Skip to content
Post Views: 25,005
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 1
காலை மணி நான்கு என்று அலாரம் அடிக்காமலே முழித்து கொண்டாள் நர்மதா. சோம்பல் எல்லாம் இல்லை, பட்டென்று எழுந்து விடுவாள். இன்று இவ்வளவு சீக்கிரம் எழ வேண்டிய அவசியமே இல்லை. காலாண்டு விடுமுறை பிள்ளைகளுக்கு, அத்தோடு இவளுக்கும்…
ஆம்,நர்மதா ஒரு அறிவியல் ஆசிரியை. வயது முப்பதை தொட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. கடந்த வருடம் தான் அரசாங்க வேலை கிடைத்தது. நர்மதா எதிர்பார்க்கவே இல்லை. அவள் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றது திருமணத்திற்கு முன்… இப்போது அவளுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்க, கையோடு வேலையும் வந்து விட்டது.
Advertisement
மகிழ்ச்சியும், அதிர்ச்சியுமாக கணவனிடம் விசயத்தை சொல்ல, நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், வேலைக்கு போக கூடாது என்று ஒரே முடிவாக சொல்லி விட்டான். அதன் பின் போராடி, உண்ணாவிரதம் இருந்து தான் இந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்கிறாள்.
அதில் ஏக கடுப்பு அவள் கணவன் நிரஞ்சக்கு… அவனுக்கு கார் கம்பெனியில் வேலை, நல்ல சம்பளம். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த பதவி தான். சென்னையில் முக்கிய இடத்தில் நல்ல விலாசமான பெரிய வீடு. அதுவும் சொந்த வீடு.
அவனின் பெற்றோர் தாமோதரன், சுசீலா இருவரும் அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதால் பென்சன் வருகிறது. குறை இல்லாத நிறைவான செல்வம் கொண்ட வாழ்க்கை தான். அப்படி இருக்க குடும்பத்தை விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லையே?…
Advertisement
ஆனால், நர்மதா ஒத்து கொள்ள வில்லை. குடும்ப கஷ்டத்திற்கு, தேவைக்கும் தான் வேலையா?… படித்த படிப்பு என்பதோடு, தன் படிப்புக்கு தகுந்த முறையான வேலை. அதுவும் அரசாங்க வேலை. நல்ல வாய்ப்பு ஏன் விட வேண்டும்?… நர்மதா விடவில்லை, எப்போதும் அமைதியாக கடந்து விடும் பெண். நிரஞ்சன் தான் டாமினெட் பண்ணுவான்.
Advertisement
இந்த விசயத்தில் நர்மதா பின் வாங்காமல் போராட, ஏகப்பட்ட கண்டிசனுக்கு பிறகு ஒரு வழியாக ஒத்து கொண்டான். தன் குடும்பத்தின் சௌகரியம் எக்காரணம் கொண்டும் குறைந்து விட கூடாது என்ற நிபந்தனையோடு…
அவனுக்கும் வேற வழி இல்லை. வயதான பெற்றோர், அவர்களை கவனிக்க வேண்டும். ஆறு வயதில் ஒன்றும், நாலு வயதில் ஒன்றும் என்று இரு பெண் பிள்ளைகள். அவர்களோடு நிரஞ்சன். இவர்கள் எல்லாரின் தேவைக்கும் பொறுப்பு நர்மதா மட்டும் தான்.
திருமணம் முடிந்து ஆறு வருடம் வீட்டில் தான் இருந்தாள். வீட்டை அப்படி வைத்து இருப்பாள். அவ்வளவு அனுசரணை, கவனிப்பு, சமையல் அவ்வளவு அருமையாக இருக்கும். நர்மதா மிக நேர்த்தி. அப்படி தான் வீட்டையும், வேலையையும் செய்வாள்.
Advertisement
இப்போது வேலை கிடைத்து விட்டது, வேலைக்கு போயே தீருவேன் என்றால் என்ன செய்வது?… மனைவி கைக்கு பழகி விட்டு, தனியே அனுசரித்து நிற்க முடியாது. காலை எழும் போதே நிரஞ்சனுக்கு பரபரப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.
