Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 19

புது மஞ்சள் புது தாலி

அத்தியாயம் 19

  மறுநாள், காலை கண் விழித்த வேலு கண்டது, மணிமாறன் வீட்டில் இருக்கும் தன்னை தான். தான் எவ்வாறு இங்கே என்று யோசித்தவனின் நினைவடிக்கில், நடந்தது அத்தனையும் ஒவ்வொன்றாக வந்து விழ பதறிபோனான். நன்றாக எழுந்து அமர்ந்தவனுக்கு வெளியில் செல்லும் துணிவே வர வில்லை. அசிங்கம், கேவலம் ஒரு பக்கம் இருக்க. திரும்ப எவ்வாறு வீடு செல்வது, மனைவி சும்மா விட மாட்டாள்! வார்த்தைகளில் உண்மை அவசியம் என்று எண்ணுபவள். சத்தியம் செய்து அதை மீறி விட்ட குற்றவுணர்வு ஒரு பக்கம் என்றால், நாலு பேர் பார்க்க கட்டிய மனைவியிடம் அடி வாங்கி விட்ட அசிங்கம் ஒரு பக்கம் கொன்றது.

               இப்பவே ஊர் முழுக்க தெரிந்து நாறிருக்கும், யார் முகத்திலும் எப்படி விழிப்பது, தோட்டம் , தோப்பு, கடைக்கு, லோடு ஏத்த என்று எங்கும் செல்ல முடியாது. நேருக்கு நேர் கேட்காவிட்டாலும், ஒரு கேலி பார்வையே போதும் ஆளை சங்கட படுத்த. இந்த சொம்பு தன்னை தேடி அங்கு தான் வர வேண்டுமா? வீட்டிற்குள் வைத்து காலில் கூட விழலாம்! அதை விட்டு ஊர் பார்க்க அடிக்கா விட்டால் தான் என்ன? என் மரியாதையை துளியும் யோசிக்க வில்லையே?.



Advertisement

                எவ்வளவு நேரம் தனக்குள்ளே புலம்புவது. வெளியில் சென்று மற்றவர்களை பார்த்து தானே ஆக வேண்டும். மிகுந்த தயக்கத்துடன் வெளியில் சென்றான்.

                “என்ன பங்கு! முத ராத்திரி முடிஞ்சு வார மாதிரி வெட்கப்பட்டு வாரவன்? அடி பலமோ!” என்று மணிமாறன் கேலி செய்ய,

                    அருகில் வந்து அவனை முறைத்தவன். பின்னாடியே காபி கொண்டு வந்த வனிதாவை பார்த்து தலை குனிந்து கொண்டான்.

Advertisement

                  வேலுவை எந்த வித சங்கடமும் படுத்தாமல், அமைதியாக காபியை வைத்து விட்டு வெளியேறி விட்டாள்.

Advertisement

                 “இந்த சொம்புக்கு எம்புட்டு தைரியம் பார்த்தியா பங்கு? சின்னதுல தான் நம்ம கிட்ட ஒரண்டை இழுக்கும்ன்னு பார்த்த! இப்பவும் சின்னது மாதிரி அடிச்சு விளையாடுதே? நமக்கும் வயசு ஏறி போச்சுல? புருசன்னு மரியாதை வேணாம்? ஊர் உலகத்தில யாரும் குடிக்கலையா? நாம்ம என்ன குடிச்சுட்டு யார் கூடையும் மல்லு கட்டுரோமா? அமைதியா வந்து படுத்துகுவோம்! அதுக்கு இந்த அக்கபோற. வேலு ரெண்டு நாளைக்காவது வீட்டுக்கு போகாத, கோச்சுட்டு இங்கேயே இரு. அப்பத்தான் இந்த சொம்புக்கு பயம் இருக்கும்!” என்று மணிமாறன் கூற,

           அவனை முறைத்து வேலு, “ஏலே மணி! பொண்டாட்டிகிட்ட அடி வாங்குனதே அசிங்கம். யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாம நிக்கேன்! இதுல கோச்சுட்டு இங்க இருந்து இன்னும் கேவல பட சொல்றியா? வண்டிய எடுலே! என்னைய கொண்டு போய் வீட்டுல வீடு. அங்க என்ன காத்திருக்கோ!” என்று வாய்விட்டு புலம்பிய படி வேலு கிளம்ப,

       “உன் தலையெழுத்து! வா வீட்டுல விடுறேன்” என்று வண்டியில் ஏற்றியவன்,

Advertisement

            “ பார்த்தியா வேலு, சின்னது தொட்டே சொம்பு உங்கூட தான் திரியும். அது சோட்டு பொம்பளை பிள்ளைக கூட விளையாடி ஒரு நாளும் பார்த்தது இல்லை. ரெண்டு பேரும் காடு, மலை, கம்மாக்கரை எல்லாம் ஜோடி போட்டு சுத்துவீங்க. சாமி கடைசி வரைக்கும் சுத்துங்கண்ணு முடிச்சு போட்டு விட்ருச்சு போல, ஒரு நாளும் உன் சம்சாரமா நம்ம சொம்பு வரும்ன்னு நினச்சு கூட பார்க்கலவே. சின்னதுலே நியி நிறைய அடி வாங்குவ சம்முகிட்ட, பொண்டாட்டியா அடிக்க தான் முன்னாடியே தோது பார்த்துருக்க” என்று கேலி செய்து மணிமாறன் சிரிக்க,

             வேலு முகத்திலும் புன்னகை தான். அது, அவன் சிறு வயது நிகழ்வுகள் நினைவில் வந்ததால். ஏனோ, ஐந்து வயதில் பள்ளி செல்ல தொடங்கியதில் தொடங்கிய நட்பு. எதனால் ஏற்பட்ட பிணைப்பு என்றெல்லாம் தெரியாது. ஆனால், ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் சேர்ந்தே தான் இருப்பார். வயது சென்று பெண்பிள்ளை , ஆண் பிள்ளை என்றான போதும், இவர்கள் இருவரின் நெருக்கம் மட்டும் மாறவே இல்லை.

