Skip to content
Post Views: 13,021
அழகான காலைப்பொழுது. ஆதவன் துயிலெழுந்து, தன் கதிர்வீச்சினை மண்ணில் இதமாக பரப்ப ஆரம்பித்திருந்தான்.
அஞ்சனா வேர்க்க விறுவிறுக்க… தன் இடுப்பில் இருந்த குடத்து நீரை, இரண்டு கைகளாலும் வாகாக தூக்கிபிடித்து, விநாயகர் மேல் ஊற்றி, அவருக்கு அபிஷேகம் செய்துகொண்டிருந்தாள்.
“இன்னும் எத்தனை குடம்…டி…? என் கையெல்லாம் குடையுது” என கையை நீட்டி மடக்கி உதறிக் கொண்டிருந்தாள் நிஷா.
“இன்னும் நாப்பதெட்டு இருக்கு”.
Advertisement
“எதே இன்னும் நாப்பத்தெட்டா………! அடி ஆத்தி…. நம்மால முடியாதுப்பா….. ஆளவிடு”.
“ஹேய் பாதியில விடகூடாதுடி. அப்புறம் இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு ஊத்தனதுக்கு புண்ணியமே இல்ல”.
“போடி…. இவளே… நல்லா வந்துரும் என் வாயில. யாருக்குடி புண்ணியம்……….. இல்ல? இவள் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு, நான் தண்ணி தூக்கனுமாம்…..? செல்லாது….. செல்லாது……”
Advertisement
“அடியே…….. இதுல பாதி புண்ணியம் உனக்கும்தான்டி……..”
Advertisement
ஹ்ம்ம். “யாருகிட்ட கதைவிடற…? நீ கல்யாணம் பண்ணிக்கனும், நல்ல புருஷனா கிடைக்கனும்னு, பிள்ளையாருக்கு தண்ணி தூக்கி ஊத்தற. இதுல எனக்கு எங்கேயிருந்து புண்ணியம் வருதாக்கும்………. உனக்கு வர புருஷனை நீ பாதி…, நான் பாதின்னு… பிச்சிக்கவா போறோம்….?”
“அப்படியே போட்டேனா….. தெரியும். விதண்டாவாதம் பேசாம… தண்ணிய தூக்கிட்டு வாடி….”
அங்கிருந்து அசையாமல் அஞ்சனாவையே முறைத்து நின்றாள் நிஷா. தூங்கிக் கொண்டிருந்தவளை காலையிலேயே போன் செய்து கோவிலுக்கு போகலாம் வாடின்னு கிளம்ப வைத்து அழைத்து வந்திருந்தாள் அஞ்சனா.
Advertisement
விடுமுறை நாட்களில் இழுத்து போர்த்தி தூங்கும் சுகமே அலாதிதானே. காலை துயிலிலிருந்து எழவே சிரமப்பட்டவளை, அதையும் இதையும் சொல்லி அழைத்து வந்து, கையில் குடத்தை கொடுத்து தண்ணீர் தூக்கவைத்து இடுப்பை ஒடிக்கிறாளே என முனகிக்கொண்டே அசராமல் நின்றிருந்தாள்.
உசுர வாங்குறாளே. “ஊர்ல உலகத்தில பத்து…….. பதினஞ்சு…….. ஃபிரண்டு வச்சிருக்கவங்க எல்லாம் நல்லாயிருக்காங்க. ஒரே ஒரு ஃபிரண்ட வச்சிகிட்டு, நான் படுற பாடு…….. இருக்கே”, ஆண்டவா…….. இதெல்லாம் கேட்கமாட்டியா..?
பின்னாடியே வந்த அஞ்சனா நிஷாவின் முதுகில் குடத்தால் ஒரு மொத்து மொத்தினாள்.
“இப்ப……. ஏன்டி என்னை அடிச்ச? என பின்னால் திரும்பி நின்று அஞ்சனாவை பார்வையால் எரித்தாள் நிஷா”.
“புலம்பாம ஒழுங்கா தண்ணிய தூக்குடி………”
“எங்கம்மாக்கு மட்டும், நான் உன்னோட சேர்ந்து இப்படி தண்ணி குடம் தூக்கறது தெரிஞ்சுது… என்னை உப்புகண்டம் போட்டுடும், என் ஆத்தா…”
“முதல்ல தண்ணிய தூக்கி முடி………, நானே உங்கம்மாகிட்ட வந்து சொல்றேன்”.
