பொன்னியின் செல்வன் – பாகம் 5 – அத்தியாயம் 30 தெய்வம் ஆயினாள்!
Post Views:189
பூங்குழலி எவ்வளவு விரைவாக ஓடக் கூடியவளானாலும், மேலிருந்த எறியப்பட்ட வேலுடன் போட்டியிட முடியாதல்லவா? அவள் மந்தாகினி அத்தையின் அருகில் பாய்ந்து செல்வதற்குள் வேல் அத்தையின் விலாவில் பாய்ந்துவிட்டது. ‘வீல்’ என்று மற்றொரு முறை பயங்கரமாக ஓலமிட்டு விட்டு மந்தாகினி கீழே விழுந்தாள்.
அதே சமயத்தில் அந்த அறையிலிருந்த அத்தனை பேருடைய குரல்களிலிருந்தும் பரிதாப ஒலிகள் கிளம்பின.
பூங்குழலியைப் போலவே மற்றவர்களும் தரையில் விழுந்த மாதரசியை நோக்கி ஓடிவர ஆயத்தமானார்கள்.
அச்சமயம் மேல் மாடத்திலிருந்து தடதடவென்று சத்தம் கேட்டது. சில மண் பாண்டங்கள் கீழ் நோக்கிப் பல திசைகளிலும் எறியப்பட்டன.
அவற்றில் ஒன்று சக்கரவர்த்தியின் அருகில் சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்த தீபத்தின் பேரில் விழுந்தது; தீபம் அணைந்தது. அறையில் உடனே இருள் சுழ்ந்தது.
பிறகு சிறிது நேரம் அந்த அந்தப்புர அறையிலும் அதைச் சுற்றியுள்ள நீண்ட தாழ்வாரங்களிலும் ஒரே குழப்பமாயிருந்தது.
திடுதிடுவென்று மனிதர்கள் அங்குமிங்கும் வேகமாக ஓடும் காலடிச் சத்தங்கள் கேட்டன.
“விளக்கு! விளக்கு!” என்று சின்னப் பழுவேட்டரையர் கர்ஜனைக் குரல் அலறியது.
“ஆகா! ஐயோ!” என்று ஒரு பெண் குரல் அலறும் சத்தம் கேட்டது. அது மகாராணியின் குரல் போலிருக்கவே எல்லாருடைய நெஞ்சங்களும் திடுக்கிட்டு, உடல்கள் பதறின.
இத்தனை குழப்பத்துக் கிடையே பூங்குழலி அவளுடைய அத்தை மந்தாகினி விழுந்த இடத்தைக் குறி வைத்து ஓடி அடைந்தாள். அத்தையை அவளுக்கு முன் யாரோ தூக்கி மடியின் மேல் போட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
இதயத்தைப் பிளக்கும்படியான சோகத் தொனியில் விம்மும் குரலும், அழுகைக் குரலும் சேர்ந்து அவள் காதில் விழுந்தன.
வாசற்படிக் கருகில் “யாரடா அவன்? ஓடாதே! நில்!” என்று சின்னப் பழுவேட்டரையர் கூச்சலிட்டார்.
அச்சமயம் இரண்டு தாதிப் பெண்கள் தீபங்களுடன் வந்து அந்த அறையில் பிரவேசித்தார்கள்.
தீப வெளிச்சத்தில் தோன்றிய காட்சி யாருமே எதிர்பார்க்க முடியாத அதிசயக் காட்சியாயிருந்தது.
மூன்று வருஷங்களாகக் காலை ஊன்றி நடந்தறியாமலிருந்த சக்கரவர்த்தி, – கால்களின் சக்தியை அடியோடு இழந்து விட்டிருந்த சுந்தரசோழ மன்னன், – தாம் படுத்திருந்த கட்டிலிலிருந்து இறங்கி நடந்து வந்து, மந்தாகினியின் அருகில் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் இளவரசரும் இருந்தார்.
மந்தாகினியின் விலாவில் ஒரு பக்கத்தில் பாய்ந்து இன்னொரு பக்கம் வெளி வந்திருந்த வேலின் முனையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
சக்கரவர்த்தி படுத்திருந்த கட்டிலின் அருகில் மலையமான் மகள் வானமாதேவி காணப்பட்டாள்.