                 வெளி வாசலை கூட்டி கொண்டிருந்த பூர்ணா, வண்டி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க. பார்வையில் ஒரு தெனவெட்டு!

                கையில் வைத்திருந்த வெளக்கமாறை பார்த்து, வேலுவை விட மணி மாறனுக்கு தான் பீதி கிளம்பியது. நேற்று நடந்தது படமாக ஓட, நொடி தாமதிக்காமல் வேலு இறங்கிய உடன் வண்டியை கிளப்பி விட்டான். வேலுவிடம் சொல்ல கூட இல்லை.

        “நம்ம வாயும் சும்மா இருக்காது. அவனவன் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கலாம். அடுத்தவன் பொண்டாட்டி கிட்டையுமா அடி வாங்க முடியும்!” என்று சத்தமாக புலம்ய படி செல்ல.

          அவனை பார்த்த வேலு, திரும்பி பூர்ணாவை பார்க்க.

                “பின் பக்கம் போய் குளிச்சுட்டு வா வேலு! தண்ணி காயுது” என பூர்ணா ஏதும் நடவாது போல் பேச.

               அதிர்ந்து பார்த்த வேலு, வெளி வாசலில் வைத்து ஒன்றும் பேச முடியாமல், அவள் சொல்வதை செய்தான்.

                வெள்ளை துணியில் அரிசி உமியை கங்கில் காட்டி எடுத்து வந்தவள்.

            “ஏலே வேலு! வடக்கு தலை வச்சு படுலே! ஒத்தடம் கொடுக்கணும். முதுகு கண்டி போய் கிடக்கு” என்று மனைவி சொல்லில் அவளை முறைத்து பார்த்த வேலு.

                 “ஏட்டி ! ஊர் சனம் பார்க்க மேல கைய வச்சு பிட்டு. ஏதும் நடக்காத மாதிரி கரிசனம் சொல்றவ ! நியி என்னைய அடிச்சையே, ஏத்து நான் ஒரு அடியாவது அடிச்சேனா! நான் வச்ச மரியாதையை நியி எம் மேல வைக்கலையே. வார்த்தை மீறினது தப்பு தான். ஊர் உலகத்தில குடிக்காத ஆம்பிளைய பார்க்கவே முடியாதுலே. எல்லா இடத்திலும் நடக்குறது தான்” என வேலு நியாயம் பேச.

               “ஏத்து நீயி அடிச்சிருந்தா , திரும்ப நானும் அடிச்சிருப்பேன் வேலு. சரிக்கு சரி மல்லு காட்டிருப்பேனே தவர ஊர் உலகத்தில நடக்குறது தானேன்னு சகஜமா எடுத்துகிட மாட்டேன். குடிக்கிறது தப்புன்ன தப்பு தான். பல பேர் ஒரு தப்ப சேர்ந்து செஞ்ச, அது நியாயம் ஆகிடாதுலே. குடிக்காத ஒரு ஆம்பிளையா நான் உன்னையா பார்க்கணும்லே வேலு” என்று பூர்ணா தன் பக்க நியாயம் சொல்ல.

               “குடிக்கிறவன் எல்லாரும் சாகுறது இல்லவே. ஏதோ ஒரு காயத்த ஆத்த தொட்டேன்.. விட முடியல” ஒரு பெருமூச்சு கிளம்பியது.

               “ நம்மளால விட முடியாத ஒன்னுண்ணு இந்த உலகத்தில எதுவுமே இல்லவே. உசுரா இருந்த உறவை தூக்கி குடுத்துட்டு வாழ நாம பழகல. ஆம்பிளையோ, பொம்பளையோ நல்ல மன வைராக்கியம் வேணும்லே. உம் உடம்ப உன்னாலே கட்டு படுத்த முடியலையா? அப்ப நான் அடக்குவேன்! அதுவும் அடிச்சு” என்க.

            அரண்டு போய் பார்த்தவன். “சம்மு” என்று சத்தமில்லாமல் மெலிதாக முனங்க.

          “அட ஆமாலே! குடிக்கிறது உனக்கு தப்பில்லைன்ன! அடிக்கிறது எனக்கு தப்பில்லை. ஆம்பிளைக கௌரவகார கொம்பணுக ஆச்சே. உம் கௌரவம் காத்துகோ வேலு” என்று ஆணி அடித்தது போல் தன் நிலைப்பாட்டை சொல்லி உள்ளே சென்றால் பூர்ணா.

       காலை பதினோரு மணிக்கு வேலு வீட்டு நிலவரம் அறிய மணிமாறன் மெதுவாக உள்ளே வந்தான். மெல்லிய வெள்ளை துண்டை உடலில் போர்த்தி, கூடத்தில் கிடந்த கட்டிலில், நாட்டு கோழி குழம்பில் நல்லெண்ணை மிதக்க ஊதி ஊதி குடித்து கொண்டிருந்தான் வேலு.

                “ஏலே வேலு! நல்ல கவனிப்பு போல. இது என்னாலே துண்டு. அட! ஒத்தனம் குடுத்தியா. உம் முதுகுக்கு நியா எப்படி குடுக்க முடியும்” என்க.

            எலும்பை எடுத்து கடித்தவாரு, “ சம்மு” தான் என வேலு பதில் கொடுக்க.

