வந்து நிற்க, அவர்கள் வீட்டு முறை பங்காளி மக்களும் சீர் கொண்டு வந்து விட்டார்கள். திருநெல்வேலியில் இருந்து புருசன் வீட்டு மக்களும் வந்திறங்க. அந்த பகுதியே அல்லோகல பட்டது. ஆனால், பூர்ணாவின் இறுகிய நிலை மட்டும் மாறவே இல்லை. பெரியாத்தா அடித்தும் பார்த்து விட்டார், மனசு விட்டு அழுக சொல்லி.. ம்கூம்! ஒரு சொட்டு கண்ணீர் வர வில்லை. தாயின் விறைத்த கையை பிடித்து படியே அமர்ந்திருந்தாள்.

                      சொந்த பந்தம் உறவின்றி தனியாக நின்ற பெண்மணிக்கு. இன்று சொந்தமாக ஊரே நின்றது. மஞ்சள் கயிறு என்ற ஒன்று பூர்ணா கழுத்தில் ஏறிய பின், அவள் கொடியரசி மருமகள், வேலு மனைவி தானே. அதன் தொட்டு முறைக்கு புருசன் வீட்டு சீர் என்று கலைவாணியும், உடன் மற்ற சொந்தங்களும் பச்சை கொண்டு வந்து விட்டார்கள். கொள்ளி போடுவது வேலு என்பதால் அவனுக்கும் சேர்த்து தான். பவித்ராவையும் விட வில்லை பேத்தி என்ற முறைக்கு தலைக்கு எண்ணெய் வைத்து தண்ணி ஊற்றி தான் விட்டார்கள்.

               ஊர் மக்களாக வந்த பூமணிக்கு தான் இதை பார்த்து சுருக் என்று தைத்தது. அதுவும் பவித்ரா “அம்மாத்தா” என்று அழுவதை காண முடியவில்லை பூமணிக்கும், அவர் கணவருக்கும். இதுவரை மனதில் தோன்றாத உரிமை தற்போது தோன்றியது. என்ன செய்ய ஒரே ஊரில் இருந்தும் சொந்த பேத்தியை ஒதுக்கி விட்டு, இப்போது எந்த வகையில் உரிமை கோருவது. அதுமட்டுமல்லாமல், வேலு, பூர்ணா திருமணம் என்னவோ அவர்கள் மனதை பாதித்தது.

                       மறுநாள் நல்லபடியாகவே அடக்கம் செய்தார்கள். வேலு தான் எல்லாவற்றிற்கும் முன் நின்று பார்த்து கொண்டான். இன்னும் பூர்ணா நிலை மாறாமல் தான் இருந்தாள். உடலை எடுக்கும் போதாவது அழுவாள் என்று பார்க்க, ஊர்வலத்தில் அமைதியாக தாயின் பின்னே வெறித்த பார்வையுடன் நடந்து வந்தவள்.

                     தெருவோடு வழியனுப்ப நிற்கையில், இனி பார்க்கவோ, தொடவோ, உணரவோ முடியாத தாயின் இறுதி வழியில், அவளின் மனம் என்ன உணர்த்தியதோ! தெற்கே திரும்பும் முன் ஓடி சென்று, தாயின் கை பிடித்தவள் தான். ஒரு பெறும் கேவலில் மூச்சடைத்து போனாள். பார்த்த வேலுக்கு நெஞ்சம் துடித்தது, இருந்தும் ஒன்றும் செய்ய முடியாது? கொள்ளி போடுபவன், திரும்ப முடியாதே! தன் அக்காவிற்கு கண் காட்டி விட்டு, முன்னோக்கி நடந்து சென்றான்.

                       அதிக அழுத்தம், கணம் ஆகாது என்று கலைவாணி எடுத்து சொல்லியும், இறுக்கமாகவே இருந்து கொண்டாள் பூர்ணா. வேலு தான் அவளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டான். மூலையில் தலை சாய்ந்தவள் தான், ஏதோ யோசனை. முதல் நாள் வரை தன்னோடு மல்லுக்கு நின்றவர், இன்று இருந்த தடம் கூட இல்லையே. அவரின் பொருட்கள் எல்லாம், அவரோடு எரித்தாயிற்று. சாமி கும்பிட கொஞ்சம் மட்டுமே மீதம்.

