Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம் அத்தியாயம் 7

பொழியும் மேகம்!

அத்தியாயம் 7

      தம்பதிகள் திரும்ப வீட்டுக்கு வரும் போது முகத்தை தூக்கி வைத்து கொண்டு தான் வந்தார்கள். பொதுவாக நர்மதா பல நேரங்களில் விட்டு கொடுத்து விடுவாள்.

   போடா… உன் காசு, உன் பாடு என்று… ஆனால், தற்போது கொஞ்சம் உறுத்த தொடங்கியது. அதற்கு காரணம் உண்டு, அது நிரஞ்சன் அண்ணன் முகுந்தன் தான். அவனும் கணி பொறியியல் என்ஜினீயர் தான். மனைவி வித்யா, ஒரு வயது மகன் துருவ் உடன் துபாயில் இருக்கிறான்.



Advertisement

        பொதுவாக இங்கு வர மாட்டார்கள். அப்படி வந்தாலும் இங்கு ரெண்டு நாள், திவ்யா வீடு, சுற்றி பார்க்க என்று வீட்டில் தங்குவது குறைவு தான். வித்யா, நர்மதா இருவரும் நல்ல ஒற்றுமை என்றும் சொல்ல முடியாது, அதற்காக ஒத்து போகாது என்று சொல்ல முடியாது. அவரவர் எல்லையில் நின்று கொள்வதால் சச்சரவு குறைவு. அத்தோடு ஒரே வீட்டில் இல்லாததால் போட்டி, மன சடவு என்று எதுவும் கிடையாது.

     அவரவர் வழியில் அண்ணன், தம்பி இரு குடும்பமும் உள்ளது. ஏதேனும் நல்ல காரியம், விசேஷம் என்றால் மட்டும் கூடி கொள்வார்கள். நர்மதாவும் இதுவரை அவளுக்கான எல்லையில் நின்று தான் கணவன் அண்ணன் வீட்டாரோடு பழகி கொண்டு இருக்கிறாள்.

   தற்போதைய சங்கடம் என்னவெனில் முகுந்தன் சென்னையில் நான்கு மாடி கொண்ட தனி வீடு கட்டுகிறான். அதுவும் இவர்கள் வீட்டுக்கு பின்னால் தான். தினமும் பள்ளி சென்று வரும் வழியில் நர்மதா பார்வை அதை தொட்டு வரும்…

Advertisement

        சொந்த வீடு அதுவும் நான்கு மாடியில் எனும் போது அவனின் வெற்றியை காட்டியது. அதே அளவு வேலை, சம்பாத்தியம் கொண்ட நிரஞ்சன் இந்த மாதிரி முன்னேற்றம் என்று எதற்கும் முன் வர வில்லை. முகுந்தனை விட நிரஞ்சன் ஒரு படி அதிகம் சம்பாதிக்கிறான். அவன் மனைவி நார்மதாவும் வேலைக்கு செல்கிறாள். ஆனாலும், அவர்களுக்கு என்று தனிப்பட்ட சொத்து என்று எதுவும் வாங்கி கொள்ள வில்லை.

Advertisement

   ஒரு இடம் வாங்கி இருக்கிறார்கள். அவர்கள் வீட்டை விட்டு சற்று தள்ளி… அதுவும் நர்மதா திருமணம் ஆன புதிதில்… நர்மதா அப்பா வற்புறுத்தி, இவளின் நகைகளை வைத்து அட்வான்ஸ் கொடுக்க, வேற வழி இல்லாமல் முகத்தை தூக்கி கொண்டு ஒரு கௌரவ பிரச்சனையாக எண்ணி தான் அந்த இடத்தை முடித்தான். இத்தனை வருடங்களில் அவர்களின் தனிப்பட்ட சொத்து என்ற உள்ளது அந்த இடம் மட்டும் தான்.

