Skip to content
Post Views: 5,840
புது மஞ்சள் புது தாலி
அத்தியாயம் 20
மறுநாள் புதுமண தம்பதிகளுக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தாள் வாணி. அது ஏற்கனவே அவர்களுக்கு அறிவிக்க பட்டும் இருக்க, காலையிலே எல்லோரும் தயாராகினர். மகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அனுப்பி விட்டவள், தன்னிடம் புது சேலை தவிர, வேற எந்த மாற்றத்தையும் ஏற்க துணியவில்லை. ஏனோ! மனம் இன்னும் தடுமாற்றத்தை மட்டும் விடவில்லை.
அவளின் கோலம் கண்ட பெரியாத்தாவுக்கு பொசுக்கென்று கோபம் வந்தது. இழுத்து பின்னிய சடை, நெற்றியில் வட்ட பொட்டு, கழுத்தில் மஞ்சள் கயிறு தவிர வேறொன்றும் இல்லை, இரு கைகளும் வெற்றாக்க கிடக்க. பற்றி கொண்டு வந்தது வேலுவின் தாய்க்கு. ஆனால், வாணிக்கு தம் தம்பி மனைவி மனம் புரிய தான் செய்தது. மாற்றத்தை சமூகம் அங்கீகரிக்கும் முன் பெண்ணவள் மனமும் ஏற்க வேண்டுமே!
Advertisement
முதல் திருமண பந்தத்தில் இணையும் போது இருக்கும் ஆசையும், எதிர்பார்ப்பும். இரண்டாம் திருமண பந்தத்தில் இணையும் போது இருக்காதே. பயமும், நிராசையும், முந்தின வாழ்வின் எச்சமும், நிகழ்கால அலங்கோலமும் தான் முன் நிற்கும். அதுவும், ஒரு பெண்ணிற்கு இரண்டாம் திருமணம் என்றால், முதலில் நம் சமூகம் ஏற்கும் முன், பெண்ணவள் மனம் ஏற்பதில்லை. நம் வாழ்வோடு இணைந்த கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும் , விதிகளையும் மீறி தனக்கென ஒரு புதிய பாதையில் அடி எடுத்து வைக்க எத்தனை பெண்கள் துணிகிறார்கள்?…
நிச்சயமாக பூர்ணாக்கு அந்த துணிவு இல்லை. அவளாக எப்போதும் தனக்கென ஒரு துணை வேண்டும் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. முன்பான வாழ்வு எவ்வளவு வலியை கொடுத்த போதும், மற்றொரு ஆடவனை மனம் ஏற்க துணியவில்லை. வெட்டி விட்ட பின்பும் விதவை கோலம் கொண்டு தான் இப்படி தான் என்ற பெண்ணை எவ்வாறு மாற்ற இயலும். கணவன் எப்படி இருந்தாலும் தாலி கொடிக்கு பெண்ணிடம் இருக்கும் மரியாதை, அது தனி தானே.
அதே, தாலி கொடி உறவை வைத்து தான், வாணியும் பெண்ணவள் மனதில் புது உறவுகளை பதியம் போட செய்யும் ஏற்பாடு தான் கோவில் சிறப்பு பூஜை. தன் ஆத்தாவை சமாதானம் செய்து முன்னர் காரில் அனுப்பியவள். மற்றொரு காரில் தம் தம்பி குடும்பத்தோடு இணைந்து கொண்டாள். வேலுவும், பூர்ணாவும் தங்கள் மகளோடு ஏதேதோ கதை பேசிய படி வர, அவர்களையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் வாணி.
Advertisement
அவள் மனதில் இருவரும் பொருத்தமானவர்களாக தான் தோன்றினர். அரை மணி நேரம் சேர்ந்து பேசினாலே முட்டி கொள்ளும் அளவிற்கு கருத்து வேறுபாடு உள்ள தற்போதைய தம்பதிகளுக்கு மத்தியில், இவர்கள் இருவரின் பேச்சும், செயலும், ஒருவரை ஒருவர் ஒட்டியோ, சார்ந்தோ தான் தான் இருக்கும்.
Advertisement
கோவிலில் இறங்கிய வேலு குடும்பம், பிரகாரம் உள்ளே செல்லும் முன், வழியிலே மறைத்த கலை. தன் மச்சானை மட்டும் தனியே தள்ளி கொண்டு சென்றான். என்னவென்று புரியாமல் பார்த்து நின்ற பூர்ணாவை, வாணி தனியே அழைத்து செல்ல,
“ என்ன மதினி! என்னைய ஏன் தனியா தள்ளி வாறீக? வேலுவ அண்ணன் கூட்டி போறாக! வேற என்னமும் சோலியா? எதுன்னாலும் சொல்லுங்க மதினி?” என்று பூர்ணா கேட்க.
“விவகாரமான சோலிலாம் ஒன்னும் இல்ல, விசேஷம் தான் சம்மு. உனக்கு மஞ்ச கயிற மாத்தி தாலி பிரிச்சு கோர்க்கணும். அப்புறம் ரெண்டு பேருக்கும் தனியா பூஜை செய்யணும். அதுக்கான ஏற்பாடு தான்” என்ற வாணி. நடைமுறை போல சொல்லி, பூர்ணாவை அலங்கரிக்கும் வேலையில் இறங்க,
Advertisement
பூர்ணா தான் முகம் இருள நின்றிருந்தாள். வேலுவின் மனைவியாக தன்னை நிலைப்படுத்தி தோற்றத்தில் எல்லாம் மாற்றத்தை கொண்டு வரவில்லை. திருமணம் முடிந்து ஒரே வீடு, இருவரும் சேர்ந்த ஒத்த வாழ்வு என்ற நிலையிலும் அவனின் மனைவியாக தன்னை தானே அங்கிகரிக்கவில்லை என்பது தான் உண்மை.
வேலுவின் மனைவியாக வீட்டில் வலம் வரும் போதும், அடுப்படி வேலை, வீட்டு பொறுப்பு, தோட்ட வேலை என்று வேலுவோடு தோது போட்டு எடுத்து கட்டி செய்யும் போதும்! அவ்வளவு ஏன் வேலுவின் துணிகளை உள்ளாடை முதற்கொண்டு துவைக்கும் போது தோன்றாத ஒரு நடுக்கம்! மஞ்சள், குங்குமத்தை பார்க்கும் போது மனம் அதிர்ந்து தான் போனது. உணர்வு ரீதியாக, மன ரீதியாக ஆத்மார்த்தமாக பெண்ணில் ஊடுருவும் ஒரு சக்தி வெறும் துகளான மஞ்சள் – குங்குமத்தை தாண்டி வேறெதுக்கும் இல்லையே!.
