Skip to content
Post Views: 16,337
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 24
நர்மதா சத்தம் கேட்கும் போதே எல்லோரும் வந்து விட்டார்கள். நர்மதா முகம் ஒரு மாதிரி இருந்தது. வித்யா பேசியதில் ஆத்திரம் பெருகினாலும் அதை முழுதாக வெளிக்காட்ட விடாமல், படபடப்பு, மன நடுக்கம் அதிகரித்தது.
நிரஞ்சன் தான் மனைவி அருகே வந்து, “என்ன நர்மதா…” என்று கேட்க.
Advertisement
மற்ற எல்லோரும் புரியாமல் பார்த்தார்கள்.
“இவங்க அப்பத்தா போல தான் பெரிய மாமா. அந்த ஜாடையில தான் சான்வி இருக்கா. அவங்க இப்போ உயிரோட இல்லை. அதுனால பாக்குற எல்லாரும் அவங்க பெரியப்பா மாதிரின்னு சொல்லுவாங்க. ஏன் மாமா, அத்தை கூட தான் சொல்லுவாங்க முகுந்தன் மாதிரி தான் சின்ன குட்டின்னு… யாருக்கும் தப்பா தெரியலையே. இப்படி தான் பிள்ளை வேணும்ன்னு யாராவது தவம் இருப்பாங்களா?… கடவுள் கொடுக்கிறது தான்…” என்று நர்மதா சொன்னதும், எல்லோரும் அதிர்ந்து போய் வித்யாவை பார்த்தார்கள்.
“அத்தோடு நீங்க சொன்ன விதம்? அதுக்கு என்ன அர்த்தம் வித்யா?… உங்களோட வார்த்தை ஒன்னு கூட என் வாழ்க்கையை பாதிக்காது. உங்க புருசனை பத்தி உங்க கணிப்பு என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா, என்னை பத்தி என் புருசனுக்கு நல்லா தெரியும்…”
Advertisement
“நீங்க என்னை அவமான படுத்துற மாதிரி, அசிங்க படுத்துர மாதிரி பேசியதா நீங்க நினைச்சா… அது உங்களையே நீங்க சொல்லுகிற மாதிரி தான். எத்தனை கஷ்டத்திலும் எம் புருசன் தான் வேணும்ன்னு நான் நிக்கிறேன். எதுவுமே இல்லாம போனாலும் எம் புருசன் தான். அது என்னைக்கும் மாறாது… எம் மக உங்க புருசனை மாதிரி இருக்கானு சொல்லி, உங்க கிட்ட நிக்கிற அவசியம் எங்களுக்கு எப்பவுமே வர போறது கிடையாது…” என்றதும்,
Advertisement
ஆளாளுக்கு பதறி போனார்கள். எவ்வளவு பெரிய வார்த்தை…
“அடி பாவி எவ்வளவு பெரிய வார்த்தை. பொண்ணா நீ… கேடுகெட்டவளே…” என்று சுசீலா பாய,
முகுந்தன் உடைந்து போனான். நிமிர்ந்து தன் தம்பியை பார்க்கவே முடியல…
Advertisement
மனைவி ஏன் அப்படி சொன்னாள் என்றதன் காரணம் விளங்கியது. வித்யாவை போல தான் நிரஞ்சனும்… ஒரு நாளும் அவன் அப்படி பேசியதில்லையே… அப்போ தன்னிடம் தான் தவறு உள்ளதோ…
“உங்க கிட்ட பணம், வசதி இருந்தா அது உங்களோட தானே… நாங்க எப்பவாது வந்து நின்னோமா? கஷ்டபட்டு சம்பாதிச்ச பணமே அனாமத்தா தூக்கி கொடுத்தோம். அப்புறமும் உங்க நிழல்ல நாங்க நிக்கலை தான…” என்று நர்மதா சொன்னதும்,
“உங்களை மாதிரி நானும் அனாமத்தா தூக்கி கொடுக்க முடியுமா? சொல்லுங்க?…” என்று வித்யா கேட்டதும்,
முகுந்தன் மனதில் எச்சரிக்கை மணி அடித்தது.
