Skip to content
Post Views: 14,402
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 19
நர்மதாவுக்கு தாங்கவே முடியவில்லை. அப்படி என்ன ஒரு மனிதனுக்கு வீம்பு, வெட்டி கோபம், தான் தான் சரி என்று நிரூபிக்கும் மனப்பான்மை, தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனநிலை என்று நிரஞ்சனின் பின் பக்கம் வெறுக்க வைத்தது.
“உங்க அம்மா கூட எனக்கு கொஞ்சம் கூட ஒத்து போகாது. அவங்க தான் பெரிய ஆள் மாதிரி என்னை, என் குடும்பத்தை மட்டம் தட்டி பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்காது. புருசன், பொண்டாட்டின்னு நமக்குள்ள எந்த ஒளிவு, மறைவும் இல்லாமல் எல்லாத்துக்கும் முன்னாடி வர உங்க குடும்பத்தை எனக்கு பிடிக்கவே இல்லை. அதுக்காக உங்களை மாதிரி நான் முடிவு எடுத்தேன்னா…”
Advertisement
“நான் உங்களை தான் கல்யாணம் பண்ணி வந்தேன். உங்க குடும்பத்தை இல்லன்னு விதாண்ட வாதம் நான் பண்ண அதை ஏத்துக்க முடியுமா? அல்லது அது சரியானதா?… என்னைக்கோ வந்து போற என் குடும்பத்து மேலே உங்களுக்கு எவ்வளவு விமர்சனம் இருக்கு… நான் தினமும் இங்க தான் வாழ்றேன். என் வாழ்க்கையே இது தான். மாமனார், மாமியார், புருசன், பிள்ளைகள், மச்சான், அவங்க மனைவி, பிள்ளைகள்ன்னு கூட்டு குடும்பம் என்னோடது… எனக்கு அனுசரிக்க முடியலன்னு நான் சொன்னா நீங்க மாத்துவீங்களா… அது எவ்வளவு பெரிய துரோகமா விமர்சிக்க படும். அதே தான் உங்களுக்கும்…” என்றவள்,
“உறவு, சொந்தம், குடும்பம்ன்னா எல்லாம் சேர்ந்து தான் இருக்கும். அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டாது. உங்களுக்கு பெரிய பிரச்சனையே நான் நீங்க சொல்ற மாதிரி கேட்டு, உங்க கைகுள்ள நிக்கல… அதுக்கு எனக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. உங்களை தாண்டி உங்க முடிவை எதிர்த்து, உங்களுக்கு அறிவுரை சொல்ற உங்க பொண்டாட்டிய தான் உங்களுக்கு பிடிக்கல. அந்த கோபம் தான் இதுவெல்லாம்… நீங்க மாற மாட்டீங்க. நமக்குள்ள இருக்குற பிரச்சனையும் ஓயாது. உங்களை எங்க வீட்டுக்கு வாங்க, எங்க அப்பா, அக்காவ பாருங்கன்னு சொன்னா தான் தப்பு. நான் அப்படி சொல்ல போறது இல்லை. ஆனா, என்னை நீங்க தடுக்க கூடாது. அதுக்கான உரிமை உங்களுக்கு இல்லை…” என்று தெளிவாக, ஒரே முடிவாக நர்மதா சொல்லி விட்டாள்.
நீதி தாத்தா எழுந்து கொண்டார், “நிரஞ்சன் தம்பி நாங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. புருசன், பொண்டாட்டிக்கு இடையில மூணாவது ஆளா அறிவுரை சொல்ல முடியுமே தவிர, ஒரு முடிவு சொல்ல முடியாது. அந்த உறவை ஆராயவும் கூடாது. நம்ம வேலை பாக்குற இடத்துல பிடிக்காத ஆள் கூட இருந்தா, வேலையை விட்டு விடுவோமா! வேண்டா வெறுப்பா கூட அனுசரிச்சு தான் போவோம். ஊர், பேர் தெரியாத ஒருத்தனை அனுசரிச்சு போவோம். கட்டுண பொண்டாட்டி கிட்ட கறார இருப்போம். அது நம்ம ஆண் வர்க்கத்துக்கே உள்ள திமிரு…”
Advertisement
“உங்க வயசுல எதுவும் தெரியாது. நாம மட்டும் தான் சரின்னு தெரியும். நமக்கு யாரும் தேவையில்லான்னு கூட தோணும். ஆனா, எங்க வயசு வரும் போது, கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம், பொண்டாட்டிய மதிச்சு இருக்கலாம், சொந்தத்தை இழுத்து இருக்கலாம்ன்னு தனிமை நிறைய பாடம் கத்து கொடுக்கும். இன்னும் கொஞ்சம் நல்லா வாழ்ந்து இருக்கலாம்ன்னு வாழ்க்கை போனதுக்கு அப்புறம் தான் புரியும். சுதாரிங்க தம்பி…” என்று தோலில் தட்டி கொடுத்து நகர்ந்தார்.