               “ஓ…. அப்படியா! அடிக்கிற கை தான் அணைக்கும்ன்னு சரியாத்தான் சொல்லிக்காங்க” என மணி நக்கல் பேச.

               “டேய் வாய மூடுறா! நீயா எதுவும் எட்டுகட்டி திரும்ப அடி வாங்க விட்ராத” என வேலு அலற

         கையில் குழம்பு பாத்திரத்துடன் வந்த பூர்ணாவை பார்க்காதது போல, “ஏன் வேலு, அந்த காலத்துல எல்லாம் வீட்டுல கறி குழம்பு வச்சா பக்கத்து வீட்டுக்கும் கொஞ்சம் ஊத்தி குடுப்பாங்க! இந்த காலத்தில வீட்டுக்குள்ள வச்சு இழுத்து பூட்டிகீறாங்க!” என்று சோகம் போல் புலம்ப,

                அவனை முறைத்து பார்த்தவள் . அவனருகில் இலை போட்டு சுடு சோறு பரிமாற, ஒரு விரிந்த சிரிப்போடு,

              “நான் சொல்ல, நம்ம சம்மு அப்படிலாம் இல்லன்னு! யாரு கொடியாசி மருமவள்ள!”

           இப்போது நிஜமாகவே கையில் கரண்டியை பூர்ணா எடுக்க,

           “ டேய்! அடி வாங்காம , பேசாம சாப்போடு.. அவ கிட்ட மாட்டுன நான் தடுக்க மாட்டேன்” என்று வேலு அதட்ட. அடுத்து உண்ணும் வேலை மட்டுமே அங்கு நடந்தது.

              அடுத்த வந்த வெள்ளி கிழமையில் காலையிலே பூர்ணா மகள், கணவனை அழைத்து கொண்டு நாகம்மன் கோவிலுக்கு வந்து விட்டாள். ஏதோ ஒரு வேண்டுதல் போல என்று நினைத்து வந்த வேலுவும், தனக்கு கயிறு கட்ட தான் என்று அறிந்தவுடன் பதறி விட்டான்.

             “ ஏட்டி சம்மு! என்னாவே இது. அடிச்சாலும், புடிச்சாலும் நம்ம வீட்டோட . சாமி காரியம் வேணால” என்று வேலு தடுக்க. பூர்ணா கேட்கவில்லை, வர மறுத்தவனை கையை பிடித்து தரதரவென இழுத்து வந்தாள்.

             “சம்மு! இனி குடிக்க மாட்டேன்லே. என்னிய நம்புவே! சத்தியமலே” என்று வேலு மன்றாட,

            “குடிக்க தான் மாட்டில. அப்புறமென்ன தைரியமா சத்தியம் பண்ணுலே” என்று பிடிவாதமாகவே கோவிலில் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய சொல்லி, கையில் கயிறும் கட்டி விட்டாள். வேலு தான் மனைவியை ஓயாமல் அர்ச்சனை செய்தான், அதுவும் மனதில்.

                 அடுத்து வந்த நாள்களில் வேலு குடி பக்கம் கூட போக வில்லை. அதன் தொட்டு பூர்ணா,

            “ஏலே வேலு! அடுத்த ஒரு வாரமும் புள்ளைக்கு லீவு தான். காட்டுலையும் பெருசா வேலை எதுவும் இல்லை. வண்டிய கட்டு ஒரு எட்டு வாணி மதினிய பார்த்துட்டு வந்துருவோம்”

          “அக்கா வீட்டுக்கு! என்னாலே சோழி?” என வேலு.

            “ம்ம்ம், கோச்சுட்டு போன மாமியார கூட்டிட்டு வர தான்” என்க.

          “ஆத்தாவைய ? இப்படிலாம் நான் போய் கூப்பிட்டதில்லையே! என்னாலே திடீர்னு. வேற எதுவும் விவரமா?” என கேள்வியாக வேலு கேட்க.

       “ உமக்கு இந்த விவரம் போதும். வண்டிய கட்டுலே”

              “வரவர எனக்கு மரியாதையே இல்லை சம்மு” என்று முணங்கியவாறு அடுத்து செய்வதை யோசித்தான்.

                       பவித்ராக்கு தான் ஒரே கொண்டாட்டம். இதுவரை விடுமுறை என்று எங்கும் சென்றதில்லை. வயதான அப்பத்தா, நேரமில்லாமல் சுற்றும் தந்தையை வைத்து கொண்டு எங்கும் சென்றதில்லை. சொந்த அத்தை என்று தெரியும், அப்பத்தாவும் அடிக்கடி சென்று வந்தாலும் உடன் அழைத்து சென்றதில்லை. தாமரையை கொண்டு மகளிடம் கேள்வி வருமோ என்ற பயம் தான் வேலுக்கு. ஆனால், இன்று குடும்பமாக வெளியில் செல்வது அவ்வளவு மகிழ்ச்சி அந்த சின்ன சிட்டுக்கு. நேற்று முதலே தன் தோழிகளிடம் எல்லாம் சொல்லி சொல்லி மாய்ந்து போனாள்.

              கிளம்புவதற்காக மகளும், மனைவியும் கட்டி வைத்திருந்த பெட்டிகளை பார்த்து அரண்டு போனவன்.