“அப்படி என்னங்க நீங்க செஞ்சீங்க… உங்க இடத்துல நீங்க இருக்கீங்க, எங்க எல்லையில நாங்க நிக்கிறோம்…”
“உங்க ஹஸ்பன்ட்க்கு ஹாஸ்பிடல் பில் கட்ட நாங்க தான் பணம் கொடுத்தோம்…” என்று வித்யா சொன்னதும் அதிர்ந்து போய் நர்மதா கணவனை பார்க்க,
நிரஞ்சனும் அதிர்ச்சியில் தான், தன் தந்தையை பார்த்தான். தாமோதரன் தன் பெரிய மகனை பார்க்க,
வித்யா தொடர்ந்தாள், “ஒப்பனா சொல்லனும்னா எனக்கு அதுவே பிடிக்கல நர்மதா. கூட பொறந்த உறவு கஷ்டம்ன்னா ஏதோ கொஞ்சம் உதவி செய்யலாம். அதுக்காக எல்லாமே எங்க தலையில வச்சா எப்படி?… ஆனாலும் நான் அமைதியா தான் இருந்தேன். வீட்டுக்கு வந்ததுல இருந்து எல்லாம் எங்க தலையில தான். வீட்டு வரவு, செலவு எல்லாத்துக்கும் முகுந்தன் பேர் மட்டும் தான்…”
“இதுல ஏதாவது ஒரு நியாயம் இருக்கா… கூட்டு குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து தான் எல்லாம் பார்க்கணும். அதை விட்டு ஒருத்தர் தலையிலே இருக்குற அத்தனையும் கட்டணும்ன்னா எப்படி?…”
“வாய மூடு வித்யா,அப்படி இல்லை நீ உங்க அம்மா வீட்டுக்கு போக வேண்டிய தான். அதுவும் நிரந்தரமா…” என்று முகுந்தன் அதட்ட,
நர்மதா சொல்லி விட்டாள், “உண்மையா எனக்கு தெரியாது வித்யா. எங்க கிட்ட பணம் இல்லாம இல்லை. ஆனா….” என்று தயங்கி தான் பேசினாள்.
எப்படி சொல்ல முடியும். வித்யா சட்டமாக கேட்பது போல நர்மதா கேட்க முடியாதே. அதற்கு அவள் கணவனே விட்டது இல்லை.
“கூட்டு குடும்பத்துல தான் நான் கல்யாணம் பண்ணி வந்தேன். அங்க வீட்டுக்கு மூத்தவங்களா பெரியவங்க இருக்கும் போது, நான் எப்படி கணக்கு கேட்க முடியும். இதுவரைக்கும் வரவு, செலவு பார்த்தது அத்தை தான். அவங்க சொல்றத தான், நாங்க எல்லாரும் கேட்போம். அத்தோடு வீட்டு நிர்வாகம் பெரிய மாமா கைல போனது கூட எனக்கு தெரியாது. முன்னமே தெரிஞ்சு இருந்தா, நீங்க எங்களை பாக்குற நிலைக்கு விட்டு இருக்க மாட்டேன். நாங்க போட்ட பணம் மட்டும் தான் போச்சு… மத்தபடி என் நகை, என் வருமானம் எல்லாம் என் கைல தான் இருக்கு…”
“என் கணவருக்கு தான் வேலை போச்சு. அதுவும் அவர் உடல் நிலையை கொண்டு நானா தான் விட சொன்னேன். என் வேலை என் கைல தான் இருக்கு… அத்தோடு உங்களுக்கு சில விசயம் சொல்லணும். குடும்ப செலவுல சாப்பாடு, வீட்டு செலவு மட்டும் தான் வரும். அதை தாண்டி எம் பிள்ளைக செலவை நாங்க தான் பார்த்துபோம். வீட்டு வேலை தான் எனக்கு உரியது. வீட்டு நிர்வாகம் எனக்கு உரியது கிடையாது. நிரஞ்சன் தான் செலவு பண்ணாலும் , நிர்வாகம் எல்லாம் அத்தை தான். அவங்களும் என் கிட்ட வரவு, செலவு சொல்ல மாட்டாங்க. இதுல எம் பிள்ளைக எந்த இடத்திலும் உங்க கிட்ட விட்டது இல்லை. அப்புறம் எப்படி அவ்வளவு பெரிய வார்த்தை வந்துச்சு….”
வித்யா சொன்னது எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய், நர்மதா விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை. அதை அவள் முகம் வெளிக்காட்ட,
மனைவி முகம் பார்த்து உள்ளுக்குள் செத்தான் நிரஞ்சன். எந்த நிலையில் என் மனைவியை நான் வைத்து இருக்கிறேன்.