Advertisement
பிருந்தா, நிரஞ்சன் அருகே வந்தாள்.
“எனக்கு எந்தங்கச்சி நல்லா இருக்கணும், அவ்வளவு தான். உங்க வீட்டுல ஏன் சொல்றன்னு கேட்கிறத விட, அவ குறை சொல்லாத அளவுக்கு நீங்க நடந்துகோங்க நிரஞ்சன். கட்டுன புருசனை தாண்டி எல்லாம் எங்க கிட்ட சொல்ல மாட்டா. அவளுக்கு ஒரு பிரச்சனைன்னா உங்க கிட்ட தான் மொத வருவா… அவளுக்கு நீங்க காது கொடுக்காதால தான் மன கஷ்டத்துல என் காதுக்கு கொண்டு வந்து புலம்புவா… அதுல நம்ம புருசன் நம்மளை புரிஞ்சுக்கலன்னு ஆதங்கம் இருக்குமே தவிர, குற்றம் சொல்லி பேச மாட்டா…” என்றவள்,
“எனக்கு நர்மதா வாழ்க்கை தான் முக்கியம். அதுக்காக தான் உங்ககிட்ட கூட வாக்குவாதம் பண்ணினேன். உங்க வீட்டுக்கு என்னை வர கூடாதுன்னு சொல்லுங்க. அதுல ஒரு நியாயம் இருக்கு. உங்க வீட்டுக்கு நாங்க வர மாட்டோம்…” என்று பிருந்தா உடைத்து பேசவும்,
Advertisement
பதறினான் நிரஞ்சன், “ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க. ஏதோ நர்மதா மேல கோபம்…” என்று சமாளித்தான். அவனுக்கே பிருந்தா வார்த்தை குத்தியது.
“எனக்கு வருத்தமில்லை. என் உறவு என் தங்கச்சி கூட தான். இந்த வீட்டோடு இல்லை. உங்களுக்கும், அவளுக்குமான உறவு தாலி கொடி பந்தம்ன்னா, எங்களது தொப்புள் கொடி பந்தம். ரெண்டுமே விட்டு கொடுக்க முடியாத உறவு. இனி அவளை இக்கட்டான நிலையில நிப்பாட்டாதீங்க. உனக்கு நான் இருக்கேன்னு நான் கொடுக்குற நம்பிக்கையை நீங்க கொடுங்க. அவகிட்ட உங்களுக்கான முக்கியத்துவம் என்னன்னு உங்களுக்கே தெரியும்…” சண்டை என்றில்லாமல் வாய் வார்த்தையாவே தான் எண்ணத்தை கூறினால் பிருந்தா.
நிரஞ்சன் வாய் திறக்க வில்லை. மனதில் நினைப்பதை யோசிக்காமல் பட்டென்று பேசி விட்டு, அடுத்து கையை கட்டி நிற்பான்.
தாமோதரன் உணவுக்கு சொல்லி இருந்த போதும் யாரும் அங்கு கை நனைக்க வில்லை. என்னவோ சண்டை என்று வந்தவர்கள், பிறந்த வீடு தான் காரணம் என்று நிரஞ்சன் சொன்ன பின், யாருக்கும் கை நனைக்க மனம் வர வில்லை. நர்மதா அங்கு தான் இருந்தாள். அவளை விட்டுட்டு தான் எல்லோரும் சாரதா வீட்டுக்கு சென்றார்கள். இனி அவர்கள் பேசி கொள்ளட்டும். மேலோட்டமாக மட்டும் அறிவுரை சொல்லி சென்றார்கள்.