                  “பொண்ணு குடுத்த வீட்டுல குடுத்தனமா பண்ண போறீங்க! எதுக்கு இம்புட்டு சாமான்?” என இடுப்பில் கை வைத்து சிறு கோபத்தோடு வினவ,

         “ எம்புட்டு சாமான்? இந்த பெட்டில பிள்ளைக்கு உடுப்பு. வயசு புள்ளை நல்லதா போட வேணாமா, அதுவும் அயித்த வீட்டுல?. அப்புறம் அந்த பெட்டில எம் உடுப்பு. நானும் எந்த நல்லதுக்கு போனேன். நாத்துநார் வீட்டுக்கு போன, நல்லதா நாலு இடத்துக்கு போவோம். நாங்க கௌரவமா உடுத்தினா தானே உனக்கு மரியாதை. உன்னியகெனக்க வெள்ளை வேஷ்டியும், சாயம் போன கலர்ல நாலு சட்டையும் மட்டும் போதுமா!” என பூர்ணா பதில் கேள்வி கேட்க.

              சரி என்று தலையசைத்தான்.

“ இது என்ன மூட்ட முடிச்சு” என்க.

                வருசம் செண்டு போறோம், வெறும் கையை வீசியா போக சொல்றவன். நம்ம காட்டு நெல்லு, அவிச்சு எடுத்த பூமாதிரி சோறு வரும். இது, கத்தரி, தக்காளி, மிளகாய் வத்தல், கடலை… அப்புறம், அந்த சாக்குல நம்ம வீட்டு முருங்கை கீரை, சுரக்காய், பூசணி.. அந்த வெள்ளை சாக்கு காட்டு நெல்லி, தோட்டத்து கொய்யா, வடு மாங்காய்”

                “அப்புறம் அந்த கவர் முழுக்க வீட்டுல சுட்ட அதிரசம், முறுக்கு, சீடை, எள்ளு உருண்டை, கடலை புட்டு, கருப்பட்டி, மண்டை வெல்லம், குழம்பு மசால். அப்புறம் கடைசியா நம்மூர் குண்டு மல்லி” என மூச்சு வாங்க நிறுத்த.

                 “ஏட்டி சம்மு! சொல்லும் போதே மூச்சு வங்குதே. எதுக்கு இம்புட்டு? மதுரையவே தூக்கி போறீக! உம் மதினிக்கு கல்யாணம் முடிஞ்சு பதினெட்டு வருசம் ஆச்சு. வேற விடுற மாதிரி சீர் கொண்டு போறவ”

           “உமக்கு என்னாலே தெரியும் பொம்பள மனசு? பொறந்த வீட்டு கடுகு கூட உசத்தி தான்” என பகட்டாக பூர்ணா பதில் சொல்ல

              “சரிலே, உம் மதினிக்கு செய். அதுக்கு ஏன் இங்கிருந்து சுமந்துட்டு போனும்! திருச்சிலயே எல்லாம் கிடைக்கும். அங்க போய் வாங்கிக் கொள்ளாம்” என்றான் வேலு. அவனுக்கு இவ்வளவு சாமனையும் எப்படி இந்த சிறு வண்டியில் ஏற்றி செல்வது என்ற கவலை.

               “ அங்க போய் வாங்கி குடுக்க. இங்கிருந்து நாம ஏன் போகணும்?” என்று பூர்ணா கழுத்தை ஒரு வெட்டு வெட்ட.

                 அமைதியாக அனைத்தையும் நான்கு பேர் மட்டும் போகும், வண்டியில் ஏற்றி விட்டான் வேலு.

                   மூன்று மணி நேர பயணம் உல்லாசமாக கழிந்தது. அந்த, சிறு குடும்பத்திற்கு. ஏதேதோ பேசி சிரித்த படியே திருச்சி வந்தனர். மூவருமே இத்தகைய சந்தோசத்தை எல்லாம் அனுபவித்திராததால், இந்த அனுபவம் தன் குடும்பம் என்ற பினைப்பையும், அன்பையும் கூட்டி சேர்த்தது.

                   வீட்டின் வாசலுக்கே வந்து ஆளாத்தி எடுத்து வரவேற்றனர் கலை தம்பதிகள். பெரியாத்தாவுக்கும் மனது நிறைவாக இருந்தது. குடும்பத்துடன் வந்திறங்கிய மகனை பார்த்து பூரித்து போனார். ஆரம்ப கட்ட நலவிசாரிப்பு எல்லாம் முடிந்து, ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பொருட்களை இறக்குமதி செய்ய. வேலுவை போலவே கலைவாணனுக்கும் அதிர்ச்சி தான். என்ன இது கூத்து! என்று கொஞ்சம் சிரிப்பும் வந்தது.

                 ஆனால், வாணி முகம் மலர்ந்து விகாசித்தது. அவள் முகம் இதை அவள் எதிர்பார்க்கவில்லை என்று காட்டியது, “ எப்படி சம்மு சிரம்மம் பார்க்காம இம்புட்ட அள்ளி கொண்டு வந்த?”

                “ஏன் மதினி, உங்களுக்கு பிடிக்கலையா” என்றாள் பூர்ணா. வேண்டுமென்றே கேட்ட கேள்வி தான். வாணியின் முகம் பதில் சொன்னாலும், வாய் வார்த்தையாக கேட்க தான் அவளுக்கு ஆசை. இதை போய் எவ்ளோ தூரம் தூக்கிட்டு போனுமா? என்ற வேலு கேட்ட கேள்விக்கு, வாணியிடம் பதில் தேடினால்.

  “என்ன புடிக்கலையாவா? நல்லா கேட்ட போ! நம்மூர் வாசத்துக்கு மனசு ஏங்கும். ஆனா, யார் கிட்ட கேட்க. அம்மா வயசானவங்க, இம்புட்டு தூரம் வாரதே பெருசு. அப்புறம் உம் புருசன் ஏதாவது முக்கிய விசேசம்னா தான் அக்கான்னு ஒருத்தி இருக்கிறதே அவனுக்கு தெரியும் போல, மத்தபடி ஒரு போனு கூட கிடையாது. வயசு பிள்ளைக ரெண்டு பேர வச்சு கிட்டு எங்குட்டு நடையை கட்ட” என்று சலித்து கொண்டவள்.