வித்யா தன் மாமனார் மாமியாரை பார்த்தவள், “குடும்பத்துல வார சின்ன சின்ன செலவுக்குக்கூட பெரிய மகன் கிட்ட நிக்கவும் எனக்கு அது ஒரு மாதிரி கோவமா வந்துருச்சு. எல்லாத்துக்கும் என் புருஷன் தானா அப்படின்னு… இப்ப நிரஞ்சனுக்கும் வேலை இல்லை. நீங்களும் வேலைக்கு போகல அப்ப பிள்ளைகளை வச்சுட்டு என்ன பண்ணுவீங்க… பிள்ளைக செலவு நாங்க பாக்கணுமோ அப்படின்னு ஒரு எண்ணம். அது மாதிரியே எல்லாத்துக்கும் இவர்தான் முன்ன போய் நிக்கிராரு…” என்றவள்,
“என் குடும்பம் அப்படின்னா நான் என் புருஷன் என் புள்ள மட்டும்தான். அதையும் மீறி மாமனார் அத்தை அவங்கள பார்க்கவும் நான் தயார் தான். ஆனால் அதையும் தாண்டி கொழுந்தன் குடும்பத்தை எல்லாம் என்னால இழுக்க முடியாது. உங்க குடும்பத்தை நீங்க தான் பாக்கணும். உங்க பிள்ளைகளை நீங்க தான் பாத்துக்கணும். ஒரு குடும்பத்தை இன்னொரு குடும்பம் தாங்க முடியாது. எங்களால சாப்பாடு மட்டும் தான் வழி செய்ய முடியும்…”
வித்யாவின் இந்த வார்த்தைகளை கேட்ட பின் ஒரு பெற்றவர்களாக நிரஞ்சன், நர்மதா மனம் அவ்வளவு வேதனை அடைந்தது. பெற்றவர்கள் இருவரும் குத்துகல் போல இருக்க. எம் பிள்ளைகளுக்கு இந்த மாதிரி ஒரு பேச்சா… மனம் அவ்வளவு வலித்தது.
நிரஞ்சன் வாயை திறக்கவில்லை அவன் மனதில் இவ்வளவு வலி…
“ ஹாஸ்பிடல் பில் நான் கட்ட தான் போனேன். முகுந்தன் தான் இந்த குடும்பத்துக்கு நான் எதுவுமே பண்ணல. மூத்த பையனா இருந்து நான் பாக்கணும்னு ஆசைப்படுறேன் அப்படின்னு அவன் தான் வாங்கினான்…” என்று தாமோதரன் சொல்ல,
“இத்தனை வருசம் அவன் தான் பார்த்தான். ஒரு மூணு மாசம் வீட்டு செலவை பார்த்ததுக்கு இந்த குதி குதிகிற…” சுசீலாவும் வர,
“உங்களுக்கு உங்க சின்ன மருமகள் தான் உசத்தி. எப்பவும் அவள் பெருமை மட்டும் தான் பேசுவீங்க. வெளிய காட்டிக்காம இருந்தாலும், அவ மேல உங்களுக்கு ஒரு சாப்ட் கார்னர் இருக்கு…” என்று வித்யா விடாமல் பேச,
நர்மதாவும் விடவில்லை “இருந்தா என்னங்க தப்பு. எட்டு வருசம் நான் தான் கூட இருந்து பார்த்தேன். எட்டு மாசம் ஒரே வீட்டுல இருந்த நீங்க எவ்வளவு குறை சொல்றீங்க. எட்டு வருசம் நான் அனுசரிச்சு தான் இருந்தேன். இது நம்ம குடும்பம். எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நாம எல்லாம் ஒரே குடும்பத்து ஆட்கள்ன்னு நினைச்சு தான் எல்லாம் பண்ணேன். மாசத்துல ஒரு நாள் தான் எனக்கு சி. எல். அந்த ஒரு நாளையும் அத்தையோட மந்திலி செக்கப்புக்கு தான் போகும். இதுவரைக்கும் அவங்க மருந்து, மாத்திரை வாங்க எந்த கடைக்கும் போகல… ஏன்னா இத்தனை வருசம் நான் போனேன்…”
“உங்களை மாதிரி தான் நானும் ரெண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு எல்லாம் பார்க்க தான் செஞ்சேன். சின்ன பாப்பா வயித்துல, ரெண்டு வயசு பிள்ளை சஸ்டி, அப்போ அத்தை பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கால் உடஞ்சு போச்சு. ஆபரேசன் பண்ணாங்க. நீங்க ஒரு நாளைக்கு ரெண்டு தடவை போன் பண்ணி கேட்பீங்க. அவ்வளவு தான்… நான், கைல ஒன்னு, வயித்துல ஒன்னை வச்சுகிட்டு அத்தையும் நான் தான் பார்த்தேன். வீட்டையும் கவனிக்கவும். எல்லாத்தையும் இழுத்து போட்டு பார்க்க தான் செஞ்சேன். பொம்பளை பிள்ளை இல்லாத வீடு. நாம தான் பார்க்கணும்ன்னு நினைச்சேன்…”