அவளுக்கு அருகில் சக்கரவர்த்தி தலை வைத்துச் சாய்ந்திருந்த தலையணையில் ஒரு கூரிய கத்தி செருகப்பட்டிருந்தது.
விளக்கு வந்ததும் மகாராணி கட்டிலை வெறிக்கப் பார்த்துவிட்டு, கரை காணாத அதிசயம் ததும்பிய கண்களினால் சக்கரவர்த்தி கீழே உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். அப்போது பொன்னியின் செல்வர் மந்தாகினியின் தலையை மெள்ளத் தூக்கிச் சக்கரவர்த்தியின் மடியில் வைத்தார்.
இளவரசர் அருள்மொழிவர்மரின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
சக்கரவர்த்தியோ விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார்.
இவ்வளவையும் பூங்குழலி ஒரு கணநேரப் பார்வையில் பார்த்தாள். மறுகணத்திலேயே அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் ஒருவாறு ஊகித்துத் தெரிந்து கொண்டாள்.
மேலேயிருந்து வேலை எறிந்தவன், அதை ஊமை ராணி தடைசெய்து விட்டதைக் கவனித்திருக்கிறான்.
உடனே மேலேயிருந்த தட்டு முட்டுச் சாமான்களை எடுத்தெறிந்து விளக்கை அணைத்து விட்டிருக்கிறான்.
அப்போது ஏற்பட்ட இருட்டில் கீழே குதித்து இறங்கிக் கட்டிலில் சக்கரவர்த்தி படுத்திருப்பதாக எண்ணிக் கத்தியினால் குத்திவிட்டு ஓடியிருக்கிறான்.
சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று அறிந்து கட்டிலின் அருகில் ஓடிய மகாராணியைத் தள்ளி விட்டுப் போயிருக்கிறான். அப்போதுதான் மகாராணி “ஐயோ” என்று கதறியிருக்கிறாள்.
பின்னர் அச்சதிகாரன் வாசற்படியின் பக்கம் ஓடி அங்கே அச்சமயம் பிரவேசித்துக் கொண்டிருந்த சின்னப் பழுவேட்டரையரையும் தள்ளி விட்டு ஓடிப்போயிருக்க வேண்டும்.
இவ்வளவையும் பூங்குழலி ஊகித்துத் தெரிந்து கொண்டாள். இந்தப் பாதகச் செயலைச் செய்து தப்பி ஓடியவனைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனத்தில் ஒரு பக்கத்தில் உதயமாயிற்று. அதைக் காட்டிலும் தன் அத்தையின் இறுதி நெருங்கி விட்டது என்ற நினைவு அவள் உள்ளத்தில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கியது. ஆகையால் மந்தாகினி சக்கரவர்த்தியின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதையும் பொருட்படுத்தாமல் அவள் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து “அத்தை! அத்தை!” என்று கதறினான்.
“ஐயோ! நீ சொன்னது உண்மையாகிவிட்டதே! பாவி நான் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போனேனே!” என்று அழுது புலம்பினாள்.
ஆனால் மந்தாகினியோ அவள் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவளுடைய கண்கள் சக்கரவர்த்தியின் திருமுகத்தை ஆவலுடன் அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தன.
ஏன், அவளுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் உகுத்த இளவரசர் மீதே அவளுடைய கவனம் செல்லவில்லை. பூங்குழலியைக் கவனிப்பது எப்படி?
பூங்குழலி மேலும் புலம்பத் தொடங்கியபோது இளவரசர் தமது விம்மலை அடக்கிக் கொண்டு, “சமுத்திர குமாரி! இது என்ன? உன்னை நீ மறந்துவிட்டாயா? நீ இருக்குமிடத்தை மறந்து விட்டாயா?” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.
பூங்குழலியும் சிறிது வெட்க மடைந்தவளாய்த் துயரத்தை அடக்கிக் கொண்டு எழுந்து நின்றாள்.
“அரசே! எனக்கு என் அத்தையைத் தவிர இவ்வுலகில் யாரும் கதி இல்லை!” என்று விம்மினாள்.
