Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 17

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 17

     முதல் நாள் மதியம் வந்திறங்கிய கூட்டத்தை பார்த்து மிரண்டு போனாள் நர்மதா. அவளுக்கு மூனு அத்தை, ரெண்டு சித்தப்பா. இதில் தாய்மாமன் மூன்று பேர். இது உடன் பிறந்த வகையறா. அது இல்லாமல் ஒன்னு விட்ட சொந்தம், தாத்தா, அப்பாத்தா என்று இருபது பேருக்கு மேல் தான் வந்து இருந்தார்கள்.

   உண்மையில் அவளுக்கு கணவனை நினைத்து கதி கலங்கியது. சொந்த அக்கா, அப்பா வந்தாலே குதிப்பான். இப்படி குடும்பமே வந்து நின்றால் என்ன சொல்ல போறானோ…



Advertisement

     நிரஞ்சன் தன் நண்பன் அஸ்வினுக்கு அழைப்பு விடுத்தான். ஒரே கல்லூரி, வேலை என்று மிக நெருக்கம். அவனுக்கு மட்டும் உள்ளதை சொல்லி விடுவான். நாளை நடக்கும் பேச்சு வார்த்தைக்கு துணைக்கு அவனை மட்டும் அழைத்து கொண்டான்.

     பிருந்தா வீடு ஜேஜே என்று இருந்தது. செல்வ விநாயகம் மனைவிக்கு தக்க நடக்கும் ஆள். அத்தோடு அவனுக்கும் இவர்கள் எல்லாம் சொந்தம் என்பதால் பெரிதாக வேறுபாடு தெரிய வில்லை.

    சமையல் வேலையோடு நிரஞ்சனை பற்றிய பேச்சும் ஓடியது.

Advertisement

  நர்மதா மூத்த அத்தை கலாவதி, “எங்க அண்ணனை சொல்லணும் நம்ம பக்கம் மாப்பிள்ளையே இல்லாத மாதிரி தேடி பிடிச்சாரு பாரு… கடைசில மருமகன் கைல அடி வாங்கினது தான் மிச்சம்…”

Advertisement

இரண்டாவது அத்தை மாலா, “அண்ணன் மேல ஏன் தப்பு சொல்ற. அது நல்லது நினைச்சு தான் செஞ்சு வச்சது. நம்ம வீட்டுக்கு வந்தவளை தான் சொல்லணும். வெளியூர் மாப்பிள்ளை, பணக்காரனதும் பல்லை காட்டிட்டு கட்டி கொடுத்தாச்சு. ஒன்னும் விசாரிக்கல…”

  மூன்றாவது அத்தை ராணி, “அந்த விஜயாவுக்கு பொண்ண வீட்டுல வச்சு இருந்தா எங்க நம்ம வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்ன்னு எண்ணம். நம்ம வீட்டுக்கு குடுக்க கூடாதுன்னு தான் அவசரமா வெளியூர் மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்தது…”

  கலாவதி, “அது என்னவோ உண்மை தான். அத்தைக நாம மூணு பேர் இருக்கோம். ரெண்டு பேர்ல ஒருத்திய கூட நம்ம வீட்டுக்கு அனுப்ப நினைப்பு இல்லை பாரு…”

Advertisement

    “வசதியானவன்னு வெளிய பார்த்தாங்க. அவன் அவன் வசதிக்கு தக்க மாமனார் வீட்டை வர கூடாதுன்னு சொல்லிட்டான். சொந்தம்ன்னா விட்டு கொடுப்போமா…” என்று ஆளாளுக்கு பேச,

  இது என்ன புது பிரச்சனை என்று தான் தோன்றியது பிருந்தாவுக்கு… தங்களை ரொம்ப இளக்காரமாகவும், மட்டமாகவும் நினைக்கும் ஆட்கள் தான் நிரஞ்சன் வீடு… எங்களுக்கும் ஆள் பலம் இருக்கு, உங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்து போக வில்லை என்றும், ரொம்ப அசால்டாக கை வைத்த அவனை எச்சரிக்கும் விதமாக தான் சொந்தங்களை கூட்டியது.

