Skip to content
Post Views: 4,679
“துரோகி, உன் தங்கச்சியை உனக்கு ரெண்டு நாளாத்தான் தெரியும். அதுக்குள்ள இந்த நண்பனை மறந்துட்டியே.”
அவன் சொன்ன செய்தி கயலுக்கும் ஆச்சர்யம்தான். இவர்களை எல்லாம் சந்தித்து இரண்டு நாட்கள்தான் ஆகிகிறதா? ஆனால் என்னவோ வெகுநாட்கள் ஆகிவிட்டது போல் தோன்றியது.
“சரி டா பொழச்சி போ.” என்ற வருண் கயலிடம் இன்னொன்றை கொடுத்து, “இதைக் குடிச்சிட்டு என்னன்னு சொல்லு பார்க்கலாம்.” என்றான்.
“எனக்குக் குடிக்காமலே தெரியும். இது ரோஸ் மில்க்.”
Advertisement
அவள் சொன்னதைக் கேட்ட நந்தா வேற யாரும் இவளை டேமேஜ் பண்ண வேண்டாம், இவளே பண்ணிப்பா என நினைத்தான்.
“நானே கடைக்குப் போய் ஸ்ட்ராபெர்ரி வாங்கிட்டு வந்து, அதைப் பால் விட்டு அரைச்சு, கிரீம் எல்லாம் போட்டு, உனக்கு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பண்ணி கொண்டு வந்தா…. நீ சிம்பிள்லா ரோஸ் மில்க்ன்னு சொல்லிட்ட.”
“ஒழுங்கா குடிச்சு பார்த்திட்டு சொல்லு.” என்றான் வருண்.
Advertisement
அச்சச்சோ திரும்பச் சொதப்பிட்டோமா? என நினைத்த கயல், சிறிது குடித்துப் பார்த்துவிட்டு, “ஆமாம் இது வேற, ஆனா ரொம்ப நல்லா இருக்கு.” என்றதும், வருண் புன்னகைத்தான்.
Advertisement
“ஏன் டா அந்தப் பொண்ணை இந்தப் பாடு படுத்துற. ரோஸ் கலரை பார்த்து ரோஸ்மில்க்குன்னு நினைச்சிட்டா, இது ஒரு குத்தமா?” என மகனிடம் கேட்ட சுமித்ரா, “வா மா, நான் உனக்கு வீட்டை சுத்தி காட்டுறேன்.” எனக் கயலை அழைத்துச் சென்றார்.
வீட்டை சுற்றி காட்டிவிட்டு, சுமித்ரா அவர் அறையில் அவளை உட்கார வைத்து வருண், தாரணியின் கல்யாண ஆல்பத்தைக் காட்ட… கயல் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
இரவு உணவு நேரம் ஆனதும், சுமித்ரா சமையல் அறைக்குச் செல்ல… அவரோடு கயலும் சென்றாள்.
Advertisement
அவர்கள் பின்னே உள்ளே வந்த வருண், “எனி ஹெல்ப் மா? நான் மாவு தேச்சு தரேன்.” என்று சப்பாத்திக்கு பிசைந்து வைத்த மாவை அவன் எடுக்க,
“கொடுங்க அண்ணா, நான் தேய்க்கிறேன்.” எனக் கயல் அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.
அவள் தேய்த்துக் கொடுக்க… சுமித்ரா அடுப்பில் போட்டு எடுத்தார். வருண் அங்கேயே மேடை மேல் அமர்ந்து கொள்ள… மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
“எல்லாத்தையும் சுட்டாச்சு. சாப்பிடலாமா?”
“தயிர் வெங்காயம் பண்ணிட்டீங்களா மா?”
“சப்பாத்திக்கு தயிர் வெங்காயமா?” எனக் கயல் ஆச்சர்யப்பட…
“உனக்குத் தெரியாது இல்லை. நந்தாவுக்கு மத்தியானமும், நைட்டும் கண்டிப்பா தயிர் வேணும். அதே மாதிரி தினமும் மோர் குடிப்பான்.” வருண் சொன்னதைச் சிரத்தையாகக் கயல்விழி கேட்டுக் கொண்டாள்.