“அவ்வளவு ஏன் போன வருசம் கூட மாமாக்கு டெங்கு வந்துச்சு. தொடர்ந்து அத்தைக்கும் வந்துச்சு. நீங்க என்ன சொன்னீங்க. கை குழந்தை இருக்கு. என்னால வர முடியாது. குழந்தைக்கு ஒட்டிக்கும்ன்னு பார்க்க கூட வரல. அதே வீட்டுல ரெண்டு சின்ன பிள்ளைகளை வச்சு கிட்டு நான் இங்க தான் இருந்தேன். மூணு மாசம் லீவ். நம்ம விருப்பத்துக்கு லீவ் எடுத்தா சம்பளம் கிடையாது. முழுசா எட்டு வருசம் கிச்சன் பக்கம் கூட அத்தை வந்தது கிடையாது. அதுக்காக எனக்கு என்ன சிலையா வச்சாங்க, இல்லை எனக்குண்ணு தனியா சொத்து, நகை எதுவும் கொடுத்தாங்களா…ரெண்டு வார்த்தை பெருமையா சொன்னாங்க. அந்த கிரிடிட் கூட எனக்கு கிடைக்க கூடாதா?..” என்றவள்,
“ நீங்க ஊர்ல இருந்து வந்தாலும் உங்களுக்கும் சேர்ந்து நான் தான பார்த்தேன். நான் ஏன் செய்யணும்ன்னு நினைக்கலையே… இப்ப வரை எம் பொண்ணுங்களுக்கு ஏதாவது ஒன்னு பார்த்து இருப்பிங்களா… வெளிநாட்டுல இருந்து வாரீன்க. உங்க அண்ணன் பசங்களுக்கு எவ்வளவு வாங்கி வந்தீங்க. எம் பிள்ளைகளுக்கு என்ன கொண்டு வந்தீங்க. உங்களை மாதிரி நானும் கணக்கு பார்த்தா?… எனக்கு ரெண்டும் பொண்ணுங்க. வீட்டுல மொத ஆண் வரிசுன்னு, உங்களை பார்க்க அங்க வந்தோம். எம் பொண்ணுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் ட்ரெஸ்க்கு பில் கொடுத்தீங்க. ஒத்த ஆண் வாரிசுன்னு வைரத்துல காப்பு வாங்கி போட்டார். எங்களுக்கு சாப்பாட்டுக்கு நீங்க செலவு பண்ண பணத்தை விட, அது மதிப்பு அதிகம். எம் புருசனுக்கு நீங்க செலவு பண்ண பணத்தை எண்ணி வட்டி போட்டு கூட எங்களால கொடுக்க முடியும். நீங்க பேசின வார்த்தையை என்னைக்கும் அள்ள முடியாது…”
“அன்னைக்கு சொத்து விசயத்துல நீங்க பேசும் போது, உங்க பக்கம் நியாயம் இருக்குன்னு தான் அமைதியா போனேன். ஒரே குடும்பத்துல இருக்கோம். வெறும் பணத்துக்காக திரும்ப முகம் பார்க்க முடியாத அளவுக்கு பேசுறீங்க… அடுத்தவங்க காசுல உட்காருற எண்ணம் எம் புருசனுக்கு என்னைக்கும் கிடையாது. சொந்த பந்தம்ன்னு காச அள்ளி வீசினார். அதுனால் சீல் பட்டு உங்க கிட்ட பேச்சு வாங்குரோம். அவரு எனக்கு சரியான புருசன் இல்ல தான். ஆனா, இந்த குடும்பத்துக்கு உண்மையான ஆள் இவர்… உங்க பணம் எங்களுக்கு வேணாம். இப்பவுவே வாங்கிகோங்க…” மனைவி பேசப்பேச நிரஞ்சன் அமைதியாக பார்த்து நின்றான்.
சில மாதங்களுக்கு முன்புதான் இதே இடத்தில் அவளுக்கு அவன் கொடுத்த அவமானம் அதிகம். மனைவிக்கு அவன் நியாயம் செய்யவில்லை. அவளுக்காக அவன் பேசவும் இல்லை. அவள் பக்கம் துணை நிற்கவும் இல்லை. ஆனாலும் நின்றால் நர்மதா, அவள் கணவனுக்காக நின்றாள்.
இது நிரஞ்சனுக்கு மிகப்பெரிய அடி. நேராக நெஞ்சில் துளைத்த அடி. உண்மையில் அனுபவப் படாமல் நிரஞ்சனால் ஒரு நாளும் மனைவி புரிந்து கொண்டிருக்க முடியாது.
சுசிலா சொன்னார், “முகுந்தன் கல்யாணத்துக்கு தான் மொய் வாங்கினோம். நிரஞ்சன் கல்யாணத்துக்கு எதுவும் வாங்கல. முகுந்தன் கல்யாணத்துக்கு வாங்குன மொய்ய செஞ்சது நிரஞ்சன் தான்…”
வித்யாவுக்கு தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற எண்ணம் இருந்தாலும் பின்வாங்கும் நினைப்பு இருக்கவில்லை,
“எட்டு வருஷம் வீட்டு வாடகை இல்லாம இந்த வீட்ல தான் இருந்தாங்க. அப்போ அவங்க செஞ்ச செலவு எல்லாம் சரிதான்…” சரிகட்ட பார்த்தாள் வித்யா.
முகுந்தனுக்கு அவ்வளவு கோபம் மனைவி மீது… அவள் எந்த உள் அர்த்தத்தில் பேசினால் என்று கண்டு கொண்டதால் தாங்க முடியவில்லை.