நிரஞ்சன் மனைவி முகம் பார்த்தான். யாருக்கும் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் பார்க்க… தாமோதரனுக்கு இது மிக பெரிய அவமானம் தான். ஒருவரும் உணவு உண்ண வில்லை. நிரஞ்சன் தலை குனிந்து கொண்டான்.
நர்மதா பல நேரத்தில் சொல்லி இருக்கிறாள், வாய்க்கு வந்ததை யோசிக்காமல் பேசாதீங்க என்று… அவன் கண்டு கொண்டதே இல்லை. பொதுவாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை தான். என் மேல் தான் தவறு என்று பணிந்து போனாலே சுலபமாக முடிந்து இருக்கும்.
அதை விட்டு தன் நியாயத்தை சொல்கிறேன் என்று, நர்மதா பிறந்த வீட்டை குறை சொல்லி, தன் மரியாதையை குறைத்து, தரம் இறங்கி கொண்டான். தொடர்ந்து வரும் சொந்தங்களிடம், உறவுகளிடம் குறை இருந்தாலும் சொல்லும் போது வார்த்தையில் கவனம் வேண்டும் அல்லவா…
முகுந்தன் தன் மனைவியை தான் ஆராய்ச்சியாக பார்த்தான். என்னவோ தப்பு அவளிடம் தொடங்குவது போல் தோன்ற,
“உனக்கு என்ன பிரச்சனை வித்யா…” நேராகவே கேட்டு விட்டான்.
“எனக்கா… எனக்கு என்ன பிரச்சனை…” என்று திரும்ப அதே கேள்வியை அவள் கேட்க.
“அதான் கேக்குறேன். நீ என்னவோ சரியில்லை. உன் மனசுல என்ன இருக்கு சொல்லு?… குறிப்பிட்டு உன் தப்புன்னு என்னால எதையும் சொல்ல முடியல. ஆனா, எனக்கு என் மனைவியை தெரியும்…” முகுந்தன் அழுத்தமாக கேட்க.
“அவளுக்கு என்ன முகுந்தா…” என்று சுசீலா சொல்லும் போதே, நேர தன் மாமனாரிடம் போய் நின்றாள் வித்யா. இனி பேசிவிட வேண்டும்
“என்னம்மா…”
“இவர் யார் மாமா?…” என்று வித்யா கணவனை கை காட்டி கேட்க.
“அவன் யார்? என் மூத்த மகன்…” என்று புரியாமல் தாமோதரன் சொல்ல,
“அவர் தானே உங்க மூத்த மகன். இந்த வீட்டுல நிரஞ்சன் பிறந்த வளர்ந்த மாதிரி தான் இவரும் பிறந்து வளர்ந்தார். அப்படி இருக்க சொத்து விசயத்துல இவர மட்டும் ஓரம் கட்டலாமா? ரெண்டு பிள்ளைகளில் ஒரு பிள்ளையை தூக்கியும், ஒரு பிள்ளையை இறக்கியும் பார்க்கலாமா?… ரெண்டு பேரையும் சமமா தானே பார்க்கணும். அவ்வளவு நியாயம் பேசுறீங்க, ஏன் எங்களுக்கு அநியாயம் பண்றீங்க…” நிமிர்ந்தே தான் கேட்டாள்.
வித்யா என்று அதட்டல் போட்டான் முகுந்தன்.
“ஏய் வித்யா என்ன பேசுற…” என்று சுசீலாவும் வர,
கை காட்டி எல்லாரையும் நிப்பாட்டியவர்,
“சொல்லுமா என்ன அநியாயம் பண்ணாங்க உங்களுக்கு…” என்று பொறுமையாக தான் தாமோதரன் கேட்டார்.
“இந்த வீடு தான் மாமா…” என்று வித்யா சொன்னதும், எல்லோரும் அதிர்ந்து போய் அவளை பார்த்தார்கள்.