“ நீ வேலைக்கு போறேன்னு அவசர அவசரமா செய்ற சமையலை நான் அனுசரிச்சு திங்க முடியாது… எனக்கே வேலையில ஆயிரத்தெட்டு டென்ஷன். நான் அதை தான் பார்க்க முடியும். உன் கூட சேர்ந்து குடும்பத்தை பார்க்க முடியாது நர்மதா. ரெண்டு பிள்ளை இருக்கு நீ அங்க, நான் இங்கன்னு ஓட முடியாது. மூணு வயசு குழந்தையை விட்டுட்டு வேலைக்கு போறேன்னு சொல்ற… உன் ஆசைக்கு குடும்பத்துல இருக்குற அத்தனை பேரும் கஷ்டபடனுமா?…” என்று எகிறி குதித்தான்.
நர்மதா அமைதியாக, அடமாக நின்று கொண்டாள்.
“அங்க நீ வாங்குற சம்பளத்தை, நான் உனக்கு சும்மாவே தாரேன். வீட்டிலேயே இரு நர்மதா…” என்று இறங்கி வந்து பேசியும், மனைவி விட்டு கொடுக்காமல் நிற்கவும் போய் தொலை என்று விட்டு விட்டான். அப்படி தான் சொல்ல வேண்டும்.
அவனுக்கு காலை காபியில் இருந்து, படுக்கும் படுக்கை விரிப்பு வரை சுத்தமாக, மணமாக இருக்க வேண்டும். எதற்கும் அலட்டி கொள்ளவே பிடிக்காது. அது எப்படி என்றால் சாப்பிடும் போது ஒரு தோசை சூடாக வைத்து பின், சாப்பிட்டு முடிக்கும் போதே அடுத்த தோசை வந்து விட வேண்டும். இப்போது தான் ஊத்தி இருக்கேன் என்றால் தட்டு பறக்கும்…
ஆரம்பத்தில் அதிர்ந்து போய் பார்த்தவள், அடுத்து பழகி விட்டாள். அப்படி தான் ஒரு நாள் பெரிய மகள் மட்டும் தான், அப்போது இரண்டு வயது குழந்தை.
கணவன் கூடவே இருந்து அவன் தேவையை கவனித்து, அவன் ஆபீஸ் செல்ல வெளியேறிய பின் மகளை தூக்க, குழந்தை பாத்ரூம் போய் இருந்தது, மாமனார் காபி கேட்டார் என்று பாலை அடுப்பில் வைத்து பாத்ரூம் சென்று மகளை சுத்த படுத்தி வெளியே தூக்கி வர, நின்று இருந்தான் நிரஞ்சன்.
“என்னங்க, ஆஃபீஸ் போகல. அவசர வேலை இருக்குன்னு சொன்னீங்களே!…” என்று நர்மதா கேள்வியாக பார்க்க,
“கார் சாவியை மறந்து வச்சுட்டேன்…”
ஓ… என்று மகளுக்கு உடை மாற்ற,
“என்னடி ஓ… எனக்கு ஆஃபீஸ்ல ஆயிரம் வேலை இருக்கும். ஒவ்வொண்ணும் நியாபாகம் வைக்க முடியுமா? இதெல்லாம் நீ தான பார்க்கணும். எப்பவும் கையிலே எடுத்துட்டு போறவன், இன்னைக்கு எடுக்கலன்னு நினைப்பு வேணாம். இதை விட வேற என்ன வேலை உனக்கு? அப்புறம் எதுக்கு வீட்டுல இருக்க?…” என்று கால் மணி நேரம் மூச்சிறைக்க பேசினான்.
நர்மதா முழு மெளனம். இப்படி பேசுபவனிடம் என்ன பேச முடியும். என்ன மேக் இவன்… இவன் கார் சாவி, இவன் மறந்து வச்சுட்டு போய் என்னை திட்டுகிறான். அதுவும் அவசர வேலை என்றான், கார் சாவியை காண வில்லையென்று எப்போது அறிந்தான், காரை திறக்கும் போது… வாசல் படி தாண்டி ரெண்டு நிமிடத்தில் கார் இருக்கும் இடம். அதிக நேரமும் கிடையாது. இதற்கு இவ்வளவு பேச்சா?…
அதை தான் தாமோதரன் கேட்டது.