“வித்யா நீ கிளம்பு. இனி நீ இங்க இருக்க வேணாம். நீ உங்க அம்மா வீட்டுக்கு போ… என் குடும்பத்தை அனுசரிச்சு போற பொண்ணு தான் எனக்கு வேணும்…” என்று கடுப்பாக முகுந்தன் சொல்ல,
“இதுதான் இதுதான் என் கோபமே. நாம வெளிநாட்டில் இருந்தவரை நல்லா தானே இருந்தீங்க. எனக்கு எப்பவும் ஆதரவா பேசுவீங்க, சப்போர்ட்டிவா இருப்பீங்க, வீட்டு வேலை செய்வீங்க, எனக்கான முழு சுதந்திரமும் நீங்க கொடுத்தீங்க. நர்மதா போல நான் ஏன் இருக்கணும். அவ புருஷன் மாதிரி என் புருஷன் ஒன்னும் கிடையாது. என்கிட்ட சொல்லித்தான் செலவு பண்ணுவீங்க. என்கிட்ட மறைக்க உங்க கிட்ட எதுவுமே கிடையாது. என்னைக்கு நாம இங்க வந்தோமோ, இங்க வந்ததிலிருந்து ஒவ்வொன்னுக்கும் நர்மதாவை வச்சுத்தான் நீங்க எல்லாரும் பாக்குறீங்க. எனக்கு அது பிடிக்கல. நான் என் விருப்பம் போல தான் இருப்பேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்க அம்மாவ, அப்பாவ உங்க தம்பி குடும்பத்தை என்னால பாத்துட்டு இருக்க முடியாது…”
“உங்க அம்மா போடுற ரூல்ஸ்க்கு என்னால தலையாட்ட முடியாது. இவங்களுக்கு அந்த மருமகள் தான் வேணும்ன்னா அப்பவே அந்த மருமகளவே…” என்று வித்யா ஆரம்பிக்க,
மூத்த மகனுக்கும் கட்டி வைக்க வேண்டிய தானே… இதுதான் மனைவி சொல்ல வந்ததன் நோக்கம் முகுந்தனுக்கு புரிஞ்சது. கோபத்தில் அந்த வார்த்தை வருமுன் முகுந்தன் அவள் கண்ணும் பழுக்கும் அளவுக்கு ஒரு அரை விட்டான்.
எல்லோரும் மறந்த ஒரு விஷயத்தை இவள் மட்டும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது சரி கிடையாது. இதுவரை இதைப் பற்றி ஒருவரும் வாய் வார்த்தையாக கூட பேசவில்லை. நர்மதா தான் முகுந்தனுக்கு பார்த்த பெண் என்று ஒருவருக்கும் நினைவு கூட கிடையாது. இதை வெளிப்படையாக வித்தியா பேசி வைத்தால், ஏற்கனவே உடைந்து நின்ற குடும்பம் முழுதாக உடைந்து விடும்.
முகுந்தன் அடிக்க தாமோதரன் தான் தடுத்தார். வித்யா கத்த தொடங்கி விட்டாள். நானும் எங்க வீட்டிலிருந்த ஆள கூட்டிட்டு வாரேன். எங்க வீட்ல வந்து பஞ்சாயத்து பண்ணுவாங்க என்று…
தாமோதரன் நேராகவே மருமகளை பார்த்து கேட்டார் “ வித்யா என்னம்மா வேண்டும் உனக்கு…” என்று கேட்க.
“என்னால ஒண்ணா இருக்க முடியாது. மாமனார் மாமியார் வரை கூட பரவாயில்லை. ஆனால் கொழுந்தன் அவர்கள் குடும்பம் அவர்கள் பிள்ளைகள் என்றெல்லாம் என்னால இழுக்க முடியாது மாமா…” உடைத்தே சொல்லிவிட்டால் வித்யா.
அதற்காகன முழு காரணத்தை அவள் வெளியே சொல்ல வில்லை. அந்த எண்ணம் எல்லாம் அவள் மனநிலை மட்டுமே. மற்றபடி முகுந்தன், நர்மதா இருவரும் அவரவர் வழியில் நிற்கிறார்கள்.
மற்றவர்களுக்கு புரிந்தது. கூட்டு குடும்பத்துல இருக்க வித்யாவுக்கு விருப்பம் இல்லை. அதை உடைத்து சொன்னால், சொத்தை பிரிக்க மாட்டார்கள். அவர்களை அருகிலே இருந்து பார்ப்பதால் நர்மதா வசம் தான் எல்லாம் போகும் என்ற எண்ணம் அவளுக்கு… வித்யாவால் வீடு நிரஞ்சனுக்கு போவதை ஏற்கவும் முடிய வில்லை. அதே நேரம் கூட்டு குடும்பமாக மாமியாருக்கு கீழ் என்ற நிலையில் இருக்கவும் விருப்பம் இல்லை.