                        மறுநாள் காலையிலே, அங்கம் கலப்பதற்கு ஆண்கள் எழுந்து செல்ல, உடன் சேர்ந்து கொண்டாள் பூர்ணா. இது என்ன புது பழக்கம் என்று தடுத்த மற்றவர்களை வேலு தடுத்து அவளை உடன் வரவழைத்தான். பெண்கள் தான் சுடுகாடு செல்ல கூடாதே. ஆனால், ஏதோ ஒரு உந்துதல் பூர்ணா தாயை காண வேக நடை போட்டாள்.

                    அவளின் வேகம் எல்லாம் தாயை எரித்த இடம் கண்டதும் தடுமாறி விட்டது. தான் தொட்டு, தன்னை தொட்டு வளர்த்த கை எங்கே?சிறு வயதில் அந்த ஓட்ட கட்டிலில் தாயின் சேலையில் ஒன்றும் போது இழுத்து அணைத்த உடல் எங்கே? சின்ன சிரிப்போடு இருக்கும் வாடாத முகம் எங்கே? இப்போதும் அவர் காலில் தானே தலை வைத்து தூங்குவேன், அந்த கால்களை காண வில்லையே?.

                         வெறும் சாம்பலோடு கிடந்த எலும்பு துண்டுகளை பார்த்ததும், அடி வயிற்றில் இருந்து ஒரு சத்தம். “ எம்மா” என்று ஒரு அரட்டல், அத்தோடு அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து கிளம்ப. யாராலும் கட்டு படுத்த முடியவில்லை. வேலு, மாறன், கலை என்று மூன்று ஆண்கள் இழுத்தும் அவளை கட்டு படுத்த முடியவில்லை. அந்த சாம்பலை தொட்ட வுடன் நெருப்பாக துடித்து போனாள். சுடு தண்ணி பாட்டாலே தாங்காத தன் தாய் நெருப்பில் பொசுங்கி போனாரே! தாங்க முடியவில்லை மகளால். அவளை அணைத்து தூக்கிய வேலுவின் கண்களிலும் நீர் பெருகியது.

               முப்பது நாள் முடியும் வரை வேலு, பெரியாத்தா, பவித்ரா என்று மூவரும் பூர்ணாவுடனே தங்கி கொண்டார்கள். இறுக்கம் தளர்ந்து, தாயின் இறப்பில் இருந்து பூர்ணா இன்னும் வெளி வரவில்லை. பவித்ராவை மட்டுமே அவள் நெருங்க விட்டாள். வேலு, பெரியாத்தா என்று இருவரிடமும் முகம் கொடுத்து கூட பேசவில்லை. பெரியாத்தாவின் பேச்சுக்காவது நிமிர்ந்து பார்ப்பவள், வேலுவிடம் நிமிர கூட மாட்டாள். வேலுவும் புரிந்து கொண்டு அமைதியாக விலகி சென்று விடுவான். அவளின் கோபத்தை வெளிபடுத்த இருப்பது வேலு மட்டும் தானே.

               பூர்ணா மன வேதனை புரிந்தாலும், எத்தனை காலத்திற்கு இப்படியே முடங்கி கிடப்பது. முன் சென்றவர்களை நினைத்து பின் தங்கியவர்கள் முக்கி முனங்கினாலும் மாண்டோர் மீள்வதில்லையே. அந்த வலியோடு வாழ பழகத்தானே வேண்டும். பல இறப்புகளை தாங்கி கடந்து வந்த பெரிய மனுசிக்கு அவ்வாறு தான் தோன்றியது. அதனால் தான், நேரடியாகவே பூர்ணாவிடம் கேட்டு விட்டார்.