“ஏண்டா டேய், கார் சாவியை மறந்தது நீ… அவசரமாக போகணும்ன்னு தான சொன்ன, சாவிய எடுத்துட்டு போக வேண்டிய தான. மருமக பாத்ரூம்ல இருக்குறது தெரிஞ்சு, காத்திருந்து கால் மணி நேரம் கிளாஸ் எடுக்கணுமா?…” என்று தந்தை கேட்டதும்.
“எனக்கு நேரம் போகட்டும். அதை நான் பார்த்துக்கிறேன். ஆனா, அவளுக்கு ஒரு பொறுப்பு வேணாம். அதுக்கு தான் அப்பா பேசுனேன்…”
“கார் சாவிய மறந்தது நீ தாண்டா…”
“அது தான்ப்பா சொல்றேன், நான் மறந்துட்டேன்னு நியாபக படுத்த வேண்டியது யாரு? இவ தான…” என்ற மகனின் பேச்சில் தந்தை வாய் மூடி கொண்டார்.
அடுத்து எப்படி பேசினாலும் மகன் இந்த வட்டத்தை தாண்ட மாட்டான். அமைதியாக இருந்தாலாவது ஓய்ந்து போய் விட்டு விடுவான் என்று தோன்ற, அமைதியாகி விட்டார்.
அதற்காக நிரஞ்சன் சரியில்லாதவனும் கிடையாது. மனைவி, பிள்ளைகள் என்று பாசமாக தான் இருப்பான். நர்மதாவின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்தி, தாங்க நகை, வைர மோதிரம் என்று விலையுயர்ந்த பரிசு தான்.
மூத்த மகள் சஸ்டிகா, அடுத்த மகள் சான்விகா. இரு பிள்ளைகளும் தந்தையின் செல்லம் தான். கேட்டது எல்லாம் வாங்கி கொடுப்பான். அதுவும் விலை உயர்ந்தது தான்.
மனைவி பிள்ளைகளை வெளியில் அழைத்து செல்வது, சினிமா, ஹோட்டல் என்று பத்து நாளுக்கு ஒரு முறை அழைத்து சென்று விடுவான்.
பிள்ளைகள் சாதரணமாக வீட்டில் போடும் செருப்பு தரமாக, விலையுயர்ந்ததாக தான் இருக்கும். எல்லாத்துக்கும் தரமாக, ஆடம்பரமாக தான் வாங்கி கொடுப்பான்.
நர்மதாக்கு, கணவன் செலவாழியாக இருப்பதில் வருத்தம். ஆடம்பர பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சேமிப்பில் காட்டலாம் என்று நினைத்து, அதை கணவனிடம் சொல்லி நன்றாக வாங்கி கட்டி கொள்வாள்.
ஒரு சிறு தப்பும், சிறு சொல்லும் பொறுக்காதவன், அவனையே குறை சொன்னால் விடுவானா?… நர்மதா தலை குனிந்து கண்ணீர் விடும் வரை நிரஞ்சன் விட வில்லை.
எப்படியும் கணவனோடு வாதாட முடியாது. எப்படி மடக்கி பேசினாலும், அவளை தான் குற்றம் கண்டு பிடித்து சாடுவான். அதனால் நர்மதா பெரும்பாலும் அமைதி தான். அவளையும் மீறி தான் சில வார்த்தைகள் வந்து விடும்.
அன்றும் அப்படித்தான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். நர்மதா கண்ணில் பட்டது வெள்ளையில் சிவப்பு ரோஜாக்கள் போட்ட மெத்தை விரிப்பு. அதை பார்த்ததும் பிடித்து விட்டது. தொட்டு பார்க்க, அவ்வளவு மெருதுவாக இருந்தது. அதையே வாங்கி கொள்ள எடுத்து வைக்க,
மனைவியையே பார்த்த வண்ணம் இருந்தவன், அவள் அருகில் வந்து மனைவி எடுத்த வைத்த புது விரிப்பை பார்த்து தொட்டு விட்டு,
“இது பார்க்க அழகா தான் இருக்கு நர்மு. ஆனா, துணி சரியில்லை, ரொம்ப நாள் வராது போல…” என்று யோசனையாக நிரஞ்சன் இழுக்க,
“என்னங்க எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. விடவே மனசில்லை, பிளீஸ் நான் எடுத்துகிறேன். ரொம்ப பாதுகாப்பா வச்சுப்பேன்…” என்று கொஞ்சி, கெஞ்சி வாங்கி கொண்டாள்.
