Skip to content
Post Views: 5,359
புது வெள்ளை மழை
அவன் வேலைகளை முடித்துக் கொண்டு கமிஷனரை பார்த்து மூன்று நாட்கள் விடுமுறை கேட்டான்.
“என்னப்பா ஹனிமூன்னா?” எனக் கேட்டு அவர் கண் சிமிட்ட…. புன்னகைத்த நந்தா, இல்லை எனத் தலையசைத்தவன், “மெட்ராஸ்க்கு போகணும்.” என்றான்.
Advertisement
“சரி, ஆனா எதாவது எமெர்ஜன்சின்னா உடனே வந்திடு.” என அனுமதி கொடுத்தார்.
அவர்கள் டிபார்ட்மெண்ட் மூலமாகவே, அன்று இரவு ரயிலுக்கு மெட்ராஸ் செல்ல, டிக்கெட் ஏற்பாடு செய்தவன், மீதி இருந்த வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல… பின் மதியம் ஆகிவிட்டது.
Advertisement
அவன் வீட்டிற்குள் நுழைந்த போது, ஹால் சுவற்றில் சாய்ந்து பத்மா உட்கார்ந்து இருக்க… அவர் மடியில் தலைவைத்து கயல்விழி படுத்து இருந்தாள். குழலி சோபாவில் உட்கார்ந்து இருந்தார். டிவி வேறு ஓடிக் கொண்டு இருந்தது.
Advertisement
“வாங்க அத்தை. எப்ப வந்தீங்க? சாப்டீங்களா?”
நந்தாவின் குரல் கேட்டு கயல்விழி வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
Advertisement
“காலையில வந்திட்டேன் மாப்பிள்ளை. சாப்பாடும் ஆச்சு.” பத்மா சொல்ல… நந்தாவின் பார்வை அருகில் இருந்த மனைவியிடம் சென்றது.
அவள் தலை நிமிர்ந்தால் அல்லவா, அவள் முகம் பார்க்க முடியும். நந்தா சென்று உடைமாற்றி வந்தான்.
“எங்க மா வருணும், தாரணியும்?”
“உன் தங்கச்சி ஷாப்பிங் கூடிட்டு போய் இருக்கா?’
“வந்த இடத்துலேயும் அவனை விடலையா” எனக் கேட்டபடி சாப்பிட அமர்ந்தான்.
“நீ போய்ப் பரிமாறு.” பத்மா கயலை போகச் சொல்ல… அவள் நானா என்பது போல் பார்த்தாள்.
“இனி இந்த வேலையெல்லாம் நீதான் பண்ணனும். போ…” எனப் பத்மா சொல்ல… வேறுவழியில்லாமல் கயல்விழி நந்தாவுக்குப் பரிமாற வந்தாள்.
கயல்விழி ஒவ்வொன்றாக எடுத்து பரிமாற, அவளைப் பார்த்தபடியே நந்தா அப்பளைத்தை எடுத்துக் கடித்தான்.
அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து பத்மாவும், குழலியும் எழுந்து அறைக்குள் சென்றனர்.
“நீ சாப்பிட்டியா?”
“ம்ம்…”
“இதுல உட்கார்ந்துக்கோ…” நந்தா அருகில் இருந்த இருக்கையைக் காட்ட… கயல்விழி பட்டும்படாமல் ஓரத்தில் அமர்ந்தாள்.
அவனைப் பார்த்து அவள் பயப்படுவது நன்றாகவே தெரிந்தது. இவ எப்ப பயத்தை விடுறது? என நந்தாவுக்குக் கவலையாக இருந்தது.
“நீ ப்ளஸ் டூல என்ன குரூப் எடுத்த?”
“ப்ரஸ்ட் குரூப்.”
“காலேஜ்ல?”
“மத்ஸ்.”
“உன்னைக் காலேஜ்ல சேர்த்து விட்டா படிப்பியா?”
அவன் கேட்பது நிஜம்தானா என்பது போல் கயல்விழியின் பார்வை இருந்தது.
“சொல்லு உனக்குப் படிக்க இஷ்ட்டமா?” அவன் மீண்டும் கேட்க… கயல்விழி சம்மதம் என்பதாகத் தலையசைத்தாள்.
பேசிக்கொண்டே அவன் சாப்பிட… கயல்விழி மீண்டும் கொஞ்சம் சாதம் வைக்க… அதில் தயிர் போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தான்.
