Skip to content
Post Views: 13,041
பொழியும் மேகம்
அத்தியாயம் 12
நர்மதா அன்று வீடு வரும் போதே ரொம்ப சோர்வாக தான் இருந்தாள். அப்போது தான் பிருந்தா போன் பேசி முடித்து இருந்தாள். புது கார் வாங்கியதற்கு வாழ்த்து சொல்ல அழைத்தாள்… எதையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ளும் எண்ணம் கொண்ட நிரஞ்சன், இதையும் பதிவேற்றி இருந்தான்.
பிருந்தாக்கு மிக மகிழ்ச்சி. தங்கை ஒரு கோடியில் கார் வாங்கி உள்ளால் என்று… ஆனால், உள் விசயம் எதுவும் அவளுக்கு தெரியாதே. அவர்கள் வீட்டை பொறுத்த வரை கார் என்பது அநாவசிய பொருட்களில் இடம் பிடிக்கும், அத்தியாவசிய பொருட்களில் அல்ல…
Advertisement
காரணம் மூன்று பிள்ளைகள் உள்ள வீடு. அவர்களின் படிப்பு செலவு, பெண் பிள்ளைகளுக்கு நகை, மகனுக்கு சொந்த வீடு என்று அத்தியாவசிய தேவையாக கருதிய இவை அனைத்தும் நிறைவேறிய பின் தான் ஆடம்பர பொருட்கள் வீட்டிற்க்கு வந்தது.
பிருந்தா கல்யாணம் பேசும் போது தான் நர்மதா வீட்டில் கார் வாங்கினார்கள். அதே எண்ணம் தான் நர்மதாவுக்கும்… தாங்களும் இரு பெண் குழந்தைகள் வைத்து இருக்க, அவர்களுக்கு படிப்பு அல்லது நகை, சொத்து என்று ஏதேனும் சேர்த்து வைத்த பின் ஆடம்பர பொருட்களை விரும்பி வாங்கலாம் தானே…
பொது தேர்வு நெருங்கும் சமையம் என்பதால் வேலையும் அதிகமாக இருந்தது. காலையில் இருந்து கத்தியே தொண்டை வலி. வீட்டுக்கு வந்தால் போதும் என்ற நினைப்பு தான். பிள்ளைகள் இருவரும் சமத்தாக விளையாட, வாங்கி வந்த உணவு பண்டத்தை கொடுத்தவள், பாத்ரூம் போய் நைட்டியை மாற்றியதும் படுத்து விட்டாள்.
Advertisement
தலை விண்ணென்று வலிக்க, தைலம் தேய்த்து படுத்தவள் தான் கொஞ்ச நேரத்தில் தூங்கி போனாள். மதியத்திலிருந்து வித்யா மகனுக்கு நல்ல காய்ச்சல். மருந்து கொடுத்தும் சிணுங்கி கொண்டே தான் இருந்தான். கையிலே வைத்திருக்க வேண்டிய நிலை…
Advertisement
மணி ஆறரை ஆச்சு வெளியே வராமல் இருக்கும் நர்மதா அறையை யோசனையாக பார்த்தவள், சஸ்டியை நோக்கி,
“உங்க அம்மாவ வந்து இட்லி ஊத்தி தர சொல்லு… தம்பி பசிக்கு அழுகுறான், காய்ச்சல் வேற அதிகமா இருக்கு. சீக்கிரம் வர சொல்லு…” என்று வித்யா சொன்னாள்,
சஸ்டியும் மேல சென்றவள், “அம்மா, குட்டி தம்பிக்கு இட்லி வேணுமாம். பெரியம்மா உங்களை சீக்கிரம் வர சொன்னாங்க…” என்று சொல்ல,
Advertisement
கண்ணை கூட திறக்க முடியவில்லை. இதில் எங்கிருந்து எழுந்து வர, “சரி நீ போ…” என்றவள் மீண்டும் படுத்து விட்டாள்.
சஸ்டியும் வந்து, “எங்க அம்மா தூங்குறாங்க…”
“தம்பிக்கு இட்லி வேணும்னு சொன்னியா…” என்று வித்யா கேட்க.
“ம்ம் சொன்னேன் பெரியம்மா…” விளையாட ஓடி விட்டாள்.
ஏற்கனவே காய்ச்சலோடு இருந்த குழந்தை அழுகையை அதிக படுத்த, இறுகி போய் நின்று இருந்தாள் வித்யா.
வெளியில் சென்று இருந்த மாமனார், மாமியார் வரும் வரை வித்யா பிள்ளையை தூக்கி வைத்தே நடந்து கொண்டு இருக்க, கணவன் முகுந்தன் வந்து விட்டான். அவர்களோடு வீட்டு ஆட்களும் தான்.
நர்மதாக்கு தூக்கமும் இல்லாமல், மயக்கமும் இல்லாத ஒரு நிலையில் தான் படுத்து இருந்தாள். சுசீலா வந்ததும்,
“மேல லைட் எதுவும் போடலையா?… நர்மதா…” என்றவர்,
அழுது கொண்டிருந்த பேரனை பார்த்து,
“என்ன பிள்ளை இப்படி அழுறான். வித்யா என்ன ஆச்சு…” என்று வேகமாக பிள்ளையை தூக்க,
“காய்ச்சல். அத்தோடு இன்னும் சாப்பிடல…” என்று வித்யா சொல்ல,
“குழந்தைக்கு சாப்பாடு கொடுக்காம என்ன வேலை செய்யிற நீ…” என்று முகுந்தன் அதட்டும் போதே, நிரஞ்சனும் வந்து சேர்ந்து விட்டான்.
