Skip to content
Post Views: 3,751
அத்தியாயம் – 1
சிவகங்கை மாவட்டத்தில் அருகில் உள்ள கிராமம் அரியக்குடி.குறிப்பட்ட ஓர் சமூகத்தின் சிறப்பை எடுத்து சொல்லும் கிராமம் என்றும் சொல்லலாம்.
பாண்டியன் ஆட்சி காலத்தில் காவேரி பூம்பட்டினத்தில் அதிகளவில் மக்கள் வாழ்ந்து வந்ததிருக்கான சான்று அதிகம் உள்ளது. செவி வழி தீண்டல் என்றாலும் உண்மையான தடங்கள் இன்றும் உள்ளது.
Advertisement
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் என்று அழைக்கப்படும் இவர்கள்.96 கிராமங்களை மையமாகக் கொண்டு உள்ளனர்.இதில் ஒன்பது கோவிலைகளைக் குலதெய்வங்களாக வணங்குகிறார்கள்.இவர்களின் தொழிலே கடல் தாண்டி வாணிபம் செய்வது தான் அதிலும் பெரும்பாலும் நிதி பரிமாற்றம்,வங்கித் தொழில்,முத்து,மசாலா பொருட்கள் விற்பனை செய்வது என்று தொழிலை கடல் தாண்டி விரிவு படுத்தினர்.
Advertisement
ஒவ்வொரு மனிதனுக்கும் தனிச் சிறப்பென்று ஒன்று உண்டு அல்லவா.அந்த ஒவ்வொரு சிறப்பும் சேர்த்து ஒரு சமூகத்தை உருவாக்கி கொண்டால்?. அதுவும் போக அதன் முறைகளை வகைப்படுத்தி தனித்து நிற்பது என்பதும் பெரும் சிறப்பல்லவா.அதனைக் கொண்டு நானும் இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சில அழகான உணர்வுகளைப் படிக்கச் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் அரியக்குடி நோக்கி நாமும் பயணிப்போம்…
Advertisement
மிகவும் கலைநயம் கொண்ட வீடு போலும்.தொன்மையான கட்டிடம் என்றாலும் அத்தனை அழகாக இருந்தது.உள்ளே சென்று வலது புறம் திரும்பினால் நம் கண்ணனுக்குப் புலப்படுவது மரக்கண்ணாடியும் அதன் அருகில் உள்ள நாட்காட்டியும் தான்.
Advertisement
கண்ணாடி நம் குணம் கொண்டு கதை பேச,நாட்காட்டி இன்றைய நாளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியது ஆம் இன்றைய நாள் 19 -01 -1969.
அதனை தாண்டி நீட்ட வாக்கில் உள்ளே சென்றால்.உச்சி வேளை என்றாலும் அந்த வீட்டின் நடுவில் உள்ள முற்றம் குளுமையை வாரி இறைந்து கொண்டு தான் இருந்தது.முற்றம் பக்கத்தில் நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தார் வள்ளியப்பன்.அவருக்கு அருகில் கோதுமை நிறத்தை கொண்டு, பெரிய விழிகளை உருட்டி எதிரில் நின்ற பெண்ணை பரிதமாகப் பார்த்து கொண்டிருந்தாள் கண்ணாத்தாள், வள்ளியப்பனின் மனைவி.
“ஏங்க சாலாப்பா! எத்தினி நேரம் நிற்பா? அவளுக்கு என்னான்னு ஒரு முடிவு சொல்லுக” வெகு நேரம் மௌனம் தொடரவே எதிரில் உள்ள பெண்ணின் தவிப்பை காண சகிக்காமல் கணவனிடம் கேட்டு விட்டாள் கண்ணாத்தாள்.
“அவுக வூட்டு பெரியவுக இருக்கும் போது நம்ப ஊடால போயி நிக்கிறது சரியில்ல கண்ணு, இதுல நான் என்ன செய்ய முடியும் சொல்லுக”
“வள்ளி அண்ணே! அவுக போன பிறப்பாடு என்னையும், என் மகனையும் யாருமே பொறுப்பெடுக்கல, நியாயமா பேசல, அவுக வூட்டு ஆளுங்களை கொண்டே நியாயம் பேசுனாக, பொறுத்து, பொறுத்து பார்த்து வேற வழி இல்லாம தான் உங்களைத் தேடி வந்தேன்” என்ற பெண்ணைப் பார்த்து பெருமூச்சு விட்டவர்.