“நான் இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்ததுல இருந்து சொல்ற ஒரு வார்த்தை, இந்த வீடு நிரஞ்சனுக்கு தான். அது ஏன்? என் புருசனும் இந்த வீட்டுல பிறந்தவர் தான… அவருக்கும் சொத்துல பங்கு இருக்கு தான… அவர் உங்க கூட இருந்து வளரல, வேலை எல்லாம் வெளி இடம். அதனால அவர் உங்க மகன் இல்லன்னு ஆகுமா? அவருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பங்க குடுக்காம, வெளி பேச்சுக்கு என் பெரிய மகன் அப்படி, இப்படின்னு பேச்சு மட்டும் தான். உண்மையா அவருக்கு நீங்க நியாயம் செய்யல…” என்று ஆவேசமாக சொல்ல,
“ஏய் என்னடி பேசுற? நீ நல்லவன்னு உன் பக்கம் தான் நின்னேன். நர்மதாவ கூட உனக்கு தான் வேலை செய்ய சொல்லுவேன். நம்ம கூடவே இல்லாத மகன்னு ஒரு படி மேலே தான் உங்களை பார்ப்பேன். இத்தனை வருசத்துல என்னைக்காவது உங்களை குறை சொல்லி இருக்கேனா?… எங்க கூடவே இருந்து பார்த்தது சின்னவனும், அவன் பொண்டாட்டியும் தான். ஆனாலும் நான் உங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். நர்மதாவ மாதிரி என்னைக்காவது உன்னை வேலை செய்ய சொல்லி இருக்கேனா, ஏதாவது குத்தமா பேசி இருக்கேனா… என் ஆதரவு உனக்கு தானா…” என்று சொல்லி கொண்டே வந்த சுசீலா, நிரஞ்சன் முகம் பார்த்து கப்பென்று வாய் மூட,
“இதெல்லாம் ஏன் செஞ்சீங்க?… இந்த வீட்டு மேல நான் உரிமை கூற கூடாதுன்னு தான். என் கிட்ட உங்க சின்ன மருமகளை விட்டு கொடுக்குற மாதிரி பேசிட்டு, இத்தனை கோடி சொத்தை உங்க சின்ன மகன் வீட்டுக்கு கொடுக்கிறது தான் உங்க எண்ணமே…” ஆணித்தரமாக வித்யா சொல்ல,
“உனக்கு பிடிக்கலன்னா முதல்லையே சொல்லி இருக்க வேண்டிய தான… அப்ப வாய மூடி இருந்துட்டு, இப்போ வந்து சொல்லுறவ…” கோபமாக சுசீலா கேட்க.
இவர்கள் சம்மதம் சொல்ல போய் தானே ஊக்கமாக சின்ன மகனுக்கு தான் வீடு என்று ஊர் முழுக்க சொல்லி வைத்து இருக்கிறார்கள். இந்த வீட்டை சொல்லி தான் நர்மதாவை அந்த பாடு படுத்தினார். நியாயமாக நர்மதா எது சொல்லி வந்தாலும், இந்த வீட்டை சொல்லியே அவள் வாயை அடைத்து விடுவார்.
“இவ்வளவு பெரிய சொத்தை உனக்காக விட்டு கொடுக்கிறோம், நீ கொஞ்சம் அனுசரித்து போனால் என்ன, நாளைக்கு இதெல்லாம் யாருக்கு உனக்கு, உம் பிள்ளைகளுக்கு தான்…” இப்படி பேசியே அவளை அடக்கி வைப்பார். இப்போது சண்டைக்கு நிக்கும் பெரிய மருமகள் மேல் கோபம் வந்தது. ஆனால், வித்யா வேற காரணம் சொன்னாள்.
“எப்படி என் உரிமையை கேட்க முடியும். இந்த வீட்டுக்கு வந்த ஒரு வருடத்திலேயே நர்மதா ஒரு பிள்ளையை பெத்து கொடுத்துட்டா… ஆனா, நான்? அன்னைக்கு என்னால என்ன பேச முடியும். அப்படியே நான் ஏதாவது பேசி இருந்தா… ஒத்த பிள்ளைக்கு வழியை காணம், சொத்துல பங்கு வேணுமான்னு கேட்டு இருப்பீங்க. ஆனா, இன்னைக்கு உங்களால என்னை கேட்க முடியாது. நான் இந்த வீட்டுக்கு வாரிசை பெத்து கொடுத்து இருக்கேன். எனக்கும் பிள்ளை இருக்கு, அப்படி எல்லாம் எங்க பங்கை விட்டு கொடுக்க முடியாது…”
வித்யா பேச பேச யாரும் பதில் பேசவே முடியவில்லை. அவள் நிறைய யோசித்து, நிறைய நாள் காத்திருந்திருக்கிறாள். சந்தர்ப்பம் கிடைக்க, தன் பங்கு சொத்துக்கு போராடுகிறாள்.