தாமோதரன் யோசித்தவர், “முந்தன், நிரஞ்சன்… ரெண்டு பேருமே தனியா போயிடுங்க…” என்று சொல்ல,
அப்பா!… என்னங்க…! என்று சத்தம் பெரும் குரலாக ஒலிக்க,
“ நிஜம் தான். யாரும் எங்களை பார்க்க வேணாம். இனி நீங்க உங்க வாழ்க்கையை மட்டும் பாருங்க. கூட்டு குடும்பம்ன்றது கட்டாயத்துல போறது கிடையாது. சாப்பாடு தொடங்கி, வீட்டுல செய்யிற செலவு வரை பஞ்சாயத்துக்கு வாரது எனக்கு விருப்பம் இல்லை. மகன்கள் தான் பார்க்கணும்ன்னு நிலை இன்னும் எங்களுக்கு வரல. எங்களை நாங்க பார்த்துகிரோம். உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க…” தெளிவாக தாமோதரன் சொல்ல,
“அப்பா…”என்று ஏதோ சொல்ல முகுந்தன் வர,
“எதுவும் சொல்ல வேணாம் முகுந்தா… நம்ம வீட்டுக்கு வார பொண்ணு நம்ம வீட்ல ஒரு ஆள் தான். உங்க பொண்டாட்டி உங்க வாழ்க்கையில மட்டும் இல்ல உங்க வருமானத்திலும் பங்கு கொண்டவங்க… வீட்டு பொண்ணுங்களுக்கு தெரியாம என்னடா வரவு, செலவு… என் பையனுக்கு நான் பாக்க மாட்டேன்னா. அப்படி என்ன நீ செலவு செஞ்சுட்ட மிஞ்சி போனா வெறும் நாலு லட்சம். அது அவனோட ஒரு மாத சம்பளம் தாண்டா… அம்மா, அப்பா குடும்பம்னு அதிகமா நின்னது நிரஞ்சன். அவனுக்கு நான் எதுவுமே செய்யல… இனி வேண்டாம் எங்களுக்காக நீங்க பார்க்க வேண்டாம். உங்க வாழ்க்கை நீங்க பாருங்க. கல்யாணம் ஆயிட்டா மொத உரிமை உள்ளவங்க பொண்டாட்டியும் பிள்ளைகளும் தான். கடைசி வரைக்கும் வாழப் போறதும் அந்த பொண்டாட்டி தான். கூடப்பிறந்த பொறப்பு எல்லாம் காலப்போக்குல மாறி போனாலும் போகும்…” இருவருக்கும் பொதுவாக தான் சொன்னார்.
“நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கிற வரைக்கும் பிள்ளைகன்னு நீங்க வந்து போக இருக்கணும். உங்களை ஒண்ணா வச்சு பாக்கணும்னு ஆசைப்பட்டு உங்களுக்குள் பிரிவு வரதுக்கு நாங்களே காரணமாயிட வேணாம். எங்க வளர்ப்புதான் சரி இல்ல போல… நீயும் உன் மனைவிய அடிக்கிற, அவனும் நர்மதாவை அடிக்கிறான். சம்பந்தக்காரங்க முன்னாடி கைகட்டி மன்னிப்பு கேட்க இனி என்னால முடியாது. நீங்க ரெண்டு பேரும் தனியா போயிருங்க. ஒரு நல்லது விசேஷம்ன்னா பெத்தவங்க வீடுன்னு நீங்க வாங்க… சொத்து எல்லாம் எங்களோட சுய சம்பாத்தியம் இனி அதோட முடிவு எங்களுக்கு தான். யாருக்கும் எதுவும் சொந்தம் கிடையாது. சொத்து எல்லாம் நான் என் உங்க பிள்ளைக பேர்ல மாத்தி வைக்க போறேன்…” என்றவர் உள்ளே சென்று விட்டார்.
நர்மதா நியாயம் புரிந்தாலும், அவள் பேச்சு உண்மையில் அவரை காயப்படுத்தியது. ஏதோ பேசப்போன முகுந்தன் பட்டென்று அமைதியாகி கொஞ்சம் நிதானித்தான்.
அப்பா சொல்வது போல் தனியாக போவது நல்லது தான் என்று யோசித்தான். காசு செலவு இது எல்லாம் கூட்டு குடும்பத்தில் வரும் பிரச்சனைதான். ஆனால் அதையும் விட வித்யா மனதில் இருப்பது… முகுந்தன் அறிந்து கொண்டான் வித்யாவால் என்றும் நர்மதாவோடு ஒன்றாக இருக்க முடியாது என்று… சண்டை போட்டு சரி கட்டியே குடும்பத்தை ஓட்ட முடியாது என்று புரிந்தவனுக்கு தந்தை சொல்வது போல் தனியாக சென்று விடுவோம் என்று முடிவு செய்து விட்டான்.