“சரி மீனா உன்னை நான் பொறுப்பெடுக்குறேன், ஆச்சிக்கு ஒத்தாசையா இரு, பையனை படிக்க வைக்கிறேன். பக்கத்துல உள்ள சந்து வீட்டை எடுத்துக்கோ ஆச்சிய புழக்கத்துக்கு சாமான் தர சொல்றேன் என்ன? வேற எதுவும் கூடுதல் வருமானத்துக்கு வழி இருக்கான்னு பார்ப்போம். கணிசமா நின்னு பிள்ளையை கரையேத்தி வை எதோ என்னால முடிஞ்சது”
கண்ணில் நீர் வழிய, “சரிக அண்ணே!”
“அழுவாதீக பார்த்துக்கலாம் சோமு நல்ல பையத்தான் என்னத்த எண்ணி இப்படி பண்ணினானு தெரியல, முடிஞ்சா ராமு அப்புச்சி கிட்ட பேசி பார்க்கவா?” இன்னும் அவளது வாழக்கையில் ஒரு வாய்ப்பு கிட்டுமா என்று தான் பார்த்தார் வள்ளியப்பன்.
“வேணாம் அண்ணே நான் பிள்ளையோட தனியா ஊனிக்குவேன் அந்த வலு இருக்கு, திரும்ப போக மனசு ஒப்பு கொடுக்கல” காரணம் காரியம் சொல்லாது தன்னை விட்டு அத்தை மகளோடு சென்ற கணவனுடன் இனி என்ன வாழ்க்கை? அதுவும் சுயம் தொலைத்து.வறுமையின் கீழ் நின்றாலும் தனித்து நின்றாள் மீனாள்.அதற்கு மேல் அவளை காயம் செய்ய விரும்பவில்லை வள்ளியப்பன்.
“கண்ணாத்தா!”
“சொல்லுக?”
“பார்த்துக்கோங்க”
“சரிக” என்றதும் மனைவியிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு எழுந்து சென்றார். வள்ளியப்பன் கொஞ்சம் தனித்துவமான மனிதன். சமூகத்திலும், உறவிலும் நற்பெயர் கொண்டவர்.இருப்பதை கொண்டு நல்லது செய்பவர்.வீண் பேச்சுகளும், வினையும் கொண்ட பேச்சுகளும் அவரிடம் இருக்காது.வள்ளியப்பன் குணமறிந்து நடக்கும் மனைவி கண்ணாத்தாள்.
அதனால் தான் மீனாள் இவர்கள் நம்பி வந்திருக்கிறாள்.கணவன் சொல்லே மந்திரம் என்பது போல் மீனாளை அழைத்துக் கொண்டு பின்கட்டுக்கு சென்றாள் கண்ணாத்தாள்.
வள்ளியப்பன் தனது அத்தை மகளைத் தான் திருமணம் செய்து கொண்டார்.சிறு வயதிலே எடுத்த உறுதி என்பதால் இருவருக்குள்ளும் அப்படி ஒரு பிணைப்பும் அன்பும்.அதற்கு சாட்சியாக வந்தவள் தான் சாலா, ஐந்து வயது நிரம்பியவள்.
பின் கட்டுக்கு வந்தவளை அமர்த்தி உணவிட்டு, அவளது அருகில் அமர்ந்து கொண்ட கண்ணாத்தாள் சாப்பிடு என்று விட்டு.அங்கே மீனா மகனுடன் வள வளத்துக் கொண்டிருந்த தனது பெண்ணைத் தான் பார்த்து கொண்டிருந்தாள்.
“ஏய் பாப்பா! உன் பெயர் என்ன?” கன்னங்கள் உப்பிச் சிறிய ரோஸ் நிறத்தில் இருந்த உதட்டை மெதுவாக வருடி கொண்டே கேட்டவள் கையை வெடுக்கெனத் தட்டி விட்டான் லட்சுமணன் மீனாளின் மகன்.
