Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 18

பொழியும் மேகம்!…

அத்தியாயம் 18

   பிருந்தாவின் வாதம் நிரஞ்சன், முகுந்தன் இருவரையும் திரும்பி பார்க்க வைத்தது, யோசிக்கவும் வைத்தது. உண்மைதான், யாருக்கு தெரியுமாமோ இல்லையோ முகுந்தன் நன்கு அறிவான்.

         நிஜத்தில் வித்யா வீட்டு வேலை நன்றாக செய்ய கூடய பெண் தான். இங்கு வந்ததில் இருந்து தான் வேலை செய்ய முடியலை, குழந்தை அழுகிறான், யார் கிட்டவும் போக மாற்றான் என்று ஏதாவது சொல்லிட்டே இருக்க, முகுந்தனும் விட்டு விட்டான். புது இடம், குழந்தை வேறு இருக்க கொஞ்ச நாள் போகட்டும் என்று… இன்று யோசிக்கும் போது ஏன் நர்மதாவை எதிர்பார்க்க வேண்டும்.



Advertisement

  முகுந்தன் திரும்பி பார்த்து மனைவியை முறைத்தான்.

     “சின்ன குழந்தைக்கு சாப்பாடு கொடுக்கிறதுக்கு எவ்வளவு பிரச்சனையா? எல்லாம் ஒரே குடும்பம் தான். என்னால செய்ய முடியாதுன்னு சொல்லிட்டு போக வேண்டிய தான. எதுக்கு எல்லாம் இழுத்து போட்டு செய்யணும்…” என்று சுசீலா கேட்க.

    அவரது பேச்சில் நர்மதா வீட்டில் அனைவருக்கும் கோபம் வந்தது.

Advertisement

     “ஏன் செய்யணும்…” என்று முன்னே வந்தார் மாலதி அத்தை.

Advertisement

    “ எங்களுக்கும் என்ன ஒரு விவரமும் தெரியாதுன்னு நினைச்சீங்களா சம்மந்தி. நர்மதாவுக்கு ரெண்டு குழந்தை பிறந்தப்பா உங்க பெரிய மருமக பொண்ணு வந்து பார்த்தாங்களா? இல்லையே, எங்கன்னு கேட்டதுக்கு கூட குழந்தை இல்லாம சங்கடத்துல இருக்கா வந்து பார்க்க தயங்குறான்னு நீங்க சொன்ன போது, நாங்களும் ஆமா அந்த பொண்ணுக்கும் மன சங்கடம் இருக்கும்ன்னு ஒரு சடவா நினைக்கவே இல்லை. ரெண்டு பிள்ளைக்கும் பார்க்கவோ, செய்யவோ கிடையாது. யாரும் அதை பெருசா கூட நினைக்கல…” என்று அவரை பேச விடாமல்,

    “அதை மனசுல வச்சு தான் எம் பேரனுக்கு செய்ய மனசு வரல போல…” என்று சுசீலா மீண்டும் சொல்ல,

  பிருந்தா விட வில்லை, “அப்படி இருந்தாலும் தப்பு கிடையாது அத்தை. ஆனா நர்மதா அந்த குணம் கொண்டவள் இல்லை. அது உங்களுக்கே நல்லா தெரியும். நான் பொதுவாக தான் கேட்கிறேன். காலையில வேலைக்கு போறவ அவ தான். காலை மதிய எல்லா வேளையும் சமையல் முடிச்சு, இங்கிருந்து ஆட்டோ ஏறி மெயின் ரோட்டுக்கு போய், அங்க பஸ் பிடிச்சு வேலை பாக்குற ஊருக்கு ரோட்டுல இறங்கி, அப்புறம் ஒரு ஷார் ஆட்டோ பிடிச்சு ஸ்கூல்க்கு போகணும். அங்கேயும் சும்மாவா சம்பளம் தருவாங்க. எட்டு மணி நேரம் தொண்டை வலிக்க கத்தனும், கால் கடுக்க நிக்கானும். திரும்ப அதே மாதிரி பஸ், ஆட்டோ ன்னு அலைஞ்சு வீடு வந்தா பாத்திரம் கழுவாத கிட்சனும், துவைக்காத துணியும் கிடந்த எப்படி இருக்கும். யாருக்கும் ஒரு அரைமணி நேரம் அக்கடான்னு படுக்க தோணாது. மிசின் கூட மூணு மாசத்துக்கு ஒரு தடவை கழட்டி சுத்தம் செய்வாங்க. அவ என்ன மிசின்னா ஓயாம ஓட. அவளுக்கும் ஓய்வு தேவைதானா… நீங்க எல்லாம் வேலைக்கு போறவங்க தான, வீட்டுக்கும் வந்தும் வேலை எதுவும் செய்ரீங்களா? ஓய்வு தேவைன்னு நினைக்கிறீங்க தான…” என்றதும் நிரஞ்சன், முகுந்தன் பேச்சே வரவில்லை.