அன்று இரவோடு இரவாக முகுந்தன், தன் குடும்பத்தை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான். யாரோடு பேச்சு வார்த்தை இல்லை. வித்யாவும் ஒன்றும் சொல்ல வில்லை. சொத்தை சமமாக பிரிக்க எண்ணி இங்கு வந்தவள். தூரத்து பச்சை என்பது போல் ஆகிப் போனது நிலைமை…
முகுந்தன் கிளம்பும்போது நிரஞ்சன் நான்கு லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்தான். தம்பியை பார்த்து அண்ணனுக்கு கண்கள் கலங்கியது. அவனுக்கும் ஒரு மாத சம்பளம் தான். அதை கூட சொந்த தம்பிக்கு குடுக்க முடியாத நிலை…
நிரஞ்சன் நெஞ்சை நீவி கொண்டு திரும்பிப் பார்க்க… மனைவி இரு பிள்ளைகளை கையில் பிடித்துக் கொண்டு, அடுத்து என்ன என்று அவனைப் பார்த்தாள்.
ஹோ வென்று நெஞ்சில் அழுகை பொங்கியது. எதற்கும் துள்ளும் நிரஞ்சன் வாக்கு வாதம் செய்யாமல் அமைதியாக இருந்து, எல்லாவற்றையும் அவதனித்தான்.
முகுந்தன் போல போக வழி இல்லையே… மனைவி, ரெண்டு பிள்ளைகளை கையில் பிடித்து கொண்டு நின்ற நிலை, நெஞ்சில் இரத்தம் வடிந்தது. தான் உயிரோடு இருந்தும், தன் குடும்பத்தின் நிலை என்ன?.
மனைவி திடம் இல்லாதவள் அல்ல. துணிந்து நிற்கும் தைரியம் கொண்டவள் தான். ஆனாலும், கணவன் என்று அவன் முகம் தான் பார்த்து நிற்கிறாள். அவளுக்கு என்ன நியாயம் செய்ய…
தந்தை உடனே கிளம்பு என்று சொல்ல வில்லை தான். ஆனாலும் வெளியேறு என்று சொல்லி விட்டார். முகுந்தனும் சென்ற பின் தான் தயங்குவது எதனால்?… பட்டென்று போக வழி இல்லை. நர்மதா தன்னிச்சையாக எதுவும் முடிவு எடுக்க வில்லை. சுசீலா ஒரே அழுகை தான்.
“நர்மதா, நம்ம ட்ரெஸ், தேவையானது எல்லாம் பேக் பண்ணு…” என்றதும், அதிர்ந்து போய் பார்த்தவள்,
“என்ன சொல்றீங்க…”
“நிஜம் தான். பிள்ளைகளை கூட்டி கொண்டு கிளம்பு…” என்று அழுத்தமாக நிரஞ்சன் சொல்ல,
எல்லாவற்றையும் அடுக்கினாள் நர்மதா. நிரஞ்சன் வெளியே செல்ல, சுசீலா வேகமாக மருமகள் அறைக்கு தான் வந்தார். உடைகளை எடுத்து உள்ளே வைக்க போக,
வெடுக்கென்று பிடிங்கினார் சுசீலா. நிமிர்ந்த நர்மதா கண்களில் அவ்வளவு கண்ணீர். காலை எழும் போது கூட, இப்படி ஒரு நிலையை கற்பனை பண்ண வில்லை. இந்த வீடு, அவ்வளவு சொந்தமாக உணர்ந்தாள். இப்படி பட்டென்று கிளம்புவோம் என்று நினைக்க வில்லை.
சுசீலாவுக்கும் அழுகை தாங்க வில்லை. வேகமாக கீழ வந்தவர்,
“சின்னவே முடியாதவன். அவனுக்கு தனியா போய் குடும்பம் பண்ற அளவுக்கு என்ன தெரியும். அவனை எல்லாம் தனியா விட முடியாது. நம்ம தான் காலத்துக்கு இழுத்து பாக்கணும்…” என்று கணவனிடம் சொல்ல,
“நீ… நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது சுசீலா. இவ்வளவு பிரச்சனைக்கு அடித்தளமே நீதான். உனக்கு மகன்கள் கூட இருக்கணும்னு ஆசை இருக்கே தவிர, மருமகளை எப்படி நடத்தணும்னு தெரியல… நீ எல்லாம் மருமகளுக்களை அரவணைத்து, சரி கட்டி நடக்க மாட்ட. நர்மதாவை மாதிரி வித்யாவ நினைச்ச… எல்லாம் உடைஞ்சு போச்சு. நமக்காக பிள்ளைகள் வாழ வேண்டாம். அவங்க வாழ்க்கை அவங்க வாழட்டும் நீ தள்ளி நில்லு…” முடிவாக சொல்லி விட்டார் தாமோதரன்.