“ப்ச்! நீ என்ன இப்படி சிவப்பா இருக்க.அதுவும் இந்தக் கன்னம் என்றவள் அவனது கன்னத்தை ஆட்காட்டி விரல் வைத்து குத்தி, முத்து ஆச்சி சுடுற இட்டிலி மாதிரி இருக்கு” என்று கன்னத்தைக் கிள்ளி வைக்க. இன்னும் கோபம் வந்தது போலும் அந்தக் குட்டிக்கு.இந்த முறை கொஞ்சம் வேகமாக அவளது கையை தட்டி விட்டான்.
அதை தூரத்தில் இருந்து கவனித்த கண்ணாத்தாள் புன்னகையுடன்,”ஏய் சாலா! வாயாடி அவனுக்கு நீ தொடுறது புடிக்கல போல அவனை வுடு”
“லட்சு நீக வாக இங்க” மகளைக் கண்டித்தவள் அந்தச் சிறுவனை அழைக்க. அவனோ விட்டாள் போதுமென ஓடி வந்து தாயின் அருகில் அமர்ந்து கொண்டான்.அவனது செயலில் சாலாவின் முகம் சுண்டி விட.அதனை கண்டு கொண்ட மீனாள் மகனிடம் திரும்பி, “நம்பப் பாப்பா தானே தொட்டுச்சு லெச்சு”
இன்னும் முழுதாகப் பேச வரவில்லை அவனுக்கு “ஆத்தா கிள்ளி!.. கிள்ளி!..” என்றவன் இரு கைகளையும் குவித்து விரித்துக் காட்ட”
“அவ அவன் வந்த கணக்குல இருந்து கிள்ளி வச்சிக்கிட்டே இருக்கா போல மீனா அதான் சொல்றான்” என்ற கண்ணாத்தாள் அவனது கன்னம் பற்றி மென்மையாகக் கொஞ்ச அவளது வருடலில் சிறு கூச்சம் கொண்டு வெட்கமாகச் சிரித்துக் கொண்டான் லட்சுமணன்.
கண்ணன் போல் இருந்த ஆண் பிள்ளை மீது பெரும் அன்பு சூழ அவனது கன்னத்தை வருடி கொண்டே “லட்சுமணனுக்கு என்ன வயசு மீனா?”
“அஞ்சு மதனி”
“சாலாக்கும் அஞ்சு தான் என்ன மாசம்?”
“ஆவணி”
“இவ வைகாசி”
“பாப்பா மாச கனக்குல மூப்பு”
“ஹ்ம்ம்! சரி மீனா எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் போட்டு சாப்பிடு, சின்னவனுக்கும் சாப்பிட குடு.சாப்பிட்டுக் கொஞ்சம் ஓய்வெடு, வெயில் இறங்கட்டும் அவுக கிட்ட கேட்டுப் அடுத்து என்ன காரியம்? எங்க? எல்லாம் பேசலாம் சரியா”
“சரி மதனி”
“பழனி மச்சான் கூட பேசுவியா?”
“அவுக இவர் கூட சேர்ந்து இருக்க சொன்னாக நான் கேட்கல அதேன் பேச்சு நின்னு போச்சு”
“அது சரி என்றவரிடம் பெருமூச்சு மட்டுமே பின்பு எழுந்து கொண்டவள்.நீ பாரு மீனா நான் வரேன் என்ற கண்ணாத்தாள் மகளை அழைத்துக் கொண்டு சென்றாள். அதன் பின் மீனாளுக்குத் தனித்து நிற்க ஒரு சிறிய பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் வள்ளியப்பன்.லெட்சுமணன் படிப்பை சாலாவின் பாடசாலையிலே தொடருமாறு பண்ணி கொடுத்து விட்டார்.
கண்ணாத்தாளுக்கு உதவியாக இருந்தாலும் ஊறுகாய், மசாலா பொருட்கள் தயாரித்து அதனை வள்ளியப்பனை கொண்டே செட்டிநாடு உணவகம்,உறவுகளுக்கு மட்டும் விற்பனை செய்து கொண்டிருந்தாள் மீனாள்.