சாப்பிட்டு முடித்துக் கை கழுவிக்கொண்டு வந்தவன், “அம்மா,” என அழைக்க… குழலி எழுந்து வெளியே வந்தார். அவரோடு பத்மாவும் வந்தார்.
“இன்னைக்கு நைட் ட்ரைன்ல நாம மெட்ராஸ் கிளம்புறோம்.
எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க.” என்றான்.
இன்னைக்கே கிளம்புறோமா அதுவும் நல்லது எனக் குழலி நினைத்தார். போட்டது போட்டபடி திடிரென்று தானே கிளம்பி வந்திருந்தனர்.
சிறிது நேரம் மகளோடு இருந்துவிட்டுப் பத்மா கிளம்ப, “அத்தை எனக்குக் கயலோட மார்க் ஷீட், அப்புறம் மத்த சர்டிபிகேட் எல்லாம் வேணும். நம்பிக்கையான ஆள்கிட்ட ஸ்டேஷனுக்குக் கொடுத்து விடுங்க. நாங்க இன்னைக்குக் கிளம்புறது வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.” என்றான்.
“சரிங்க மாப்பிள்ளை.” என்றவர் விடைபெற்று சென்றார்.
மாலை ஆறு மணிக்குத்தான் வருணும், தாரணியும் வந்தனர். ஏற்கனவே குழலி எல்லாவற்றையும் எடுத்து வைத்திருந்தார்.
புடவையில் இருந்த கயல்விழியைப் பார்த்தவன், “உன்கிட்ட சுடிதார் இல்லையா?” எனக் கேட்க… அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
அவள் எப்போதும் பாவாடை தாவணி அணிவதுதான் வழக்கம்.
“உன் தங்கச்சி வச்சிருப்பாளே… இன்னைக்குக் கூடப் புதுசா வாங்கினாளே.” என வருண் போட்டுக் கொடுக்க… தான் வாங்கியதை மனமில்லாமல்தான் தாரணி கொடுத்தாள்.
“அண்ணா உனக்கு ரெண்டா வாங்கித்தான் தரேன்.” நந்தா சொல்ல….
அவளின் முகம் உடனே மலர்ந்தது.
தாரணி அப்படித்தான் சின்னப் பிள்ளை போலத்தான் நடந்து கொள்வாள். தந்தை இல்லை என்று சலுகை காட்டியதால் வந்தது.
நேற்று இரவு வீட்டில் நடந்ததைக் கூட யாரும் அவளிடம் சொல்லவில்லை. அது எல்லாம் தெரிந்தால் மிகவும் பயந்து விடுவாள். பிறகு இவளுக்கு வேறு வைத்தியம் பார்க்க வேண்டும்.
சுடிதாரில் இன்னும் சின்னப் பெண்ணாகக் கயல்விழி தெரிந்தாள். ரயில் வருவதற்குச் சிறிது நேரம் முன்புதான் ஸ்டேஷன் வந்தனர். உடன் இரண்டு காவலர்களும் சாதாரன உடையில் வந்திருந்தனர்.
நந்தாவின் பார்வை எல்லாம் சுற்றிமுற்றி அலைந்து கொண்டே இருந்தது. பாண்டியின் ஜாதியினர் சிலர் அன்பரசுவை பழிவாங்க காத்துக் கொண்டு இருந்தனர். அவர்களால் கயல்விழிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்றே இந்தக் கண்காணிப்பு.
நந்தா சொன்னது போல், நேற்று வந்து அவனைச் சந்தித்த பாண்டியின் நண்பர்கள்தான், அவனுக்கு இதைச் சொன்னது. இன்னும் கயல்விழிக்குத் திருமணம் ஆன விஷயம் வெளியே பரவவில்லை. அதற்குள் அவளை இடம் மாற்றி விடுவது நல்லது என நினைத்தான்.
ரயில் நிலையத்தில் கயல்விழி தன் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். திடிரென்று அவள் அவனை ஒட்டி நிற்பது போல் தெரிந்தது. அவளை ஓரக்கண்ணில் அவன் ஆராய…. அவள் யாரிடமோ இருந்து மறையவே அப்படிச் செய்கிறாள் எனப் புரிந்தது.
அவள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் வந்து கொண்டிருந்தது வாசு.
உடன்பிறந்த அண்ணனை பார்த்து ஒரு தங்கை பயப்படுகிறாள். அப்படியென்றால் அவன் அவளை என்ன பாடுபடுத்தி இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், அவன் முகம் கடுத்தது.