     “அத்தை எப்போ போன பேச்சை எப்போ வந்து பேசுறீங்க. இப்படி பேசவா உங்களை ஊர்ல இருந்து கூட்டி வந்தேன்…” காட்டமாக பிருந்தா சொல்ல,

     “ஒரு ஆதங்கம் தான் பிருந்தா. நம்ம ஊர்ல, நம்ம ஆளுகள்ல மாப்பிள்ளையே இல்லாத மாதிரி தேடி பிடிச்சாங்க உங்க அம்மாவும், அப்பாவும்… அவன் யாரோவா இருக்க போய் தான மேல கை வச்சான்…” என்று மாலா சொல்ல,

        “அத்தைக நாங்க மூணு பேர் இருக்கும் போதே வெளிய பொண்ணு கொடுத்தா உங்க அம்மா… இதுவே நாங்களா இருந்தா எங்க அண்ணன் பொண்ணை அப்படி வீட்டை விட்டு துரத்த விடுவோமா? அண்ணன் மேல கை வைக்க விடுவோமா?…”

     பால மராத்தானே ஒரு கட்டத்தில் நினைத்தார் தான். சொந்தத்தில் கொடுத்து இருந்தால் இவ்வளவு கஷ்டம் பிள்ளை பட்டு இருக்காதோ என்று…

  வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் விஜயாவை தான் குத்தியது. நல்ல வசதியான இடம் என்று சொந்தத்தில் அத்தனை மாப்பிள்ளை இருக்க, நிரஞ்சனுக்கு பேசி முடித்ததும் இவர் தான்.

     இதுவரை கூட மருமகன் மேல் கோபத்தில் இருந்த விஜயா. தன் நாத்திகள் பேசியதும் ஒரு தெளிவு கிடைத்தது.

    நர்மதா தாலியை கழற்றி கொடுத்ததாலோ என்னவோ மாப்பிள்ளை என்ற மரியாதை போய் நிரஞ்சனை வறுத்து எடுத்தார்கள்.

   அப்படி செய்து இருக்க கூடாதாதோ என்றெல்லாம் யோசித்தாள். ஆனால், அவளாக ஒன்றும் வெளியேற வில்லையே. கையை பிடித்து இழுத்து வெளியில் விட்டான், தந்தையை தள்ளி விட்டான். தன் அப்பா மேல் கை வைத்தவணை ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்று ஆத்திரமும், ஆதங்கமும் அவளை இந்த முடிவு எடுக்க வைத்து விட்டது.

 இன்றும் கணவன் மேல் கோபம் இருக்கிறது. அதே நேரத்தில் யாராவது அவனை ஒரு வார்த்தை சொன்னால் மனம் வலிக்கவும் செய்கிறது.

   பிருந்தாக்கு தங்கை மனம் புரிய தான் செய்தது. ஆனால், பேச்சு வார்த்தைக்கு தாங்கள் மட்டும் சென்றால் நிரஞ்சன் அசால்டாக பேசி விடுவான். ஆளும் பேருமாக போய் நின்றால் கொஞ்சம் பார்த்து பேசுவான், அவன் மரியாதைக்காக…

  விஜயா மகள் அருகே வந்து அமர்ந்தார். தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் நர்மதா.

  “பார்த்தியா உங்க அத்தைக பேசுற பேச்சை. உனக்கு நல்ல வழி காட்ட யாரும் வரல போல… எல்லாருக்கும் உம் மேல பொறாமை. நம்ம பக்கத்திலேயே நீ தான் வசதி. மாப்பிள்ளை ஒரு கோடிக்கு கார் வாங்கி இருக்காராம். எனக்கு தெரியவே இல்லை…”

  “அவ்வளவு பெரிய கார்ல புருசன், பிள்ளைகளோடு நீ நம்ம ஊருக்கு வந்து இறங்குன எம்புட்டு மரியாதை. அதை விட்டு யார் முன்னாடி எல்லாம் எம் மகள்க பெருமையா வாழனும் நினைச்சு இருந்தேனோ, அவங்களே உன் வாழ்க்கைக்கு பஞ்சாயத்து பண்ற மாதிரி ஆகி போச்சு. நீ கொஞ்சம் அனுசரிச்சு போயிருக்கலாம்…” என்று சடவாக சொல்ல,

  லேசாக கண் கலங்கியது நர்மதாவுக்கு…

  “அம்மா! அந்த மனுசன் வீட்டு வாசப்படியில நின்னு என்னை வெளிய தள்ளி விட்டார். மொத நாளே சண்டை தான். அப்பவே அடிக்க தான் செய்தார். வாய திறக்கல. வீட்டை விட்டு போகவும் இல்லை. மறுநாள் அப்பா வரவும் தான் அடிச்சதே தெரியும். யார்டையும் சொல்லல…”

  “அப்படி தான் இருக்கணும் நர்மதா. நீ ரெண்டு பொம்பளை பிள்ளைக வச்சு இருக்க. எவ்வளவு நாளைக்கு அக்கா வீட்டிலே இருக்க முடியும். காலையில சண்டை போட்டா ராத்திரி சேர்ந்துகிறது தான் புருசன், பொண்டாட்டி… அதை விட்டு கல்யாணம் பண்ணி, ரெண்டு பிள்ளையும் வந்ததுக்கு அப்புறம் சண்டை, பஞ்சாயத்துன்னு போன அசிங்கம் இல்லை…” நறுக்கென்று சொல்லி விட்டார்.

