Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 6

புது மஞ்சள் புது தாலி

அத்தியாயம் 6

   வேலுவும், தாமரையும் நகரும் வரை காத்திருந்த வள்ளி.. அவர்கள் வெளியே சென்றதும் ஆக்ரோஷமாக கொடி முன் போய் நின்றார்.

   உக்கிர முகத்தோடு வந்து நிற்கும் வள்ளியை பார்த்து கொடி அரசி அதிர்ந்தாலும், பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை…



Advertisement

 “என் பிள்ளைக்கும் உனக்கு என்னால பஞ்சாயத்து? அவகூட தோது போடுற வயசா உனக்கு?.. அவ என்ன உனக்கு எதிரியா?.. உன் கண் பார்க்க வளர்ந்தவ தானே.. வாழ வேண்டிய பிள்ளை அவ மேல இவ்வளவு வண்ணத்த கொட்டுறியே..” ஆதங்கமாக வழி கேட்க..

 அதற்கெல்லாம் அசரவில்லை அரசி.

 “நான் என்ன இல்லாததவா சொன்னேன். உம் மக அப்படித்தானே. நீ பெத்தவ அதனால உனக்கு தெரியாம இருக்கலாம்.. தள்ளி நின்னு பார்க்கிற எங்களுக்கு தானே தெரியும். அவ ஒரு ராசி கெட்டவ…”

Advertisement

 “வாய மூடு அரசி…”

Advertisement

 “நான் என்னத்துக்கு வாய மூடனும் நான் சொன்னதையே உன்னால தாங்க முடியலையே.. ஊரே அப்படித்தான் சொல்லுது… பொம்பளைன்னு ஒரு லட்சம் இருக்கா உன் மக கிட்ட… அரசனில்லாம ஆத்தாளும் மகளும் மூழியா உக்காந்து இருக்கீங்க.. பொறக்குற பொறப்புக்கும் ஒரு ராசி வேணும். அது உன் மக கிட்ட இல்ல…”

 “நீ சொன்னா ஆச்சா என் மகளுக்கு என்ன குறை. எங்க அம்மையும் அப்பனும் வயசாகி செத்தாங்க.. என் கழுத்துல தாலி கட்டினவன் குடிகாரன். குடிச்சு செத்தவன். அதுக்கு என் பிள்ளை என்னாலே பண்ணும். நீ ஒரு புள்ள வச்சிருக்க வாழ வேண்டிய பிள்ளை மேல வாக்கு போடாத..” கோபமாகவே சொல்லிவிட்டார் வள்ளி.

 “என் பிள்ளைக்கு என்ன குறை. உன்ன மாதிரி வக்கது போயா பிள்ளை பெத்து நான் வச்சிருக்கேன்?.. முறையை வளர்த்து, முறையா கல்யாணம் பண்ணி, இன்னைக்கு வாரிசும் பார்க்க போறேன். உன்ன மாதிரி ஒன்னுக்கும் ஆகாம வீட்டோடவா வச்சிருக்கேன்..”

Advertisement

 “இதுவரைக்கும் உன் மகளுக்கு வரன்னு ஒன்னு வந்துச்சா?.. என் மகன் வயசு தானே அவன் ஒரு பிள்ளைக்கு அப்பனாக போறான். உம் மக இன்னும் வீட்டோட தான் உட்கார்ந்து இருக்கா.. அதைத்தான் சொன்னேன் ராசி இல்லாதவன்னு.. பொம்பளைக்கு ஒரு அடக்க சடக்க வேணாம். ஆம்பள மாதிரி மேம்போக்கா திரியிறா.. அப்புறம் ஒருத்தன் சிந்த மாட்டான்…” மேலும் வார்த்தைகளை விட்டார் கொடியரசி.

     தாங்கவில்லை வள்ளிக்கு வார்த்தைகளில் வரைமுறை பார்க்கும் வள்ளியால், அரசியின் வார்த்தைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் பாணியிலே திருப்பிக் கொடுக்க முயன்றார்.