வாசு அருகில் வருவதற்குள் இவனே சென்று பாதி வழியில் அவனை எதிர்கொண்டான்.
“என்ன?”
“அம்மா இதைக் கொடுத்திட்டு வர சொன்னாங்க.” என ஒரு பெரிய கவரை கொடுத்துவிட்டு, அவன் திரும்பி சென்றான். இவன் கேட்ட சர்டிபிகேட் அதில் இருந்தது.
செல்லும் அவனையே அடிக்கடி கயல்விழி திரும்பி பார்த்துக் கொண்டாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது. பயம் இருந்தாலும் அண்ணன் செல்வதைப் பார்த்து கலங்கவும் செய்கிறாள் என நந்தாவுக்குப் புரிந்தது.
“என்ன டா?” நந்தாவின் அருகில் வந்த வருண் கேட்க,
“அவங்க அண்ணன் போறதை பார்த்து பீல் பண்றா டா… பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு.” என்றான்.
“டேய் இதெல்லாம் ஒரு மேட்டரா வா…” அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே ரயிலும் வந்துவிட, விரைந்து சென்று ரயிலில் ஏறினர்.
இவர்களுக்காக ஒரு தனிக் கூபே பதிவு செய்து இருந்தனர். ரயில் கிளம்பிய பிறகே உடன் இருந்த காவலர்கள் சென்றனர்.
டி.டி.ஆரிடம் பேசிவிட்டு உள்ளே வந்த நந்தா, கதவை மூடி தாழிட்டவன், வருணின் அருகில் சென்று அமர்ந்தான். பெண்கள் மூவரும் எதிர் இருக்கையில் இருந்தனர்.
“ரொம்பப் பசிக்குது சாப்பிடலாமா?” வருண் கேட்க, குழலி உடனே கட்டிக்கொண்டு வந்த உணவை ஆளுக் ஒன்றாக எடுத்து கொடுத்தார்.
பேசியபடியே சாப்பிட, அதுவும் ரயிலில் சாப்பிட கேட்கவா வேண்டும், பொழுது இனிமையாகச் சென்றது. அதுவரை இருந்த டென்ஷன் வடிந்து, கயல்விழி பயணத்தை அனுபவிக்க ஆரம்பித்தாள்.
அவளின் பரவசமான முகத்தைக் கவனித்த குழலி, “நீ ட்ரைன்ல போனதே இல்லையா?” எனக் கேட்டே விட்டார்.
“இங்கிருந்து ராமேஸ்வரம் போயிருக்கேன்.”
“அப்ப மெட்ராஸ்க்கு வந்ததே இல்லையா?” அடுத்தக் கேள்வி தாரணி கேட்க,
“ஒருமுறை ஸ்கூல்ல டூர் வந்திருக்கேன். பஸ்ல தான் போனோம்.”
“மெட்ராஸ்ல எங்க எல்லாம் போனீங்க?”
“நிறையச் சிற்பம் எல்லாம் இருக்குமே மெரீனா பீச்.” என்று அவள் சொன்னதும், எல்லோருக்குமே திக்கென்று ஆகிவிட்டது.
மெரீனா பீச்ல சிற்பமா? என வியந்து போய்ப் பார்க்க…கயல்விழி அதைக் கவனிக்காமல் பேசிக்கொண்டே சென்றாள். அவள் சொன்னது எல்லாம் மஹாபலிபுரத்தை பற்றியது. ஆனால் பெயரை மறந்து விட்டாள்.
“பாரேன் நாங்களும் மெட்ராஸ்லதான் இருக்கோம். ஆனா மெரீனாவில் சிற்பம் இருக்கிறதே எங்களுக்குத் தெரியாது. நாம எல்லாம் நாளைக்கே அங்க போய்ப் பார்க்கிறோம்.” வருண் சொல்ல… அவன் தன்னைக் கிண்டல் செய்கிறான் எனப் புரிந்து கொள்ளாமல், உண்மையாகவே சொல்கிறான் என நினைத்து கயல்விழி சரியென்று தலையை ஆட்ட… அப்போது அவளின் கணவனின் கண்களுக்குக் குழந்தையாகவே தெரிந்தாள்.
மேலும் அவள் எதுவும் உளறாமல் இருக்க…. “இவன் தாரணி வீட்டுக்காரர் மட்டும் இல்லை. என்னோட க்ளோஸ் ப்ரண்டும்.” என வருணை பற்றிச் சொன்ன நந்தா, “வாயால தான் இவன் பொழப்பே ஓடுது.” என அவனைக் கேலி செய்ய….
