Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Maiyam Kollum Puyal

Maiyam Kollum Puyal 1 3

“அத்தை”

“அப்படிக் கூப்பிடாதேன்னு ஒரு தடவை சொன்னா புரியாது உனக்கு”, என்று சுந்தரி கேட்டதும் “இந்த அம்மா பேசுறதுக்கு அவன் தானே காரணம்? அவன் தப்பு செஞ்சதுக்கு நான் திட்டு வாங்கணுமா?”, என்று கோபம் எழுந்தது யுக்தாவுக்குள்.



Advertisement

“சும்மா என்னைக் குறை சொல்லணும்னு சொல்லிட்டு இருக்காதீங்க? எல்லாமே உங்க பையன் பண்ணினது தான். அவனை… அவங்களைப் போய் கேளுங்க. சும்மா என் கிட்டயே எப்ப பாத்தாலும் நாட்டாமை பண்ணிக்கிட்டு” , என்று அவளும் எரிச்சலுடன் கத்தினாள்.

“ஓஹோ நான் என் மகனை விசாரிக்கணுமா? இங்க பாரு உன்னை மாதிரி நான் கிடையாது. நான் எப்படி நல்லவளோ அதே மாதிரி என் பிள்ளைகளும் நல்லவங்கன்னு நினைக்கிறவ? அந்த கடவுளே வந்து சொன்னாலும் நான் அவனை சந்தேகப் பட மாட்டேன். நீ தான் ஒரு சந்தேகப் பேய்”, என்று சொன்னதும் அவள் உள்ளம் வலித்தது.

Advertisement

Advertisement

“நான் சந்தேகப் பேயா? நீங்க புரியாம பேசுறீங்க? நானும் யுவனை நம்பினேன் தான். ஆனா ஆதாரம்…”, என்று அவள் எதுவோ சொல்ல வர “பெரிய புடலங்கா ஆதாரம். என் மகன் நல்லவன் தான். யார் என்ன சொன்னாலும் நான் அடிச்சு சொல்லுவேன். ஏன் இதுக்கு முன்னாடி உன்னைப் பத்தின எந்த விசயத்தையும் என் மகன் நம்பிருக்கானா? அப்ப உனக்கு மட்டும் ஏண்டி இப்படி புத்தி போச்சு?”, என்று கேட்டாள் சுந்தரி.

“உங்க பிள்ளையே அது உண்மைன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நான் கிளம்பி வந்தேன்”

Advertisement

“அவன் அதை உண்மைன்னு சொன்னன்னா எதுக்கு அப்படி சொல்றான்னு அவன் கிட்ட கேட்டியா? முதல்ல அவனை நீ பேச வீட்டியா? எங்க இருந்து டி வந்த என் குடும்பத்து மானத்தை இப்படிக் குட்டிச் சுவராக்க? எவ்வளவு அமைதியா எவ்வளவு சந்தோஸமா என் குடும்பம் இருந்துச்சு தெரியுமா? எல்லாத்தையும் குட்டிச் சுவர் ஆக்கி… சே.. உன்னை நினைச்சாலே எனக்கு எரிச்சலா வருது.. எல்லாம் இவனைச் சொல்லணும். உன் கிட்ட எதைப் பாத்து இப்படி மயங்கி கிடக்குறான்னு தெரியலை. அவன் வாழ்க்கையைக் கெடுத்துட்டு இப்படி மூச்சு முட்டிப் போய் உக்காந்துருக்கான். அம்மா தாயே, இப்ப நான் கூப்பிட்டது உன்னை திருப்பி இங்க வரச் சொல்றதுக்காக இல்லை. போனவ அப்படியே போயிரு. இனிமேலாவது என் மகன் சந்தோஷமா இருக்கட்டும். நீ அவன் வாழ்க்கைல வந்ததுல இருந்து தான் பிரச்சனை மேல பிரச்சனை. ஒழுங்கு மரியாதையா அவனுக்கு மணவிலக்கு கொடுத்துட்டு நடையை கட்டிரு. இனி ஒரு தடவை உன் கால் என் வீட்ல படக் கூடாது. இன்னையோட பீடை ஒழிஞ்சிருச்சுன்னு நினைச்சிக்கிறேன்”, என்று கத்தி விட்டு போனை வைத்தாள் சுந்தரி.

போனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யுக்தாவுக்கு சுந்தரி பேசியது அனைத்துக்கும் யுவன் தானே காரணம் என்று எண்ணி அவன் மீது கோபமாக வந்தது.