Advertisement

    “நான் வித்யாவ மட்டும் தப்பு சொல்லலைங்க… நர்மதா சமையல் செய்யல அதான் பிரச்சனை. நீங்க எல்லாம் வீட்டுல தானே இருந்தீங்க. என்ன யோசிச்சு இருக்கணும். எல்லா நாளும் பம்பரமா சுத்துறவ பிள்ளைக்கு முடியலன்னு சொல்லியும் வரலைன்னா அவளுக்கு ஏதோ பிரச்சனைன்னு தான் நினைக்கணும். செய்யிற வரைக்கும் நல்லவ, ஒரு நாள் முடியலன்னு படுத்தா அது ஏதோ அடிச்சு, துரத்துற அளவுக்கு குத்தம். ஏன் படுத்து இருக்க நர்மதா, என்ன பிரச்சனை, உடம்புக்கு முடியலையா? அப்படின்னு யாராவது ஒரு ஆள் ஒரு வார்த்தை கேட்டீங்களா?… அப்படி கேட்டு இருந்தா அவளுக்கும் முடியாம இருந்தது. அவளும் சொல்லி இருப்பா…” என்ற பிருந்தா வாதத்தை நிரஞ்சன் கூட மறுக்க வில்லை.

   அப்போது அவனும் மனைவி பக்கம் நின்று யோசிக்க வில்லை. இருவரும் சண்டை போட்டு பேசாமல் இருந்ததால், பிருந்தா வேறு பேசியது என்று கோபத்தில் இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கவும் கொட்டி விட்டான்.

           மாலதி, “கூட்டு குடும்பத்தை ஒருத்தர் மட்டுமே கட்டி இழுக்க முடியாது சம்மந்தி. நர்மதா வேலைக்கு போறது அவ விருப்பமாவே இருக்கட்டும். அந்த பொறுப்பு அவளுக்கு தான். ஆனா, குடும்ப பொறுப்பை ரெண்டு மருமகளுக்கும் சரிசமமாக பிரிச்சு கொடுக்கணும் தானா…” என்று அத்தை சொல்லவும்,

    “வித்யாக்கு கை பிள்ளை இருக்கு. அதோடு இடமும் புதுசு…” சுசீலா இழுக்க,

   “அப்படி பார்த்த நர்மதாக்கு ரெண்டு பிள்ளை இருக்கு. அவளும் முடியாதுன்னு சொல்லலாம் தான. வித்யாவுக்கு ரொம்ப சிரமமா இருந்தா காலை, மதியம் ரெண்டு நேரத்துக்கும் நர்மதா பண்ணட்டும். அவளுக்கு வேலை விட்டு சோர்ந்து போய் வரும் போது இரவுக்கு வித்யா பண்ணட்டும். நீங்களும் கூடமாட நிக்கும் போது யாருக்கும் பிரச்சனை இல்லாம குடும்பம் ஓடும். அதை விட்டு எங்க பொண்ணு மேலயே எல்லாம் போட்டு, ஒரு நாள் முடியாம போனதுக்கு அடிச்சு, வீட்டை விட்டு துரத்துறது எல்லாம் என்ன கணக்கு. பொண்ண கட்டி கொடுத்த எங்களுக்கு இதை எல்லாம் கேட்கும் போது எப்படி இருக்கும்…” என்று ராணி அத்தையும் எடுத்து சொல்ல,

  மற்றவர்களுக்கும் அது தான் சரியென்று பட்டது. கூட்டு குடும்பத்தில் வேலையை பிரித்து தான் கொடுக்க வேண்டும். சமமாக தான் நடத்த வேண்டும்.