சுசீலா தான், “ஏன் சாப்பாடு கொடுக்கல…”
“சாப்பாடு செய்யல…”
“என்ன இன்னும் டிபன் வேலை ஆகலையா? நர்மதா இன்னும் வீட்டுக்கு வரலையா?…” என்று தாமோதரன் கேட்க.
“அதெல்லாம் வந்தாச்சு. சமையல் தான் அகல…” .
“ஏன்?…” என்று கேட்டது நிரஞ்சன்.
“ ம்ம் தூங்குறாங்க…” என்று நக்கலாக சொன்னாள் வித்யா.
என்ன என்று எல்லோரும் அதிர்ந்து கேட்க.
“ஆமா, தம்பிக்கு காய்ச்சல், அழுத்துட்டே இருக்கான். அவனை விட்டுட்டு என்னால சமைக்கவும் முடியாது. வீட்டுல ஆள் இல்லை. யார்கிட்ட விட… குழந்தைக்கு இட்லி மட்டும் வச்சு கொடுக்கன்னு சஸ்டி கிட்ட சொல்லியும் வரமா தூங்கிட்டு இருக்காங்க… சாப்பாடு கொடுத்து மருந்து கொடுத்தா காய்ச்சல் கொஞ்சம் குறையும்…”
“நர்மதா மெத்தனமாக இருக்குற பொண்ணு கிடையாதே…” என்று தாமோதரன் சொல்ல,
“அது உங்களுக்கு தான் மாமா. நர்மதாவுக்கு நாங்க வந்ததே பிடிக்கல. அவங்களோட உரிமை போன மாதிரி நினைக்கிறாங்க. நான் இங்க வராம எங்க போவேன். அவங்களை மாதிரி தானே நானும் கல்யாணம் பண்ணி வந்தேன். எனக்கும் இது தான வீடு… என்ன தொட்டாலும் குறை சொல்லிகிட்டு, குத்தமா பாக்குறாங்க…” என்று வித்யா சொன்னதும்.
“நர்மதா… நர்மதா வெளிய வா…” என்று சத்தம் போட தொடங்கினார் சுசீலா.
அப்போது தான் எழுந்து முகம் கழுவி வெளியே வந்தவள். சத்தம் கேட்டு கீழே வர, வீட்டில் எல்லோரும் இருந்தார்கள்.
என்ன என்று புரியாமலே கீழ வந்தவள், கணவனை பார்க்க. அவன் முறைத்து பார்த்தான்.
“டிபன் பண்ணலையா நீ… அண்ணி சொல்லி விட்டாங்க தானே…” நிரஞ்சன் கேட்க.
தலையும் வாலும் புரியாமல், “ பண்ணல, ஒரு நாள் அவங்க பண்ண வேண்டிய தானே…”
தான் வலிய சென்று பேசும் போது முகத்தை தூக்கி கொண்டு போனான். அண்ணி ஒரு வார்த்தை சொன்னதும் கோபம் வருதா…
“என்ன பேசுற நர்மதா. வித்யா கை குழந்தையை வச்சு இருக்கா… அவளே எப்படி சமைக்க முடியும். நீ தான் பார்க்கணும். உன் வீடுன்னு திமிரா நடக்க பாக்குறைய? வித்யா சொல்லாம இது உன் வீடு கிடையாது.” மூத்த மருமகளுக்கு ஆதரவு கொடுத்தார்.
நர்மதாவுக்கு கடுப்பு. எப்போ பாரு அவ விட்டு கொடுத்து தான் உனக்கு வீடுன்றது என்ன பேச்சு…
“யாரும் எதுக்கு அத்தை எனக்கு விட்டு கொடுக்கணும். நான் இந்த வீட்டு மருமக தானே… இந்த வீட்டை காட்டி தானே என்னை கல்யாணம் பண்ணி கூட்டி வந்தீங்க. நான் கல்யாணம் முடிஞ்சு இங்க தானே வாழ வந்தேன். அப்போ இது என் வீடு தான்…”
“ பார்த்தையா நிரஞ்சா பேச்ச. அவ தான் காசு போட்டு கட்டுன மாதிரி பேசுறா… இவ இங்க வந்தா இது இவ வீடு ஆகிடுமா?… இவ இருக்கணும்ன்னு என் பெரிய மகன், மருமகள் எல்லாம் தனியா போகணுமா?…” எகிறி கொண்டு வந்தார் சுசீலா.
“என் பெரிய மகனுக்கும் உரிமை இருக்குன்னு ஆரம்பத்துல இருந்தே நீங்க சொல்லி இருக்கணும் அத்த. முழுசா ஏழு வருசம் இவ்வளவு பெரிய வீட்டை வாழ்ந்தவங்களுக்கு, திடீர்னு உரிமையா வேற ஆளு வந்ததும், விட்டு கொடுக்க மனசு இல்ல போல…” வித்யா ஒரு பக்கம் பஞ்சாயத்தை இழுத்து சென்றாள்.