      முகுந்தன் வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்தே நர்மதா மனதில் ஒரு நெருடல்… தாங்களும் தம் மக்களுக்கு ஏதேனும் சேர்த்து வைக்க வேண்டும் என்று உணர்த்தி கொண்டே இருந்தது. நல்ல வருமானம் இருக்கும் போதே சேர்த்து வைத்து கொள்வது நல்லது அல்லவா… அதுவும் இரு பெண் பிள்ளைகள் எனும் போது இன்னும் அக்கறை தேவை தான்.

     கணவனின் அண்ணன் மீது பொறாமை என்றெல்லாம் சொல்ல முடியாது. சக உறவுகள் மத்தியில் தங்கள் நிலை தாழ்ந்து விட கூடாது. தாங்கள் பிள்ளைகள் முன்னேற்றம் பின் தள்ள கூடாது என்ற பயம் இருந்தது. இன்றைய நிலையில் பணம் தான் அளவு கோல். வருமானம் இல்லாவிட்டால் கூட இவ்வளவு யோசிக்க தேவையில்லை… கடவுள் புண்ணியத்தில் நல்ல வருமானம், நிலையான வேலை, நிறைவான வாழ்க்கை இருக்க, அதை சரியாய் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீவிரம் அதிகமாக இருந்தது.

Advertisement

    நிரஞ்சன் வருமானம் முழுக்க சேமிப்பாக கையில் தான் இருக்கிறது. அதாவது ஆவன் தாராளமாக செலவு செய்தது போக எப்படியும் கோடியை தாண்டி தான் கையில் இருந்தது. அதை ஏன் சொத்தாக மாற்ற கூடாது என்ற யோசனையும் உள்ளது.

   ஆனால், வாய் விட்டு சொல்ல தான் முடியாது. அவனாக யோசித்து செய்ய வேண்டும். தான் சொல்லி, என் அண்ணன் மீது பொறாமையா என்று பாய்ந்து விட்டாள் என்ன செய்ய?… இரண்டு பெண் பிள்ளைகள் வந்து விட்டார்கள். கண் மூடி திறக்கும் முன் காலம் ஓடி போய் கல்யாணத்துக்கு வந்து நின்றாள்.

         எல்லாரையும் விட அதிக வருமானம், ஆடம்பர செலவும் பெருமை தராது. பிள்ளைகளை வளர்க்கும் முறை, வாழ்வை அமைத்துக் கொடுக்கும் பாங்கு, எதிர்கால கையிருப்பு, தங்களின் முன்னேற்றத்தை எடுத்து சொல்லும் வளமான வாழ்வு அல்லவா பெருமை. அதை விட்டு லட்சத்தில் சம்பளம் வாங்கினாலும் பெற்றோர் கட்டிய வீட்டில் உட்கார்ந்து கொண்டு கண்டபடி செலவு செய்வதா வளமான வாழ்க்கை.

 இப்படி பல்வேறு யோசனை, கவலை, மடமடவென்று வளரும் பிள்ளைகள், அவர்களின் எதிர்காலம் என்று எல்லாம் பயமுறுத்த, தூக்கி போடும் உடைக்கு லட்ச கணக்கில் செலவு செய்யும் கணவன் மேல் அவ்வளவு எரிச்சல் வந்தது. அதை அப்படியே வெளிப்படுத்த கணவன், மனைவி மீண்டும் முட்டி கொண்டார்கள்.

