Skip to content
Post Views: 1,171
அத்தியாயம் 13
பகலவன் பூனை நடையிட்டு வானை வளம் வந்து கொண்டிருந்த காலைப் வேளை அது…
காலை வேளையின் சுறுசுறுப்பு துளியும் இல்லாமல் அமர்ந்திருந்தான் சுதன்.அவனது மனம் நிலைக் கொள்ளாமல் தவித்தது. ஒரே நாளில் வருகிறேன் எனக் கூறிய மனைவியிடமிருந்தும் தகவல் வரவில்லை. அவளை அனுப்பி வைக்கிறேன் எனக் கூறியவர்களிடமிருந்தும் தகவல் வரவில்லை… அழைத்து பேசலாமா என தோன்றினாலும் இரண்டு நாளைக்கு முன் அவள் பேசிய வார்த்தைகள் மனதில் ரீங்காரம் போல் சுழற்றி அடித்தது… ஏனோ அவள் விட்டு சென்றதில் அத்தனை கோபம் வந்தது.
Advertisement
அன்றைய நாளில் அவனையே அவன் மறந்த நிலையில் தான் இருந்தான். அப்போதும் கூட தன்னுடைய எவ்வித தேடலும், ஆசையும் அவளை துன்புறுத்தி விடக் கூடாது என்ற நிலையில் அவன் இருக்க, அதை அவள் துளியும் உணரவில்லையே என்ற எண்ணம் சுதனின் மனதில் ஆழ்ந்து பதிந்து போனது.
Advertisement
உண்மையை சொல்லபோனால் மங்கையிடத்தில் மட்டுமே அவனின் அறிவும், மனமும் ஒரே திசையை நோக்கி பயணிக்கிறது, அவளைக் காயப்படுத்திடக் கூடாது என்ற நோக்கத்தில்.
Advertisement
சில நேரங்களில் அவனையும் மீறி ஆடவனின் மனம் அவனின் மதியை கொள்ளையிடக்கூடும் தான் என்றாலும் அவளின் விடயத்தில் அவள் மட்டுமே கண்முன் தெரிந்தாள். அதனால் தானோ என்னவோ தன்னை மறந்த நிலையில் கூட அவளின் மனம் புரிந்து விலகி நின்றான்.
Advertisement
இதுநாள் வரையிலும்
மறவோனின் ஒவ்வொரு எண்ணத்திலும், செயலிலும் அவள் மட்டுமே நிறைந்திருக்கிறாள், இனியும் நிறைந்திருப்பாள் என்பது திண்ணம்.
கதவு தட்டும் சத்தத்தில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவன்
முகத்தை அழுத்தி தேய்த்து கொண்டே கதவை திறந்தான். ஈஸ்வர் தான் நின்றிருந்தார்.
“சொல்லுங்கப்பா…” என்ற மகனை மேலிருந்து கீழாக பார்த்தார்.
தந்தையின் பார்வையில் எரிச்சல் வர பல்லைக் கடித்தவன் “யோவ் தகப்பா என்ன…” என்றான்.
“ஓ நல்லா தான் இருக்கியா. என்னடா திடிருன்னு மரியாதை வருதுன்னு யோசிச்சேன்” என்றதும் இன்னும் கடுப்பானது ஈஸ்வரின் மகனுக்கு.
“கொஞ்சம் வெளிய போகணும், நீ ஃப்ரீயா இருந்தா போலாமா…” எனக் கேட்டார்.
“ம்ம் எதுவரைக்கும் ப்பா…” எனக் கேட்டவன் படுக்கையில் கிடந்த அலைபேசியை எடுத்தான்.
அவன் அலைபேசியை எடுத்துக் கொண்டு உடனே கிளம்புவதை பார்த்தவர் “இல்லை தம்பி, கொஞ்சம் ரெடியாகிட்டு வா… ஜரத்தல் வரை போகணும்…” என்றார்.
ஜரத்தல் என்றதும் “வனிதா க்கா வீட்டுக்கா? என்ன திடீருண்ணு…” எனக் கேட்டுக் கொண்டே அருகிலிருந்த மேசையில் அலைபேசியை வைத்தவன் காபோர்டை திறந்தான்.
“அது ஒன்னுமில்லை தம்பி. ஐப்பசி கடைசில அங்க ஜில்லுன்னு இருக்கும்ன்னு புள்ளை சொல்லுச்சு அதான் ஒரேட்டு போயிட்டு வரலான்னு கூப்படறேன்…” என்றார் கேலிக் குரலில்.
