Skip to content
Post Views: 5,980
அத்தியாயம் – 8
“அம்மா சாரி மா .”
“என்ன நந்தா இதெல்லாம் ? என்னால யார் கேட்கிற கேள்விக்கும் பதில் சொல்ல முடியலை .”
“ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோங்க .”
Advertisement
“உன் கல்யாணத்தைப் பத்தி நான் ஏகப்பட்ட கனவு வச்சிருந்தேன் .”
“அதையெல்லாம் பரணி கல்யாணத்துல நிறைவேத்திடலாம் மா .” நந்தா சாதாரணமாகச் சொல்ல .
Advertisement
“ யாரு அவனா ? வீட்டுக்கு அடங்கின நீயே … இப்படி அவசரமா கல்யாணம் பண்ற . அவன் கல்யாணம் பண்ணிட்டுதான் சொல்வான் .”
Advertisement
“அப்படியா டா ?” தாரணி பரணியிடம் கேட்க , அவன் ஆமாம் இல்லை என்று இரண்டுவிதமாகவும் தலையசைக்க , அதைப் பார்த்த மற்ற மூவருக்குமே சிரிப்பு வந்தது .
“ அண்ணா நாங்க எப்ப அண்ணியைப் பார்க்கிறது ?” பரணி கேட்க ,
Advertisement
“நீங்க எல்லாம் கிளம்பிட்டு கீழ இருக்க ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டு முடிங்க . அதுக்குள்ள நானும் வருணும் போய்த் தாலி வாங்கிட்டு வந்திடுறோம் . வந்ததும் கோவிலுக்குப் போகலாம் .” என்றான் .
அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே வருண் அங்கே வந்தான் .
“நீ ரெடியா வா … நாம கிளம்பலாம் .” என அவனோடு நந்தா வெளியே சென்றான் .
அப்போது ராதிகாவின் அம்மா எதிரே வந்தவர் , “ என்ன வேலை டா பண்ணி இருக்க நீ .” எனக் கோபமாக ஆரம்பிக்க ,
“அத்தை , வந்து பேசுறேன் . இப்ப கொஞ்சம் அவசரமா போகணும் .” என்றபடி நந்தா வாயிலுக்கு விரைய , அவன் பின்னே வருணும் ஓடினான் .
வெளியே வந்த பின் “ ஹப்பா தப்பிச்சோம் டா …” நந்தா சொல்ல ,
“நீ தாலி கட்டுற வரை இவங்க கண்ணுல படாம இரு . வேன்ல உங்க அம்மாகிட்ட என்ன சண்டை தெரியுமா ? சமாளிக்கிறதுகுள்ள நாக்கு தள்ளிடுச்சு .” என்றான் வருண் .
அத்தை மிகவும் மோசமாகப் பேசி இருப்பார் என்று தெரியும் . தன்னால் தானே அம்மாவுக்கு இவ்வளவு கஷ்ட்டம் என நந்தாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது .
அவனைக் கவனித்த வருண் , “ நாம இப்ப கவலைப்பட்டுட்டு இருக்க நேரம் இல்லை . வேலையைப் பார்ப்போமா ?” என்றதும் , இருவரும் டீ குடித்து விட்டு , நகை கடைக்குச் சென்றனர் .
முன்பே தகவல் கொடுத்து இருந்ததால் … அந்தக் காலை நேரத்தில் நகை கடை திறந்து வைக்கபட்டு இருந்தது . தங்க சங்கிலியில் கோர்த்த தாலியும் , வெள்ளியில் மெட்டியும் வாங்கிக்கொண்டு , இருவரும் வெளியே வந்தனர் .
நகைக்கடைக்கு எதிரே இருந்த துணிக்கடைக்குச் சென்று , நந்தாவுக்குப் பட்டு வேஷ்ட்டியும் , ரெடிமேட் சட்டையும் வாங்கிக் கொண்டனர் .
நேரமாகி விட்டதால் அவர்கள் இருவரும் அரக்க பறக்க ஓடிவர , மற்றவர்கள் கிளம்பி தயாராக இருந்தனர் .
நந்தா சென்று உடை மாற்றி வந்ததும் , மற்றவர்கள் சென்று வேன்னில் ஏற , நந்தாவும் அவன் குடும்பமும் மட்டும் தனிக்காரில் சென்றனர் .
இவர்கள் கோவிலுக்குச் சென்று சேர்ந்த போதே , முஹுர்த்த நேரம் தொடங்கிவிட்டது . அன்பரசுவும் , பத்மாவும் வாயிலில் நின்று வந்தவர்களை வரவேற்றனர் .