தற்போது தான் நர்மதா கொஞ்சம் நிதானித்தாள். என்ன பிரச்சனை இப்போது, டிபன் செய்யலன்னு தானே ஆரம்பிச்சாங்க, புரியாமல் பார்க்க,
“நானும் இந்த வீட்டுக்கு தான் கல்யாணம் பண்ணி வாழ வந்தேன். எனக்கும் இது தான் வீடு. என் புருசன் கஷ்டபட்டு சம்பாதிச்சு வீடு கட்டுன அது வேற… நீங்களும் சம்பாதிச்சு வீடு கட்டுங்க. ஒரு கோடிக்கு கார் வாங்குற அளவுக்கு பெரிய ஆட்கள் தானே. அதை விட்டு நாங்க இந்த வீட்டுல உரிமை கொண்டாட கூடாதுன்னு சொன்னா எப்படி?… சம்பாதிக்கிறது, சொத்து சேர்த்து வைக்கிறது அவங்கவங்க சாமர்த்தியம். அதுக்காக என் புருசனுக்கு பொறந்த வீட்டு பங்கு, உரிமை இல்லன்னு சொல்லுவங்களா…” என்று பொதுவில் தன் வாதத்தை வைத்தாள்.
சுசீலா அமைதியாக நிக்க. வித்யாவுக்கு இது தான் வேண்டும். அதனால் தான் பிரச்சனையை தனக்கு சாதகமாக கொண்டு போனது.
அவளை பொறுத்த வரை, இந்த வீடு பொது சொத்து. அதை பொதுவில் தான் வைக்க வேண்டும். அதை விட்டு கண்டபடி ஊர் சுத்தி செலவு செய்யும் நிரஞ்சனுக்கு சொந்த வீடு இல்லை. முகுந்தன் தனியாக சொத்து வைத்து இருக்கிறான் என்று அவனை விட்டு கொடுக்க சொல்வது என்னை நியாயம்.
அதை நேரடியாக மாமியார், கணவனிடம் சொல்ல முடியாமல், நர்மதாவை உள்ளே இழுத்து விட்டு தன் நியாயத்தை எடுத்து வைத்தாள்.
“ஏங்க வித்யா, எனக்கு வீடு மேல எல்லாம் ஆசை கிடையாது. அன்னைக்கு நான் சொன்னது ஒரு எடுத்து கட்டா தான் சொன்னேன். உன் கூட பிறந்தவர் தானே. அவங்க எப்படி முன்னேறுறாங்க. நாமளும் அவங்களை போல வாழ்க்கையில முன்னாடி சொல்லணும்ன்னு சொன்னதுங்க. மத்தபடி எனக்கு முன்னாடி கல்யாணம் ஆகி வந்தது நீங்க தான். உங்களுக்கு உரிமை இல்லன்னு சொல்ல நான் யார்?… நான் நினைக்காத ஒன்னை நான் நினைக்கிறேனு பேசாதீங்க…” என்றவள்,
“எல்லா நாளும் சமையல் வேலையை பாக்கிறவ, ஒரு நாள் பார்க்கலன்னா என்னன்னு கூட யோசிக்க மாட்டீங்களா?…”
“ என்னத்த யோசிக்க, வித்யா சொன்னது தான். உனக்கு என்னமோ பெரியவன் குடும்பம் ஆகல. நீ பேசி சரிகட்ட பார்க்காத. என் மகன் குடும்பம் இங்க தான் இருக்கும். உனக்கு தனியா போய் சுதந்திரமா வாழனும்னு ஆசைப்பட்ட உங்க அப்பன் வீட்டுல போய் வாங்கி வா…” என்று எடுத்தெறிந்து சுசீலா பேசி விட,
தாங்கவில்லை நர்மதாவுக்கு… இது ரெண்டாவது முறை தன் அப்பா வீட்டை இழுத்து பேசுவது,
“என்ன எங்க அப்பன் வீடு. நான் என்ன சும்மாவா வந்தேன், இல்ல உங்க பையன் கூட ஓடி வந்தேனா… எல்லா சீரும் செஞ்சு முறையா தான் எங்க அப்பா கட்டி கொடுத்தார். முன்னாடி தெருவுல இருக்குற இடம் கூட எங்க அப்பா வாங்கி கொடுத்தது தான். நேத்து வந்து கூட இருபது பவுன் நகை கொடுத்துட்டு போறார். நீங்க உங்க வீட்டுல கேளுன்னு சொல்லாதீங்க. உன் புருசன் கிட்ட கேளுன்னு சொல்லுங்க. அது தான் நியாயம். ஒன்னும் புரோஜனமில்லாத சம்பாத்தியம் உங்க புள்ள காசு தான்…” நர்மதாவும் எதிர்த்து நின்றாள்.
நிரஞ்சனுக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. அழும் பிள்ளையை தூக்கி கொண்டு அப்போதே முகுந்தன் வெளியில் சென்று இருக்க, வித்யாவும் நகர்ந்து விட்டாள்.