“உனக்கு தான் அவ்வளவு பெரிய வீடு இருக்கே, அப்புறம் என்ன? சின்னவன் இந்த வீட்டுல இருக்கட்டும். அவனுக்கு தான் வீடு இல்லை…” என்று சுசீலா சொல்ல,
“நல்லா இருக்கு உங்க நியாயம் அத்தை. உங்க உதாரி மகனுக்காக, எங்க சொத்தை விட்டு கொடுக்கணுமா?…” வெடுக்கென்று வித்யா கேட்க.
“வித்யா…” என்று கத்தினான் முகுந்தன்.
நர்மதா வெறும் பார்வையாளர் மட்டுமே… அவளுக்கு முன்பே ஒரு ஊகம் இருந்தது. வித்யா உடன் நேரடியாக எந்த சண்டையும் இல்லை எனும் போது அவளின் முகத்திருப்லில் ஓரளவு கணித்து தான் இருந்தாள். அத்தோடு அவளுக்கு இந்த வீட்டின் மேல் பெரிதாக உரிமை உணர்வு ஏற்படவும் இல்லை. அப்படி உரிமையோடு, சொந்தத்தோடு பார்க்க ஒரு நாளும் சுசீலா விட்டதும் இல்லை. அதனால் தான் அவள் நார்மலாக இருந்தாள்.
அதற்கு எதிர்பதமாக நிரஞ்சன் முகம் செத்து போனது. தான் என்ன ஊதாரியா?… கோபம் இருந்த போதும் அண்ணன் மனைவியோடு நேரடியாக சண்டை போட விருப்பம் இல்லை. அது முறையும் இல்லை.
இதை நர்மதாவும் பார்த்து தான் இருந்தாள். இதுவே பிருந்தாவாக இருந்தால் குதித்து இருப்பான். நிரஞ்சனை பேச வித்யாவுக்கு உரிமை இல்லை என்ற போதும், அண்ணன் மனைவி என்று எதிர்த்து பேச முடியாமல், கோபத்தை முகத்தில் மட்டும் தான் காட்டுகிறான். யாருக்காக அண்ணனுக்காக… அப்ப நான்? எனக்காக யாரையும், எந்த உறவையும் அனுசரிக்க மாட்டான்.
“வித்யா எந்தம்பிய பேச நீ யார் டி?… எகிறினான் முகுந்தன்.
“நீங்க பேசாதீங்க. உங்களை நம்பி நான் மோசம் போயிட்டேன். தம்பிய நினைச்ச நீங்க, நம்ம புள்ளையை நினைச்சீங்களா? அவனுக்கு சேர வேண்டிய சொத்தை யார் யாருக்கோ விட்டு கொடுக்குறீங்க…” கத்தினாள் வித்யா.
“எம் பையனுக்கு நான் பார்ப்பேன்…” என்றான் முகுந்தன்.