பிள்ளைகளும் நாள் ஒரு வண்ணம் பொழுது ஒரு வண்ணமாக வளர்ந்து வந்தனர்.சாலா என்றால் லெட்சுமணன் தான் ஓட்டம் பிடித்தான்.அது என்னவோ கண்ணதாளிடம் கொண்ட ஓட்டுதல் அன்பு,வள்ளியப்பனிடம் கொண்ட மரியாதையான அன்பு எல்லாம் சாலாவிடம் வரவில்லை லட்சுமணனுக்கு.
அவளைக் கண்டாலே அந்த இடத்தில இருக்க மாட்டான்.இது பெரியவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்றாலும் சின்னவள் சரியாகக் கண்டு கொண்டாள்.சில காயங்கள் சிறிதாக இருந்தாலும் ஆள் மனதில் நன்றாகப் பதிந்து போகும் அல்லவா. அது போலச் சின்னவளுக்கு அவனது விலகல் நன்கு பதிந்து போனது.
ஆண்டுகள் காலில் சக்கரத்தை கட்டி ஓட.சூழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது எப்படி என்றால் மீனாள் வளர்பிறையாக முன்னேறி நிற்க.வள்ளியப்பன் தொழில் கொண்டு சரிந்து கொண்டே வந்தார்.அது சரி அள்ளி கொடுத்து ஆண்டியான மனிதர்கள் வரலாறு இன்னும் உண்டு அல்லவா. அந்த வகையைச் சார்ந்து நின்றார் வள்ளியப்பன்.
ஜீவனமே கேள்வி குறியாகி நிற்கும் வேளையில் மீனா கை கொடுக்க முன் வர ஏற்க மறுத்துவிட்டனர் இருவரும்.
மீனாளுக்குக் காரைக்குடியில் வீடும் அதனை ஒட்டி சிறு கடையும் கிடைக்க உடனே வள்ளியப்பன் மீனாள் உழைப்பை அதில் முதலாகப் போட்டு அவள் கையில் கொடுத்து விட்டார்.இதோ இன்று அரியகுடியில் இருந்து காரைக்குடிக்கு தனது மகனுடன் செல்கிறாள் மீனாள்.வள்ளியப்பனை இந்நிலையில் விட்டு செல்ல மனம் தடுக்க அவரிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.
“என்கிட்ட என்ன பகட்டு பாக்குறீக? நீக இல்லனா நான் இப்படி வளர்ந்து வர முடியுமா? ஏன் மதனி?” ஆற்றாமையாக மீனா முடிக்க சிறு புன்னகையுடன் பார்த்திருந்தனர் இருவரும்.
வள்ளியப்பன்,” உன் வளர்ச்சி எனக்கு சந்தோசந்தேன் மீனா அடுத்து என்னான்னு பாரு.காரைக்குடி சின்னப்பன் அண்ணே உன்னை நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லிருகாக வாய்பை இறுக்க புடி அடுத்த கட்டத்துக்கு போ”
“நான் போகல அண்ணே”
“என்ன இது மீனா? புத்தியா யோசி?” சிறு கண்டிப்பாக குரல் குடுத்தால் கண்ணாத்தாள்.
“புத்தி கொண்டு நடந்தா மக்க, மனுசங்க பார்க்க முடியாது மதனி”
“அண்ணே எனக்குச் செஞ்சீக அந்த நன்றிக்காவது நான் செய்யனும் தானே மதனி” வள்ளியப்பனிடம் தொடங்கி கண்ணாத்தாளிடம் முடித்தால் மீனாள்.அவளது பேச்சுக்கு சிறு புன்னகையைக் கொடுத்து அடமாக நின்றார் வள்ளியப்பன்.