  “வாய் துடுக்கா பேசமே தவிர, என் பிள்ளை ஒரு பாவமும் அறியாதது. உன் மக வயசு. அது மேல சாபம் விடுறியே நீ நல்லா இருப்பியா?… காசு, பணம் இருந்தா ஆச்சா. காலம் எப்படி மாறும்ன்னு யாருக்கும் தெரியாது அரசி…”

 “உன்ன மாதிரி வம்போடுகள் தான் பக்கத்து நிக்கும். எனக்கென்ன?.. மலை மாதிரி என் புருசனும் மகனும் என் கூட நிக்கிறாங்க.. நிக்க கூடல நிழல் இல்லாதவ நீதான்.. அத நானும் பாக்க தான் போறேன்…”

 “பாரு நல்லா பாரு. உன் கண்ணு முன்னுக்கு என் பிள்ளையை நல்லா வாழ வைக்கிறானா இல்லையான்னு பாரு?…” சபதமாக வள்ளி சொல்ல,

   “ஊரை கேளு வள்ளி. உன் வம்சமே அப்படித்தான்.. உன் நாத்தனார் என்ன வாழ்ந்தா? நீ என்ன வாழ்ந்த? அதுதான் உன் மகளுக்கும்… அது உங்க குடும்ப ராசி..” என்று அடங்காமல் வார்த்தை வெளி வந்தது.

 “என் பிள்ளை அம்புட்டு பேச்சு பேசுறியே.. அப்ப நீ நல்லா வாழ்ந்திடுவியா? உன் பிள்ளை நல்லா வாழ்ந்துருமா?…”

“நான் கும்பிடுற ஐயன் என்னைக்கும் கைவிடாது. என் வம்சம் தழைச்சு தான் நிக்கும்..”

“அப்ப நீ தான் சாமி கும்புடுற.. நாங்க என்ன கல்லவா கும்பிடுறோம். நானும் சாமி தாம்ல கும்பிடுறேன். அந்த சாமி கேட்கும் பாரு.. நீ பேசுன பேச்சும், விட்ட வார்த்தையும் உன் பிள்ளை தலை மேல தான் நிக்கும். இன்னைக்கு நாளும் நல்லா இருக்குன்னு பேசுற உன் எகத்தாள பேச்சு, உன் பணமும் பவுசும் ஒரு நாள் ஒன்னும் இல்லாம மண்ணோடு மண்ணாக போகும் பாரு அரசி. அன்னைக்கு தான் நான் கும்பிடுவது சாமி…” நெஞ்சைத் தட்டி சொல்லிய வள்ளி திரும்பி பார்க்காமல் வீடு வந்து விட்டார்.

 அன்று ஆத்திரத்தில் தாய்மார்கள் இருவரும் விட்ட வார்த்தையை யோசிக்கவே இல்லை. எப்படியாவது அரசி கண் முன்னே தன் மகளை வாழ வைக்க வேண்டும் என்று, வந்தவர்களுக்கு அவசர அவசரமாக பூர்ணாவை திருமணம் செய்து கொடுத்து விட்டார்.

  காலம் கடந்து அவரவர் பாதையில் செல்லும் வரை யாரும் ஒன்றும் அறியவில்லை. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருப்பதாக நினைக்க, முதலில் அடிபட்டது வேலு தான். நிறைவான வாழ்க்கை பாதியிலே முடிந்து போக.. ஒற்றைப் பெண் பிள்ளையோடு தனியாக நின்றான்.

      வேலு தனியாக நின்ற பின் தான் வள்ளிக்கு குற்ற உணர்ச்சி அதிகமாகியது. தான் அன்று விட்ட வார்த்தைகள் தான் வேலுவின் வாழ்க்கையை பாழாக்கியதோ என்று ஒரு எண்ணம் உள்ளே குத்த ஆரம்பித்தது. தான் பார்த்து வளர்ந்த பையன் தானே தங்கவேலு.. அவனுக்கு அப்படி ஒரு வார்த்தை விட்டு இருக்க வேண்டாம் என்று பலமுறை நொந்து கொள்ள.. அடுத்த சில ஆண்டுகளில் பூர்ணாவும், தாய் வீட்டோடு வந்துவிட்டாள்.