                   “ஏத்தா! எம்புட்டு நாளைக்கு இப்படி இருக்குறது உத்தேசம்? வலி தான். அதை தாங்கி அடுத்த சோழிய பார்க்கணும்லே! ஒண்ணாவே இருந்தோம்ன்னு கூடவே போகவ முடியும்! உம் குடும்பத யாரு பார்ப்ப? நாளைக்கு சாமிய கும்பிட்டு, நாளனைக்க நம்ம வீடு போய் சேருவோம்! என்னா மகனே சரி தான?” என்று பூர்ணாவிடம் துவங்கி வேலுவிடம் முடிக்க,

                 வேலு அமைதியாக மனைவி முகத்தையே பார்த்திருந்தான். ஆனால், பூர்ணா யாரையும் நிமிர்ந்தும் பார்க்க வில்லை, மாமியார் கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை.

              இருவரின் அமைதியை பார்த்த பெரியாத்தா , “ என்னாலே? ரெண்டு பேரும் பேசாம இருக்கீக? புள்ளைக்கு பள்ளியொடம் போனும், நமக்கும் வீடு, காடு கரை உண்டு தானே! அதெல்லாம் யாரு பார்ப்பா? ஒரே ஊருல சம்மந்தம் பண்ண இடத்தில எம்புட்டு நாள்? நல்ல நாள் பார்த்து பூர்ணாவ வீட்டுக்கு கூட்டிட்டு போவோம் மகனே!” என்க.

              திடீர் திருமணம், தாயின் இழப்பு என்று உணர்ச்சி குவியலாக வெடிக்கும் இடம் தெரியாமல் இருந்தவளிடம், பெரியாத்தாவின் பேச்சு “குடும்பம் நடத்த வா” என்பது போல் ஒரு அர்த்தம் கொடுக்க,

                     “என்னால இந்த வீட்டை தாண்டு எங்கையும் வர முடியாது அத்த!” என சிறு குரலில் உரைக்க,

               கடுப்பான பெரியாத்தா, “பொறவு, உம் அம்மை நடத்தி வச்ச கல்யாணத்தை என்ன பண்ணறது. உம் கூட நாங்களும் இங்கேயே இருக்க முடியுமா? வயசு புள்ளைக்கு இடம் போதல, அவனுக்கும் சோழி தலைக்கு மேல நிக்குது. நியி சாவகாசமாக பேசுரையோ! மாமன், மச்சான் வீட்டுல தங்குனா பீடைன்னு தெரியாத! உம் வீட்டை பார்த்து நடையை கட்டு!” என்று கோபமாக சொல்லி முடிக்க,

              சிறு கண்ணீர் பூர்ணா விழிகளில். பதறி போன வேலு, “ஆத்தா, பார்த்து பொறுமை” என்று சொல்ல,

              “என்னாலே மகனே! நியும் கூறு கெட்ட தனமா பேசுறவன். இங்கேயே இருந்த உனக்கு ஆகதுலே! கொல்லி வச்ச தடுத்தேனா! இனி நம்ம வீடு தான். கல்யாணம் முடிஞ்சு முப்பது ஆச்சு, இன்னும் நம்ம சாமிக்கு ஒரு பழம் வாங்கி கூட மாத்தலவே” என்று ஆதங்கமாக சொல்ல

                   யோசனையாக வேலு, “ஆத்தா! நாம எப்படி?” வள்ளி அத்த இல்லையே, நாம தீட்டு இல்லையா?”

         “ஏலே வேலு! நாம பொண்ணு தானே எடுத்தோம். சாங்கியம் எல்லாம் நமக்கு இல்லை. பூர்ணா நல்லப்பன், பெரியப்பனை தான் சேரும். இவ ஒன்னும் செய்ய கூடாது. நமக்கு தான் பீடை” என சொல்லிய நொடி

            பூர்ணாக்கு வெடித்து விட்டது. இதுவரை எட்டி கூட பார்க்காதவர்கள் கூட சொந்தம். தான் அன்னியமா? யார் சொல்வது. பதட்டம் அதிகரிக்க, நிதானம் இன்றி வார்த்தை தடம் மாறி விழுந்தது.

             “என் அம்மைக்கு நான் ஒன்னும் இல்லைன்னா? உம் மகனும் எமக்கு ஒன்னும் இல்லை, தாலிய அத்து எறிஞ்சுட்டு போங்க!” என ஆவேசமாக கத்த.