தந்தையின் கேலியில் திரும்பி தந்தையை முறைத்தான். மகனின் முறைப்பில் சத்தமாக சிரித்தவர் “ரொம்ப நாளா உங்கம்மா தோட்டம் வாங்கணும் சொல்லிட்டு இருந்தா இப்ப ஒரு தோட்டம் விலைக்கு வந்திருக்குன்னு சொன்னாங்க. பார்த்து பேசிட்டு வரலாம்…” என்றார்.
“இங்க இருக்கிற நாலு பொட்டிக் கடையவே பார்க்க ஆள் இல்லை இதுல தோட்டம் வேறயா…” எனக் கேட்டுக் கொண்டே காபோர்டில் தனக்கு தேவையானதை எடுத்தவன்,
“டென் மினிட்ஸ் ப்பா, வந்துடறேன்…” என்றுவிட்டு குளியலறை நோக்கி நகர்ந்தான்.
*****
அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஈஸ்வர் கூறிய இடத்திலிருந்தனர் மூவரும். உண்மையாகவே தோட்டத்தை பார்க்க தான் அழைத்து வந்திருந்தார் ஈஸ்வர்.
அதில் ‘நான் என்ன சொன்னேன் இவர் என்ன பண்றார்?’ என்ற கோபம் காமாட்சிக்கு. முகத்தை தூக்கி வைத்தபடி தான் கணவருடன் சென்றார்.
மனைவியின் கோப முகத்தை கண்டும் காணாமல், வந்த வேலையை பார்த்துவிட்டு செல்லும் வழியில் தான் “தம்பி, அப்படியே காரை பாப்பாத்தி காட்டுக்கு விடு… அங்கேயும் தோட்டம் விலைக்கு இருக்குன்னு சொன்னாங்க…” என்றதும் சரிப்பா என்றபடி தனது நான்கு சக்கர வாகனத்தை பாப்பாத்தி காட்டுக்கு விட்டான்.
கணவர் கூறிய ஊர் பெயரை கேட்டதும் முகம் விசாகிக்க கணவரை திரும்பி பார்த்தார் காமாட்சி. “என்ன…” என்பதை போல் பார்த்த கணவனிடம் உதட்டை சுழித்து அழகு காட்டிவிட்டு திரும்பி கொண்டார்…
ஜரத்திலிருந்து சிறிது நேர பயணத்திற்கு பிறகு அவர் கூறிய இடம் வந்திருந்தது.. ஓர் மலையின் அடிவாரத்தில் இருந்தது அந்த ஊர். ஊரின் அருகில் காரை நிறுத்த போனவனை தடுத்து “இன்னும் கொஞ்ச தூரம் போப்பா” என்றார். சரியென்று தலையாட்டிவிட்டு காரை விரட்டினான்.
ஊரை தாண்டி சில தூரம் சென்றதும் நான்கைந்து தோட்டத்து வீடுகளை கண்டான். பக்கத்தில் இல்லை என்றாலும் ஐம்பது மீட்டர் இடைவெளியில் இருந்தது ஒவ்வொரு வீடும். மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வீடுகளை பார்க்க பார்க்க அத்தனை ரம்மியமாக தெரிந்தது.
மலைக் காற்றோடு கலந்த ஈரமும், அதன் குளுமையும், இயற்கை அன்னையின் வாசமும், அந்த ஊரின் செளுமையை படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தது. ஊரின் செழுசெழுப்பை ரசித்து கொண்டே
“மீ… ஃபீஸ் ஃபுல்லா இருக்கிற ஒரு இடத்துக்கு போகணும்ன்னு அடிக்கடி சொல்லுவீங்களே… இது பாருங்க அப்படியே உங்க ரசனைக்கு ஏத்தது போல இருக்கு…” என்றான்.
மகனையும், மனைவியையும் ஒரு பார்வை பார்த்தவர்
“உங்கம்மா ரசனைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. என்ன அப்பப்ப யானையும்,சிறுத்தையும் தான் வாக்கிங் வருமாம்” என்றதும் தாயும் மகனும் ஒன்றாக திரும்பி ஈஸ்வரை பார்த்தனர்.