“எதே……..! நீயே வந்து சொல்றயா……..? வேற வினையே வேணாம்டியம்மா. அவ்வளவு தான் என்னை வச்சி செய்யும்…, என்னைப் பெத்த புண்ணியவதி. நல்லாவருவடி…….. நீயெல்லாம். என்னை உனக்காக தண்ணி தூக்கவிடறதும் இல்லாம, எங்கம்மாகிட்ட வேற மாட்டிவிடுவியா…?”
“அப்பவே எங்க அப்பத்தா சொன்னுச்சு…. அவள் கூடலாம் சேராதன்னு. கேட்டேனா….? எனக்கு வேணும்டி….”
‘’சும்மா புலம்பாம தண்ணிய தூக்குடி, நேரம் ஆகுது. இன்னைக்கு அனுக்கு கிப்ட் வாங்க வேற போகனும். லேட் பண்ணாத… என தன் கையில் இருந்த குடத்தில், ஏரியிலிருந்து நீரை நிரப்பி இடுப்பில் தூக்கிக்கொண்டு, ஏரிக்கரையின் மேலிருக்கும் பிள்ளையாரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அஞ்சனா.
நிஷாவும் தன் கையில் இருந்த காலி குடத்தில், ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு, அஞ்சனாவின் பின்னாடியே நடந்து வந்தாள்.
அஞ்சனா பிள்ளையார் மேல், தன் குடத்தில் இருந்த நீரை ஊற்றிவிட்டு, திரும்ப வந்து நிஷாவின் கையில் இருந்த குடத்தை வாங்கிக்கொண்டு, காலி குடத்தை நிஷாவிடம் கொடுத்து, தண்ணீரை எடுத்துக்கொண்டு பிள்ளையாரை நோக்கி சென்றாள்.
ஏரிக்கரையின் மேல் இருந்த அரசமரத்தடியில் கம்பீரமாக வீற்றிருந்தார் அந்த பிள்ளையார். தொன்றுதொட்டு காலம் காலமாக அந்த ஊர் கன்னிப் பெண்களுக்கு அவர்தான் ஹீரோ. தங்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடக்கவேண்டும், மனதிற்கு பிடித்த மணாளன் அமைய வேண்டும் என இவரிடம் வேண்டுதல் வைத்து, இப்படி ஏரியிலிருந்து குடம் குடமாக நீர் எடுத்து வந்து, அவருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை வைப்பது அந்த ஊர் ஐதீகம். அதேபோல் குழுந்தை வரம் வேண்டுபவர்களும் இப்படி செய்வதுண்டு.
அஞ்சனாவும் அவளது பாட்டி லஷ்மியின் வற்புறுத்தலால் தனக்கு நல்ல கணவன் அமையவேண்டும் என்ற வேண்டுதலை பிள்ளையாரிடம் வைத்து, ஏரியிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்து வந்து, அவருக்கு ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறாள்.
மிகப் பெரிய ஏரி அது. அந்த காலத்தில் வயல்வெளிப் பாசனத்திற்கும் மற்றும் ஆடு மாடுகளுக்கும் மிகபெரும் நீர்நிலையாக இது இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் பருவங்கள் பொய்த்து போனதாலும், சரியான மழையின்மையாலும் நீர்நிலையில் தண்ணீர் அதிகமில்லை.
ஏரியின் உள் இறங்கி, அடி ஆழத்தில் சென்று நீர் எடுத்து வருமாறு இருந்தது பெண்களுக்கு. இதில் அஞ்சனா வேறு நூற்றியெட்டு குடம் பிள்ளையாருக்கு ஊற்றுவதாக வேண்டிக் கொண்டு, ஊற்றுவதால் சிரமமாக இருந்தது அவர்களுக்கு.
ஒருவழியாக கஷ்டப்பட்டு நூற்றுயெட்டு குடம் தண்ணீரை தூக்கி பிள்ளையாருக்கு ஊற்றி முடித்தார்கள் இருவருமாக சேர்ந்து. நிஷாவுக்கு வேர்த்து வழிந்து மூச்சு வாங்கியது. அவள் அங்கிருந்த ஒரு கருங்கல்லின் மேல் போய் உட்கார்ந்து விட்டாள்.