                 கொதித்து போனார் பெரியாத்தா. “ ஏட்டி! மலைகெனக்க எம் புள்ளை நிக்க! எந்தா பெரிய வார்த்தை சொல்லிபுட்டா! பேசுனா வாயை உடைக்குறேன், இருலே!” என்று பூர்ணா நோக்கி முன்னேற

              தடுத்து நிறுத்திய வேலு. மனைவியை ஒரு பார்வை பார்க்க, தான அவ்வாறு பேசியது என்று உள்ளம் நொந்து கண்ணீர் விட்டாள் பூர்ணா.

                  தம் ஆத்தாவை பார்த்த வேலு, “ ஆத்தா, நான் சொல்றத கேளுங்க! இனி மேக்கொண்டு ஒரு வார்த்தை பேச கூடாது. பொழுசாய நீயும், பவியும் நம்ம வீட்டுக்கு போங்க. மறுத்து பேசாம நான் சொல்றத செய்ங்க” என வெறுமையான குரலில் முடிக்க,

              “அய்யோ” என்று தவித்து போனாள் பூர்ணா. அவள் ஏதோ ஒரு ஆவேசத்தில் வார்த்தை விட, எல்லாம் தப்பாகி போனதே. மூக்கை உறிஞ்சி கொண்டே ஒப்பாரி வைத்தவாறு கிளம்ப ஆயத்தமானார் பெரியாத்தா. ஊர் வழக்கத்தில் உள்ளதை தானே சொன்னேன். இதில் என்ன தப்பு என்பது அவர் வாதம்.

             பெண்கள் இருவரும் கண்ணீர் வடிக்க. உண்மையில் அந்த இடத்தில் அடி பட்டு போனது வேலு தான். தாலியை அத்து ஏறி என்பது, ஆறிய புண்ணை கிளறி விட்டது போல் ஆனது வேலுக்கு… முன்னே தாமரை கேட்டு நிற்க, தற்போது பூர்ணா. ஒரு ஆண் மகனாக மனம் ஆற்றாமையில் கொதித்தது. தான் எதற்கும் லயக்கில்லாதவனா? அல்லது துணிவில்லாதவனா? எளிதாக தன்னை மட்டும் உதாசீன படுத்தி விடுகிறார்களே. உண்மையான அன்போடு இருப்பது தான் தவறோ?

                ஆயிற்று ஒரு வாரம். பூர்ணா வீட்டை விட்டு மறு பேச்சில்லாமல் வெளியேற, தவித்து நின்ற பவித்ராவை பார்த்து பூர்ணாக்கு தான் துடித்து போனது. அழுகையில் தான் நின்றாள். குற்ற உணர்வு கொன்றது. வீட்டின் பெரிய மனுசியை அழ வைத்து விட்டாளே!

                நாட்கள் தன் போக்கில் நகர, வேலு எதையும் முன்னெடுக்க வில்லை. காடு, தோட்டம், களத்து மேடு என்று இருக்க. பூர்ணாவும் தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள். வேலுவின் மனைவியாக தன்னையே தன்னால் அங்கீகரிக்க முடியவில்லை.

              பெரியாத்தா தான் இப்படி தள்ளி தள்ளி நிக்க வா இந்த கல்யாணம் என்று வேலுவிடம் பூர்ணாவை அழைத்து வர சொல்லி தொணத்துவார். மேலும், ஒரு மாதம் கடந்த நிலையில், ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்க. பெரியாத்தா, தன் மகள் வாணியை அழைத்து கொண்டு வந்து விட்டார் பூர்ணா வீட்டுக்கு… எப்படியேனும் உடன் அழைத்து செல்ல..

              ஆனால், அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் தான் முடிந்தது. வார்த்தைக்கு வார்த்தை வம்பு வளர்த்து எதிர்த்து பேசும் பூர்ணா, தற்போது என்ன பேசினாலும் மெளன கண்ணீர் வடிக்க. அவளிடம் எவ்வளவு பேசியும் எடுபடாமல் போக, வாடிய முகத்துடன் வீடு வந்தனர் இருவரும்.