    நிரஞ்சனுக்கு கொஞ்சம் வருத்தம். லீவ் நாள் என்றால் பொண்டாட்டி, பிள்ளைகள் என்று நாள் நன்றாக போகும். வரவர நர்மதா சண்டை போடுவது போல பேசுவதும், எதிர்ப்பதும் எரிச்சலை கொடுத்தது. இப்படி எல்லாம் முன் இருந்ததில்லை. அவன் என்ன சொன்னாலும், செய்தாலும் அவளுக்கு சம்மதம் தான். இப்போ எதற்கு எல்லாவற்றையும் ஆராய்ந்து, குறை கண்டு பிடித்து சண்டைக்கு நிற்கிறாள். அவனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. யாரோ தன் மனைவிக்கு சொல்லி கொடுக்கிறார்கள் என்று ஒரு எண்ணம். ஒரு வேளை தாய் வீட்டில் சொல்லி கொடுப்பார்களா?… அங்கு சென்று வந்த பின் தான் அவ்வளவு தூரம் தன்னை எதிர்க்கிறாள் என்று நினைத்தான்.

   அவனுக்கு நிதர்சனம் புரியவில்லை. வளர்ந்து வரும் இரு பெண் பிள்ளைகள் பெற்ற தாயாக நார்மதாவின் பயம் அவனுக்கு இல்லை. வாழ்க்கை இதே போல, இப்படியே செல்லும் என்று நினைத்தான் போல… ஆனால், நர்மதாக்கு வயதும், வருமானமும் இருக்கும் போதே பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்து விட வேண்டும் என்று எண்ணம் அதிகமாக இருந்தது.

       கணவனை எவ்வாறு தன் யோசனைக்கு உட்படுத்துவது என்று சிந்தனையிலே வீட்டுக்கு வர, ஹாலில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தாள் பிருந்தா.

    பார்த்ததும் ஆச்சர்யம் தங்கைக்கு… ஒரே ஊராக இருந்தாலும் தங்கை வீடு என்று அடிக்கடி வரும் பழக்கம் எல்லாம் பிருந்தாக்கு கிடையாது. சொந்தம் எல்லாம் ஒரு எல்லைக்குள் என்ற கோட்பாடு கொண்டவன் நிரஞ்சன். அது புரிந்து பிருந்தா அவ்வளவாக வரமாட்டாள்.

   அத்தோடு நர்மதா மாமியார் பகட்டு பேர்வழி என்பதும் ஒரு காரணம். இவர்களை விட வசதியில் கொஞ்சம் கூட இருப்பதால், அந்த தோரணை பேச்சில் வெளிப்படும். பட்டென்று பேசி விடும் பிருந்தாக்கு வாய் நிக்காது. அதுவும் பிருந்தா கணவன் வீட்டு வசதி குறித்து பேசும் போது பொறுக்க முடியாது போய் விடும். ஏதேனும் கூட, குறையாக வார்த்தை வந்து விட்டால், சிரமம் தங்கைக்கு என்பதால் பிருந்தா இவர்களிடம் வைத்து கொள்ள மாட்டாள்.

     ஒருவருக்கு ஒருவர் உதவி என்று தான் இவர்கள் தந்தை இருவரையும் ஒரே ஊரில் கல்யாணம் செய்து கொடுத்தார். ஆனால், அதுவே வினையாகி விட்டது. யார் பெருசு என்ற பாகுபாடு வளர்ந்து விட்டது. அக்கா, தங்கை என்று இருவருக்கும் ஒரே மாதிரி நகை செய்து, சீர் செய்து கல்யாணம் செய்த போதும், அவர்களின் புகுந்த வீட்டை பொறுத்து பொருளாதாரம் மாறுபட்டது… கல்யாணத்துக்கு முன் இருந்த அக்கா, தங்கை இணக்கம் குறைய, தள்ளி நின்று தாங்கள் அன்பை காத்து கொண்டார்கள் பெண்கள் இருவரும்…

      சரியான அடால்ப் பேர்வழி என்று ஒதுங்கும் பிருந்தா, தன் வீட்டுக்கே வந்து இருப்பது நர்மதாக்கு பெருத்த ஆச்சர்யம். அதுவும் தன் மாமியாரோடு சிரித்த முகமாக பேசி கொண்டு இருப்பது திகைப்பாக இருந்தது.