    “புருசன், பொண்டாட்டிக்கு இடையில சண்டை, பஞ்சாயத்துன்னு சொன்னாங்க. கடைசில தப்பு என் பக்கம் திருப்பி விட்டீங்க. எங்க வீட்டுல இருந்து ஆள் வரலைன்னு தான இவ்வளவு பேச்சும்… நான் தான் தப்பு. இனி இவ பக்கம் கூட திரும்ப மாட்டேன்…” வெடுக்கென்று வித்யா சொல்ல,

  இதென்ன விதாண்டா வாதம் என்று சலிப்பாக பார்த்தார் தாமோதரன்.

    “நர்மதாவுக்கு உடம்பு சரியில்லைன்னு எங்களுக்கு தெரியாது சம்மந்தி. ஆனாலும் தப்பு தான். நாங்க கேட்டு இருக்கணும். வீட்டு வேலை நர்மதா மேல மட்டும் விழும் போது கொஞ்ச நாள் தான, பழக்க பட்ட வேலையும் கூடன்னு தான் நினைச்சோம். பழக்க பட்ட வேலைன்னாலும் வேலை வேலை தான். பெரியவங்க நாங்க கொஞ்சம் யோசிச்சு இருக்கணும். தப்பு தான் சம்மந்தி…” என்று தாமோதரன் ஒத்து கொள்ள,

  தந்தையை இப்படி பார்க்க முடியவில்லை நிரஞ்சனால்… அஸ்வின் தடுத்தும் வாய் திறந்து விட்டான்.

    “எல்லாத்துக்கும் நான் தான் தாத்தா காரணம். என்னோட கோபம் தான் எல்லாம் நடந்து போச்சு. அதுக்கு காரணம் நர்மதா. என்னை போட்டு டார்ச்சர் பண்றா. நிம்மதியா வேலை கூட பார்க்க முடியவில்லை. எப்பபாரு எதவாது சொல்லிட்டு, அப்படி இருங்க, பணம் எங்க, அது வேணாம், இது எதுக்கு ஆடம்பரம்ன்னு ஒரே அட்வைஸ் தான். நான் நல்லா சம்பாதிக்கிறேன். எனக்கு எப்படி சேவ் பண்ணனும்னு தெரியும். அதை விட்டு நான் என்ன பண்ணனும்னு இவ சொல்ற… வேண்டாம்மா எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீ பேசாம இருன்னு சொன்னாலும் கேட்கிறது இல்லை. காதுகிட்ட கொசு மாதிரி கத்திட்டே இருக்கா… கடுப்பா இருக்கு. புருசன் சொன்னா சரின்னு கேட்கிறது இல்லை. அதுல எதையாவது குத்தம் சொல்லிட்டு வர வேண்டியது. ஒரு ஆம்பளைக்கு குடும்பம் நடத்த தெரியாது…” என்று நிரஞ்சன் தொடங்கி விட்டான்.

     எல்லாரும் நர்மதாவை பார்க்க, பிருந்தா இனி நீ தான் பேசணும் என்ற பார்வை பார்த்தாள்.

  தன்னை திடப்படுத்தி கொண்டு தன் பக்க நியாயத்தை சொன்னாள் நர்மதா…

   “உண்மை தான் தாத்தை. நான் கேள்வி கேட்டேன் தான். ஆனா ஏன்?… அவர் சம்பளத்தை வாங்கி எங்கிட்ட கொடுங்கன்னு நான் சொல்லல. ஆனா, வரவு, செலவு என் கிட்ட மறைக்காதீங்கனு தான் சொல்றேன். இவ்வளவு வந்துச்சு, இவ்வளவு போச்சு, இருப்பு இவ்வளவு இருக்குன்னு என்கிட்ட சொல்லுங்க. நான் உங்க பொண்டாட்டி தான. அதை கேட்டா… அது எதுக்கு உனக்கு, என்னை கேள்வி கேட்காத, எல்லாம் எனக்கு தெரியும்ன்னு தட்டி பேசுறார்…” என்று நர்மதா சொல்லும் போதே,

    “நான் என்ன சரியில்லாதவனா, தப்பானவனா என்னை கேள்வி கேட்க…” பேக் டூ நிரஞ்சன் வந்து விட்டான்.