“அதுவும் ரெடி டா.”
“தாரணி….” வருண் அழைக்க,
“இப்ப எதுக்குடா அவளைக் கூப்பிடுற?”
“எல்லாத்தையும் எடுத்திட்டு போய் வைக்கத்தான்.”
“செஞ்சவங்களுக்கு எடுத்திட்டுப் போகத் தெரியாதா.” சுமித்ரா சொல்லும் போதே தாரணி அங்கே வர…
“நீ வா மா…” எனச் சுமித்ரா கயலை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.
“ஏன் டி ஒரு பேச்சுக்காவது, நானும் ஹெல்ப் பன்னட்டுமான்னு கேட்க மாட்டியா? நீதான் எதோ விருந்தாளி மாதிரி ஹால்ல உட்கார்ந்து இருக்க? கயல் வேலை பார்க்குது.”
“உங்க தங்கச்சி தானே வேலை பார்த்தாங்க. அப்படியே நான் வேலை பார்த்தாலும், நீங்களும் உங்க அம்மாவும் குறைதான் சொல்வீங்க.”
“ஆமாம் ஒரு காய் நறுக்கச் சொன்னா கூட, இப்படியா அப்படியான்னு நூறு சந்தேகம் கேட்ப. ஒன்னு உப்பை அள்ளி போட்டு வைப்ப… இல்லைனா சுத்தமா போட மாட்ட. தோசை சுட சொன்னா, அதைப் பிச்சு பிச்சு எடுப்ப. இதுல எதோ நீ நல்லா பண்ணிட்டு, நாங்க குறை சொன்ன மாதிரி சொல்ற?”
“உங்க கூடச் சண்டை போட எல்லாம் எனக்கு மூட் இல்லை. இப்ப எதுக்கு என்னைக் கூப்பிடீங்க?”
“சமைக்கத்தான் இல்லை. இதையெல்லாம் அங்க கொண்டு வச்சு பரிமாறவாவது செய்யலாமே.”
வருண் சொன்னதற்குத் தாரணி பதில் சொல்லவில்லை என்றாலும், அவன் சொன்னதைச் செய்தாள்.
இருவருக்குள்ளும் இந்த மாதிரி சண்டைகள் அடிக்கடி நடப்பதுதான்.
தாரணிக்குப் படிப்பு வந்த அளவுக்குச் சமையல் வராது. படிக்கச் சொன்னால் விடிய விடிய கூட உட்கார்ந்து படிப்பாள். ஆனால் வீட்டு வேலை செய்ய உடம்பு வணங்காது.
அவள் அம்மா வீட்டிலும் அவள் எந்த வேலையும் செய்தது இல்லை. சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவிட்டு எழுந்து செல்வாள். அது போல மாமியார் வீட்டில் இருக்க முடியாது அல்லவா.
உள்ளே நடந்த சண்டையை வருண் காட்டிக்கொள்ளவில்லை. சிரித்த முகத்துடன் வெளியே வந்தான். தாரணி பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டனர்.
சாப்பிட்டதும் வருண் குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்த ஐஸ்கிரீம் கொண்டு வந்தவன், கயலுக்கு மட்டும் நிறைய வைத்து, “சாப்பிடு உனக்காகத்தான் வாங்கி வச்சேன்.” என்றான்.
“டேய் உன் பாசத்துக்கு ஒரு அளவே இல்லையாடா. எனக்குப் புல்லரிக்குது.” என நந்தா கைகளைத் தேய்த்து விட…
“எனக்கும்தான்.” என்றாள் தாரணி.
“உங்க ரெண்டு பேருக்கும் பொறாமை.” என்றான் வருண்.
“இவனுக்கு அடுத்து, நான் மாசமா இருந்த போது, தங்கச்சி பாப்பா தான் வேணும்ன்னு சொல்லிட்டே இருப்பான். அடுத்தும் பையன் பிறந்ததும், அவனை அங்கயே விட்டுட்டு வந்திடுமான்னு எல்லாம் சொல்லி இருக்கான்.”