“எவ்வளவு பேராசை. மனசு முழுக்க விசம்…” என்று சுசீலா சொல்ல,
“யாருக்கு அத்த பேராசை. என் புருசனுக்கு சேர வேண்டிய சொத்தை முறையா கேக்குறேன். அவ்வளவு தான். நான் ஒன்னும் உங்க சின்ன மகனை மாதிரி முழுசா எனக்கே வேணும்ன்னு நினைக்கலையே. எங்க பங்க எங்களுக்கு கொடுங்க…”
“அவ்வளவு பெரிய வீட்டை வச்சுகிட்டு. இந்த வீடும் வேணும்ன்னு கேட்கிற…”
“உங்களுக்கு எப்படி தான் அத்தை புரிய வைக்கிறது. அந்த வீடு என் புருசனோட சுய சம்பாத்தியம். பத்து வருசம் நாடு விட்டு, ஊரை விட்டு, சொந்ததை விட்டு போய் கஷ்ட பட்டு சம்பாதிச்சு வீடு கட்டி இருக்கார். ஆனா உங்க சின்ன மகன் என்ன வச்சு இருக்கார். அவ்வளவு சம்மாத்தியம் இருக்கு, பொண்டாட்டியும் வேலைக்கு போறாங்க. ஆனா, எந்த வீட்டை கட்டி இருக்காங்க. உண்மையாவே கஷ்ட படுறவங்கன்னா கூட யோசிக்கலாம். ஆனா, இவங்க பணத்தை சேமிக்காம செலவு பண்ணுவாங்க. ஒன்னுக்கும் ஆகாம கோடி ரூபாய்க்கு கார் வாங்குவாங்க. இஷ்டத்துக்கு ஜோடி போட்டு ஊரை சுத்துவாங்க. நாங்க எங்க சொத்தை விட்டு கொடுக்கணுமா? என்ன நியாயம் அத்தை உங்களது…” என்று விடாமல் வித்யாவும் பேச,
நர்மதாவின் தொண்டை குழி ஏறி, இறங்கியது.
“பேசாதீங்க…” கத்தினான் நிரஞ்சன்.
“மூச்… இனி ஒரு வார்த்தை. அடுத்த ஒரு வார்த்தை எம் பொண்டாட்டிய பத்தி வர கூடாது. எங்க வாழ்க்கை எங்க விருப்பம். உங்களுக்கு என்ன வேணும்? இந்த வீடு தான. எடுத்துகோங்க… என் குடும்பத்தை பேச உங்களுக்கு உரிமை இல்லை. உங்க உரிமையை மட்டும் பேசுங்க. உங்க மாமனார் கிட்ட கேளுங்க. நாங்க வர மாட்டோம். அதை விட்டு எங்களை பேசுற வேலை எல்லாம் வேணாம். எனக்கு எங்க அண்ணன் உறவு வேணும்ன்னு நினைக்கிறேன்…” என்றவன், மெல்ல திரும்பி மனைவியை பார்க்க.
அவளும் கணவனை தான் பார்த்து நின்றாள். எவ்வளவு நியாயமற்றவன் நிரஞ்சன். இதே மாதிரி அவள் வீட்டு ஆட்கள் பேசி விட்டு தப்பி போக முடியுமா? அல்லது சுசீலா தான் விடுவாரா… அண்ணன் உறவு வேணுமாம். நர்மதா நிமிர்ந்தே நின்றாள்.
“நிரஞ்சா விடுடா… அவ என்னவோ பைத்தியகாரி…” என்று முகுந்தன் சமாதானம் சொல்ல வர,
“அவ கிடக்குற விடு சின்னவனே… வீடு உனக்கு தான். நான் சொல்றேன். இது எங்களோட சுய சம்பாத்தியம். இதுல பங்கு கேட்க அவ யாரு? அவ என்ன அவங்க அப்பன் வீட்டுல இருந்தா கொண்டு வந்தா? அண்ணன் சரின்னு சொல்றான். அவ பேச்சை விட்டு தள்ளு…” என்று சுசீலா சின்ன மகனை சமாதானம் செய்ய,
விடுவாளா வித்யா, “சரி விட்டு தள்ளுங்க. உங்க பெரிய மகனையும் சேர்த்து விட்டு தள்ளுங்க…” என்று ஆவேசமாக சொல்ல,
“வித்யா…” என்று அடிக்க போனான் முகுந்தன். தாமோதரன் வந்து மகனை பிடிக்க,
“அடிங்க. நல்லா அடிங்க. நானும் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். எங்க வீட்டு ஆளுகளும் வரட்டும். நியாயத்தை பேசட்டும். எனக்கும் ஆள் இருக்கு… நான் என்ன சும்மா வந்தவளா… உங்களுக்கு கழுத்தை நீட்டி, பிள்ளையும் பெத்து இருக்கேன். எனக்கு நியாயம் சொல்லுங்க…”
“நீங்க சொல்லுங்க மாமா? ஒன்னு சொத்தை ரெண்டா போடுங்க, இல்லையா பெரிய மகனே உங்களுக்கு இல்லன்னு சொல்லுங்க… அப்படியும் முடியாதுன்னா நானும் நர்மதா மாதிரி எங்க வீட்டுல இருந்து ஆளை கூட்டிட்டு வாரேன். பொதுவுல வச்சு பேசுவோம்…” விடவே இல்லை வித்யா.