அது புரியாமல், “பாட்டு பாடுவாங்களா?” எனக் கயல்விழி அப்பாவியாகக் கேட்க…. எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
“இவரு பாட்டு பாடினா, யாரு கேட்கிறது?” என்ற தாரணி, வருண் பாடுவதைப் போல் கற்பனை செய்து பார்த்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
“ஏன் எல்லோரும் சிரிக்கிறாங்க.” என்பது போல் கயல்விழி பார்க்க.
“அவன் வக்கீல் அதுதான் அப்படிச் சொன்னேன்.” என நந்தா புன்னகைக்க, கயல்விழிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவள் முகத்தைப் பார்த்த வருண், “இதுக்கெல்லாமா பீல் பண்ணுவாங்க. நீ என் தங்கச்சி மா. நீ என்னை என்ன வேணா சொல்லலாம். அண்ணன் பக்கம் வா.” எனத் தள்ளி அமர்ந்து ஜன்னல் பக்கமாக இடம்விட….
கயல்விழிக்கு ஜன்னல் ஓரம் உட்கார்ந்து வர ரொம்பவும் ஆசை என்பதால், உடனே மாறி உட்கார்ந்தாள்.
அவளைப் பார்க்க வசதியாக நந்தா எதிர்புறம் அமர்ந்தான். கயல்விழி அவனைப் பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
“சில பேர் என்னைக் குக்கா, டிரைவரா எல்லாம் யூஸ் பண்ணிக்கிறாங்க. இதுல பாட்டு பாடுறவன் எந்த விதத்துல குறைஞ்சது? இதுக்கு எதுக்கு ஒருத்தங்க விழுந்து விழுந்து சிரிக்கிறாங்கன்னு எனக்குப் புரியலை.” வருண் தாரணியைப் பார்த்தபடி சொல்ல,
“சொல்லி காமிக்கிறீங்க இல்ல…இனிமே உங்ககிட்ட எதுவும் கேட்க மாட்டேன்.” என்று தாரணி முறுக்கிக்கொள்ள…
“ஹே சும்மா சொன்னேன் டி. உனக்குப் பண்ணாம யாருக்கு பண்ண போறேன்.” என வருண் வழிந்தான். அவனை நக்கலாகப் பார்த்த நந்தா, பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
“சரி படுக்கலாமா?” குழலி கேட்க…. அதுவரை சாதாரணமாக இருந்த கயல்விழியின் முகம் மாறியது.
அவளுக்கு உறங்குவது என்றாலே பயம்தான். கனவு வருமே, அவள் அதற்காகப் பயப்பட… அதை உணர்ந்த நந்தா, அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
அவளைப் பாத்ரூம் போக விட்டு அழைத்து வந்தவன், வெளியே வைத்து அவனிடம் இருந்த கை துப்பாக்கியை எடுத்துக் காட்டினான்.
“பாரு என்கிட்டே துப்பாக்கி இருக்கு. அதோட யாராலையும் உள்ள வர முடியாது. அதனால கண்டதையும் நினைக்காம படுத்து தூங்கு, சரியா?” என அவன் ஒரு குழந்தைக்குச் சொல்வது போல் சொல்ல…. கயல்விழி சரியென்று தலையசைத்தாள்.
பாதுகாப்பிற்காக ஜன்னலை மூடிவிட்டு ஆளுக்கொரு சீட்டில் ஏறி படுத்தனர். கயல்விழியும் நந்தாவும் கீழே இருந்த இருக்கையிலேயே ஆளுக்கு ஒரு பக்கம் படுத்து கொண்டனர்.
வெகு நேரம் வரை உறங்காமல் இருந்த கயல்விழி தன்னையும் அறியாமல் உறங்க… அன்றும் அவளுக்குக் கனவு வந்தது. ஆனால் கனவில் வெட்ட வந்தவர்களை, நந்தா துப்பாக்கியால் சுட்டு விட…. நேற்று போல் அவள் பயந்து அலறவில்லை.
“அவங்க போலீஸ், துப்பாக்கி இருக்கு, உங்களைச் சுட்டுடுவாங்க. என அவள் உறக்கத்தில் புலம்ப… அதைக் கேட்ட நந்தா சிரித்துக் கொண்டான்.
error: Content is protected !!