“இப்ப நீ வந்து இவன்கிட்ட மாட்டிகிட்ட.” சுமித்ரா சிரித்தபடி சொல்ல… கேட்ட கயலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவளுக்கும் இரண்டு அண்ணண்கள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றி நினைத்தவுடன் கண்கள் கலங்கியது.
அவளின் முக மாற்றத்தை கவனித்த நந்தா, “சரி டா நாங்க கிளம்புறோம்.” என எழுந்துகொள்ள…
மறுநாள் ஊருக்கு கிளம்பி விடுவான் என்பதால்… அவன் மனைவியோடு நேரம் செலவழிக்கட்டும் என நினைத்த வருணும் அவர்களைத் தடுக்கவில்லை.
காரில் கயல் எதோ யோசனையாக இருக்க, நந்தா அவளிடம் பேச நினைத்து காரை ஓரமாக நிறுத்தினான்.
“இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்த. இப்ப என்ன ஆச்சு?”
“வருண் அண்ணா மாதிரி எனக்கு ஏன் என் அண்ணனுங்க இல்லை? நான் இல்லாம அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க.”
“நீயா ஏன் அப்படி நினைக்கிற? உனக்குத் தெரியுமா? அவங்க சந்தோஷமா தான் இருப்பாங்கன்னு.”
“சந்தோஷமாதான் இருப்பாங்க. என்கிட்டையே நிறையத் தடவை சொல்லி இருக்காங்க, நீ இந்த வீட்டை விட்டு ஒழிஞ்சு போனாத்தான் எங்களுக்கு நிம்மதின்னு.”
“ஓ அப்படி வேற அவனுங்களுக்கு நினைப்பு இருக்கா? ரெண்டு பேரும் சீக்கிரத்துல ஜெயில்ல களி திங்கப் போறாங்க. அதுவும் உன் பெரிய அண்ணனுக்குதான் அந்த வாய்ப்பு பிரகாசமா இருக்கு.”
“வேண்டாம், அப்படி எதுவும் பண்ணிடாதீங்க. ஏற்கனவே என்னோட அண்ணி, உன்னாலதான் என் புருஷன் கொலைகாரன் ஆகிட்டாருன்னு சொல்லிட்டே இருப்பாங்க. இதுல ஜெயிலுக்கு வேற போனா, அதுக்கும் என்னைத்தான் திட்டுவாங்க.”
“உன் அண்ணன் அந்த ஒரு கொலையைத் தவிர வேற எதுவும் பண்ணலைன்னு நினைக்கிறியா? உன் அண்ணன் மேல எக்கச்சக்கமா கேஸ் இருக்கு. எல்லாத்துக்கும் ஆதாரம் திரட்டிட்டு இருக்கோம். இங்க இருந்து போனதும், உங்க அண்ணனை அரெஸ்ட் பண்றதுதான் முதல் வேலை.”
கயல்விழி பதில் சொல்லாமல் கலங்கிய விழிகளோடு வேறு பக்கம் பார்க்க…
“என்ன அண்ணன் மேல பாசமா? இந்த வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காத.”
“நான் எதுவும் சொல்லலையே… அவங்க எப்படி இருந்தாலும், என் அண்ணன் தானே… நான் வருத்தம் கூடப் படக்கூடாதா.”
“நல்ல முன்னேற்றம், உன் வருண் அண்ணனோட சேர்ந்து நல்லா பேச கத்துகிட்ட.”
அதிகம் பேசி விட்டோமோ எனக் கயல்விழி பயந்து போய்ப் பார்க்க… “என்ன பார்க்கிற? நினைச்சதை பேசுறது ஒன்னும் தப்பு இல்லை. எனக்கு உன் மேல கோபமும் இல்லை.” என்றான் நந்தா.
கோபம் இல்லை என்பதையும் அவன் கோபமாகச் சொல்ல, கயல்விழி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
‘இப்படியெல்லாம் என்னைப் பார்த்து தொலைக்காத டி. அப்புறம் நாளைக்கு என்னால கிளம்பவே முடியாது.” என மனதிற்குள் புலம்பிய நந்தா… வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் காரை எடுத்தான்.
error: Content is protected !!