      “பொண்டாட்டி கேள்வி கேட்டா பதில் சொல்ல வேண்டி தான. ஏதாவது கேட்டா போதும் இப்படி ஒரு வாதம் வைக்கிறார் தாத்தா…” என்று நர்மதா சொல்ல,

   “என் ஃபீல்ட்டு எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க. ஆனா நான் அப்படி இல்லை. பொண்டாட்டி, பிள்ளைக, குடும்பம்னு தான் இருக்கேன். அப்புறம் எதுக்கு என்னை கேள்வி கேட்கணும். தப்பு செஞ்சா கேளு அதை விட்டு நான் என்ன பண்ணாலும் குத்தம் சொல்லி வர கூடாது. எனக்கு அதெல்லாம் பிடிக்காது…” நிரஞ்சன் நேரடி வாக்குவாதத்தில் இறங்கினான்.

 “அப்படி என்ன கேள்வி கேட்கிறேன் உங்களை… ஆடம்பர செலவு எதுக்கு, கொஞ்சம் சேர்த்து வைங்க. நமக்கும் ரெண்டு பிள்ளைக இருக்குன்னு சொன்னேன். கஷ்டபட்டு உழைத்த காசு, வீணா எதுக்கு வெளியே கொட்டனும். பணம் என்ன மரத்தில காய்க்கிது. நீங்களும் கஷ்டபட்டு தான் கொண்டு வாரிங்க. அதை பிரோஜனமா செலவு செய்ங்கன்னு தான் சொல்றேன். வரவுக்கு மீறிய செலவு உங்களது…”

   “உனக்கு தெரியுமா நான் வீணா செலவு செய்றேன்னு…”

   “அப்புறம் ஒரு கோடி போட்டு கார் எதுக்கு வாங்குனிங்க… அதுக்கு என்ன அவசியம். தாத்தா, எங்க கிட்ட கார் இருக்கு, எங்க மாமனார் கிட்டவும் போய் வர கார் இருக்கு, எங்க பெரிய மாமா கிட்டவும் போய் வர கார் இருக்கு… அப்புறம் எதுக்கு ஒரு கோடி போட்டு கார். இவர் வாங்குற சம்பளம் அதிகம் தான். ஆனா, அசால்டாக ஒரு கோடிக்கு கார் வாங்குற அளவுக்கு அதிகம் இல்லை. அப்படி கார் வாங்குற மனுசன் ஒரு வார்த்தை கட்டுன பொண்டாட்டிக்கு சொல்லனும்னு தோணலை. வீட்டுல வாசல்ல கொண்டு வந்து காரை நிப்பாட்டும் போது தான் எனக்கு தெரியும்…”

  “உன் கிட்ட சொன்னா நீ சரின்னு சொல்லூவியா… அதுக்கும் நிறையா பேசுவ, என் காதுல இரத்தம் வரும். அதான் சொல்லாம சர்ப்ரைஸ் கொடுத்தேன்…”

  “இது தான் தாத்தா பிரச்சனை. சேமிப்புல பாதிய கரைச்சுட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தா எப்படி தாத்தா. ஒரு கோடி ரூபா போட்டு கார் வாங்கும் போது என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் தானே. அதைக் கேட்டதுக்கு தான் சண்டையே. ஆமா நான் வேணான்னு தான் சொல்லுவேன் நமக்கே ரெண்டு பொம்பள புள்ள இருக்கு அப்ப அவங்களுக்கு பயன்படற மாதிரி தானே தாத்தா காசு போடணும். பொன்னுலையும் , மண்ணலையும் போட்டா என்னைக்கும் லாபம் தான். சேமிப்ப அப்படி தொடங்க சொன்னேன்…”

   “அது சரிதான் அதுக்கு இன்னும் காலம் இருக்கு. என் பிள்ளைகள் ரொம்ப சின்ன பிள்ளைகள். நான் இப்ப சம்பாதிக்கிறதை விட பிள்ளைகள் வளரும்போது இன்னும் அதிகம் சம்பாதிப்பேன். அப்ப இதைவிட அதிகமாக சேர்ப்பேன். எனக்கும் எல்லா விவரமும் தெரியும்…” விம்பாக முடித்தான்.