      அவமானமாக இருந்தது. ஆனாலும் சொல்லி விட்டாள், “அக்கா கூட பேச கூடாது. அப்பா வர கூடாதுன்னு எல்லாம் சொன்னாங்க. இதையும் சரின்னு சொல்லி அனுசரிச்சு போகணுமா?…” ஆதங்கமாக கேட்டாள்.

     “அப்போதைக்கு சரின்னு சொல்லி பிரச்சனையை முடிச்சு இருக்கலாம் நர்மதா. அதையும் விட உங்க அக்காவா காலத்துக்கும் உன்னை பார்க்க போறா… உன் புருசன் வீட்டுல இருந்தா தான் உனக்கு மரியாதை… எந்த குடும்பத்துல தான் சண்டை இல்லை. பார்த்த தான உங்க அத்தைக மூணு பேரு, உங்க அப்பத்தா வேற இருந்தாங்க. அதையும் சமாளிச்சு நான் வாழ போயி தான் நீ, உங்க அக்கா, உன் தம்பி எல்லாம் படிச்சு, நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி போய் இருக்கீங்க…” என்று புலம்ப,

   முகத்தை திருப்பி கொண்டாள் நர்மதா.

  “என் கிட்ட முகம் காட்டி என்ன பண்ண?… புருசன் கோபப்படும் போது கொஞ்சம் நயந்து தலையாட்டிட்டு, அப்புறமா உன் கைக்குள்ள போட்டுக்கோ… என் பிள்ளைக எப்படி வாழ்றாங்க பாருன்னு இவள்க முன்னாடி காட்ட நினைச்சா, கடைசில மானம் போச்சு…” விஜயா மேலும் பேச,

   “என்னை விடவா உனக்கு மானம் போச்சு. நான் பட்ட அசிங்கத்தை விடவா நீங்க அதிகம் பட்டீங்க. எங்க அப்பாவ பிடிச்சு தள்ளும் போது பதறி போய் நான் என்ன நிலையில இருந்தேன்னு எனக்கே தெரியல… அந்த நேரம் நிதானமா, யோசிச்சு எல்லாம் செயல் பட முடியாதும்மா… எல்லா நேரமும் கட்டுப்பட்டு இருக்கவும் முடியாது. நீங்க யாரும் எனக்கு பஞ்சாயத்து பண்ண வேண்டாம். என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்…” என்றவள்,

    “நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் ஆகி எட்டு வருசம் ஆச்சு. ரெண்டு பிள்ளையும் பெத்த பின்னாடி புருசன் கூட சண்டை போட்டு கோபிச்சுட்டு வந்து என்ன ஆக போகுது. எப்படி இருந்தாலும் அந்த மனுசன் கூட தான் வாழ்க்கைன்னு ஆன பின்னாடி எனக்கு எதுக்கு வீராப்பு. இனி நான் பார்த்துக்கிறேன். நீங்க நல்ல படியா ஊர் போய் சேருங்க…” என்றவள்,

  தன் கை பையை எடுத்து கொண்டு உறங்கி கிடந்த பிள்ளையை தோலில் போட்டு கொண்டாள். பெரிய பெண் எங்கே என்று தேட, பெரியம்மா மடியில் இருந்தது.

    “நீ வா சஸ்டி. அக்கா நான் போறேன்…” என்று இரு பிள்ளைகளையும் கூட்டி கொண்டு நடக்க,

   “ குடிய கெடுத்தா…” என்றபடி ஓடி வந்தார் விஜயா.

     முதலில் என்ன நடக்குது என்று புரியாமல் பார்த்த பிருந்தா, அடுத்து “அடியே நர்மதா” என்று பின்னவே ஓடி வந்தாள். ஆனாலும் அவளை தொட முடியவில்லை.