   அரசி உணர்ந்தாரோ இல்லையோ, வள்ளி முழுதாக உணர்ந்தார். சாமியை வைத்து பேசும்பொழுது வார்த்தைகளில் கவனம் வைத்திருக்க வேண்டும் என்று.. நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய இருவரும் வாழ்க்கையை இழந்து நிற்க. அதுவே வள்ளியை ஒரு மூளையில் முடக்கி போட்டது. அரசிக்கு என்னவோ மகனை நினைத்து போய் சேர்ந்து விட்டார்.

  நடந்ததை ஒருவித குன்றலோடு வள்ளி சொல்லி முடிக்க.. வேலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. யாரை குற்றம் சொல்ல முடியும்? முதலில் ஆரம்பத்தை தன் தாய் அல்லவா?.. தான் கொஞ்சம் சரியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தான் இப்போதும் வேலுக்கு…

   “எங்க விதி அப்படி இருக்கு.. நீங்க என்னத்த பண்ணுவீங்க விடுங்க…” என்று வள்ளியைத்தான் சமாதானம் செய்தான் வேலு.

  ஒரு மாதிரி சோர்வாக உணர்ந்தான் வேலு.. என்னவோ எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தது எப்படி பூர்ணா வாழ்க்கையை சரி செய்ய, வழி இல்லாமல் நின்றான்.

  பவித்ராவின் உடைகளை எப்போதும் வேலு கையிலே அலசி போட்டு விடுவான். அன்றும் அவ்வாறு பிள்ளையின் உடையை எடுத்து துவைக்க.. பவித்ராவின் உள்ளாடையில் என்னவோ வெள்ளையாக திட்டு திட்டாக இருந்தது.

  பார்த்ததும் பதறிப் போனான் வேலு. விவரம் தெரியாதவன் அல்ல.. ஆனால், இது தானா என்று பயமாக இருந்தது. இதுவரை அவனுக்கு பவித்ரா ஒரு குழந்தைதான். பதினொன்று வயது வந்து விட்டாலும் எல்லாவற்றிற்கும் தந்தை வேணும். வேலும் பெண்பிள்ளை என்று தள்ளி எல்லாம் வளர்க்கவில்லை. தன்னோடு ஒட்டியே தான் வளர்த்தான்.

     அதனால், பெண்பிள்ளை வளர்ந்து விட்டாள் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது தானா என்று அனுமானிக்கவும் தெரியாமல் அவசரமாக பூர்ணாவிடம் ஓடினான். அவனுக்கு எதுவென்றாலும் அவள் தானே…

      “என்னாலே வேலு சொல்ற? பிள்ளைக்கு பதினொரு வயசு தான் ஆச்சு. உனக்கு சரியா விவரம் தெரியாது, சாயங்காலம் ஸ்கூல் விட்டு, இங்க கூட்டிவா நான் பாத்துக்குறேன்…” என்று வேலுவை அனுப்பி வைத்த பூர்ணாவுக்கும் யோசனை தான்.

 மாலையே பள்ளி விட்டு வரும்போது வேலு, பவித்ராவை நேராக பூர்ணா வீட்டுக்கு தான் கூட்டிக்கொண்டு வந்தான். பவித்ராவுக்கு என்று பால் பணியாரம் தயாராக இருக்க..

  “ஐயோ.. பால் பணியாரம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பெரியம்மா..” என்று அதன் கிட்டே நெருங்க..

 “பவி குட்டி என்ன பழக்கம் இது? குளிக்காம வந்து சாப்பிடுறது வா.. பெரியம்மா குளிக்க ஊத்துறேன்..” என்று வேலுக்கு கண்ணை காட்டி விட்டு மகளை அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றாள்.

 பூர்ணாவும் மகளின் உடைகளை ஆராய, அவளுக்கும் தென்பட்டது. கொஞ்சமா அதிர்ச்சி தான். அப்படி ஒன்றும் பெரிய உடல்வாகெல்லாம் பவித்ராவுக்கு கிடையாது. பாய் கட், ஒல்லி உடம்பு, குட்டி முகம் என்று குழந்தைத் தன்மை மாறாமல் இருந்தாள்.