இளவரசர் தமது கண்ணில் பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே, “பூங்குழலி! அவள் உனக்கு அத்தை! ஆனால் எனக்கு என் பெற்ற தாயைக் காட்டிலும் பதின் மடங்கு மேலான தாய்! என்னை அழைத்து வரச் சொல்லி உன்னை அனுப்பி வைத்தாள்! ஆயினும் என் முகத்தை அவள் ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. இதன் காரணத்தை அறிந்தாயா? முப்பது வருஷங்களுக்கு முன்னால் பிரிந்த என் தந்தையும் தாயும் இன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் தடையாக நிற்பதற்கு நாம் யார்?…” என்று கூறிவிட்டு, மகாராணி உள்பட எல்லாரையும் ஒரு தடவை இளவரசர் கூர்ந்து பார்த்தார்.
மீண்டும் பூங்குழலியை நோக்கி, “பெண்ணே! முன்னேயும் சில முறை எனக்கு நீ உதவி செய்திருக்கிறாய்! அந்த உதவியெல்லாம் அவ்வளவு முக்கியமானவையல்ல. இன்றைக்கு, என் தாயும் தந்தையும் ஒன்று சேரும் காட்சியைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படி செய்தாய்! இதை நான் என்றும் மறக்கமாட்டேன்! சமுத்திர குமாரி! உன் அத்தை இன்று எவ்வளவு மகத்தான புண்ணியத்தைக் கட்டிக் கொண்டாள் என்பதை எண்ணிப் பார்! சதிகாரனுடைய கொலை வேல் என் தந்தையின் மேல் படாமல் காப்பாற்றினாள்! அந்த வேலைத் தன் உடம்பில் பாயும்படியும் செய்து கொண்டாள்! தன் உயிரைக் கொடுத்துச் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினாள்! ஒருமுறையல்ல. இருமுறை அவரைக் காப்பாற்றினாள்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததைக் கண்டதும் மூன்று வருஷமாகச் சக்தி இழந்திருந்த என் தந்தையின் கால்களில் மீண்டும் சக்தி வந்தது. அவர் கட்டிலிருந்து எழுந்து வந்தார். அதனால் மறுபடியும் அவர் உயிர் தப்பியது. சதிகாரன் அவனுடைய குறி தப்பிவிட்டதாக எண்ணி விளக்கை அணைத்து விட்டுக் கீழே குதித்து வந்து மீண்டும் அவனுடைய பாதகத் தொழிலைச் செய்யப் பார்த்தான். ஆனால் சக்கரவர்த்தி எழுந்துவந்துவிட்டதால் அவனுடைய நோக்கம் நிறைவேறவில்லை. அதோ, என்னைப் பெற்ற தாய், மலையமான் குமாரி, கரைகாணா வியப்புடன் நிற்பதைப் பார்! உன் அத்தையின் மீது வேல் பாய்ந்ததை என்னைப் பெற்ற தாய் பார்த்தாள். மறுபடியும் அந்தக் கொலைகாரன் தன் சதித்தொழிலைச் செய்யலாம் என்று எண்ண என்ன சொல்லியிருக்கும்? தஞ்சைக் கோட்டைத் தளபதியான பழுவேட்டரையரையும் அந்தப் பாதகச் செயலுக்கு உடந்தை என்றுதான் ஊரார், உலகத்தார் சொல்லுவார்கள். கோட்டை வாசலில் கொடும்பாளூர் வேளார் வேறு காத்திருக்கிறார். பழுவூர்க் குலத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கு அவருக்கு வேண்டிய காரணம் கிடைத்திருக்கும். அவ்வளவு ஏன்? இன்றைக்கு நான் உன் உதவியினால் கோட்டைக்குள் வராதிருந்தால், கோட்டைத் தளபதியின் மேல் எனக்குக் கூடத்தான் சந்தேகம் உதித்திருக்கும். ஆகையால் சின்னப் பழுவேட்டரையர் மற்ற எல்லோரையும்விட உன்னிடம் அதிக நன்றி செலுத்த வேண்டும். அவரிடம் நீ என்ன பரிசு கேட்டாலும் கொடுப்பார்.அவருடைய சொத்திலே பாதியைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்!”