 என்னவோ ஒரு கோபம், வெறி நர்மதாவுக்கு… கையில் பிள்ளை இழு படுகிறது என்று கூட உணராமல் இழுத்து கொண்டு நடந்தாள்.

  வேகமாக ஓடி வந்த பிருந்தா, படாரென்று தங்கை முதுகில் ஒன்று போட்டு தான் நிப்பாட்டினாள்.

     “குடுடி பிள்ளையை, பைத்தியகாரி…” என்று பிருந்தா கத்த,

   “பிருந்தா என்ன இது. நர்மதா முடியாம இருந்து இப்ப தான் ரெண்டு நாளாக நல்லா இருக்கா, அடிக்கிற…” என்று விநாயகம் சத்தம் போட,

     பால மரத்தான் மனைவியை பார்த்தவர், “நான் முன்னவே சொன்னேன். வாய மூடி இருக்குறத இருந்தா இரு இல்லை ஊருக்கு போ முதல்ல…”

   “எல்லாம் நீங்க குடுக்குற இடம் தான் அண்ணே… ஆரம்பத்திலேயே பொண்டாட்டிய அடக்கி வைக்கிறது இல்லை…” என்று அத்தைகளும் சத்தம் போட,

    “என்ன ஆளாளுக்கு பேசுறீங்க. அவளை பெத்தவ நான்… எனக்கு அக்கறை இருக்காது. அவ நல்லா வாழணும்ன்னு தான் ஏதோ கோளாறு சொன்னேன்…” என்று விஜயாவும் சொல்ல,

   “என்னத்த கோளாறு… வீட்டை விட்டு வெளிய துரத்தி இருக்கான். நியாயத்துக்கு நாம எல்லாம் சண்டைக்கு போய் இருக்கணும். அதை விட்டு இறங்கி போய் சமாதானம் தான் பண்றோம்…” என்று பெரிய அத்தை சொல்ல,

      “பெத்த பிள்ளைக்கு நாமளே ஆதரவு கொடுக்கலன்னா எங்க போகும். நர்மதா மாமியாரை பார்த்த தான, தப்பு பண்ணிய அந்த மகனவே, என் மகன் மாதிரி வரும்மான்னு தூக்கி வச்சு ஆடுறாங்க. நம்ம பிள்ளை பக்கம் தான் நாம நிக்கனும்…”

 விநாயகம், “ஏற்கனவே நொந்து போய் இருக்கு நர்மதா. நீங்களும் பேசி விரட்டுன எங்க போகும். நாம தான் பார்க்கணும். அப்புறம் நிரஞ்சன் சொல்ற மாதிரி கட்டி கொடுத்தா உறவு இல்லாம போகுமா? நீங்க இப்படி பேசுனா, உறவு விட்டு தான் போகும். நாலா பக்கமும் நர்மதாவவே குத்தம் சொன்னா அது எங்க போகும். ரெண்டு பிள்ளையோடு ஏதாவது பண்ணிக்கிட்டா… அப்புறம் அழுது புரண்டாலும் என்ன பலன்…” என்று என்றும் பேசாத மருமகனே சொல்லவும்,

  ரொம்பவும் பயந்து போனார் விஜயா.

  “அம்மா சொல்ற எதையும் காதுல வாங்காத … நீ என் வீட்டுல தான் இருக்க. மொத நல்லா தூங்கி எந்திரி… நாளைக்கு உங்க வீட்டுக்கு போறோம்…” என்று பிருந்தா சொல்லி செல்ல,

   ஒரு பக்கம் சாய்ந்து படுத்து நர்மதாவுக்கு தலையனை நனையும் அளவுக்கு கண்ணீர் வந்தது. நெஞ்செல்லாம் வலி. என்ன இல்லை. புருசன், பிள்ளை, பெற்றோர், சுற்றியும் தாங்கும் சொந்தம், வசதி, நல்ல வேலை என்று எல்லாம் இருந்தாலும், என்னவோ தனக்கென்று யாருமில்லாத உணர்வு. நாம் தனி ஆளோ என்ற எண்ணம் தூக்கி நின்றது.

      நிரஞ்சன் என்ற ஒருவன் சரியாக இருந்திருந்தால் இவ்வளவு தேவையில்லை. இதுவரை நடந்ததை கூட நேர காலம் என்று விட்டு விடலாம். இதற்கு பின்னாவது நேர வந்து அப்பாவை பார்த்து பேசி இருக்கலாம். இனி இவ்வாறு நடக்காது என்று ஒரு மன்னிப்பு கேட்டாலே போதும் அப்பா இறங்கி வருவார்.