கண்கள் ரெண்டும் நீரால் நிறைய,நெருக்க தொடுத்த மல்லிகை பந்தல் நடுவே பொருத்தமாக அமர்ந்திருந்த தாழம்பூ குங்குமத்தை தன் இதயத்தை கசக்கும் வலியோடு பார்த்திருந்தாள் பூர்ணா. இனி ஒரு நாளும் தொடவோ! தொட்டு உணரவோ முடியாது! ஏன் அதன் வாசத்தை ஆள கூட வழியில்லை என்று ஒதுங்கியவளுக்கு எவ்வளவு பெறும் பாக்கியம்.
எத்தனை பேருக்கு கிடைக்கும் வரம்! விலையில் பத்து ரூபாய் தான். ஆனால், மதிப்பில் அதன் தரம் அதிகமே! தன்னை தவிர, அதை யார் நன்கு உணர முடியும். இழப்பின் வலி தெரிந்தவள் தான் மட்டும் தானே!. ஊர் கூட்டி செய்ய விட்டாலும், தனக்கு தானே ஒரு விதவை கோலம் பூண்டாளே. மஞ்ச கயிறே ஆனாலும் கழுத்தில் கிடந்த தாலியையும், நெற்றியில் வைத்து குங்குமத்தையும், கண்ணாடி வளையல்களை அறுத்து தூக்கி எறியும் போது உள்ளம் எடுத்த ஊமை வலி யாருக்கு தெரியும். போனால் போகட்டும் என்றோ! அலட்சியமாகவோ தூக்கி எறியப்படும் பொருள் அல்லவே! அவை.. பொக்கிஷமாக அல்லவா பொத்தி வைத்திருந்தாள்.
அழகுக்காக எல்லாம் குங்குமம் வைக்கும் ரகம் அல்ல பூர்ணா. கை நிறைய அள்ளி, உச்சி நிறைய வைப்பாள். அவ்வளவு ஆசை கொண்ட பெண் தான். அதுவும், வெள்ளி – செவ்வாய் கிழமைகளில் யாரேனும் பூ கொண்டு வந்தால் வேண்டாம் என்றே சொல்ல மாட்டாள். தேவை இல்லை என்றால் கூட வாங்கி கொள்வாள், அது ஒரு நெருடலாக மனதில் நிற்க கூடாதே என்று! அப்படி போற்றி பாதுகாத்தவள், ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து, வாழ்வில் தனிமரமாகி, வெந்த கஞ்சியை குடித்து, விதி வந்தால் சாவோம்! என்று காத்திருந்தவளுக்கு, கடவுள் கருணையில் புது வசந்தம் வர, அதை எட்டி உதைக்க யாருக்கு தான் மனம் வரும்.
நிச்சயமாக பூர்ணாக்கு மனம் வரவில்லை. சுமங்கலி கோலத்திற்கு தானாகவே தன்னை ஒப்பு கொடுக்க, ஆச்சர்யமாக பார்த்ததென்னவோ வாணி தான். எப்படியும் தம்பி மனைவி ஒப்புக்கொள்ள மாட்டாள், எப்படி அவளை சரிகட்ட! என்ற யோசனையில் உழன்ற வாணிக்கு.. பூர்ணாவின் தெளிந்த முகம், மனநிறைவை கொடுக்க சந்தோசமாகவே மல்லிகை பூவை கையில் எடுத்தாள்.
எலுமிச்சை வண்ண பட்டில் தாமரை வண்ண பார்டர் தூக்கி கொடுக்க, சுருளான கட்டை முடி அடங்க மல்லிகை அடுக்கி, கல்யாண கண்ணாடி வளையல் கையை அலங்கரிக்க, கன்னங்கள் ரெண்டிலும் மஞ்சள் பூசி, வகுட்டில் குங்குமம் நிறைத்து, கால்களில் முத்து வைத்த புது மெட்டி அலங்கரிக்க, என்னவென்று சொல்ல முடியாத அவஸ்தையோடு மெல்ல பிரகாரம் நோக்கி நடை போட்டாள் பூர்ணா.
வாணியே இரு முறை திருஷ்டி கழித்து விட்டாள். உண்மையாக, அப்படி ஒரு தோற்றத்தில் தான் இருந்தாள் பூர்ணா. புது பெண் என்ற வரையறையில் வந்து விட்டாள்.
பட்டு வேட்டி சட்டையில் வேலு தயங்காமல் தான் நின்றிருந்தான். கோவில், விசேஷம் என்று பழக்கம் இருந்ததால் பட்டு வேட்டி அவனுக்கு அசாத்தியமாக இல்லை. ஆனால், பூர்ணாக்கு அப்படி இல்லை. ரொம்ப தயக்கம் தான். எட்டு எடுத்து வைக்க கால்கள் ஒத்துழைக்க வில்லை. ரொம்ப அசௌகரியம் தன்னை குறித்தே.
நீண்ட நாள் கழித்து தலையில் நின்ற கனமான மல்லிகை பூ வாசம், புது பட்டு சேலையில் வரும் வாசம், மஞ்சள் குங்குமம் கலந்த ஒரு வித மயக்கம் தரும் வாசம் என்று ஏதோ கல்யாணம் செய்யும் புது மணப்பெண்ணிடம் தோன்றுமே ஒரு புது வாசம்! அதே போல் தன் மீதும் வர, கொஞ்சம் மயக்கம் தான் பூர்ணாக்கு.
கடைசியாக, தன் கல்யாண பரிசத்தின் போதும், கல்யாணத்தின் போதும் இருந்த சொல்ல தெரியாத ஒரு குமிளி! தற்போதும் தோன்றியது. வேலுவை பார்க்கவே கண்கள் நேர்பட வில்லை. அப்படி ஒரு தயக்கம். ஏன்? யாரை பார்க்கவும் பெண்ணவள் கண்கள் துணியவில்லை தான்.