“ நேத்து கூட ஒரு கோடிக்கு என் மகன் கார் வாங்கி கொடுத்து இருக்கான். அது உன் கண்ணுக்கு தெரியலையா? என் மகன் எதுவும் செய்யாத மாதிரி பேசுற… உனக்கு பெரியவன் மேல பொறாமை. அவன் சம்பாதிக்கிறான், சேர்த்து வச்சு வீடு கட்டுறான். உனக்கு என்ன வந்தது. ஜோடி சேர்த்து ஊர் சுத்தி செலவு செய்யும் போது எல்லாம் சேர்த்து வைக்கிற யோசனை எங்க போச்சு…” நக்கலாக கேட்டார் சுசீலா.
திரும்பி கணவனை பார்த்த நர்மதா,
“உங்க அம்மா பேசுறத பார்த்தீங்க தான… நான உங்களை கண்டபடி செலவு செய்ய சொன்னேன். எனக்கு ஆயிர கணக்குல சேலை எடுக்கவும், லட்ச கணக்குல வெளிநாட்டு டூர் போகவும், கோடில கார் வாங்கவும் நானா சொன்னேன். எவ்வளவு நாள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைங்கன்னு சொல்லி இருப்பேன். செலவு செஞ்சது எல்லாம் நீங்க… ஆனா சொல்லும் போது மட்டும் பொண்டாட்டியும் சேர்த்து சொல்லுறது…”
நிரஞ்சன் அமைதியாக தான் நின்றான்.
“உங்க அம்மா சொல்றாங்க, உங்க அண்ணன் மேல எனக்கு பொறாமையாம். மொத நான் ஏன் பொறாமை படனும். அவர விட என் புருசன் தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க. கேட்டது எல்லாம் கிடைக்குது. வைர நகையே கூட நான் வச்சு இருக்கேன். ஒரு கோடிக்கு கார் கூட இருக்கே. அப்படி இருந்தும் உங்க அண்ணன் மேல எனக்கு பொறாமைன்னு சொல்ல காரணம் என்ன?… ஏன்னா நாம மரியாதையான வாழ்க்கை வாழல. அந்த மரியாதையை கொடுக்குற அளவுக்கு நம்ம பொருளாதார நிலையை நாம உயர்த்தல. நீங்க பண்ணுற எல்லாம் ஆடம்பர செலவு தானே தவிர, மதிப்பு மிக்க செலவு இல்லை…”
“உங்க அண்ணனை மாதிரி நாமளும் சொத்து சேர்த்து வச்சு இருந்தா, வீடு மேல நமக்கு ஆசைன்னு சொல்ல மாட்டாங்க. நம்ம கிட்ட சொந்த வீடு இல்லை. அதனால் தான் வீட்டு மேல எனக்கு ஆசைன்னு உங்க அம்மா சொல்றாங்க . உங்க அண்ணன் தனியா வீடு வச்சு இருக்கதால உங்க அண்ணிக்கு ஆசை இல்லன்னு நினைக்கிறாங்க. ஆனா, உண்மையில உங்க அண்ணிக்கு தான் இந்த வீட்டு மேல ஆசை…” என்று ஆவேசமாக பேசியவள்,
“நீங்க ஒரு காலி பெருங்காய டப்பான்னு உங்க அம்மா கூட நினைக்கிறாங்க…” வாய்க்குள் முனங்கி கொண்டாள். ஒரு ஆதங்கத்தில் அந்த வார்த்தை வந்து விட்டது.
“என்ன சொன்ன…”
“என்ன சொன்னேன்…”
“ இப்ப என்னமோ என்னையே என்னை பத்தி…” பல்லை கடித்து கொண்டு நிரஞ்சன் கேட்க.
நர்மதாவுக்கு பயம் நெஞ்சில் நின்றது. ஒரு ஆதங்கத்தில் வார்த்தை வந்து விட்டது. திரும்ப எடுக்க முடியாதே. மெல்ல தான் சொன்னாள். ஆனால், எல்லோருக்கும் கேட்டது போல…
“எவ்வளவு பெரிய வார்த்தை பேசிட்டா…” என்று சுசீலாவும்…
“ இப்பவோ சேர்க்கணும்ன்னு என்னம்மா அவசியம். அவனுக்கு நல்ல வேலை, சம்பாத்தியம். உங்களுக்கு காலம் நீண்டு கிடக்கு…” என்று தாமோதரன் சொல்ல,
“காலம், நேரம் எப்ப மாறும்ன்னு தெரியாது மாமா. கடவுள் ஒரு நேரம் தான் உயர்த்துவார். எல்லா நேரமும் தூக்கியே விட மாட்டார். நல்ல நேரம் வரும் போது, வருமானம் பெருகும் போது சேர்த்து வைக்கிறதுல தப்பு என்ன மாமா?… யாருக்கு எப்போ என்ன நடக்கும்னு தெரியாது…”
“அப்போ எனக்கு ஏதாவது ஆகிடும். அதுக்குள்ள உனக்கு நான் சொத்து சேர்த்து வைக்கணும்ன்னு சொல்றியா நர்மதா…” அதே அழுத்தத்துடன் கணவன் கேட்க.