  “இப்படித்தான் தாத்தா நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு பதில் வச்சிருப்பாரு… என்ன பேசினாலும் அதற்கு ஒரு விதாண்டா வாதம். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல, எப்படி இவருக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியல. முழு சம்பளத்தையும் சேர்த்து வைங்கன்னு சொல்லல ஒரு பகுதியை சேர்த்து வைக்கலாம் இல்ல. அதை சொன்னா திரும்பத் திரும்ப வாக்குவாதம் தான் வருது. அவருக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியாம தான் அவங்க அண்ணனை நான் எடுத்துக் காட்ட சொன்னேன். வேற யார சொன்னாலும் அவருக்கு புரியாது. எங்க பெரிய மாமா நாலு வீடு இல்ல பத்து வீடு கூட கட்டட்டும் எனக்கு பிரச்சனை இல்ல. என் புருஷனுக்கு புரிய வைக்கிறதுக்காகத்தான் அவர ஒரு எடுத்துக்காட்டா சொன்னேன். கூடப்பிறந்தவரு, கூடவே வளர்ந்தவரு ஒன்னாவே பாக்குறாரு அவருக்கு புரியும்னு நினைச்சேன். ஆனா அதுலயும் என்னை கெட்டவளா மாத்தி நான் பொறாமை படுறேன், குடும்பத்தை பிரிக்கிறேன் அப்படின்ற மாதிரி கொண்டு வந்துட்டாரு…” என்ற நர்மதா சொல்ல,

  “பிள்ளை சொல்றது சரிதான் தம்பி. நீங்க வசதியாவே வளர்ந்ததால சேமிப்போட முக்கியத்துவம் உங்களுக்கு தெரியல. நீங்க சிட்டிகுள்ள இருக்கீங்க அதனால செலவும் அதிகம் தான். கொஞ்சம் சேர்த்து வைங்க அப்படித்தானே சொல்லுது பாப்பா. நம்மள நம்பி வந்த நம்ம மனைவி நம்மல பாதி. நம்மளோட எல்லாமும் அவங்களுக்கும் உரிமையானது. நாளைக்கு நமக்கு ஏதாவது ஒன்னுனா முதல்ல பாதிக்கப்பட போவது அவங்க தான் தம்பி. அப்ப அவங்கள கேள்வி கேட்கக்கூடாதுன்னு எப்படி சொல்லுவீங்க. அவங்க கேட்கத்தான் செய்வாங்க.

 “அப்புறம், மனைவி அப்படின்னு எதுக்கு ஒருத்தி நம்ம வீட்ல இருக்கா… நீங்க படிச்சவங்க உங்க தத்துவமே பட்டிக்காட்டில் வாழ்ந்த எனக்கு புரியலையே தம்பி. ஒரு பொண்டாட்டினா யாரு, நமக்கு எவ்வளவு முக்கியம்ன்னு எங்களுக்கு புரியுது. படிச்ச உங்களுக்கு புரியலையா?… என்ன கேள்வி கேட்கக்கூடாது சம்பளத்தை கேட்கக்கூடாது, செலவழித்தால் கேட்க கூடாதுன்னு சொல்றது அர்த்தமே இல்லை. அதெல்லாம் வீட்டுல கேட்க தான் செய்வாங்க. அவ்வளவு கூட வேணாம் விடுங்க. பிள்ளை என்ன சொல்லுது சம்பளத்துல ஒரு பகுதியை சேர்த்து வைங்க அவ்வளவு தானே, சரின்னு சொல்லி பேச முடிங்க தம்பி. நீங்க சம்பாதிக்கிறதுல ஒரு பகுதி ஒன்னு ரொம்ப அதிகம் கிடையாதே. அதை ஒரு சேமிப்பா வைக்கும் போது உங்க மனைவிக்கும் சந்தோசம் தான, வீட்டுலயும் பிரச்சனை இருக்காதுல உங்களுக்கும் நிம்மதிதான எதுக்கு வாக்குவாதம் பண்றீங்க…” என்று நீதி தாத்தா சொல்ல,

   “அப்ப நான் தப்பா இருக்கானா தாத்தா. இப்பவோ ஏன் கஷ்ட படானும். அதுக்கு நாள் இருக்குன்னு சொல்றேன். நான் சொல்ற எல்லாத்தையும் இவ தான் தட்டி கழிக்கிறா…”