  பிள்ளைக்கு உணவை கொடுத்து வெளியே வந்த பூர்ணா,

 “பவித்ராவுக்கு என்னால சாப்பாடு கொடுத்த?…”

 “என்னத்த ஒரு வாரமா அது இதுன்னு சொல்லி வெளியில தான் வாங்கி கொடுக்கிறேன். நேரமே இல்லல.. பரோட்டா, சிக்கன் ரைஸ், பிரியாணி எல்லாம் அது விருப்பம் தான்..”

  “அதுதான் போல வேலு.. சின்ன பிள்ளைக்கு எதுக்குடா வெளியில வாங்கி கொடுக்குற பாரு உடம்பு முழுக்க சூடு அதுதான் வெள்ளை தட்டு படுது போல.. ஒரு நிமிஷம் நானே ரொம்ப பயந்து போன வேலு..”

  “வேற ஒன்னும் இல்லையே சம்மு. ஆயி ரொம்ப சின்ன பிள்ளை..”

 அவனை வாஞ்சையாக பார்த்தவள் “என்னைக்கா இருந்தாலும் நாம பாக்க தான் வேணும் வேலு. பொம்பள புள்ள பெத்தா இதெல்லாம் கடந்து தான் வரணும் நீயோன்னும் வசன படாத… உனக்கு ஒன்னும் நல்லது சொல்லி புரிய வைக்க தெரியாது இனி லீவுக்கு இங்க கொண்டு வந்து விடு நான் பார்த்துக்கிறேன் பிள்ளைய..” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தால் பூர்ணா.

   அவன் சம்முவே சொன்ன பின் வேறு என்ன வேண்டும். வேலுவும் கொஞ்சம் திடமாகி கொண்டான். இனி அவள் பார்த்துக் கொள்வாள் என்று… மேலும் ஒரு வாரம் கடந்த நிலையில் தோட்ட வேலைக்கு வேலு போயிருக்க, பவித்ரா உறங்கிக் கொண்டிருந்தாள்.

    அவளுக்கு ஏதோ ஒரு அசௌகர்யம். தன் கட்டுப்பாட்டை மீறி உடலில் ஏதோ ஒரு உணர்வு. என்னவோ படுக்கையிலே பாத்ரூம் போவது போல் உணர பட்டென்று எழுந்து கொண்டாள். உடம்பில் லேசாக வலி இருக்க கட்டிலை விட்டு கீழே இறங்கிப் பார்த்தாள்.

   பவித்ராவின் உடையோடு போர்வை, படுக்கையெல்லாம் ரத்த கரையோடு இருக்க.. சிறு பெண் பயந்து அரண்டு போனால் என்னவோ என்று… இது ஏன் இப்படி என்றெல்லாம் தெரியவில்லை. தன்னை மீறி தன்னைத் தாண்டி வெளிவந்து கொண்டிருந்தது.

  என்ன இது ஒரு மாதிரி அசிங்கமாக, அவமானமாக இருந்தது. உடல் வேறு ஒரு மாதிரி வாட்ட தொடங்கியது. வயிற்றின் அடிப்பகுதியில் சுருக்கென்று குத்தும் வழி வேறு… எதுவும் புரியாமல் பயத்தில் பவித்ரா நடுங்கிக் கொண்டிருக்க,

   “ஆயி…” என்று உள்ளே வந்தான் வேலு. மகளின் நிலை கண்டு ஒரு நொடி இரத்தம் உறைய நின்று விட்டான்.

  கை, கால் வெடுவெடுவென்று நடுங்க தன் பிள்ளை நிற்க. வேலுக்கும் சூழ்நிலையை கையாள தெரிய வில்லை. ஒருவேளை பெற்றவள் இருந்தால் இது நிறைவான செய்தி என்று சொல்லி இருப்பாரோ என்னவோ.. அவனும் இதை ஒரு துக்கமாக பார்க்க.. பவித்ரா மேலும் ஒடுங்கினாள்.