தன்னை தானே கடிந்து கொண்டாள் பூர்ணா. என்ன இதுவென்று? “முப்பத்தாறு வயசாச்சு! எல்லாத்தையும் ஆண்டு பார்த்தாச்சு, வயசுக்கு வந்த பிள்ளையை வச்சுக்கிட்டு! இது என்ன மப்பு புடிச்சு வேலை? உனக்கென்ன பதினாறு வயசு பருவசிட்டா! இப்பவே நடு மண்டைல நரமுடி வேற வந்துருச்சு! கொஞ்சம் அடங்கி கெடடி கூறு கெட்டவளே! பாதி வயசுல நானிக்கு திரியிறதா!” என்று தன்னை தானே கடிந்து அடக்கி வைத்து தன்னை எதுவும் பாதிக்க வில்லை என்று சவுடால் பேசி கோவில் மண்டபம் நோக்கி முன்னேற,
அங்கு கூடி நின்ற சொந்த பந்தத்தின் அதிசய பார்வையும், வேலுவின் ஆச்சரிய பார்வையும், பூர்ணாவை தன்னால் தலை குனிய செய்தது. பெரியாத்தாவுக்கு அப்படி ஒரு நிறைவு கண்களில். கையில் வைத்திருந்த கல்லு ஆட்டியலை வாணி கொண்டு பூர்ணா கழுத்தில் போட செய்தவர். கைகளால் திருஷ்டி கழித்து,
“ ம்மம் இப்பதான் நிறைவாக இருக்கு. எம்புட்டு தங்க நகை போட்டாலும் ஒத்த கல்லு வச்ச நகை போட்டா தான் தூக்கி அடிக்குது. அதுவும் கருத்த பிள்ளைக்கு வெள்ளை கல்லு அட்டியல் அம்சமா இருக்கு!” என்று பெரியாத்தா மருமகளை பகடி பேச,
இதுவரை இருந்த தயக்கம் மறைந்து மாமியாரை முறைத்து பார்த்து தான் அக்மார்க் மருமகள் என்று நிரூபித்தாள் பூர்ணா.
“ஏட்டி வாணி, இன்னும் சாவி கொத்தே உம் தம்பி பொண்டாட்டி கைல வரல! அதுக்குமின்ன எப்படி முறைக்குற பாரும். கருத்த பொண்ண கருப்புன்னு தான சொல்ல முடியும். எம் மருமவன்னு இல்லாததா எல்லாம் எட்டு கட்ட முடியுமா?” என்று மருமகளை மேலும் வம்பிலுத்தார் பெரியாத்தா.
இந்த முறை பூர்ணாவின் பார்வை வேலுவை நோக்கி திரும்ப பதறிய வேலு.
“ ஆத்தா! நீயி செத்த சும்மா இரும்! சம்முக்கு என்ன குறை? அவ கருப்பு ஒன்னும் கிடையாது மாநிறம் தான். அத்தோட கருப்பும் அழகு தான். உம் மவன் மட்டும் என்ன லெமன் கலரா! என்னைய பாரும் கரும்பு காட்டுல வெந்த மாதிரி இருக்கேன். எம் பக்கத்தில சம்மு நின்ன, அவ தங்க சிலையாட்டம் இருப்பா!
“வயசு தான் ஆச்சே தவிர, ஒரு கூறு இருக்கா. கலரா முக்கியம் குணம் தான் முக்கியம். சம்மு குணம் பசும் பால் மாதிரி. உமக்கு ஒரு விவரமும் தெரியல. கொஞ்சம் அமைதியா தான் இரேன். எக்கு தப்பா எதுவும் பேசி, எனக்கு சேதாரம் ஆக்கி பிடாத ஆத்தா” என்று வேலு ஒரு அர்த்ததில் கூறி,தம் மனைவியை நிமிர்ந்து பார்க்க. அவளோ, “அட! லூசு பயலே!” என்று பார்க்க. இன்னும் என்னவென்று வேலு கூட்டத்தை பார்க்க,
கூடி நின்ற சொந்தமோ …
“ ஏய்! அயித்த, சாவி கொத்து இல்லாமவே உம் மருமவ முந்தில முடிஞ்சுட்டா!.. யார? உம் மவன தான்! நீயி தான் பார்த்து சுதானமா இருக்கணும்.. உங்க மாமியார் பவுசு இனி செல்லாது!” என்று ஒரு பெண் நக்கல் பேச
“அதானே! எந்தங்கச்சி உருட்டுன்ன சோலிக்கு! கொழுந்தன் தப்பாம தாளம் போடுறாரே!” என மற்ற பெண் கேலி பேச, பேச்சின் தார்ப்பரியம் புரிந்து மனைவியை பார்த்து அசடு வழிந்தான் வேலு.
“அது என்னவோ நெசம் தான். ஒத்த பார்வைக்கே மாமன் தலைகீழா நிப்பாரு போல! நாமளுந்தான் பத்து வருசம் வாழ்ந்து என்ன பிரோசனம். வாயால சொல்லி, கையாள செய்ய வைக்க முடியலையே! எங்கக்கா சாமர்த்தியம் தான்” என அடுத்தடுத்து தொடர் கேலி வர, இடம் கலகலப்பாக மாறியது.
வேலுவும் வாய் வைத்து கொண்டு சும்மா நிற்காமல், “ அட! நீங்க வேற மதினி! ஒத்த வேப்பங்குச்சில தட்டு வச்சு தம்பட்டம் அடிக்காத குறையா, பொண்டாட்டிக்கு தக்க பாட்டு பாடினாலும், புழுதில விட்டுல புறட்டுறாங்க!” என்று வேலு மேலும் பேச,
கலைவாணன் அண்ணனோ, “ மச்சான் சாச்சுபுட்டாங்களே” என்று கலாய்க்க, இடம் கல்யாண களை கட்டியது.
பூர்ணாக்கு என்ன முயன்றும், வெட்கம் கெட்ட மனது! வெட்கத்தை வெளியே விட, சிவந்த கன்னம் மறைக்க தலை குனிந்து கொண்டாள்.
தாயின் அருகில் வந்த பவித்ரா, “ ஊருலே எங்க ஷாலினி மிஸ் தான் ரொம்ப அழகுன்னு நினைச்சேன்! இப்பதான் தெரியுது எங்கம்மா தான் எவ்வளவு அழகு. ம்மா.. எப்பவும் இப்படியே இருங்கம்மா”என்று சொல்லி தாயின் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க,
மகளை தன்னோடு சேர்த்து அணைத்த பூர்ணாக்கு உள்ளம் உவகை கொண்டது. இந்த சொந்தமும், சுற்றமும் யாரால் வந்தது. இந்த தெய்வம் வீடு வந்ததால் தானே!
தாய், மகள் பிணைப்பை மற்றவர்கள் பரிவோடு பார்த்தனர். நீண்ட வருடங்கள் சென்று ஒரு நல்ல நாள். மறந்து கூட யாரும் கடந்ததை பேச வில்லை. காலம் கடந்தது போலவே, தாங்களும் கடந்து செல்ல எண்ணினர் போலும். மாற்றாந்தாய் என்ற சொல்லவே மாற்றி வைத்தாள் பூர்ணா.