பிள்ளையாருக்கு முன் இருந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்து, வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த அரிசி மாவால் அழகாக கோலம் போட்டாள் அஞ்சனா.
அவள் கையாலேயே கட்டி எடுத்து வந்திருந்த அருகம்புல் மாலையை பிள்ளையாருக்கு சாற்றி, அவருக்கு சந்தன குங்குமம் இட்டு அங்கிருந்த பெரிய மண்விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரிபோட்டு விளக்கேற்றினாள்.
காலையிலேயே இவளுக்காக எழுந்து சுத்தபத்தமாக குளித்து, சுண்டல் செய்து கொடுத்திருந்தார் அவளது அன்னை ரோகிணி. அதனுடன் சேர்த்து அவல்பொறிகடலை வெல்லம் கலந்த கலவையையும் பிரசாதமாக வைத்து படைத்து, பிள்ளையாரை வலம் வந்து விழுந்து வணங்கினாள் அஞ்சனா.
இதையெல்லாம் இருந்த இடத்தில் இருந்து அமைதியாக பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தாள் நிஷா எந்த அசைவுமின்றி. இன்னும் அவளுக்கு கால் வலி தீர்ந்தபாடில்லை. ஆதலால் எதற்கும் அவள் எழவில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே வினாயகரை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு, காலை நீட்டிவிட்டு, கையை ஊனி சாய்வாக அமர்ந்து கொண்டாள்.
பிரார்த்தனை முடிந்ததும், படைத்த பிரசாதத்தை எடுத்து நிஷாவுக்கு, அங்கு மரத்தின் நிழலில் கோலி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு என பகிர்ந்து கொடுத்தாள் அஞ்சனா.
நிஷா, “இந்த சுண்டலுக்காடி என்னைய இந்த வேலை வாங்குன…? இது உனக்கே பொறுக்குமாடி….? ஒரு சக்கரைப் பொங்கல்…., கேசரி.., வெண் பொங்கல் இப்படி எதாவது செஞ்சு எடுத்து வந்திருக்கலாமில்ல… நல்லா இருந்திருக்கும்”.
“இது நீ திங்கறதுக்கு இல்ல. பிள்ளையாருக்கு பிரசாதமா படைக்கறதுக்கு எடுத்து வந்தேன். வேணாம்னா குடுடி…….. இங்க….,” என எக்கி அவள் கையில் இருந்ததை பிடுங்க முயற்சித்தாள் அஞ்சனா.
“சரி… சரி…. விடுடி… இருக்கறதையும் பிடுங்கிடாத… எனக்கிருக்க யானைப் பசிக்கு… இதெல்லாம் எப்படி பத்தும்னு கேட்டேன்..” என நகர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
நிஷா “இன்னும் எத்தனை நாள் இருக்கு உன் வேண்டுதல்… முடிய?”
“இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஒரு மண்டலம் பண்ணனும்னு… எங்க அப்பத்தா சொல்லியிருக்கு”.
“ம்க்கும்…., உங்கப்பதாவுக்கு….., சிம்பிளாலாம் வேண்டுதல் சொல்ல தெரியாதாடி…….? உன்னோட சேர்ந்து என இடுப்பும் உடையுது. முதல்ல அதை கூட்டுவந்து, அது கையில குடத்த குடுத்து, அது இடுப்பை உடைக்கனும்…”
“ஏய்… சும்மா இருடி. எங்கப்பத்தாவ எதுவும் பேசாத. “
“அதான அப்பத்தாவ சொன்னா உனக்கு வந்துடுமே…”
“நம்ம நல்லதுக்குதானடி சொல்றாங்க….”
“ஹாங்… யார் நல்லதுக்கு..? உன் நல்லதுக்குன்னு சொல்லு… உங்கப்பத்தா இன்னும் அதுகாலத்துலே இருக்கு… இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி அப்டேட் ஆகாம….”
அஞ்சனா, “கிளம்புடி டைமாகுது. விட்டா பேசிட்டே இருப்பாள். வீட்டுக்கு போகனும்”.