“கயல்விழி எங்க அத்தை ?” நந்தா பத்மாவிடம் கேட்க , “ உள்ளே சாமி கும்பிட்டுகிட்டு இருக்கா .” என்றார் பத்மா .
அவள் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டாள் என்ற பிறகே , நந்தாவுக்கு நிம்மதியாக இருந்தது . அவன் தன் குடும்பத்தை அன்பரசுவுக்கும் , பத்மாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தான் .
“ பரவயில்லையே , இந்த நேரத்துக்குள்ள இவ்வளவு பேர் வந்துட்டாங்களே .” என இருவரும் வியந்து போய்ப் பார்த்தனர் .
இந்தப் பக்கமும் அப்படித்தான் . முக்கியமான உறவினர்களுக்குக் காலையில்தான் போன் செய்து அன்பரசு அழைத்திருந்தார் . அவர்களும் குடும்பத்துடன் வந்திருந்தனர் .
“என்னடா உன் மாமனார் டெரர் பீஸ்ன்னு பார்த்தா … இப்படிப் பக்தி பழமா இருக்கார் .” வருண் நந்தாவின் காதை கடிக்க , அவன் நக்கலாகச் சிரித்தான் .
கோவில் முன்புறம் இருந்த மண்டபத்தில் மலர்களால் மனமேடை அமைத்து இருந்தனர் . மல்லியும் கனகாம்பரமும் சேர்த்து அதோடு முல்லைப் பூவை தோரணமாகத் தொங்க விட்டு இருந்தனர் . பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது .
நந்தா வியந்து போய்ப் பார்ப்பதை கவனித்த பூசாரி , அவன் அருகில் வந்து , “ நல்லா இருக்கா ? நான்தான் இப்படி அலங்காரம் பண்ண சொன்னேன் .” என்றார் .
“எதோ பொண்ணு வீட்ல ஒத்துக்கலைன்னு சொன்னாங்க . இங்க பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே …” என ராதிகாவின் அம்மா ஆரம்பிக்க .
அதைக் கேட்ட நந்தா “ சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கலாம் .” எனப் பூசாரியிடம் சொல்ல , அவரும் புரிந்து கொண்டு சரி என்று சென்றார் .
“சாமி கும்பிட வாங்க .” என நந்தா சொல்லிவிட்டு கோவிலுக்குள் செல்ல , அவனோட அவன் வீட்டினரும் சென்றனர் .
எல்லோரையும் தள்ளிவிட்டு முன்னே வந்த ராதிகா , “ அத்தான் , ரொம்ப ஸ்மார்ட்டா ப்ளே பன்றோம்னு நினைப்பா ? எனக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ?” எனக் கேட்க ,
“உனக்கு நான் எதுக்குப் பதில் சொல்லணும் ?” என நந்தா அசராமல் பதில் கேள்வி கேட்டான் .
ராதிகா அவனை முறைக்க …. அவனும் பதிலுக்கு அவளை முறைத்தான் . ராதிகா பார்த்துக் கொண்டிருந்த போதே , நந்தாவின் பார்வை மாறியது .
ராதிகா திரும்பி பார்க்க , அங்கே கயல்விழி மணமகள் அலங்காரத்தில் கோவிலுக்குள் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள் . அவளோடு பாவடை தாவணியில் மாலாவும் , சீதாவும் நின்று கொண்டிருந்தனர் .
குங்கும நிற புடவைக்கு ஏற்ப … வெள்ளையும் சிகப்பும் கலந்த கற்கள் பதித்த நகைகளை அணிந்து இருந்தாள் . நெற்றியில் வைத்திருந்த சுட்டி கூடக் கல் வைத்ததுதான் .
பார்லரில் செய்த அலங்காரம் போல் இல்லாமல் … வீட்டிலேயே செய்த எளிமையான அலங்காரம் எனப் பார்த்ததும் தெரிந்தது . அதிலேயே பார்க்க ரதி போல் இருந்தாள் .
அவளின் குழந்தைத்தனம் மாறாத முகத்தைப் பார்த்த தாரணி , அருகில் இருந்த பரணியிடம் “ டேய் ! அண்ணி நம்மை விடச் சின்னவங்களா இருப்பாங்க போலிருக்கு டா …” என்றதற்கு , அவனும் ஆ மோதிப்பாகத் தலையசைத்தான் .
நந்தா சென்று கயல்விழி அருகில் நிற்கவும் , அவள் கண்களைத் திறந்தாள் . அவளது பெரிய விழிகள் கலங்கி இருக்க … அதைப் பார்த்த நந்தா , அவளைக் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க … கயல்விழி உடனே விழிகளைச் சிமிட்டி சமாளித்தாள் .