  “தம்பி ஒரு ஆம்பளையை விட நம்ம வீட்டு பொம்பளைகளுக்கு வயசு கம்மிதான். அதனால அவங்களுக்கு எதுவும் தெரியாது என்று இல்ல. பொதுவாகவே ஒரு ஆம்பள பிரச்சனையை அப்போதைக்கு முடிக்க பார்ப்பான். ஆனா வீட்டு பொம்பளைக எப்பவுமே பிரச்சனை வராத அளவுக்கு முடிக்க பார்ப்பாங்க. அதனாலதான் நம்ம வீட்டு பொண்ணுங்க நம்மள விட வயசு கம்மியா இருந்தாலும் அவங்க யோசனையும், சொல்ற அறிவும் தெளிவும் வெளி உலகத்தை நாலு மனுசங்கள பாத்துட்டு வர நம்மளால கூட புரிஞ்சுக்க முடியாது. கொஞ்சம் நீங்களும் விட்டு குடுங்க தம்பி. அவங்க என்ன கேக்குறாங்க சம்பளத்தை வாங்கி என் கையில குடுங்க நான் தான் செலவு பண்ணுவேன் இல்லைலே. ஓரளவுக்கு சேமிப்போம் அப்படின்னு தானே சொல்றாங்க. சரின்னு சொல்லுங்க தம்பி இதுல எதுக்கு இவ்வளவு வாக்குவாதம் பண்றீங்க…”

   “இல்லை தாத்தா…” என்று நிரஞ்சன் தொடங்கும் போதே,

   “எனக்கும் மருமக சொல்றதுதான் சரின்னு படுது நிரஞ்சா… நானும் உங்க அம்மாவும் கவர்மெண்ட் வேலைதான், எங்களுக்கும் ரெண்டு பசங்க தான். அதுக்காக நாங்க எங்க இஷ்டத்துக்கு ஒன்னும் இருக்கல நிரஞ்சா… சம்பளத்தை சேமிக்கிறது எங்களுக்கு முக்கியமா பட்டுச்சு. அப்படி நாங்க சேமித்து வச்சதனாலதான் சிட்டிக்குள்ள இவ்ளோ பெரிய வீடு, காரு, ஊர்ல நிலம் சொத்து எல்லாம்… நீயும், உங்க அண்ணனும் ஆசைப்பட்ட படிப்ப தான் படிச்சீங்க, புடிச்ச வேலைக்கு தான் போனீங்க. அதெல்லாம் ஏன் அன்னைக்கு நாங்க ஓரளவுக்கு சேமித்து வைக்க போய் தான். உங்களை உங்க விருப்பம் போல படிக்க வைக்கவும் வேலைக்கு போக விடவும் எங்களால முடிஞ்சது. நாளைக்கு உன் பிள்ளைகளுக்கும் இதே மாதிரி பண்ணனுமே நிரஞ்சா… அதனால மருமக சொல்றத கேளு…” என்று தாமோதரன் சொல்ல,

  வேற வழி இல்லாமல் போனது அவனுக்கு… விருப்பமின்றி லேசாக தலையாட்ட…

  “இங்க பாரு நர்மதா நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போகணும். உங்களுக்கு ஒன்னும் அறுபது வயசு ஆகல. ரொம்பவும் சிக்கனம், சேமிப்பு என்று இருக்க கூடாது. இந்த வயசுல என்ன அனுபவிக்கணுமோ அதை நல்லபடியா அனுபவிங்க. ரெண்டு பேருமே வேலைக்கு போறீங்க, நல்லா சம்பாதிக்கிறீங்க நல்லபடியா வாழலாம். எந்த பிரச்சனையும் கிடையாது. வீண் விவாதத்தை தடுங்க. எத்தனை பேரு நல்லா வேலை குடும்பம் இல்லாம கஷ்டப்படுறாங்க. உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வேலை இருக்கு, நல்ல சம்பாத்தியம் இருக்கு, முத்து மாதிரி ரெண்டு பிள்ளைகளுக்கு நல்லபடியா வாங்க ஒன்னுமே இல்லாத உப்பு சொப்பில்லாத விஷயத்துக்கு சண்டைய போட்டு அடிச்சு வீட்டை விட்டு துரத்தி எதுக்கு இதெல்லாம்…” என்று கலாவதி அத்தையும் எடுத்து சொல்ல,

  நர்மதா தலையாட்டி கொண்டாள்.