அவர்களின் பார்வையை கண்டுகொள்ளாமல் காரை விட்டு இறங்கியவரைத் தொடர்ந்து ஹிரியும் இறங்கிட, அழகாக வருடியது மலையோர காற்று.
ஆழ மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவன் “செமயா இருக்கு ப்பா…” என்றவன் மீண்டும் ” நம்ம பார்க்க வந்த தோட்டம் எங்கப்பா…” எனக் கேட்டான் சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடி.
எதிர் வீட்டிலிருந்த நான்கு சக்கர வாகனத்தை கண்டதும் புருவங்கள் சுருக்கியவனுக்கு நிமிடத்தில் அது யாரின் வாகனம் என்பது புரிந்தது. அந்த கணம் ஆடவனின் மானங்கெட்ட மனம் முழுவதும் மத்தாப்பு பூக்க தொடங்குவதை சத்தியமாக தடுக்க முடியவில்லை.
மகனின் முகத்தை புன்முறுவல் பூக்க பார்த்த ஈஸ்வர் ” மருமகளை கூட்டிட்டு வா தம்பி போ…” என்றதும் சரியென தலையாட்டியவன் கொஞ்சமும் யோசிக்காமல் வேகமாக அந்த வீட்டை நோக்கி நடந்தான்.
“வாண்டு, அங்க எங்க போற… இரு நாங்களும் வரோம்…” என அழைத்தபடி காரில் இருந்து இறங்கி மகனின் பின்னால் சென்றவரை இழுத்து பிடித்து நிறுத்தினார் ஈஸ்வர்.
“என்ன…” என்பது போல் கணவரை பார்த்தவர் சில அடி தூரத்தில் செல்லும் மகனை பார்த்தார்.
“அவன் நம்ம மருமக பிள்ளையோட வருவான் நீ இப்ப என்கூட வா…” என்றவர் மனைவியின் மகிழ்ச்சியான முகத்தை கண்டுகொள்ளாமல் மகன் சென்ற திசைக்கு எதிர் திசை நோக்கி நடந்தார்.
*******
இங்கு அந்த பெரிய வீட்டை நோக்கி நடந்த சுதனின் கால்கள் சற்றே பின்னியது. மனம் அந்த வீட்டின் அமைதியில் பட் பட்டென்று அடித்துக் கொண்டது…
நெஞ்சை தடவிக் கொண்டே அந்த வீட்டின் கதவை தட்டினான். சிறிதும் பதிலில்லாது போக, மீண்டும் பார்வையை சுழல விட்டான் ஆள் நடமாட்டம் துளியும் அவ்விடத்தில் இல்லை.
நீண்ட நெடிய பெருமூச்சுடன் மீண்டும் அறைக்கதவை தட்டினான். அது தற்போது திறந்து கொண்டது. உள்ளே தாழிடவில்லை என்றதும் புருவங்கள் சுருங்கி விரிந்தது… பார்வையை வீட்டினுள் சுழல விட்டவனுக்கு ஒருவர் கூட கண்களுக்கு புலப்படவில்லை.
“எங்க போயிருப்பாங்க… ஒருத்தரையும் காணோம்…” என முணுமுணுத்துக் கொண்டவன் காதில் வரட்டு இருமல் சத்தம் கேட்டது. அது யாரிடமிருந்து வரும் இருமல் சத்தம் என்று புரிந்து கொள்ள நிமிடங்கள் தேவைப்படவில்லை சுதனுக்கு..
மூன்று நாட்களாக மனைவியின் மேலிருந்த கோபம் சற்றே ஒதுங்கி நின்றது… நிமிடம் தாமதிக்காமல் சத்தம் வரும் அறையை நோக்கி நடந்தான்.
மேல் தளத்திலிருந்த ஓர் அறையில் சுருண்டு படித்திருந்தாள் அவன் மனைவி… வாடிய கொடி போல கிடந்தவளை பார்க்க பார்க்க சற்று முன் விலகி நின்ற கோபம் மீண்டும் வந்தது.
அதற்கு ஏற்றார் போல் ஆடவனின் பொல்லாத மதியோ அவள் பேசி சென்ற வார்த்தைகளை மீண்டும் நினைவு படுத்தியது. கண்களை இறுக மூடித் திறந்தவன் இன்றைக்கு இரண்டில் ஒன்று தெரிந்தே ஆக வேண்டும் என எண்ணியபடி மனைவியை நோக்கி நடந்தான்.