அவர்கள் பக்கம் நாத்துனார் தான் தாலி பிரிச்சு கோர்க்க வேண்டும் என்பது வழக்கம் ஆதலால், வாணியே முன் நின்று பொறுப்பாக எல்லாவற்றையும் செய்தாள். நெருக்க கட்டிய சம்பங்கி மாலையோடு மனையில் பூர்ணா அமர்ந்திருக்க. குண்டு, காசு, மாங்காய், வாழைக்காய் என்று வகை மாறாமல் கனமான தங்க தாலி சரடில் கோர்த்து,
“ குடும்பத்தொட தீர்க்க சுமங்கலியாக வாழணும்” என்று ஆசிர்வதித்து தம்பி மனைவி கழுத்தில் அனுவிக்க, “ கட்டையில் போகும் வரை காத்து கொடு தாயே” என்று மனம் உருகி, கண்களில் நீர் நிறைக்க வேண்டுதலோடு தலை குனிந்து வாங்கி கொண்டாள் பொன் தாலி கயிற்றை.
சொந்தமும், சுற்றமும் கலந்த மலர் தூவி, தீர்க்க சுமங்கலியாக வாழணும் என்று தம்பதிகளை ஆசிவதிக்க, மனநிறைவோடு மூத்தார் அனைவரின் காலிலும் விழுந்து வணங்கி எழுந்தனர் தங்க வேலு – சம்பூர்ணா தம்பதிகள்.
புதுமண தம்பதிகளுக்கு விமர்சையாக விருந்து நடக்க, முகத்தில் தயக்கமும், மனதில் தடுமாற்றமுமாக நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தான் வேலு. சர்வ அலங்காரங்களுடன் தன்னருகில் தம் மனைவியாக அமர்ந்திருந்தாவளை பார்த்து மனதில் புது சலனம் முளைத்தது. அவன் தடுக்க நினைத்தும் முடியாமல், கண்கள் பூர்ணா மேல் ரசனையாக பாய்ந்தது. அதுவே, வேலுக்கு ஒரு பயத்தை கொடுத்தது.
தான் ஏன்? எவ்வாறு? தன்னுடைய கடமையாக, பொறுப்பாக கருதி மணந்தவள் மேல், எந்த நொடியில் கள்ளம் புகுந்து ஆட்படுத்தியது. எப்படி மாறியது? தன்னுடைய பார்வையின் கனிவு போய் ரசனை கூடி, ஆராய தூண்டும் தம் உணர்வுகளை எண்ணி ஆண் மகனாக வெட்கம் கொண்டான். ஒரு பெண் பிள்ளைக்கு தகப்பனான தானே, மனைவியே ஆனாலும் உள்ளம் சேராமல் உடலை ரசிக்கும் தன் மனநிலை எண்ணி வெட்கி போனான்.
மனைவி தான். தொட்டு தாலி கட்டி காலத்துக்கும் துணை நிக்கும் உறவு தான். இவனை தாண்டிய உரிமை வேற யாருக்கு உள்ளது. இது வெளிப்பாடு தான், நியாயம் எவ்வளவும் பேசலாம். ஆனால், உண்மை, அதன் நிலை வேறல்லவா! தேவைக்கு நடந்த திருமணம். துணை இன்றி அநாதரவாக நிக்காமல், அநாதரவாக நின்ற இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கின்றனர், வித்தியாசம் அவ்வளவே. என்றேனும் ஒரு நாள் மாறும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், நிஜத்தில் தன்னை போல் உறவும், உரிமையும் பெண் மீது தோன்றுகிறதே!
திருமணம் செய்து வைத்தால் பைத்தியம் கூட தெளியும் என்று பெரியவர்கள் சொல்வது இது தான் போல. இவனுக்கு தெளிந்ததா! இல்லை பிடித்ததா! என்று அவனுக்கே தெரியவில்லை. ஆக மொத்தம், வேலுக்கு தன்னை தான் பிடிக்க வில்லை. தன்னுடைய தடுமாற்றம் சுத்தமாக பிடிக்க வில்லை. நொடி நேரமே என்றாலும்! பூர்ணா உடலின் மேல் பாய்ந்த ரசனையை, அது கொடுத்த துள்ளலை ஏற்க தான் முடியவில்லை. தன்னை குறித்தே அசிங்கமாக இருந்தது.
சின்னது தொட்டு பழக்கம் இருவருக்கும். தொட்டு பேசி, அடித்து உருண்டு என்று பல சேட்டை செய்து வளந்தவர்கள் தான். அவ்வளவு ஏன்? பூர்ணா பெரிய பெண் ஆனதை கூட கண்டு சொன்னவன் இவன் தான். எந்த சங்கோஜமும் இல்லாமல் மாதம், மாதம் வீட்டுக்கு தூரம் ஆகும் போது வரும் வலியை கூட தயங்காமல் பகிர்ந்து கொள்வாள். பாவாடை – சாட்டை, தாவணி, சேலை என்று அவளின் பரிமாணம் அனைத்தையும் பார்த்து உடன் நின்றவன் தான். ஒரு நாளும் ஆண் மகனாக பெண்ணவளை ரசித்ததில்லை. இள வயதிலும் தொட்டு, அடித்து பழக்கம் தான்.
பின் மண்டையில் தட்டி அடிப்பான், தோளில் கை போட்டு இழுப்பான்…, பூர்ணாவும் வயிற்றில் குத்துவது, கிள்ளி வைப்பது என்ற குரங்கு சேட்டை செய்தவள் தான். ஆனால், தடுமாற்றம் என்பது நொடி கூட இல்லை. தற்போது தம் மனைவியாக தோள் உரச நின்றவள் மேல், தன்னாலே தோன்றும் உரிமையை தடுக்க முடியவில்லை வேலுவால்.
மனைவி மீது வந்த கலவையான வாசனை அவனை கட்டி இழுத்தது. பத்து வருடங்களாக உணர்ந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. அவளை பார்க்கவே கூடாது என்று நினைத்தாலும் கண்கள் அவள் பக்கம் தான் மோதியது. சில தடவை மருகுவதும், சில தடவை ரசிப்பதுமாக நேரம் சென்றது.
மகளோடு ஏதேதோ கதை பேசி சிரித்து கொண்டிருந்த பூர்ணா, அடிக்கடி தன்னை பார்ப்பதும், பின்னர் வேறு புறம் திரும்பி ஏதோ புலம்புவது என்று இருந்த கணவனை கவனிக்க தொடங்கினாள். நாடியில் விரல் வைத்து யோசிப்பது, தலையை அழுத்தி பிடித்து கொண்டு வாய்க்குள் முனங்குவது , ஓர பார்வையில் மனைவியை பார்த்து விட்டு தலையை குனிவது என்று இருந்தவன் முதுகில் ஒரு அடி போட்டு,
“என்னாலே கண்ணிலே கபடி விளையாண்டுகிறுக்கவன்! மேல பாக்குற, கீழ பாக்குற, அப்புறம் என்னையும் பாத்துகிற! என்னாலே சங்கதி” என பூர்ணா வினவ,
சுரீர் என்று முதுகில் விழுந்த அடியில் அரண்டு போனவன், முதுகை கை கொண்டு தேய்த்தவாரு நால பக்கமும் பார்த்து கொண்டான், யாரும் தங்களை கவனிக்கிறார்களா என்று!