  “நிரஞ்சன் தம்பி, மனைவி அப்படின்றவங்க நம்ம கூட சேர்ந்து வாழ வந்திருக்காங்க. நமக்காக வாழ வரல. நம்மளோட சிந்தனையும் செயலும் அவங்களோட ஒத்துப் போகும் நினைக்க கூடாது. சில மாறுபாடு இருக்கத்தான் செய்யும் அதையும் சரிகட்டி அனுசரித்து இழுத்துக்கு போறதுதான் குடும்ப வாழ்க்கை…” என்று நீதி தாத்தா சொல்ல,

  “என் மனைவி எனக்கு பிரச்சனை கிடையாது தாத்தா. ஆனா, அவங்க அக்கா தான் ஏதாவது சொல்லிட்டே இருக்காங்க. நர்மதாவுக்கு முதல்ல அவங்க அப்பாவும் அக்காவும் தான். அதுக்கப்புறம் தான் நான் என் பிள்ளைகள் எல்லாம்… எங்க குடும்ப விஷயத்தை அவங்க டிஸ்கஸ் பண்றது எனக்கு புடிக்கல. அவங்க கொஞ்சம் எங்களை விட்டு தள்ளி நிக்க சொல்லுங்க…” என்றதும் நர்மதா,

  “தாத்தா, உண்மையிலேயே எங்க அக்கா எங்களுக்குள்ள வர பிரச்சனைக்கு காரணம் கிடையாது. இன்னைக்கு நீங்க எல்லாரும் இருக்க போய் தான் கொஞ்சம் அடங்கி போறாரு, இல்லன்னா அவர் காட்டுற முகமே வேற தான். இவ்வளவு பேரும் எடுத்து சொல்றதை தான், நான் இத்தனை வருசமா சொல்றேன். காது கொடுத்து கூட கேட்க மாட்டாரு. நீங்க எல்லாரும் சொல்றதுக்காக சரின்னு சொல்லுவார். மனசார நம்ம பொண்டாட்டி கருத்து சரின்னு எண்ணம் இன்னும் கிடையாது. நானும் சொல்லி, சொல்லி தவிச்சு போய் ஒரு கட்டத்துல எங்க அக்கா கிட்ட தான் புலம்பி தள்ளுவேன். வேற யார் கிட்டவும் குடும்ப விசயம் என்னால பேச முடியாது. நான் ரொம்ப அழுகவும் தான் அவர் கிட்ட போன் பண்ணி பேசி இருக்கா…”

  “அன்னைக்கு கோபத்துல கையை பிடிச்சு வெளியே தள்ளினார். நான் போய் நிக்க எனக்கு எங்க அக்கா தானே இருந்தா… இருவது நாள் ஆச்சு, எந்த வேறுபாடும் இல்லாம நானும், எம் பிள்ளைகளும் என் கூட பொறந்தவ வீடுன்ற உரிமையில் தான் இருந்தேன். அன்னைக்கு இவளும் இல்லன்னா நாங்க எங்க போய் நின்னு இருப்போம். நேத்து வந்த இவருக்கு என்ன தெரியும் எங்க பாசம். இருவத்தி மூணு வருஷம் ஒண்ணாவே வளந்தோம். எவ்வளவு பேசி, பார்த்து, கடந்து வந்து இருப்போம். உங்க பிரெண்ட்ஸ் கிட்ட ரொம்ப பேசாதீங்க லிமிட்ல இருங்கன்னு சொன்னா, நீ யார்னு கேட்பார். நான் மட்டும் கூட பொறந்த பிறப்பை விட்டு கொடுக்கணுமா?… நான் எவ்வளவு தான் தாங்குனாலும் , ஒரு சண்டை வந்தா என் வீடு நீ வெளியே போன்னு சொல்ற ஒருத்தருக்காக எம் மேல பாசம் வச்ச ஒருத்திய எப்படி விட முடியும்…”

   “இவங்க அம்மா சொல்றாங்க எங்க அக்கா என்னை பார்த்து பொறாமை படுறான்னு… நான் பொறக்கும் போது எங்க அக்காக்கு அஞ்சு வயசு. எங்க அப்பா இன்னமும் சொல்லுவாரு அப்ப இருக்குற ஸ்பிரிங் தொட்டில நான் படுத்து இருந்தா, ஒரு மணி நேரம் கூட நின்னு தொட்டி ஆட்டுவாலாம். அவளே கண் அசந்து உறங்கினாலும் தொட்டில இருந்து கை எடுக்க மாட்டாலாம். வீட்டுக்கு மூத்தவள் எங்களுக்கு தான் விட்டு கொடுத்து போவா… ஒரு ட்ரெஸ், நகை, சாப்பாடு எதுன்னாலும் எனக்கு விட்டு கொடுத்து போறவளா என்னை பார்த்து பொறாமை படுவா… எட்டு வருசம் ஆச்சு, இன்ன வரைக்கும் ஒரு நாள் கூட தங்கச்சி வீடுன்னு வந்து தங்குணது இல்லை. இங்கிருந்து கருவேப்பிலை கூட எங்க அக்கா வீட்டுக்கு கொடுத்தது கிடையாது. ஆனா, நாங்க போன எல்லாம் அவ தான் பார்ப்பா… அவ எதுக்கு என்னை பார்த்து பொறாமை படனும்…”