“சொல்லுவடி. கூட துணைக்கு வந்தேன் இல்ல. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்…”
“பொலம்பாம வாய மூடிட்டு வாடி, கம்முன்னு….” என அவளை கைப்பிடித்து எழுப்பி, இழுத்து சென்றாள் கூடவே….
இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். அஞ்சனா வீட்டிற்குள் நுழைந்ததுமே, தனது அன்னை ரோகிணியிடம் சென்று பிரசாதத்தை கொடுத்தாள்.
ரோகிணி, “என்னடா இப்படி துணி மொத்தமும் நனைஞ்சிருக்கு. போய் பாவாடையை மாத்திக்கோ சீக்கிரம். சலி வச்சிட போகுது”.
அவர் அப்படி கேட்டதுமே நிஷா குனிந்து தன் உடையை ஆராய்ந்தாள். கடைக்கு செல்லுவதற்கு ஏதுவாக காட்டன் சுடியில் வந்திருந்தாள். துணி மெல்லியதாக இருந்ததால், காற்றில் உலர்ந்திருந்தது. அஞ்சனா பாவாடை தாவணியில் இருந்ததால் ஈரம் உலர்ந்தும் உலராமல் இருந்தது.
ரோகிணிக்கு சரி என தலையசைத்த அஞ்சனா, நிஷாவிடம் சொல்லிவிட்டு, தன்னுடைய அறைக்கு சென்றாள் உடையை மாற்றுவதற்காக.
நிஷா அஞ்சனாவின் பாட்டி லஷ்மியிடம் கதையளந்து கொண்டு அவருடனேயே ஹாலில் உட்கார்ந்து கொண்டாள்.
“நீயும் அவளோட கோவிலுக்கு போயிருந்தியாடா………?” என்றார் ரோகிணி.
“ஆமாம் …….த்தை”.
“ஏன்……டிம்மா……….? எங்க போனாலும் ஜோடி போட்டுட்டே சுத்துறீங்களே…., கல்யாணத்துக்கு……. அப்புறம். ‘’என்னடி…….. பண்ணுவீங்க? இரண்டு பேரும்” என தாடையில் கைவைத்துக் கொண்டு கேட்டார், லஷ்மி.
“கவலைப்படாத அப்பத்தா… அதுக்குத்தான் பிள்ளையாருக்கு இரண்டு பேரும் சேர்ந்து தண்ணீ ஊத்தறோம், ஒருத்தனையே கட்டிக்கனும்னு….. எப்படி என் ஐடியா…?” என அவரை பார்த்து ஒற்றை புருவத்தை தூக்கி, கண்சிமிட்டி, சிரித்தாள் நிஷா.
“அடி… ஆத்தி….!” என அதிர்ச்சியாகி வாயைப்பிளந்து பார்த்தார் லஷ்மி.
ரோகிணி நிஷாவின் பதிலில் புன்னகைத்தவர், மாமியாரின் முக பாவனையில் எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு உள்ளே சென்றார்.
அதற்குள் அஞ்சனா உடை மாற்றி வந்துவிட்டாள்.
“ஹேய் வாடி சாப்பிடலாம்…” என நிஷாவை எழுப்பிக் கொண்டு சாப்பிடச் சென்றாள்.
ரோகிணி இருவருக்கும் தட்டை எடுத்து வைத்து பொங்கல் சட்னி சாம்பார் என பரிமாறினார்.
நிஷா, “சூப்பர் அத்தை……, நெய் முந்திரி எல்லாம் போட்டிருக்கீங்க. செமையா இருக்கு. பொங்கல்னா இப்படிதான் இருக்கனும்” என சப்பு கொட்டி கொண்டே சாப்பிட்டாள்.
“ஐஸ் வைக்கிறா.. ம்மா. நம்பாத. ஏன்டி….? பொங்கல் வேணும்னா…. கேட்க வேண்டியதுதான………… அதுக்கேன் இந்த ஜஸ் வைக்கற….?”
“ஹி….. ஹி…… நல்ல பசி அத்தை. இவள் தண்ணி தூக்கறது இல்லாம, என்னையும் சேர்த்து தூக்கவைச்சு… இடுப்பை உடைக்கிறாள்”.
ரோகிணி சிரித்துக்கொண்டே இன்னும் கொஞ்சம் பொங்கலை பரிமாறினார்.