       தப்பு செய்தவன் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டால் என்ன?… இத்தனை பேர் வைத்து பஞ்சாயத்து தேவையே இல்லை. அம்மா சொல்வது போல முப்பது கடந்து புருசன் கூட சண்டை என்று ஊர் கூட்டி பேச வேண்டுமா?…

   மனம் அழுத்த சிரமப்பட்டு கண் மூடினாள். நர்மதா போன் அழைப்பு வந்தது. யார் என்று பார்க்க, சுசீலா தான். இருக்கும் மன நிலையில் பேச முடியாது. எடுக்காவிட்டாலும் அதை ஒரு குறையாக நாளை பேசுவார்…

  “ஹலோ, அத்தை…” குரல் தன்மையாக வந்தது.

    “எப்படி இருக்க நர்மதா. நீ இல்லாம வீடு வீடாவே இல்லை. என் பேத்திகளை எங்க?… என்னை கேட்டாங்களா? அவங்க கிட்ட போனை கொடு…” என்று சுசீலா சொல்ல,

   “அவங்க தூங்குறாங்க அத்தை…”

    “ம்ம் என்னத்த சொல்ல.. நீ ஏன் நர்மதா புதுசா வீம்பு பிடிக்கிற… உன் புருசன் குணம் உனக்கு தெரியாதா!… அவனை குத்தம் சொல்லி அங்க போய் இருக்க. நாளைக்கு உன் வீட்டு ஆளுக உன்னை தான் மதிக்க மாட்டாங்க…”

   ‘நீங்களும் உங்க மகனுக்கு தான் ஆதரவு கொடுக்குறீங்க. அதுசரி, என்னைக்கு பெத்தவங்க பிள்ளையை விட்டு கொடுத்து இருக்காங்க…” என்று ஆதங்கமாக நர்மதா சொல்ல,

  “7என்ன நர்மதா இப்படி சொல்ற… என்னை கூட விடு உன் மாமா எல்லாம் உன் பக்கம் தான் நிற்கிறார்…” என்று சொல்ல,

  அது உண்மை என்பதால் அமைதியாக இருந்தாள் நர்மதா.

     “எல்லாம் கண் பார்வை தான் வேறென்ன.. உங்க அக்கா கண்ணு இருக்கே.. சரியான கொல்லி கண்ணு…” என்று சுசீலா சொல்ல,

  “அத்தை நீங்க எங்க அக்காவ சொல்றீங்க…” என்றால் அதிர்ந்து.

    “ஆமா… நம்ம வீட்டுல முகுந்தன், நிரஞ்சன் ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் சம்பாதிக்கிறாங்க… ஆனா, உங்க வீட்டுல உன் அளவுக்கு உங்க அக்கா வசதி இல்லை. பத்து வருசம் ஆச்சு சொந்த வீடு கூட இல்லை. உன்னை பார்த்து புகைய தான் செய்யும். நம்ம குடும்ப சண்டையை அவளுக்கு தீனி போடாத. நல்ல படியா வீடு வந்து சேரு…” என்று மாமியார் சொல்ல,

    “சண்டை போட்டு வந்தாலும் எங்க அத்தைன்னு எண்ணம் இருக்கு. என்னை வெறுக்க வச்சுறாதீங்க. உங்க மகன் என்ன பேசினாலும் அடங்கி போற நான், இன்னைக்கு மல்லுக்கு நிக்கிறது எதனால? எங்க வீட்டு ஆளுகளை பேசுனதால…” என்று போனை கட் பண்ணி திரும்பி பார்க்க,

  அங்கு கோபத்தோடு நின்று இருந்தாள் பிருந்தா.

   மறுநாள் பரபரப்பாக தயாரானான் நிரஞ்சன். அவன் கூடவே இருந்தான் நண்பன் அஸ்வின்.

  “சும்மா இருக்க முடியாம ஒரு சண்டையை போட்டுட்டு நான் படுற பாடு இருக்கே…” என்று புலம்பி கொண்டான்.

   கல்யாணம் செய்து நர்மதாவை அவள் கணவன் வீட்டில் விடும் போது வந்ததது. இன்று தான் சொந்தம் எல்லாம் வந்தது.

     நிரஞ்சன் பக்கம் அவன் குடும்பத்தோடு அஸ்வின் மட்டும் தான். நர்மதா பக்கம் சொந்தமே இருபது ஆட்கள். இதில் வீட்டு ஆட்கள், சாதர வீட்டு ஆட்கள் என்று நிரஞ்சன் வீட்டுக்கு வந்து இறங்க,

  மலைத்து போனான் நிரஞ்சன்.