   “பிருந்தா…” என்று ஆசையோடு உள்ளே வர,

   “ஹே நம்மு… இப்பதான் வந்தேன். அத்தை தான் காப்பி போட்டு குடுத்தாங்க. உட்கார்…” என்று இருக்கையை காட்டியவள்,

    “ஆமா அத்தை. நீங்க சொல்றது தான் சரி. நம்ம நிரஞ்சனுக்கு தங்கச்சி, நிரஞ்சன் மாதிரி தான் நல்ல பொண்ணா இருக்குன்னு தான் எங்க வீட்டுல பேசி, என் தம்பிக்கு கல்யாணம் செஞ்சு வச்சாங்க. ஆனா பாருங்க நிரஞ்சன் குணத்துல பாதி கிடையாது…” என்று பிருந்தா சொல்ல,

      “நிரஞ்சன் என் வளர்ப்பு பிருந்தா. அவன் குணம் யாருக்கும் வராது. உங்க குடும்பம் கூட எங்க தகுதிக்கு குறைவுன்னு யோசிக்கும் போது , எனக்கு நர்மதாவ பிடிச்சு இருக்கு, வரதட்சணை வாங்குற பழக்கம் எனக்கு பிடிக்காதுன்னு நேர்மையா சொல்லி தான் உன் தங்கச்சியா கல்யாணம் பண்ணான்…” என்று சுசீலா சொல்ல,

   முகம் மாறாமல், “ஆமா அத்தை. எங்க எல்லாருக்கும் உங்க மேல அவ்வளவு மரியாதை. என் கொழுந்தன் சொன்னாலும், நீங்க தான பெருந்தன்மையா இருந்தீங்க. அதனால் தான் நீங்க கை காட்டுனா பொண்ணை பேசி முடிச்சோம். ஆனா பாருங்க, உங்க நல்ல மனசு அந்த வீட்டுல யாருக்கும் இல்லை…”

   “அந்த வீட்டு பொண்ணுக நாங்க… எங்களை எதிரியா பாக்குறா… நம்மளை விட மூத்தவங்க, புருசனோட அக்கான்ற மரியாதை இல்லாம எங்களை தூசி மாதிரி தள்ளி வைக்கிறா… இது சரியா அத்தை. எங்களுக்கு கிடைக்கிற மரியாதை தான நாளைக்கு எங்க புருசனுக்கும்… வீட்டுக்கு மாப்பிள்ளையாக நாளைக்கு ஒரு நல்லதுக்கு நிரஞ்சன் வந்தா, இப்படி தான் நடந்துப்பா…” என்று பிருந்தா தங்கையை பார்க்க,

    இது தேவையா என்று தான் நர்மதா பார்த்தாள்.

     “நீ சொல்றதும் சரி தான் பிருந்தா…” என்று சுசீலா யோசிக்க,

     “ஆமா அத்தை. எங்க அம்மா எனக்கு சேலை எடுத்து கொடுத்தா இவளுக்கு என்ன வந்துச்சு… உங்க கிட்ட ஏத்தி விட்டு, எங்களை வர விடாம பண்ணி, எல்லாம் அவளே எடுத்துக்க நினைக்கிறா…”

   “அப்படியா சொல்ற பிருந்தா…”

     “ ஆமா அத்தை. நம்ம குடும்பத்துல மூத்தவங்க, மரியாதையான, செல்வாக்கான ஆளுங்க நீங்க தான். நர்மதா ஒதுங்கி நின்னா, நீங்களும் தள்ளி தான நிக்கணும். அவ வீட்டு ஆளுக தான் உள்ள வருவாங்க…” என்று மேலும் ஏத்தி விட,

   “ அதானே, நான் பார்த்து தான் கல்யாணம் செஞ்சு வச்சேன். எவ்வளவு நல்ல வாழ்க்கை. எம் மருமகளை ஒதுக்கி விடுவாளா?… அவ்வளவு பெரிய ஆளா அவ?…” என்றவர், நர்மதா பக்கம் திரும்பி,