       வேலு மெல்ல மகள் அருகே வர, பவித்ரா பட்டென்று கட்டிலுக்கு பின் போய் நின்று கொண்டாள். அதிர்ந்து போய் பார்த்தால் வேலு தன் பிள்ளை ஏன் தன்னை விட்டு தள்ளி நிக்குது?.. மகள் உணர்வுகள் அவனுக்கு புரியவில்லையோ என்னவோ?…

  பவித்ராவுக்கு ஒரு மாதிரி தன்னைக் குறித்தே அசிங்கமாக இருந்தது. தந்தை முன் இப்படி நிற்கிறோமே என்று… இதெல்லாம் ஒன்றுமில்லை என்று எண்ணி தந்தையருகி போக முடியவில்லை. ஒரு மாதிரி பயத்திலும், பதட்டத்திலும் இருந்தாள்.

  வேலு மகளை நெருங்கி கை தொட வீலென்று ஒரு கத்து.. அரண்டு போனான் வேலு. கதவுக்குப் பின்பக்கம் போய் நின்று கொண்டாள் பவித்ரா.

   “ஆயி! இங்க வாங்க.. அப்பா கிட்ட வாங்க ஒன்னும் இல்ல.. குளிச்சா சரியா போகும் பாப்பா, வாங்க அப்பா குளிக்க வைக்கிறேன் வாங்க..” என்று வேலு முன்னே வர,

  பவித்ரா இன்னும் அரண்டு பின்னே தான் சென்றாள். சிறு பெண் என்பதால் மனம் திகைத்துப் போய் யோசிக்க முடியாமல் நின்றிருந்தாள். எல்லாவற்றிற்கும் தந்தையை தேடும் அவளால் இதற்குப் போய் தந்தை அருகே நிற்கவே முடியவில்லை. தந்தையிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளவே நினைத்தாள்.

   பவித்ரா கண்களில் இருந்து கண்ணீர் வேறு வர, வேலுக்கு கண் கொண்டு பார்க்க முடியவில்லை. மேலும் நெருங்கினால் ஒண்டி கொள்கிறாள், தன் கையைத் தட்டி விடுகிறாள். மகளை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை. பட்டென்று ஒரு நொடி யோசித்தவன், கதவை சாத்திவிட்டு வேக வேகமாக பூர்ணா வீடு நோக்கி வண்டியில் பறந்தான்.

  அப்போதுதான் வீட்டை ஒதுங்க வைத்து வெளியே வந்த பூர்ணா.. வேலு வண்டி வந்து நிற்கவும்,

“என்னாலே வேலு காலையிலே வந்து நிக்கிற..” என்றவள் அவன் முகம் பார்த்து என்னவோ என்று பயந்து பார்க்க,

  “ஏலே சம்மு.. என் புள்ள என்ன பார்த்து பயந்து ஒடுங்குதுலே. பெத்த அப்பன் கிட்ட அண்ட விட மாட்டாது. என் பிள்ளை அழுகுது, பயந்து ஓடுது, எனக்கு நெஞ்சே வலிக்குதுலே சம்மு…”

 பதறிப்போன பூர்ணா “என்னால வேலு. என்னன்னு தெளிவா சொல்லு, மனசு பதறு..” என்றவள் வேலு விபரம் சொல்லவும், வேகமாக சேலையை ஒதுங்க வைத்து, அவனோடு வண்டியில் பறந்து விட்டாள்.

  வெளியில் வந்து பார்த்த வள்ளி, மகள் வேலுவோடு வண்டியில் செல்லவும் யோசனையாகி போனது. என்னதான் பழக்கம் என்றாலும் அப்படி எல்லாம் வண்டியில் ஏறும் ஆளில்லை பூர்ணா. எப்போதும் ஒரு அடி தள்ளியே நிற்பாள். அவளே வேலுவுடன் வண்டியில் செல்வது என்றால், எதுவும் பெரியதாக விஷயமா? யோசனையாக அமர்ந்தார் வள்ளி.

  வண்டியை நிறுத்திவிட்டு வேலு வருமுன் வேகமாக உள்ளே சென்ற பூர்ணா, பவித்ரா கோலம் கண்டு பதறிப் போனாள். தாயில்லாப் பிள்ளையின் நிலை இதுதான் போல…

  “பவித்ரா” என்று பூர்ணா அருகே வர, அதுவரை பயந்து நடுங்கி கொண்டிருந்தவள். தெரிந்த முகம் துணையாக வந்ததும் “பெரியம்மா” என்று கட்டிக் கொண்டாள்.