                 “காய் வாசம் இழுக்குது, நம்ம தோட்டத்து காய் எண்ணெய் கத்தரிக்காய் போட்டு சுடு சோறுல உருட்டி சாப்ட, சட்டி சோறு காணாது. இங்கெல்லாம் உருட்டு தக்காளி தான், நம்ம காட்டு தக்காளி சக்கரையா இனிக்குமே. மல்லிகைப்பூன்ன நம்மூர் வாசம் எந்த பூக்கும் இல்லவே! சுரைக்காய் கூட்டு கறி குழம்பே வேணாம் அம்புட்டு ருசியா இருக்கும்” என்று பிறந்த ஊர் பெருமைகளை வாணி அள்ளி விட, வாய் மூடாமல் கேட்டு கொண்டிருந்தான் வாணன்.

            “நம்மூர் சோனை தண்ணிய கூட கொண்டு வந்துருக்கேன் மதினி” என்று பூர்ணா தர,

                 சேலை எல்லாம் நனையுமாளவு தண்ணியை குடித்த வாணி. “ வயிறே நிறைஞ்சு போச்சு சம்மு. ஊர் மெச்ச சீர் செஞ்சவங்க, இதெல்லாம் பார்த்து பண்ணால. எல்லா ஊர்லையும் எல்லாம் கிடைக்கும் தான், ஆன மணம் ஒவ்வொரு ஊருக்கும் தனி இல்லையா!. சட்டுன்னு போற தூரத்துல நான் வாக்கப்படல. அம்மாக்கும் வயசு போய், எந்தம்பிக்கும் வாழ்க்கை கெட்டு, நான் யார்ட போய் செல்லம் கொஞ்ச.. சொந்தன்னு இன்னிக்கு தானே வந்துருக்கான். அங்க வேற பொம்பளைக இல்லை நான் யார் கிட்ட பொறந்த வீட்டு பவுச காட்ட சொல்லு” என சோகமாக வாணி பேச,

           ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. தங்கள் வீட்டு பெண் மனதில் இவ்வளவா என்று வேலு, பெரியாத்தா இருவரும் மலைத்து நிற்க. கலைவானனுக்கு மனைவியின் ஏக்கம் இப்போது தான் புரிந்தது. பிள்ளைகள் இருவரும் பெரியவர்களாக வளர்ந்து நிற்க, குடும்ப பொறுப்பு, கடைமை, பொருளாதார நிலை, பிள்ளை படிப்பு, எதிர்காலம் என்று நடுத்தர வயதின் மேல் நிலையில் நிற்கும் தன் மனைவிக்கும் விளையாட்டுதனமான ஏக்கங்கள் இருக்க தான் செய்யுமோ! எந்த வயதிலும் பெண்களுக்கு பிறந்த வீட்டு சுகம் அலுப்பதில்லை போலும்!.

                 “ஏன் மச்சான்! உங்கவூர் தண்ணி கூட வாசம் வீசுமா என்ன?” என கிண்டல் தொனியில் வாணன் கேட்க,

           “காத்து கூட மணக்கும் அண்ணே! புகை, புழுதி இல்லாம, காத்துல வர ஈர வாசம் நடு மண்டை வர சம்முனு மணக்கும். மண்ணை உழுது வரும் புழுதி கூட வாசமா தான் இருக்கும்” என்று அடுத்த பட்டிமன்றத்துக்கு பூர்ணா தயாராக,

                  ஒரு சிறு சிரிப்போடு வெற்றி கரமாக பின் வாங்கி விட்டான் கலைவாணன். பூர்ணாவின் கலகல பேச்சில் பொழுது நன்றாக செல்ல, வந்து சேர்ந்தான் வாணியின் புதல்வன் ராகவ். பதினேழு வயதில், சிவந்த நிறத்தில், அரும்பு மீசையோடு சிரித்த முகமாக பேசியவனை முதல் பார்வையிலேயே பிடித்து போனது பூர்ணாக்கு. மனதில் ஏதேதோ கற்பனை வளம் வர, உற்சாகமா தன் மதினியோடு பேச ஆரம்பித்தாள்.

               பூர்ணாவின் பேச்சில் அதிகமாக ராகவின் பெயர் அடிபடவும் சுதாரித்து கொண்டான் வேலு. மனைவியை ஊர்ந்து கவனிக்க, அவளின் எண்ண ஓட்டம் புரிந்து பதறி போனான். வெள்ளந்தியாக வாணி பதில் சொல்ல, விசமமாக தான் பூர்ணா கேள்வி இருந்தது. யாரும் கவனித்து கேட்கும் முன், மனைவியை தனியே தள்ளி கொண்டு வந்தவன்.

            “ ஏட்டி சொம்பு! கூறு கெட்டு போச்சா உமக்கு?” என்று வேலு கடிந்து கொள்ள.

                 “இப்ப என்னாலே ஆகி போச்சு! பொம்பள பிள்ளையை பெத்தவக நாம. நாலும் பொருத்தமா நிக்க, மனசு நினைச்சுச்சு. இப்பவேவா எல்லாம் ஆக போது.. காலம் வரும் போது பாப்போம். சொந்தத்தில நல்லது நிக்க, ஒரு ஆசை தான் வேலு” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல். அவன் மனதையும் கரைத்தாள்.