   “இங்க பாரு நர்மதா. இனி உங்க வீட்டுல நடக்குற எல்லா விசேசத்துக்கும் நீ தான் முன்ன நிக்கனும். உன்னை வச்சு தான் எங்க மரியாதை. சுபாவ நான் பார்த்துக்கிறேன். அவ அம்மா போன் பண்ணட்டும் ஒரு பிடி பிடிக்கிறேன். சரியா.. நீ உங்க அக்கா கூட பேசிட்டு இரு…” என்றவர் எழுந்து உள்ளே செல்ல,

   நர்மதா, தன் அக்காவை பார்த்து, “எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?…”

    “பின்ன நேத்து வந்தவ நம்மை போட்டு பார்ப்பாலாமா?… அவ சொல்றத கேட்டு உன் வீட்டு ஆளுகளும் உன்னை நம்ம வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்றாங்க… நீ வாய் செத்தவ, எனக்கு என்ன வந்துச்சு. எவ்வளவு நேக்கா உன்னை போட்டு விட்டு இருக்கா… நீ இல்லாம நான் மட்டும் பொறந்த வீட்டுக்கு போக மாட்டேன். அது தெரிஞ்சு எப்படி யோசிச்சு இருக்கா பாரு… அதான் பந்தை அவ பக்கமே திருப்பி விட்டேன்…” என்றவள்,

   “அது நம்ம பொறந்த வீடு நம்மு… நம்மை பெத்தவங்க இருக்குற வரை போக தான் செய்வோம். இவ யாரு முகத்தை தூக்க?… அடுத்த லீவுக்கு நாம போகும் போது அவ முகத்தை பார்க்கணுமே. செம்ம காமெடியா இருக்கும்…” என்று பிருந்தா சொல்ல,

     தங்களை பார்த்து அதிர்ந்து போய் நிக்கும் தம்பி பொண்டாட்டி முகம் மனதில் தோன்ற, லேசான சிரிப்பு வந்தது நர்மதாக்கு…

   “இதை பேசவா இவ்வளவு தூரம் வந்த…” அப்படி வரும் ஆள் இல்லையே என்று அக்காவை பார்க்க,

   “அது மட்டும் விசயமில்லை…” என்றவள் குரலை தாழ்த்தி,

  “என் கொழுந்தனாரு, எனக்கு போன் பண்ணாரு…”

   என்ன என்று ஆச்சரியமாக பார்த்தவள், “நிரஞ்சனா? என்னவாம்?…”

   “ம்ம்… கொஞ்ச நாளா ரெண்டு பேருக்கும் முட்டிகிதாம். அதான் செகண்ட் ஹனி மூன் பிளான் பண்ணி இருக்கார்…” என்று சந்தோசமாக பிருந்தா சொல்ல,

   “என்ன?…” அதிர்ந்து தான் போனாள் நர்மதா.

 “ஹனி மூன்னா..” அக்கா சொல்லும் போதே கொஞ்சம் சங்கடமாக, வெட்கமாக இருந்தது.

    “அதை ஏன் என்கிட்ட சொல்லாம, உன்கிட்ட சொல்லி இருக்கார்…” என்று கேட்கும் போதே ஒரு நினைப்பு.

     அது உண்மை என்பது போல, “போறது தேன் நிலவுக்கு, அங்க பிள்ளைகளை யாராவது கூட்டிட்டு போவாங்களா?…”

   “என்னது? அப்ப பிள்ளைகளை பார்த்துக்க சொல்லி தான் உனக்கு கால் பண்ணாங்களா?…” சங்கடம் நர்மதாவுக்கு,