“கோட்டி கழுதை! ஏம்லே! என்னைய அடிச்ச… நான் ஏதோ சின்ன பயலகணக்கா நொட்டுன்னு கையை நீட்டுறவ! எனக்கு நேசமாத்தான் கோவம் வந்துரும். பாத்து இருந்துக்க!” என்று வேலு வலித்த முதுகை தடவியபடி கடுப்போடு கூற,
“அடிக்காம என்னாலே பண்ணுவாங்க! ஏதோ கிறுக்கு பய மாதிரி நீயா சிரிக்கிற, நீயா பேசிக்கிற, அப்பப்ப என்னைய வேற நோட்டம் விடுற! என்னாலே ஆச்சு உமக்கு?”
“ஒன்னும் ஆவல! புது சேலை, பூவு, பொட்டுன்னு இன்னைக்கு அம்சமா இருந்தய! அதான், கண்ணு உன்னைய விட்டு அகல மாட்டதுல. என்னமோ மனசு கெதியா கிடக்கு. நான் என்னமும் தப்பு பண்றனாலே!” என்று மனதில் தோன்றிய உணர்வை தப்பாமல் ஒப்பிவித்து, அதற்கான தீர்வையும் அவளிடமே கேட்டான் வேலு.
“என்னைய நோட்டம் விடுறேன்னு எங்கிட்யே சொல்றியாக்கும். அதுக்கு நான் பாராட்டணுமாக்கும்! பச்சை பிள்ளை மாதிரி வச்சிருக்கிற மூஞ்சிய மாத்துல! கூறு கெட்டு போச்சு உமக்கு. இல்லைன்னா எங்கிட்ட போய் இப்படி பேசுவியா! மரியாதையா எந்திருச்சு ஓடிபோலே!” என்று முறைத்து கொண்டு பேசியவளை பார்த்தவன்,
“நான் என்னாலே செய்யட்டும். உங்கிட்ட இருந்து நான் என்னத்த மறைக்க. முன்னலாம் நான் அப்படி இல்லவே! உமக்கே நல்லா தெரியும். இன்னைக்கு தான் தொலஞ்சு.. என்னன்னு அம்படல!” என்று புலம்பியவன். மேலும்,
“இன்னைக்கு நியி புதுசா தெரிஞ்ச சம்மு! ஒருநாளும் நின்னு பார்க்க தோணலவே, இப்ப கண்ணை அப்படி திருப்ப கூட முடியல! தாலியும், குங்குமமும் எனக்கு உரியதுன்னு நினைப்பு வந்துருச்சோ! என்னவோ! தங்கவேலு தடுமாறி தான் போனான். நான் என்னாலே செய்யட்டும் நீயே சொல்லு?”
மனைவியின் பார்வையில் மாற்றம் இல்லாது இருக்கவும், “சம்மு உம் யோசனை எமக்கு புரியுது. பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டியும் ஆட்டுறேன்னு எண்ணாதவே! உம் கிட்ட எதையும் மறைச்சு எமக்கு பழக்கம் இல்லை. நியி நிமிந்து பார்த்தாலே போதும் உள்ளதா சொல்லிடுவேன். உங்கிட்ட எனக்கு என்னாலே தயக்கம்! சரியோ! தப்போ! கதி நீதானே! எமக்கு என்ன தோணுதோ அதை மறைக்காம உடைச்சு உங்கிட்ட மட்டும் தான் பேசுவேன். இன்னைக்கும் பேசிட்டேன்”
வேலுவின் பேச்சை சலனமில்லாமல் கேட்ட சம்மு, மறுத்து ஒன்னும் சொல்லாமல் , அவன் முகத்தையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருக்க. வேலு தான் குழம்பி போனான். அவன் எதிர்பார்த்தது வேற, நடப்பது வேற. இவன் பேச்சில் கோபம் கொண்டு, பேசியே துவசம் பண்ணும் சம்மு இல்லாமல், சாந்தமாக அமர்ந்திருக்கும் சம்முவை பார்த்தவன் . அவள் தோள் தொட்டு,
“என்னாலே சம்மு! என்னாச்சு?” என்று வினவ,
ஒரு பெருமூச்சு விட்டவள், “கிளம்பலாம் வேலு. புள்ளைக்கு தூக்கத்துக்கு கண்ணு சொருகுது!” என்று சொல்லிவள் கிளம்ப ஆயத்தமாக, ஒன்றும் புரியாமல் முழித்த வேலுவும். ஒரு பெருமூச்சோடு மனைவியை பின் தொடர்ந்தான்.
காரிலும் அமைதியாக வந்தவள், வீடு வந்த பின்னும் வேலுவுடன் முகம் கொடுத்து பேச வில்லை. மகளை தூங்க வைத்து, அவளோடு ஒட்டியே தானும் படுத்து கண் மூடி கொண்டாள். ரொம்ப அசதி போல என்று எண்ணிய வேலுவும், மெளனமாக வெளியேறினான்.
பூர்ணாக்கு கண்கள் மட்டும் தான் மூடி கிடந்தது, மனமோ தீவிர சிந்தனையில் தான் உலன்றது.
வேலுவின் வார்த்தை தான் எத்தனை சத்தியமானவை. தன் எதார்த்த நடையில் வேலு பேசி சென்றாலும்! அதன், சாராம்சம் பூர்ணாவை பலமாக தாக்கியது. அவள், நினைவு எல்லாம் வேலு சொன்ன வார்த்தையில் தான்.
உண்மையான உறவில் முகாந்திரமும், முகமூடியும் தேவையில்லை என்று தெளிவாக சொன்னானே! அந்த உண்மையான உறவில் முதலில் நிற்பது கணவன் – மனைவி உறவு தானே. எத்தனை தம்பதிகள் தங்கள் வாழ்க்கை துணையிடம் முகமூடி இல்லாது தொடர்கின்றனர். தப்பு மட்டுமே முகமூடி என்ற வரையறைக்குள் வராதே! தம் உணர்வுகளை, சங்கடங்களை, நிறை – குறைகளை, அவ்வளவு ஏன்! நினைத்ததை எல்லாம் ஒளிவு மறைவு இன்றி சொல்லும் ஒரே இடம் தங்களது வாழ்க்கை துணையிடம் தானே.