             தற்போது வேலு தன் நிலையில் தெளிந்து விட்டான். இனி தனியாக நிற்கும் உத்தேசம் துளியும் இல்லை. சண்டையோ, கோபமோ ஏதுவாக இருந்தாலும். ஒரே வீடு தான், ஒரே குடும்பமாகத்தான்.

             “ஆத்தா! நீங்க விசன படாதீக! அக்கா கூட நீங்களும் ஊருக்கு போங்க, மத்தது தன்னால நடக்கும்” என வேலு தம் ஆத்தாவுடம் சொல்ல,

           “ என்னாலே சொல்ற, ஒன்னும் புரிபடல! நானும் ஊருக்கு போய்ட்டா, புள்ளையா யாரு பார்த்துகுவா! நீயும் காடு மேடு திரியுறவன்” என்று சொல்லி கொண்டே வந்தவர். முகம் பிரகாசமாக,

             “அடி சக்க! எம் மவனா கொக்கா! அந்த சண்டி ராணி, என்னா செய்வான்னு பார்ப்போம்” என பூரிப்பாக சொன்னவர். மகளுடன் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்.

                     மணிமாறன் மனைவி வனிதா மூலம் பூர்ணாக்கு தகவலும் போய்விட்டது.

                  “பாவம் பவித்ரா! அயித்த, வாணி மதினி கூட ஊருக்கு போய்டாங்க. புள்ளை தான் தனியா கிடந்து அல்லாடும், இப்பலாம் வேலு மச்சான் களத்து மேடே கதின்னு கிடக்குறாங்க! ராத்திரிக்கு பவிக்கு துணையா அவர் வருவாரோ என்னவோ?” என்று புலம்புவது போல் பூர்ணாவிடம் சேதி சொன்னாள் வனிதா.

          பிள்ளையை ஒன்றும் அசால்டாக விடுபவன் இல்லை என்ற தைரியத்தில் பூர்ணா அலட்டி கொள்ளவே இல்லை. ஆனால், இரவில் உணவு உண்ணும் போதும், படிக்கை விரிக்கும் போதும் மகள் நினைவு தான். வயது பிள்ளை ஏதோதோ தோன்றி பயமுறுத்த, நிலையில்லாமல் தவித்தாள்.

               ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் கரண்ட் கட்டாகி, ஒரு இடி இடிக்க, அதற்கு மேல் தாமதிக்க வில்லை பூர்ணா. தன் வீம்பு, பிடிவாதம் எல்லாம் இடம் தெரியாமல் போக, மகளை மட்டும் மனதில் கொண்டு, நடையை எட்டி போட்டாள் வேலு வீடு நோக்கி.

                  வெளி கேட்டை திறந்து உள்ளே வரும் போதே கரண்ட் வந்தாலும், பயந்து போய் உள்ளே செல்ல. வனிதா தான் துணைக்கு இருந்தாள். தன்னை பார்த்ததும் அம்மா என்று மகள் அணைத்து கொள்ள, கண்ணில் நீர் பெருகியது பூர்ணாக்கு. சிறு சிரிப்போடு வனிதா வெளியேற,. மகளை பார்த்தவள்.

           “என் தங்கம்! தனியா பயந்துடியா!” என்று கேட்க,

           “இல்லைமா! எம்புட்டு நேரமானாலும்,உங்கம்மா வந்துருவான்னு! அப்பா சொல்லிட்டு, இப்போ தான் என்னை சாப்பிட வச்சுட்டு போறாங்க” என பவித்ரா சொல்ல

         “எதே” என்று அதிர்ந்த பூர்ணா. “இப்போவா” என ஏதோ யோசித்தவள். விவரம் புரிபட,

         “அந்த பரதேசி பய மட்டும் எம் கையில மாட்டடும், இருக்கு அவனுக்கு” என்றவள் மகளோடு உள்ளே செல்ல.

             பூர்ணா வீடு வந்த சேதி அறிந்த வேலு. நிம்மதியாக தம் உறக்கத்தை தொடர்ந்தான்.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!