நிரஞ்சன் வந்து விட்டான். பெரிய காரில் பெட்டிகளை கொண்டு போய் அடுக்க, சுசீலா தான் உடன் இருந்து அழுது கொண்டிருந்தார். எப்போதும் கூடவே இருந்த மகன் அவன்… பிள்ளைகள் உறங்கி கொண்டு இருக்க, ஆளுக்கொரு பிள்ளைகளை தூக்கி கொண்டார்கள்.
தாமோதரனுக்கும் மனது தாங்க வில்லை. பெற்ற மகன் தனியே செல்கிறான். பிள்ளைகளோடு அவர்கள் வெளியே வர, கண் கலங்கியது தந்தைக்கு… அப்படி ஒன்றும் ஒன்னுமில்லாதவன் கிடையாது. ஆனாலும், வீடு உனக்கு என்று நம்பிக்கை கொடுத்ததால் தானே, நிரஞ்சன் தனக்கு என்று எதையும் தேட வில்லை.
கண் கொண்டு பார்க்க முடியாமல் தாமோதரன் உள்ளே சென்று விட,
“அம்மா… அழுது உங்க உடம்பை கெடுத்து கொள்ளாதீங்க. பக்கத்து ஏரியாவுக்கு தான் போறேன். வாக்கிங் போற தூரம் தான். விடுங்க… உங்களை விட்டு தள்ளி எல்லாம் என்னால நிற்க முடியாது…” என்றவன் மனைவி பிள்ளைகளை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.
அருகில் இருந்த ஒரு ஓட்டலில் பெயருக்கு, பிள்ளைகளுக்காக உணவு உள்ளே போனது. நர்மதாவுக்கு கவலை எல்லாம் கணவனை நினைத்துதான். அந்த வீடு அவனுக்கு அவ்வளவு பெருமை. அதை விட்டு விலகுவது எப்படி வலிக்குமோ?…
நிரஞ்சன் எண்ணம் எல்லாம் மனைவியிடம் தான். வா என்றதும் இரு பிள்ளைகளை கூட்டி கொண்டு இரவு நேரத்தில் பின்னொடு வந்து விட்டாள். அவ்வளவு நம்பிக்கையா தன் மீது…
அது ஒரு நான்கு வீடு கொண்டு பில்டிங். மேல் புற முதல் வீடு அவனுக்கு… புது வீடு தான். பொருள் ஒன்றும் இல்லை. சுத்தமாக இருந்தது. ஏதோதோ யோசனை இருந்த போதும், இருவரும் எதுவும் பேசி கொள்ள வில்லை.
பையில் இருந்த போர்வையை விரித்து பிள்ளைகளை படுக்க வைத்தவள், கணவனுக்கு மாத்திரை கொடுத்தாள்.
போட்டு கொண்ட நிரஞ்சன். பிள்ளைகள் அருகில் கண் மூடி உறங்க, அவனை பார்த்த பின் தான் நர்மதா படுத்தாள். நிறைய யோசனை, வலி, வேதனை. தன்னை மீறி தான் உறக்கம் வந்தது.
மனைவி நன்றாக உறங்கி விட்டாள் என்ற பின் தான் நிரஞ்சன் எழுந்து அமர்ந்தான். மேட்டிமை, அகந்தை, கௌரவம் கொண்ட அவன் கண், அசதியில் உறங்கும் தன் குடும்பத்தை கண்டு கலங்கியது.
அழுகையை அடக்கவெல்லாம் இல்லை. கண்ணீர் பொங்கியது. என்ன நிலைக்கு கொண்டு வந்து விட்டேன் நான்… என் ஒருவனால், என் தவறால், நான் வாழ்ந்த நிலையில்லா வாழ்க்கையால் என் குடும்பம் நிலையான இடம் இல்லாமல் போனதே…
மறு வார்த்தை பேசாமல் தன்னோடு வந்த தன் மனைவிக்கு என்ன செய்தான்?… அவரவர் அவர் நிலையில் நிக்க, நான் தவறி. என் குடும்பத்தை நிழல் இல்லாமல் நிற்க வைத்து விட்டேன்.
ஒரு மாதிரி அழுகை அடக்க முடியாது என்ற நிலையில் பாத்ரூம் உள்ளே சென்று விட்டான். முகத்தில் நீரை அடித்து கழுவியும் அழுகை அடங்க வில்லை.
என்னை மட்டும் நம்பி, என்னை சார்ந்து நிற்கும் என் குடும்பத்திற்கு நான் தேவை… எனக்கு எதுவும் ஆகி விட கூடாது. நான் இருக்கும் போதே என் மனைவி, பிள்ளைகளுக்கு மரியாதை இல்லை. நானும் இல்லா விட்டால்… அவர்களுக்கு ஒரு நிலையான வாழ்க்கையை நான் தான் கொடுக்க வேண்டும்.
error: Content is protected !!