சமூகத்தில், சொந்தத்தில், வெளியில் என்று தாம் பார்க்கும் நபர்களுக்கு தக்க, ஒரு முகமூடி அணிந்து தான் செல்ல வேண்டும். தான் இது தான் என்று உண்மையை உறக்க சொல்வது தங்கள் துணையிடம் தான். எத்தனை பேர் அந்த சுதந்திரத்தை தங்கள் துணைக்கு தருகிறார்கள். மனம் தானாக கணவன் கதிரவனினை எண்ணி பார்த்தது.
காலம் கடந்தாலும், மனம் மக்கி போனாலும், நடந்த நிகழ்வு ரணமாக நின்றது. சும்மாவா! ஆறு ஆண்டு கால வாழ்க்கை அல்லவா! கணவன் கதிரவனிடம் எளிதாக அணுக வெல்லாம் முடியாது. ஒரு தடவைக்கு பத்து தடவை யோசித்து, தான் என்ன சொல்ல வேண்டும், அதில் கணவன் வெளிப்பாடு, எப்போது பேச வேண்டும், எவ்வாறு பேச வேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று பல தடவை மனதில் ஒத்திகை பார்த்து தான் பேச்சே ஆரம்பிக்க முடியும். அதுவும், அவன் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தால் கிட்ட கூட செல்ல மாட்டாள். சாதாரண பேச்சு வார்த்தை கூட கதிரவனிடம் செல்லாது,
“ஏங்கா! இன்னைக்கு புளி குழம்பு வைக்கட்டுமா! மழைக்கு நல்லா இருக்கும்”
“ம்மம் உன் வாய்க்கு அப்படி கேட்குதா! வாரத்திலா ரெண்டு நாள் கறி எடுத்து வந்து போட்டாலும், உன் நாக்கு மடங்க மாட்டது” அப்படியே மடங்கி போவாள் பூர்ணா.
“மீதம் இருக்கும் சோறை வீணாக்க மனமில்லாமல் உண்டால்”
“என்னதான் வயிறு வச்சுருக்கையோ! எப்பா பார்த்தாலும் கொட்டிகிற” , மற்றொரு நாள்,
“மகாராணி வீட்டுல விதவிதமா திண்டையோ! வெந்த கஞ்சியை குடிச்சு வளந்தவ, பலச கீழ கொட்டுற! பவுசு கூடி போச்சு”
ஆதங்கமாக கூட ஒரு வார்த்தை சொல்ல முடியாது. ஒன்னு செய்தால், அவர்களுக்கு திரும்ப பத்து செய்யாமல் தூக்கம் வராது கதிரவனுக்கு. அப்படி தான் ஒரு நாள், பக்கத்து வீட்டு கவிதக்கா வித்தியாசமா செஞ்ச மீன் குழம்பை ருசி பார்க்க குடுக்க,
“அடுத்த வீட்டுல ஓசி கஞ்சி வாங்குற உம் பழக்கம் போகாத! உங்கப்பன் அப்படி? தராதரம் தெரியாத தற்குறி. நாளைக்கு அடுத்த தெருவுக்கு தட்டை தூக்கி போ”…
கூனி குறுகி போவாள் பூர்ணா. அவள் என்ன பிச்சையா எடுத்தாள். சொந்தமாக பழகும் மக்களிடம் உணவு பரிமாற்றம் நடப்பது தானே. அவனை மீறி ஒரு வார்த்தை பேச முடியாது. இரவு ஆழ்ந்த உறக்கத்தில் கூட எழுப்பி பேசுவான். அதுவும் எப்படி?
“ ஒன்னு மல்லாக்க தூங்ககுற இல்லனா குப்பறா படுக்குற. பொம்பள மாதிரி குறுகி படுக்க தெரியாதா! அது என்ன, ஆம்பள தனம்”…… தூக்கத்தில் என்ன ஆம்பள, பொம்பள. உறக்கம் பொது தானே. மனதோடு புலம்பிய படி கணவன் சொல்வதை செய்வாள். ஒருகளித்து படுத்து கழுத்து வலியும், முதுகு வலியும் வந்தது தான் மிச்சம்.
“ முசுமுசுன்னு மூச்சு விடுற! நான் தூங்க வேண்டாமா! முகத்துக்கு மட்டும் துண்டு போடு”
அசௌகரியமாக இருக்கும். ஆழ்ந்த உறக்கம் வராது. அவன் மட்டும் தூக்கம் என்ற பெயரில் ரயில் ஓட்டுவான். ஒன்னும் சொல்வதற்கில்லை. ஏதேனும் கேட்கவோ, பேசவோ, ஏன் பார்க்கவோ கூட கூடாது. கணவன் முகம் பார்த்து, கண் பார்த்து தான் நடக்க வேண்டும்.
ரொம்பவும் கொடுமையான விசயம் உணவு தான். கதிரவனின் நிலையை பொறுத்து தான் அவளுக்கு உணவே. அவன் கோபமாகவோ, வருத்தமாகவோ இருக்கும் போது பூர்ணாக்கு உணவு கிடைக்காது. அவன் சோகமாக இருக்கும் போது, எப்படியேனும் அவள் முகத்தில் சோகம், கண்ணீரை கொண்டு வந்துவிடுவாள். இல்லையென்றால், தற்போதைய பிரச்சனை பின்னே போய், இவள் முன்னே வந்து விடுவாள்.
வீடு வரும் கணவன் முகத்தை வைத்தே நிலைமையை ஊகித்து, அவசர அவசரமாக அடுப்படியில் கிடக்கும் மிச்ச மீதியை தன் வாய்க்குள் திணித்து கொள்வாள். களவாணி கஞ்சி தான், என்ன செய்ய? கொஞ்சமும் பாவம் பார்க்காத கணவனை வைத்து கொண்டு. மனைவி தான் உணவை தியாகம் செய்ய வேண்டுமே தவிர, கணவனுக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அதனால் தான், அடுப்படியில் அவசர உணவு. பசியை போக்க ஏதோ ஒன்னு, விதவிதமாக உண்ணுபவள் கிடையாது என்பதால், கதிரவனுக்கு எதுவும் தெரியாது.
மறுநாள் கவிதா அக்காகிட்ட பெருமையாக சொல்லி கொள்வாள்.
“ எக்கா, நேத்து தங்கச்சி வீட்டுல சண்டைன்னு மூஞ்சி சுண்டி போய் தான் வந்தான் அந்த எம்டன். மத்தியானம் வச்ச சோத்துல ஊறுகாய் வச்சு உள்ளே அமுக்கிட்டு, நானும் அந்தாளு கிட்ட சோகமாவே லுக்கு விட்டு படுத்து தூங்கிட்டேன்” என்று கணவனை பற்றி பொறணியும் பேசி, சொந்த வீட்டிலே திருட்டு தனாமாக உண்டதை பெருமை பேசி கொள்வாள்.