இவ்வாறு இளவரசர் கூறியபோது சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கடமையை அவர் சரியாக நிறைவேற்றில்லையென்பதை அவருக்கு ஒரு உணர்த்த விரும்பியே மேற்கண்டவாறு பேசினார். அதைச் சின்னப் பழுவேட்டரையர் அறிந்து கொண்டார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய வேதனை நன்கு எடுத்துக் காட்டியது. அவருடைய முகத்தில் சாதாரணமாகக் குடி கொண்டிருந்த கம்பீரத் தோற்றம் போய்விட்டது. யாரையும் இலட்சியம் செய்யாத, எதற்கும் அஞ்சாத, வீரப் பெருமிதத்தின் அறிகுறி இப்போது அந்த முகத்தில் இல்லவே இல்லை.
போர்க்களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்த வீரன் ஒருவன், பலர் ஏசும்படியாக இந்த உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததில் என்ன பயன் என்று வெட்கி மாழ்கும் பாவனை அவருடைய முகத்தில் இப்போது காணப்பட்டது.
இளவரசர் முதலில் கூறியதையெல்லாம் கேட்டு உள்ளமும் உடலும் உருகி நெகிழ்ந்து கொண்டிருந்த பூங்குழலி அவர் பரிசைப் பற்றிச் சொன்னதும் பழைய ஆக்ரோஷங்கொண்ட சமுத்திர குமாரியாகி விட்டாள்.
“இளவரசே! எனக்கு யாருடைய நன்றியும் தேவையில்லை; பரிசும் வேண்டியதில்லை. எனக்குத் தஞ்சம் அளிக்க சமுத்திர ராஜா இருக்கிறார். என் படகும் கால்வாய் முனையில் பத்திரமாயிருக்கிறது. இதோ நான் புறப்படுகிறேன். ஒரு வேளை என் அத்தை உயிர் பிழைத்தால்? … இல்லை, அது வீண் ஆசை! காலையிலே என் அத்தை சொல்லிவிட்டாள். வரப்போவதை உணர்ந்துதான் சொன்னாள். இனி அவள் பிழைக்கப் போவதில்லை. எனக்கு இங்கே வேலையும் இல்லை என்றாவது ஒருநாள் தாங்களும் கொடும்பாளூர் இளவரசியும் கோடிக்கரைக்கு வந்தால்…” என்று கூறிப் பூங்குழலி வானதி இருந்த இடத்தை நோக்கினாள். அந்தப் பெண் அகல விரிந்த கண்களினால் தன்னையும் இளவரசையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். “சீச்சீ! இது என்ன ஆசை? நான் போகிறேன்” என்று கூறிவிட்டு, வாசற்படியை நோக்கி விரைந்து நடந்தாள்.
இதுவரையில் திக்பிரமை கொண்டவளைப் போல் நின்றிருந்த வானதிக்கு அப்போதுதான் சிறிது தன்னுணர்வு வந்தது. அவள் பூங்குழலியின் அருகில் வந்து, “என் அருமைத் தோழி நீ எங்கே போகிறாய்? நானும் உன்னைப்போல் அநாதைத்தான்!…” என்று மேலும் பேசுவதற்குள், பூங்குழலி குறுக்கிட்டாள்: “தேவி நான் தங்கள் அருமைத் தோழியும் அல்ல. தாங்கள் என்னைப்போல் அநாதையும் அல்ல; சீக்கிரத்தில் பழையாறை இளையபிராட்டி வந்து விடுவார்!” என்றாள்.
வானதிக்கு அப்போதுதான் உண்மையில் இளைய பிராட்டியின் நினைவு வந்தது. “ஐயோ! அக்காவுக்கு இங்கு நடந்தெல்லாம் ஒன்றும் தெரியாதே! செய்தி சொல்லி அனுப்ப வேண்டுமே?” என்றாள்.
“அதற்கும் ஒரு கவலையா? கோட்டை வாசலில் தங்கள் பெரிய தகப்பனார் இருக்கிறாரே? அவரிடம் சொன்னால் செய்தி அனுப்புகிறார்” என்று கூறிவிட்டுப் பூங்குழலி வழிமறிப்பவள்போல் நின்ற வானதியைக் கையினால் சிறிது நகர்த்தி விட்டு மேலே சென்றாள்.
வாசற்படிக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையர் மறுபடியும் அவளை வழிமறித்து நிறுத்தினார்.