நர்மதாவை தவிர எல்லோரும் வாயடைத்து போய் பார்த்தார்கள். வித்யாவா இது?… இத்தனை வருடத்தில் இவ்வளவு பேசி இன்று தான் பார்க்கிறார்கள். எப்பவும் கூடவே இருந்து சொன்னது எல்லாம் கேட்டு வேலை செய்யும் நர்மதாவை விட, வருடத்தில் ரெண்டு முறை வந்தாலும் அவ்வளவு அன்பாக, பாசமாக பேசும் வித்யா மீது ஒரு பெரிய மதிப்பு இருக்கும். நிறைய செய்வாள் வித்யா. எல்லாம் விலையுயர்ந்த வெளிநாட்டு பொருட்கள். அவ்வளவு வாங்கி வருவாள். தன் மரியாதை குறையாத மாதிரி தான் அவள் நடத்தை இருக்கும்.
வித்யா சொன்னது ஒன்று தான், “நியாயம் பேசுங்கள்…”
அமைதியாக இருந்த தாமோதரன், “வித்யா சொல்றது உண்மை தான். இந்த வீட்டு மேல என் மகன்கள் இருவருக்குமே சம உரிமை உண்டு. நாங்க உயிரோட இருக்குற வரை பொது, அப்புறம் தனி தனியா நாங்க இருக்கும் போதே மாத்தி கொடுக்கிறோம்…” என்று முடிவாக சொல்ல,
“என்னங்க என்ன இது?…” என்று சுசீலா தொடங்க,
“வாய மூடு. எல்லா பிரச்சனைக்கும் ஆரம்ப புள்ளியே நீ தான். அப்பவே இந்த மாதிரி யோசித்து இருந்தால், நிரஞ்சனும் ஒரு வீட்டை கட்டி இருப்பான். எங்க நாம விட்டோம். மகன் நம்மள விட்டு போக கூடாதுன்னு வீடு உனக்கு தான்னு வாக்கு கொடுத்தோம். அவனும் அதை நம்பி… இப்போ பாரு…” என்றவர்,
“முகுந்தா அதான் சொத்தை சமமாக போட்டாச்சுல்லா… அப்போ வாங்குன காசை திருப்பி கொடு. அதுவும் பொது கணக்குல வரும்…” என்று தந்தை சொல்லவும்,
அவமானத்தோடு தலையாட்டினான் முகுந்தன்.
“என்ன காசு” என்று வித்யா அதிர்ந்து போய் கேட்க.
“இந்த வீட்டை முழுசா நிரஞ்சனுக்கு கொடுத்தா, என் பெரிய மகனுக்கு ஒன்னுமே தராமவா விடுவோம். இந்த வீடு உனக்கு தான்னு சொல்லியே வீட்டு செலவு, எங்க மருத்துவ செலவு எல்லாம் நிரஞ்சன் தான் பார்த்தான். எங்க பென்சன் பணம் அவ்வளவும் சேமிப்பா தான் இருந்துச்சு. அதுல இருந்து தான் ஒரு கோடிக்கு மேல முகுந்தனுக்கு கொடுத்து இருக்கேன்…” என்றவர், கொஞ்சம் சங்கட பட்டு,
“நர்மதாவுக்கு மட்டும் தான் தெரியாது. நிரஞ்சன், முந்தனுக்கு தெரியும்…” என்று சொல்ல,
“அதான, எத்தனை பார்த்தாலும் குடும்ப விசயம் எல்லாம் மருமகளை வைத்து பேசுவார்களா?… என்ன செய்தாலும் அடுத்த வீட்டு பெண் தான் போல…” நர்மதா நினைத்து கொண்டாள்.