அதன் பின் மீனாவால் முடியவில்லை,”சரிங்க மதனி என்கிட்டே எதுவும் வாங்க வேணாம்,ஆனா எப்போதும் போல நீங்களே தொக்கு செஞ்சு தாங்க.உங்க பக்குவம் எனக்கு வராது மதனி”மீனாள் சொல்வது போலக் கண்ணாத்தாள் கை பக்குவம் அப்படி தான் இருக்கும்.மீனாள் வேலை செய்யும் போது சில மசாலா போடுவதற்கு கண்ணாத்தாளும் உதவி செய்வாள்.
இப்போது இருக்கும் நிலையில் அதற்கு வருமானம் வந்தால் ஏதோ ஒரு செலவிற்கு ஆகுமென்றே மீனாள் சொல்லவும் கண்ணாத்தாள் வள்ளியப்பனை பார்க்க, அவர் கண் மூடி திறந்தார் கணவன் ஒப்புதல் கிடைக்க,
“சரி மீனா” என்றால் கண்ணாத்தாள்.
“அப்பா இதுக்காவது சரி சொன்னீகளே” சரி அண்ணே நான் வாரேன்” என்றவள் கதவின் அருகில் நிற்கும் சாலாவை நெருங்கி.
“பட்டம்மா பத்திரமா இருக்கனும் ஆத்தா கிட்ட சேட்டை செய்யாதீக”
“நான் செய்ய மாட்டேன் அயித்த பத்திரமா பார்த்துக்குவேன்” என்றவள் கன்னத்தில் முத்தி வைத்து.
“என் சமத்து பட்டம்மா” என்றவள் மகனிடம் திரும்பி பாப்பாகிட்ட சொல்லிட்டு வா தம்புடு என்று முன்னே சென்று விட்டாள். லட்சுமணன் ஒரு முறை சாலாவை திரும்பி பார்த்து விட்டு தாயின் கை பிடித்து புதிய பயணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்.
வள்ளியப்பனும்,கண்ணாத்தாளும் போகும் அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றனர்.
“மீனா இனி பொழைச்சுக்கும் நல்ல உழைப்பு, நேர்மை. இன்னும் கொஞ்ச காலம் கஷ்ட பட்டா கூடப் போதும் மகன் வளர்ந்து வந்துடுவான்” கணவனைப் பார்த்து கண்ணாத்தாள் சொல்ல.
“ஹ்ம்ம்! பைய நல்லா வருவான் கண்ணம்மா”
“ஆமாங்க ரொம்ப சமத்து, ரொம்ப அமைதி” அவளுக்கு லட்சுமணனை ரொம்ப புடிக்கும், மகள் செய்யும் சேட்டையில் சோர்ந்து நிற்பவளை தென்றலாக வருடிவிடுவான் இந்த குட்டி பையன்.
மனைவியை பார்த்து சிறு புன்னகையுடன் “அமைதி இல்ல அவன் அழுத்தம், சேட்டைக்காரன் தான். மனைவியை பார்த்து சிறு புன்னகையுடன் வெளில தெரியாது கண்ணு” என்றவரை ஆச்சிரியமாகப் பார்த்த கண்ணாத்தாள்.
“என்ன இப்படி சொல்றீக உங்க பொண்ணுத்தேன் சேட்டை அவன் கத்தி பேசி கூட நான் பார்த்ததில்லை, கொடுத்ததை சாப்பிட்டு, சொன்னதை கேட்டு அவன் பாட்டுக்கு இருப்பான். அவன்கிட்ட காச்சு மூச்சுன்னு சத்தமே இருக்காது அப்படிப் பட்ட புள்ளைய போயி என்ன சொல்றீக போக”
” உனக்கு தெரியாது கண்ணு நீ பார்த்ததில்லை, ஆனா நீ பார்க்காத நேரம் நான் பார்த்திருக்கேன் காரியக்காரன்” முன்னதைச் சத்தமாகச் சொன்னவர் பின்னதை மட்டும் முனகி கொள்ள. கணவன் பேச்சுப் புரியாமல் புருவம் சுருக்கினால் கண்ணாத்தாள்.
கதையின் அத்தியாயமே இனி தான் போலும்!.. இனி இவர்களை பல வருடங்கள் சென்று வெவ்வேறு பருவத்தில் மீண்டும் காண்போம்!..
error: Content is protected !!