“பெண்ணே! பொன்னியின் செல்வர் கூறியதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூறியது முற்றும் உண்மை. பழுவூர்க் குலத்துக்கு அழியாத அபகீர்த்தி உண்டாகாமல் நீ காப்பாற்றினாய், உனக்கு நான் அளவில்லாத நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். நீ என்ன பரிசு வேண்டுமென்று கேட்டாலும் தருகிறேன்” என்றார்.
பூங்குழலி துயரப் புன்னகையுடன், “தளபதி! இங்குள்ளவர்களில் சிலருக்குச் சக்கரவர்த்தி உயிர் பிழைத்ததில் சந்தோஷம். சிலருக்கு அவர் நடமாடும் சக்தி பெற்றதில் சந்தோஷம். இன்னும் சிலருக்குப் பழுவேட்டரையர் குலம் அபகீர்த்திக்கு உள்ளாகாததில் மகிழ்ச்சி. என் அத்தைக்கு நேர்ந்த துர்மரணத்தைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. நானாவது அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமா! என் அத்தையைக் கொன்றவன் எங்கே போனான் என்று தேடிக் கண்டுபிடிக்கப் பார்க்கிறேன். தயவு செய்து எனக்கு வழியை விடுங்கள்!” என்றாள்.
பூங்குழலியின் இந்த வார்த்தைகள் கோட்டைத் தளபதி காலாந்தக கண்டரைத் தூக்கி வாரிப் போட்டன.
“பெண்ணே! உன்னிடம் நான் தோற்றேன். கொலைகாரனை விட்டுவிட்டுச் சும்மா நின்று கொண்டிருக்கிறேன். அவனைக் கண்டுபிடிக்காவிட்டால், சக்கரவர்த்தி பிழைத்ததினால் மட்டும் என் பழி தீர்ந்துவிடாது. உன் வார்த்தைகளில் நான் அவநம்பிக்கை கொண்டதே தவறு! கொலைகாரன் எங்கே போயிருப்பான்? என்னைத் தள்ளிவிட்டு ஓடினான். ஆம்! ஆம்! சுரங்க வழிக்குத்தான் போயிருப்பான். வா! எனக்கு உதவியாக வா! வேறு யாரையும் அழைத்துப் போக விருப்பம் இல்லை! அவன் மட்டும் என்னிடம் அகப்படட்டும்! என்ன செய்கிறேன், பார்!”
இவ்விதம் சொல்லிக்கொண்டே சின்னப் பழுவேட்டரையர் தம் இரும்புக் கையினால் பூங்குழலியையும் பிடித்து இழுத்துக் கொண்டு சிற்ப மண்டபத்தை நோக்கி விரைந்து சென்றார்.
அந்த அறையில் இருந்த மற்ற எல்லாரும் அப்படி அப்படியே நின்றார்கள். இளவரசர் விருப்பதை அறிந்து கொண்டு சக்கரவர்த்தியின் அருகில் போகாமல் தூரத்தில் ஒதுங்கி நின்றார்கள். எல்லாருடைய கண்கள் மட்டும் சக்கரவர்த்தியின் பேரிலும், அவர் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த மாதரசியி எண்ணிக்கொண்டேன். அப்போது ஏற்பட்ட வெறுப்பு உன்னை நேரில் பார்த்தபோதும் தீரவில்லை. உண்மையில், நீ எங்கள் குலதெய்வமாக வந்தாய்! எனக்கும் என் மக்களுக்கும் தீங்கு நேராமல் தடுப்பதற்காக வந்தாய்! அதையெல்லாம் நான் தெரிந்துகொள்ளவில்லை. என் மகள் குந்தவை எடுத்துக் கூறிய பிறகுதான் தெரிந்தது. ஐயோ! எப்பேர்ப்பட்ட தவறு செய்தேன்! அதற்காகவெல்லாம் என்னை மன்னித்துவிடு. உன்னிடம் எனக்குள்ள அன்பை இனி எப்படிக் காட்டுவேன்? அதற்கு வழியில்லாமல் செய்து விட்டாயே! என் குமாரர்களுக்குப் பட்டம் கட்ட வேண்டாமென்று சொன்னாய். அதன் நியாயம் எனக்கே தெரிந்திருக்கிறது. ஏன் தலையை அசைக்கிறாய்? என் நன்மைக்காகவும், என் குலத்தின் நன்மைக்காகவுமே சொன்னாய்! அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் இங்குள்ளவர்கள் ஏதேதோ சொல்லி என்னைப் பைத்தியமாக அடிக்கப் பார்க்கிறார்கள். உனக்குக் குழந்தை பிறந்ததாகச் சொல்கிறார்கள்.அது உண்மையானால் சொல்லிவிடு! உன் மகன் இருந்தால் சொல்லிவிடு. அவனுக்கு என்னாலியன்றதைச் செய்து உனக்குச் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் தேடுகிறேன்…”
இவ்விதம் சுந்தரசோழர் கூறியபோது மந்தாகினி பரக்கப் பரக்க அவரைப் பார்த்துவிட்டுப் பிறகு சுற்றுமுற்றும் பார்த்தாள். வாசற்படியின் அருகில் நின்ற பொன்னியின் செல்வர் மீது அவளுடைய பார்வை தங்கி நின்றது.