இங்கு கண்களை இறுக மூடி படுத்துக் கொண்டிருந்த இதயாவின் எண்ணங்கள் முழுவதும் இவளின் வாழ்க்கை ஓட்டத்ததை மட்டுமே ஆராய்ந்து கொண்டிருந்தது.
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்த கதையல்லவா இவளின் கதை… அதுவும் காதல்,திருமண வாழ்க்கையெல்லாம் இவளே நினைக்காத ஒன்று. கணவனை நினைத்ததும் பாவையின் இதழ்கள் புன்னகை பூசிக் கொண்டது.
முதல் பார்வையில் காதலா? அதெல்லாம் சுத்த பொய் எனக் கூறிக் கொண்டிருந்தவளுக்கு முதல் பார்வையில் சுதன் மீது ஈர்ப்பு உண்டானது. காலையில் ஈர்ப்பாக எழுந்த உணர்வு மாலையில் மெல்லிய சலனமாக உருவெடுத்து அந்தி மாலையில் காதலாக அரும்பி இரவில் அந்த காதல் கருகியது என்று கூறினால் எவராது நம்புவார்களா என்ன…
ஆம் ஒரே நாளில் பூவாய் அரும்பிய காதல் அன்றே கருகியது இதயாவிற்கு. ஒரே நாளில் பிடிக்கும் அளவிற்கு அவனிடம் அப்படி என்ன இருக்கிறது? அப்படி என்ன பேசிவிட்டான் அவன்? எனக் கேட்டால் நிச்சியம் அவளிடம் பத்து நிமிடம் விடாமல் கூறுமளவிற்கு பதிலில்லை என்றாலும் ஒரு வரி பதில் இருந்தது அது கண்ணியம்… அன்றைய நாளில் சுதன் காட்டிய கண்ணியம் தான் அவன் மீது ஈர்ப்பையும் அதற்கு பின் காதலையும் மலர செய்தது பெண்ணிற்கு.
அன்றைய நாள்… அரசு தேர்வெழுத வாசுவும், இதயாவும் கோயம்புத்தூர் வரை சென்றிருந்தனர். அப்போது தான் சுதனை சந்தித்தாள். பார்த்ததும் வசீகரிக்கும் ஆண்மகன் இல்லை அவன் ஆனாலும் வசீகரித்தான் இவளை. தானாகவே சென்று வம்பு வளர்த்து, நட்பு பாராட்டி, உரிமையான அழைப்பு என அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது இவள் தான்.
தேர்வு நடக்கும் இடத்தில் ஆரம்பித்த இவர்களது சிநேகிதம் ரயில் பயணம் வரையிலும் நீடித்தது. ரயில் பயணித்தில் இவனை பற்றி மேலும் அறிய வாசுவே காரணமாக இருந்தான். ஆம் அன்று ஜானகியை அழைத்து வர வாசு திருப்பூரில் இறங்கி விட… சுதனும், இதயாவும் மட்டுமே பயணிக்கும் சூழல் உண்டானது.
அந்த ஒரு மணி நேரம் பயணம் ஈரோடு வந்ததும் முடிய, பாவையின் மனதில் ஏக்கம் எழுந்தது அதனை அப்படியே அவனிடம் காட்டவும் செய்தாள். ஆனால் சுதன் அதனை துளிக் கூட பொருட்படுத்தாமல் கடந்து விட, மெல்லிய வலி பெண்ணின் இதயத்தில்.
அந்த வலி கூட அவனை காணும் வரைக்கும் மட்டும் தான். ஈரோட்டிலிருந்து காவேரி ஆற்றை கடக்கும் போது தான் அவனை மீண்டும் கண்டாள். தன்னிடம் கூட கூறாமல் தனக்கு துணையாக வருகிறானா? என நினைத்தவளுக்கு மனம் முழுவதும் மத்தாப்பு.
அந்த நிமிடம் அவனின் மீது உண்டான உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று தான் கூற வேண்டும். அக்கணம் மெல்லிய சலனம் மங்கையின் மனதில்.