             “இங்கரு வேலு! உங்கக்காவும், மாமாவும் நல்லவங்களா தான் தெரியுராங்க. இந்த காலத்துல யார நம்ப முடியுது. சொந்தம்ன நல்லது, கெட்டது எதுனாலும் அனுசரிச்சு இழுத்து போகும்ல! நமக்கும் ஒத்த பிள்ளை, நாளபின்ன வேறுபாடு வராது. வீடு, வசதி, குணம், பழக்கம் எல்லாம் சுகம் தான். அதான் ஒரு ஆசை” என்று பூர்ணா விளக்கம் கொடுக்க,

               மனைவியின் பதில் மனதில் அடுக்கடுக்கான ஆசையை உண்டு பண்ண, ஒரு நொடி நினைத்தாலும். மறு நொடி மனதில் தாமரை முகமும், தாய் மாமன் முகமும் தோன்றி மறைய, அதை தொடர்ந்து நடந்த சம்பவமும் மனதை நிறைக்க. உள்ளம் குலுங்கியது, போதும் சொந்தம் என்ற உணர்வு தான் வேலுக்கு. கடைசி வரை அக்கா என்ற உறவாது தொடரட்டும் என்று எண்ணியவன்.

       “உம் கனவு பேச்சு எல்லாம் போதும் சம்மு. எங்கிட்ட சொன்ன மாதிரி அத்தா கிட்ட சொல்லாத. நியி நினைக்கிறது எதுவும் நடக்காது. எம் மாமனும், எங்கம்மைகளும் எம்புட்டு உசுரா இருந்தாகன்னு உமக்கு தெரியும் தானே! கடைசில என்ன ஆச்சு, செத்த இலவுக்கு கூட நிக்க முடியாம போச்சு! ஒன்னுக்குள்ள ஒன்னு சம்மந்தம் பண்ணி பட்டதெல்லாம் போதும் சம்மு. கஷ்ட நஷ்டதில கூட நிக்குற, உறவு பேசி ஒதுக்கி வைக்க விரும்பல” என்று மனம் நொந்து வேலு பேச,

             பூர்ணா ஒரு பெருமூச்சு விட்டவாறு, “ எங்கம்மையும் புலம்புனாக, என்னான்னு.. சொந்தத்தில ஒரு மாப்பிளை இல்லாம போச்சே, நிறையோ – குறையோ சொந்தம் அனுசரிக்கும்ன்னு.. நம்ம தலைவிதி கெட்டு போனோம். நம்ம புள்ளைக்கு கடவுள் நல்ல வழி விடும் வேலு. தப்பான யோசனையை விடு”

             “ இப்ப இருக்குற காலம் வேறலே. நாமலாம் பெத்தவங்க சொன்ன மறுபேச்சில்லாமா செய்வோம். இந்த கால பிள்ளைக கிட்ட எதிர்பார்க்க முடியுமா! நம்ம புள்ளைனாலும் நம்ம விருப்பத்தை திணிக்க கூடாதுலே!” என வேலு புரிய வைக்க.

              “அத வேணா ஒத்துகிறேன் வேலு. இருந்தாலும் மூணு மாடி வீடு, ரெண்டு காரு, நல்ல குணமாவும் இருக்கான்” என ஏக்கமாக சொல்லியவள், அங்கிருந்த பளிங்கு தூணை தடவி, “எம் மக வீடா வருமா வேலு”என்று ஒரு கேள்வி கேட்க.

              “செருப்பு தான் வரும், போடி முன்னாடி” என அரட்டல் போட்டு இழுத்து சென்றான்.

              “ஐயே! வயசு புள்ளை இருந்தா, பெத்தவளுக்கு தோணத்தான் செய்யும். அதுக்கு போய் வையுறவன்!” என்று முனங்கி கொண்டே தான் உடன் சென்றாள்.

                       இரவில் பவித்ராவை தங்களுடன் வைத்து கொள்கிறோம் என்று வாணி எவ்வளவு எடுத்து சொல்லியும். பூர்ணா கேட்க வில்லை. “ பவி இல்லாம எனக்கு தூக்கம் அண்டாது மதினி” என்று கூட்டி சென்றாள்.

                    மகளை தூங்க வைத்த பின், வேலு மனைவியிடம், “ ஏட்டி! எப்பவோ வார அயித்த கூட ஒரு நாள் தூங்குண என்னாலே!”

             “வயசுக்கு வந்தோம்ன்னு பேரு தான், இன்னும் உம் மவ போர்வைய நனைக்குறா. நாளைக்கு மவனுக்கு பொண்ணு பார்க்கும் போது இது ஒரு குறையா மதினிக்கு அம்பட கூடாது பாரு அதான்” என்று பூர்ணா ஒரே போடாக போட,

              கடுப்பானவன், “ சம்மு உம் தொலைநோக்கு சிந்தனையை கண்டு உடம்பு புல்லரிச்சு போச்சு” என்று மொழிய,

          “ம்கூம் உமக்கு என்ன! நான் பொ” என்று பூர்ணா ஆரம்பிக்க,

              “பொம்பிளை பிள்ளை பெத்தவ, ஆதான! எனக்கு நல்லா வரும் வேண்டாம். பேசாம படுடி” என்று அதட்டல் போட

             கழுத்தை வெட்டியவள் மறுபக்கம் திரும்பி படுத்து கொள்ள, நடுவில் பவித்ரா. இருவர் முகத்திலும் உறைந்த புன்னகையோடு, நீண்ட நாட்களுக்கு பின் நிம்மதியான உறக்கம்.