  வலியோடு தான் வேலு பார்த்து நின்றான் மகளை..

“ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல எதுக்கு அழுகுற.. எதுக்கு பயப்படுற.. பெரியம்மா இருக்கேன் தானே.. இதெல்லாம் எதுவுமே இல்ல பவி.. இது ஒரு சாதாரண விஷயம் அவ்வளவு தான். அதன் பெரியம்மா வந்துட்டேன் இல்ல.. இனி உன்கூட தான். வா வா நாம போய் குளிப்போம்..” என்று பவித்ராவை அழைத்துச் சென்று தலை குளிர குளிக்க வைத்தாள்.

      அசதியும், அழுப்பும் போக குளிக்க வைத்து இலகுவான உடை அணிவித்து, படுக்கை விரிப்பை மாற்றி, புது படுக்கையில் பவித்ராவை படுக்க வைத்தவள்.. வேகமாக அடுப்படி வந்து பார்த்தாள். அங்கு பால் மட்டும் தான் இருந்தது.

    பாலை நன்றாக காய்ச்சி, பனங்கற்கண்டு போட்டு சூடு குறைய, ஒரு பெரிய டம்ளர் நிறைய பவித்ரா கையில் கொடுத்து குடிக்க வைத்தாள். பிள்ளை கொஞ்சம் தெம்பாக உணரவும், தலையை துவட்டி விட்டு உறங்க வைத்தாள்.

      அரிசிக்கு உலை வைத்துவிட்டு, “வேலு பிள்ளைக்கு ரொம்ப அசதியா இருக்கும். உடம்பெல்லாம் வலிக்கும் நல்லதா பாக்கணும். நான் சொல்ற எல்லாம் உடனே வாங்கி வா.. பின்னாடி கோழி கவுத்து கெடக்கு தானே..” என்றவள் நகர, பூர்ணா வாங்க சொன்னதை வாங்க சென்றான் வேலு.

   மகள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு வராமல் இருக்க.. வேற என்னவோ என்று மகளைத் தேடி வந்து விட்டார் வள்ளி. வீட்டிற்கு உள் செல்லாமல் வெளியில் நின்றே குரல் கொடுக்க, அடிப்படையில் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தால் பூர்ணா.

   மகளை அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து பார்த்தார் வள்ளி. என்று அரசி வார்த்தை விட்டாரோ.. அன்று முதல் தாய், மகள் இருவரும் அந்த வீட்டு படியை கூட தொட்டதில்லை. அத்தகைய வீட்டின் அடுப்படியில் இருந்து மகள் வெளியே வருவது என்றால்.. திகைத்துப் போய் வழி பார்க்க விஷயம் சொன்னால் பூர்ணா.

     மனம் குளிர்ந்து போனது வள்ளிக்கு… பவித்ரா வயது எல்லாம் கணக்கில் இல்லை அவரைப் பொறுத்தவரை இது நல்ல செய்தி.. வீட்டின் நேர் கூடத்தில் தான் அரசின் புகைப்படம் மாட்டி இருக்க.. ஒரு நொடி வள்ளிக்கு தயக்கம் தான்.

   ஆனாலும், அம்மாச்சி என்று தன்னையே ஆசையாக சுத்தி வரும் சின்ன சிட்டு, தாய் இல்லா பிள்ளை. அதனிடம் வைராக்கியம் காட்டி என்னத்தை அள்ளி கட்ட போகிறோம். அவ்வளவு பேசி ஆட்டமாக ஆடிய அரசி போன இடம் தெரியவில்லை. காடு செல்லும் வயதில் தனக்கு வைராக்கியம் எதுக்கு?..

  இளம் குருத்து அதைத்தான் பார்க்க வேண்டும். பழக்கவழக்கத்தில் தாங்களை உடன் நிற்காமல் போனால், அப்புறம் என்ன பேத்தி என்று நான் சொல்வது…

  “எம்மா.. பிள்ளைக்கு இப்படி இருக்க பிள்ளையை விட்டுட்டு என்னால வர முடியாது . வேலுக்கு என்ன தெரியும்? நான் தான் பாக்கணும். நீ என்ன சொல்ற?…” என்று தாயை பார்த்து கேட்க.