“ ஏங்க இப்படி பேசுறீங்க. நான் என்ன உங்க எதிரியா? நான் என்ன பேசினாலும் குறை சொல்லிட்டு, குத்தம் கண்டு பிடிச்சுட்டு… எதுக்கு இப்படி? உங்க பொண்டாட்டி தான நானு, என்னை தப்பானவளா காட்டி என்ன சாதிக்க போறீங்க. நீங்க என் புருசன். உங்களை அப்படி நினைக்கவாது செய்வேனா?”
“டீச்சர் நீ, உனக்கு பேச சொல்லியா கொடுக்கணும். என்னை பார்த்து இவ்வளவு பெரிய வார்த்தை சொல்லிட்டு, கடைசில நீங்க என் புருசன். உங்களை நான் அப்படி நினைப்பேனான்னு உருகுற…” என்றவன்,
“மொத எல்லாம் எம் பொண்டாட்டி அப்படி கிடையாதே. நான் சொல்ற சொல்லுக்கு நிப்பா… கொஞ்ச நாளாக தான் மாறி நிக்குற, ஏன்? யார் சொல்லி கொடுக்குறா? எனக்கு தெரியாம போய் பாக்குறையே உங்க அக்காவும், அப்பாவுமா?…”
“எதுக்கு எங்க அப்பா, அக்காவ இழுக்குறீங்க. யாரும் எனக்கு சொல்லி தரல. நான் என்ன குழந்தையா? எனக்கு சொந்த புத்தியே கிடையாது. யோசிக்கவே மாட்டேன… தேவையில்லாம என் குடும்பத்தை இழுக்குற வேலை எல்லாம் வேணாம்…”
“உன் வீட்டு ஆளுக என் குடும்ப விசயத்துல எதுக்கு தலையிடனும்… நீ சொல்லாம எப்படி உன் அக்கா காதுக்கு போகும். உங்க அக்கா யாரு? என்னை பேசுறதுக்கு அவ யாரு?…” கோபத்தோடு தான் வீட்டுக்கே வந்து இருக்கான் போல,
“எங்க அக்காவ அவன்னு எல்லாம் பேசாதீங்க…” கை நீட்டி எச்சரித்தாள் நர்மதா.
“அப்படி தாண்டி பேசுவேன். என்ன குடும்பமா சேர்ந்து எனக்கு பூச்சாண்டி காட்டுறீங்களா?… நீ என் பொண்டாட்டி, நான் என்னவும் சொல்லுவேன். உங்க அக்கா தலையிட கூடாது. அங்க இருந்துக்கு என் வீட்டுல ஃப்பிலிம் ஓட்ட கூடாது. இனி நீ உங்க அக்காவ போய் பார்த்த?…” நேரடி மிரட்டலில் இறங்கி விட்டான் நிரஞ்சன். ஆனாலும் பிருந்தாவை மரியாதை குறைவாக அடுத்த வார்த்தை சொல்ல வில்லை.
“என்ன பண்ணுவீங்க. அவ என் கூட பொறந்தவவ.. நான் போய் பார்த்து, பேச தான் செய்வேன். உங்க அண்ணனை நீங்க விட்டு கொடுக்குறீங்களா? அப்ப நான் ஏன் எங்க அக்காவ விட்டு கொடுக்கணும்…”
“விட்டு தான் கொடுக்கணும். ஏன்னா என்னை கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு தான் வந்து இருக்க. எங்களுக்கு தகுந்த மாதிரி தான் மாறனும். திரும்ப உங்க அக்கா விசயம் என் வீடு வர கூடாது. எவ்வளவு தைரியம் என்னை மிரட்ட. உனக்கு அக்காவே கிடையாது. உனக்கு சொல்லி கொடுத்து ஏத்தி விடுறது உங்க அக்காவும், அப்பாவும் தான். நான் என்ன ஒன்னுக்கும் ஆகதவனா? பாவம் பார்த்து எனக்கு உங்க அப்பா செய்யிராரா? எனக்கு தெரியாம என் பொண்டாட்டிய எதுக்கு பார்க்கணும்…” பிருந்தா சத்தம் போட்டதை கொண்டு, உறவை அடியோடு வெட்ட நினைத்தான்.
“ எங்க அப்பா, அக்காவ பார்க்க உங்களை எதுக்கு கேட்கணும். நல்லது தான் சொல்றாங்க. பெத்த பொண்ணு கெட்டு போகவா நினைப்பாங்க. உங்க தப்பை மறைக்க பாக்குறீங்க…” நர்மதாவும் விடவில்லை. இத்தனை நாள் அழுத்தம் வெளி வந்தது போல…
“உங்க அக்கா, அப்பா தான் முக்கியம்ன்னா எனக்கு எதுக்கு கழுத்தை நீட்டுன. இனி உங்க வீட்டு பேச்சு வந்துச்சு. அது தான் உனக்கு இங்க கடைசி நாள், அப்புறம் உன் வழிய தான் நீ பார்க்கணும்…”
“உங்க மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இத்தனை வருசம் வாழ்ந்து, ரெண்டு பிள்ளையும் பெத்த பின்னாடி நீங்க போன்னு சொன்னா, நான் போகணுமா? உங்களுக்கு கழுத்தை நீட்டுனா எனக்கு பொறந்த வீட்டு உறவே இல்லையா?…”
“இல்லை தான். உனக்கு பிறந்த வீட்டு உறவே இல்லை தான். உங்க அக்கா என்னை சீண்டி இருக்க கூடாது. என்னை பேசவும் ஒரு தகுதி வேணும். அவங்க வீட்டுக்கு என்னைக்காவது வந்து நின்னு இருப்பேனா? எனக்குனு ஒரு தகுதி இருக்கு. உங்க அக்கா பேசுற அளவுக்கு நான் தாழ்ந்து போகல…”
“நீங்க என்ன பைத்தியமா?..”