              “ பவி என்கூடவே தூங்கடும்ன்னு சொல்லியும் வம்பா இந்த சம்மு கூட்டிட்டு போய்டா. பிள்ளையை தான் உத்து உத்து பாக்குறாங்க. என்னைக்கு ரெண்டு பேரும் சேர போறாங்க. நீங்க அவசர பட்டு கல்யாணம் பண்ணி வச்சுடிங்க. அவங்க இன்னமும் அப்படியே தான் இருக்காங்க” என்று தன் தாயிடம் புலம்பி கொண்டிருந்தாள் வாணி.

             “ஏட்டி! தாலி கட்டிடான்ல. இனி எல்லாம் மாறும். ஆனா, உடனே மாறாது” பெரியாத்தா வியாக்கானம் பேச,

                அவரை முறைத்து வாணி. “ஒத்த தாலி கட்டிட்டா எல்லாம் எப்படி மாறும். அட போம்மா! நியி வேற அங்குட்டு” என வாணி சலித்து கொள்ள

       “தாலி மட்டும் போதும், தன்னல செருவாங்க”

              “ சேருவாங்ka.. சேறுவாங்க.. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில தான் காதலே இல்லையே அப்புறம் எப்படி” என இருகைகளையும் விரித்து மகள் கேட்ட கேள்விக்கு,

                 “ இவ யாருடி சுத்தம் கூறு கெட்டவள இருக்கா! அந்த காலத்தில நாங்கல்லாம் காதல் பண்ணமாக்கும். கம்மாகரையிலும், களத்து மேட்டிலும் பாட்டு பாடிகிட்டு … அது என்னது லவ்வுயு சொன்னமாக்கும். போடி இவளே! ஒத்த மஞ்ச கயிறு தான், கட்டுனது யார இருந்தாலும் காலத்துக்கும் சொந்தம்தான். இப்பதானே போன்ல பேசி கல்யாணம் கட்டுறாங்க, அப்பல்லாம் ஏது போன்னு? கழுத்துல மஞ்ச கயிறு ஏறிட்டா தன்னாலே உறவும், உரிமையும் வந்துடும்வே! அது தான் தாம்பத்தியம். சாதாரண கயிருன்னு நினைக்காத, எப்படி பட்ட ஆம்பிளை, பொம்பளையும் வாழ வச்சுப்புடும். தாலி கயிறு கொடுக்குற உணர்வு ஆலாதியானது. அதை மாத்தி வாழ நம்ம புள்ளைக பழகல”

                 “உங்க காலம் வேற, இந்த காலம் வேறம்மா. காலம் மாறி போச்சு!”

           “காலம் மாறிடுச்சுன்னு பொம்பளைக யாரும் ஆம்பிளை கழுத்துல தாலி கட்டலையே. ஐந்நூறு வருசத்துக்கு முந்தியும் தாலி தான், இப்பவும் தாலி தான். அப்பவும் ஒரு பொண்ணு தான் தாலிய சுமக்குறா, இப்பவும் ஒரு பொண்ணு தான் தாலி சுமக்குறா! உடுப்பும், படிப்பும் மாறலாம், நம்ம அடையாளம் மாறாதுலே! போய் தூங்கு” என்றபடி பெரியத்தா எழுந்து செல்ல, பின்னாடியே வாணியும் சென்றாள்.

                மறுநாள் காலையிலே பரபரப்பாக அனைவரும் கிளம்பி விட்டனர். எங்கு, நகையும், உடையும் வாங்குவதற்கு தான். பவித்ரா பெரிய பெண்ணாகிய பின் அத்தை முறைக்கு வாணி எதுவும் செய்யாததால், மருமகளுக்கு ஏதேனும் வாங்கி குடுக்க, உடன் குடும்பத்தையே அழைத்து சென்றாள்.

       பெரிய நகைக்கடையில் அனைவரும் கூடியிருக்க, ஒவ்வொன்றாக பார்த்து வந்தனர். பூர்ணாவும் மகளுக்கு என்று உற்சாகமாவே ஒவ்வொன்றையும் தொட்டு தொட்டு பார்த்தாள்.

          கேரளா பாணியில் நெல்லு மாலை அனைவருக்கும் பிடித்து போக, அதையே தேர்வு செய்தனர். அது, சுமார் ஏழு சவரன் இருந்தது. பூர்ணா தனியாக வேலுவிடம் கேட்டு தான், வாணியின் மகள் ராகவிக்கு குடை சிமிக்கி வாங்கி கொடுத்தாள்.

        பூர்ணா தான் வேலுவிடம், “பார்த்தியா வேலு, தக்காளியும், கத்தரியும் தூக்கி அலையுறவன்னு சொன்னியே, பார்த்தியா. அது பண்ண வேலையை, சுளையா தாங்க நகை வீடு வந்து சேர்ந்துருக்கு. தம்பி மகளுக்கு செய்யணும்னு உம் அக்காக்கு நினைப்பிருந்தாலும், உம் மாமாவும் துணை நிக்கணும்ல! நல்ல மனுசன் தான்” என்று பாராட்டியவள்,

         “ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் வேலு, தாய்மாமன் மொய் தானே ஓசி. அயித்த மாமன் செஞ்சா அது செய்முறை தான். திரும்ப செய்யணுமா!”என கேட்டவள பார்த்து தலையில் அடித்து கொண்டவன்.

             “ரொம்ப யோசனை செய்யாதா! வா துணி எடுக்க போவோம்” என்று அடுத்து ஜவுளி கடை சென்றனர். விலையை பற்றி கவலை இன்றி அனைவரும் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய. எல்லாரையும் ஆராய்ந்த படியே அமர்ந்திருந்தாள் பூர்ணா.

        அவள் வீட்டில் எல்லாம் பட்ஜெட் தான். முதலில் துணியின் விலை பார்த்து தான், தரம் பார்ப்பாள். தங்களுக்கு கட்டுபடியாகது என்ற பின் மற்றவை பின் ஏன் கண் செல்ல வேண்டும். அதனால், தான் இவர்களின் வசதி வாய்ப்பில் உடனடியாக கலந்து கொள்ள முடியவில்ல.