  இதற்கு மட்டும் என் பிறந்த வீட்டு சொந்தம் ஆகுமா…

  தங்கை முகம் பார்த்தவள்,

   “இங்க பாரு நம்மு, நடுத்தர வயசுல பிள்ளைக, வேலை, சம்பாத்தியம், செட்டில்மென்ட்ன்னு ஓடுற ஆட்களுக்கு மத்தியில மனைவிக்கு தனியா நேரம் ஒதுக்கி செலவு செய்றவங்க கொஞ்ச பேர் தான். நமக்காகவும் நேரத்தை ஒதுக்க கத்துக்கணும் நம்மு… உன் கடைமையில ஒரு வாரம் குறைஞ்ச ஒன்னும் ஆகாது…”

    “சரிதான். ஆனாலும் பிள்ளைகளை விட்டு அப்படி என்ன டூர் வேண்டி கிடக்கு… பிள்ளைக கூடவே போகலாம் தான…” நர்மதாக்கு யோசனை,

    “ஆமா போவாங்க… எப்ப பாரு ஒரு பெரிய ஹேன்ட் பாக் அதுல ஒரு வாட்டர் பாட்டில், டையாப்பர், டிபன் பாக்ஸ், ஸ்நாக்ஸ், ட்ரெஸ்ன்னு தான் சுத்தனும். ஹோட்டல், சினிமா, மால்ன்னு எங்க போனாலும் பிள்ளைகளை முன்னாடி வச்சு தான் நம்ம கவனம் எல்லாம் இருக்கும். சரியா சாப்பிட கூட முடியாது. நம்ம பிள்ளைக நமக்கு முக்கியம் தான். அதுக்காக நமக்குன்னு கொஞ்ச நேரம் செலவிடலாம் தப்பில்லை. அது தம்பதிகளுக்கிடையே அன்னியோனியத்தை வளர்க்கும். பிள்ளைக விவரம் தெரியும் போது இப்படி எல்லாம் எங்கும் போக முடியாது…” பிருந்தா எடுத்து சொல்லியும் நர்மதா முகம் தெளிய வில்லை.

    பெத்த பிள்ளைகளை விட்டு அப்படி என்ன சுற்றுலா… கேட்ட யாரும் என்ன நினைப்பார்கள்.

   ஒரு பெருமூச்சு விட்ட பிருந்தா, “நிரஞ்சன் எனக்கு போன் பண்ணுறது எல்லாம் உலக அதிசியம். தலையில இருக்குற கிரீடம் இறங்கி எனக்கு பேசி இருக்கார்ன்னா… நிச்சயம் உங்களுக்கு இடையில இடைவெளி அதிகம் இருக்கணும். அதை ஆரம்பத்திலேயே சரி பண்ண பாரு… மனசு விட்டு பேசு, உன் விருப்பத்தை சொல்லு, இன்னும் நெருக்கத்தை அதிகமாக்கு… உன்னையும் உன் புருசன் புரிஞ்சுக்கலாம்…”

    “அப்படி ஒன்னும் ரொம்ப நாள் இல்லையே… பத்து நாள் தான். எதையும் யோசிக்காமல் நிம்மதியா வெளிநாட்டுக்கு போயிட்டு வா…”

 “என்னது வெளிநாடா?…” அலறினாள் நர்மதா.

      “ஆமா, உனக்கு சர்ப்ரைஸ் தாரது தான் பிளான். ஆனா, உங்க வீட்டை பத்தி தான் நமக்கு தெரியுமே. பிள்ளைகளை விட்டு தனியா போக நீ தயங்குவ, என் கிட்ட விட்டு போன திருப்தியா இருக்கும். நானும், எம் பிள்ளைக தனி, என் தங்கச்சி பிள்ளைக தனின்னு பாக்க மாட்டேன். ஆனா, உன் மாமியார் விட மாட்டாங்க. எதுவும் கலாட்டா பண்ணுவாங்க. அதனால் தான் நான் இன்னைக்குகே உம் மாமியாருக்கு சோப்பு போட்டு, நம்ம தம்பி பொண்டாட்டிக்கு ஒரு குத்து விட்டு எல்லாம் சரி கட்டி வச்சு இருக்கேன். எதுவும் பேசி காரியத்தை கெடுக்காம கிளம்பி போகுற…” என்று கண்டிப்பாக பிருந்தா சொல்லவும்,