“செய்றதையும் செஞ்சிட்டு நல்ல பிள்ளை மாதிரி உக்காந்துருக்கானா? எல்லாம் உன்னால தான் டா”, என்று எரிச்சலாக எண்ணிக் கொண்டாள்.

யுக்தாவிடம் அவ்வளவு கத்தி விட்டு போனை வைத்தாலும் சுந்தரிக்கு கோபம் அடங்குவேனா என்று இருந்தது. அந்த கோபத்தில் அவள் ஈஸ்வரன் எழுந்ததையோ அறையை விட்டு அவர் பம்மி பம்மி வெளியே சென்றதையோ கவனிக்க வில்லை.

வெளியே சென்ற ஈஸ்வரனோ மகன் அருகே சென்று அமர்ந்து ஆதரவாக அவன் தோள் மீது கை வைத்தார்.

அவர் தொடுகையில் அவரை நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் அவ்வளவு வேதனை இருந்தது.

“அப்பா”, என்று அவன் குரல் கலங்கி போய் ஒலிக்க “எல்லாம் சரியாகிரும் டா. கவலைப் படாதே”, என்றார்.

“எப்படி சரியாகும்னு தெரியலை பா. நடந்தது வேற”

“எனக்கு புரியுது யுவன். உன்னை எனக்கு தெரியாதா டா?”

“ஆனா அவ நம்பலைப்பா. அவ என்னையும் நம்பலை. என் காதலையும் நம்பலை”

“காதல் அப்படிங்குற வார்த்தை உங்களுக்குள்ள எதுக்கு வருது யுவன்?”, என்று அவர் கேட்டதும் தலை குனிந்தான் யுவன். அவனால் இந்த கேள்விக்கு ஒரு தந்தையிடம் விளக்கம் சொல்ல முடியாது. அவன் மனதில் இருக்கும் உணர்வுக்கு பெயர் காதல் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு வார்த்தையால் எப்படி அதற்கு விளக்கம் கொடுக்க முடியும்? அதனால் அமைதியாக இருந்தான்.

“பழசை எல்லாம் விடு டா. இப்ப அடுத்து என்னன்னு யோசி. முதல்ல அதை யார் செஞ்சான்னு கண்டு பிடி”, என்றார் ஈஸ்வரன்.

“வேற யார்? எல்லாம் அந்த நாய் தான்”, என்று சொல்லும் போதே அவன் முகம் கோபத்தில் இறுகியது.

“அப்படின்னா யுக்தா அங்க இருக்க கூடாது யுவன். அவளை முதல்ல இங்க கூட்டிட்டு வரணும். இல்லைன்னா இந்த பிரிவு நிரந்தரமாகிரும்”

“அதுக்கு தான் போகாதேன்னு சொன்னேன். அவ என் பேச்சைக் கேக்கலை. என் போனைக் கூட எடுக்கலை. நீங்களும் அம்மாவும் போய் நாளைக்கு அவளைக் கூட்டிட்டு வறீங்களா?”

“நான் இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்தேன்னு நினைக்கிற? எல்லாம் உன் அம்மா பண்ணின வேலை தான்”, என்று ஆரம்பித்தவர் சுந்தரி யுக்தாவிடம் பேசிய அனைத்தையும் சொல்லி விட்டார்.

“இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இந்த அம்மா வேற?”, என்று சலித்துக் கொண்டான் யுவன்.

“நீயும் யுக்தாவும் பிரிஞ்சு இருக்குறதை உன் அம்மா அவளுக்கு சாதகமா ஆக்கிருவா யுவன். கூடிய சீக்கிரம் இந்த பிரச்சனையை யுக்தாவுக்கு புரிய வச்சு மருமகளை இங்க கூட்டிட்டு வரப் பாரு. இன்னொரு விஷயம், யுக்தா இங்க வந்ததும் அவளை தனியா கூட்டிட்டு போயிரு யுவன்”

“அப்பா நீங்களா இப்படிச் சொல்றீங்க? எங்க நாலு பேர்க் கிட்டயும் எப்பவும் ஒத்துமையா இருக்கணும்னு சொல்லுவீங்களே? நீங்களா என்னைத் தனிக்குடித்தனம் போகச் சொல்றீங்க?”