“நர்மதா…” கத்தினான் நிரஞ்சன்.
“உங்க கூட பொண்ணுங்க யாரும் பிறக்கல, அதான் அந்த பாசம் தெரியல. நான் கஷ்டம்னு நிக்கும் போது கூட பிறந்த உறவு துடிக்க தான் செய்யும். உங்களை கேட்க தான் செய்வா?…”
“அப்படி யாரும் என்னை கேள்வி கேட்க கூடாது. அப்படி என்னை கட்டி போடுற எந்த உறவும் எனக்கு தேவையில்லை. அது பொண்டாட்டியா இருந்தாலும்…” ஆணவமாக பதில் வந்தது.
“உங்களுக்கு கொஞ்சம் கூட புத்தியே கிடையாத… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அம்மா நான் பொறாமை படுறேன்னு எவ்வளவு பேசினாங்க. உங்க அண்ணி வீடு மேல ஆசைன்னு மறைமுகமாக உங்களை தான் குத்தி பேசினாங்க. அங்க எல்லாம் ரோசம் கிடையாது. அவங்களுக்கு பதிலும் சொல்ல மாட்டீங்க…”
“ நான் ஏதோ மனசு கேட்காம அழுதேன்னு எங்க அக்கா என்னவோ சொன்னாலாம், அதுக்கு எங்க தொப்புள் கொடி உறவ நான் விட்டு கொடுக்கணுமா? நல்ல நியாயம் உங்க நியாயம். அப்ப நான் அப்படி தான் சொல்லுவேன். நீங்க ஒரு காலி பெருங்காய டாப்பா…” ஆவேசத்தில் வார்த்தை வெடித்தது.
“நர்மதா…” என்று கத்தி கொண்டு நிரஞ்சன் கையை ஓங்க.
“சும்மா கத்தாதீங்க. அது தான் உண்மை. காலி பெருங்காயம் வெறும் வாசனைக்கு மட்டும் தான். வேற ஒண்ணுக்கு உதவாது. நீங்க வெறும் பந்தா, பகட்டு மட்டும் தான். வேற எதுக்கும் நீங்க ஆக மாட்டீங்க…” சொன்ன நொடி நர்மதா கன்னத்தில் படார் என்று அடி தொடர்ந்து மூன்று முறை விழுக,
தூர போய் விழுந்தாள். இதுவரை சண்டையை பார்த்து நின்றவர்கள் ஓடி வந்து நிரஞ்சனை பிடித்தார்கள்,
“டேய் என்னடா லூசா? கை நீட்டி இருக்க…” என்று தந்தை கத்த.
“விடுங்க ப்பா என்னை. அவளை தலையில தூக்கி வச்சதுக்கு என்னை எவ்வளவு பேசிட்டா…” எகிறி கொண்டு நின்றான் நிரஞ்சன்.
சுவர் ஓரம் பயந்து நின்ற குழந்தைகள், அப்பா அடித்ததும் விழுந்து கிடந்த அம்மாவை பார்த்து மூச்சடக்கி கத்தினாள் சாண்வி.
நிரஞ்சன் அடிப்பான் என்று நர்மதா உண்மையில் எதிர்பார்க்க வில்லை. இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட அடித்ததில்லை. கோபப்பட்டு கத்துவான், கை நீட்டியதில்லை. ஏற்கனவே முடியாமல் இருந்தவள், மயக்கம் வரும் போல இருந்தது. பிள்ளை அழுகவும் அவசரமாக பிள்ளையை தூக்க,
“ஏய் எம் பிள்ளையை தொடாதடி. நீ உங்க வீட்டு ஆளுக கிட்டவே போ… எம் பிள்ளைகளுக்கு நீ தேவையில்லை…” என்று தந்தையை தள்ளி கொண்டு வந்தவன்,
சான்வி, நர்மதா இடுப்பில் இருக்க, சஸ்டியை பிடித்து தன் பக்கம் இழுத்தான். பிள்ளை பயத்தில் பெத்தவள் நைட்டியை பிடித்து கொண்டு விடாமல் அழுக,
சுசீலா தான் நிரஞ்சன் முதுகில் ஒரு அடியை போட்டு, “விடுடா பைத்தியக்கார, பிள்ளைக்கு வீசிங் வந்துர போகுது…” என்றவர்,
“நர்மதா நீ மேல போ… எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம். போ… நீ பிள்ளைகளை கூட்டிட்டு போ…” என்று அதட்ட.
தாமோதரன், “நீ மேல போ ம்மா… அவன் என்னவோ சரியில்லை. நீயும் கூட கூட வாய் பேசாத. பிள்ளைகளை கூட்டிட்டு போய் தூங்கு…” என்று அனுப்பி வைக்க பார்க்க.