      வேலுவின் கட்டாயத்தில் வந்தவள், மகளுக்கு மட்டும் நல்லதாக பார்த்தாள். ஆனால், எந்த துணியை எடுத்து போட்டாலும் அதன் விலையில் தான் முதல் கண்கள் போகும். அவள் பழக்கமே அதுதான். விலை பார்க்காதே என்று வேலு சொல்லியும், அவளால் தடுக்க முடியாது. விலை பார்த்தே துணி எடுப்வாள்.

          மகளுக்கு, மதினிக்கு, இராகவிக்கு, அயித்த என்று எல்லோருக்கும் எடுத்தவள் தனக்கு மட்டும் எதுவும் எடுக்க வில்லை. வேலு சொல்லியும் எடுக்கவில்லை. தனியே அழைத்து சென்று, வேலு காரணம் கேட்க.

           “இன்னைக்குகே உமக்கு எம்புட்டு செலவு. மதினி வீட்டாலுகளுக்கு எடுக்கணும், பவி சின்ன புள்ளை ஏங்கி போகும் அதுக்கும் எடுக்கணும். உங்கிட்ட காசு இருக்கா என்னான்னு எனக்கு தெரியாதே வேலு. உனக்கு அதிகம் செலவு வைக்க கூடாதுல. கத்தரியும், தக்காளியும் கை கொடுக்கல.”

     இடை மறித்த வேலு, “அதனால சம்பூர்ணா கை கொடுக்குறீங்களாக்கும்” என்று நக்கலாக வேலு கேட்க.

       “பின்ன என்ன.. கைல காசு இருக்கா, இல்லையான்னு தெரியாம. இஷ்டத்துக்கு செலவு செஞ்சு நான் பழகல வேலு. விலையும் கூட இருக்க, பேசாம இருந்து கிட்டேன்” என பூர்ணா புரிய வைக்க

          வேலுக்கு அப்படி ஒரு சிரிப்பு, “ நான் காசு நிறையா தான் கொண்டு வந்தேன். உமக்கு பிடிச்சத எடு” என்க.

        அவனின் சிரிப்பு பூர்ணாக்கு தான் பிடிக்கவில்லை, “ என்னாலே சிரிப்பு. உம் கையிருப்பு வீட்டு பொம்பளைக்கு தெரியினுமா இல்லையா. சம்பாத்தியம், வருமானம் எல்லாம் வீட்டு பொம்பளைக்கு சொல்லாம, கக்கத்தில காசு வச்சு நிக்குறவன். வரவு, செலவு சொல்ல மாட்டியோ அம்புட்டு கௌரவம்!” என்று அவனை விரட்ட,

           ஏதோ சொல்ல வந்தவனையும் தடுத்தாள், “ உம் வரவும் தெரியாம, வரவுக்கு தக்க செலவும் செய்ய தெரியாம நான் நிக்கென். நீயும் முழிlக்கிறவன். நீ தானே வேலு சொல்லணும், இம்புட்டுக்கு எடுக்க சொல்லி. இல்லைன்னா எம் கைல காசா தரணும். இருப்புக்கு தக்க நான் செலவு பார்த்துபேன். எதுவும் சொல்லாம மரமா நிக்குற” என்று பூர்ணா வாதம் செய்ய

           என்ன சொல்வதென்று முளித்த வேலு. கடைசியில் மனைவியிடம் சரணடைந்து விட்டான்.

             பூர்ணாவும் சமாதானமாகி சேலை தேர்வில் இறங்கி விட்டாள். வேலு தான், எலுமிச்சை கலரில் ரோஸ் கலர் பார்டரில் ஒரு சேலையை கொண்டு வந்து கொடுக்க. பூர்ணா முகத்தில் சிரிப்பு. இது அவள் தேர்வு தான், விலை அதிகமாக இருக்க விட்டுவிட்டாள். அதை எவ்வாறு இவன் பார்த்தான்.

              “சேலையே வேணாம்னு சொன்னவ! இதையே உத்து பார்த்த”

            “பார்த்ததும் பிடிச்சது, விலையை பார்த்து ஒரு ஏக்கம். பழக்கமான ஏக்கம் தான். அழகான சேலை எல்லா மேலையும் கண்ணு போகும். ஆனா, கைலா இருக்குற காசுக்கு தக்க எடுத்து வருவேன். இன்னிக்கும் அதான். பிடிச்சது ஆனா கட்டுபடியாகது. வாங்கத்தான் காசு வேணும், பார்த்து ரசிக்க கண்ணு போதும்லே” என பூர்ணா விளக்கம் சொல்ல,

           “இனி, வாங்கவும் ஆசை படலாம். வாங்கி கொடுக்க பூர்ணா வூட்டுகாரான் தங்கவேலு இருக்கான்” என்று ஜம்பமாக வேலு சொல்ல,

        “அப்படியா வேலு, கீழ ஒரு சேலை பார்த்தேன் அஞ்சு லட்சமா! வாங்கி கொடு” என்று பூர்ணா கேட்ட நொடியில் வேலு முழித்தானே ஒருமுழி, அக்மார்க் திருட்டு முழி. பூர்ணாக்கு அப்படியொரு சிரிப்பு. கலகலவென, சிறு வயதில் வேலு ரசித்த சிரிப்பு. வேலு எதிர்பார்த்த சிரிப்பு. அத்தோடு, எலுமிச்சை வண்ண பட்டு புடவையும் பேக் செய்ய பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!