நிரஞ்சனும், வீட்டு பொறுப்பு அவள் தானே. அவளே சொல்லும் போது என்னன்னு விட்டு விட்டான்.
அப்போது சான்விக்கு இரண்டு வயது இருக்கும். ரெண்டு சின்ன பிள்ளைகள் இருக்கும் வீடு என்பதால் அடிக்கடி துவைக்க, எதையாவது கொட்டி வைக்க, அந்த கறை மீண்டும் மீண்டும் துவைக்க, ரெண்டு மாதம் கூட வர வில்லை,கிழிந்து விட்டது.
நர்மதாக்கு ஒரு அசால்ட், இதற்கெல்லாம் கணவன் என்ன சொல்லி விடுவான். சாதாரண மெத்தை விரிப்பு தானே என்று விட்டு விட…
“ நான் அன்னைக்கே என்ன சொன்னேன், பார்க்கும் போதே சரியில்லன்னு சொன்னேன் தான. எம் பேச்சை தட்டி, அதை எடுத்த, பாரு அந்த லட்சணத்தை. புருசன் எதுக்கு சொல்றான், ஏன் சொல்றான்னு கொஞ்சமும் யோசனை கிடையாது. நல்லது எனக்கு தெரியாது. அது என்ன சின்ன பிள்ளை மாதிரி அடம். காசு என்ன மரத்தில காய்க்குது. பத்து ரூபாய்க்கும் வெளில நான் படுற கஷ்டம் என்னன்னு தெரியுமா உனக்கு?…” என்று காய்ச்ச, பயந்து போனாள் நர்மதா.
அவள் ரொம்ப செலவாழி, பொறுப்பு இல்லாதவள் போல பேச்சு நீள… அடுத்து நிரஞ்சன் உடன் வெளி செல்லும் நிலை வந்தால் கூட வாய் மூடி கொள்வாள். அவன் சொல்றது தான் முடிவு.
அடுத்த மாதம் தீபாவளிக்கு சேலை எடுக்க போகும் போது, முன்னெச்சரிக்கையாக நர்மதா வாயே திறக்க வில்லை.
“இந்த கலர் நல்லா இருக்குள்ள நர்மு…”
“ஆமாங்க…”
“ரெண்டு குழந்தைக்கு அப்புறம் வெயிட் போட்டு காட்டன் சேலை கட்டுறத விட்டுட்டா… சாப்ட் சில்க் பார்க்கலாம்…”
“சரிங்க…”
“இந்த மாம்பழ கலர் உனக்கு ஓகேவா நர்மு. எனக்கு பிடிச்சு இருக்கு. ஆனாலும் நீ பார்த்து சொல்லு…”
“எனக்கு என்னங்க தெரியும். நீங்க சொன்ன சரி தான். துணி எல்லாம் உங்க அளவுக்கு எனக்கு தரம் பார்க்க தெரியாது. நீங்க என்னன்னு பாருங்க…” என்று மனைவி சொன்னதும் மிக திருப்தியாக ஒரு சேலையை எடுத்து கொடுத்தான். விலையும் அதிகம் தான்.
நர்மதா அந்த சேலையை கட்டி கொண்டு ஒரு கல்யாண வீடு செல்ல, அங்கு என்னவோ தெரியாமல் கறை பட்டு விட்டது. அதை ட்ரை வாஷ் கொடுத்து விட்டாள். ஆனால் வந்தது கொஞ்சம் கலர் டல்லாகி விட்டது.