  “என்னடா அஸ்வின் இது… ஆபீஸ் மீட்டிங் மாதிரி இவ்வளவு பேர்…”

   “நல்லதுன்னு நினை. குடும்பமா போலீஸ் ஸ்டேஷன் போகாமா பரவாயில்லை வீட்டுக்கு வாறாங்க…” என்று அஸ்வின் சொல்ல,

  “ என் பொண்டாட்டி நான் அடிப்பேன். இவங்களுக்கு எதுக்கு பதில் சொல்லணும்…” என்று வீம்பாக சொல்ல

   “என்னடா பேசுற நிரஞ்சா… என் கார் நான் உடைப்பேன்ற மாதிரி. பொண்டாட்டி என்ன நாம காசு கொடுத்து வாங்குன பொருளா? அடிச்சு வெளிய தள்ளி இருக்க, கேட்க தான் செய்வாங்க…”

    “அடிக்கிற கை தான் அணைக்கும். அது எம் பொண்டாட்டிக்கு புரியல…”

  “ம்ம், உன் மச்சாங்களுக்கு புரிஞ்சு இருக்கு, வந்துட்டாங்க பாரு…” என்று நக்கலாக அஸ்வின் சொல்ல,

  முன்னே வந்து பார்த்தான் நிரஞ்சன். எல்லோரும் வந்து இருந்தாலும் நர்மதா மட்டும் தனியே தான் வந்தாள். பிள்ளைகளை உடன் அழைத்து வராத போதே நிரஞ்சன் கண்டு கொண்டான். அவள் இங்கு தங்கும் நோக்கத்தில் வரவில்லையென்று…

     “பிள்ளைகளை விட்டுட்டு நீ மட்டும் எதுக்குடி வந்த…” என்று மனைவி அருகில் வந்து சொல்ல,

  கணவனை முறைத்து கொண்டு தன் அக்கா கை பிடித்து முன்னே சென்றாள் நர்மதா.

      அவனை இழுத்து வந்த அஸ்வின்…

     “உனக்கு பேசவே தெரியாதாடா மச்சான். எதுக்கு வந்தன்னு கேக்குற… அவங்க வரணும்ன்னு தான காத்து கிடந்த…”

   “பிள்ளைகளை விட்டு தனியா வந்து இருக்கா…”

     “அப்ப பிள்ளைகளை ஏன் கூட்டி வரலைன்னு கேளு. அதை விட்டுப் நீ ஏன் வந்தன்னு கேட்டா என்ன அர்த்தம். உன் பிள்ளைக மட்டும் போதுமா? உன் ஒய்ஃப் வேணாமா? யோசித்து பேசுடா… ஆளுக வேற நிறைய வந்து இருக்காங்க. என்னத்தையாவது பேசாம, எல்லாத்துக்கும் தலையாட்டி தப்பு என் மேல தான்னு அமைதியா நில்லு… அது தான் உன் வாழ்க்கைக்கு நல்லது..” என்று அறிவுரை வழங்க.

    நிரஞ்சன் மெளனமாக நின்றான்.

     “ உங்க தம்பி குடும்ப பிரச்சனைக்கு என்னை எதுக்கு எங்க அம்மா வீட்டுக்கு விடாம இருக்கு சொன்னீங்க…” அறையில் சண்டைக்கு நின்றாள் வித்யா.

    “இங்க பாரு, இந்த பிரச்சனை ஆரம்பிச்சது உன்னால தான். என் தம்பி குடும்பத்திலும் சண்டை. இதுல நாமளும் சண்டை போட கூடாதுன்னு தான் அமைதியா போனேன். நிரஞ்சன் அடாவடியாக நின்னாலும் நர்மதா வேணும்ன்னு நினைப்பான். எனக்கு தப்புன்னா தப்பு தான்…” என்று முகுந்தன் சொல்ல, அமைதியானாள்.

        வந்திருந்த ஆட்கள் எல்லாம் பட்சனை முடிந்து, பொதுவாக நல விசாரிப்பு முடிந்த பின், வீட்டிற்க்கு மூத்தவர் நீதியழகன் தாத்தா பேச்சை ஆரம்பித்தார்.