உடனே இளவரசர் தந்தையும் தாயும் இருந்த இடத்தை நெருங்கி வந்தார். தாயின் அருகில் உட்கார்ந்தார்.
மந்தாகினி இளவரசரைத் தன் கையினால் தொட்டுக் கொண்டு சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்தாள். “இவன் தான் என் புதல்வன்!” என்னும் பொருள் அந்தப் பார்வையிலிருந்து மிகத் தெளிவாக வெளியாயிற்று. இவ்வாறு இரண்டு மூன்று தடவை மந்தாகினி சக்கரவர்த்தியையும் பொன்னியின் செல்வரையும் மாறி மாறிப் பார்த்தாள். பின்னர் கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நிமிர்ந்திருந்த அவளுடைய தலை, – சக்கரவர்த்தியின் மடியில், – நன்றாகச் சாய்ந்தது.
மந்தாகினியின் உயிர் அவளுடைய உடலை விட்டுப் பிரிந்தது.
சுந்தர சோழ சக்கரவர்த்தி விம்மி அழுததை இன்றுவரை யாரும் பார்த்ததுமில்லை; கேட்டதுமில்லை.
இன்றைக்கு அவர் ‘ஓ’ வென்று கதறி அழுததைப் பார்த்ததும் கேட்டும் எல்லாரும் திகைத்துப் போனார்கள்.
இளவரசர் அருள்மொழிவர்மர் மட்டுமே மனத்தெளிவுடன் இருந்தார்.
அவர் சக்கரவர்த்தியைப் பார்த்துக் கூறினார்:- “தந்தையே! என் அன்னையின் மரணத்துக்காகத் தாங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர் மரணமடையவேயில்லை. தெய்வமாக அல்லவோ மாறியிருக்கிறார்? என்றென்றைக்கும் நம் சோழ வம்சத்துக்கு அவர் குல தெய்வமாக விளங்கி வருவார்!” என்றார்.
ஆயினும், சுந்தர சோழர் விம்மி அழுவது நின்ற பாடில்லை. மந்தாகினியின் மரணத்துக்காகத்தான் அழுதாரா? அல்லது அதே சமயத்தில் வெகு தூரத்தில் நடந்த இன்னொரு துயர சம்பவத்தின் அதிர்ச்சி அவர் உள்ளத்தில் தோன்றியதனால் அழுதாரா என்று யார் சொல்ல முடியும்?
இளவரசர் அருள்மொழிவர்மர் கூறிய தேறுதல் மொழி மட்டும் உண்மையாயிற்று. பொன்னியின் செல்வர் பிற்காலத்தில் இராஜராஜ சோழர் என்ற பெயருடன் சிங்காதனம் ஏறியபோது ‘ஈழத்து ராணி’ என்று அவர் அழைத்த மந்தாகினி தேவிக்காத் தஞ்சையில் ஒரு கோயில் எடுப்பித்தார். அது சில காலம் ‘சிங்கள நாச்சியார் கோவில்’ என்ற பெயருடன் பிரபலமாக விளங்கி வந்தது. நாளடைவில் அதன் பெயர் திரிந்து ‘சிங்காச்சியார் கோவில்’ என்று ஆயிற்று.இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் ‘சிங்காச்சியார் கோவில்’ என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சை செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.