சாமி கும்பிடுவது போல் அவளுக்குச் சிறிது நேரம் கொடுத்த நந்தா , பிறகே அவளைத் தன் வீட்டினருக்கு அறிமுகம் செய்தான் .
அவள் எல்லோரையும் பார்த்து இருகரம் கூப்பி வணங்கினாள். அமைதியான பெண் எனப் பார்த்ததும் தெரிந்தது . நந்தாவின் பார்வையில் இருந்து அவனுக்கு அவளை மிகவும் பிடித்திருகிறது என்றும் தெரிந்தது .
“முஹுர்ததுக்கு நேரம் ஆகுது .” பூசாரி குரல் கொடுக்க … மணமேடைக்கு இருபுறமும் ரத்தின கம்பளம் விரித்து இருக்க … அதில் சென்று உறவினர்கள் அமர்ந்தனர் .
“இந்த மாலையைப் போட்டு நீதான் கயலை மணமேடைக்குக் கூடிட்டு வரணும் .” எனத் தாரணியிடம் சொல்லிவிட்டுப் பத்மா சென்றார் .
“மாப்பிள்ளை சார் வாங்க .” பூசாரி அழைக்க , நந்தா சென்றான் .
நந்தாவின் தாய்மாமா அவனுக்கு மாலை அணிவிக்க , அவன் மணமேடையில் அமர்ந்தான் .
மேடையின் இருபுறமும் இரண்டு பெரிய குத்து விளக்குகள் இருந்தது . நடுவில் தேங்காய் பழம் வைத்திருந்த தட்டில் திருமாங்கல்யம் இருந்தது .
மணப்பெண்ணை அழைத்து வரும்படி குரல் கொடுக்க … தாரணி கயல்விழியின் கைபிடித்து அழைத்து வந்தாள் . அவர்களது இருபுறமும் மாலாவும் , சீதாவும் வந்தனர் .
கயல்விழி குனிந்த தலை நிமிராமல் , பதுமை போல் நடந்து வந்து நந்தாவின் அருகில் அமர்ந்தாள் . அவன் ஒருமுறை அவளைத் திரும்பி பார்த்துக் கொண்டான் .
ரொம்ப நேரம் எல்லாம் ஆகவே இல்லை . பூசாரி தாலி எடுத்து கொடுக்க … அதைக் கயல்விழியின் சங்கு கழுத்தில் அணிந்துவிட்டு . அவர் கொடுத்த குங்குமத்தையும் , அவள் நெற்றியில் வைத்து இருந்தான் . பிறகு இருவரும் மாலை மாற்றினர் .
வருண் நந்தாவின் கழுத்தில் இருந்த சின்ன மாலையைக் கழட்டி அவனிடம் கொடுக்க … அதையே தாரணி கயல்விழிக்கு செய்தாள் .
கயல்விழி அப்போதும் நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை . முதலில் நந்தா மாலை போட … அடுத்து கயல்விழி கையை உயர்த்த .. அவன் வேண்டுமென்றே குனியாமல் இருந்தான் .
அவன் குனிந்தால் தானே மாலை அணிவிக்க முடியும் . அவள் பார்வையை உயர்த்தித் தன் கணவனைப் பார்க்க … அவன் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் . அவன் விளையாட்டு புரிந்து மற்றவர்கள் சிரித்தனர் .
இருவரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொண்டனர் . அதன்பிறகு நந்தா அவளுக்கு மெட்டி அணிவித்து விட்டான் . அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது .
மீண்டும் தம்பதிகள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வந்தனர் . அப்போதே உணவு பந்தி ஆரம்பிக்க … உறவினர்கள் சாப்பிட சென்றனர் .
கீதாவின் பெற்றோர் அப்போதுதான் வந்தனர் . அவர்களைப் பார்த்ததும் அதுவரை வெறுப்போடு எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கீதா , அவர்களை நோக்கி விரைந்து சென்றாள் .
“என்ன அப்பா இவ்வளவு லேட்டா வர்றீங்க ? விக்னேஷ் உங்ககிட்ட வந்து சொன்னான்னா இல்லையா ?”
“இல்லையே மா … காலையில உங்க மாமனார் போன் செஞ்சு சொன்னதும்தான் தெரியும் .”
“பார்த்தீங்களாப்பா நம்ம தம்பிக்கு செய்றேன்னு சொல்லிட்டு வெளியே செஞ்சிட்டாங்க . நீங்க வந்து என்னன்னு கேளுங்க .”