    “என்ன சம்மந்தி இது? இத்தனை வருசம் நல்லா தான போச்சு. ஒரு குறை சொல்ற படி எங்க மருமகனும் நடந்தது இல்லை. ஒரு நேரம் சண்டை வர தான் செய்யும். கை நீட்டுரது கூட தப்புன்னாலும் நிதானதுல இல்லைன்னு ஆகும். என்ன கோபமா இருந்தாலும் வீட்டை விட்டு வெளியே தள்ளுறது என்ன கணக்கு? அதுக்கு எதுக்கு எங்க பிள்ளையை உங்க வீட்டுல குடுக்கணும்…”

   “புருசன் சொத்து தனி பொண்டாட்டி சொத்து தனின்னு எதுவும் இருக்கா? நர்மதா வீடு எது? இது தான அந்த பிள்ளை வீடு. ஒரு மகனோட கடமை எல்லாம் அந்த வீட்டு மருமகளை தான் சாரும். அப்படி எங்க பிள்ளை எதுவும் பொறுப்பில்லாமல், பெரியவங்களை மதிக்காமல், வீட்டு வேலை செய்யாம எதுவும் இருக்கா சொல்லுங்க? நாங்க கேட்கிறோம்…” தன்மையாக தான் பேச ஆரம்பித்தார்கள்.

        “அப்படி எல்லாம் இல்லைங்க சம்மந்தி. எங்க மருமகளை நாங்க குறை சொன்னா எங்களை பாவம் வந்து சேரும். வேலைக்கு போற நேரத்துல கூட எங்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியா செஞ்சிட்டு தான் போகும். நர்மதாவ ஒரு குறையும் சொல்ல முடியாது…” என்று தாமோதரன் சொல்ல,

   வேற என்ன வேண்டும் பெண்ணை பெற்றவர்களுக்கு…

 லேசாக சிரித்த தாத்தா, “புருசனுக்கான கடமையில பங்கு பொண்டாட்டிக்கும் இருக்கும் போது வீட்டுல மட்டும் எப்படி உரிமை இல்லாம போகும்… எல்லா வேலையும் செஞ்சு, வீடு, பிள்ளைக, புருசன், மாமனார், மாமியார் வரைக்கும் தாங்கி நிக்கிற மருமகளுக்கு வீட்டுல உரிமை இல்லன்னு உங்க மகன் எப்படி சொல்லலாம் சம்மந்தி. இது நியாயமா?…”

 “ஐயோ அப்படி இல்லங்க. நர்மதா வீடும் இது தான். அவன் ஏதோ கோபத்துல…” என்று தயங்கி சொல்ல,

   “கட்டி கொடுத்தா ஒரு பொண்ணுக்கு பொறந்த வீடு அந்நியமா போகுது. புகுந்த வீடு தான் நிரந்தரமா ஆகும். செத்து பாடையில போகும் போதும் வாக்கப்பட்ட வீட்டுல இருந்து தான் வெளியே வரும். பொறந்த வீடுன்னு அங்க யாரும் கொண்டு போக மாட்டாங்க. சாகுற வரைக்கும் உரிமை உள்ள வீட்டை, உங்க மகன் எப்படி எம் பேத்திக்கு உரிமை இல்லன்னு சொல்லலாம்…”

  நர்மதாவுக்கு மூக்கு விடைத்தது. இத்தனை பேர் சுற்றி நிக்க, அழுது விட கூடாது என்று அடக்கி கொண்டாள்.

   “அடிச்சது தப்பு தான். ஆனா, அதுக்காக பஞ்சாயத்து கூட்டல. எப்படி வீட்டை விட்டு வெளியே தள்ளி விடலாம். அப்ப எட்டு வருசமா எங்க பிள்ளை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? யாரை வீட்டை விட்டு துரத்துவாங்க ? நடத்தை சரியில்லாத பொண்ணை தான். எங்க பிள்ளையை தங்கமா வளர்த்து கட்டி கொடுத்தா… அடிச்சு வெளியே துரத்துவீங்க. எங்க வீட்டுல சாப்பாட்டுக்கு வழி இல்லாமவா உங்க மகனுக்கு கட்டி கொடுத்தோம். இதுக்கா நல்லது பேசி, எங்க வீட்டு படியேறி பொண்ணு கேட்டு வந்தீங்க…” வாதம் தொடங்கியது.