   தயங்காமல் வீட்டுக்குள் வந்த வள்ளி, “எங்க சமூகம் பேத்திய?…” என்று பவித்ராவை போய் பார்த்தார்.

  “வீட்ல என்ன வேலையோ அதை நீ பாரு சம்மு. பேத்திக்கு துணைக்கு நான் நிக்கிறேன்…” என்று வள்ளி சொன்னதும் நிறைவாக உணர்ந்தாள் பூர்ணா. வள்ளி குணமே அது தான்.

   பூர்ணா வேலையை பார்க்க அவள் சொன்ன பொருட்களோடு வந்து விட்டான் வேலு.

  சம்மு என்று அழைத்துக் கொண்டு உள்ளே வர.. அங்கு இருந்த வள்ளியை பார்த்து ஒரு நொடி தயங்கினாலும் “வாங்க அத்தை” என்று வரவேற்றான்.

  வேலுவும் எதிர்பார்க்கவில்லை வள்ளி வீடு வருவார் என்று… நேரம் சென்றதும் பவித்ரா கொஞ்சம் தைரியமாக இருந்தாள். பூர்ணா ஒதுக்கியெல்லாம் வைக்கவில்லை கூடத்தில் தான் அமர வைத்திருந்தாள்.

  துணைக்கு வள்ளியும் இருக்க, பயமில்லை பவித்ராவுக்கு.. தெரிந்த முகங்கள், தன் உறவு என்று கொஞ்சம் தெளிவாக இருந்தாள். சமையல் வேலையை முடித்த பூரண பவித்ராவுக்கு உணவை கொடுத்துவிட்டு வேலுவை பார்க்க,

    வேலு கொஞ்சம் தயங்கி வள்ளியை பார்த்தான். பொதுவாக இந்த மாதிரி வீட்டில் யாரும் கை நினைக்க மாட்டார்கள். வேலுவும் அப்படித்தான் விசேஷம் என்று போனாலும் கையெல்லாம் நனைக்க மாட்டான்.

“அத்தை உங்களுக்கு வெளி சாப்பாடு வாங்கி வரவா…”

“எதுக்கு வேலு?…”

“உங்களுக்கு அத்தை. நீங்க எப்படி இங்க கை நனைப்பீங்க…”

 “அதனால என்ன வேலு பவித்ரா யாரு எம்பேத்தி. என் பேத்தி எனக்கு தீட்டு என்று நான் தள்ளி வைக்க முடியுமா?.. நானும் இங்க தான் வேலு.. சம்மு இழுத்து கட்டி வேலை செஞ்சாலும், சிலது தெரியாது கூட இருந்து பெரியவங்க சொல்லணும். பெரியவங்க துணை இல்லாம நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்க நான் இங்கதான் இருக்கேன்…” என்றவர்,

 “ வேலு, பெரியாத்தாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிரு… வீட்டுக்கு மூத்தவங்க அவங்களுக்கு தான் முதல் தெரியணும்…” என்று சகஜமாக வழி சொல்ல நெகிழ்ந்து போனான் வேலு.

  தன் தாய், அவர்களை எப்படி பேசினார் என்று அவன் நன்கு அறிவான். அப்படி இருந்தும் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் உடன் நிற்கும் உறவு.. உண்மையில் வேலுக்கு நன்றி உணர்வு பெறுகியது.

     வேலுக்கு மகளைப் பற்றிய கவலை கொஞ்சம் அகன்றது. பூர்ணா முழுதாக பவித்ராவை தன் கவனத்தில் கொண்டு வந்தாள். கை கால் வலிக்கு ஒத்தடம் கொடுப்பது, இரவில் எப்போது முழித்தாலும் உடன் இருந்து பார்த்துக் கொள்வது, சத்தான ஆகாரம் கொடுப்பது, பிள்ளை உடையை முகம் சுளிக்காமல் துவைப்பது என்று அப்படி தாங்கினால் பூர்ணா. உண்மையில் பவித்ராவுக்கு ஆசை ஆசையாக எல்லாம் செய்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!