அந்த சலனம் அவனைப் பற்றிய அனைத்தையும் தெரிந்துக் கொள்ள தூண்டியது… சேலம் சேர்வதற்குள் அவனைப் பற்றி அனைத்து விவரங்களையும் சேமித்து இருந்தாள்.நொடிகளும், நிமிடங்களும் ஆடவனை பற்றிய ஆராய்சியில் செல்ல மங்கையின் வீடும் வந்திருந்தது…
அவளுள் நிகழ்ந்த ரசனையான மாற்றத்தை எண்ணிக் கொண்டே வீட்டின் கதவை திறந்தாள். அடுத்த கணம் தோளிற்கும் கழுத்திற்கும் சுள்ளென்ற வலியை உணர்ந்தாள். அந்த கணத்தில் இருந்து அடுத்த அரைமணி நேரம் முழுவதும் வலி மட்டுமே அவளுள்…
அந்த சம்பவத்திற்கு பின்னான நாட்கள் மங்கையின் மனதில் சுதன் என்பவன் நினைவில் இருந்தானா என்பது கேள்விக்குறி தான். அவள் அனுபவித்த வலிகளை கடந்து வர முடியாமல் தவித்தாள்.
மகளின் வலியை போக்க நினைத்தனரோ அவளின் பெற்றோரும். அவள் அனுபவித்த கொடூர நினைவுகளை தற்போதய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அழித்தனர். அதில் சுதனின் நினைவுகளும் அழிந்திருந்தது என்பது கசப்பான உண்மை.
குறிப்பிட்ட நாட்களின் நினைவுகளை மறந்த பெண்ணிற்கு பல வருடங்களாக ஏங்கிய தாய் தந்தையின் பாசமும், அன்பும் அரவணைப்பும் தீடீரென கிடைத்ததில் சந்தேகத்தை கொடுத்தது.
அந்த சந்தேகம் தான் மீண்டும் தன் நினைவுகளை தேடி பயணிக்க வைத்தது. அந்த பயணத்தில் தான் மீண்டும் அவனை கண்டாள். அப்போது பார்த்ததும் காதல் மலர்ந்ததா என்று கேட்டால் நிச்சியம் இல்லையென்று தான் அவளிடம் பதில் வரும்.
ஆனால் அவனின் நிலவே, இதயமே என்ற அழைப்பு அவளுள் ஏதோ ஓர் இரசாயன மாற்றத்தையும் ஓர் உரிமை உணர்வை தரும். அந்த உணர்வு தான் அவனிடம் தன் நிலையை எடுத்துக் கூற வைத்தது மட்டுமல்லாமல் எந்த ஆண் மகனிடமும் வெளிக்காட்டாத தன் கண்ணீரையும் காட்ட வைத்தது. அவனின் உதவியுடன் தானே தன் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தாள்…
தன் பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்தவளுக்கு மீண்டும் அதிலிருந்து வெளிவர தெரியவில்லை. ஆரம்பத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது போல தற்போது செய்யவில்லை என்றாலும் தனக்குள்ளேயே அடங்கிக் கொண்டாள்.
தன்னை சுற்றியே ஒரு வட்டமிட்டு கொண்டு வெளிவர மறுத்தாள். தனக்குள்ளேயே முடங்கி கொண்டவளை கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலாவாக மாற்ற வாசுவும், இதயாவின் பெற்றோரும் முயன்றனர் அதில் வெற்றியும் பெற்றனர். செயற்கையாக மறக்க வைத்த நினைவுகளை அவர்களின் அன்பாலும், அரவணைப்பாலும் மறக்க வைத்தனர். இதில் பெரும் பங்கு டாக்டர் ராம் பிரசாத்திற்கு உண்டு. நடந்த எதிலும் உன் மீது தவறில்லையென்று புரிய வைத்ததே அவர் தான்.
இவர்களின் முயற்சியால் ஓரிரு மாதத்தில் பழைய நிலா கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி இருந்தாள். ஆனால் அவனின் காதலை ஏற்க மனம் வரவில்லை… ஏதோ ஒன்று அவளை தடுத்து கொண்டே இருந்தது.
அந்த சமயம் ஈஸ்வர் தன் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற மீனாட்சி சுந்தரத்திடம் நேரடியாகவே பேசியிருந்தார். மாப்பிள்ளை சுதன் என்பதால் யோசிக்காமல் சரியென்றனர் இதயாவை சார்ந்தவர்கள்.
என்னதான் பெரியவர்கள் திருமணத்திற்குசம்மதம் தெரிவித்தாலும்
தன் காதலை கொண்டு அவளைக் கரம் பிடிக்க நினைத்தான். வருடம் காத்திருந்து அதை அவன் செய்தும் காட்டினான்.
***
error: Content is protected !!