“ஏன் அத்தை…? வெறும் பொங்கல் மட்டும்தானா…?”
என்ன கேட்க வருகிறாள் என புரியாமல் ரோகிணி நிஷாவைப் பார்த்தார்.
“இ..ல்ல… பொங்கல் போட்டா… வடையும் செய்வீங்களே…, அதான் கேட்டேன்”.
அஞ்சனா, “ஏன்டி அதோட நிப்பாட்டிட்ட கூட கொஞ்சம் கேசரியும் கேட்டிருக்கலாமே…?”
“ச்ச.. ச்ச… இந்த சாம்பாருக்கும்.. சட்னிக்கும்.., வடை இருந்தா நல்லாயிருக்குமேனு.. கேட்டேன்டி”.
“ஹ்ம்ம்… சாம்பாரு… வீணா போவுதேன்னு பீலிங்…கு. நம்பனும். நல்லா நாக்க வளர்த்து வச்சிருக்கடி”.
“நான் என்னவோ அதுக்கு உரம் போட்டு வளர்த்தமாதிரி பேசறே… போவியா அங்குட்டு”
எங்கடி பேச கத்துகிட்ட இப்படிலாம்…. வாய்… வாய்… என்றாள் சிரித்துக்கொண்டே அஞ்சனா.
ரோகிணி. “நேரமில்லைடா வடை செய்ய. அடுத்த தடவை செஞ்சு தரேன்”.
“இருக்கட்டும் அத்தை. சும்மாதான் கேட்டேன்…”
“அப்பா எங்கம்மா…?”
“ஏன்டா…? யாரையோ பார்க்கனும்னு வெளியில போயிருக்காங்க”.
“சரி, நான் இவளோட கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரேன். நீங்க அப்பா வந்ததும் சொல்லிடுங்க”.
“எங்க….. போறீங்க……?”
“எங்களோட ஸ்கூல்ல ஒன்னா படிச்ச ஃபிரண்டு ஒருத்திக்கு, அடுத்த வாரம் கல்யாணம் ..த்தை. அவளுக்குதான் கிப்ட் வாங்க போறோம்”.
“சீக்கிரம் வந்துடுங்கமா………. உங்க அப்பத்தாவுக்கு…… என்னால பதில் சொல்ல முடியாது. கொஞ்சம் லேட்டானாலும் என்னை தொனச்சு… எடுத்துடுவாங்க… பதில் சொல்லி மாளாது அவங்களுக்கு”.
“வந்துடுவோம் ..மா. அப்பத்தாகிட்ட நான் சொல்லிக்கறேன்…”
ம்ம்…
சாப்பிட்டு முடித்ததும் அஞ்சனா சென்று லஷ்மியிடம் சொல்லிவிட்டு வந்து, நிஷாவை அழைத்துகொண்டு ஸ்கூட்டியில் கிளம்பிவிட்டாள் திண்டிவனத்திற்கு.
திண்டிவனத்திற்கு அருகில் உள்ள மொளசூர்தான் இவர்கள் வசிக்கும் ஊர். இருவரும் ஸ்கூட்டியிலேயே அங்கிருந்து திண்டிவனத்திற்கு வந்திருந்தனர்.
செல்வதுரை & சன்ஸ் ஐந்து மாடி கட்டடமாக உயர்ந்து நின்றது. ஜவுளியிலிருந்து வீட்டுக்கு தேவையான எல்லா பொருட்களும் அங்கே கிடைக்கும். பண்ட பாத்திரங்கள், டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி., சோபா, பீரோ, கட்டில், மரச்சாமான்கள் என எல்லா அத்தியாவசிய பொருட்களுடன், மளிகையும் இருக்கிறது அங்கே.
பொருட்களும் தரமானதாக, நியாயமான விலையில் கிடைக்கும் என்பதால் மக்கள் கூட்டம் எப்போதுமே அலைமோதும் அங்கே.
அஞ்சனாவும் நிஷாவும் அங்குதான் வந்திருந்தனர். பார்க்கிங் ஏரியாவில் காலி இடம் பார்த்து வண்டியை நிறுத்தியவர்கள், கடையின் உள்ளே நடந்தார்கள்.
சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்களுக்கெல்லாம், அதுதான் பெரிய கடை. அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை என கூட சொல்லலாம்.