நமக்கு என்ன வந்தது. எடுத்து கொடுத்தது அவன் தான். அப்போ பொறுப்பும் அவனிடம் மட்டும் தான் என்று நல்லவள் போல அவனிடம் காட்டி வருத்த பட,
அதை வாங்கி வார்த்தவன், “சே… எவ்வளவு வாஷ் பண்ணாலும் கலர் போகாது சொன்னான். ஏமாத்திட்டான்.. ஏன் நர்மதா, எனக்கு தான் பொம்பளைங்க சேலை பத்தி ஒன்னும் தெரியாது. நீயாவது சொல்ல வேணாம். வேண்டாங்க, சேலை துணி சரியில்லைன்னு… என்ன பொறுப்பா இருக்க நீ?… நான் அப்படி தான் விவரம் தெரியாம ஏதாவது சொன்ன, நீ தான் எனக்கு புரிய வைக்கணும். அது தான ஒரு மனைவிக்கு அழகு…” என்று எகிறி கொண்டு வர,
அரண்டு போனாள் நர்மதா. இவனோடு எப்படி தான் மல்லு கட்ட. நான் ஒருத்தி பெரிய உத்தம புருசன் வச்சு இருக்குற மாதிரி நியாயம் சொல்ல வந்துட்டேன் என்று நர்மதா தன்னையே நொந்து கொண்டாள்.
இவளுக்கு மாமனார், மாமியார் எல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை. அவர்களும் பல நேரம் கெத்து காட்டுவார்கள் தான். ஆனால், டுவென்டி ஃபோர் பார் செவன் அலார்ட் நிரஞ்சன் மட்டும் தான்.
ஆனாலும் ஒன்றை ஒத்து கொள்ளணும் நிரஞ்சன் அன்பானவன். இதுவரை பண கஷ்டம் கண்டதில்லை. பிறந்த வீட்டில் மாப்பிள்ளை கெத்து காட்டியதில்லை. உங்கள் பெண்ணை மட்டும் தான் எடுத்தேன் என்று நர்மதாவோடு மட்டும் தான் அவனின் எல்லாமும்…
நிரஞ்சன் வீடு அளவுக்கு வசதி இல்லை நர்மதா வீடு. ஒரு அக்கா, ஒரு தம்பி என்று மூன்று பிள்ளைகள். அப்பா பாலமரத்தான் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்பவர். ஆனால் ஒரு நாளும் அவர்களில் வசதி, சீர் என்று குறைவாக எண்ணுவதில்லை. அடிக்கடி மாமியார் வீட்டு பக்கம் வரவும் மாட்டான். பழக்க வழக்கம் சுத்தமா இருக்கும். அவர்களை பொறுத்த வரை தங்கமான மருமகன்.
அதை எல்லாம் யோசித்த படியே படுத்து கிடந்தவள், நேரம் ஆவதை உணர்ந்து வேலையை பார்க்க எழுந்தாள். காலை ஐந்து மணி, குளிக்க சென்றாள்.
மாமியார் சுசீலாக்கு குளிக்காமல் அடுப்படி நுழைய கூடாது. எப்போதும் சுத்தமாக தான் உள்ளே வர வேண்டும். நர்மதா நைட்டி போட, நைட் ட்ரெஸ் போட எல்லாம் தடை கிடையாது. அந்த உடையோடு வீட்டில் வலம் வரலாம். ஆனால் என்ன, குளிக்காமல் கிச்சன் பக்கம் செல்ல கூடாது.
அடுப்படியில் அடுத்த வீட்டு பெண்களை புழங்க விட கூடாது. அவர்கள் சுத்த பத்தம் என்னவோ என்று வெளி ஆட்கள் வேலைக்கு வைப்பதில்லை. அதனால் கிச்சன் பொறுப்பு எல்லாம் நர்மதா தான். ஆனால், வெளி வேலைக்கு ஆள் வருவார்கள். சுசீலா முடியாதவர், அவரை பார்க்க வேண்டும். மாமனாரின் தேவையை, உணவை கவனிக்க வேண்டும். இரண்டு பிள்ளைகள் அவர்களையும் இவள் தான் பார்த்து கொள்ள வேண்டும். அத்தோடு நிரஞ்சன். சான்விகாவே பரவாயில்லை எனும் அளவுக்கு நர்மதாவை சுத்த விடுவான்.