“உன் தம்பிக்கே இஷ்ட்டம் இல்லை . பிறகு அவரைக் கேட்டு என்னமா ஆகப்போகுது . அதுதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே …”
“அப்ப அப்படியே விட்ருவீங்களா ?”
“ கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா தடுத்து இருக்கலாம் . அப்படி ஆகிட கூடாதுன்னு தானேமா லேட்டா தகவல் சொல்றாங்க .”
கீதாவுக்கு மனம் சமாதானம் ஆகவே இல்லை . சிலர் இப்படித்தான் எதாவது பிரச்சனை செய்து கொண்டே இருக்க வேண்டும் .
காலையிலேயும் சாப்பிடவில்லை என்று நந்தாவும் வருணும் முதல் பந்தியிலேயே சாப்பிட அமர்ந்து இருந்தனர் . அவர்களோடு சேர்த்து அவர்கள் விட்டினரையும் , நண்பர்களையும் சாப்பிட வைத்தனர் .
சாப்பிட்டு முடித்து வந்தவர்கள் , அவர்கள் உறவினர்களை வேன்னில் ஏற்றி , உடனே அங்கிருந்து கிளப்பியும் விட்டனர் . பரணி அவர்களோடு சென்றான் .
செல்லும் வழியில் ராமேஸ்வரம் , திருச்செந்தூர் எல்லாம் சுற்றி காட்டி அழைத்துச் செல்லும்படி , அவனிடம் பணம் கொடுத்து அனுப்ப … உறவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி .
ராதிகாவுக்கும் அவள் அம்மாவுக்கும் கிளம்பி செல்ல துளியும் விருப்பம் இல்லை . ஆனால் அவர்களை இரு என்று யாரும் சொல்லாத போது , எப்படி இருப்பது ?
“ ஏன்டாப்பா… நீ வரணும்னா நாங்க வரணும் … போன்னு சொன்னா போயிடனுமா ? இவ்வளவுதான் உன் கல்யாண விருந்தா ?” என அவர் கேட்க ,
“நான் இன்னைக்கே வேலைக்குப் போகணும் அத்தை . மெட்ராஸ்ல எங்க கல்யாண ரிஷப்ஷன் இருக்கும் . அப்ப உங்களுக்குப் பெரிய விருந்தே கொடுத்திடுறேன் .” என நந்தா சமாளித்து அவரை அனுப்பி வைத்தான் .
ராதிகா அவனிடம் சொல்லிக்கொள்ளக் கூட இல்லை . முகத்தை உர்ரென்றே வைத்துக்கொண்டு இருந்தாள் .
நந்தாவும் அவளைக் கண்டுகொள்ளவில்லை . அவன் என்ன இவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியா இருந்தான் .
அவளாக மனதிற்குள் ஆசையை வளர்த்துக்கொண்டாள் , அதற்குத் தான் பொறுப்பு இல்லை என நினைத்தான் .
“அம்மா , நாமும் கிளம்பலாம் , கயல் எங்கே ?” நந்தா கேட்க , அப்போது அன்பரசுவும் பத்மாவும் ஒரு பெரிய தாம்பலத்தோடு வந்தனர் . அதில் நிறைய நகைகளும் , ரொக்கமாக நிறையப் பணமும் இருந்தது .
தாங்கள் பெண்ணுக்கு செய்யும் சீர் என்று சொல்லி , அதைக் குழலியிடம் அவர்கள் கொடுக்க .. அவர் நந்தாவை பார்த்தார் .
“உங்க பெண்ணை நான் அவளுக்காக மட்டுமேதான் கல்யாணம் பண்ணேன் . நீங்க எனக்கு இவ்வளவு பணமும் நகையும் தருவீங்கன்னு இல்லை .”
“எனக்கு அவ மட்டுமே போதும். அவ போட்டிருக்க நகைகளைக் கூடக் கழட்ட சொல்லிடுவேன் , ஆனா உங்க மனசு கஷ்ட்டப்படும்னு பார்கிறேன் .”
நந்தா பேசப் பேச அவனைத் தவிப்பாகப் பார்த்த பத்மா , எதோ சொல்ல வர … அவரைக் கைகாட்டி அன்பரசு தடுத்தார் .
“உங்க இஷ்ட்டம் .” என்றவர் திரும்பி சென்றார் . இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கீதாவுக்கு மிகவும் சந்தோஷம் .
அன்பரசுவுக்குப் புரிந்து விட்டது . தன் மகளைத் திருமணம் செய்ததால் மட்டும் அவன் மாறப்போவது இல்லை . அவனுக்கு அவர் என்றுமே எதிரிதான் .
error: Content is protected !!