“யுக்தா பாவம் பா. உன் அம்மாவோட நாக்கு அவளை ரொம்ப கஷ்டப் படுத்துது. உன் அம்மாவும் நல்லவ தான். என்ன செய்ய? எல்லாம் எப்படியோ மாறிருச்சு. கொஞ்சம் பிரிஞ்சு இருந்தா எல்லாம் சரியாப் போகும்”

“இல்லைப்பா, நான் அப்படித் தனியாப் போனாலும் அதுக்கும் யுக்தா தான் காரணம்னு பேசுவாங்க. முதல்ல அவளே சரியா இல்லையே?”

“அவளைப் பத்தி எங்களை விட உனக்கு தான் நல்லா தெரியும். அவ ஒரு குழந்தை மாதிரி டா. என்ன நடந்ததுன்னு நீ தான் அவளுக்கு உணர்த்தனும்”

“இல்லைப்பா. இது இந்த பிரச்சனையோட முடியுற விஷயம் இல்லை. அவளா புரிஞ்சிக்கிட்டு வரது தான் நல்லது. இல்லைன்னா ஒவ்வொரு தடவையும் நாம கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி பொறுமையா சொல்லிட்டு இருக்க முடியாது”

“முன்னாடி உள்ள யுவனா இருந்திருந்தா அவளுக்கு கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிப் புரிய வைக்கிற பொறுமை உன் கிட்ட இருந்துருக்கும். ஆனா இப்ப நீ வேற யுவன் ஆச்சே? அதனால பொறுமை குறைய தான் செய்யும்”, என்று அவனுக்கு ஒரு குட்டை வைத்தார் ஈஸ்வரன்.

“அப்பா”, என்று அதிர்வாக அழைத்தான்.

“யார் மாறினாலும் நீ மாறக் கூடாது யுவன். முன்னாடி சொன்னதை தான் இப்பவும் சொல்றேன். பாத்து நடந்துக்கோ. நீ மாறின மாதிரி யுக்தா மாறிருந்தா இந்த பிரச்சனை இல்லை. ஆனா அவ அபப்டியே தான் இருக்கா. அதாவது குழந்தை மாதிரி. அதனால நீ தான் அவளுக்கு புரிய வைக்கணும். முன்னாடி அவளை எப்படி ஹேண்டில் பண்ணுவீயோ அப்படி ஹேண்டில் பண்ணு”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் தான் அவனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவனுக்கா தெரியாது? அவனுடைய யுக்தாவை எப்படி சமாளிப்பது என்று? அவளை சமாளிப்பது எளிது என்று எண்ணி சந்தோஷமாக புன்னகைத்தான். ஆனால் அவன் ஒன்று அறிய வில்லை. எப்படி யுவன் மாறியிருக்கிறானோ அதே போல் தான் அவளும் மாறியிருக்கிறாள் என்று. இப்போதிருக்கும் யுக்தாவை மாற்றுவது கடினம் என்று அவனுக்கு புரிய வில்லை.

மீண்டும் அடுத்து என்ன செய்யலாம் என்று எண்ணியவன் உடனே யுக்தாவைத் தான் அழைத்தான். அவனது அழைப்பு என்று தெரிந்தும் அதை எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் யுக்தா.

மீண்டும் அவளை அழைத்தான். அப்போதும் எடுக்காதவள் அவன் மூன்றாவது முறை அழைக்கும் போது அதை கட் செய்து விட்டாள். அவள் போனை ஒரு ரிங்கிலே கட் செய்ததும் யுவன் முகத்தில் அழகான புன்னகை உருவானது.

அவள் இப்படிச் செய்தால் அவளது கோபம் குறைந்து இருக்கிறது என்று அர்த்தம். அவன் மீண்டும் இரண்டு முறை அழைக்கவும் அதை எடுத்தாள் யுக்தா.

அவள் எடுத்ததும் வந்த புன்னகையை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான் யுவன். அவளும் அமைதியாவே இருந்தாள். முன்பிருந்த யுக்தாவாக இருந்திருந்தால் இந்நேரம் அவன் முகத்தில் இருக்கும் புன்னகை அவள் முகத்திலும் இருந்திருக்கும். ஆனால் இப்போதோ அவள் முகம் இறுகிப் போயிருந்தது. அதற்கு காரணம் அவர்களுக்கு இடையில் இல்லவே இல்லை என்று அனைவரும் நம்பும் காதல் என்ற வார்த்தை தான். அதை மற்றவர்கள் மட்டும் இல்லை. யுக்தாவும் உணரவில்லை.

புயல் வீசும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!