காய் கறி முதல் கரண்ட் பில் வரை நர்மதா தான். அவள் வேலைக்கு சென்றால் எல்லாம் மாறும். வீட்டுல அனைவரும் அவள் வேலைக்கு, நேரத்திற்கு தக்க மாற வேண்டும். அதுவும் சிறு பிள்ளைகள் பொறுப்பு அனைவரையும் சேரும். அதுவும் சஸ்டிக்கு நாலு மணிக்கு பள்ளி விடும், சான்விக்கு ரெண்டு மணிக்கு பள்ளி விடும். பிள்ளைகளை கூட்டி வந்து உணவு கொடுத்து நர்மதா வரும் வரை பார்த்து கொள்வது பெரியவர்கள் பொறுப்பு என்றானது.
நர்மதா வர மாலை ஆறு மணியாகிவிடும். ஒரு வகையில் பெண் வைராக்கியதுக்கு ஓடி கொண்டு இருக்கிறாள். அப்படி தான் சொல்ல வேண்டும். அதிகாலை நான்கு மணிக்கு எழும்பி, குளித்து, அடுப்படி சென்று மாமனாருக்கு இஞ்சி டீ, மாமியாருக்கு காப்பி, கணவனுக்கு சத்து மாவு கஞ்சி. அத்தோடு பெரியவளுக்கு பூஸ்ட், சின் குட்டிக்கு பால், நாட்டு சர்க்கரை என்று தொடங்குபவள்.
பிள்ளைகளுக்கு தனி உணவு ஏதாவது கலவை சாதம் கட்டி வைக்க வேணும். அதுவும் சின்ன குட்டி கொஞ்ச நாளாக தான் பள்ளி செல்வதால், அவர்களுக்கு பிடித்த மெனு வைத்து தான் பள்ளிக்கு அனுப்புகிறாள்.
ஆனால், அந்த உணவு பெரியவர்களுக்கு இறங்காது. குழந்தைகளுக்கு காளான், பன்னீர், தேங்காய் சாதம், கேரட், முட்டை என்று போனால். பெரியவர்களுக்கு வத்த குழம்பு, புளி குழம்பு, பீர்க்கங்காய், சுரைக்காய், சுண்டல், கவுனி அரிசி, ராகி , வாழ தண்டு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்.
அதில் நிரஞ்சன் சொல்லவே முடியாது. வெள்ளி கிழமை சாம்பார் வைத்து எல்லாருக்கும் பொதுவாக தோசைக்கு, சாதத்துக்கு என்று சமாளித்தால். எனக்கு சப்பாத்தி, காய்கறி கூட்டு வேணும் என்று வந்து நிப்பான் கணவன்.
நர்மதாக்கு ஒன்பதரைக்கு கையெழுத்து போட வேண்டும். அடுத்து ஒரு அவசர சமையலுக்கு தாயாகி விட்டு தான் சாப்பிடும் நேரத்தை தியாகம் செய்ய வேண்டும். என் விருப்பத்தை மீறி, நான் கெஞ்சி கேட்டும் என்னை மீறி வேலைக்கு போனாய் அல்லவா. அப்புறம் உன் பாடு என்று தான் அர்த்தம்.
நர்மதா எதையும் காட்டி கொள்ள மாட்டாள். கணவன் அடிக்க அடிக்க, அவள் நிமிர்ந்து கொண்டு தான் நின்றாள். பார்த்துவிடலாம், நான் பின் வாங்க மாட்டேன் என்று ஒரு வருடத்தை கடந்து வெற்றியும் பெற்று விட்டாள்.
நர்மதா வேலைக்கு செல்வாள் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்க தொடங்கி விட்டார்கள். பிள்ளைகளுக்கும், தனக்கும் விடுமுறை என்பதால் ஒரு ஒருவாரம் தாய் வீடு செல்ல திட்டம் வைக்க, அதற்கு தான் முகத்தை தூக்கி கொண்டு திரிகிறான் நிரஞ்சன்.
நர்மதா எப்பவும் போல தன் வேலையை தொடங்கி விட்டாள். முடிந்த அளவு கெட்டு போகாத உணவு பண்டங்களை, குழம்பு, தொக்கு செய்து வைத்து விட்டு ஊருக்கு கிளம்பவது அவள் பிளான். வீட்டில் என்ன சொல்வார்கள் என்பது இனி தான் தெரியும்.
error: Content is protected !!