“எங்க தப்பு தான். சொத்து விவரம் பேசும் போது மருமகள்கள் ரெண்டு பேரையும் சேர்த்து பேசல. இந்த வீட்டை நிரஞ்சனும், அந்த மதிப்புக்கு சமமா கிராமத்துல இருக்கிற தோப்பு, வீடு, நிலம் எல்லாம் முகுந்தனுக்கும் பேசி இருந்தோம். அதுல காசு கணக்கு வராது. முகுந்தன் லோன் போடுறேன்னு சொல்லும் போது நான் தான் தடுத்து எங்க சேமிப்பு பணத்தை எடுத்து கொடுத்தேன்…” என்றவருக்கு மனதில் ஒரு குற்ற உணர்வு.
அன்று யோசிக்கும் போது சின்ன மகனுக்கு அதிகமாக செய்வது போல தோன்றியது. ஆனால், இன்று பார்த்தால் உடன் இருந்து வரவு, செலவு என்று எல்லாம் பார்த்த மகனுக்கு ஒன்றும் செய்ய வில்லை. எல்லாம் சமமாக தான் போயிற்று…
அவருக்கு நர்மதாவை பார்த்து தான் அவ்வளவு குற்ற உணர்வு. எவ்வளவு செய்தாள். ஒரு நாளும் உரிமையாக இந்த வீட்டில் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு பின் தான் என்று சுசீலா நிற்பார். இந்த வீடு உங்களுக்கு தான் என்று இவரே தான் நேடேடியாக மருமகளிடம் வாக்கு கொடுத்தார்.
சுசீலா அவ்வளவு படுத்துவார் நர்மதாவை… எல்லா இடத்திலும் சொல்லி வாயடைப்பது இந்த வீட்டை தான். ஆக, கூடவே இருந்து பணிவிடை செய்து பார்த்து கொண்ட மருமகளும் சரி, என்று ஒரு நாள் வந்து போகும் மருமகளும் சரி. சொத்து சமமாக தான் கொடுக்க படுகிறது.
தாமோதரன் மறுக, நிரஞ்சன் சொல்லி விட்டான்,
“அப்பா, நான் உங்களை பார்த்தேன்னா நீங்க சொத்து தருவீங்கன்னு இல்லை. நீங்க என்னை பெத்தவங்க. உங்களுக்கு செய்யிறது என் கடமை. சொத்து கொடுக்காம போனாலும் நானும், நர்மதாவும் இப்படி தான். நர்மதா யாருன்னு உங்களுக்கு தெரியாதா… விடுங்கப்பா…” என்று நிரஞ்சன் சொன்னாலும், அவருக்கு சங்கடம் தான்.
வித்யா அலட்டி கொள்ளவே இல்லை. நான் என் உரிமையை கேட்டேன். அவ்வளவு தான். என்ன சொத்தாக இருந்தாலும் சமமாக போடுங்கள்.
முகுந்தன் தன் தம்பியை பார்க்கவே முடியவில்லை. வீட்டை தம்பிக்கு கொடுக்கிறேன் என்று அவனாக தான் முன் வந்து சொன்னான். சென்னையில் இதை விட பெரிய வீடு இருக்க, அப்புறம் எதற்கு இன்னொரு வீடு. கிராமத்து வீடு, தோப்பு எல்லாம் தனி சொத்தாக இருக்கட்டும் என்று நினைத்தான். அவ்வளவு பெரிய இடம் அது…
என்ன ஒன்று அண்ணன், தம்பி இருவரும் மனைவிகளிடம் கலந்து பேசாமல், தனிப்பட்டு முடிவு எடுக்க, சிக்கலாகி விட்டது.
நிரஞ்சன் வெளியே காட்டி கொள்ள வில்லையே தவிர, அவனுக்கு அவ்வளவு வேதனை. உணர்வு பூர்வமாக கலந்த வீடு. யாரோ ஒருவர் உனக்கில்லை என்று விட்டார். அது நியாயமும் ஆகிறது. இதை தான் நர்மதா அடிக்கடி மறைமுகமாக சொல்லி வந்தாள். எங்கு கேட்டான். இனி ஒரு வார்த்தை, அவளிடம் பேச முடியாது
இங்கு மிக நார்மலாக இருந்தது நர்மதா தான். அவள் கணவனுக்கு ஆறுதல் சொல்லவே இல்லை. பேச்சு வார்த்தை முடிந்ததும், கிளம்பி விட்டாள்.
error: Content is protected !!