   தாமோதரன், நிரஞ்சன் யாரும் வாய் திறக்க வில்லை. என்ன நியாயம் பேச முடியும். எழுந்து நின்று பதில் பேசியவர், திரும்ப அமராமல் குற்ற உணர்வோடு நிக்க,

 கணவர், மகனை பார்த்து தாங்கவில்லை சுசீலாக்கு…

   “பெரியவன் மகன் கை பிள்ளை. அவனுக்கு ஒரு இட்லி ஊத்தி கொடுக்க கூட உங்க மகளுக்கு மனசு இல்லை. உடம்பு முடியாம ஒரே அழுகை. மூச்சு விட முடியாமல் கஷ்ட பட்டான். சின்ன பையன், அவன் மேல என்ன கோபம். அவனுக்கு ஒரு வாய் சாப்பாடு செய்ய நர்மதா வரல. அந்த கோபம் தான் என் மகனுக்கு…”

 எழுந்து கொண்டாள் பிருந்தா. நர்மதா நின்று கொண்டு தான் இருந்தாள்.

   “நான் பேசிறேன் தாத்தா. வீட்டுல எல்லா வேலையும் பாக்குறது யாரு? …”

    “ நர்மதா தான். ஆனா, அன்னைக்கு அழுகுற பிள்ளைக்கு உதவி பண்ண வரல. அவளுக்கு பெரியவன் குடும்பம் வந்தது பிடிக்கல போல…”

 “என்ன பிடிக்கல. காலையில எல்லா வேலையும் நர்மதா தான் பார்த்து வச்சுட்டு போறா. சாயங்காலமும் அவ தான் வந்து பார்க்கணுமா?… அப்புறம் எதுக்கு பெரிய மருமக…”

  நிரஞ்சன் கடுகடுத்தான். இதோ வீட்டு விசயம் எல்லாம் பிருந்தாக்கும் தெரிந்து இருக்கு… இது தானே பிடிக்காத ஒன்று…

 “ அவ கை குழந்தை வச்சு இருக்கா… கொஞ்ச நாள் போகட்டும்ன்னு தான் நர்மதாவ பார்க்க சொன்னோம். பிடிக்கலன்னா சொல்ல வேண்டிய தான…”

    “அவ எப்படி சொல்லுவா? மாமியார் சொல்லை மீற முடியுமா… எல்லா நாளும். வேலை செய்யிறவ ஒரு நாள் வேலை செய்யலன்னா என்ன ஏதுன்னு விசாரிக்க தான் வேணும். அவளும் மனுஷி தான. வீட்டு வேலையும் பார்த்து, வெளி வேலைக்கும் போயி, திரும்ப வீட்டு வேலை பார்க்க முடியுமா?…” என்று பிருந்தா சொல்ல,

   “அன்னைக்கு குழந்தைக்கு ரொம்ப முடியல, பசி வேற. அதான் சாப்பாடு வச்சு கொடுக்க கேட்டேன். மேல போய் கதவை அடச்சவங்க தான். குழந்தை அவ்வளவு அழுகை. சஸ்டி கிட்ட சொல்லியும் வரல…” என்று வித்யா பதில் பேச,

   “சரி அவ வரல. நீயே உம் பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்க வேண்டிய தான. அவ வந்து தான் செஞ்சு கொடுக்கணும்னு என்ன இருக்கு? உம் பிள்ளைக்கு நீ பார்க்கலாம் தான…” என்று பெரிய அத்தை கேட்க.

   “தம்பி அழுதுட்டே இருந்தான். யார் கிட்டயும் போக மாட்டான்…”

   “தூக்கி வச்சுட்டுடே தான்ம்மா வேலை பார்க்கணும். நம்ம பிள்ளைக்கு ஒன்னு தேவைன்னா மத்தவங்க வர வரைக்கும் காத்து இருக்க முடியுமா?…” இரண்டாவது அத்தை கேட்க.

      “ நர்மதா எல்லாம் இடுப்புல பிள்ளையை வச்சுட்டே தான் வேலை செய்வா… தோசை ஊத்தும் போது கூட சின்னது அவ இடுப்புல தான் இருக்கும். அவ யார் கிட்ட மல்லுக்கு நின்னா…” என்ற பிருந்தா,

   “உன் பையன் மூணு மாசம் குழந்தையா இருக்கும் போதே துபாய்க்கு போயிட்ட. அங்க யாரு பிள்ளையை பார்த்துகிட்டா. நீயா தானே பிள்ளையும் பார்த்து, வீட்டையும் பார்த்தா. இங்க மட்டும் ஏன் ஒரு இட்லி, ஒரு தோசைக்கு கூட நர்மதா தான் வந்து நிக்கணும்…” ஆரம்பித்தாள் பிருந்தா.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!