தான் வாழ்ந்த வாழ்க்கை தான் என்ன? பெருமூச்சு தான் வந்தது. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பயந்து நடுங்கி , சாப்பிடும் சாப்பாட்டில் கூட சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்தும், கடைசியில் தனக்கு கிடைத்த பெயர் தான் என்ன “ வேசி” என்ற பட்டம் தானே.
உறங்கும் மகளை தட்டி குடுத்தவள், உடுத்தி இருக்கும் பட்டு சேலையை மாற்ற சென்றாள். மாற்றுடை எடுக்க வந்த பூர்ணா, அங்கிருக்கும் ஆளுயர கண்ணாடியை யோசனையாக பார்த்தவள், அதன் அருகே சென்று, தலை முதல் கால் வரை தன்னை அலசி ஆராய்ந்தாள். நிறைய மாற்றம் தான், கண்ணாடியை பார்த்து கொண்டே முன்னே நடந்தவள் அப்படியே முன்னும், பின்னுமாக நடந்து தன்னையே கண்ணாடியில் பார்த்து கொண்டாள்.
மனதில் நிம்மதி இருந்தால் முகத்தில் பொலிவு கூடும் போல. தான் அழகி என்ற எண்ணம் இதுவரை அவளுக்கு தோன்றியதில்லை. ஆனால், இன்று உணர்ந்தாள் தானும் கொஞ்சம் அழகு தான் என்று. முகஸ்துதியை பெரிதாக நினைக்க விட்டாலும், உரிமையாக வேலு சொன்னதும் ஒரு சிலிர்ப்பு தோன்ற தான் செய்தது. அது எதனால் என்று அவளுக்கு மட்டும் தான் தெரியும்.
திருமணம் முடித்து முதல் இரண்டு வருடங்களில் குழந்தை இல்லாதது ஒரு வருத்தத்தையும், கவலையையும் மட்டும் தான் கொடுத்தது. அடுத்து ஒரு வருடம் சென்றும் பிள்ளை இல்லை என்றதும் தான் பேச்சு, பூர்ணா நோக்கி திரும்பியது.
அதுவும், இவளின் கடைசி நாத்துனார் கிருஷ்ண வேணிக்கு, இவளை கண்டாலே ஆகாது. தங்கள் வீட்டில் இவள் யார் உரிமையாக வலம் வர என்று ஒரு கோபம். அண்ணனின் செல்ல கடை குட்டி, அவள் என்ன சொன்னாலும் யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள். குழந்தை பேச்சு என்று பெரிதாக எடுக்காததால், வேணி அசால்டாக பூர்ணாவை காயப்படுத்துவாள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தாய் வீட்டிற்கு வரும் அக்கா, தங்கை மூவரும் வஞ்சம் இல்லாமல் இவளை போட்டு தாக்கி தான் செல்வார்கள்.
பெரிய அண்ணி சுமதி தான், தம் ஒரு தம்பிக்கு குழந்தை இல்லையே என்று பேச்சை ஆரம்பிக்க. பிடித்து கொண்டாள் வேணி, தன் அன்பு அண்ணனுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லா பெண்ணை கல்யாணம் செய்த வைத்து விட்டார்கள் என்று ஆரம்பித்தாள், குறை முழுவதும் பூர்ணா தான். ராசி இல்லாதவள், முன்னோர்கள் பாவம் செய்தவர்கள், குடுப்பணை இல்லை, நல்ல எண்ணம் இல்லை, அப்பன முழுங்கியவள், ஒத்த கட்டையாக செல்லும் விதி வாங்கியவள் என்று வாய்க்கு வந்த படி எல்லாம் பேசுவார்கள்.
ஒரு சிறு முக சுணக்கம் கூட முகத்தில் காட்ட மாட்டாள் பூர்ணா. காட்டவும் முடியாது. கொண்டவன் துணை நின்றாள் கூரை ஏறியும் பாயலாம். மற்றவர்களுடன் சேர்ந்து கட்டிய மனைவியை குறை பேசுபவனிடம் என்ன நியாயம் எதிர் பார்க்க. இங்கு, நாத்துனார்களே பரவாய்ல என்று எண்ணும் அளவிற்கு தான் கணவன்.
பூர்ணா எப்போதும் அவர்கள் பேச்சு தன்னை பாதித்ததாக கூட காட்டிக்க மாட்டாள். நீங்கள் என்னவும் பேசி கொள்ளுங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்பதாக தான் இருக்கும் அவள் நிலைப்பாடு. அது தான் வேணிக்கு ஒரு ஆவேசத்தை கொடுத்தது போல, இவளை அழ வைக்காமல் விட மாட்டேன் என்பது போல், அடுத்து அவள் பேசிய அனைத்தும் தப்பாமல் பூர்ணாவை தாக்கியது தான்.
“சுமதிக்கா , எனக்கு என்னவோ இவ பொண்ணே இல்லைன்னு தான் தோணுது. அவ உடம்ப பாருங்க கொஞ்சமும் அசருதா. ஆம்பள மாதிரி சும்மா திம்முன்னு தான் திரியுறா. எனக்கு சந்தேகம் தான்” வேணி ஆரம்பிக்க,
அடுத்த வாரிசு மாலதி, “ நெஞ்சை நிமித்தி, கையை வீசி வீசி தான் நடக்குறா! எம்புட்டு வேலையும் நொடியில் முடிக்குறா. இப்பலாம் இந்த மாதிரி நிறைய நடக்குது. எதுக்கும் அவ, மாசம் மாசம் குளிக்கிராளன்னு பாருங்க”…
“ஏண்டி! இந்த கருமத்தை நான் எப்படி டீ போய் பாக்குறது. பேசுறா பாரு பேச்சை” என்று கடுப்பாக சுமதி சொல்ல, மற்ற இருவரும் வெடித்து சிரித்தனர்.
“கண்டதையும் வீட்டுக்குள்ள இழுத்து விட்டது நீதானே. அப்ப நீதான் பார்க்கணும்” விட்டேனா என்று வேணி மறுபடி இழுக்க,
உள்ளே இருந்த பூர்ணாக்கு, கண்ணெல்லாம் கலங்கி போனது. பேச முடியாது வாயை அடைக்கலாம், காதை எப்படி அடைக்க. அச்சு பிசறாமல் அனைத்தும் விழுந்து தொலைத்தது. வெளியே செல்லவே மனம் வரவில்லை. கணவனோடு, நாத்துனார். கணவன்மார் மூவரும் இருக்க தான் இந்த பேச்சு. உடம்பே கூசி போனது. மற்ற ஆண்கள் முன்னால், தாளவே முடியவில்லை. கணவனும் நேரத்திற்கு காபி கேட்க, பொங்கும் அழுகையை அடக்கி கொண்டு எழுந்து சென்றாள்.