    நர்மதாவுக்கும் ஆசை வந்தது. கணவன் தன் பிறந்த நாளுக்கு என்று இவ்வளவு மெனக்கிடுவது கொஞ்சம் ஆறுதலாக உணர்ந்தாள். இரண்டு பிள்ளைகள் என்ற பின் தங்களுக்கான நேரம் என்பது மிக குறைவு தான். பிருந்தா சொல்வது போல எங்கு சென்றாலும் பிள்ளைகளிடம் தான் இருவரின் கவனமும் இருக்கும்.

        நர்மதாக்கு யோசனை சென்றது. கடைசியாக எப்போதும் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்து கொண்டார்கள், எப்போது கணவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டாள், இருவரும் ஒன்று போல உடை அணிந்தது எந்த நாள், தனியாக பைக் பயணம், கடைசியாக ஐ லவ் யூ சொன்னது எப்போது என்று நினைவு கூர்ந்தும் ஒன்றும் சிக்க வில்லை. கணவனின் ஏக்கமும் புரிய, பிள்ளைக்கு முன் வாழ்ந்த கல்யாண வாழ்க்கையில் ஒரு ஆசை வந்தது. பத்து நாள் தானே, கொஞ்சம் நமக்காக வாழ்ந்தால் என்ன?

    இருவரும் வேலைக்கு போகும் தம்பதிகள். தனிப்பட்ட நேரம், கொஞ்சல், சிணுங்கல் எல்லாம் கிடையாது. வார இறுதியில் கிடைக்கும் தனிமை கூட வேற மாதிரியான உறவுக்கு தான் வழி வகுக்கும். அடுத்து எங்கே மனம் விட்டு பேச, அலுத்து போய் உறங்க தான் சொல்லும்… இந்த பத்து நாளும் ஒரு தெளிவான புரிதலோடு வாழ வழி காண வேண்டும் என்று நினைத்தாள்.

    “ரொம்ப தேங்க்ஸ் பிருந்தா…” என்று தங்கை சொல்ல,

    “அடி போட்டேனா பாரு… எதுக்கு தேங்க்ஸ். எனக்கு தெரியும் என் தங்கச்சி வாய் செத்தவ… எதையும் மனசு விட்டு வாய் துறந்து பேச மாட்ட. உனக்கு தேவைன்னா கூட யாரு என்ன நினைப்பா, யாரையும் சங்கட படுத்த கூடாது, சண்டை வர கூடாதுன்னு என்னென்னவோ யோசிச்சு வெளிய சொல்ல மாட்டா. நான் உன் கூட பொறந்தவ, எனக்கு தெரியும் நீ எப்படின்னு… உன் புருசனுக்கு நீ வாய் பேசாம இருக்கிறது தான் நல்லது…”

   “ஆனா, பேசணும் நம்மு… புருசன் கிட்ட என்ன ஒளிவு, மறைவு. சண்டை வரும், பிரச்சனையாகும்ன்னு நினைக்காம உனக்கு தோன்றத நீ பேசணும். அதுக்கு இது தான் வாய்ப்பு. நீங்க திரும்பி வரும் போது நிரஞ்சன் பொண்டாட்டி நர்மதா கிடையாது. நர்மதா புருசன் தான் நிரஞ்சன். அப்படி மாத்தி கொண்டு வார…” என்று பிருந்தா பொழிந்து தள்ள,

   ஒரு பெரிய நம்பிக்கை நர்மதாக்கு… ஆனால், விதி. சந்தோசமாக சென்ற இருவரும் முட்டி கொண்டு தான் வந்தார்கள். இருந்த சின்ன இடைவெளியும் பெரிதாக அகன்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!