“அவ உள்ள போக கூடாது. நீ போடி உங்கப்பன் வீட்டுக்கு… நான் சொல்றத கேட்டு நின்ன தான் நீ எனக்கு பொண்டாட்டி. ஒன்னுமில்லாத வெறும் பைய கூட நீ வாழ வேணாம்…” என்று தோலை பிடித்து வெளியில் தள்ளினான்.
“ நிரஞ்சா என்னடா பண்ணுறா…” அவனை பிடித்து உள்ளே இழுக்க, தாவி கொண்டு வந்தான் நர்மதாவை தள்ள,
“யார் பேச்சை கேட்டு அவ ஆடுறா… யாரும் வேணாம்ன அவ வரட்டும்…” என்று நிரஞ்சன் கத்த.
பிள்ளைகள் அழுகையும் குறைய வில்லை. வெளியில் நின்றவர்கள் வாசலில் சத்தம் கேட்டு எட்டி பார்க்க, சாரதா சித்தியும் தன் வீட்டு வாசலுக்கு வந்து விட்டார்.
சுசீலாவுக்கு ஒரு மாதிரி இறக்கமான நிலை. அதுவும் ஆகாத சாரதா முன்…
“நர்மதா நீ உள்ள போ…” என்று சொல்ல,
சாரதா எட்டி நின்று மகளை பார்த்து தவித்தார்.
“ரெண்டு பிள்ளையோடு வாசல்ல நிக்ககுறா? என்ன ஆச்சு…” என்று பார்க்க.
நர்மதா பிள்ளைகளை கையில் பிடித்து கொண்டு அவரிடத்தில் தான் போய் நின்றாள். நைட்டியில் இருக்க, ஒரு பக்க கன்னம் வீங்கி, தலை கலைந்து இடுப்பில் ஒன்றும், கையில் ஒன்றுமாக பிடித்து நின்றவள்,
“நீங்க தான சித்தி எனக்கு சம்மந்தம் பார்த்தீங்க. எங்க அப்பா எங்களை எப்படி வளர்த்தார். நீங்க சொல்லி தான அவ்வளவு தூரம் இருந்து கட்டி கொடுத்தாங்க. நல்ல குடும்பம்ன்னு நீங்க சொல்லி தான் எங்க அப்பா விசாரிக்க கூட இல்லை. என் நிலைமையை பாருங்க. என் பொறந்த வீட்டை நான் விடனுமாம். இத்தனை வருசத்துல எங்க அப்ப கூட எங்க மேல கை வச்சது இல்ல…” சொல்லும் போதே கண்களில் நீர் நிறைந்து நின்றது.
பொறுக்க வில்லை சாரதாவுக்கு… சொந்தம், மகள் முறை, தன் கண் பார்க்க வாளர்ந்த பெண். தற்போது சுசீலா உடன் ஏற்பட்ட சடவில் தள்ளி கொண்டார்கள். அவருக்கும் அழுகை வந்தது. அவர் கணவர், ரெண்டு மகனும் கூட வந்து விட்டார்கள்.
நர்மதா அழுகை பார்க்க முடியவில்லை. அவர்கள் நிரஞ்சனோடு பேச வர, பிடிக்கவில்லை சுசீலாக்கு. குடும்ப விசயத்தை தெருவுக்கு இழுத்து அசிங்க படுத்தி விட்டாள் என்ற கோபம், உடனே பாலமரத்தானுக்கு அழைப்பு விடுத்தார்.
“என்ன பொண்ணுங்களை பெத்து வச்சு இருக்கீங்க. ரொம்பவும் அடங்காம வளர்க்க கூடாது. போற வீடு கெட்டு போகும். அப்படி தான் எங்க வீடு ஆகி போச்சு. உங்க பெரிய மக எதுக்கு எங்க வீட்டு விசயத்துக்கு வாரா… ஏதோ என் மகன் கூட சண்டை போட்டாளாம். நிரஞ்சனுக்கு அவ்வளவு கோபம். நர்மதா கூட இவ்வளவு நேரமும் சண்டை தான்…” என்று சுசீலா சொல்லும் போதே, போனை பிடுங்கிய தாமோதரன்,
“சம்மந்தி…” என்று அழைக்க,
“சம்மந்தி என்ன ஆச்சு. பிள்ளை கூட மருமகன் சண்டையா?” என்று பாலமரத்தான் பதற,
“அதெல்லாம் ஒன்னுமில்லை. பொதுவா புருசன் பொண்டாட்டி சண்டை தான். நீங்க எதுவும் நினைக்காதீங்க. நாளைக்கு மருமகளுக்கு போன் பண்ணி பேசுங்க…” என்று போனை வைத்தவர், மனைவியை பார்த்து முறைத்து,
“அந்த மனுஷன் முடியாதவர். குடும்ப சண்டையை அங்க போய் சொல்லுவியா? அவ்வளவு தூரம் இருக்கவங்களுக்கு பதட்டமாகாது…”
“தெரியட்டும் அவங்க மகள்க லட்சணம்…” என்று சுசீலா சொல்லும் போதே,
சாரதா, நர்மதாவை கூட்டி கொண்டு வந்து விட்டார்.