  “வுடுத்தா, ஏதோ ஒரு கோபம் தம்பி என்னவோ பேசிட்டாங்க. நாங்க சொல்லி இருக்கோம். இனி எல்லாம் சரியாகும்…” என்று தாத்தா சொல்ல,

   “இல்லை தாத்தா நான் பேசணும். அமைதியா விட்டு கொடுத்தே போறாதால தான் எங்க வீட்டை பேசுற அளவுக்கு துணிஞ்சு வந்துட்டாங்க. ஒரு நாள் சாப்பாடு செய்ய லேட் ஆனா போதும், எங்க அம்மாவுக்கு சுகர், அவங்க நேரத்துக்கு சாப்பிட வேணாம்ன்னு சண்டைக்கு வருவார். எங்க அப்பாவும் முடியாதவர் தான். மக வீட்டுல சண்டைன்னு ராத்திரி பஸ்ல இடம் கூட கிடைகாம நின்னுட்டு வந்தார். வீட்டுக்கு வந்தவரை வாங்கன்னு உட்கார கூட சொல்லாம நிக்க வச்சு பேசினாங்க. எனக்கு எப்படி இருக்கும். உங்க வீட்டு ஆளுகளை நான் அப்படியா பார்த்தேன். உங்க அண்ணன் குடும்பம் வரைக்கும் நான் பார்க்கணும், எங்க அப்பாவ உட்கார சொல்ல மனசு வரல. அப்படி என்ன நீங்க பணக்காரங்க. உங்க பணத்திலா எங்க அப்பா வாழ்கிறார். இப்பவும் நாங்க ஊருக்கு போன எங்களுக்கு அவ்வளவு செய்வார். ஒவ்வொரு வருடமும் விசேஷம், தீபாவளி, பொங்கல்ன்னா எங்களுக்கு செய்றார். நாங்க தான் அவருக்கு ஒன்னுமே செய்யல. ஆனா இவங்க பொண்ணு கொடுத்தவர்ன்னு ஒரு ஆளாக கூட மதிக்கிறது…”

   பால மராத்தான் எழுந்து விட்டார். மகள் கண்களில் கண்ணீரோடு பேசுவதை காண முடியவில்லை. பிருந்தா வந்து தங்கையை பிடித்து இழுக்க, அவள் கையை தட்டி விட்டாள்.

    உண்மையில் இப்போது தான் நிரஞ்சனுக்கு பயம் வந்தது. மனைவி சமாதானம் பேச வரவில்லையோ… ஒரு மாதிரி முழித்து கொண்டு அஸ்வினை பார்க்க,

   “வாய வச்சுட்டு சும்மா இருன்னு சொன்னேலடா… நான் தான் தப்புன்னு ஒரு மன்னிப்பு கேட்டு முடிக்க வேண்டியதை பெரிசாக்கி விட்டுட்டா… உன் வாய் தான் உனக்கு எதிரி…”

    நர்மதா விடவில்லை, “எனக்கு ரெண்டாவது குழந்தைக்கு டெலிவரி சென்னையில தான் பார்த்தோம். அவசரமா நீர் குடம் உடஞ்சு ஹோஸ்பிடல் போனோம். அங்க வீட்டுல வர ஒரு நாள் ஆகும். அன்னைக்கு என்னை யார் பார்த்தது. உங்க அம்மாவும், அண்ணியுமா கூட இருந்தாங்க. இப்படினு ஒரு வார்த்தை சொன்னதும் எல்லாத்தையும் போட்டு ஓடி வந்தது யாரு?… என் கூட இருந்து என்னை பார்த்தது யாரு?… பொறந்த பிள்ளையை தான் நீங்க எல்லாம் தூக்கி வச்சீங்க. அருவருப்பு படமா ஒரு பெத்த தாய் மாதிரி என் கூட இருந்தது எங்க அக்கா தான. எப்படி இப்படி ஒரு மனுசன் இருக்க முடியும்…”

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!