அங்கிருக்கும் விற்பனையாளரிடம், அவர்கள் வாங்க வேண்டிய பொருளின் பெயரைச் சொல்லி, எந்த தளத்தில் இருக்கும் என விசாரித்து, லிப்ட் மூலமாக மூன்றாம் தளத்திற்கு வந்தனர்.
அங்கிருந்த பொருட்களை எல்லாம் பார்வையிட்டு, இருவருக்கும் பிடித்த மாதிரியான கிப்டை தேர்வு செய்தனர்.
செலக்ட் செய்திருந்த பொருளை பிரித்துகாட்ட சொல்லி பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சனா. நிஷா அங்கிருந்த பொருட்களை எல்லாம் சுற்றி பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.
இவர்களுக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மனிதரைப் பார்த்த நிஷா, தனது ஆட்காட்டி விரலால் அஞ்சனாவின் முதுகுபுறமாக நின்று சுரண்டினாள்.
அஞ்சனா, “என்னடி…….?”
நிஷா அஞ்சனாவின் காதுக்கருகில் நெருங்கி நின்று…, மெதுவாக ‘’உங்க மாமா………..’’ என்றாள்.
“ஹ்ம்ம்…… இருக்கட்டும்” என முனுமுனுத்துவிட்டு அவள் வேலையில் கவனமாக இருந்தாள்.
“ஏய் பின்னாடி திரும்பி பாருடி…..”
“ச்சு…….., சும்மா இரு. இது ஓகே வா உனக்கு, பில் பண்ணிடலாமா………?”
ம்ம்………..
“இதை பில் போட்டுடுங்க” என அங்கிருந்த சேல்ஸ்….. பர்சனிடம் கொடுத்தாள்.
நீங்களே எடுத்துபோய் பில் கௌண்டர்ல கொடுத்து பில் போட்டுக்கலாம் மேடம், என்றார் அந்த சேல்ஸ் பர்சன்.
ஓகே… என அந்த பொருளை கையில் எடுத்துக் கொண்டு பில் கௌண்டரை நோக்கி நகர்ந்தாள்.
“அவள் பின்னாடியே சென்ற நிஷா , ஆனாலும் உனக்கு வீம்பு ஜாஸ்திடி…. மாமா கடைக்கு வருவாளாம், ஆனால் அவரை பார்க்க மாட்டாளாம், பேச மாட்டாளாம். பயங்கர அழுத்தம்டி நீ” என கிண்டல் செய்தாள்.
“அங்க ஒரு மனுஷன் உன்னையே வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்காரு, திரும்பிகூட பார்க்கல நீ”.
“ம்ப்ச்….., அவர் என்ன……? என்னையா…., பார்த்துட்டு இருக்காரு….? அவர் கடையில நடக்கற வியாபாரத்தை பார்க்கறாரு. அவர் என்னமோ…., என்கிட்ட வந்து ஆசையா பேசி, குசலம் விசாரிச்ச மாதிரி பேசற….”
“அதான…. இந்த பாயின்டை நான் யோசிக்கலையே……… எப்ப வந்தாலும் தூரவே நின்னு லுக்கு விடறாரே தவிர, கிட்ட வந்து ஒரு முறைகூட பேச மாட்டேன்றாரே. இப்பதான தெரியுது, உன்கிட்ட இருக்க இந்த வீம்பு… அழுத்தம் எல்லாம் எங்கயிருந்து வந்ததுன்னு”.
அஞ்சனா நிஷாவின் முதுகில் ஒரு தட்டு தட்டியவள், “அடங்குடி……….., இந்தா பில், கேஷ் பே பண்ணிட்டேன், டெலிவரி வாங்கிட்டு வா, கீழ வெயிட் பண்றேன்” என நில்லாமல் லிப்ஃடை நோக்கி நகர்ந்துவிட்டாள். இன்னும் இங்கேயே இருந்தால் அவளுக்கும் தர்ம சங்கடமாக இருக்கும் என்பதை உணர்ந்த நிஷாவும் எதுவும் சொல்லாமல் பில்லை வாங்கிக்கொண்டு டெலிவரி கௌண்டரை நோக்கி நடந்தாள்.
தொடரும்.
error: Content is protected !!