சாரதா கணவர் இரவு நேரத்தில் பிரச்சனையை பேசி தீர்க்க கூடாது என்று பொதுவாக தான் பேச வந்தார். கூடவே அவர் மகன்களும்…
ஆதரவு என்னவோ நர்மதாவுக்கு தான்.
“நாங்க என்ன உன்னை கொடுமையா படுத்துனோம். சொந்தம்ன்னு போய் ஆள் கூட்டி வாரையா…” வெடுக்கென்று சுசீலா கேட்க.
“தப்பே செய்யாம என்னை வீட்டை விட்டு போன்னு சொல்றாங்க உங்க பிள்ளை. வாசல்ல நின்னு வெளிய பிடிச்சு தள்ளுராரு, பாக்குற நாலு பேர் நான் தப்புன்னு நினைக்க மாட்டாங்க. அப்படி நான் என்ன தப்பு பண்ணேன். எனக்கு கல்யாணம் பண்ணி வச்சது சித்தியும், சித்தப்பாவும் தான். அவங்க கிட்ட சொல்லட்டும் தப்பு யார் மேலன்னு…” தைரியமாக சொன்னாள் நர்மதா.
“எங்க மாமா நல்ல குடும்பம்ன்னு நாங்க சொன்ன ஒரு வார்த்தைக்கு தான் உங்க பையனுக்கு கட்டி கொடுத்தாங்க. நீங்களா தான் நர்மதா பத்தி விசாரிச்சு பொண்ணு கேட்டீங்க. படிக்காதவங்க கூட பொண்டாட்டிய கை நீட்டுறது கிடையாது. அவ்வளவு நாகரீகம் வந்துருச்சு…” சாரதா வெடுக்கென்று நிரஞ்சனை குத்தி பேச,
சுசீலா மருமகளை தான் முறைத்து பார்த்தார்.
தாமோதரன் சங்கடமாக நிற்க, “இந்த நேரத்துல பஞ்சாயத்து வேணாம். நாளைக்கு காலையில வாரோம். வீட்டை விட்டு துரத்துற அளவுக்கு எங்க பொண்ணு என்ன தப்பு பண்ணாங்கன்னு உங்க பையன் சொல்லணும்…” என்று சாரதா கணவர் சொல்லி, பின் தன் குடும்பத்தை அழைத்து செல்ல…
நிரஞ்சன் வெளியே வர வில்லை. எங்கு இருக்கிறான் என்றும் தெரியவில்லை. நர்மதா தன் பிள்ளைகள் உடன் தன் அறைக்கு சென்று விட்டாள்.
தாமோதரன் தான் இட்லி வாங்கி வந்து நர்மதா அறைக்கு சென்று கொடுத்தார். பிள்ளைகளுக்கு ஊட்டியவள், தான் உண்ண வில்லை. எங்கே தன் வாழ்க்கை மாறி நின்றது. பஞ்சாயத்து வந்தால் வரட்டும். கழகம் பிறந்தால் தான் நியாயம் கிடைக்கும்.
பாலமரத்தான் அப்போதே கிளம்பி விட்டார் சென்னைக்கு…
“புருசன், பொண்டாட்டிக்கு இடையில சின்ன சண்டையா இருக்கும். தனியா நீங்க போகாதீங்க. காலையில உங்க மக கிட்ட கேட்போம்…” என்று மனைவி சொல்லியும் கேட்க வில்லை.
“முடியாது விஜயா. முந்தா நாள் தான் பிள்ளையை பார்த்தேன். என்னை பார்த்ததும் கண்ணில அவ்வளவு கண்ணீர். அப்பவே என் மனசு பதக்குன்னு இருந்துச்சு. பொறுமையான பிள்ளை சமாளிக்கும்ன்னு நினைச்சேன். சின்ன சண்டையோ, பெரிய சண்டையோ நான் போய் எம் பிள்ளைகளை பார்த்தா தான் எனக்கு நிம்மதி. நீ வர வேணாம். உனக்கு பேச தெரியாது…” என்றவர், அந்த ராத்திரியில் கிடைத்த பஸ்ஸில் சென்னைக்கு ஏறி விட்டார்.
ராத்திரி முழுக்க நர்மதாவுக்கு உறக்கம் இல்லை. லேசான கோழி தூக்கம் தான். தூங்க கூட நிரஞ்சன் அறைக்கு வர வில்லை. சிங்கத்தை சீண்டிய நிலை தான். மெல்ல எழுந்து முகம் கழுவி, பல் துலக்கி விட்டு குளிக்க ஆடையை களைந்தாள்.
கீழ என்னவோ ஒரு சத்தம். என்னவாம் என்று அமைதியாக நிற்க. சத்தம் தெளிவாக கேட்டது.
ஐயோ! அப்பா…” என்று மனம் பதற… அச்சோ அவன் கிறுக்கன். அவன் கிட்ட பேசாதீங்க… எங்க அந்த நைட்டி என்று கழட்டி போட்ட நைட்டியை திரும்ப அவசரமாக மாட்டி கொண்டு கீழ ஓடினாள் நர்மதா.
error: Content is protected !!