குனிந்த தலை நிமிராமல் காபி கொடுத்து செல்ல, பூர்ணா முகத்தை பார்த்த வேணிக்கு அவ்வளவு திருப்தி. கண்களில் நீர் நிறைய, அதை அடக்கி உதடு துடிக்க நகர்ந்தவவளை பார்த்து, அவ்வளவு கொண்டாட்டம்.
நல்ல வளத்தி தான் பூர்ணா, இரு பக்க தோள்களும் அகன்று தான் இருக்கும். அவள் தகப்பன் போல, அதில் பெருமை வள்ளிக்கு. அவங்க அப்பன மாதிரி என்று பெருமை பேசுவார். தற்போது இந்த பேச்சை கேட்டால் என்ன உணருவார். காட்டு வேலை செய்த உடம்பு வளையாமல் தான் நிக்கும். இவங்கள மாதிரி தொப்பையும், தொந்தியுமாவ இருக்கும். மண்ணு, செங்கல், கல்லு சுமக்கும் வேலையில் வேக எட்டு வைத்து தான் நடப்பாள். அது அவள் பழக்கம் அது ஒரு குறையா.
நிமிந்த நடை தான், முதுகை குறுகி நடக்க தெரியாது. அவள் வம்சாவளி இப்படி தானாம். அதற்கு இவள் என்ன செய்வாள். பெத்தவங்க கிட்ட இருந்து தானே வரும் உடல் வாகு, நிறம்,முகம் எல்லாம். ஒரு பெண் எப்படி தான் இருப்பாள். தான் அழகு இல்லையேன்னு தெரியும் தான். ஆனால், இவர்கள் பெண்ணே இல்லை என்று சொல்லும் போது தாங்க முடியவில்லை பூர்ணாவால்.
ஊரில் மாமன் முறையில் யாரேனும் ஒருவர் கருவாச்சி என்று கேலி செய்தால், அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கி விடுவாள். வக்கு இல்லாமல் வாக்க பட்டு வந்தவள் வாய் திறக்க முடியுமா! பொறந்த வீட்டு மகராசிகள் ஒரு சொல் சொல்ல முடியாது. சொல்லி விட்டு தப்பிக்கவும் முடியாது. அழுது ஆர்ப்பாட்டம் செய்து, இதனால் தான் பிள்ளை இல்லாமல் மலடியாக நிற்கிறாள் என்று மேலும் பேசுவார்கள். அது, இன்னும் வலி தான். கூசாமல் கைநீட்டுவான் கணவன்.
மெளனமாக வாய் மூடி கொண்டு கறி குழம்புக்கு மசால் அரைத்தாள். பொறந்த வீட்டு ராஜ்ஜியம், தன் வீட்டிற்கே வந்து, தன் கையால் உண்டு, தன்னையே பேசி செல்வார்கள். அமைதியாக கேட்டு கொள்ளணும் வாக்க பட்டு வந்த மகராசி.
கடந்த கால துயரில் சிக்கி கொண்டவளை கலைத்தான் வேலு.
“என்னாலே! மரம் மாறி நிக்குறவ. என்னத்த பெரிய யோசனை”
ஒன்னுமில்லை என்று தலையாட்டியவள், உடை மாற்றி வந்தாள். மகளின் தலையை வருடி கொடுத்த வேலு, “ உம் மவளுக்கு இன்னைக்கு நல்ல ஆட்டம் தான். சொந்தத்தை எல்லாம் பார்த்து நம்மள தேடவே இல்லை, பார்த்தியா” என்று வேலு கேட்க.
சொட்டு ஆளு இல்லாம, தனியா கெடந்துச்சுல. அதான், ஒரே கொண்டாட்டம். நம்ம பவிக்கு, நல்ல நீள மூக்கு. பெருசானதும் நாகரீகமேல்லாம் பார்க்காம ஒத்த வைர கல்லு மூக்குத்தி போடணும் வேலு” என்றாள், தன் துயர் மறந்து மகள் பற்றிய பேச்சில் உற்சாகமாக,
“சரி சம்மு. நீயி சொன்ன மறுப்பேது” என்று தலையாட்டினான் வேலு.
“முடி வளக்கணும்லே. பாரு கொஞ்ச நாள்லே எம்புட்டு நீளமா வளருது. முடி மின்னும் போல நம்ம பவிக்கு” என்று மகளை பார்த்தவாறு பூர்ணா சொல்ல,
“ம்ம் தாமரைக்கு முடி நல்ல நீளம். அப்ப ஆயீக்கு வளராம இருக்குமா. அவங்க அம்மா முடி தான் போல” என்று வாய் தவறி சொன்ன பின்பு. அர்த்தம் புரிந்து துடித்து போனான்.
பூர்ணா முகம் சிரித்த படி இருந்தாலும், கண்கள் கலங்கி போனது. என்ன இருந்தாலும் பவித்ராவின் தாய் தானாக முடியாதே. பாராட்டி சிராட்டி வளத்தாலும், பத்து மாதம் சுமந்து பெத்தவளுக்க தானே முன்னுரிமை. பாழ் வயித்துக்கு ஒன்ன சுமக்க கடவுள் வரம் கொடுக்களையே.
“ ஏட்டி சம்மு! மனசார சொல்லாகவே. வாய் தவறி ஏதோ வந்துருச்சு. வேசன படாத, பவித்ரா அம்மா நீதாலே” என்று வேலு சமாதானம் சொல்ல.
“அம்மா நான் தான் வேலு. அதுக்கு தான இந்த கல்யாணம்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல்,
“உடம்புல எண்ணெயை தடவி மண்ணுல உருண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டுமாம். எனக்கும் அப்படி தான் எதுவும் ஒட்டாது போல” என்று வேலு முகம் பார்க்காமல் சொன்னவள். பவித்ரா தலையில் ஒரு முத்தம் வைத்து, எழுந்து சென்று விட்டாள்.
கடந்த கால வலியை கடக்காமல் நிக்கும் போது, வேலுவின் பேச்சு பெரும் வலியை கொடுத்தது. நமக்கு எந்த உறவும் கொடுப்பணை இல்ல போல, ஒத்த கட்டையா போறதுக்கு விதி இருக்குதோ!
error: Content is protected !!